Site icon Her Stories

டயானா நயட்

புளோரிடாவின் ஜூனோ கடற்கரை. நூற்றுக் கணக்கானோர் கூடி நின்று ஆரவாரம் செய்கிறார்கள். டயானா நயட் (Diana Nyad), கியூபாவில் இருந்து புளோரிடா வரை நீந்தி வந்திருக்கிறார்.

அவருடைய இரண்டு கணுக்கால்களும் முழுதாகத் தண்ணீரை விட்டு வெளியில் வந்த பிறகுதான் அந்தச் சாதனை நிறைவு பெறும். கரையை நெருங்கியதும் கடைசிச் சில அடிகளை நடந்து கடக்க வேண்டும். இரண்டு நாள்களாகத் தொடர்ந்து நெடுந்தூரம் நீந்தி வந்தவரின் கால்கள் நடக்கத் தடுமாறுகின்றன. சரியாகச் சொல்வதென்றால், நாற்பதாண்டு காலப் பயணத்தின் இறுதி நொடிகள் அவை.

PC: USA Today

கூட்டத்தில் இருப்பவர்கள் தெரியாமல் அவரைத் தொட்டுவிட்டால்கூட சாதனை செல்லுபடியாகாது. தண்ணீரில் விழுந்து எழும் டயானாவைத் தாங்கிப் பிடிக்காமல் அவரைச் சுற்றி அரண் அமைத்து ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடக்க உற்சாகப்படுத்துகிறார்கள் அவர் குழுவினர். விட்டுக் கொடுக்காமல் இருக்கும் குணத்தை டயானாவிடம் இருந்து கற்றுக் கொள்ள வந்திருந்தது மக்கள் கூட்டம். தனக்கான ஊக்கத்தை அந்தக் கூட்டத்திடம் இருந்து பெற்றுக் கொண்டு தள்ளாடியபடி கரையேறினார் டயானா. மாபெரும் சாதனை ஒன்றின் சான்றானார்கள் அங்கு கூடியிருந்தோர்.

கரையேறிய நொடி. PC: diananyad.com

2013 ஆம் ஆண்டு நடந்த இந்தச் சாதனை 2023ல் திரைப்படமானது. ஆஸ்கர் விருதுப் பரிந்துரையிலும் இடம்பெற்றது.

110 மைல்கள். 53 மணி நேரம். சுறாக் கூண்டு உதவியின்றி இவ்வளவு தூரத்தைக் கடந்த முதல் நபர். 64வது வயதில், தன்னுடைய ஐந்தாவது முயற்சியில் இச்சாதனையைப் படைத்தார் டயானா நயாட். கடைசி சில அடிகளை வைத்த போது அவர் மனநிலை உணர்ச்சிப் பெருக்கால் நிறைந்திருந்தது. நீண்ட நெடும் பயணம் அது. அவருக்கு மட்டுமல்ல அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்காக உழைத்த குழுவினருக்கும்.

தன்னுடைய இருபதுகளில் டயானா கண்ட கனவு அது.

குற்றாலீஸ்வரன் நீந்திக் கடந்த இங்கிலீஷ் கால்வாய் போலச் சுமார் நான்கு மடங்கு தூரம். புரிதலுக்காக இந்த ஒப்பீடு. குற்றாலீஸ்வரனின் சாதனை வேறு வகையானது. ஆறு கால்வாய்களை ஒரே ஆண்டில் நீந்திக் கடந்தார் அவர். மாரத்தான் நீச்சலில் இப்படிப் பல்வேறு இலக்குகள் உள்ளன. டயானாவும் இளம் வயதில் அப்படிப் பல சாதனைகளைச் செய்தவர்தான். எட்டு மணி நேரத்தில் நேப்பிள்ஸ் விரிகுடாவை நீந்திக் கடந்தார். அதற்கும் குறைவான நேரத்தில் மன்ஹாட்டன் தீவை நீந்திச் சுற்றிவந்தார். கடலில் அதிக நேரம் நீந்தியவர் என்ற சாதனையைப் படைத்தார்.

கியூபாவில் இருந்து புளோரிடா வரை நீந்தும் கனவு, டயானாவின் வளர்ப்புத் தந்தையால் உண்டானது. நயட் என்பது அவருடைய குடும்பப் பெயர்தான். நயட் என்ற கிரேக்கச் சொல்லுக்கு நீர் தேவதை என்று பொருள். அந்த விஷயம் கடலுக்குத் தெரியாதல்லவா? ஆபத்து நிறைந்த நீச்சல் கனவு அது. உயிரை எடுக்கும் ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதி. சுறாக்களின் நடமாட்டமும் உண்டு. இயற்கையின் துணையும் வேண்டும். நீரோட்டம் எப்போது நீந்துவதற்கு ஏற்றது என்று சரியாகக் கணித்துச் சொல்ல ஆள் இல்லையென்றால், எவ்வளவு நேரம் நீந்தினாலும் கரையேற முடியாது. நீரோட்டம் மாறிக் கொண்டே இருக்கும் இடம். சரியான வழிகாட்டல் இல்லையென்றால் ஆளை அடித்துக் கொண்டுபோய் மெக்சிகோ வளைகுடாவில் விட்டுவிடும்.

டயானா, தன் இருபதுகளின் மத்தியில் அவருடைய முதல் முயற்சியில் தேசிய கவனம் பெற்றார். சுறாக் கூண்டுக்குள் இருந்து நீந்தியவரின் முயற்சி, கடல் சீற்றத்தால் பாதியில் தடைப்பட்டது. பின்னர், பத்திரிகையாளராகும் தன் மற்றொரு கனவுக்கு முக்கியத்துவம் அளித்து, மாரத்தான் நீச்சலைக் கைவிட்டார். புத்தகங்கள் எழுதினார். வானொலி நிகழ்ச்சிகளை நடத்தினார். ஊக்கப் பேச்சாளரானார்.

மகிழ்ச்சியான வாழ்வுதான். ஆனால், தன் வாழ்வு முழுமை பெற்றதாகத் தோன்றவில்லை அவருக்கு. அறுபதாவது வயதில் மீண்டும் தன் இளவயதுக் கனவைச் சாதிக்கவேண்டும் என்று நினைத்தார் டயானா. முதியோர் இல்லத்தில் சேர்ந்து தொலைக்காட்சித் தொடர் பார்த்துப் பொழுதைக் கழிக்கும் வயது அது. டயானா தன் ஆசையைச் சொன்னபோது, பெரிய ஆதரவில்லை. அவருடைய வாழ்நாள் தோழியும் கொஞ்ச காலம் காதலியுமான போனியின் துணையுடன் தீவிர பயிற்சிகளை ஆரம்பித்தார். 2011ஆம் ஆண்டில் இரண்டாவது முறையாக தன் கனவைச் சாதிக்க முயன்றார். தோல்விதான் கிடைத்தது.

ஆஸ்துமா பாதிப்பு, ஜெல்லி மீனால் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து, புயல் மழை என்று அடுத்தடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. முப்பது, நாற்பது மணி நேரம் நீந்திய பிறகும் வெற்றியடையாத முயற்சிகள். ஆனால் அதில் கற்ற பாடத்தை வைத்து சுறாவை விரட்ட அதிர்வுகளை ஏற்படுத்தும் கருவி, ஜெல்லி மீன்களிடம் இருந்து பாதுகாக்கும் கவச உடை என்று தன்னை இன்னும் சிறப்பாகத் தயார்ப்படுத்திக் கொண்டார். ஐந்தாவது முயற்சியில் இயற்கையும் துணை நின்றது. தன் வாழ்நாள் கனவை நிறைவேற்றி, சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதற்கு எடுத்துக்காட்டானார்.

நயட் திரைப்படத்தின் கதை டயானாவின் அறுபதாவது பிறந்த நாளில் தொடங்குகிறது. பிறந்தாள் கொண்டாட்டம் எல்லாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டே கொண்டாடித் தீர்க்கும் பாட்டியாக, அவரது அறிமுகமே அள்ளுகிறது.

தன் பெயருக்குப் பொருள் சொல்லி தன் சாதனைகளைப் பற்றிப் பெருமைப்பட்டு மொக்கை போடும் இப்படியான உற்சாகமான பாட்டிகளை நம் எல்லார் வீட்டிலும் பார்த்திருப்போம்.

ஆண்டுக்கணக்கில் உழைப்பைச் செலுத்தியும் தோல்வியே மிஞ்சும் போதும் அந்த உற்சாகம் குறையாத டயானாவின் குணம் அரியது. “அரிதான உங்கள் வாழ்க்கையைக் கொண்டு என்ன செய்யத் திட்டம் வைத்திருக்கிறீர்கள்?” என்கிற மேரி ஆலிவரின் வரிகளை மேற்கோள் காட்டி பிடிவாதமாக நினைத்ததைச் சாதிக்கிறார். “நான் பிடிவாதமான முட்டாள் அல்ல” என்பது அவரைப் பற்றி அவரே சொல்லிக் கொண்ட பிரபலமான வரிகளில் ஒன்று.

துடுக்கான நபரைச் சுற்றி சர்ச்சைகள் இருப்பது எதிர்பார்க்கக் கூடியதே. நீண்ட தூர நீச்சல் போட்டிகளில் ஈடுபடுவோர், டயானா விதிகளைச் சரியாகப் பின்பற்றுவதில்லை என்கிறார்கள். ஜெல்லி மீன் பாதுகாப்பு உடையை அணிவிக்கும் போது பலமுறை டயானாவைத் தொட்டார்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டு. உயிர் காக்கும் நோக்கில் தொடுவது தவறில்லை என்பது டயானா ஆதரவாளர்களின் வாதம்.

கின்னஸ் புத்தகம், இச்சாதனையை ஏற்க மறுத்தது. டயானா அணியினர் அல்லாத தனித்துவமான பார்வையாளர் அங்கு இல்லை எனக் காரணம் சொன்னது. டயானா அதைப்பற்றி ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. “ஒருவேளை என் சாதனையை யாரிடமும் நிறுவவேண்டும் என்று நினைக்காத செருக்குடையவளாக நான் இருக்கலாம்” என்றார். படம் வெளியான பிறகு கிடைத்த ஊடக வெளிச்சத்தால் நீச்சல் கூட்டமைப்பு, அவரது சாதனையை ஏற்கலாமா என்பது பற்றி விசாரணையைத் தொடங்கியது.

நயட் படத்தின் இயக்குநர், “எங்கள் படம் அவர் செய்த சாதனையைப் பற்றியோ, டயானாவை யார் எத்தனை முறை தொட்டார்கள் என்பதைப் பற்றியோ அல்ல. அறுபது வயதில் வாழ்க்கை முடிந்துபோனது என்று உலகம் நம்பினாலும், நான் ஒப்புக்கொள்ள முடியாது என்று தான் விரும்பிய முழுமையைப் போராடி அடைந்த பெண்ணைப் பற்றியது” என்று குறிப்பிட்டார்.

படத்தில் முதன்மைக் கதாபாத்திரமான டயானா நயட்-ஆக நடித்திருப்பவர் அனெட் பெனிங் (Annette Bening). மேடை நாடகத்தில் தன் பயணத்தைத் தொடங்கியவர் அனெட். கிட்டதட்ட அவர் நடித்த எல்லாப் படங்களுக்குமே ஏதோ ஒரு விருதை வென்றிருக்கிறார். குறைந்தபட்சம் பரிந்துரைப் பட்டியலிலாவது இடம்பெற்றிருக்கிறார். இந்தப் படத்துக்காக ஒலிம்பிக் நீச்சல் வீரரிடம் இருந்து நீச்சல் பயிற்சியைப் பெற்றுள்ளார். 62 வயதில் அதிக உடலுழைப்பைக் கோரும் ஒரு கதையில் தன்னை ஆர்வத்துடன் இணைத்துக் கொள்ளும் அனெட், வெகு இயல்பாக நயாட் கதைக்குள் பொருந்திவிடுகிறார்.

நயட் படத்துக்காக அனெட் பெனிங், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். படத்தில் துணைக் கதாபாத்திரங்களாக வந்திருக்கும் அனைவரின் நடிப்புமே நன்றாக இருக்கிறது. நட்புக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் போனி கதாபாத்திரத்தில் நடித்த ஜோடி ஃபாஸ்டர் (Jodie Foster), சிறந்த துணைக் காதாபாத்திரத்துக்கான ஆஸ்கர் விருதுப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்தார். இவர்களின் நட்பும் புரிதலும் காட்சிப்படுத்தப்பட்ட விதம், மீன் குழம்பின் மேலே இருக்கும் எண்ணெய் போலத் தனித்துவமான அழகும் சுவையும் சேர்க்கிறது.

வயதானாலும் சாதிக்க முடியும் என அனைவருக்கும் நம்பிக்கையளிக்கும் கதையாகத்தான் தொடங்குகிறது படம். முடியும்போது வேறு ஒரு முக்கியமான கோணத்தை எடுத்து வைக்கிறது. நீந்திக் கரையேறும் கடைசிக் காட்சியில் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார் நயட்.

முயற்சி செய்வதை விட்டுவிடாதீர்கள்.

வயது ஒரு தடையல்ல. இவை முதலிரண்டு.

அடுத்து மூன்றாவதாகக் குறிப்பிடும் விஷயம்தான் படத்தின் கரு. “It takes a team” (அணி சேர்வது) என்பதுதான் அது. ஒலிவாங்கியை நீட்டும் ஊடகத்தினரிடம் டயானா அதைச் சொல்கிறார். டயானாவின் இந்த முயற்சியில் கிட்டத்தட்ட ஐம்பது பேர் தங்களை இணைத்துக் கொண்டனர். வருடக்கணக்கில் இன்னொருவரின் கனவுக்காக முழு நம்பிக்கையுடன் உழைத்திருக்கின்றனர்.

வெற்றி பெற்ற பெண்களிடம் தவறாமல் கேட்கப்படும் கேள்வி ஒன்றுண்டு. “உங்கள் குடும்பம் எப்படி ஆதரவாக இருந்தது?” ஆண்களிடமும் கேட்க வேண்டிய கேள்வி இது.

பெண்களாக இருந்தாலும் ஆண்களாக இருந்தாலும், சுற்றி இருப்பவர்கள் ஆதரவின்றி வெற்றி சாத்தியம் இல்லை. இணையர், பெற்றோர், குழந்தைகள், உறவு, நட்பு என்று சிலரின் ஆதரவு எல்லாருக்குமே தேவை. தனி நபரின் சாதனைகள் அனைத்துக்குப் பின்னாலும் அப்படிச் சிலர் இருக்கிறார்கள். சாதனைகளுக்கு மட்டுமல்ல, அன்றாட வாழ்விலும் ஒருவருக்கொருவர் துணை புரிந்தே கடக்கிறோம். நயட் அதைப் புரிந்து கொள்ளத் தொடங்கும் காட்சிகளில் படம் இன்னும் சிறப்பானதாக மாறிவிடுகிறது.

NYAD திரைப்படம் Netflix தளத்தில் உள்ளது. டீசர் இங்கே

படைப்பாளர்:

கோகிலா 

இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இன்பாக்ஸ் இம்சைகளைச் சமாளிப்பது எப்படி?’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. ‘உலரா ரத்தம்’ என்கிற அரசியல் வரலாறு நூல், சிறார்களுக்கு , ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ ஆகிய நூல்களும் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன.

Exit mobile version