Site icon Her Stories

அன்பு

அன்பு, 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். 

நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்து விநியோகம் செய்த இந்த திரைப்படம், எம்.நடேசன் அவர்களே எழுதி இயக்கியது. 

விந்தன் வசனம் எழுதியிருக்கிறார். பாடல்களை கா. மு. ஷெரீப், ராஜப்பா, சுரதா, விந்தன், கம்பதாசன், தண்டபாணி, பாபநாசம் சிவன் ஆகியோர் எழுதியுள்ளார்கள். டி.ஆர்.பாப்பா இசையமைத்து உள்ளார்.

பாடகர்கள்: ஏ. எம். ராஜா & ஜிக்கி, T. R. ராஜகுமாரி, எம்.எல்.வசந்தகுமாரி கான சரஸ்வதி  ஏ.பி.கோமளா

நடிகர்கள்

சிவாஜி கணேசன் – செல்வம் 

டி.எஸ். பாலையா- திருமலை 

டி. துரைசாமி – ராஜமாணிக்கம் 

கே. தங்கவேலு – குமார் 

பிரெண்ட் கே .ராமசாமி – பாஸ்கர் 

பெண் நடிகர்கள்

டி.ஆர். ராஜகுமாரி – தங்கம்  

மாலதியாக பத்மினி

ரீட்டாவாக லலிதா

விஜயாவாக எம்.ருஷ்யேந்திரமணி

பாலாமணியாக டி.எஸ்.ஜெயா

லட்சுமியாக எஸ்.பத்மா

துணை நடிகர்கள் – குமாரி ராஜம், ஆதிலட்சுமி, ரீட்டா, மோகனா மற்றும் சரஸ்வதி.

தங்கம் என்ற இளம்பெண், வயதான ராஜமாணிக்கத்தின் இரண்டாவது மனைவி. ராஜமாணிக்கத்தின் முதல் திருமணத்தில் அவருக்கு லட்சுமி என்ற மகளும், செல்வம் என்ற மகனும் இருக்கிறார்கள். மிகவும் அன்பான சித்தியாகத் தங்கம் இருக்கிறார். அவரை செல்வம், தனது அம்மாவாகவே ஏற்றுக் கொள்கிறார். லட்சுமி அவ்வாறு ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் தங்கம் அவரிடமும் அன்பாகத்தான் இருக்கிறார். 

கல்லூரியில் படிக்கும் செல்வம், மாலதியைக் காதலிக்கிறார். தற்செயலாக மாலதியின் அண்ணனுக்கே, லட்சுமியைத் திருமணம் செய்து வைக்கிறார்கள். செல்வம் வீட்டில், அந்தத் திருமணத்தில் பணம் முழுவதும் கரைந்து விடுகிறது. இந்த காலகட்டத்தில் தங்கம் கர்ப்பமாகிறார். 

இவ்வாறாக குடும்பம் தள்ளாடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், ராஜமாணிக்கம் திடீரென நோயில் படுக்கிறார். கணவர் “உன்னால் எப்படி என் பிள்ளைகளை அன்பு செய்ய முடிகிறது?” எனக் கேட்கிறார். அவரது சித்தி கொடுமைப்படுத்தியதால், தானும் அவ்வாறு செய்யக்கூடாது. அன்பாக இருக்க வேண்டும் என வாழ்வதாகவும் தங்கம் சொல்கிறார். மேலும், “என்னை இந்நிலைக்குக் கொண்டு வந்தவர் என் அப்பா தான். என் அப்பா தெரியாமல் செய்யவில்லை; தெரிந்தே செய்தார். அதற்குச் சட்டம் துணையாய் இருந்தது; சாஸ்திரம் துணையாய் இருந்தது. ஆனால் என் சித்திக்கு எல்லாம் விரோதம். ஏன்? என் சித்தி பெண் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக. கற்பு பெண்ணுக்கு மட்டும் தானா! ஆணுக்கு இல்லையா? இந்த விசித்திரமான நீதி, வேடிக்கையான நீதிக்கு சமூகம் என்றைக்குச் சமாதி கட்டுகிறதோ அன்று தான் பெண்கள் வயோதிகத்திற்குத் தங்கள் வாழ்வைப் பலி கொடுக்காமல் வாழப் போகிறார்கள்”, எனப் பேசிக்கொண்டே போக, ராஜமாணிக்கமும், இளம்பெண்ணான  தங்கத்தைத் திருமணம் செய்து கொண்ட குற்றத்திற்கு மனம் வருந்திவிட்டு இறந்து விடுகிறார்.

அவர் படுக்கையின் தலைமாட்டில் இறந்து போன முதல் மனைவியின் புகைப்படம். இதுவும் விசித்திரமான நீதி. இறந்து போன கணவனின் புகைப்படத்தை, இரண்டாவது திருமணம் செய்த பெண்ணால் இவ்வாறு வைக்க முடியுமா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

செல்வம், அப்பா வேலை செய்த அலுவலகம் போய் வேலை கேட்கிறார். அங்கு இவரையும் சித்தியையும் இணைத்துப் பேசி, விரட்டி விடுகிறார்கள். எல்லா இடங்களிலும் இதே சிக்கல். வேலையில்லா திண்டாட்டம். 

இந்நிலையில் மாலதிக்கு, அவரின் மாமா மகன் திருமலையுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது. மாலதி வீட்டை விட்டு வெளியேறி, செல்வத்தை மணந்து கொள்கிறார். ஒரு காலகட்டத்தில், வேலை காலி இல்லை என்ற போர்ட் விற்பவராகவே செல்வம் மாறுகிறார். அதற்காகப் பாடல் ஒன்றும் உள்ளது.

பாடல் ” ஜாலி ஜாலி சொந்த வியாபாரி நான் ஹலோ” என முடியும். 

ஒருவழியாகச் செல்வத்திற்கு வேலை கிடைக்கிறது. மாலதியின் அம்மாவை ஏமாற்ற நினைத்த திருமலையும் அவரது மனைவியும் சிறை செல்கிறார்கள். சித்தி இறக்க, அவருக்கு நினைவுத் தூண் நிறுவி, அதன் முன் அனைவரும் நின்று பாடுவதுடன் திரைப்படம் நிறைவடைகிறது. 

மிக எளிமையான ஆனால் சித்தி என்பவர் கொடுமைக்காரி அல்ல என்பதைச் சொல்லும் படம். ‘வானின் நிலவே  வானம் சென்றாயோ’ என சித்தியை நோக்கி ஒரு மகனைப் பாட வைத்த திரைப்படம்.

கல்லூரியில் ஒதெலோ நாடகத்தில் சிவாஜி பத்மினி  நடிப்பதாகக் காட்சி வருகிறது. வரலாற்று, இலக்கிய, இதிகாச பாத்திரங்களை நம் முன் கொண்டு வந்த சிவாஜி இந்தப் படத்தில்தான் இந்த வழக்கத்தைத் தொடங்கியிருப்பார் என நினைக்கிறேன்.  

பல பாடல்கள் இனிமையாக உள்ளன. கு. ம. ஷெரிஃப் அவர்கள் எழுதி, ஏ.எம்.ராஜா,  ஜிக்கி இணைந்து பாடிய ‘என்ன என்ன இன்பமே’ மிகவும் புகழ்பெற்ற பாடல். இனிமையான பாடலும்கூட. 

என்ன என்ன இன்பமே வாழ்விலே என்னாளும் 

கண்ணு ரெண்டும் பேசியே காதல் கொண்டாலே

தேன்மதியோடு வான்முகில் போலே

சேர்ந்து விளையாடுவேன் காதலிசை பாடுவேன்

நான் காதலரை கண்டதும்

.ஆனந்தமாக ஆனந்தமாக

கற்பனை மேவும் காவியம் நீயே  

காவியம் போற்றும் கலைஞனும் நீயே- யார் 

பாரில் நம்மை போலே பாக்கியசாலி

பாடல் கேட்க இனிமை என்றால், பார்க்க இன்னமும் இனிமையாக உள்ளது. வெறுமனே பியானோ முன்னால் நாயகி அமர்ந்து இருக்க, அதனருகில் நாயகன் நின்று பாடும் பாடல். இருவரின் முகங்களும் உடலும் ஆயிரம் மொழி பேசுகின்றன. 

என்ன என்ன இன்பமே,  ஆடவர்களே நாட்டில் தீபம், வெந்தழலால் எரிக்கும் வெண்மதியே போன்ற இனிமையான பாடல்கள் திரைப்படத்தில் உள்ளன. 

‘இசைபாடி வாழ்வின்ப சுவை காணுவோம்’ என கம்பதாசன் அவர்கள் எழுதி, ML வசந்தகுமாரி அம்மா பாடிய ஒரு பாடல் வருகிறது. இது பெண்பார்க்கும் படலப்பாடல். இவ்வாறான பெண்பார்க்கும் படலப்பாடல் இதற்குமுன் வேறு திரைப்படத்தில் வந்து இருக்கிறதா எனத் தெரியவில்லை. 

‘வெந்தழலாய் எரிக்கும் வெண்மதியே’ என்ற தண்டபாணி அவர்கள் எழுதி  என்.எல். கானசரஸ்வதி மற்றும்  ஏ.பி. கோமளா இணைந்து பாடி, பத்மினி, லலிதா ஆடும் நடனம் அழகாக இருக்கிறது.  

சுரதா அவர்கள் எழுதி ஏ.எம்.ராஜா,  எம்.எல்.வசந்தகுமாரி இணைந்து பாடும் ஆண்கள் பெண்கள் எனக் கல்லூரி மாணவர்கள் பாடிக்கொண்டே செய்யும் படகுப் பயணம் பார்க்க நன்றாகவே இருக்கிறது. 

ஆடவரே நாட்டினிலே ஜீவன் தானே 

பார் மீதினிலே 

பெருமை கீர்த்திக்கெல்லாம் ஆதாரம் 

விஞ்ஞானம் கலை வளர்வதெல்லாம் 

நம்மாலேதான் 

மாதரும் நாட்டினிலே ஜீவன் தானே 

பெரும் கீர்த்தி என்னும் சாந்த குணம் 

அமைந்தவர் நாமே தான் 

இல்வாழ்வில் சுகம் பொங்குவது 

நம்மாலே 

வீர தீரமெல்லாம் ஆண்களினாலே 

காரிருள் சூரியனால் நீங்குவது போலே 

தீங்கு நீங்குவது எங்கள் சக்தியாலே 

மானிட ஜாதியில் பலசாலி 

நம் — தடுமாறுவது பெண்ணாலே

மாதர் இல்லாவிடில் இனிமை ஏது?

ஜீவ ஆரம்பம் எல்லாம் பெண்ணாலே 

நேர்மை சேரும் இனம் நாமே

எவரும் ஈடாவார் நம்மோடு 

பொன் போல மின்னும் பெண்ணழகை வெல்வாரோ 

தீமை சேர்ந்த குணம் மேலழகால் மாறுமா 

வீணே ஆடம்பரம் அழகு ஆகுமா 

மங்கையரைத் தூற்றுவதே உங்கள் வேலை 

காமாலை பார்வைக்கெல்லாம் மஞ்சள் தானே 

உங்களுக்கழகில்லை என்றால் ஆத்திரம் தானே 

கிளி அழகில்லை என்றால் இதுவேதானே (கையைத் தலையில் வைதது மனநிலை பிறழ்ந்தவர் என சாடை காட்டுகிறார் பத்மினி) 

 அழகான கிளிக்குத் தான் சொந்த புத்தி காலி 

என சிவாஜி சொல்லவும் பத்மினி படகை விட்டு எழும்ப, படகு தடுமாறி அவர் மட்டும் தண்ணீரில் விழுகிறார். வழக்கம் போல நாயகன் காப்பாற்றுகிறார். அடுத்தக் காட்சி, வழக்கம் போல நாயகி போய் மன்னிப்பு கேட்கக் காதல் மலருகிறது.

விந்தன், பொதுவுடமை பேசிய இணையற்ற எழுத்தாளர். தமிழக அரசின் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ 1946ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அந்த ஆண்டு வெளிவந்த, விந்தனுடைய ‘முல்லைக்கொடியாள்’ என்னும் சிறுகதைத் தொகுப்புதான், சிறுகதைகளுக்காகத் தமிழ் வளர்ச்சிக் கழகம் அளித்த முதலாமாண்டுக்கான பரிசைப் பெற்ற நூல்.  தமிழக அரசு விந்தனுடைய நூல்களை நாட்டுடைமையாக்கி உள்ளது. விந்தன் ஏழு திரைப்படங்களுக்கு வசனமும், பாடல்களும் எழுதியுள்ளார். அவற்றுள் இப்படமும் ஒன்று. மிகக் காத்திரமான உரையாடலை எளிமையான சொற்கள் மூலம் அவர் எடுத்து வைப்பது, திரைப்படத்திற்கு மிகவும் வலு சேர்க்கிறது. 

பெண் என்பதால், தன் சித்திக்கு நேர்ந்த அவலத்திற்கு சமூகம்தான் காரணம். அதுவே, தன்னைத் தன் சித்தி கொடுமைப் படுத்தியதற்குக் காரணம் எனத் தங்கம் வைக்கும் வாதம் என்பது, பெண்களை மட்டுமே குடும்பத்தில் ஏற்படும் சண்டைக்கும், கொடுமைகளுக்கும் காரணம் என சொல்பவர்களுக்கு, அதன் அடிப்படை காரணம் என்ன என்பதை எடுத்துச் சொல்வதாக இருக்கிறது. மிக வலுவான வாதம். 

பொதுவாகப் பெண் தான் பெண்ணுக்கு எதிரி என்பதாகத் தான் கட்டமைக்கிறார்கள். ஒரு ஆண் நினைத்தால் தனது பெற்றோருடன் வாழலாம்; பெற்றோரைத் தன்னுடன் அழைத்து வந்து வாழலாம். உடன்பிறந்தோருக்கு உதவலாம்; என்றோ ஒரு நாள் உதவியவருக்கு உதவலாம். இவையெல்லாம் பெருமையாகக் கருதப்படும். ஆனால் பெண்ணால் இதை எல்லாம் செய்ய இயலுமா என்றால் கேள்விக்குறிதான். செய்தாலும் அதைக் கேலி செய்யும் சமுகம் இது.

அவ்வாறு தன்னிடம் அன்பு கொண்டு இருப்பவர்களுக்குப் பதிலன்பு செய்ய முடியாத, தனக்கு உதவியவர்களுக்குப் பதில் உதவி செய்ய இயலாத கட்டமைப்பு தான் சமூக கட்டமைப்பு. பெற்ற மகளை எட்ட வைக்கவேண்டும்; பெற்ற அம்மாவை எட்ட வைக்கவேண்டும்; உடன் பிறந்தவரே எட்டவைக்க வேண்டும் என நிர்பந்திக்கும் சமூகத்தில் அவரால் எப்படி, மருமகளை, மாமியாரை, கணவனின் உடன்பிறந்தவர்களை அன்பு செய்ய இயலும்? 

இவ்வாறான வாதத்தை எழுப்பிய திரைப்படமாக இதை நான் கருதுகிறேன்.

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.

Exit mobile version