Site icon Her Stories

அவனுடைய செய்கைக்கு அவனே பொறுப்பு!

Funny selfie. Portrait of friends taking photo with smartphone while sitting at the table with beer and hamburgers.

சிறு வயதிலிருந்தே உங்கள் ஆண் பிள்ளையிடம் நீங்கள் சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான வாக்கியம், “உன் செயல்களுக்கு நீயே பொறுப்பு” என்பது.

பலவிதமான பாலியல் வழக்குகளில் பார்த்திருப்போம், ஆணினுடைய வீட்டார் அவனைப் பாதுகாக்கவே முயல்வர். ஓர் ஆண் தவறு செய்திருக்கிறான் என்ற போதும் அவன் குடும்பம் அவனைப் பாதுகாக்கவே செய்கிறது. குடும்பம் மட்டுமல்ல சமுதாயமும் அவனைப் பாதுகாக்கவே முயல்கிறது.

‘அவன் மனம் கெடுகிற அளவுக்கு அவ என்ன செய்தாளோ?’

‘அவன் ஆம்பள அப்படித்தான் இருப்பான், ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையுமா?’

‘அவன்தான் அப்படிச் செய்தான்னா, அவளுக்கு எங்க போச்சு புத்தி?’

இப்படிப் பாலியல் நிகழ்வுகளில் ஆணைப் பாதுகாத்தும் பெண்ணைக் குறை சொல்லியும் பேசத் தொடங்கிவிடும் சமூகம். அதன் மூலம் அவன் செய்யும் குற்றம் சமூகத்தின் சிந்தனையில் நீர்த்துப் போய்விடுகிறது.

பெண்ணுக்கு ஆயிரம் வரைமுறைகள் சொல்லி வளர்க்கும் குடும்ப அமைப்பு, ஆணுக்குப் பெரும்பாலும் வரைமுறைகள் சொல்லி வளர்ப்பதில்லை. ஆண் பிள்ளைதான் குடும்பத்தின் வாரிசு என்ற எண்ணத்திலும், குடும்பம் என்பதே ஆண்களுக்கானதாக என்பதாகவும் பல தவறான கற்பிதங்களில் அவன் வளர்கிறான்.

அதீத மது அருந்துதல், புகை பிடித்தல், வாகனத்தில் அதிக வேகத்தில் செல்லுதல், மது அருந்தி வாகனம் ஓட்டுவது, போதைப் பொருட்கள் பயன்படுத்துவது , குடும்ப வன்முறை, பாலியல் குற்றங்கள், அடிதடி, பெண்கள் மீதான வன்முறைகள் என்று பல குற்றங்களில் பெரும்பாலும் ஈருபடுவது ஆண்களே.

ஓர் ஆண்தான் குடும்பத்தின் பாதுகாவலன், பணம் சம்பாதிப்பவன் (bread winner), வாரிசு போன்ற எண்ணங்களே அவனுடைய தவறுகளை மற்ற குடும்ப உறுப்பினர்கள் சகித்துக்கொள்ள காரணமாக இன்றளவும் உள்ளன.

பெற்றோரின் பதவி, அதிகாரம் , பணம் போன்றவற்றை இலவசமாக அனுபவிப்பதும் ஆண்கள் தடம் மாறிப் போக காரணமாகிறது.

ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு ஒரு காரணம் தன் வீட்டார், தான் தவறு செய்யும்போது தனக்கு உறுதுணையாக இருப்பார்கள், தன்னைக் காப்பாற்றுவார்கள் என்னும் எண்ணமே. மாறாக நாம் அவனிடம் நீ செய்யும் தவறுக்கு நீயே பொறுப்பு என்பதை சிறுவயதில் இருந்தே சொல்லி வளர்க்க வேண்டும். எப்படி இன்னொரு வீட்டு ஆண் தவறு செய்யும்போது அவனைச் சட்ட ரீதியாகத் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வருகிறதோ அதேபோல நம் வீட்டு ஆண்மகனும் அவ்வாறு தவறு செய்யும்போது சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணம் நம் பெற்றோர்களுக்கு வரவேண்டும். ஆகவே சிறுவயதிலிருந்தே அவனிடம் அவன் செயல்களுக்கு அவனே பொறுப்பானவன் என்பதையும், ஒருவேளை அவன் சமூகத்தில் தவறு செய்யும்போது அதற்குத் தாங்கள் துணை நிற்க மாட்டோம் என்பதையும் அவனிடம் அழுத்தமாகச் சொல்லி வளர்க்க வேண்டும்.

# உங்கள் ஆண் பிள்ளைகள் சிறு வயதில் தவறு செய்யும்போது அதைத் தவறென்று கண்டிப்புடன் சுட்டிக்காட்ட தயங்காதீர்.

# வளர்ப்பில் பெண் குழந்தைக்கும் ஆண் குழந்தைக்கும் ஒரே போன்ற வரையறைகள் இருக்கட்டும்.

# மற்ற குடும்ப உறுப்பினர்களில், ஆணின் தவறுகளை ஒரு மாதிரியும் பெண்ணின் தவறுகளை வேறு போலவும் அணுகாதீர்.

# பெண் சார்ந்த அவன் எண்ணங்களைச் செம்மைப்படுத்துங்கள்.

# ஆணாகப் பிறந்ததற்காக அவனுக்கு எந்தச் சலுகையும் தராதீர்கள்.

# தேவைக்கான பணத்தை மட்டும் கொடுங்கள். ஆடம்பரங்களை அவன் உழைத்து வாங்கட்டும்.

# உங்கள் பதவி, அதிகாரம், பணம் போன்றவற்றை உங்கள் ஆண் பிள்ளைகள் உபயோகப்படுத்த அனுமதிக்காதீர். அவன் சுயமாக அவன் வாழ்வைத் தொடங்கட்டும்.

# ஆணுக்கும் பாலியல் கல்வி அவசியம். தன்னைப் பற்றியும், தன் எதிர்பாலினம் பற்றியும் அவன் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.

# ஆண் பிள்ளை வளர்ப்பிலும் கவனம் செலுத்த தொடங்குங்கள்.

அவன் செயல்களுக்கு அவனே பொறுப்பு என்பதையும், தவறு இழைத்தால் அதற்குத் தண்டனை உண்டு என்பதையும் அடிக்கடி நினைவூட்டி வளருங்கள். ஆண்கள் விஷயத்தில் ஒன்றை நினைவு கொள்ளுங்கள், ‘ஐந்தில் திருந்தாதது ஐம்பதில் திருந்தாது!’

படைப்பாளர்

ராம் குமார்

மருத்துவர், ஓர் ஆண் பிள்ளையை வளர்க்க கற்றுக்கொண்டிருக்கும் ஓர் அப்பா.

Exit mobile version