Site icon Her Stories

கூடாரம் கட்டலாம் வாருங்கள்!

அவசரமான, பரபரப்பான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்த நான், சில ஆண்டுகளுக்கு முன் கனடாவிற்கு இடம் மாறினேன். இந்த மாற்றம் முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது. நான் வசிக்கின்ற ஊர் கனடா அமெரிக்காவின் எல்லை நகரமான வின்ட்சர்க்கு அருகில் உள்ளது. இங்குள்ளக் கனடிய மக்கள் மிகவும் அமைதியான வாழ்க்கைச் சூழலைப் பின்பற்றுகிறார்கள்.

செப்டம்பர் மாதத்தில் நான் கனடா வந்தடைந்தேன். அது ஒரு இலையுதிர் காலத்தின் ஆரம்பகாலமாக இருந்தது – வெயில் குறைந்து, குளிர் ஆரம்பமாகப்போகிறது என்பதற்கான ஒத்திகைக்காலம் அது. ஓரிரு மாதங்களில் மரங்கள் தங்கள் இலைகளை முற்றிலும் துறந்து, பட்ட மரம்போல நின்றன. 

இலைகளையோ, பறவைகளையோ காண முடியவில்லை… மக்களையும்தான். ஆறு மாதங்கள் கடும் குளிர்காற்று, பனிப்பொழிவு என்று என்னையும் ஒரு பனிக் கட்டியைப்போன்று உறைய வைத்தன. நாள்கள் அமைதியாகவும் மெதுவாகவும் கடந்தன.

ஏப்ரல் மாதத்தில் வசந்த காலம் தொடங்கியது. மொட்டை மரங்களில் இலைகள் துளிர்த்தன. என்னுடைய மனதிலும்தான். சில பரிச்சயமான கனடிய நண்பர்கள் எல்லோரும் வெய்யில் காலத்தை வரவேற்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள். எந்தெந்த ஊருக்குப் பயணப் படவேண்டும், எந்த ஏரியில் நீந்தவேண்டும், படகினில் எந்த ஆற்றினைக் கடக்கவேண்டும், எந்தெந்த மலைகளை ஏறவேண்டும், எங்கே தங்கப்போகின்றோம் என்ற பட்டியல்களை அடுக்கிக்கொண்டிருந்தனர்.

இங்கு வாழும் மக்கள் இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ்கிறார்கள். பெரும்பாலும் பனிப் பொழிவுடனே நாள்களைக் கழிக்கும் இவர்கள், வெய்யில் காலத்தை முழுவதுமாக வெளியில் செலவிடுகின்றனர்.

நான் புதிதாகக் குடிவந்தவள் என்பதால் அவர்களிடம் குழந்தைகளோடு செலவிட ஒரு நல்ல இடத்தை சொல்லுமாறு கேட்டேன். அவர்கள் உடனே சொன்னது, ‘கேம்பிங் போங்க’ என்று. ‘இதுவரை கேம்பிங் சென்ற அனுபவம் இல்லையே யாராவது அதை பற்றி தெளிவு படுத்த முடியுமா?’ என்றேன். 

என் நண்பர்கள் கேம்பிங் என்றால் என்ன, எந்தெந்த இடங்கள் கடற்கரையோடு இருக்கும், எந்த இடங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்ற விவரங்களைச் சொன்னார்கள். கனடாவில் வளருகின்ற பிள்ளைகள் பெரும்பாலும் இயற்கையோடு அணுக்கமாக வளர்க்கப்படுகிறார்கள். மலையேறுவது, கேம்பிங்கில் கூடாரத்தில் தங்குவது, ஏரியில் நீந்துவது, மீன் பிடிப்பது, பனிச்சறுக்கு விளையாட்டுகள் போன்ற எண்ணற்ற விடயங்களில் ஈடுபடுகிறார்கள்.

எல்லாவற்றையும் கேட்டறிந்தபின் கேம்பிங் போக ஆயத்தமானோம். அதற்குத் தேவையான பொருள்களைத் தேடிக்கண்டுபிடித்து வாங்கினோம். கூடாரம், படுக்கை, மின்கல விளக்குகள், தார்ப்பாய்கள், கயிறு, அடுப்பு என்று அடிப்படையான பொருள்களைச் சேர்த்தபின், கேம்பிங் செல்ல  ஆயத்தமானோம். கடற்கரையோரம், காடு, விவசாய நிலங்கள், மலை உச்சி, ஆற்றங்கரையோரம், பனி மலையின் மேல் என்று பல வகையான கேம்பிங் தளங்கள் இருக்கின்றன. நான் தேர்ந்தெடுத்தது, கிளின்டன் நகரில் உள்ள பென்  மில்லர் காடுகளுக்கு நடுவில் இரு இரவுகள்.

கிளின்டன் என்பது சிறிய நகரம். ஹுரோன் ஏரிக்கு மிக அருகில் இந்த ஊர் அமைந்துள்ளது. இந்த நகரம் இரண்டாம் உலகப் போரின்போது, ரேடார் தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகித்ததால் இது கனடாவின் ரேடார் வீடு (CANADA’S HOME OF RADAR) என்று அழைக்கப்படுகிறது. நான் அந்த ஊரை விட்டு 15 கிமீ தொலைவிலுள்ள மேட்லண்ட் நதிக் கரையோரம் அமைந்திருந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் தங்குவதற்கு அனுமதி பெற்றிருந்தேன். இந்த இடம் அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் பாறை அடுக்குகளுக்குப் பெயர் பெற்றது. குடும்பத்துடன் தங்குவதற்கு 140க்கும் மேற்பட்ட தங்கிடங்கள் உள்ளன. காடுகளுக்கு இடையே இயற்கை எழில் கொஞ்சும் நீண்ட நடைபாதைகள் உள்ளன.

மேட்லண்ட் ரிவர் பகுதி (MAITLAND RIVER) ஒரு அழகிய ஆற்றங்கரையை ஒட்டிய அடர்ந்த காட்டுப்பகுதி. அதில் நாம் ஓர் இரவோ அல்லது தேவையான நாட்களுக்கோ தங்குவதற்காக முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். அங்குத் தங்குவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படும். கூடாரம் மட்டுமே அமைத்துக்கொள்ளமுடியும். நமக்கென்று அளிக்கப்படும் தளத்தில் ஆறு பேருக்கு மேல் தங்க அனுமதி இல்லை. மின் வசதி கிடையாது. நமக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் குளிர் பெட்டியில் சுமந்து செல்லவேண்டும். வன விலங்குகளுக்கு உணவு அளிக்கக்கூடாது. நாம் சமைத்து முடித்து உணவருந்தியபின் அந்த இடத்தினை மீண்டும் சுத்தப்படுத்தி வைக்கவேண்டும். மீதி உணவுப் பொருள்களை பெட்டியினுள்ளோ வாகனத்தின் உள்ளேயோ மூடி வைக்கவேண்டும். அந்தக்காட்டில் உள்ள கரடிகள், காட்டு நாய்கள் உணவின் வாசத்திற்கு வந்து கூடாரங்களைக் கிழித்த கதைகள் ஏராளம்!

அனைத்தையும் ஏற்பாடுசெய்து எங்கள் வாகனத்தில் ஏற்றி முதன்முறை கேம்பிங் செல்ல கிளம்பினோம். நான் வசிக்கும் ஊரிலிருந்து ஒன்றரை மணிநேரப் பயணம். மேட்லண்ட் ரிவர் (MAITLAND RIVER)  சென்றடைந்தபோதே மதியம் ஆகிவிட்டது. எங்களுக்கோ கூடாரம் அமைப்பது அதுவே முதல் முறை. கூடாரத்தை அதன் பையிலிருந்து வெளியில் எடுத்து, அதன் முன் பின் பக்கங்களைக் கண்டறிந்து, அதன் கம்பிகள், கயிறுகள் என எல்லாவற்றையும் ஆராய்ந்து, இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப்பின், கூடாரத்தை அழகாகக் கட்டிமுடித்தோம். அது காற்றினில் அவிழாதவாறு, நங்கூரமாக நான்கு பக்கமும் கயிற்றை இழுத்து, தரையில் ஆணியடித்துவைத்தோம். 

கான்கிரீட் கட்டிடங்களில் வாழ்ந்த எனக்கு இந்த கூடாரத்தில் தங்கப்போவது பரிச்சயமற்ற உணர்வை ஏற்படுத்தியது. புதியதாக ஒன்றைச் செய்யப்போகிற மகிழ்ச்சியும், மின்வசதி, இணையவசதி இல்லாத, காட்டு விலங்குகள் நடமாடுகிற இடத்தில், தனியாகத் தங்குவது சரியா என்கிற பயமும்கூட கலந்திருந்தது. சரி என்னதான் ஆகிவிடப்போகிறது, பார்த்துக் கொள்ளலாம் என்று உள்ளத்தில் துணிவை வரவழைத்துக்கொண்டேன். கூடாரத்தை அமைத்து முடிந்தபோதே, சாயங்கால நேரத்தைத் தொட்டுவிட்டோம்.

இப்போது வெளிச்சத்திற்கும் சமையலுக்கும் சேர்ந்து விறகைப் பற்றவைக்கவேண்டும். ஏற்கனவே இரண்டு மூட்டை விறகுகள் எடுத்து வந்திருந்தாலும், அருகிலிருக்கும் சுள்ளிகளை எடுக்கும் பொறுப்பை என் பிள்ளைகளுக்குக் கொடுத்தேன். ஆளுக்குக் கொஞ்சம் சுள்ளிகள் பொறுக்கி அரைமணி நேரத்தில் திரும்பிவருமாறு சொன்னேன். ஏதோ பெரிய புதையல்வேட்டைக்குக் கிளம்பியதுபோன்ற ஆனந்தம் அவர்களுக்கு.

நான் மீண்டும் நெருப்பை மூட்ட முயற்சித்துக் கொண்டிருக்கும்போதே சிறிது நேரத்தில் என் பிள்ளைகள் கையில் கொஞ்சம் சுள்ளிகளையும், அவற்றுடன் சில ரயில் பூச்சிகளையும் நத்தைகளையும் சேர்த்தே சேகரித்துக்கொண்டுவந்தனர். நத்தைகளுக்குப் பெயரிட்டு அழைத்துக்கொண்டிருந்தனர். யாருடைய நத்தையால் அதிக தூரம் ஊர்ந்து செல்லமுடியும் என்று போட்டியும் வைத்தனர். நாங்கள் இருந்த கேம்பிங் களத்தில் அன்று வேறு யாரும் காணப்படவில்லை. மூன்று ஏக்கர் காட்டினுள் தனியாகக் கூடாரம்கட்டி, களைத்துப்போயிருந்தேன்.

இரவு உணவு உண்டபின் இருள் சூழ ஆரம்பித்தது. சிறு தீயின் வெளிச்சத்தில் நாங்கள் உரையாடிக்கொண்டிருந்தோம். வேறு சிந்தனைகள் ஏதும் மனத்தில் ஓடாத ஓர் மௌனத்தில் ஆழ்ந்திருந்தோம். பேரமைதி எங்களை ஆட்கொண்டிருந்தது. அலைபேசியும் தொலைக்காட்சிப் பெட்டியும் மின்விளக்குகளும் இல்லாத இரவை நீண்ட நாள்களுக்குப் பின் ரசித்துக் கொண்டிருந்தோம். வானத்தை அன்றிரவுதான் உற்றுப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்தனை நாள் இவற்றை உதாசீனப்படுத்திய என் கண்களின்மேல் சிறு கோபம் வந்தது. பிள்ளைகள் விரல்விட்டு நட்சத்திரங்களை எண்ணத்தொடங்கினர். சிறிது நேரத்தில் எங்கள் கூடாரத்தில் அடைக்கலம் புகுந்தோம்.

சிறு வெளிச்சம்கூட நுழையாத இருட்டு, தூய்மையான காற்று, சுற்றி ஆளுயர்ந்த பைன் மற்றும் மேப்பிள் மரங்கள், விலங்குகளின் அழுகுரல் என வனத்தின் நடுவே, விட்டத்தைப் பார்த்துக்கொண்டே தூங்குகின்ற சுகமே தனிதான். சில மணி நேர இரவு கதைகளுக்குப்பின் பிள்ளைகள் உறக்கத்தில் மூழ்கினர். 

காலை புலர்ந்தது. எந்த செயற்கை அலாரமும் இல்லாமல், பறவைகளின் கூச்சலும் அணில்களின் கீச்சொலியும் மரங்கொத்திகள் மரத்தைக் கொத்தும் ஒலியும் எங்களை எழுப்பிவிட்டன. குளிர் கலந்த காற்றுடன் காலை விடிந்தது. மரங்களின் ஊடே மஞ்சள் நிறச் சூரியக் கீற்றுகள் கூடாரத்தின்மேல் விழுந்தன.

எங்கள் கூடாரத்திலிருந்து சிறுது தொலைவில் இருந்த ஆற்றில் விளையாடச் சென்றோம். மிகவும் ஆழமில்லாத அமைதியான ஆறு, தெளிந்த நீரோடைபோல ஓடிக்கொண்டிருந்தது.

சில வகை நீர்ப் பறவைகள் நின்று விளையாடிக் கொண்டிருந்தன. நாங்கள் ஆற்றின் அக்கரைக்கு நடந்து செல்லமுயன்றோம். பெரிய கற்கள் நிறைந்திருந்தன. அதோடு வழுக்குகின்ற பாசிப் பாறைகளின்மேல் கால்களை ஊன்றி நடந்து ஆற்றைக் கடந்தோம். மீன் குஞ்சுகள் நிறைந்திருந்த ஆற்றில் சுற்றித் திரிந்தோம். பிள்ளைகள் ஆற்றில் நனைந்து, கரை மண்ணில் விழுந்து, புரண்டு  மீன்களைப் பிடிக்க திட்டம் தீட்டிக்கொண்டிருந்தனர். யாருக்கு அதிக மீன்கள் மாட்டும் என்று கொஞ்ச நேரம் துணியிலும் கொஞ்ச நேரம் தூண்டிலிலும் புழுவை மாட்டிக்கொண்டு, ஒற்றைக் காலில் நிற்கும் கொக்கைப்போல் உச்சி வெயிலில் மீனுக்காகக் காத்திருந்தனர். திட்டம் நிறைவேறவே இல்லை!

திரும்பிக் கூடாரத்திற்குச் செல்லும் வழியில் அங்கிருந்து வனத்தினுள் சுற்றி வருவதற்கான ஒரு பாதை இருந்தது. மதிய உணவை முடித்தபின் சிறிது குடிநீருடன் அந்தப் பாதையில் பயணப்பட்டோம். பாதை இருக்கும்வரை போவது, பின்பு திரும்பி விடவேண்டும் என்று சில துண்டுக் கயிறுகளை அடையாளத்திற்காக மரங்களில் கட்டிக்கொண்டே சென்றோம். சில மணி நேரத்தில் சிறு ஓடையை வந்தடைந்தோம். எத்தனை தூரம் பயணித்தோம் என்று தெரியவில்லை. ஓடை நீரினில் கால்களை நீட்டி மணிக்கணக்கில் உட்கார்ந்திருந்தோம். இரண்டு நாள்கள் முன் பெய்த பேய் மழையில் விழுந்திருந்த மரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தோம். மரங்களின்மேல் ஊறிச்  சென்ற மரவட்டைகளுடன் விளையாடிவிட்டு அங்கிருந்த மஞ்சள், ஊதா நிற பூக்களையும் சேகரித்துக்கொண்டு, கடந்து வந்த ஒற்றையடிப் பாதையைத் தேடித் திரும்பினோம். 

இரண்டு நாள்கள் காட்டின் நடுவில் தங்கிய அனுபவம் எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. எந்த ஒரு இரைச்சலும் மனித நடமாட்டமும் இல்லாத அமைதியான இடத்தில் செலவிட முடிந்த நேரம் என்னோடும்  இயற்கையோடு சற்று பேசிக்கொள்ளும் நேரமாக அமைந்தது.

எதையோ தேடி ஓடுகின்ற வாழ்க்கையில் மனதைச் சற்று நிறுத்தி, வாழும் இந்த நிமிடத்தைப் பொறுமையாக ரசிப்பதற்கும் நிதானத்தோடு கையாள்வதற்கும் இப்படிப்பட்ட தனிமைப் பயணங்கள் தேவைப்படத்தான் செய்கின்றன. முதல் கேம்பிங் அனுபவம் இன்றும் என் வாழ்நாளில் மறக்கமுடியாத நினைவாகவே இருக்கிறது. அதன்பிறகு ஆற்றை ஒட்டியோ, கடற்கரையிலோ, காட்டிலோ கேம்பிங் செல்வதை வாடிக்கை ஆக்கிக்கொண்டேன்.

முடிந்தவரை இயற்கையோடு பயணிப்போம்!

படைப்பாளர்

ரேகா சபரி

தற்போது கனடாவில் வசித்துவரும் ரேகா சபரி, தமிழ் இலக்கியம் மற்றும் வரலாற்றில் தீவிர ஆர்வம் கொண்டவர். காடுகளில் முகாமிடுதல், பயணம், மலையேற்றம், படகோட்டுதல் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவை இயற்கையைப் பற்றிய நம் பார்வையை விரிவடையச்செய்கின்றன; சிந்திக்கவும், பல்வேறு பண்பாடுகளுடன் இணைந்து பயணிக்கவும் வழிசெய்கின்றன என்கிறார். புலம்பெயர்ந்த பெண்களுடன் பணியாற்றுவதில் விருப்பம் கொண்டவர். அவர்களின் போராட்டங்கள், மனஉறுதி, மாறிவரும் அடையாளங்கள் போன்றவற்றை கவனப்படுத்தி, அவர்களது கதைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவர விரும்புகிறார்.

Exit mobile version