Site icon Her Stories

‘மூன்று நிமிடக்’ கொடூர மாந்தர்கள்

இரு தினங்களுக்கு முன் இக்கட்டுரை எழுதும்போது என் மனதிலும் உடலிலும் அதிருப்தியான உணர்வுகளே எழுந்தன. கோபம் அருவருப்பு ஏமாற்றம் என கலவையாக இருந்தது. நிம்மதியான தூக்கம் குலைந்தது. அதிலிருந்து மீண்டு வர சில மணி நேரம் ஆனது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் எப்போதுமே பேசுபொருள் ஆகும். ‘ஒரு பெண் தன் ஆண் நண்பரோடு தனியே போகக்கூடாது’, ‘இந்த நேரத்தில் போகக்கூடாது’, ‘இந்த இடத்திற்கு செல்லக்கூடாது’, ‘இந்த ஆடையில் செல்லக்கூடாது’ என்று மீண்டவரையே (survivor) குற்றம் சாட்டுவது என்பது நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது.கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம் இதற்கு விதிவிலக்கல்ல.

 நேரம், இடம், மனிதர்கள் என்ற அடிப்படையில் இச்சம்பவத்தை அணுகலாம். ஒரு பெண் தனித்தோ அல்லது தனது நண்பரோடு இரவில் வெளியே செல்வதோ தகாததாகவே இன்றும் பார்க்கப்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் வெளிச்சம் குன்றிய பின்னர் பெண்கள் வெளியே செல்வது பாதுகாப்பில்லை என்று சொல்வதோடு மட்டுமில்லாமல், அதனை பெண்களின் ஒழுக்கத்தோடு தொடர்புபடுத்தி வைத்துள்ளனர். மேலை நாடுகளில் குளிர் பருவ காலங்களில் மாலை 4 மணிக்கே இருளத் தொடங்கிவிடும். இருட்டிய பின்னர் வெளியே செல்லக்கூடாது என்று சொன்னால், பெண்கள் வேலைக்கு சென்று வருவதோ, கடைகளுக்குச் செல்வதோ, நண்பர்களை சந்திப்பதோ – இவை எதையுமே செய்யமுடியாது.

Photo by Zalfa Imani on Unsplash

இரவு உலகம் என்பது எப்போதுமே ஆண்களுக்கு உரியதாகவே இருப்பது சரியாகுமா? ஆண்களுக்கு வெளியே செல்ல எவ்வளவு சுதந்திரம் இருக்கிறதோ, அதே அளவு சுதந்திரம் பெண்களுக்கும் உள்ளது. இந்த சமூகம் பெண்களுக்குமானதாக மாற வேண்டும். இரவு என்பதுதால் ஒரு பாலினம் வீட்டுக்குள் முடங்குவதும், இன்னொரு பாலினம் சுதந்திரமாக வெளியே உலா வருவதும் என்றால் அது ஒரு வளர்ச்சி அடைந்த சமூகத்தின் தோல்வி. பெண்கள் இரவில் வெளியே நடமாடுவது குறைந்த எண்ணிக்கையில் இருப்பதாலே, அவர்களுக்கு எதிரான குற்றங்களும் அதிகமாக இருப்பதாகத் தோன்றுகிறது. பெண்களும் அதிக அளவில் இரவு நேரங்களில் சகஜமாக நடமாடத் தொடங்கினால், சில மாற்றங்கள் உருவாகலாம்.

இது ஒரு பக்கமிருக்க, பட்டப் பகலில்கூட பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் தினம் தினம் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. பேருந்தில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் தொடங்கி, பணியிடங்களில் நடக்கும் பாலியல் தொந்தரவுகள் வரை நேர வரையறை இன்றிதான் நடைபெறுகின்றன. இன்னும் வீட்டின் உள்ளே வீட்டு வன்முறைகளும், பாலியல் துன்புறுத்தங்களும், திருமண உறவில் நிகழும் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மனம் விரும்பிய ஒரு ஆணுடன் ஒரு பெண் தனித்திருக்க விரும்புவது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. 18 வயதில் வாக்குரிமைகூட கிடைத்துவிடுகிறது. காதலும் பாலுறவும் தனிநபர் தேர்வு மற்றும் உரிமை, அதனை நாம் எவருக்கும் மறுக்க முடியாது.

பொதுவாகவே வன்முறைகள் ஒதுக்கு புறமான வெளிச்சம் குறைந்த இடங்களில் அதிகம் நிகழும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் சந்திப்பதற்கு ஏற்ற இடங்கள் உள்ளதா? இடங்கள் இருந்தால், அதற்கான சூழல் அவர்களுக்கு உள்ளதா? இளம் வயதானவர்கள் தமது வேட்கை தொடர்பான ஆசைகளை, எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்த சமூகம் இடம் தருகிறதா? வீடு, பூங்கா, கடற்கரை, விடுதி என இவற்றில் அதற்கான இடம் உண்டா? இக்கேள்விகளுக்கு நேர்மையான பதில் ‘ இல்லை’ என்பதே சமூக நிதர்சனம்.

இதனாலேயே இளைஞர்கள் ஒதுக்குப்புறங்களை நாடுகிறார்கள். ஆக மொத்தத்தில், தனிமையை நாடும் இளம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தாம் சந்திப்பதற்கான, பொதுமக்கள் அதிகமாக நடமாடகூடிய பாதுகாப்பான இடங்கள் இங்கு இல்லை.

சில வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் நினைவில் வருகிறது. நானும் என் இணையரும் எங்கள் குடும்பத்தினரோடு எங்கள் திருமணத்திற்காக சென்னை வந்திருந்தோம். ஒரு நாள் நானும் என் முன்னாள் துணைவரும் சென்னையில் உள்ள விடுதி ஒன்றில் தங்க நேரிட்டது. விடுதி உரிமையாளர் எங்களிடம் அடையாள அட்டைகளைக் கேட்டு பரிசோதித்தார். எங்கள் இருவரது குடும்பப் பெயர்கள் ஒத்ததாக இல்லை; அதனால் தங்க அனுமதிக்க முடியாது என்று கூறியிருந்தார். என் முன்னாள் இணையர் ஏற்கனவே அந்த விடுதியில் சில நாட்கள் தங்கி இருந்தார்; அன்றைய நாள் நானும் அவருடன் தங்குவதற்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பின்னர், எங்களுக்கு இரண்டு வாரங்களில் திருமணம் நடைபெற உள்ளது, நான் வருங்கால மனைவி என்றெல்லாம் பல விளக்கங்கள் மற்றும் ஆதாரங்கள் கொடுத்த பின்னரே நான் தங்குவதற்கு அனுமதி கிடைத்தது.

 காரின் கண்ணாடிகளை உடைத்து இந்த குற்றத்தை புரிந்த நபர்கள் இன்னொரு முறை விடுதி அல்லது வீடு ஒன்றின் கதவுகளை உடைத்துக் கொண்டு இதே குற்றத்தை செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

ஒதுக்குப்புறமான இருளான இடங்கள் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் கூடும் இடங்களாக உள்ளது என்பதில் எல்லோருமே உடன்படுகின்றனர். இங்கு கேட்கப்பட வேண்டிய கேள்வி என்னவெனில் அந்த மாதிரி இடங்கள் ஏன் அவ்வாறு தொடர்ந்து காணப்படுகின்றன? போதை வஸ்து, மதுபானம் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு இருக்கும் மறைவிடங்களை அரசு மற்றும் காவல்துறையின் தலையீடில்லாமல் ஒழிக்க முடியாது. சந்தேகத்துக்கு இடமான நடமாட்டங்கள் தென்படும் போது அவற்றை காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுவரும் உடனடிப் பொறுப்பும் பொது மக்களிடம் உள்ளது.

Photo by Kalistro : https://www.pexels.com/photo/portrait-of-woman-with-hair-blowing-in-wind-30818912/

பாதிக்கப்பட்ட பெண்களிடம் இரவில் அங்கு என்ன வேலை என்று கேட்பவர்கள், ஆயுதங்களோடும் போதை வஸ்துகளோடு திரியும் நபர்களுக்கு அங்கே என்ன வேலை என்று கேட்பதில்லை. இந்த ஆபத்தான இடங்கள் ஏன் இன்னும் சரி செய்யப்படாமல் தொடர்கின்றன? அவ்விடங்களில் சிசிடிவி மற்றும் மின்விளக்கு வசதிகள் பொருத்தப்பட்டிருந்தால், அவை தொடர்ந்து சமூக விரோத செயல்களுக்கான இடங்களாக இருக்க வாய்ப்பில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணே முதல் குற்றவாளி என்றும், மீட்டு தர முடியாத ஒன்றை அவர் இழந்துவிட்டார் என்றும் பேசுவது அநியாயத்தின் உச்சம். அநாகரிகம், வக்கிரம் நிறைந்த ஆணாதிக்க சிந்தனை.

கோவை சம்பவத்தை பொருத்தவரை பாதிக்கப்பட்டவர்களில் ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்டுள்ளனர். ஆனால் பெண்ணை முதல் குற்றவாளி என்றும் ஆணை இரண்டாவது குற்றவாளி என்றும் வகைப்படுத்திப் பேசுவதே கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இருவருமே ஒரே விடயத்தை செய்திருந்தாலும், உறவு முறை சார்ந்த கலாச்சார விதிகளை பெண்கள்மேல் மட்டுமே பொருத்திப் பார்ப்பதும், இங்கு ஒழுக்கம் என்பது பெண்களுக்கே தலையாயது என்பதும் நமது சமூகத்தில் புரையோடிப் போயுள்ள ஆண் மையவாத சிந்தனைதான்.

மீட்க முடியாத அளவுக்கு, அந்தப் பெண் எதை இழந்துவிட்டாள்? அந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்தது ஒரு கோர தாக்குதல். அதிலிருந்து மீண்டு வருவாள், அடிபட்டவர்கள் குணமாகி வருவது இல்லையா? ஒரு குடும்பத்தின் மானமும் கௌரவம் பெண்களின் யோனிக்குள் ஒளிந்திருப்பதாக இன்னுமே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கற்பு மாயைக்குள் சிக்குண்டு பல பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்கள் குடும்பங்களும் தமக்கு நேர்ந்த கொடூர சம்பவங்களை வெளியே சொல்லாமல் இருந்து வந்துள்ளனர். இப்போதுதான் ஓரளவுக்கேனும் தைரியமாக வெளியே வந்து சொல்கிறார்கள்.

குற்றம் புரிந்த மூவர் மீதும் ஏற்கனவே வேறு பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில்கூட இவர்கள் இடம் பெற்றிருக்கலாம். இருப்பினும் அவர்கள் மிகவும் சுதந்திரமாக வலம் வருகிறார்கள். ஆனால் இவர்கள் போன்றவர்கள் மீது கரிசனம் காட்டுவது அவர்கள் செய்யும் குற்றங்களுக்கு துணை போவதற்கு சமம் ஆகும்.

‘ஒரு மூன்று நிமிட இன்பத்திற்காக தமது வாழ்க்கையே தொலைத்து விட்டார்கள்’ என்று அந்த ஆண்களுக்காக ஆதங்கப்படுவது கேவலமானது. ஆணாதிக்க வெறியில் உடல் பொருள் ஆவி என எல்லாமே ஊறியவர்கள்தான் இப்படிப் பேச முடியும். ஒரு கொடூரமான பாலியல் சம்பவத்தை ‘மூன்று நிமிடங்கள் அரைகுறை இன்பம்’ என ஒரு மனிதனால் பேச முடியுமா? இவ்வகை மனிதர்களே மிகவும் ஆபத்தானவர்கள்.

ஒரு பெண்ணின் சம்மதம் இன்றி, பாலியல் வன்கொடுமைச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அதனை சுட்டிக்காட்டாமல் அந்தப் பெண்ணின் மீது பழி போடுவது மீண்டவரைக் குற்றம் சாட்டுவது மட்டுமல்லாமல் இது போன்ற குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கு ஏதுவாக அமைகின்றன. ‘குற்றம் புரிந்தோரின் செயல்களுக்கு காரணமே பாதிக்கப்பட்ட இருவரும்தான், அவர்களே குற்றத்தை செய்யத் தூண்டி உள்ளார்கள்’ என மறைமுகமாக கூறுவது குற்றவாளிகளை காப்பாற்றும் செயலாகும் (shifting the blame). தாம் செய்வது சரிதான் என்று மாயத்தோற்றத்தை குற்றவாளிகளுக்கு, அடுத்து குற்றம் இழைக்கப்போகும் பாலியல் வன்புணர்வாளர்களுக்கு (potential rapists) ஏற்படுத்துகிறது.

 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களுக்கு முக்கியமான ஒரு காரணியாக கூறப்படுவது அதிகாரமும் கட்டுப்பாடும் (Power & Control) – இந்தக் குற்றத்தை செய்வதற்கு தமக்கு எல்லா விதமான உரிமைகளும் உண்டு என்கிற நம்பிக்கை. மூன்று நிமிட நேர இன்பம் பற்றி சிலாகித்து பேசுபவர்கள் ‘இந்த நம்பிக்கையை’ வளர்த்துவிடுகிறார்கள். இது ஒரு வகை மூடநம்பிக்கைதான். இந்த நம்பிக்கை ஏற்கனவே சமூகத்தில் விதைக்கப்பட்ட ஒன்று, அதைத்தான் நாம் வேரோடு அறுக்க வேண்டி உள்ளது.

பாலியல் குற்றங்களை வைத்தே ஒழுக்கவாதம் பேசுவது, பெண்கள் தனியே செல்லக்கூடாது என்று சொல்வது, சென்றாலும் இருட்டியபின் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என்று சொல்வது போன்றவற்றைச் செய்யும்போது, பெண்களைக் கட்டுப்படுத்துவதற்கு அந்தப் பாலியல் குற்றங்களையே ஆயுதமாக நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஒரு ஆரோக்கியமான சமூகம் குற்றங்கள் நிகழ்வதற்கான, குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் எழுவதற்கான இடங்களையோ மனிதர்களையோ சமூக சிந்தனைகளையோ வளர்த்து விடாது.

நம் சமூகம் இந்த அளவுகோலில் எங்கே நிற்கிறது என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், நாம் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமானது.

படைப்பாளர்

அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர், MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

Exit mobile version