Site icon Her Stories

இல்லத்தரசர்களே, நல்வரவு!

நன்றி: தோழர் இனியன்

கடந்த ஞாயிறு ‘நீயா நானா’ நிகழ்ச்சியைக் கண்டு பலரும் விசனப்பட்டிருப்பீர்கள். சமூகத்தில் ஆண்களால் ‘பெறுமதி குறைவாக கருதப்படும்’ வீட்டு வேலைகள், குழந்தைகளை கவனித்தல் யாவும் மகிமைப்படுத்தபடுவது ஒரு பக்கம் இருக்க, தம் கணவரை ‘பராமரித்தல்’ என்பது என்ன ரகம் என்றே புரியவில்லை!

குழந்தைகளைப் பராமரித்தலின் நியாயம் புரிகிறது. இல்லாவிடில் நோய்வாய்ப்பட்ட கணவர் என்ற நிலையிலும் புரிந்து கொள்ளமுடிகிறது. (சாதாரண தடிமன், காய்ச்சல், தலைவலி போன்றவை தவிர). ஆரோக்கியமாக இருக்ககூடிய ஆணுக்கு பராமரிப்பு தேவையா ?
உண்மையாகவே புரியவில்லை?

பெண்கள் சுயாதீனமாக இயங்கக் கூடிய நிலையை எய்திக்கொண்டிருக்கும் இக்காலச் சூழலில், ஆண்கள் தற்சார்புடன் இயங்குவதில் (being independent) பின் தங்கி நிற்கின்றனரா என எண்ணத் தோன்றுகிறது. சில பெண்கள் அறியாமையினாலும், ஆணாதிக்கக் கட்டமைப்பில் வளர்ந்தமையினாலும், ஆண்கள் ‘தம்மில் தங்கி இருத்தல்’ என்பதை விரும்புகின்றனர்.

‘ஆண்கள் பொருள் ஈட்ட வீட்டுக்கு வெளியே இயங்குபவர்கள். பெண்கள் வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு, சமையல், துணி துவைத்தல், சுத்தம் செய்தல் போன்ற வீட்டு பணிகளைச் செய்ய ஏற்றவர்கள். அப்பணிகளை ஆண்களால் சரி வர செய்ய முடியாது’ என கட்டமைக்கப்பட்ட ஒரு போலி பிம்பம், குடும்பப் பொறுப்பு பெண்களுக்கு உரியது என கல்வி, தொழில் வாய்ப்புக்களை மறுத்து, வீட்டுக்குள் நிரந்தரமாக உட்கார வைத்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகே பெண்கள் அந்தக் கட்டுகளை உடைத்து வெளி வரத்தொடங்கியுள்ளனர்.

அடிப்படை சமையல் என்பது அனைவருக்கும் அவசியத் திறன். மரக்கறியும் இறைச்சியும் வெட்டுவதற்கு பெண்களால்தான் முடியும் என்பதும் அறிவியல் ரீதியாகவோ உடல் ரீதியாகவோ ஆண்களால் முடியாது என்று எந்த ஆய்வும் சொல்லவில்லை.  இதை விட சிறப்பு, முக்கால் விழுக்காடு உணவக சமையல்காரர்கள் (chef) ஆண்கள்தான். ஐந்து நட்சத்திர விடுதி சமையல்காரர் சம்பளமோ எக்கச்சக்கம்.

சம்பளத்துக்கு சமையல் அறை செல்பவர்கள், வீட்டில் மனைவி மக்களுக்கு சமைக்கத் தயங்குவதேன்?

இன்னும் தமிழ் மாப்பிள்ளைமார் தங்களுக்கு சமையலில் ஆர்வம் இல்லை; சமையல் என்றால் பெண்கள் தான் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கிறார்கள். அதாவது மனைவி வேலைக்கு போய் வந்து, குழந்தைகளையும் பார்த்துக்கொண்டு, வீட்டு வேலைகளைச் சரியாக முடிக்க வேண்டுமாம். கணவன் ஒரு பக்கமாக நின்று உதவி பண்ணுவாராம், ஏனென்றால் அவர் ஆம்பளையாம்!

என்னமோ கணவன், பணம் செலுத்தும் விருந்தினர் (paying guest) போல், விடுதியில் தங்குபவர் மாதிரியும் மனைவி அவரை பராமரிக்க வேண்டியும் இருக்கிறதாம், அப்போதுதான் ‘குடும்பம்’ நன்றாக இருக்குமாம்.
மொத்தத்தில் ஒரு தேநீர் போட்டு குடிப்பதற்குக்கூட ஆண் மகன்கள் பழக்கப்படுவதில்லை. மேலை நாடுகளில் இந்த நிலைமைகள் மாறினாலும், இன்னும் இந்த மனப்போக்கும் பழக்கங்களும் மாறிவிடக்கூடாது, தொடர வேண்டும் எனவும், இதுதான் பண்பாடு என்றும் முழக்கமிடும் மத அமைப்புகள் இன்று ஆசியாவில் மட்டுமல்ல, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் இயங்கி கொண்டிருக்கின்றன.

பெண்கள் உடல் ரீதியாக வலு குறைந்தவர்கள், அவர்களை பாதுகாக்கத்தான் இந்த சமூகக் கட்டமைப்புக்கள் என்று பண்பாட்டு சொற்பொழிவு செய்யும் கூட்டம், நலிவான பெண்கள் இடத்தில் எதுக்கு உடல் களைக்கச் செய்யும் துப்பரவு பணிகளையும் சமையல் வேலைகளையும் ஏன் ஒப்படைக்கின்றீர்கள் ?

குழந்தை பெற்ற பெண்களின் உடல் இயக்கம் இன்னும் குறைவாக இருக்க வாய்ப்பு அதிகம். மீண்டும் தேறி வருவதற்குள், அடுத்த குழந்தையும் வந்துவிடும். அப்படி இருக்கும்போது கணவன் அல்லவா வீட்டில் வேலைகளில் முக்கியப் பங்கை செய்ய வேண்டும்? பாலின வகிபாகங்கள் (Gender assigned roles) ஆண்கள் மற்றும் பெண்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் விதம் எதுவும் தர்க்கரீதியாக நியாயம் செய்வதாக இல்லை.

தந்தைவழி பாத்திரங்கள் ஆண்களின் பராமரிப்புத் திறன்களைப் பற்றிய தாழ்ந்த  கருத்துகளை வடிவமைத்தன.  தந்தைகள் தங்கள் குழந்தைகளுக்கு நேரடி கவனிப்பை வழங்குவதற்கு உயிரியல் ரீதியாக தகுதியானவர்களாகவே  தோன்றுகிறார்கள். உண்மையில், பல விலங்குகளில், அப்பாக்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு அம்மாக்களுடன் ஒத்துழைக்கும்போது, தந்தையின் ஹார்மோன்கள் இதேபோன்ற வழிகளில் மாறுகின்றன. மானுடவியலாளர்களாக, குடும்பங்களில் மனித பெற்றோரின் பாத்திரங்களை வடிவமைப்பதில் பண்பாட்டு சூழல்கள் பெரிய  தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் அறிவோம்.

ஆண்களும் பெண்களும் தங்கள் குழந்தைகளுடன் பிணைப்பு, வளர்ப்பு மற்றும் தொடர்புகளை மேம்படுத்த ஹார்மோன் மற்றும் மூளை மாற்றங்களுக்கு உள்ளாகிறார்கள் என்பது உண்மைதான் என்றாலும், குழந்தை வளர்ப்பின் பெரும்பகுதி கற்றுக் கொள்ளப்படுகிறது. குழந்தைகள் 7-9 மாதங்கள் வரை யாருடனும் உணர்ச்சிப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்துவதில்லை என்பது ஆய்வுகளில் அவதானிக்கப்பட்ட விடயம். இந்த கட்டத்தில் அவர்கள் அம்மா மற்றும் அப்பாவுடன் சமமான வலுவான பிணைப்புகளை உருவாக்குகிறார்கள். இருப்பினும், இந்த பிணைப்புகள் சிறிது வேறுபடலாம். பல தாய்மார்கள் முதன்மை இணைப்பு உருவமாக பணியாற்றுகிறார்கள், இந்த பாத்திரங்கள் இயல்பாகவே பாலின வேறுபாடு கொண்டவை இல்லை.  தாய் மற்றும் தந்தை இருவரும் பராமரிப்பு செய்ய முடியும் என்றாலும், பல பெற்றோர்கள் இயல்பாகவே இந்த பண்பாட்டு ரீதியான பாத்திரங்களில் விழுகின்றனர். கனிவாக இருத்தல், பரிவு அல்லது தொடர்பாடல் ஆகியவற்றில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள், குறிப்பாகக் குழந்தைப்பேறின் பின்னர் உயிரியல்ரீதியாக இல்லை என மருத்துவ, அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன.

விகிதாசாரமற்ற வேலைகளைச் செய்யும் வீட்டு அமைப்புகளில், பெண்கள் மௌனமாகச்  எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாக்கம் பெற்றுள்ளது.

குடும்பத்தில் வாழ்க்கை துணை மற்றும் உறுப்பினர்களால் இழைக்கப்படும் குடும்ப சீண்டல்கள், மதுப்பழக்கத்திற்கு அடிமையாதல், பணப் பிரச்னைகள், குடும்பங்களுக்கு இடையேயான மற்றும் குடும்பங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளைக் கையாளுதல், ஆகியவை மேற்கூறிய எதிர்பார்ப்புகளில் அடங்கும். “சரியான நேரத்தில் வீட்டிற்கு வந்தால் எந்த சிக்கலும் வராது”, “காலை 5 மணிக்கு எழுந்து சமையலை முடித்து விட்டு வேலைக்கு கிளம்பினால் ஒரு சிக்கலும் இல்லை” என்று சொல்லப்படுகின்ற தவறான சூழல்களுக்குள் பெண்கள் தொடர்ந்து இயங்கவும், அனுசரித்துச் செல்லவும் செய்கிறார்கள். குடும்பத்திற்கு களங்கம் நேரக்கூடும் என்பதால், பெண்கள் தமது வீட்டு வேலைகளால் ஏற்படும் மன உளைச்சலை வெளிப்படுத்தவோ அல்லது பேசவோ கூடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீட்டு வேலைகள் தொடர்பான முரண்பாடுகளை எதிர்கொள்ள முயலும் போது, ​​”என்னை விட நீங்கள் நன்றாக சமைப்பீர்கள்”, “நான் சுத்தம் செய்தால், அது நீங்கள் செய்வது போல் இருக்காது” போன்ற பதில்களை பெண்கள் சந்திக்கின்றனர்.

இது வேலைத்திறன்களைக் காரணம் காட்டி செய்யப்படும் கையாளுகை (manipulation) ஆகும். இங்கு நேர்மறைச் சொற்கள் ஆயுதங்களாக்கப்படுகின்றன. இதைக்கொண்டு ஒருவர் வீட்டு வேலை செய்வதிலிருந்து தப்பிக்க முடியும். இத்தகைய கையாளுதல் நடத்தைகளை வாதிடுவதையும் சமாளிப்பதையும் விட பெரும்பாலும் பெண்கள் அந்த வேலைகளை தாமே செய்யத் தள்ளப்படுகிறார்கள்.

தோழர் தமிழ்ச்செல்வன், நன்றி: இந்து தமிழ் திசை

சமையல், துணி துவைப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகள் ஏன் குறைவாக பார்க்கப்படுகின்றன? அவற்றுக்கு ஏன் பெறுமதி இல்லை? அதை வீட்டில் செய்வதற்கு ஒருவர் ஏன் வெட்கப்பட வேண்டும்? உங்கள் வீட்டு வேலையை உங்கள் கைகளால் செய்ய ஏன் முடிவதில்லை? இது பற்றி அடுத்த அத்தியாயத்தில் மேலும் பேசலாம். சிறு வயதில் இருந்தே எல்லா குழந்தைகளுக்கும் பால்நிலை பேதமில்லாமல் தனது சுய வீட்டுவேலைகளை இன்னொருத்தரில் தங்காமல், தானே செய்ய பழக்க வேண்டும். இல்லையேல் ஆண் பிள்ளைகள் இன்றைய உலகின் கால ஓட்டத்தில் பின் தங்கி விடுவார்கள்.

இல்லத்தரசிகள் என்ற சொல் இருக்கும் போது இல்லத்தரசர்களும் இருப்பதுதான் நியாயம்.

உசாத்துணை:

https://www.pnas.org/doi/10.1073/pnas.1105403108

புகைப்படங்கள் நன்றி: தோழர்கள் இனியன் மற்றும் தமிழ்ச்செல்வன்

படைப்பாளர்

அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர்,  MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். 

Exit mobile version