Site icon Her Stories

ஷவர்மாவுக்கு வந்த சோதனை!

Side view shawarma with fried potatoes in board cookware on stone background

                                                     

கேரள மாநிலம் காசர்கோட் அருகே உள்ள செருவத்தூரில் 16 வயது மாணவி ஷவர்மா சாப்பிட்டதால் உயிரிழந்தார் என்கிற செய்தியும், அதைத் தொடர்ந்து ஷவர்மாவைத் தடை செய்ய வேண்டும் என்ற கூச்சல்களும் தான் தற்போதைய பரபரப்பு. 

கேரளா சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சாவூர் ஒரத்தநாட்டிலும் மூன்று மாணவர்கள் ஷவர்மா சாப்பிட்டதால் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் கிலோ கணக்கில் கெட்டுப் போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இப்போது சொல்லுங்கள் தவறு ஷவர்மாவிலா அல்லது அதில் பயன்படுத்தப்படும் இறைச்சியிலா?

ஷவர்மா லெவாண்டின் மத்தியதரைக் கடல் நாட்டிலும், சிரியா, பாலஸ்தீனம், லெபனான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் பிரபலமான உணவு. முதலில் இது வேறு முறையில் தயாரிக்கப்பட்டது. அதாவது கிடைமட்ட கம்பியில் இறைச்சியை வைத்து, கீழிருந்து நெருப்பு மூட்டி வேக வைத்தனர். ஆனால், இந்த முறையில் இறைச்சியில் இருந்த கொழுப்பு உருகி வீணானதோடு மட்டுமின்றி, அந்தக் கொழுப்பு நெருப்பைக் கொழுந்துவிட்டெரிய வைத்து இறைச்சியின் மேல்பகுதியைக் கருக வைத்தது. மேலும் இறைச்சியின் உட்பகுதியும் வேகாமல் இருந்தது. அதனால் இன்றைய முறையில் ஷவர்மாவை உருவாக்குவதை  18ஆம் நூற்றாண்டில் ஸ்கெந்தர் இபென்டி என்பவர் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் பெயரில் ஸ்கெந்தர் கெபாப் இன்றைக்கும் துருக்கியில் பிரபலமான உணவு வகையாக இருக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இடம்பெயர்ந்த துருக்கி மக்களால் 1980களில் ஜெர்மன் அமெரிக்கா போன்ற நாடுகளில் ஷவர்மா பிரபலமாகியது. 

ஒரு நாட்டின் தட்பவெப்பநிலை, இயற்கைச் சூழல்கள், அங்கு கிடைக்கும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றைப் பொறுத்தே அங்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் அந்த நாட்டின் கண்டுபிடிப்பாகின்றன. அது இடம் பெயரும் போது அந்த நாட்டின் சூழலுக்கும், அந்த மக்களின் சுவைக்கும் ஏற்ப சிற்சில மாற்றங்கள் பெற்று உருமாறுகிறது. இதேபோல் ஷவர்மா இன்னொரு கதையையும் கொண்டுள்ளது. ஷவர்மா 1972 ஆம் ஆண்டு துருக்கியில் இருந்து வந்த ஒரு தொழிலாளியால் ஜெர்மனியின் பெர்லினில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.  அந்தத் தொழிலாளி தன்னுடைய பெர்லின் பயணத்தின்போது இதர தொழிலாளர்கள் தங்களது மதிய உணவாக வறுக்கப்பட்ட காய்கறிகளுடன் கோழி இறைச்சியைச் சுட்டு சாப்பிடுவதை அறிந்ததாகவும், அந்த உணவை மேலும் சுவையாக்க விரும்பிய அவர் அதை வோய்லா என்று அழைக்கப்படும் ஒரு வகையான ரொட்டியில் சுற்றி ஷவர்மாவை உருவாக்கினார் எனவும் நம்பப்படுகிறது. எப்படி ஒரு நாட்டின் கலாச்சாரத்தையோ, மொழியையோ, மத நம்பிக்கைகளையோ ஒருவர்தான் உருவாக்கினார் என்று சொல்ல இயலாதோ அதே போலத்தான் ஓர் உணவை இன்னார் தான் கண்டுபிடித்தார் என்று அறுதியிட்டுக் கூறவியலாது.

ஷவர்மா அதிக கலோரிகள் கொண்ட உணவு. 400 முதல் 500 கலோரிகள் வரை ஒரு சாதாரண ஷவர்மாவில் கிடைக்கும். மினரல், விட்டமின் போன்ற சத்துகளைக் காட்டிலும் அதிகளவில் இருப்பது கார்போஹைட்ரேட் மட்டுமே. இந்த கலோரிகளை எரிக்க நான்கு முதல் ஐந்து மணி நேரம் நடக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

உணவு அரசியல் என்பது காலங்காலமாக இருந்து வருவதுதான். ஆதி மனிதன் வேட்டைச் சமூகமாக இருந்தான். வேட்டையாடிய விலங்குகளைப் பச்சையாக உண்டான். காட்டில் கிடைக்கும் காய் கனி வகைகளை அப்படியே தின்றான். காட்டுத் தீயில் எரிந்த விலங்குகளைத் தின்றபோது புது சுவையை உணர்ந்தான். நெருப்பைப் கண்டறிந்து, மட்பாண்டம் செய்யக் கற்றபோது அவித்தல், வேகவைத்தல் என்று சமைக்கத் தொடங்கினான். 

சங்ககால மக்கள் தங்கள் நிலத்தில் கிடைத்த பொருட்களையும், பிற நில மக்களுடன் பண்டமாற்றாகப் பெற்ற பொருட்களையும் உண்டனர். மலையும் மலை சார்ந்த பகுதியுமான குறிஞ்சி நில மக்கள்  தினை, மூங்கிலரிசி, கிழங்குகள், பால், கள், ஊனுணவு ஆகியவற்றை உணவாகக்கொண்டனர். காடும் காடு சார்ந்த முல்லை நில மக்கள் ஆநிரைகளைக் கொண்டு கிடைக்கும் பால், தயிர், நெய் ஆகியவற்றோடு வரகு அரிசி, கிழங்கு வகைகள், ஊனுணவு போன்ற பிற உணவுகளையும் உண்டனர். வயலும் வயல் சார்ந்த மருதநில மக்கள் பண்பாடும் நாகரிகமும் செல்வச்செழிப்பும் கொண்டவர்கள். ஆதலால் சோற்றுணவு, பாலுணவு, ஊனுணவு, கள்ளுணவு ஆகியவற்றை உண்டனர். கடலும் கடல் சார்ந்த நெய்தல் நில மக்கள் முக்கிய உணவாக மீனை உண்டனர். மீனுக்கும் உப்புக்கும் கிடைக்கும் பண்டமாற்றுப் பொருட்களைக்  கொண்டு சமைத்து உண்டனர். மணலும் மணல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த  பாலை நிலத்து மக்களுக்கு முக்கிய உணவு வேட்டையில் கிடைக்கும் விலங்குகள். அதனோடு வழிப்பறியில் கிடைக்கும் உணவுகளையும்  சேர்த்து உண்டுவந்தனர். வெந்தும் வேகாததுமான உணவுகளாக இருந்தாலும் அவை பயிர்கள், தானியங்கள் போன்ற சத்தான உணவுகள். அதன்பின் அவர்கள் கடின உழைப்பின் மூலம் வயிற்றுக்குக் கெடுதல் வராமல் ஜீரணிக்கும் திறன் பெற்றிருந்தனர். இப்படி இருந்த உணவுப் பழக்கம் தடம் புரண்டது எப்படி?

அன்னியர் வருகையால் தான் நமது உணவுப் பழக்கம் மாறத் தொடங்கியது. அதுவரை காலையில் நீராகாரம் அல்லது கொத்துமல்லி கருப்பட்டி சேர்த்த கஷாயம் குடித்தார்கள். ஆங்கிலேயர் வருகை தந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இலவசமாக ஒரு கப் தேநீர் வழங்கத் தொடங்கினார்கள். சில வாரங்களுக்குப் பிறகு ஒரு கப் தேநீருடன் ஒரு பொட்டலம் தேயிலையும் கொடுத்து அதைத் தயாரிக்கும் முறையையும் சொல்லித் தந்தனர். பின்னர் வியாபாரம் ஆரம்பிக்கப்பட்டது. இப்படித்தான் ஒவ்வோர் அன்னிய உணவுப் பொருளும் நமக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அது போல் இப்போது ஷவர்மா. இது ஓர் அசைவ உணவு என்பதாலேயே இப்போது பேசுபொருளாக இருக்கிறது. ஆனால், சைவ உணவிலும் இதுபோன்ற பல குறைபாடுகள் இருக்கின்றன. சைவ உணவு அசைவு,  அசைவ உணவு இரண்டில் எது சிறந்தது என்ற ஒரு விவாதம் காலம் காலமாக நடந்துகொண்டே தான் இருக்கிறது. ஒருவருடைய உணவு முறையில் தனிப்பட்ட ஒருவரோ அல்லது சமுதாயமோ அல்லது அரசாங்கமோ தலையிடும் உரிமை கிடையாது. இயற்கைக்கு மாறான நர மாமிசம் சாப்பிடுவது போன்ற சமயத்தில்தான் நமக்கு கேள்வி கேட்கும் உரிமை இருக்கிறது. 

என் நெருங்கிய உறவுப்பெண்ணுக்குச் சில வருடங்கள் முன்பு ஒரு கட்டி ஏற்பட்டு ஆபரேஷன் வரை சென்று மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார். அவர் வளைகுடா நாட்டில் வசிப்பவர். அங்கு இதே ஷவர்மாவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டதால் உடலில் சூடு அதிகரித்து ஆபரேஷன் வரை கொண்டுவிட்டது என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஒவ்வொருவரின் உடல்நலனையும் அவர்களைத் தவிர இதரர்களால் அறிந்துகொள்ள இயலாது.

இந்த உலகத்தில் மனிதர்களைவிட அதிக அளவு பிற உயிரினங்கள் தான் இருக்கின்றன. இந்த உலகம் உணவுச் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறது. ஒன்றைச் சாப்பிட்டு தான் ஒன்று உயிர் வாழவேண்டும். இது இயற்கையின் நியதி. மீன்களைச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால் சில வாரங்களில் மீன்கள் கடல் கொள்ளாத வகையில் பல்கிப் பெருகிவிடும். அதுபோல் தான் பிற உயிரினங்களும். ஆதிமனிதன் முதலில் கிடைத்த விலங்குகளைப் புசித்த வழக்கம் வழிவழியாக நமது மரபணுக்களில் இன்னும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது. இதில் எதற்கு விவாதம்?

எந்த வகை உணவாக இருந்தாலும் கெடாமல் வைத்திருந்தால் தான் அது உடலுக்கு உகந்தது. உணவகங்கள் வைத்திருப்போர் பெரும்பாலும் கெட்டுப் போன காய்கறிகள், இறைச்சிகள் போன்றவற்றை மிகக் குறைந்த விலைக்கு வாங்கி அதிகளவு மசாலாக்கள் சேர்த்து, கெட்டவாடை வராமல் சாமர்த்தியமாகச் சமாளிக்கின்றனர். உணவுப் பொருட்களை ஆய்வு செய்யும் அதிகாரிகள் மனசாட்சிப்படி ஆய்வு செய்கிறார்களா என்பது பில்லியன் டாலர் கேள்வி.

எத்தனையோ அங்கன்வாடி குழந்தைகள் அங்கு தயாரிக்கப்பட்ட ‘சத்துணவை’ உண்டு உயிரிழந்த கதைகள் இங்கு ஏராளம். அப்போதெல்லாம் சைவ உணவு மோசம், அதைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்டனவா? அன்றன்று தயாரிக்கப்படும் உணவுகளை அன்றே சாப்பிட்டுவிட வேண்டும் என்றுதான் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதைக் குளிர்பதனப் பெட்டியில் வைத்து மீண்டும் சூடுபடுத்தும் போது அதில் பலவிதமான பாக்டீரியாக்கள் உருவாகின்றன. சமீபத்தில் கேரளத்தில் இறந்த மாணவியின் உடற்கூராய்வு அறிக்கையிலும் கூட கெட்டுப்போன ஷவர்மாவில் ஷிகெல்லா பாக்டீரியா இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷிகெல்லா பாக்டீரியா உயிர்க் கொல்லி கிடையாது என்கிற போதிலும் அசைவம் என்று மட்டுமல்லாமல் சைவ உணவுகளிலும்கூட உருவாவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு சைவம் உயர்வானது. அசைவம் தாழ்வானது என்பது போன்ற தேவையற்ற எண்ணத்தைச் சிலர் பொதுவெளிகளில் விதைக்க முற்படுகின்றனர். அவற்றில் சில அரசியல்வாதிகளும் அடக்கம். நம் நாடு பலவிதமான கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் கொண்டது. 2014 மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சைவ உணவு உண்பவர்கள் அதிகம் இருப்பதாகச் சொல்லப்படும் ராஜஸ்தானில் சைவ உணவு சாப்பிடுபவர்கள் அளவு 75 சதவீதம் மட்டுமே. ஆனால், அசைவ உணவு சாப்பிடுவோர் அதிகம் இருக்கும் 8 மாநிலங்களில் 90% பேர் சாப்பிடுகின்றனர். உணவு என்று வந்துவிட்டால் எல்லா உணவுமே கெட்டுப் போகத் தான் செய்யும் என்பதை யாரும் மறுக்க இயலாது. இதில் சைவமென்ன? அசைவமென்ன?

அப்படிப் பார்த்தால் இப்போது கலப்படம் மாவு பாக்கெட், பால் பாக்கெட் என்று எல்லாவற்றிலும் தான் நடக்கிறது. அது உடலுக்கு சரியென்று சொல்லி முடியுமா? எந்த வகை உணவாக இருந்தாலும் அவ்வப்போது தயாரித்து உண்ண வேண்டும். உணவகங்களும் கொஞ்சம் மனசாட்சிப்படி நடந்துகொண்டு உணவைத் தயாரிக்க வேண்டும். மூலப்பொருட்களை முறையாகப் பாதுகாத்து வைப்பதில் உணவகங்கள் கவனம் செலுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் இதற்கு அரசியல் சாயம் பூசாமல் இருக்க வேண்டும். மதங்களும் இந்த விஷயத்தைக் கவனமாகக் கையாள வேண்டும். அரசாங்கம் பொது ஊடகங்களில் வரும் உணவு அரசியலில் கவனம் செலுத்தாது, முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு சரியான நடவடிக்கைகள் எடுப்பதொன்றே இதற்கு தீர்வு. உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கி விட்டது. எல்லா வகை உணவும் எல்லோருக்கும் அறிமுகமாகும். தன் உடல்நலத்துக்கு இது ஒத்துக்கொள்ளுமா என்று அறிந்துகொண்டு அதை மட்டுமே ருசித்து வாழ்ந்தால் நல்லது. இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தில், முயற்சியில் தான் இருக்கிறது.

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.

Exit mobile version