கருவுற்ற காலத்தில் கருவானது உயிருடன் இருக்க முடியாத ஒரு நிலையில் தானாகவே அழிந்து போதல் அல்லது அழிக்கப்படுதல் கருக்கலைதல் எனப்படும். உலக சுகாதார அமைப்பானது 500கிராம் எடையோ அல்லது அதற்கு குறைவான எடையோ கொண்ட கருவின் இழப்பை, கருச்சிதைவு அல்லது கருக்கலைதல் என வகைப்படுத்துகிறது.
வகைகள்
கருக்கலைதலில் பல்வேறு வகைகள் உள்ளன. முழுமையான கருக்கலைதல், முழுமையற்ற கருக்கலைதல், மறை கருக்கலைதல், தொற்று கருக்கலைதல், அச்சுறுத்தும் கருக்கருதல், தவிர்க்க முடியா கருக்கலைதல், தொடர் கருக்கலைதல் எனப் பலவகைப்படும்.
முழுமையான கருக்கலைதல்
கருத்தரிப்பினால் ஏற்பட்ட எல்லா இழையங்களும் முழுமையாகக் கருப்பையில் இருந்து வெளியேறுதல் முழுமையான கருக்கலைதல்.
முழுமையற்ற கருக்கலைதல்
கருத்தரிப்பினால் ஏற்பட்ட எல்லா இழையங்களும் முழுமையாக கருப்பையைவிட்டு வெளியேறாமல் கருப்பையினுள் சில சிதைந்த இழையங்கள் இருத்தல் முழுமையற்ற கருக்கலைதல்.
மறை கருக்கலைதல்
கருவானது தனது இதயத்துடிப்பை நிறுத்திய பின்னரும் கருச்சிதைவு வெளிக்காட்டப்படாமல் கருச்சிதைவின் எவ்வித அறிகுறியும் இல்லாமல் கருச்சிதைந்து இருத்தல் மறை கருக்கலைதல்.
தொற்று கருக்கலைதல்
கருத்தரிப்பினால் ஏற்பட்ட இழையங்கள் தொற்று நோய்க்கு உள்ளாதல் தொற்று கருக்கலைதல். இதனால் தொற்றானது கருப்பை முழுக்கப் பரவிவிடும். சில நேரங்களில் தாயின் உயிருக்கேகூட ஆபத்தை விளைவிக்கும்.
அச்சுறுத்தும் கருக்கலைதல்
கருக்கலைந்தது போன்ற அறிகுறிகள் (உதிரப்போக்கு) தென்பட்டு ஒருவித அச்சுறுத்தலை உருவாக்கும். ஆனால், கருக்கலையாமல் இருக்கும் தற்காலிக நிலையே அச்சுறுத்தும் கருக்கலைதல்.
தவிர்க்க முடியாத கருக்கலைதல்
கருவானது சிதையத் தொடங்கியிருக்கும். இச்சிதைவு தவிர்க்க இயலாதது. இது 100% கருச்சிதைவில்தான் முடியும். இத்தகைய நிலையே தவிர்க்க முடியாத கருக்கலைதல்.
தொடர் கருக்கலைதல்
தொடர்ந்து மூன்று முறை கரு உருவாகி, இருபது வாரக் காலத்திற்குள் தானாகக் கருக்கலைந்தால் அதை மீண்டும் மீண்டும் கருக்கலைதல் அல்லது தொடர் கருக்கலைதல் என்று கூறலாம்.
தூண்டப்பட்ட கருக்கலைதல்
தன்னிச்சையாகக் கரு கலையாமல் செயற்கையாக வேண்டாத கருவைக் கலைத்தல் தூண்டப்பட்ட கருக்கலைதல்.
தொடர் கருக்கலைதல் பற்றிக் காண்போம்.
மேலே கண்டவாறு தொடர்ந்து மூன்று முறை கரு உருவாகி இருபது வாரக் காலத்திற்குள் தானாகக் கருக்கலைந்தால் அதை மீண்டும் மீண்டும் கருக்கலைதல் அல்லது தொடர் கருக்கலைதல் என்று கூறலாம்.
இரண்டு முறை தானாகக் கருக்கலைந்தவர்களுக்கு 30% அடுத்தடுத்த கருத்தரிப்பு காலங்களில் கருக்கலைய வாய்ப்பு உள்ளது. அதுவே மூன்று முறை தானாகக் கருக்கலைந்தவர்கள் எனில் அது 33% ஆக உயருகிறது. அதனால் உயிருடன் குழந்தை இல்லாதவர்களுக்கு இரண்டுமுறை கருக்கலைதல் நிகழ்ந்தாலே அதுகுறித்த காரணங்களை நாம் கண்டறிய வேண்டும்.
தொடர் கருக்கலைதலுக்கான காரணங்கள்
1 மரபணுக்கள்
2 கருப்பை உடற்கூறு மாறுபாடுகள்
3 நீரிழிவு நோய்
4 தைராய்டு பிரச்னைகள்
5 கருப்பைவாய் விரிவடைதல்
6 கருப்பை கட்டிகள்
தொடர் கருக்கலைதலின் அபாயங்கள்
1 குறை பிரசவம்
2 பிரசவ நேரத்திற்கு முன்பே பனிக்குட நீர் வெளியேறுதல்
3 கருவின் வளர்ச்சி தடைபடுதல் (ரத்த ஓட்டம் தடைபடுவதால்)
4 உயர் ரத்த அழுத்தம்
5 கர்ப்பகால உதிரப்போக்கு
தடுக்கும் முறைகள்
கருத்தரித்தல் கண்டுபிடிக்கபட்ட உடனேயே மகப்பேறு மருத்துவரை அணுகி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். ஆரம்ப நிலையிலேயே மகப்பேறு மருத்துவரை அணுகினால், கருவிற்குப் பாதிப்பு ஏற்படாதவாறு மருந்துகள் அளிக்கப்பட்டு, கரு காக்கப்பட வாய்ப்பு உள்ளது. அடிக்கடி கருகலைவதால் கருப்பையும் பலவீனம் அடையும், நோய்த் தொற்று உருவாகும். அதனால் கருத்தரித்தது கண்டறியப்பட்டவுடன் மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும்.
கருக்கலைதல் தவிர்ப்போம்
கருப்பை காப்போம்!
(தொடரும்)
படைப்பாளர்:
மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.