Site icon Her Stories

உணவுக் கட்டுப்பாடு

சிறுநீரகச் சிகிச்சை தொடங்கிய பிறகு கடுமையான உணவுக் கட்டுப்பாடு ஆரம்பமானது. பொட்டாசியம் அதிகமாக இருந்த கீரை வகைகள், கணவருக்கு மிகவும் பிடித்த உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்ற காய்கறிகளை அறவே நீக்க வேண்டி வந்தது. உணவுப் பட்டியலில் அவருக்குக் கொடுக்கக் கூடியவற்றைக் காட்டிலும் நீக்க வேண்டியவையே அதிகமிருந்தன.

ருசியின்றிச் சப்பென்று இருக்கும் சுரை, பூசணி போன்ற நீர்க்காய் வகைகளில் மட்டுமே பொட்டாசியம் குறைவாக இருக்கிறது. மீன் அல்லது கோழிக்கறி 70 கிராம் மட்டுமே ஒரு நாள் உணவில் சேர்க்க முடியும். புரதம் அதிகமுள்ள உணவைச் சாப்பிட்டால் ஏற்கெனவே நோயுற்று வடிகட்டத் திணறும் சிறுநீரகத்துக்கு வேலைப்பளு அதிகரிக்கும். ஆனால் சிறுநீரக நோயாளிக்கும் கண்டிப்பாகப் புரதம் வேண்டுமென்பதால், நோயாளியின் உடல்நிலைக்கேற்ப மருத்துவர் பரிந்துரைக்கும் குறைந்த அளவிலேயே புரதம் சேர்க்க வேண்டும். பருப்பில் புரதம் அதிகமென்பதால் சாம்பாரும் ரசம் போல நீர்க்கத்தான் இருக்க வேண்டும்.

நாம் சமைக்கும் போது சத்து நீங்காமலிருக்கக் காய்களை முழுதாகக் கழுவிவிட்டு நறுக்குவோம்; சிறிய துண்டுகளாக நறுக்கினால் சத்து அழியுமென்று பெரிய துண்டுகளாக நறுக்குவோம். ஆனால், சிறுநீரக நோயாளிகளுக்குக் காய்கறியைச் சின்ன துண்டுகளாக நறுக்கி, நீரில் போட்டுச் சிறிது நேரம் ஊறவிட்டு, பின் அலசியெடுத்துச் சமைக்க வேண்டும். நீரில் பொட்டாசியம் கரைந்துவிடும் என்பதற்காக இந்த ஏற்பாடு.  

மொத்தமே 5 மிலி கிராம் உப்புதான் ஒரு நாள் சேர்க்க வேண்டுமென்பதால் உப்பை வெகுவாகக் குறைக்க வேண்டியிருந்தது. காய்கறிப் பொரியலில் மறக்காமல் உப்பு கம்மியாகப் போட்டுக் கணவருக்கு எடுத்த பிறகே மற்றவர்களுக்குக் கூடுதலான உப்பைச் சேர்க்க வேண்டும். உப்பு அதிகமுள்ள ஊறுகாய் போன்ற பொருட்களைக் கண்ணிலேயே காட்டக் கூடாது.

தேங்காயில் பொட்டாசியம் அதிகமிருப்பதால் பொரியலில் சேர்க்க முடியவில்லை, உப்பு குறைவாகவும் தேங்காய் இல்லாமலும் காய்கறிப் பொரியல் சுவையின்றிச் சப்பென்று மண் மாதிரி இருக்கும். அதைத்தான் சாப்பிட வேண்டும். வேறு வழி? கணவருக்கு ஒரு விதமாகவும் பிள்ளைகளுக்கு வேறுவிதமாகவும் சமைக்க வேண்டியிருந்தது. குழந்தைகளுக்குப் பொட்டாசியம் அவசியமாயிற்றே! தினசரி சமையல் அதிக உழைப்பையும் நேரத்தையும் கோரியது.

இட்லிக்கு நாம் வழக்கமாகத் தொட்டுக்கொள்ளும் தேங்காய்,  வேர்க்கடலை, தக்காளி, கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகிய சட்னி வகைகளைச் சேர்க்க முடியவில்லை. பொட்டுக்கடலையில் கொஞ்சம் இஞ்சி, ஒரு காய்ந்த மிளகாய் வைத்து அரைத்த சட்னிதான் பெரும்பாலும்.  அதையே சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டது என்பார் கணவர். பழங்களில் ஆப்பிள், கொய்யா இரண்டை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் என்றார் மருத்துவர்.

ஆரம்பத்தில் ஒரு நாள் முருங்கைக்கீரையில் பொட்டாசியம் அதிகம் இருப்பது தெரியாமல் கணவருக்குக் கொடுத்தவுடன் அன்று மாலையே அவரது கால் பயங்கரமாக வீங்கிவிட்டது. அதற்குப் பிறகு பொட்டாசியம் அதிகமிருக்கும் பொருட்களின் விவரங்களைத் தேடி தேடித் தெரிந்துகொண்டு, அவற்றை முற்றிலுமாகத் தவிர்க்கத் தொடங்கினேன். சாப்பாட்டில் நான் அதிகக் கெடுபிடி காட்டியதால் சில நாட்களில் அவருக்குக் கோபம் உச்சத்தை எட்டும்.

“நாக்கு ருசியா நல்லா சாப்பிட முடியாம, அதிக நாள் உயிர் வாழறதைவிட, நல்லா சாப்பிட்டுட்டு நாலு நாள்ல செத்துப் போறேன். விடு என்னை” என்று கோபமாகச் சத்தம் போடுவார்.

“நாம சாப்பிடுறதுக்காக உயிர் வாழல; வாழறதுக்காகத்தான் சாப்பிடுறோம்” என்று அடிக்கடி அவரைச் சமாதானம் செய்ய வேண்டியிருந்தது.  

மருத்துவரிடம் செல்லும் போதெல்லாம், நான் கொடுக்கும் உப்புச் சப்பற்ற சாப்பாடு பற்றிப் புகார் சொல்வார். மருத்துவர் அவர் சொல்வதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு முடிவில், “உங்க மனைவி என்ன கொடுக்கிறாங்களோ, அதை மட்டும் சாப்பிடுங்க” என்பார். எனக்குப் பாவமாகயிருக்கும். ஆனால் சிறுநீரகச் செயலிழப்பைத் தள்ளிப் போட உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியமாயிற்றே. 

இடையில் மாமியாருக்குக் கண்ணில் கிளக்கோமா  (Glaucoma) என்கிற கண் நீரழுத்த நோயால் பிரச்னை ஏற்பட்டது. ஒரு முறை மாமியாருடன் கண் மருத்துவமனைக்குச் சென்றபோது வெளியே கிளக்கோமா வருவதற்கான காரணங்கள் குறித்து ஒரு சுவரொட்டி கண்ணில் பட்டது. அதில் பரம்பரை, சர்க்கரை நோய், வயது உள்ளிட்ட காரணங்களோடு ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொள்பவருக்கும் வரக்கூடிய ஆபத்திருக்கிறது என்றிருந்தது. எனக்குப் பகீரென்றது.

‘கணவருக்கு மூன்று மாதம் ஸ்டீராய்டு எடுத்திருக்கிறோமே; மேலும் அம்மாவுக்கு வந்திருப்பதால் பரம்பரையாக மகனுக்கு வரக்கூடிய ஆபத்தும் இருக்கிறதே’ என்று யோசித்து அடுத்த நாளே கணவரைக் கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். அவர்கள் சோதித்துவிட்டு, “கண்ணில் நீரழுத்தப் பிரச்னை இல்லை; ஆனால் விழித்திரையில் (Retina) ஒரு பிரச்னை இருக்கிறது. உடனே ஒரு லேசர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விழித்திரை முழுதும் பழுதாகிப்  பார்வை பறிபோகும் ஆபத்திருக்கிறது” என்றார்.

யோசிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்தேன். அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஒரு மாதம் கழித்து வரச் சொன்னார்கள். அடுத்த மாதம் பயந்தபடியே சென்று சோதனை செய்தபோது, “பிரச்னை சரியாகிவிட்டது; இனிமேல் சோதனைக்கு வர வேண்டாம்” என்றனர். எதேச்சையாகச் சோதனை செய்யப் போய், பார்வை தப்பித்தது!

கிளக்கோமா என்பது கண்ணின் பார்வை நரம்பைப் (Optic Nerve) பாதித்துப்  பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு கண் நோய். கண்ணின் உட்புற அழுத்தம் அதிகரித்து, மூளைக்குத் தகவல்களை அனுப்பும் நரம்பு சேதமடைவதால் இது ஏற்படுகிறது. எனவே ஸ்டீராய்டு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களும், சர்க்கரை நோய் உள்ளவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கண் நீரழுத்தச்  சோதனை செய்துகொள்வது நல்லது. 

(தொடரும்)

படைப்பாளர்:

ஞா.கலையரசி

புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில்  வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.

Exit mobile version