Site icon Her Stories

காகிதப் பூக்கள்- கீர்த்தி எழில்மதி

கீர்த்தி எழில்மதி

பால் புதுமையினர் அறிமுகக் கட்டுரைகள் – 1

நன்றி: அணியம் அறக்கட்டளை

அணியம் அறக்கட்டளையால் பால்புதுமை மக்களுக்காக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் பால்மணம் மின்னிதழில் 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற‌ திருநங்கை கீர்த்தி எழில்மதியுடனான நேர்காணல் இங்கு மீள் பதிவாக வெளியாகிறது. பால்மணம் மின்னிதழில் வெளியான அனைத்துக் கட்டுரைகளையும் வாசிக்க, பால்மணம் இணையதளத்தைப் பார்க்கவும்.

நிராகரிப்பு…

மனிதர்கள் எதிர்கொள்ளும் பொதுவான ஒன்று. சிலருக்கு கனவுகள் நிராகரிக்கப் படுகின்றன, சிலருக்கு ஆசைகள். இவை பெரும்பாலும் வாழ்க்கையின் சில சூழ்நிலைகளில் மட்டுமே பெரும்பாலானோருக்கு நிகழ்கிறது. ஆனால் இவ்வார்த்தையின் உண்மையான பொருளை வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அதை  சந்திப்பவர்களிடம் மட்டுமே அறிய முடியும்.

திருநர் சமுதாயம்

‘கைத்தட்டல்களும், காசு கேட்பதும், ஆசிர்வதிப்பதும் என இருப்பவர்கள்’ என்ற பொதுவான கண்ணோட்டத்தை மாற்ற எடுத்த முயற்சியே ‘திண்ணை’. இது சொந்த வீட்டிலேயே அகதிகளாக மாற்றப்பட்டோரின் கதை.

திண்ணை பகுதியின் முதல் பதிப்பிற்காக அகமகிழ் குழு செல்வி. கீர்த்தி எழில்மதி அவர்களிடம் நேர்காணலை மேற்கொண்டது. எந்தவித பின்புலமுமற்ற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவர் தொழிற்கல்வி படிப்பை பல தடைகளை தாண்டி படித்து  முடித்தார். தமிழகத்தில் பிறந்து தற்போது பெங்களூருவில் வசிக்கும் இவர், தன்னுடைய வாழ்க்கை தருணங்களையும், திருநர் சமுதாயம் எதிர்கொள்ளும் எண்ணிலடங்கா துயர்களையும் பகிர்ந்து கொண்டது இனி உங்களுக்காக…

உங்களது குடும்பப்பின்னணி எப்படிப்பட்டதாக இருந்தது?

என்னோட சொந்த  ஊர் ராமநாதபுரம். நடுத்தர குடும்பம் தான் நாங்க. எனக்கு இரண்டு அண்ணன். அப்பா டீக்கடைல வேலை பாத்துட்டு இருந்தாரு. அம்மா வீட்டோட இருந்தாங்க. அம்மா அப்பாக்கு நான் ரொம்ப செல்லம். அப்பா எப்பவும் ரொம்ப சப்போர்ட் பண்ணுவாரு, உனக்கு எப்படி இருக்கணும்னு தோணுதோ அப்படி இருன்னு சொல்லுவாரு. அம்மாவுக்கு சின்ன வயசுல என்னோட மாற்றங்கள் அவ்ளோ பெருசா தெரில. அண்ணன்கள் ரெண்டு பேரும் அப்பா இருக்கறவரை எனக்கு பெருசா தொல்லை கொடுக்கல.

உங்களுடைய குழந்தைப்பருவம் எப்படிப்பட்டதாக இருந்தது?

எனக்கு சில விஷயங்கள் அம்மா சொல்லி ஞாபகம் இருக்கு. நான் சின்ன வயசுல இருந்து ஸ்கூல்ல பொண்ணுங்க பக்கத்துலதான் உக்காருவேன். பக்கத்து வீட்டுக்காரங்க, ஸ்கூல் டீச்சர் எல்லாருமே என்னைப் பத்தி, நான் நடந்துக்குற விதம் பத்தி அம்மாட்ட சொல்லுவாங்க. ஆனா அம்மா அதை கண்டுக்கல. இன்னும் சரியா சொல்லணும்னா அவங்களுக்கு அந்த மாற்றங்கள் அவ்வளவா புரியல. மத்த பொண்ணுங்க மாதிரி நானும் என்னை அலங்கரிச்சுக்கணும்னு தோணியிருக்கு. ஆனா நான் முழுசா அதை புரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி, அதையெல்லாம் தாண்டி வந்துட்டேன்.

நீங்கள் உங்களை உணரத் தொடங்கிய போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற்றிருந்தீர்களா?

கண்டிப்பாக. நான் என்னை முழுசா ஏத்துக்கிட்டேன். ஆறாவது படிக்கும் போது தான் நான் என்னை உணரத் தொடங்கினேன். ஆனா பத்தாவது படிக்கும் போது என்ன பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டேன். என்னோட வாழ்க்கையை நான் தான் வாழ முடியும், கண்டிப்பா இன்னொருத்தர் வாழமுடியாது. என்னோட வாழ்க்கை இனி இப்படித்தான் மாறப்போகுதுனு எனக்குத் தெரிஞ்சுது. நான் எப்பவும் ஒரு ஆணா வாழணும்னு நினைச்சதில்ல. மத்தவங்ககிட்ட கூட நான் பொண்ணுதான்னு சொல்லிருக்கேன்.

உங்களை பற்றி தெரிந்துகொண்டபின் உங்களின் குடும்பத்தின் பிரதிபலிப்பு எப்படி இருந்தது?

நான் பத்தாவது படிக்கும் போது சேலை கட்டினப்ப தான் அம்மா முழுசா என்னப்பத்தி  தெரிஞ்சுக்கிட்டாங்க. அவங்களால இந்த மாற்றத்தை ஏத்துக்க முடில, மத்தவங்க என்ன சொல்லுவாங்கன்னு ரொம்ப கவலைப்பட்டாங்க. அண்ணன்கள் ரெண்டு பேரும் ரொம்ப பிரச்னை பண்ணாங்க. குறிப்பா சின்ன அண்ணன். தூங்கும்போது முடியை வெட்டுறது, என்னை வெளிய தொரத்தணும்னு எல்லாம் பண்ணாரு. இந்த பிரச்சனை எல்லாம் பாத்துட்டு அம்மா என்னை எங்கேயாவது போய்டு, இல்லனா இவனுங்க அடிச்சே கொன்றுவாங்கன்னு சொல்லி வெளிய போக சொல்லிட்டாங்க. நான் 2006 ல வீட்ட விட்டு வெளிய வந்துட்டேன். அம்மா என்னை பத்தி யோசிச்சாங்க, ஆனா அதே நேரத்துல சமுதாயத்தை பாத்து பயந்தாங்கன்னு சொல்லலாம். அதுக்கப்புறம் அண்ணன்கள் அவ்வளவா பேசறதில்ல.

உங்களோட பள்ளி கல்லூரி நாட்கள் ஒரு வசந்த காலமாக இருந்ததா?

இல்லை. நான் நிறைய பிரச்னைகளை சந்திச்சேன். நான்காவது படிக்கும் போதிருந்தே நிறைய கேலி கிண்டல்கள் இருந்துது. இதுல கெட்ட விஷயம் என்ன அப்டின்னா, ஸ்கூல்ல எனக்கு sexual harassment நடந்ததைக் கூட புரிஞ்சுக்கற மனநிலைல அப்போ நான் இல்ல. இத்தனை பிரச்னைகளையும் தாண்டி பத்தாவதுல 430/500 மார்க் எடுத்தேன். அதுக்கு மேல பாலிடெக்னிக்ல படிக்க 18000 ஆகும்னு சொன்னாங்க. குடும்ப சூழ்நிலையால அதைப் படிக்க முடியல.

பதினோராம் வகுப்புல சேர்ந்தேன். ஆனா என் ஆசிரியர்களே  என்ன அவங்களோட ஆசைக்கு இணங்கணும்னு சொன்னாங்க, இல்லனா படிக்க முடியாதுன்னு மிரட்டினாங்க. நான் அத ஏத்துக்கலைன்னு தெரிஞ்சதும் என்னை ஒரு மாசம் வெளிய வெயில்னு கூட பாக்காம நிக்கவச்சாங்க. எனக்கு யாரோட உதவியும் கிடைக்கல, வீட்டுலயும் இத சொல்ல முடியல. என்னோட புக் எல்லாம் கிழிச்சி அவங்க முகத்துல தூக்கி எறிஞ்சுட்டு, ஸ்கூலை விட்டு ஓடிவந்த நாளை என்னால மறக்கவே முடியாது. ஐடிஐ படிக்கறப்போ சீனியர் தொல்லைன்னு அந்த காலம் ரொம்ப கஷ்டம்.

நீங்கள் வெளியுலகிற்கு உங்களை அறிமுகப் படுத்திய தருணம் எப்படி இருந்தது?

ரொம்பவே அழகான தருணம்னு சொல்லலாம். அறுவைசிகிச்சைக்கு அப்பறம் நான் ரொம்ப அழகானதா உணர்ந்தேன். கண்ணாடி மட்டும் தான் என்னை அந்த காலத்துல ரொம்ப சந்தோசப்படுத்துச்சு. நான் ஒரு பெண்ணா மாறிட்டேன்னு சந்தோஷப்பட்டேன். என்னோட எல்லா பிரச்னைகளும் முடிஞ்சுரும்னு நினைச்சேன். ஆனா ரொம்ப பெரிய கஷ்டம் அதுக்கு அப்புறம் தான் ஆரம்பமாச்சு. சரியா சொல்லணும்னா ஒரு திருநங்கையா சமூகத்தை எதிர்கொள்ளத் தயாரானேன்னு சொல்லலாம்.

நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி சொல்ல முடியுமா?

நம்மளோட மக்கள் தினம் தினம்  மனதளவில ரொம்ப கஷ்டப்படுத்துவாங்க. உடம்புல காயமானா கூட ஆறிடும், மனசோட காயத்துக்கு மருந்து எங்க இருக்கு? நாங்க எல்லாம் கெட்டவங்கன்னு சொல்லுவாங்க, குழந்தைகள்கிட்ட கூட நாங்க கடத்திட்டு போய்டுவோம்னு பெத்தவங்க தப்பா சொல்றாங்க எங்க முன்னாடியே. பஸ்ல பக்கத்துல கூட உக்கார விடமாட்டாங்க. எங்களுக்கு பாலியல் ரீதியான சீண்டல்கள் ரொம்ப அதிகம், ஆனா அதெல்லாம் மத்தவங்க பாக்கமாட்டாங்க. நாங்கதான் மத்தவங்கள அடிக்கிறோம், திட்றோம்னு தப்பான கண்ணோட்டத்துல இருக்காங்க. நாங்க கோவமா எங்கள காட்டிக்கறது எங்களுக்கான ஒரு பாதுகாப்பு. அதை எல்லாரும் முதல்ல புரிஞ்சுக்கணும். எங்களையும் எல்லார் மாதிரி சாதாரணமா பாக்கணும்.

கீர்த்தி எழில்மதி, படம்: பால்மணம்

பொருளாதார ரீதியான துயர்களை எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள்?

வெளிப்படையா சொல்லணும்னா ரெண்டு வழிதான் இருக்கு. ஒண்ணு பிச்சையெடுக்கணும், இல்லன்னா தொழிலுக்கு போகணும். நான் முதல்முறை பிச்சை வாங்கினபோது என் குடும்பத்த நினைச்சு அவ்ளோ அழுதேன், என் வீட்டுல நான் சாப்பிட்ட தட்டைக்கூட எடுத்ததில்லை. எனக்கு தொழிலுக்கு போக விருப்பமில்லை. என்ன பண்ண முடியும், நாங்க எங்க வேலை கேட்டாலும் எங்க உடம்பைத்தான் பாக்கறாங்களே தவிர திறமையை பாக்கறதில்ல. அப்டியே இன்டெர்வியூல செலக்ட்னு சொன்னாலும் திருநங்கைனு தெரிஞ்சா வேலை கிடைக்காது. படிச்சவங்களுக்கே இந்த நிலைமை, படிக்காத எத்தனை திருநங்கைகள் இருக்காங்க. அவங்க நிலைமை ரொம்ப மோசம்.

திருநர் சமூகம் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறதா?

நிச்சயமா, வாழ்வாதாரத்துக்கு அதுதான் ஒரே வழின்னு நிலைமை. சுகத்துக்காக யாருமே போறதில்லைங்க, வாழறதுக்கு நாங்க என்ன பண்ணுவோம், எங்க போனாலும் அட்ஜஸ்ட் பண்ணச் சொல்லுவாங்க. படிச்சு  வேலைக்கு போறவங்களுக்குக் கூட பாதுகாப்பு இல்ல. நடுராத்திரில வீட்டு கதவைத் தட்டறத பத்தி எல்லாம் கேள்விப்பட்டிருக்கீங்களா? எங்களுக்கு வீடு கூட அவ்ளோ சீக்கரம் வாடகைக்கு கிடைக்காது. அப்படியே கிடைச்சாலும் 3000 ரூபாய் வாடகைக்கு, 9000 வாடகையை  குடுக்கணும். வேலைவாய்ப்பு முகாம் எல்லாம் நிறைய போயிருக்கேன். ஆனா ஒண்ணுல கூட வேலை கொடுக்கல. எங்களை குறை சொல்றவங்க எல்லாம் நாங்க ஏன் பிச்சையெடுக்கணும்னு யோசிச்சிருக்காங்களா? அதுக்கு பதில் தான் இதோட தெளிவு.

அரசாங்க உதவிகள் உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கிறதா?

ரொம்ப கம்மியான அளவில் தான் கிடைக்குது. அதை நாங்க பெறுவதற்கு நிறைய பிரச்னைகளை சமாளிக்கணும். அரசாங்கம் எங்களோட திட்டங்கள் முழுசா எங்களை அடைவதை உறுதி செய்யணும்.

மாற்றுப்பாலின அறுவை சிகிச்சை கேலிக்குள்ளாக்கப்படுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ரொம்ப வருத்தமா இருக்கு. நாங்க படுகிற கஷ்டங்களைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு கேலி பண்ணனும் . நாற்பது நாள் எங்கள அறுத்துப்போட்டு கிடைக்கற வலி சொல்லவே முடியாது. இந்த நாற்பது நாள் அறுவைசிகிச்சைக்கு பணம் ஏற்பாடு பண்ண எத்தனை நாள் பிச்சையெடுக்கணும்னு யோசிச்சுருக்கீங்களா.  நாற்பது நாள் யாரோட உதவியும் இல்லாம எங்கள நாங்களே பாத்துக்கணும். எங்களோட மறுபிறவி அது. இந்த சிகிச்சைக்கு அப்புறம் எங்களோட வாழ்க்கை கைவிடப்பட்ட ஒன்றாக மாறிடும். மொழி தெரியாத ஊர்ல வலியோட, வழி இல்லாம நிப்போம்… இதெல்லாம் யாருக்கும் தெரியாது.. சுண்டிவிட்டா வலிக்கிறவங்களுக்கு இந்த வலி எப்படி புரியும்..

உங்களைப் புரிந்துகொண்ட நண்பர்கள் எவரேனும் உண்டா?

இருக்கான். என்னோட பள்ளி தோழன் என்னை பத்தி தெரிவதற்கு முன்னாடியும், தெரிஞ்சுக்கிட்ட பின்னாடியும் இப்போவும் நண்பனா இருக்கான். அப்பறம் என்னோட திருநர் நண்பர்கள் எனக்கு ரொம்பவே சப்போர்டிவ். நாங்க ஒரு குடும்பமா வாழறோம். வெளிய சண்டை இருந்தாலும் வீட்டுக்குள்ள வரும்போது நாங்க ஒரே குடும்பம். இவங்க இல்லாம நிறைய பால்புதுமை நண்பர்கள் என்னை முழுசா புரிஞ்சவங்க இருக்காங்க.

உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த சிறந்த வழி என எதை கருதுகிறீர்கள்?

இரண்டு வழிகள் இருக்கு. ஒண்ணு எழுத்து வழியா, மற்றது திரையுலகம் வழியாக. எழுத்து வழியாக நம்ம எதை வேணாலும் சாதிக்கலாம். இன்னைக்கு நிறைய திரைப்படங்கள் மூலமா திருநங்கைகள் பத்தி தெரிஞ்சுக்கறாங்க. திரைத்துறை ஒரு மிகப்பெரிய புரிதலை உருவாக்கும். ஆனா நிறைய படங்கள் மூலம் எங்களை கேலி செய்வதும், எங்கள பத்தி தப்பான கண்ணோட்டத்தையும் உருவாக்கவும்தான் உதவுது. இதை மாத்தறது மூலம் மிகப்பெரிய வெற்றியை எங்க சமுதாயம் அடையும்.

எவ்வழிகளில் மாற்றத்தை கொண்டுவர முடியுமென நினைக்கிறீர்கள்?

திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தருவதோடு அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் நன்று.  திறமையைப் பாருங்கள். உடலை அல்ல. திருநங்கைகளுக்கான இடத்தை கொடுங்கள் அனைத்து வழிகளிலும்… திறமைகள் தீப்பிழம்பாய் வெளிப்படும்..

திருநர் சமுதாயத்திற்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

நாம் சாதிக்கப் பிறந்தவர்கள், சாகப் பிறந்தவர்கள் இல்ல.. தயவு செஞ்சு யாரும் ஒரு ஆணுக்காக தற்கொலை பண்ணிக்காதீங்க. ஏமாத்தறவங்க வாழ்ந்து காட்டும் போது நாம ஏன் வாழ கூடாது? தைரியமா வாழ்ந்து காட்டணும். நம்ம காகித பூக்களாக இருக்கலாம்.  ஆனா நாம எப்போவும் வாடக்கூடாது.  இதுதான் நம்மளோட வாழ்க்கைனு சோர்ந்து போகாதீங்க. விடியல் வரும் வரை காத்திரு தோழி!

 படைப்பு, படம் நன்றி:

அணியம் அறக்கட்டளை

Exit mobile version