Site icon Her Stories

நினைவோடைகள்

வாழை

மனதின் நினைவோடைகளை இப்படி எழுதுவது ஒரு சின்ன ஆசுவாசத்தைத் தருகிறது. வங்கோடையில் நீண்ட நெடும்பாதையில் நடந்துகொண்டே இருக்கையில், எதிர்ப்படும் ஒரு பெரிய ஆலமரத்தின்கீழ் இளைப்பாறுவதுபோல.

முகநூல் முழுதும் அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்த ‘வாழை’ படத்தைப் பார்த்து முடித்தேன். அந்த வாழ்க்கை பெரும்துயரம். இப்படித்தான் ‘எரியும் பனிக்காடு’ படித்த கொஞ்ச நாள்களுக்குத் தேநீரே சாப்பிட முடியாமல் போனது; இப்படித்தான் ஆழிப்பேரலையின்போது, என் வீட்டுவழியே சென்ற பிணங்களின் எண்ணிக்கையில் அரண்டு, கடற்கரை வெறுத்துப் போயிற்று. இப்போது வாழை பார்த்தபின், வாழைப்பழத்தைப் பார்த்தாலே, ஒடியும் கழுத்துதான் நினைவிலெழுகிறது. அந்த வலியை, உழைப்பை, அதிலிருக்கும் சுரண்டலைப் படம் வெளிச்சமிட்டுக் காட்டியதில் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், அந்த ஆசிரியர் பகுதி, எனக்கு வருத்தமே! 

கிராமங்களில் இருபது ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். மாணவர்களிடம் அன்பாகப் பழகும் ஆசிரியர்கள், அதிலும் அந்த ஊரிலேயே வசிப்பவர்களுக்கு, மாணவர்களின் குடும்ப விவகாரங்கள் பெரும்பாலும் தெரிந்திருக்கும். ஆசிரியரிடம் மாணவருக்கு ஏற்படும் மென்காதலைச் சொல்லப் புகுந்து இந்த இடத்தைத் தவற விட்டுவிட்டாரோ இயக்குநரென்று தோன்றியது. அந்த மெல்லுணர்வுமே சற்றுத் தடம் புரண்டதோ எனும்படிக்கான காட்சிகள்.

ஆசிரியருக்கும் மாணவருக்குமிடையே இருக்கும் மெல்லிய உணர்வுகள் தனிப் படத்துக்கானவை, தனியாகவே எடுத்திருக்கலாம். பள்ளியில் இருந்ததால் தப்பித்தான் என்பதைச் சொல்வதற்காகவே செருகப்பட்ட ஆணி, துருத்தியிருப்பதுபோலவே படத்தில் அந்தக் காட்சிகள்; ஆசிரியர் பகுதியை எடுத்தாலும் படத்தின் கதையோட்டத்தில் நட்டமில்லை; ஓரிரண்டு இடங்கள் தவிர.

வேம்புக்கும் கனிக்குமிடையில் மலரும் மெல்லிய காதலைச் சொல்லும் படலம் அழகிய சிறுகதை; விரித்துச் சொல்லியிருக்கலாமோ எனும் ஏக்கத்தைத் தந்தது. படத்தில் இரண்டு இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னத்தைக் கவனித்தேன். முகமலர்ந்து மனம் கனிந்தது. படத்தின் முடிவு, சட்டென்று முடித்தது போலத் தோன்றியது. இதையெல்லாம் தாண்டி, அந்தச் சிறுவர்கள் இருவரும், அந்த ஊர்ப்பக்கம்போல… வாழ்ந்திருக்கிறார்கள்.

இயக்குநர் பாலா, இனி திரைப்படங்களில் நடிக்கலாம்.

**

ஆசிரியக் கிரீடங்கள்

https://velaiththalam.lk/grievances/2022-02-16-12-21-44

அரசு ஊழியர்களிடையே ஒரு பழக்கமுண்டு; ஒருவேளை, தொடங்கிய காலந்தொட்டே இருக்கலாமும்கூட. நான் பணியில் சேர்ந்ததிலிருந்தே அதைத் தொடர்ந்து கண்டித்து வந்திருக்கிறேன், அந்த ஆதங்கத்தை உங்களோடும் பகிர்ந்து கொள்ளும்படிக்கு அண்மையில் மீண்டுமொரு சம்பவம் நடந்தது. அது பல கொசுவத்திகளை மனசிற்குள் சுற்ற வைத்தது.

பள்ளியிலோ, அலுவலகத்திலோ அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, பகுதிநேர ஊழியர்களும் தற்காலிக ஊழியர்களும் கூடுதலாகப் பணிபுரிவர். இவர்களுடைய ஊதியம் குறைவு; பணியோ, அனைவரையும் போலத்தான். என்னைப் பொறுத்தளவில், பள்ளியில் இருக்கும் கூடுதல் பணிகளை இவர்களுக்குக் கொடுக்க மாட்டேன். ஊதியம் குறைவாகப் பெற்றுக் கொள்பவர்களிடம் எப்படி அதிக வேலை வாங்க முடியும் என்பது என் எண்ணம். விடுப்பு எடுத்த ஆசிரியரின் வகுப்புக்கு மாற்றுப்பணி, ஏதேனும் பொருள்களை வாங்கி வர அலுவலகம் செல்வது, மாணவர்களைப் போட்டிகளுக்காக வெளியில் அழைத்துச் செல்வது இப்படிப் பணிகள் ஏதாவது இருந்து கொண்டே இருக்கும். நாம் ஏதாவது அரசு ஆசிரியருக்கு அந்தப் பணியை ஒதுக்கினாலும், அவர்களாகவே உருவாக்கிக்கொண்ட உள்ளொதுக்கீட்டு அதிகாரத்தில், அந்த வேலையை ஏதேனும் தற்காலிக ஊழியரிடம் கொடுத்து, அவர்களைச் செய்யச் சொல்வார்கள்; அவர்களும் வாயற்ற ஊமைகளென இட்ட வேலையைச் செய்வர். அரசு ஊழியர் என்றால் மேலானவர் என்றும் மற்றவர்கள் அவர்களைவிடத் தாழ்வு என்றொரு பிரிவினை. மனிதர்களுக்குத் தங்களிடத்தில் குழுக்களை வளர்த்துக் கொள்வதிலும் உயர்வு தாழ்வு கற்பிப்பதிலும் அப்படியென்னதான் ஆனந்தமோ?

அதிக சம்பளம் வாங்குபவர்கள்தான் அதிகமான வேலைகளைச் செய்ய வேண்டுமென்பது என் கட்சி. ஆனால் அதற்கு மாறாகவே நடக்கும். பள்ளியில் இதற்காகப் பலமுறை சண்டையிட்டிருக்கிறேன்; நான் தலைமை ஆசிரியராக இருந்தபோது இதற்காகப் போராடி, இயன்ற அளவு நியாயம் செய்திருக்கிறேன். சீனியர் – ஜூனியர், பணி வேறுபாடுகளில் ஏற்றத்தாழ்வு, சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு என்று தொட்ட இடங்களிலெல்லாம் மனிதர்களைப் பிரித்து வைப்பதிலும் தங்கள் காலடிக்குக் கீழே இன்னொரு மனிதரை வைத்துச் சந்தோஷப்படுவதிலும் என்ன ஆனந்தம் இருக்க முடியும்?

அன்று, ஆசிரியர் தினம். எங்கள் பள்ளியில் படுமொக்கையாக அதைக் கொண்டாடுவார்கள், அதாவது, மாணவர்கள் எல்லோரையும் அமர வைத்து ஆசிரியர்களே ஆசிரியர்களின் சிறப்புகளைப் பேசி மானே தேனே பொன்மானே என்பார்கள். நான் அன்றைய தினத்தை ஆசிரியர்கள் சற்றுத் தங்களைத் தளர்த்திக் கொள்ள வேண்டுமென்றும் தங்கள் கிரீடங்களை இறக்க வேண்டுமென்றும் நினைத்து, விளையாட்டுப் போட்டிகள், ஆச்சர்யங்களென்று வடிவமைத்தேன். அதிலும்கூட, தற்காலிக ஊழியர்கள் எங்களுடன் சேர்ந்து விளையாடுவதா என்று ஓர் ஆசிரியர் கேள்வி கேட்டு மற்றவரைக் காயப்படுத்தியபோது மிக எரிச்சலாக இருந்தது. நிகழ்வை அப்படியே கைவிட்டேன். இன்றுவரையிலும் பல்வேறு இடங்களில் இந்தக் கேள்வியை, வெவ்வேறு வடிவங்களில் பார்த்து வருகிறேன்; எத்தனையோ வருத்தங்களுடன் வாழ்கிறேன், அதில் இதுவுமொரு வருத்தம்!

**

தமிழ்நாடு நாள்

நவம்பர் 1, தமிழ்நாடு நாள். இந்தியா விடுதலை பெற்றபிறகு, மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. அதனை நடுவணரசு, ஏற்க மறுத்த நிலையில் ஆந்திராவில் பெரும்போராட்டம் எழுந்தது; கலவரங்கள் தொடங்கின.

வேறு வழியின்றி, நேரு அரசு நவம்பர் 1, 1956 அன்று மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆந்திரா, கர்நாடகா, கேரளம் ஆகியவற்றின் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணத்தின் பெரும்பகுதிகள் அங்கு வாழ்ந்த மக்கள் பேசிய மொழிகளின் அடிப்படையில் பிரித்துத் தனி மாநிலங்களாக்கப்பட்டன.  சென்னை மாகாணத்தின் எஞ்சிய பகுதிகளுடன் திருவிதாங்கூரிலிருந்த தமிழ் பேசும் பகுதிகள் இணைக்கப்பட்டு, புதிய தமிழகம் உருவானது. மாநிலம் உருவான நாளை, அந்தந்த மாநில அரசுகள் அரசு விழாவாகக் கொண்டாடுகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியான விழா எதுவும் அரசால் முன்னெடுக்கப்படவில்லை.

தமிழ்நாடு அமைந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று பன்னெடுங்காலம் தொடர்ந்த கோரிக்கைகளை ஏற்று, நவம்பர் ஒன்றாம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதற்கான அரசாணையை வெளியிட்டார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 25 அக்டோபர், 2019 அன்று தமிழக அரசால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்ட தமிழ்நாடு நாளன்று, இப்போதைய முதல்வர் ஸ்டாலின் உள்பட அனைத்துத் தலைவர்களும் அதனை வரவேற்று வாழ்த்துத் தெரிவித்திருந்தனர். ஆனால், 2021இல் புதிய முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், 1967ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18ஆம் தேதியைத் தமிழ்நாடு நாள் என்று அறிவித்தார்.

இன்றைய தமிழ்நாட்டின் எல்லைப்பரப்பு உறுதி செய்யப்பட்டதும் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டதும் 1956 நவம்பர் ஒன்று. இந்தியா விடுதலையாகிக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டபோது 9 மாநிலங்களும் 3 யூனியன் பிரதேசங்களும் மட்டுமே இருந்தன. பின்னர் பல போராட்டங்களுக்குப் பிறகே 1956 நவம்பர் ஒன்று அன்று மொழிவாரியாக, இந்தியா 14 மாநிலங்களாகவும் 6 யூனியன் பிரதேசங்களாகவும் உருவாக்கப்பட்டன. இதன்பிறகு 11 ஆண்டுகள் கழித்தே, 1967ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகே அத்தீர்மானம், நடைமுறைக்கு வந்தது. இன்றைய நிலப்பரப்பைக் கொண்ட புதிய மாநிலம் பிறந்த நாள் நவம்பர் 1. அதற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் 1969 ஜனவரி 14. இரண்டுக்கும் நடுவில், கோரிக்கை வைக்கப்பட்ட நாளே, ஜூலை 18. மாநிலம் பிறந்ததைத்தான் பிறந்தநாளாகக் கொண்டாட முடியுமேயன்றி, மற்ற நாள்களைக் கொண்டாட முடியாது.

இதுநாள் வரையிலும் கொண்டாடாத தமிழக அரசு, இப்போது அதைக் கொண்டாட முன்வந்த மகிழ்ச்சியை அனுபவிக்க முடியாதபடிக்கு அந்நாளைச் சர்ச்சைக்குள்ளாக்கி இருப்பது தேவையற்றது. இன்றைய தமிழ்நாடு அமைந்து 66 ஆண்டுகள் ஆகின்றது. தமிழ்நாடு பெயர் சூட்டத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 54 ஆண்டுகள் ஆகின்றன. அரசு கொண்டாடுவதற்கு முன்பிருந்தே தமிழ் அமைப்புகள், நவம்பர் ஒன்றைப் பல ஆண்டுகளாகக் கொண்டாடி வருகின்றன.

எனவே தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதை விடுத்து, நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதே, அதற்காகப் பாடுபட்ட தியாகி சங்கரலிங்கனார், ம.பொ.சிவஞானம், பூபேஷ் குப்தா, அண்ணா ஆகியோருக்குச் செய்யும் நன்றியாகும்.

தொடரும்…

படைப்பாளர்

தி. பரமேசுவரி

 ‘எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி, தனியள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள்,  ‘ம.பொ.சி பார்வையில் பாரதி,  சமூகம் – வலைத்தளம் – பெண், சொல்லால் அழியும் துயர் ‘ஆகிய மூன்று கட்டுரைத் தொகுப்புகள்,  மற்றும் ‘ம.பொ.சியின் சிறுகதைகள், ம.பொ.சியின் சிலப்பதிகார உரை, ஜோ.டி.குரூஸின் கொற்கை நாவலை முன்வைத்து ‘கலிகெழு கொற்கை’ என்னும் கட்டுரைத் தொகுப்புகளையும் ‘தமிழன் குரல்’ என்ற இதழை மூன்று தொகுதிகளாகவும் தொகுத்துள்ளார். கலை இலக்கியப் பேரவை விருது, பாலா விருது, அன்னம் விருது பெற்றிருக்கின்றார்.

Exit mobile version