Site icon Her Stories

நம்பவில்லை என்றாலும் நிஜம்

இந்தியப் பெண்களின் பாலியல் சுதந்திரத்தின் மீதுள்ள கட்டுப்பாடுகள் நீங்கினால் பெண்களின் வாழ்க்கை மாறிவிடும் என்று நினைப்பவரா நீங்கள்? பாலியல் சுதந்திரம் உள்ளதாகக் கருதப்படும் அமெரிக்கப் பெண்களின் நிஜக் கதைகள் சிலவற்றைக் கேட்டால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.

Unbelievable. American Nightmare. மரி, டெனிஸ், இருவரை மையமாகக் கொண்டுள்ள இவ்விரண்டு குறுந்தொடர்களின் பேசுபொருளும் ஒன்றே. இரண்டுமே உண்மையில் நடந்த வன்புணர்வுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை.

‘தான் கத்தி முனையில் வன்புணரப்பட்டதாகச் சொன்னார், பதினெட்டு வயதுப் பெண் ஒருவர். பின்னர் அது பொய் என்றார். இந்தக் கதை அங்கிருந்துதான் தொடங்குகிறது.’

The Marshal Project கட்டுரையின் முதல் சில வரிகள் இவை. அமெரிக்க நீதி அமைப்பு கவனம் செலுத்த வேண்டியவை குறித்து எழுதி விழிப்புணர்வு உண்டாக்கும் அமைப்பு இது. Unbelievable தொடரின் கதை, இக்கட்டுரையின் அடிப்படையில் உருவானது. கட்டுரையும், தொடரும் பல விருதுகளை வென்றன.

மரி

பதினெட்டு வயது மரி தனக்கு நடந்ததைச் சொன்னபோது, அவரை காவல்துறை நம்பவில்லை. அவருடைய அறையில் வன்புணர்வு நடந்ததற்கான எந்தத் தடயமும் இல்லை. மரியின் சொற்கள் மட்டுமே குற்றம் நடந்தது என்பதைச் சொல்லும் ஒரே சாட்சி.

காவலர்கள் அவரிடம் மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டனர். சந்தேகம் தோன்றும்படியான பதில்களைக் கொடுத்தார் மரி. குழப்பம், அதிர்ச்சி, பயம், அவமானம் எல்லாம் கலந்த அவருடைய அப்போதைய மனநிலையை யாரும் புரிந்துகொள்ளவில்லை. அவருடைய வளர்ப்புப் பெற்றோர், நண்பர்கள் யாருமே அவரை நம்பவில்லை.

ஒரு கட்டத்தில் தனக்கு ஏதேனும் பிரச்னையோ என்று மரியே யோசிக்க ஆரம்பிக்கிறார். பொய் சொன்னோம் என்று ஒப்புக் கொண்டால், எல்லாம் முடிந்துபோகும் என்றெண்ணி, கையெழுத்து போடுகிறார். காவல்துறை அதோடு விடாமல், ‘எங்கள் நேரத்தை வீணாக்கினார்’ என அவரை நீதிமன்றம் வரை இழுத்து, 500 டாலர் தண்டம் விதித்து, கண்காணிப்பில் இருக்கும்படி தண்டனை வாங்கிக் கொடுத்தது.

சில ஆண்டுகள் கழித்து மரி வாழும் இடத்துக்குச் சம்பந்தம் இல்லாத இடத்தில் இன்னொரு வன்புணர்வுக் குற்றம் நடந்தது. இந்தக் குற்றத்தை விசாரிக்க வரும் பெண் காவலரும், மற்ற காவலர்களைப் போன்ற அனுபவத்தைத்தான் எதிர்கொள்கிறார். எந்தத் தடயமும் இல்லை.

ஸ்டேசி
எட்னா

டிடெக்டிவ் ஸ்டேசி கால்ப்ரைத் (Stacy Galbraith). சார்ஜன்ட் எட்னா ஹெண்டர்ஷாட் (Edna Hendershot). இந்தப் பெண் காவலர்கள் கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாகத் தோண்டித் துருவித் துப்பறிந்து, வன்புணர்வு செய்த குற்றவாளியைக் கண்டுபிடித்தது. குற்றவாளிக்கு முந்நூற்று இருபத்தேழரை ஆண்டுகாலச் சிறைவாசம் தண்டையாகக் கிடைத்தது. அத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். அந்த பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவராக மரியை அடையாளம் கண்டு அவருக்கும் நியாயம் கிடைக்கச் செய்தனர்.

Unbelievable தொடர் காட்சியாக்கப்பட்ட விதம், தமிழில் இக்கருப்பொருளில் திரைப்படம் எடுப்பவர்களுக்கு ஒரு பாடம் என்றே சொல்லலாம். தமிழில் இம்மாதிரி கதையைத் திரையில் பார்த்தால், பெண்ணுக்கு எங்குமே பாதுகாப்பில்லையோ, பெண்ணாகப் பிறந்ததே பாவமோ, என்று ஒரு மூட்டை எதிர்மறை எண்ணங்களைப் பார்ப்பவர் மனத்தில் ஏற்றிவிடும். இவ்விரு தொடர்களின் கதை முழுக்கவும் வன்புணரப்படும் பெண்கள் பற்றியது. அருவருப்பூட்டும் அச்சமூட்டும் காட்சிகள் வைப்பதற்கான களம். அதைச் செய்யவில்லை. என்றாலும் மனதை உலுக்குகிறது நிஜம். அதையும் விஞ்சி, முடிவில் ஒரு விதமான நேர்மறை எண்ணத்தையே இந்தத் தொடர்கள் விதைக்கின்றன.

உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படும் த்ரில்லர் பாணியில் செல்கிறது Unbelievable தொடர். நிஜங்கள் ஒவ்வொரு அடுக்காக அவிழும்போது, நம் மனதின் அடி ஆழம் வரை செல்கின்றன. மரி தனக்கு நடந்த கொடுமையைச் சொன்னதை, நாம் நம்பினோமா இல்லையா என்ற கேள்வியை நம்மை நோக்கியே கேட்க வைக்கிறது தொடர். நம்பாமல் இருக்கும்படி காட்சிகள் அமைக்கப்பட்ட விதம், மரியாக நடித்த பெண்ணின் நடிப்புத் திறன் என்று ஆயிரம் காரணங்களை அடுக்கலாம். அவள் சொற்களை நம்பினீர்களா இல்லையா என்பதே ஆதாரமான கேள்வி. மரி பொய் சொல்கிறாள் என்பதற்கு ஆதாரம் கிடைக்கும் வரை, அவள் சொன்னதை நம்பாமல் போக எந்த முகாந்திரமும் இல்லை என்று நம்மில் எத்தனைபேர் நினைத்திருப்போம்? இதைப் படித்துவிட்டு தொடரைப் பார்த்தாலும் இந்தக் கேள்வி பொருந்தும்.

மன உளைச்சல் கொடுக்கும் அளவுக்கு நுட்பமாக உணர்வுகளைப் பேசும் ஒரு தொடர் நிறைவடையும்போது மனத்தில் நம்பிக்கை உண்டாக்குகிறது என்பதுதான் இதன் சிறப்பு. அதற்கு முக்கியமான காரணம் வழக்கை விசாரிக்கும் இரு பெண் காவல் அதிகாரிகள். தடயமே இல்லாத வழக்கை எங்கே, எப்படித் தொடங்குவது?

மரியின் முன்னுக்குப் பின் முரணான சொற்கள், பாடி லேங்குவேஜ் மூலம் அவள் சொல்வது பொய் என்று ஆண் காவலர்கள் நினைத்தனர். இது நடந்தது 2008ஆம் ஆண்டு. நடுவில் பதிவாகாமல் போன சம்பவங்கள் நமக்குத் தெரியாது. அடுத்த சம்பவம் பதிவானது 2011ஆம் ஆண்டு.

வன்புணர்வுப் புகாரை விசாரிக்க வந்த ஸ்டேசி கால்பிரைத் குழுவினர் சல்லடை போட்டுத் தேடியும் கைரேகை, டிஎன்ஏ எதுவும் கிட்டவில்லை. ஒரு காவலர் பாதிக்கப்பட்டவரின் சொற்களை அப்படியே நம்ப வேண்டும் என்பதை ஸ்டெய்சி மறுக்கிறார். சந்தேகிப்பதுதானே காவலரின் வேலை?

‘பாதிக்கப்பட்டவர் சொல்வதைக் காது கொடுத்துக் கவனமாகக் கேட்கவேண்டும். விசாரித்து அதை உறுதிப்படுத்தவோ நிராகரிக்கவோ வேண்டும்’ இதுதான் ஸ்டேசியின் வழி. பாதிக்கப்பட்டவர்கள் உண்மையை மறைத்தோ திரித்தோ சொல்லக்கூடும். பாதிக்கப்பட்டதாகச் சொல்லும் பெண்ணையும் சேர்த்தே சந்தேகிக்கிறார் ஸ்டேசி.

விசாரணையில் அந்தப் பெண் சொல்வது உண்மை என்பது புலனாகிறது. “இதற்கு முன்பு பலமுறை அவன் இதைச் செய்திருக்க வேண்டும்,” பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் இது. சம்பவம் நடந்த இடம் துடைத்து வைக்கப்பட்டதைப் போலச் சுத்தமாக எந்தக் கைரேகையும் இன்றி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என்கிற கேள்விக்கு அவருக்கு விடை கிடைக்கிறது. வீடு என்றால் அங்கு ஒரு சிலரின் கைரேகைகள் இருக்கத்தானே வேண்டும். தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவர் இப்படித் துடைத்துத் தடயங்களை அழிப்பது சாத்தியம் என்பதால் நம்புகிறார். அதை அடிப்படையாகக் கொண்டு, காவலராக இருக்கும் தன் கணவரிடம் இப்படி ஏதேனும் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்று விசாரிக்கிறார். பரிதாபத்தினால் அல்ல, ஸ்டேசியின் விசாரிக்கும் திறனால் புகார் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது.

கணவர் மூலம் இதைப் போல அவர் பணிபுரியும் இடத்தில் ஏதோ நடந்ததை அறிந்து, அந்தக் காவல் நிலையத்துக்கு மின்னஞ்சல் அனுப்பித் தகவல் கேட்கிறார். மின்னஞ்சலைப் படிக்கும் எட்னா, தன்னிடம் இருக்கும் வழக்குடன் தகவல்கள் ஒத்துப் போவதால், சேர்ந்து விசாரிக்க ஒப்புக் கொள்கிறார்.

சிறு நகரம் ஒன்றில் வன்புணரப்பட்ட 67 வயதுப் பெண் ஒருவருடைய வழக்கிலும் தடயம் இல்லை. ஆனால் குற்றவாளி, ஸ்டேசி விசாரிக்கும் பெண் சொன்னதுபோல ஜென்டில்மேனாக நடந்து கொண்டதோடு, யாரும் உள்ளே நுழையாமல் இருக்க டிப்ஸ் கொடுத்துள்ளான்.

ஒற்றுமையை மட்டும் யோசித்தால் வழக்கு நகருமா? வேறுபாட்டையும் யோசிக்கிறார்கள். இரண்டும் வெவ்வேறு காவல் எல்லைகளில் நடந்த குற்றங்கள். எனில் குற்றவாளி காவல் எல்லைகள் குறுக்கிடாத தூரத்தில் குற்றம் செய்பவனா? என்கிற கேள்வி எழுகிறது. ஒரு காவல் நிலையத்தில் இருந்து இன்னொரு காவல் நிலையத்துக்குத் தகவல்கள் பொதுவாகப் பகிரப்படுவதில்லை. விசாரணை பாதிக்காமல் இருக்க தகவல்களின் ரகசியம் காக்கப்படுவது அவசியம். இப்படி ஒரு நடைமுறை இருப்பதை அறிந்தவன் எனில் காவல்துறை, இராணுவத்தைச் சேர்ந்தவனாக இருக்கலோமோ என்று சந்தேகிக்கிறார்கள். இந்தக் கோணத்தில் தொடரும் விசாரணையில், இன்னும் சில சொற்ப ஆதாரங்கள் சிக்குகின்றன. குற்றவாளி பிடிபடுகிறான்.

பெண்ணுக்குப் பெண்தான் எதிரி என்கிற கட்டுக்தைகளை மாற்றி எழுதுகிறது இவர்களின் அலுவல் ரீதியான நட்பு. கைது செய்யும் காட்சியில் இளையவரான எட்னாவுக்கு கிரெடிட் கிடைக்கட்டும் எனத் தள்ளி நிற்கும் ஸ்டேசி, அந்த ஸ்டீரியோடைப் மீது கடைசி ஆணியை அடிக்கிறார். American Nightmare தொடரிலும் குற்றவாளியைப் பிடித்த பிறகு டெனிஸ் சொன்னது உண்மை என்று நிரூபிப்பது ஒரு பெண் காவலரே.

American Nightmare தொடரில்

American Nightmare தொடர், உண்மைச் சம்பவத்தை அவர்களே விவரிக்கும் டாக்குசீரிஸ். காதலனும் காதலியும் தங்கிருந்த வீட்டில் இருந்து தன் காதலி கடத்தப்பட்டதாக புகார் சொன்னார் காதலன். அவரைச் சந்தேகப்பட்டு விசாரிக்கும்போது காதலி வீடு திரும்பிவிட்டார். தான் கடத்தப்பட்டு வன்புணரப்பட்டதை அவர் வாக்குமூலமாகக் கொடுத்தபோது காவல்துறை அதிகாரிகள் நம்பவில்லை. டெனிஸ் ஹஸ்கின்ஸ் சொன்னதை ஒப்புக்கொள்ளாத காவல்துறை, அவர் மீது வழக்கு பாேட்டது.

பின்னர் இன்னொரு வன்புணர்வு வழக்கில் பிடிபட்ட குற்றவாளியிடம் இருந்த பொருள்கள் ஆதாரங்களாகப் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றில், தன் வழக்கோடு சம்பந்தம் இல்லாத வெள்ளை நிறத் தலைமுடியைப் பார்த்த பெண் காவலர், முடிதானே என்று விடவில்லை. அந்த முடிக்குச் சொந்தமான யாரோ ஒரு பெண் எங்கோ பாதிக்கப்பட்டிருப்பாரே என்று நினைத்து டிஎன்ஏ சோதனைக்கு அனுப்பினார். முடிக்குச் சொந்தமானவர் கடத்தப்பட்ட டெனிஸ் என்பது புலனானது. பெண் காவலரால், டெனிஸ் சொன்னது உண்மைதான் என்று நிரூபணமானது.

இரண்டு குற்றவாளிகளுக்கும் கூட ஒற்றுமை இருந்தது. மிரட்டுவதில் வன்முறை இருந்தாலும் பெண்களை மென்மையாகவே நடத்தியுள்ளனர் இருவரும். பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று சில பெண்களுக்கு அறிவுரை கொடுத்தனர். நிதானமாகக் குற்றம் இழைத்துத் தடயங்களை அழித்துவிட்டு, வெளியேறினர். உடல் ரீதியாக அதிகம் துன்புறுத்தவில்லை. ஆனால் தீராத வலி கொடுக்கும் காயங்கள் கண்களுக்குத் தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை. குற்றவாளிகளும், சம்பவங்களை விசாரித்த ஆண் காவலர்களும் புரிந்து கொள்ளத் தவறியது இதைத்தான்.

பெண்களின் உணர்வைக் காவலர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிற அவசியம் கூட இல்லை. குற்றம் நடந்ததாகப் புகார் வந்ததெனில் அப்படி இல்லை என்பதற்கு உறுதியான ஆதாரம் கிடைக்கும் வரை தங்கள் விசாரணையை நேர்மையாகத் தொடர்ந்திருந்தாலே போதும். டெனிஸ் கடத்தப்பட்டார் என்பதை நம்பாமல், அவர் காதலரை விசாரணை செய்து கொண்டிருந்தபோது குறைந்தபட்சம் அவர் போனை ஆன் செய்தே வைத்திருந்தால்கூட குற்றவாளியைப் பிடித்திருக்கலாம். கடத்தல்காரன் போன் செய்தபோது ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்த போன் அவன் தப்பிக்க உதவியதோடு, டெனிஸ் மீண்டும் ஒருமுறை வன்புணரப்படவும் காரணமானது. மரியின் புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால்தான் தான் தைரியமாக ஆண்டுக் கணக்கில் இதைத் தொடர முடிந்தது என்று குற்றவாளி வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.

பெண் காவலர்கள் பெண்களின் வலியைப் புரிந்து கொண்டார்கள். ஆனால் தீர்வு அதனால் கிட்டவில்லை. காவல் அதிகாரிகளாக தங்கள் கடமை எதுவோ அதைச் செய்தார்கள். குற்றவாளியைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தின் முன் நிறுத்தி மேலும் குற்றங்கள் நடப்பதைத் தடுத்தார்கள்.

ஒவ்வொரு முறை இங்கே வன்புணர்வுச் சம்பவங்கள் நிகழும்போதும் ‘ஆணுறுப்பை அறுத்து எறியுங்கள்,’ ‘தூக்கில் போடுங்கள்,’ ‘என்கவுன்டரில் சுட்டுக் கொல்லுங்கள்’ எனக் குரல்கள் எழுகின்றன. தனிநபர் குற்றங்களாக இவை கருதப்படும் வரை தீர்வு கிடைக்காது. சமூகத்தின் பார்வையில் மாற்றம் உண்டாக்குவதும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும்தான் ஒரே வழி. உலகின் எந்த மூலையிலும் பெண்கள் இரண்டாம் தரக் குடிமக்களே. அவர்கள் சொற்கள் எளிதில் கவனம் பெறுவதில்லை என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்கின்றன இத்தொடர்கள். நாம், அதை மாற்றத் தயாராக இருக்கிறோமா?

விருது பெற்ற கட்டுரையை வாசிக்க…

Unbelievable டிரைலர்

American Nightmare டிரைலர்

படைப்பாளர்

கோகிலா 

இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இணையத் தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளிவந்திருக்கிறது. இது தவிர ‘உலரா உதிரம்’ என்கிற அரசியல் வரலாறு நூல் மற்றும் ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ என்கிற சிறார் நூலையும் எழுதியுள்ளார்.

Exit mobile version