Site icon Her Stories

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே!


இந்த படத்தைப் பார்க்கத் தொடங்கும்போது ஏனோ இந்த இந்தியன் கிட்சன் படம் மனதில் வந்து ஒட்டிக்கொண்டது. ஆனால், படத்தின் ஓட்டம் வேறு ஒரு பரிணாமத்தையே கொடுத்தது. சமத்துவமற்ற சூழல் இயல்பாகவே பல பெண்களுக்கு குடும்பங்களிலிருந்தே தொடங்கிவிடுகிறது. கல்லூரிகூட முடிக்காத நம் கதாநாயகி ஜெயபாரதிக்கு அவசரமாகத் திருமணம் முடிக்கிறார்கள். கணவன் வீட்டிற்குப் போன பிறகுதான் தெரிகிறது வீட்டிலுள்ள சாதனங்களைப் போலவே கணவனின் புத்தியும் ஒழுங்கற்றது என்று.


ஒரே மாதிரியான சிந்தனை, ஒரே மாதிரியான உணவு என்று பாதி சைக்கோவாகவே திரியும் கணவன் ராஜேஷ் ஜெயபாரதியை அடிக்கத் தொடங்குகிறான். இரண்டு முன்று காட்சிகளுக்கு அவள் அடிவாங்கிக்கொண்டே இருக்கிறாள்.

எனக்கு இக்காட்சிகள் கொஞ்சம் அலுப்பாக இருந்தன. இன்னும் எத்தனை தலைமுறைகளுக்குப் பெண்கள் இப்படி அடி வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும். ஜெயபாரதி படித்த பெண்தானே? ஒன்று, விட்டு வீட்டைவிட்டு வெளியேற வேண்டும். இல்லை, திருப்பி அடிக்க வேண்டும். ஏன் இப்படி அடி வாங்கிக்கொண்டே இருக்கிறாள் என்ற கோபத்தோடு படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன்.


ஒரு காட்சியில் அவள் திருப்பி அடித்தாள். அவனை அடிப்பதற்காகவே பல நாட்களாக தன்னைத் தயார் செய்துகொண்டு அடித்தாள். பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது. ஓர் ஆண் அடி வாங்குகிறான் என்ற எந்தக் கோபமும் வரவில்லை. நகைச்சுவையாக அந்தக் காட்சிகளைக் காட்டினாலும் ஒட்டுமொத்த பெண்களுக்காக ஜெயபாரதி எதிர்த்து நின்றதாகவே எனக்குத் தோன்றியது.

ஒரு பெண்ணின் தேவை என்ன என்று நீதிபதி கேட்கும் ஒரு காட்சியில் அங்கிருக்கும் ஆண்களுக்கு அதற்குப் பதில்கூடத் தெரியாது. சமத்துவம், நீதி, பெண் சுதந்திரம் இவைதான் பெண்களின் அடிப்படைத் தேவை என்பார் நீதிபதி. இந்த அடிப்படைத் தேவை எல்லாப் பெண்களுக்கும் கிடைத்து விடுகிறதா இந்த ஜனநாயக நாட்டில் என்கிற கேள்வி தொக்கியே நிற்கிறது இந்தத் திரைப்படத்திலும் நம் வாழ்விலும்.


கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் சரி, ஒரு பிள்ளை பெற்றுவிட்டால் போதும் மனைவி அந்தக் குடும்பத்தை, அந்தக் கணவனை அனுசரித்துப் போகவேண்டும் என்ற சூழல் இன்னும் எத்தனை வீடுகளில் நிதர்சனமாக இருக்கிறது.

ஒரு கட்டத்தில் ஜெயபாரதி மருத்துவமனையிலிருந்து வெளியேறுவாள். அம்மா வீடும் வேண்டாம், கணவன் வீடும் வேண்டாம் என்று வெளியேற நினைக்கும்போது அவள் கணவன் சொல்வான், ‘மருத்துவமனை பில்லை (bill) பாதி கட்டிட்டு நீ எங்க வேணா போ.’ பொருளாதாரத்தில் சீர்பெற்ற ஓர் ஆண் படிப்பையும் பாதியில் கைவிட்டு, பொருளாதாரச் சுதந்திரமும் இல்லாத ஒரு பெண்ணிடம், ‘பணத்தை கட்டிட்டு வெளிய போ’ என்று கூறும் இடம் ஆதிக்கத்தின் உச்சமே. பல வீடுகளிலும் இது வேறு வேறு ரூபங்களில் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

கணவன் மனைவியை அடிப்பது என்பது மிகச் சாதாரணமான ஒரு விஷயமாக இச்சமூகத்தால் பார்க்கப்படுகிறது. பெண்கள் திமிறி எழுந்தால் இந்த ஆண் சமூகம் தாங்காது மக்களே.

நகைச்சுவை ஒரு சூத்திரம். அந்தச் சூத்திரத்தின் வழி பெண்களின் அகச்சிக்கலை இயல்பாக எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர். பெண்ணின் குணம் வீரம் என்பதை மறந்து போகக்கூடிய அளவிற்கு பெண்கள் மென்மையானவர்கள், பூப் போன்றவர்கள் என்று மனச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம்.

அடிச்சுப் பாரு என்று ஒரு பெண் துணிந்து சொல்லும் தைரியமும், சொல்ல முடியாத நெருக்கடிகளில் ஒரு பெண் தனியாக வாழ இயலும் என்று சொல்லும் துணிவும் ஆணைவிடப் பொருளாதாரத்தில்
பெண்ணால் உயர்ந்து நிற்க இயலும் என்ற திடமும் படத்தைத் தாங்கி நிற்கின்றன.

படைப்பாளர்:

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.

Exit mobile version