எப்போதுமே இது போன்ற தொடர்கள் மருத்துவர்களாலோ, மருத்துவத் துறை வல்லுநர்களாலோ எழுதப்படுவது வழக்கம். ஆனால் இது ஒரு நோயாளியின் கண்ணோட்டத்தில் எழுதப்படும் தொடர். என் கணவர் சிறுநீரக நோயாளி. இரண்டு சிறுநீரகங்களும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டு, டயாலிசிஸில் இருந்தவர். அவருக்கான தொடர் சிகிச்சையில் நான் கற்றதும் பெற்றதும் ஏராளம்.
இந்தத் தொடரில் சிறுநீரக நோயின் பாதிப்புகள் குறித்தும், அதன் விளைவாக நோயாளியும், அவர் குடும்பத்தினரும் எதிர்கொண்ட அனுபவங்களையும் அதன்மூலம் கிடைத்த பாடங்களையும் பகிர்ந்துகொள்வதே என் நோக்கம்.
1. வாசிப்பவர்களுக்குச் சிறுநீரகத்தின் அருமையைப் புரியவைத்தல்;
பாதிப்பு வருமுன், அதனைக் காக்க வேண்டும் என்கிற
விழிப்புணர்வை ஏற்படுத்துதல்;
2. பட்ட காலிலேயே படும் என்பது போல, அடுத்தடுத்து துன்பம்
ஏற்பட்டபோது, ‘நமக்கு மட்டும் ஏன் இப்படி?’ என்று பல சமயங்களில்
வேதனைப்பட்டிருக்கிறோம். ஆனால் இத்துன்பம்
நமக்கு மட்டுமல்ல; அது சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டவர்கள்
அனைவருக்குமே உரியது என்கிற புரிதலைச் சிறுநீரகப்
பாதிப்புக்குள்ளாகி, அவதிப்படும் நண்பர்களுக்கு ஏற்படுத்துதல்;
3. நாங்கள் செய்த சில தவறுகளைச் சொல்லி, அவற்றைத் தவிர்க்க
அறிவுறுத்துதல்.
4. சேர்த்துக்கொள்ளக் கூடிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவு
வகைகளை அறியச் செய்தல்;
இதய நோய்க்கு அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்கள்கூட, மன அழுத்தம், மனச்சோர்வு இல்லாத வாழ்க்கை முறையை மேற்கொண்டு, அளவான உடற்பயிற்சியுடன் இயல்பான வாழ்வை மேற்கொள்ள முடியும். ஆனால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்பட்டு விட்டாலோ, அதற்குப் பிறகுத் தொடர் சிகிச்சை காரணமாக நடைமுறை வாழ்வில் நாம் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளும் வேதனைகளும் ஏராளம்.
’சிறிநீரகப் பிரச்சினைக்குத்தான் டயாலிசிஸ் இருக்கிறதே, அதைச் செய்து கொண்டு உயிர் வாழ முடியாதா?’ எனச் சிலர் கேட்கலாம். டயாலிசிஸ் செய்வதில், பல பிரச்னைகள் உள்ளன. மாற்றுச் சிறுநீரகம் பொருத்திக் கொள்வதிலும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன.
சிறுநீரகச் செயலிழப்புக்கு உள்ளானவர்கள் சந்திக்கக்கூடிய பிரச்னைகளை விவரித்து வாசிப்பவர்களைப் பயமுறுத்துவது என் நோக்கமல்ல; அனுபவங்களின் மூலம் நான் கற்றவற்றைப் பகிர்வதன் மூலம் சிறுநீரகச் செயலிழப்பு குறித்த ஒரு பொதுவான புரிதலை வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்துவதே என் குறிக்கோள்.
(தொடரும்)
படைப்பாளர்:
ஞா.கலையரசி
புதுச்சேரியைச் சேர்ந்தவர். ஸ்டேட்பாங்க் ஆஃப் இந்தியாவில் வேலை செய்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது சென்னையில் வசிக்கிறார். சிறார்களுக்காக இதுவரை 20 நூல்களை எழுதியிருக்கிறார். வானம், பாரதி புத்தகாலயம், நிவேதிதா, தமிழ்நாடு பாடநூல் கழகம் வாயிலாக நூல்கள் வெளிவந்துள்ளன. வானதி பதிப்பகம் வரலாற்று நாவலை வெளியிட்டுள்ளது. குழந்தைகளின் வாசிப்பை ஊக்குவிக்க ‘சுட்டி உலகம்’ எனும் வலைத்தளத்தை நடத்துகிறார். ‘பூஞ்சிட்டு’ எனும் குழந்தைகள் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கிறார்.


