Site icon Her Stories

மதன மோகினி

மதன மோகினி 1953ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். 

அங்கமுத்துவும் இன்னொரு ஆண் நடிகரும் இணைந்து, கோமாளி மாதிரி வேடம் போட்டு, ஒரு வண்டியில் வருகிறார்கள். ஒரு மரத்தில் ஆணி அறைந்து அதில் ஒவ்வொரு பதாகையாக மாட்டி மாட்டிக்  கழற்றுகிறார்கள். டைரக்டர் பெயர் பதாகையை மாட்டியதும்  அதே வண்டியில் ஏறிப் போகிறார்கள். அந்த காலகட்டத்தில் நாடகம், சர்க்கஸ் போன்றவற்றிற்கு இந்த வழிமுறை இருந்து இருக்கலாம். 

கதை கயர் கண்ணழகன்

வசனம் எம். பி. சிவம், கே வி பார்த்தசாரதி 

பாடல் எம். பி. சிவம்

சங்கீதம் கே. வி. மகாதேவன்

நடிகர்கள் 

பி. வி. நரசிம்ம பாரதி

பி. எஸ். வீரப்பா

சி. ஆர். ராஜகுமாரி

பொள்ளாச்சி கமலா

எம். எல். பதி – நவநீதம்

புளிமூட்டை – ஏழுமலை 

அங்கமுத்து –  கந்தாபாய் 

லூஸ்* – ஆறுமுகம்

*இந்த சொல் பயன்பாட்டில் எழுத்தாளருக்கோ, பதிப்பகத்தாருக்கோ உடன்பாடில்லை, அந்த காலகட்டத்தில் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட சொல் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளது

யசோதரா 

வேலைப்பா

கே ஆர் வீ ராவ் 

சரஸ்வதி 

பட்டம்மாள் 

பின்னணி இசை 

 பி. லீலா, ஜிக்கி, கோமளா, கானசரஸ்வதி, லட்சுமி, கஸ்தூரி, மகாதேவன், அப்பாதுரை

ப்ரோடக்ஷன் தஞ்சாவூர் மணி ஐயர் 

ஏ கே எஸ் பாபு 

டைரக்ஷன் எம். எல். பதி

மேற்பார்வை ஜே ஸின்ஹா 

கதைச்சுருக்கம்

மனைவியை இழந்த மன்னர் புலிக்கேசி, மனைவியின் சிலை முன்னால் நின்று கண்ணீர் வடிக்கிறார். மற்றொரு பக்கம் அரண்மனையில் பிள்ளையார் சதுர்த்தி விழாவினை அவரது இரட்டைத் தங்கைகள் மதனா மற்றும் மோகினி கொண்டாடுகின்றனர். இதே சதுர்த்தி அன்று தான் தன் மனைவி இறந்தார் என்பதால், மன்னர் நாத்திகம் பேசுகிறார். மதனா எதிர்க் கேள்வி கேட்டதால், அவரை நாடுகடத்தி விடுகிறார். நாட்டுக்கு வெளியே ஐயனார் கோவில் எல்லையில் கொண்டு போய் விடுகிறார்கள். 

இது குறித்து நாட்டிலும் மக்கள் மன்னர் மீது அதிருப்தி கொள்கிறார்கள். மனத்தில் வைத்து பூஜை செய்பவர்களை இவரால் என்ன செய்ய முடியும் எனப் பேசிக் கொள்கிறார்கள்.  

மதனாவிற்குக் காட்டில் வாழும் பெண் கொள்ளைக் கூட்டத்தினர் அடைக்கலம் கொடுக்கிறார்கள். இவரும் ஆண் வேடமிட்டுக்  கொள்ளையடிக்கத் தொடங்குகிறார். செல்வந்தர்களிடமிருந்து கொள்ளையடித்து ஏழைகளுக்கு வழங்கி உதவுகிறார்.

அந்த நாட்டின் இளவரசர், மாறுவேடத்தில் மதனாவைச் சந்தித்து, அரண்மனையில் உள்ள மூன்று விலைமதிப்பற்ற கற்கள் வைத்திருக்கும் ஒரு அறையின் வழியைக் கூறுகிறார். இருவரும் இணைந்து இரண்டு கற்களை மட்டும் திருடிப் பிடிபடுகிறார்கள். அரசன் மூன்று கற்கள் என்கிறார். அப்போது தன் வேடத்தைக் கலைத்த இளவரசர், மூன்றாவது கல்லை, திருட்டைக் கண்டுபிடித்தவர் தான் செய்திருக்க வேண்டும் என்கிறார். இவ்வாறு திருடிய பெரிய மனிதர் சிக்குகிறார்.

மதனாவும் இளவரசரும் காதலிக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் மதனா/ மோகினியின் அண்ணன் திருந்திவிடுகிறார். யானை, பிள்ளையாரின் வடிவம். யானை யாருக்கு மாலை போடுகிறதோ அவர் தான் மாப்பிள்ளை என முடிவு செய்கிறார். 

மதனா என நினைத்து மோகினியிடமும் இளவரசர் பழகுகிறார்.

ஒரு காலகட்டத்தில் மதனா மற்றும் இளவரசருக்கு உண்மை தெரியவருகிறது. ஏற்பட்ட சண்டையில் மதனா இறந்து விட்டார் என மோகினி நினைக்கிறார். உருட்டி விடப்பட்ட இளவரசர் மயக்கத்தில் விழுந்து கிடக்கிறார். யானை வந்து மாலை போடுகிறது. வீரர்கள் கொண்டு செல்கிறார்கள். திருமணமும் நடக்கிறது.  

இளவரசர், மனைவியை விட்டு வெளியேறுகிறார். ஊரின் எல்லையில் உள்ள ஐயனார் சிலை பேசுகிறது. “உன்னை எனக்கு உணவகத் தா” என்கிறது. இவருக்கு இப்போது மனைவியின் நினைவு வருகிறது. என் மனைவியிடம் சொல்லிவிட்டு வருகிறேன் எனச் சொல்கிறார். அந்த நேரத்தில் மனைவி அங்கு வருகிறார். கொள்ளைக்காரராக நடமாடிக் கொண்டு இருக்கும் மதனாவும், எல்லையின் அடுத்தப் பக்கம் வருகிறார்.

மனைவி, என்னைப் பூதம் தின்னட்டும் எனச் சொல்ல, இளவரசர் என்னைத் தின்னட்டும் எனச் சொல்ல, மதனா என்னைத் தின்னட்டும் எனச் சொல்ல, பூதமாக நடித்துக் கொண்டிருந்த அண்ணன் வெளிப்படுகிறார். சகோதரர்கள் இணைகிறார்கள். இளவரசருக்கு இப்போது இருவரும் மனைவியாகிறார்கள்.

வசனம் மற்றும் பாடல்களை எம்.பி. சிவம் அவர்கள் எழுதியிருக்கிறார்கள். இந்தப் பெயர் மதிலகத்துவீடு பரமசிவன் நாயர் என்ற பெயரின் சுருக்கம் எண்ணும்போது வியப்பாக இருந்தது. தமிழ் மற்றும் நாடகம் மீது கொண்டிருந்த ஈடுபாட்டால், பாலகாட்டில் இருந்து மதுரை பால கானா சபையில் சேர்ந்து இருக்கிறார். படிப்படியாக அங்கு எழுத்தாளர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பயணித்து இருக்கிறார். 

பின்னணி இசை  பி. லீலா, ஜிக்கி, கோமளா, கானசரஸ்வதி, லட்சுமி, கஸ்தூரி, மகாதேவன், அப்பாதுரை எனப் போடுகிறார்கள். இதில் வரும் மகாதேவன் இசையமைப்பாளர் KV மகாதேவன் அவர்கள் தான். 

“பாடவேண்டிய ஆண் பாடகர் வரவே இல்லை. அதனால்  படத்தில் கதாநாயகனுக்கான நான்கு பாடல்களையுமே கே.வி. மகாதேவனே பாடிவிட்டார்”,  என்கிறார், பி. ஜி. எஸ். மணியன் (திரை இசைத் திலகம் கே.வி. மகாதேவன் தொடரின் 7ஆம் பாகம்). 

அவர் பாடிய பாடல்கள் குறிப்பாக ‘வாழிய செந்தமிழ் தாயே’ பாடல் மிகவும் இனிமையாக இருக்கிறது.  செந்தமிழ் என்பதை ஷெந்தமிழ் என உச்சரிப்பது மட்டும் தமிழ் தெரியாதவர் போல் உள்ளது. 

வாழிய செந்தமிழ் தாயே

வாய்மையும் நீதியும் நேர்மையும் வேண்டும் 

அழிவே இல்லா செல்வமே 

ஆறுதே? ஆதாரமே- கலை 

 அழிவே இல்லா செல்வமே 

உயர்வு தாழ்வு பேதம் தீர்ந்தே யாவருமே ஒன்றாய் 

பாரில் வாழ வேண்டும் 

வான் மாரி பொழிய வேண்டும் நாடு 

வளமெல்லாம் நாளும் செழிப்பாக வேண்டும் 

அழிவே இல்லா செல்வமே 

பொம்பள தானே என்று எண்ண வேண்டாம் 

கேலி பண்ண வேண்டாம் 

பூச்சிக்கெல்லாம் அஞ்ச மாட்டோமுங்க 

துன்பப்படும் பாட்டாளி துட்ட சேர்க்கும் கூட்டாளி 

கும்பலைக் கொள்ளை போடும் கூட்டமுங்க 

பெண்ணைக் கண்டால் வாயாடி பேந்த முழிக்கிறாங்க 

அவங்களுக்கோர் பாடம் காட்டுவோமுங்க 

சொன்னத செய்யாமே விடமாட்டோம் 

பயப்பட மாட்டோம் 

சோம்பலுக்கு இடம் தரமாட்டோம் 

நல்லவங்களாட்டம் நடிச்சி நாட்டையே ஏய்க்கும் 

நயவஞ்சக கூட்டத்தை ஓட்டுவோம்க  

இல்லையென்று யாரும் ஏங்கிடாம 

அன்பு நீங்கிடாமே 

ஊக்கமுடன் நாட்டைக் காத்திடுவோம் 

எனக் கொள்ளைக்காரர்களுக்குப் பாடல் வேறு வைத்து இருக்கிறார்கள் 

ஆத்திகம் நாத்திகம் என உரையாடல்கள் பல படத்தில் உள்ளன. நாத்திகம் பேசிய அண்ணன் மனம் மாறும் போது, ‘அகர முதல எழுத்தெல்லாம்’ ‘தனக்குவமை இல்லாதான்’  என்ற இரண்டு திருக்குறள் பாக்களும் வருகின்றன. கடவுளாகத் திருவள்ளுவரைக் காட்டுகிறார்கள். இப்போது உள்ள திருவள்ளுவர் போன்று அல்லாமல் கமண்டலம் சுமந்த முனிவர் போல அவரைக் காட்டுகிறார்கள். 

உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையறப்

புளியிட்ட செம்பையும் போற்றுகி லேன்உயர் பொன்னெனவே   

ஒளியிட்ட தாள்இரண் டுள்ளிருந் தாள்வது உண்மையென்று

வெளியிட் டடைத்துவைத் தேன்இனி மேல்ஒன்றும் வேண்டிலனே

எனப் பட்டினத்தார் பாடலையும் பட்டினத்தாரையும் காட்டுகிறார்கள். வள்ளலாரும் வருகிறார்.

ஆதி முதலானவா என வரும் பிள்ளையார் சதுர்த்தி விழா ஆடல் மிகவும் அழகாக இருக்கிறது. நான் பார்த்தவரை இது தான் சினிமாவில் முதல் பிள்ளையார் சதுர்த்தி நடனம். 

“இளம் கன்று போலவே உள்ளம் துள்ளதே” என நாயகி யானையுடன் ஆடும் பாடல் இனிமையாக இருக்கிறது. 

வானவீதியிலே விளையாடும் வெண்ணிலாவே

விரைந்தோடி வா பறந்தோடி வா

என்ற பாடல் வெண்ணிலா பாடல் வரிசையில் வரும் மற்றொரு இனிமையான பாடல்.

நாயகியின் பெயர் ராஜகுமாரி என்றதும், T R ராஜகுமாரி என நினைக்க வேண்டாம். இருவரும் வேறானவர்கள். இந்தத் திரைப்படத்தின் நாயகி காஞ்சிபுரத்தைச் சார்ந்தவர்; பிற்காலத்தில் வெற்றிகரமான பின்னணி குரல் கொடுப்பவராக இருந்தார் என்கிறார் வரலாற்று ஆசிரியர் ராண்டார் கை. 

சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு இதுவே நாயகியாக முதல் படம். முதல் படத்திலேயே இரட்டை வேடம் கிடைத்துள்ளது. தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்குப் படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இயக்குனர் எம். எல். பதி அவர்களும் ஒரு பாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். வழக்கத்தை விடக் கொஞ்சம் மாறுபட்ட பாசம் கொண்ட, அதே நேரம் கோபமும் கொப்பளிக்கும் அண்ணனாக வரும் வீரப்பா நன்றாக நடித்து இருக்கிறார். 

கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவுவது என்பது பொதுவாக நாயகர்கள் செய்யும் வேலை. அதை நாயகிக்குக் கொடுத்தது, அவருக்கு இரட்டை வேடம் கொடுத்தது எல்லாம் மாறுபட்ட அணுகுமுறையாக இருந்தது. ஆனால் இறுதியில் இருவரும் இணைந்து ஒருவருக்கே மனைவி ஆகிறார்கள் என்னும்போது ஒருவனுக்கு ஒருத்தி அல்ல ஒருத்திக்கு ஒருவன் என்பதைத் தான் நிலைநாட்டுவதற்காக உள்ளது.

 

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. ஹெர் ஸ்டோரிஸில் இவர் தொடராக எழுதிய விளையாட்டு பற்றிய கட்டுரைகள் ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’ என்ற பெயரில் நூலாகவும், சினிமா கட்டுரைகள் ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்ற பெயரில் நூலாகவும் ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது.

Exit mobile version