Site icon Her Stories

நிழலும் நிஜமும் – நீலப்படங்கள்

Photo by charlesdeluvio on Unsplash

பெரும்பாலானவர்களுக்கு உடலுறவு குறித்த மிகத் தவறான கருத்துக்களையும் பாலியல் சார்ந்த பல சிக்கல்களையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நீலப்படங்களைப் (Porn movies) பற்றிப் பேசுவோம்.

எப்போதாவது தனியாகவோ அல்லது தங்கள் துணையுடனோ நீலப்படங்களைப் பார்ப்பது என்பது ஒரு தவறான செயலோ அல்லது பெருங்குற்றமோ அல்ல. ஆனால், நீலப்படங்கள் பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடும் வேலையைத்தான் செய்கின்றனவேயொழிய, அவை ஒருபோதும் நமக்கு பாலியல் கல்வியை அளிப்பதில்லை என்பதை முதலில் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கும் பாலியல் கல்வியைக் கொடுப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

பாலியல் உணர்வுகளைத் தூண்டிவிடும் செயலையாவது சரியான முறையில், எதார்த்த வாழ்வுக்கேற்றபடி செய்கிறதா என்றால், அதுவும் இல்லை. நீலப்படங்களில் காட்டப்படும் அதீதமான, எதார்த்த வாழ்க்கைக்குப் புறம்பான செயல்களைப் பார்க்கும்போதுதான், அதைப் பார்க்கும் ஆணோ அல்லது பெண்ணோ பாலியல் ரீதியாக அதீதமாகத் தூண்டப்படுகிறார்கள். ஆனால், உண்மை வாழ்க்கையில் உடலுறவு கொள்ளும்போது அவர்களுக்கு அந்தப் படங்களில் காட்டியபடியெல்லாம் நிகழுமா என்று கேட்டால், நிச்சயமாய் அப்படியெல்லாம் நடக்காது. நீலப்படங்களில் காட்டப்படும் பல விஷயங்களை உண்மை வாழ்க்கையில் தங்கள் துணையிடமிருந்து எதிர்பார்க்கும்போது, பெரும்பாலும் அவர்களுக்குக் கிடைப்பதென்னவோ பெரும் ஏமாற்றம்தான்.

அந்தப் படங்களில் காட்டியிருப்பது போல, அவ்வளவு பெரிய ஆணுறுப்பையும் அல்லது மார்பகங்களையும் உண்மை வாழ்க்கையிலும் எதிர்பார்த்து, ஒருவேளை அவை தங்கள் துணைவரிடம் இல்லாதபோது மிகுந்த ஏமாற்றமடைகின்றனர்.

தங்கள் துணைவர் பாலியல் உறவுக்கே தகுதியற்றவர் என்ற பிம்பம் அவர்கள் மனதில் பதிந்துவிடுகிறது. இந்த ஏமாற்றம் நாளடைவில் தங்கள் துணை மீது ஆர்வமற்றத் தன்மையையும் உடலுறவின் மீதே ஒரு வெறுப்பையும் கொடுத்து விடுகிறது. நீலப் படங்கள் தயாரிப்பதென்பது ஒரு மிகப் பெரிய வர்த்தகம். ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர்கள் பணம் புழங்கும் இந்தத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் வருமானம் அதிகமாகிக் கொண்டேதானிருக்கிறது. இந்த வர்த்தகத்தில் பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால், அவர்கள் உடலுறவுக் காட்சிகளையும் அதில் ஈடுபடுவோரின் உடலுறுப்புக்களையும் மிகைப்படுத்தித்தான் காட்டியாக வேண்டும் என்பதை உங்கள் மனதில் நன்றாகப் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.

‘ஸ்பைடர் மேன்’ படத்தைப் பார்க்கும் போது அதில் மூழ்கி விடுகிறோம், கை தட்டி, ‘ஓ’ வென்று கூச்சலிட்டு ரசிக்கிறோம். மயிர்க்கூச்செறியும் காட்சிகளில் இருக்கையின் நுனிக்கே வந்துவிடுகிறோம். நம்மை மறந்து, உண்மை போன்றே தோன்றும் வேறொரு கற்பனை உலகுக்குச் செல்கிறோம். ஆனால், திரையரங்கை விட்டு வெளியே வந்ததும் ‘ஸ்பைடர் மேனைப் போல’ கட்டிடத்தின் மேலேயிருந்து கீழே குதித்து விடுகிறோமா என்ன? இல்லைதானே? அது சினிமா. உண்மையில் அவ்வாறு செய்தால் நமது கை, கால் முறிந்து உயிருக்கு ஊசலாட வேண்டிய நிலை வரும் என்ற தெளிவிருக்கிறது இல்லையா?

அதே போல்தான் நீலப்படங்கள் பார்ப்பதும். ஒருவேளை அப்படங்களைப் பார்க்கிறீர்களென்றால், பார்த்து முடித்ததும் அது வெறும் சினிமாதான் என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொண்டு அத்தோடு மறந்து விடுங்கள். அவற்றில் வந்த காட்சிகளைப் போல் உண்மை வாழ்க்கையிலும் முயற்சி செய்து பார்த்து அவை நடக்கவில்லை எனும்போது நீங்கள் வெறுப்படைந்தால், கை, கால் அல்ல உங்கள் திருமண உறவே முறிந்துபோகும். உங்களைப் பற்றியே உங்களுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மையால் மனச்சோர்வும், அதீத மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்புண்டு.

இரத்த ஓட்டம் சரிவரப் பாயாததால், ஆணுறுப்பில் விறைப்புத்தன்மை ஏற்படாமல் போவது நாமறிந்ததே. அதே அளவு பாதிப்பு தொடர்ந்து நீலப்படங்கள் பார்த்து அதனால் பாலுறவு கொள்ளும் ஆசை தூண்டப்பட்டு, ஆணுறுப்பு விறைப்படையும் ஒரு ஆணுக்கு உண்மை வாழ்க்கையில் அவ்வாறு அமையாத போதும் ஆணுறுப்பில் விறைப்பற்றத்தன்மை ஏற்படுகிறது. இந்த உண்மையை ஆன்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிம் ஜேக்கப்ஸ் (Tim Jacobs, MD – University of Antwerp) கூறியிருக்கிறார். நாளாக ஆக அந்த ஆண் நிரந்தரமான உணச்சியற்றத் தன்மையையும், விறைப்பற்ற நிலையையும் அடைந்து விடுகிறான்.

3,267 ஆண்களை ஆராய்ச்சிக்கு உட்படுத்தியதில், தினமும் நாற்பது நிமிடங்கள் வரை நீலப்படங்களைப் பார்க்கும் ஆண்களில் முப்பதிலிருந்து நாற்பது சதவீதத்தினருக்கு ஆணுறுப்பில் விறைப்புத்தன்மை ஏற்படாதது கண்டுபிடிக்கப்பட்டது. அதுவே ஒரு வாரத்துக்கு முப்பது நிமிடங்களுக்கும் குறைவாக நீலப்படங்கள் பார்க்கும் ஆண்களில் பத்து சதவீதத்தினருக்குத்தான் அக்குறைபாடு இருந்தது. எண்பத்தைந்துக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகள் அதிகமாக நீலப்படங்கள் பார்ப்பவர்களுக்கு, மனதளவில் குறைபாடுகளும் அதிகரிப்பதாக நிரூபித்துள்ளன. (Ref.prestigemensmedical.com)

Photo by Soner Özcan: https://www.pexels.com/photo/man-with-face-mask-seen-between-woman-legs-16885319/

நீலப்படங்களில் பெரும்பாலும் அனைத்து விஷயங்களுமே மிகவும் மிகைப்படுத்திக் காட்டப்படுவதால், அவற்றை அப்படியே உண்மை வாழ்க்கையில் வெளிக்காட்ட நினைக்கும் ஆணின் செயல்கள் அதீத வன்முறையுடனும் பெண்ணைப் பலவந்தப்படுத்தும் வகையிலும் அமைந்து விடுகின்றன. காமம் என்பது அங்கு ஒரு பாலியல் வன்புணர்வாக மாறி விடுகிறது. திருமணத்துக்குப் பின்பான வன்புணர்வை (Marital rape) ஆண், பெண் யார் செய்தாலும் அது தவறுதான். தன் துணைக்கு விருப்பமில்லாத நேரத்திலும் விருப்பமற்ற நிலைகளிலும் உடலுறவு கொள்ளக் கட்டாயப்படுத்தும் ஒருவித அதிகார மனப்பான்மையை இந்த நீலப் படங்கள் ஏற்படுத்திவிடுகின்றன.

நீலப் படங்களைத் தொடர்ந்து அளவுக்கதிகமாகப் பார்க்கும் ஆண்கள், தங்கள் பாலியல் வாழ்க்கையில் மட்டுமல்லாமல், சாதாரணமாகவே எல்லாச் சூழல்களிலும் முரட்டுத்தன்மையுடன் நடந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்.

புகைப்பிடித்தல், மதுபானம், போதைபொருள்கள் பயன்படுத்துவதைப் போலத்தான் நீலப்படங்களுக்கு அடிமையாவதும். மற்ற எல்லாவிதமான போதைப் பழக்கங்களும் எப்படி தவறானதோ அதே போல்தான் நீலப்படங்களுக்கு அடிமையாதலும். தங்கள் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை, தாங்கள் எதிர்கொள்ளும் துயரங்களை சமாளிக்கத் தெரியாமல் அவற்றிலிருந்து தப்பிக்கும் முயற்சியாகத்தான் மற்ற எல்லாவிதமான போதைகளுக்கும் அடிமையாகிறார்கள். அதே போல்தான் நீலப் படங்களைப் பார்க்கும் போதைக்கும் அடிமையாகி விடுகிறார்கள். தங்கள் இயல்பு வாழ்விலுள்ள பிரச்னைகளை சரி செய்து கொள்வதற்கான முயற்சிகளைத்தான் எடுக்கவேண்டுமேயொழிய, அவற்றுக்கானத் தற்காலிகத் தீர்வான போதைப்பழக்கங்களுக்கு அடிமையாவதென்பது ஒருபோதும் நிரந்தரத் தீர்வாகாது. அந்தப் போதைப் பொருட்கள் தற்காலிகமாக உங்களது உடலையும் மனதையும் மரத்துப் போகச் செய்யும் ஒரு நிலைக்கு உங்களை உள்ளாக்கலாம், அவ்வளவுதான். அதேபோல் நிதர்சன வாழ்வில் உங்களுக்கு வேலையிலோ, குடும்பத்திலோ, காதலிலோ, அல்லது உடலுறவிலோ ஏதாவது பிரச்னையிருந்தால், அந்தக் குறிப்பிட்டப் பிரச்னைக்கான தீர்வைக் கண்டுபிடித்து சரி செய்ய முயற்சிசெய்யுங்கள். நீலப்படங்கள் பார்ப்பதை உங்களது பாலியல் பிரச்னைகள் அல்லது வேறெந்தவிதமான பிரச்னைகளுக்கானத் தீர்வாகக் கருதாதீர்கள்.

நீலப்படங்களில் ஆண் ஒரு பெண்ணை விழுந்து விழுந்து காதலிப்பது போலவும், மென்மையான காதல் உணர்வுகளும் காட்டப்படுவதில்லை. இதனால் இவற்றை அளவுக்கதிகமாகத் தொடர்ந்து பார்ப்பவர்களின் மூளையும் அவ்விதமே மனநிலைப்படுத்தப் படுகிறது(Mental conditioning). எனவே அவர்கள் தங்கள் துணையிடம் மனரீதியிலான ஒட்டுதலுடனிருப்பதில்லை. உடலுக்கு மட்டுமே பிரதான முக்கியத்துவத்தைக் கொடுக்க அவர்களது மூளை பழக்கப்படுத்தப்பட்டுவிடுவதால், அடுத்தவர்களின் உணர்வுகளுக்கும் குறிப்பாகத் தங்கள் துணையின் உணர்வுகளுக்கும் அவர்கள் மதிப்பளிப்பதிலை. பலநேரங்களில் மற்றவர்களின் உணர்வுகளை அவர்கள் புரிந்து கொள்வதுகூட இல்லை.

பிறரிடமிருந்து சிறிய பாராட்டுக்கள் கிடைக்கும்போதும், தங்கள் துணையுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடும் போதும் ‘டோபோமின்’ நம் உடலில் சுரக்கிறது என்பதைப் பற்றி ஏற்கெனவே பேசியிருக்கிறோம் இல்லையா? இவ்வாறு தினசரி உண்மை வாழ்வில் சிறு சிறு தொடுதல்களின் மூலமும் உங்கள் துணையைப் பார்ப்பதன் மூலமும் சுரக்கும் இந்த மகிழ்ச்சி ஹார்மோன் நீலப்படங்களைப் பார்க்கும் போதும் சுரக்கிறது. இயல்பான தருணங்களில் கொஞ்சம் கொஞ்சமாக சுரக்கும் இதன் அளவு நீலப்படங்களைப் பார்க்கும்போது அபரிமிதமாக ஆவதால் மூளைக் கொஞ்சம் கொஞ்சமாக அதற்குப் பழக்கப்படுத்தப்பட்டு விடுகிறது. நீலப்படங்களில் இரண்டு வகைகள் இருக்கின்றன.

ஆடைகள் இல்லாமல் மட்டும் திரையில் தோன்றுவது Softcore நீலப்படங்கள். அதீதமான உடலுறவுக் காட்சிகளோடு வருபவை Hardcore நீலப்படங்கள். நீலப் படங்களை அளவுக்கதிகமாக பார்ப்பவர்களுக்கு நாட்கள் செல்ல செல்ல அவர்கள் துணையின் காதல் பார்வைகளும் சிறு சிறு தொடுகைகளும் அவர்கள் மூளையில் எந்த பாதிப்பையும் டோபோமின் சுரப்பையும் உருவாக்குவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் Soft porn என்றழைக்கப்படக்கூடிய மென்மையான நீலப்படங்களைப் பார்க்க ஆரம்பிப்பவர்கள் நாளடைவில் அவர்களின் மூளை மந்தத்தன்மையடைய அடைய இன்னும் மோசமான, ஆபாசமான Hardcore படங்களைப் பார்க்கத் தொடங்குவார்கள். அதீதமான, இன்னும் சொல்லப்போனால் அசாதாரணமான நீலப்படங்களைப் பார்க்கத் தொடங்குகிறார்கள். எடுத்துக்காட்டாக மிருகங்களைப் புணர்வது, ஒரு ஆண் ஒரே சமயத்தில் பல பெண்களைப் புணர்வது, ஒரு பெண் ஒரே சமயத்தில் பல ஆண்களுடன் புணர்வது, கணவன் முன் இன்னொரு ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்வது, இரண்டு மூன்று ஜோடிகள் ஒரே அறையில் தங்கள் துணைகளை மாற்றிப் பாலுறவு கொள்வது, பெண்ணை அடித்துத் துன்புறுத்தி வன்புணர்வு செய்வது, குழந்தைகளுடன் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற மிகவும் எதிர்மறையான, வன்முறையுடன் கலந்த ஆபாச படங்களைப்பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்தியாவில் குழந்தைகளைப் பயன்படுத்தி வெளிவரும் நீலப்படங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. அவற்றை வெளியிடுவதும், பார்ப்பதும் தண்டைக்குரிய குற்றம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தத் தடை மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு விஷயம். இதுபோன்ற அசாதாரணமான வன்புணர்வுகளடங்கிய நீலப்படங்களைப் பார்க்கும் நபர்கள்தன் பெண்களிடம் அன்பாகவும், காதலுடனும் நடந்து கொள்ளாமல் அவர்களை ஒரு காமப்பொருளாக மட்டும் பார்க்கும் செயல்களில் ஈடுபடுகிறர்கள். மூளையில் ஏற்படும் இந்த மாற்றங்கள், நீலப்படங்களைப் பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடும் ஆண்களுக்கும்கூட நாளடைவில் அது எந்த விதமான கிளர்ச்சியையும் ஏற்படுத்தாமல் திருப்தியற்ற நிலையிலேயே அவர்களைத் தேங்கிவிடச் செய்கிறது. எந்த மகிழ்ச்சியும் நல்ல உணர்வுகளும் ஏற்படாமலிருந்தும் தொடர்ந்து இயந்திரத்தனமாக சுயஇன்பத்தில் மிக அதிக நேரம் ஈடுபடத் தொடங்குகிறார்கள். அது, அவர்களது மனதுக்கும் உடலுக்கும் அலுப்பைத் தரத் தொடங்குகிறது. சில ஆண்கள் உடலுறவுக்கு முன்பான தூண்டுதலாக நீலப்படங்களைப் பார்ப்பதோடு நிற்காமல், மனைவியோடு உடலுறவில் ஈடுபடும்போதும்கூட அத்தகைய படங்களைப் பார்ப்பதும் அவளையும் அவ்வாறு பார்க்கக் கட்டாயப்படுத்துவதும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.

இதையே ஒரு வழக்கமாகச் செய்யும்போது, எப்படி அவர்கள் மனைவிமீது ஆசையும், அன்பும் வரும்? அவளைத்தான் அவர்கள் கவனிப்பதேயில்லையே..? அப்போதும் படத்தைத்தானே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? நீலப்படங்களில் மூழ்கியிருக்கும் ஆண்கள், தங்கள் குடும்பத்தினரிடமும், நல்ல நட்புகளிடமிருந்தும் தங்களை விலக்கிக் கொண்டு ஒரு தனிமை உலகத்துக்குள் வாழத் தொடங்குகிறர்கள். இதனால் கூடுதல் மன அழுத்தத்துக்கும் அதீத தனிமையுணர்வுக்கும் உள்ளாகிறார்கள். இன்னும் சொல்லப்போனால், மிகத் தீவிரமாக நீலப்படங்கள் பார்க்கத் தொடங்கும் ஆண்கள் தங்கள் வேலை, பணம் ஈட்டுதல் இவற்றில் கவனம் செலுத்துவதைக்கூட விட்டுவிடுவதால் பொருளாதாரப் பிரச்னைகளுக்கும் உள்ளாகிறார்கள். ஒரு கட்டத்தில் இது அவர்களுக்கே தங்களைப் பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மையையும் குற்றவுணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

ஒருவேளை நீங்கள் நீலப்படங்களைப் பார்ப்பதற்கு அடிமையாகியிருந்தால், குறைந்தபட்சம் உங்கள் அலுவலகங்களில் அவற்றைப் பார்ப்பதையாவது தவிர்த்து விடுங்கள். அப்படி செய்வது உங்கள் வேலையில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், உங்களைப் பற்றிய மதிப்பீடு அலுவலகத்தில் குறையவும் காரணமாகலாம்.

Photo by Pixabay: https://www.pexels.com/photo/beach-beautiful-california-clouds-301952/

2018ம் ஆண்டு நடந்த ஒரு கருத்துக் கணிப்பில், இரண்டாயிரம் பங்கேற்பாளர்களை பேட்டியெடுத்ததில் அவர்களது விவாகரத்துக்குக் காரணம் தொடர்ந்து அவர்கள் நீலப்படங்களைப் பார்த்ததுதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு உதாரணம்தான். விவாகரத்துக்கும், நீலப்படங்கள் பார்ப்பதற்குமுள்ள தொடர்பு மற்றும் அதனால் ஏற்படும் திருமண முறிவுகளின் எண்ணிக்கைகள் குறித்து ஏகப்பட்ட ஆராய்ச்சிகள் கொட்டிக் கிடக்கின்றன. அவையனைத்திலும் வெவ்வேறு எண்ணிக்கையில் பங்கேற்பாளர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். ஆனால், அனைத்து முடிவுகளுமே இதே உண்மையைத்தான் அடித்துச் சொல்கின்றன. ஒவ்வொரு ஆராய்ச்சி மற்றும் கருத்துக் கணிப்பின் முடிவுகளிலும் விவாகரத்துகளுக்கு எந்தளவுக்கு ஆழமான காரணமாக நீலப்படங்கள் பார்க்கும் பழக்கம் அமைந்திருக்கின்றன என்பது அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இருபது வயதிலிருந்து முப்பது வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு இதன் பாதிப்பு மிகவும் அதிகமாயிருக்கிறது. உடலுறவில் மட்டுமல்லாமல், தினசரி வாழ்க்கையில் அவர்கள் செய்யும் எல்லா வேலைகளிலுமே ஒருவித மந்தத்தன்மையுடனும் ஆர்வமில்லாமலும் நடந்துகொள்ளத் தொடங்குகிறார்கள்.

நீலப்படங்களைத் தொடர்ந்து பார்த்து அவற்றுக்கு அடிமையாவதென்பது சம்பந்தப்பட்ட தனிநபரை மட்டும் பாதிப்பதில்லை. அவனது வாழ்க்கைத் துணையை பாதிப்பதோடு, அவளிடமிருந்து அவன் எதிர்பார்க்கும் அந்த அதீத விஷயங்கள் கிடைக்காமல் போகும்போது, தங்களுக்குத் துளியும் தொடர்பில்லாத பிற பெண்களையும் சீண்டத் தொடங்குகிறான். பேருந்தில் நிற்கும்போது பெண்களின் பின்பக்கத்தை உரசி விந்தை வெளியேற்றுவது, கூட்டமான இடங்களில் பெண்களின் மார்பகங்களை இடிப்பது, பொது இடங்களில் வலம் வரும் பெண்களின் அந்தரங்க உறுப்புக்களை உற்றுப்பார்ப்பது, வேலைபார்க்கும் இடங்களிலிருக்கும் பெண்களுக்குப் பாலியல் ரீதியிலான தொந்திரவுகளைக் கொடுப்பது என இந்த சமுதாயத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கரையானைப் போல் அரிக்கத் தொடங்குகிறான். இவையெல்லாம் ஆரம்ப நிலைகள்தான். நாளடைவில் இன்னும் உச்சக்கட்ட நிலைச் செயல்களான பெண்களை வன்புணர்வு செய்வது, குழந்தைகளைப் பாலியல் வன்புணர்வு செய்வது என்பன போன்ற கேடுகெட்ட செயல்களிலும் ஈடுபடத் தொடங்குகிறான்.

நீங்கள் பார்க்கும் ஒரு மணி நேர அல்லது அரை மணி நேர நீலப்படங்கள் அந்த கால அவகாசத்துக்குள் எடுக்கப்பட்டவையல்ல. ஒரு மணிநேர நீலப்படத்தை இடைவெளி விட்டுவிட்டு வெவ்வேறு கோணங்களில் ஐந்தாறு நாள்களுக்கும் மேலாக படம்பிடிப்பார்கள். ஆனால், அவற்றைப் பார்க்கும் பார்வையாளர்களின் மனதுக்குள் படத்தில் நடிப்பவர்கள் தொடர்ந்து பல நிமிடங்கள் உடலுறவு வைத்துக் கொள்வதைப் போன்ற நம்பிக்கை ஏற்படுகிறது. அந்த எண்ணம் ஒரு மாயைதான். தொடர்ந்து ஒரு மணி நேரமெல்லாம் எந்த ஆணாலும் உடலுறவில் இயங்கிக் கொண்டிருக்கமுடியாது என்று இருபாலருமே புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கும் அதீத எதிர்பார்ப்பு தோன்றாது. ஆண்களுக்கும் ‘நம்மால் ஏன் இவ்வாறு செய்ய முடியவில்லை? நமக்குத்தான் ஏதோ குறையிருக்கிறது போல’ என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படாது.

உடலுறவின்போது தொடர்ந்து இயங்காமல் சில நிமிடங்கள் இடைவெளி விட்டு விட்டு இயங்கும்போதும், நான்கு முறை மெதுவாக இயங்கினீர்களென்றால் ஐந்தாவது முறை வேகமாக என நீங்கள் இயங்கும் வேகத்தை குறைவாகவும் வேகமாகவுமென மாற்றி மாற்றி இயங்கும்போதுதான் நீண்ட நேரம் செயல்பட முடியும். அதேபோல் நீலப்படங்களில் பாலுறவுக் காட்சிகளில் இயங்கும் ஆண்களைப் போல் அவ்வளவு வேகமாகவெல்லாம் எந்த ஆணாலும் உண்மை வாழ்வில் உடலுறவில் ஈடுபட முடியாது. சாதாரண வேகத்தில் இயங்கியிருக்கும் அந்த நடிகரின் உடலசைவுகள் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி மிக வேகமாக செயல்படுவதைப் போல் அந்தப் படங்களில் காட்டப்பட்டிருக்கும். நீலப்படங்களில் காட்டப்பட்டுள்ளபடி வலிமையான உடல்வாகுள்ள ஆண்களால்தான் பாலுறவில் மிக அதிக நேரமும் வேகமாகவும் இயங்க முடியும், சிறப்பாக செயல்பட முடியும் என்ற கண்ணோட்டத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் மனக் கட்டுப்பாடு, மூச்சுக் கட்டுப்பாடு, உங்கள் துணையை நீங்கள் எந்தளவுக்கு காதலிக்கிறீர்கள், உங்கள் இருவருக்குமிடையே உணர்வுப் பொருத்தமிருக்கிறதா என்பவை உள்ளிட்ட பல விஷயங்களின் அடிப்படையில்தான் ஒரு ஆணின் பாலுறவு கொள்ளும் திறன் அமைகிறது.

அதேபோல், நீலப்படங்களில் நடிக்கும் பெண்களுக்கிருப்பது போன்ற வளைவு நெளிவுகளுடன் கூடிய உடலமைப்பும் வெண்மையான, முடிகளற்ற வழுவழுப்பான அந்தரங்கப்பகுதியும், கருமை படராத அக்குள் மற்றும் முழங்கைகளுமிருப்பதுதான் அழகு, அதுதான் இயல்பு என்று நினைக்கிறார்கள். தங்கள் மனைவியும் இவ்வாறு இருக்க வேண்டுமென ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள். அந்தப் படங்களில் காட்டப்படுள்ளது போன்ற அம்சங்கள் தங்களிடமில்லாதது ஒரு பெரிய குறைபாடு என நினைத்துப் பெண்களும் மனதளவில் மிகுந்த அவதியடைந்து மன உளைச்சலுக்குள்ளாகிறார்கள்.

இதனால் அந்தரங்கப் பகுதிகளை வெண்மையாக்கும் தேவையற்ற பூச்சுக்களையும் (கிரீம்கள்) அங்கிருக்கும் முடிகளை அகற்ற Bikini Waxing எனப்படும் அந்தரங்கப் பகுதிகளிலிருக்கும் முடிகளை அகற்றும் சிகிச்சைகளையும் மேற்கொள்கின்றனர். இவ்வாறு செய்யும் பல பெண்களுக்கு அதனால் ஏகப்பட்ட பக்க விளைவுகள் ஏற்படுகின்றன. தோலின் நிறம் இன்னும் கருமையாகி விடுதல், ஒவ்வாமை (அலர்ஜி) போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.

கண் இமைகள் மற்றும் மூக்குக்குள் இருக்கும் முடி செய்யும் அதே பாதுகாப்பு வேலையைத்தான் நமது அந்தரங்க உறுப்புக்களைச் சுற்றியுள்ள முடியும் செய்கின்றது. அந்த இடத்தில் தோன்றும் அழுக்குகள் மற்றும் அதீத வியர்வை வெளிப்பாட்டினால் தோன்றும் உப்பு படர்ந்த வியர்வைப் படலங்களை இந்த முடி தடுத்து விடுவதால் அவை அந்தரங்க உறுப்பை நெருங்குவதில்லை. அங்கு தோன்றும் நுண்ணுயிர்களையும் இம்முடி அந்தரங்க உறுப்புக்குள் நுழையாமல் பாதுகாக்கின்றது. இந்த மயிர்க்கால்களுக்கடியிலிருக்கும் எண்ணெய்ச் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் எண்ணெய், அந்தரங்கப் பகுதியிலிருக்கும் பாக்டீரியாக்கள் இன்னும் பல்கிப் பெருகி விடாமல் தடுக்கிறது. அந்தப் பகுதியில் சரியான வெப்பநிலையை சீராக வைத்திருக்கவும் இம்முடி உதவுகின்றது. ‘அந்தரங்க உறுப்புக்களின் மேலிருக்கும் முடியை நீக்குவது பரிந்துரைக்கப்படக் கூடிய விஷயமல்ல. சுத்தம், அழகு என்ற பெயரில் அவ்வாறு செய்வதைத் தவிருங்கள்’ என்று பெரும்பாலான பாலியல் நிபுணர்களும் வலியுறுத்துகிறார்கள்.

Photo by cottonbro studio: https://www.pexels.com/photo/close-up-shot-of-a-clay-sculpture-6757775/

அந்த இடத்தில் முடி அதிக அடர்த்தியாக இருப்பதை உடலுறவின்போதும் முன்விளையாட்டுக்களின் போதும் நீங்களும் உங்கள் துணையும் அசௌகர்யமாய் உணர்கிறீர்களென்றால், முடியின் மேலேயிருக்கும் நுனிப்பகுதியை மட்டும் வெட்டி விடுங்கள்(Trimming). ஒருவேளை எப்போதாவது அந்தரங்கப்பகுதியை முடியில்லாமல் பார்க்க வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டாலோ அல்லது உங்கள் துணைவர் விரும்பினாலோ தோலை இழுத்துப்பிடிக்கக்கூடிய, வலிமிகுந்த, முடியை நீக்கும் முறையான பிகினி வாக்ஸிங் செய்வதைத் தவிர்த்து வேறு வலியில்லாத முறைகளைப் பின்பற்றிப்பாருங்கள். வலியில்லாத முறைகளைத் தொடர்ந்து செய்வது நல்லதல்ல. பெரும்பாலானவர்களுக்கு ஒவ்வாமையையும், அந்த இடத்தில் இன்னும் அதிகக் கருமையையும் ஏற்படுத்திவிடும்.

பெண்களின் அந்தரங்கப் பகுதியிலிருக்கும் தோல் மிக மிக மென்மையானது என்பதால் இங்கே சூடான மெழுகைப் பயன்படுத்தி இழுத்து முடிகளை அகற்றும்போது, அதீத வலியும் எரிச்சலும் ஏற்படும். சிலருக்கு இரத்தக்கசிவு கூட ஏற்பட்டிருக்கிறது. சில பெண்களுக்கு அப்பகுதியிலிருக்கும் மென்மையான தோல் பாதிப்படைந்து பிய்ந்து வந்ததும் கீறல் ஏற்பட்ட சம்பவங்களும் கூட நிகழ்ந்திருக்கின்றன. அந்த இடத்தில் அதீத எரிச்சல் ஏற்படுதல், சிவந்து போதல் போன்ற பக்க விளைவுகளுடன், உடல் சூடு அதிகரித்து காய்ச்சலும் சிலருக்கு ஏற்படுகிறது. எனவே நீலப்படங்களைப் பார்த்துவிட்டு இது போன்ற விபரீத முயற்சிகளில் இறங்காதீர்கள்.

ஆண், பெண் இருபாலருக்குமே அந்தரங்க உறுப்புப் பகுதி கறுப்பாக இருப்பது இயற்கைதான். இது ஹார்மோன்கள் மாற்றத்தால் ஏற்படுகிறது. நமது உடலில் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகரிக்கும்போது, மெலனின் சுரப்பும் சில இடங்களில் அதிகரித்து அந்த இடங்கள் கருமையாகின்றன. பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும்போது மெலனின் சுரப்பிலும் அது பாதிப்பேற்படுத்துகிறது. அதனால் மென்மையான பகுதிகளான பெண்ணுறுப்பு மற்றும் மார்பின் முலைக்காம்புகளைச் சுற்றியுள்ள இடங்கள் கறுப்பாகின்றன. கருவுற்றிருக்கும்போது ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களினாலும் கூட இவ்வாறு நிகழலாம். வல்வாவைச் சுற்றியுள்ள இடங்களிலும்கூட கருந் திட்டுக்கள் தோன்றும். குழந்தை பிறப்பின் போது பெண்ணுறுப்பைச் சுற்றியுள்ள இடங்களில் சிறு கீறல்கள் ஏற்பட்டதாலோ அல்லது மருத்துவ வேதிப்பொருட்கள் அந்த இடத்தில் பட்டதால் ஏற்பட்ட பின்விளைவுகளாலோ கூட கரும் திட்டுக்கள் ஏற்படலாம். ஆண்களுக்கு இவ்வாறு அவர்களது அந்தரங்கப்பகுதியைச் சுற்றி ஹார்மோன்கள் மாற்றத்தினால் ஏற்படும் கரும் திட்டுக்களை பினைல் மெலனோசிஸ் (Penile melanosis) என்போம். எனவே இவ்வாறு உங்கள் அந்தரங்க உறுப்பைச் சுற்றியுள்ள பகுதிகள் கறுப்பாயிருப்பது இயற்கைதான் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

நீலப்படங்களில் நடிப்பவர்களுக்கு அவர்களது உடல் முழுவதுமே ஒப்பனை செய்யப்படுகிறது. ஒருவேளை சிவப்பாக இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தால் கூட கறுப்பாக இருக்கும் அவர்களது அந்தரங்கப்பகுதிகளுக்கு ஒப்பனை செய்கிறார்கள் (Make up). திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரியும் என் நண்பர் சொன்னது: நடிகர் நடிகைகளுக்கும் அனைவரையும் போல குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்களது முகத்திலுள்ள புள்ளிகள், குழிகளையெல்லாம் ஒப்பனை மூலம் மட்டும் முழுதாய் மறைத்து விடமுடியாது. திரையில் பார்ப்பதற்கும், நேரில் பார்ப்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பதற்குக் காரணம், Digital intermediate (DI) என்று சொல்லப்படும் colour correction செய்யப்படுவதுதான். அப்போதுதான் நீங்கள் திரைப்படத்தில் பார்ப்பதைப் போல் பிரமிக்கத்தக்க அழகுடன் அவர்களை எங்களால் காட்டமுடியும். நீலப்படங்களுக்கு மட்டுமல்ல, அனைத்து திரைப்படங்களுக்குமே Digital intermediate (DI) என்று சொல்லப்படும் இந்தத் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதனால்தான் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் நேரில் பார்ப்பது போல் இல்லாமல், திரையில் மிகவும் வெண்மையாகவும் பளிச்செனவும் தோன்றுகிறார்கள்.

எளிதாகப் புரியும்படி சொன்னால், நாம் புகைப்படங்களுக்கும் வீடியோக்களுக்கும் ஃபில்டர் பயன்படுத்துவதைப் போலத்தான் இதுவும். நீலப்படங்களில் இன்னும் ஒரு அசாதாரணமான பின்னணிச் சூழலையும் (Background) உடலமைப்பையும் அபரிமிதமான நிறத்தையும் மேம்படுத்திக் காட்டுவதற்கு தனித்துவமான சிறப்பு ஒளிப்பதிவு தொழில் நுட்பங்களும் யுக்திகளும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே நீலப்படங்களில் நடிப்பவர்கள் போல உங்கள் அந்தரங்க உறுப்புக்கள் இல்லையே என்று கவலைப்படாதீர்கள். அதில் நடிப்பவர்களோடு உங்கள் துணையை ஒப்பிட்டுப் பார்த்து அவர்களுக்கு அப்படி பளிச்சென்று வெண்மையாக இல்லையே என்று ஏமாற்றமடையாதீர்கள்.

உங்கள் அந்தரங்க உறுப்பைச் சுற்றியிருக்கும் முடியை அகற்றவோ, கருமையை நீக்கி நிறத்தை அதிகரிக்கவோ ஏதாவது செய்து தேவையில்லாமல் வீணாகப் பக்க விளைவுகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.

அதேபோல்தான் நீலப்படங்களில் நடிப்பவர்களுக்கிருப்பது போன்ற பெரிய மார்பகங்கள் நமக்கில்லையே என்று நினைத்து நிறைய பெண்கள் கவலைப்படுகிறார்கள். தங்கள் மார்பகங்களைப் பெரிதாக்கிக் கொள்ள மாத்திரைகள், ஹார்மோன் ஊசிகள் மற்றும் கிரீம்களைத் தேடி அலைகிறார்கள். சில படங்களில் உடல் முழுவதுமே பருமனாக இருக்கும் பெண்கள் நடிக்கவைக்கப்படும்போது அவர்களுக்கு மார்பகங்களும் இயல்பாகவே பெரிதாக இருக்கும். ஆனால், உடலின் மற்ற பாகங்கள் ஒல்லியாகவும் மார்பகங்கள் மாட்டும் பெரிதாகவும் காட்டப்படும் நீலப்படங்களில் நடிப்பவர்கள் மார்பகங்களைப் பெரிதாக்கும் செயற்கையான அறுவை சிகிச்சை முறைகளை மேற்கொண்டிருப்பார்கள். இயல்பாகவே அப்படியொரு உடல்வாகு யாருக்கும் அமைந்திருக்க சாத்தியமில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மார்பகங்களுக்குள் சிலிக்கான் வைத்தோ அல்லது அவர்களுடலின் ஓரிடத்திலிருந்து எடுக்கப்பதும் தசையை மார்பகங்களுக்குள் அறுவைசிகிச்சையின் மூலம் வைத்தோ அவற்றை பெரிதாக்குகிறார்கள் (Breast augmentation). இவ்வாறான இயற்கைக்குப் புறம்பான அறுவைசிகிச்சைகளில் ஏகப்பட்ட பின் விளைவுகள் ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். நடிப்பது அவர்கள் தொழில் என்பதால் வேறு வழியில்லாமல், வாய்ப்புக்காகவும் பணம் சம்பாதிப்பதற்காவும் தங்கள் ஆரோக்கியத்தையும் உயிரையும் பணயம் வைத்து இது போன்ற அறுவை சிகிச்சைகளை அப்படங்களில் நடிப்பவர்கள் செய்து கொள்கிறார்கள். படம்பார்க்கும் நமக்கு பத்து பைசா பயனில்லாமல் இப்படி ஒரு சிகிச்சை தேவையா என்று யோசித்துப் பாருங்கள். எனவே இவையெல்லாம்தான் உங்கள் உடலுறவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க காரணங்கள் அல்லது இவையில்லாததால்தான் உங்களால் திருப்தியான உடலுறவில் ஈடுபட முடிவதில்லை என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.

இதற்கு முந்தைய அத்தியாயங்களில் கூறியுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். அதீத அன்பும், காதலும் உங்கள் துணை மீதிருக்கும்போது, ‘எல்லா வகைகளிலும் உன்மீது எனக்கிருக்கும் காதலை நான் வெளிப்படுத்தி விட்டேன். இனி கொடுக்க என்னைத்தவிர வேறெதுவும் என்னிடமில்லை…’ என்று நீங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் சரணடைந்து தங்களை முழுவதுமாக அர்ப்பணிக்கும் போதுதான் அந்தக் காமம் மிக அழகாக, அர்த்தமுள்ளதாக, இருவருக்குமே உச்சக்கட்டத்தை, திருப்தியை, உடல்-மன மகிழ்ச்சியைக் கொடுப்பதாக அமையும்.

புரிந்து கொள்ளுங்கள்…
முயன்று பாருங்கள்…

படைப்பு:

செலின் ராய்

காட்சித்தகவலியல் (Visual communication) துறையில் இளங்கலையும்இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் (Mass communication & Journalism) உளவியல் (Psychology) இவையிரண்டிலும் முதுகலைப் பட்டமும் அழகியலில் (Advance Diploma in Beautician) அட்வான்ஸ்டு டிப்ளமோ பட்டமும் பெற்றவர்விரிவுரையாளருக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று (UGC – NET) பல கல்லூரிகளில் துறைத்தலைவராகப் பணியாற்றியவர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடுமுறையில் எழுதத் தொடங்கிதமிழில் பல முன்னணி இதழ்களில் எழுதியவர். புத்தகங்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் எழுதியுள்ளார். பிரபல பெண்கள் பத்திரிக்கைக்கு 21 வயதிலேயே ஆசிரியரான போது, ‘ The Youngest Editor of Tamilnadu’ என ‘The Hindu’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது53 ஆடியோ மற்றும் வீடியோ சிடிக்களை பல தலைப்புகளிலும் வெளிட்டுள்ள இவர் எழுதுவதுடன் உறவுச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான பல பயிலரங்குகளை தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்இவருக்கு மனித உரிமைக் கழகம் மனித நேயத்துக்கான விருது வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version