பராசக்தி 1952ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த திரைப்படம். பாலசுந்தரம் அவர்கள் எழுதிய, புகழ்பெற்று நடந்து கொண்டு இருந்த நாடகம் இது.
ஒரு சமூகத்தின் பல தட்டுகளில் வாழும் மக்களைச் சுற்றி நடக்கும் மிக எளிமையான கதை இது. இந்த ‘பராசக்தி’, இவ்வளவு காலத்துக்குப் பிறகும் பேசப்படும் என அப்போது யாரும் நினைத்தார்களா எனத் தெரியவில்லை. படத்திலிருந்த கருத்துகளால், படத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவாக இருந்துள்ளன. எதிர்ப்புக்களையும் மீறித் திரைப்படம், 175 நாட்களுக்கு மேல் ஓடி, வெற்றி பெற்றுள்ளது. பலரின் திரைக் கலை வாழ்க்கையைத் தொடங்கிய ‘பராசக்தி’, தமிழ்த் திரைப்படங்களின் மைல் கற்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
முதலில் சொல்ல வேண்டியவர், நடிப்புப் பல்கலைக் கழகம் சிவாஜி கணேசன் அவர்கள். திராவிட கழக மாநாட்டில், பேரறிஞர் அண்ணா எழுதிய, ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் மாமன்னர் சிவாஜியாக நடித்தார் நாடக நடிகர், கணேசன். அவரின் நடிப்பைப் பாராட்டிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி’ கணேசன் என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே அவருக்கு நிலைத்து விட்டது. சொல்லப்போனால், கணேசன் என்றால் அவரை யாருக்கும் தெரியாது. ஆனால் சிவாஜி என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த அளவுக்கு சிவாஜி என்ற பெயர் நிலைத்து விட்டது.
அவருக்கும் பாடகி லதா மங்கேஷ்கர் அவர்களுக்கும் சகோதர உறவு இருந்தது. லதா மங்கேஷ்கர் அவர்கள், சிவாஜி கணேசன் அவர்கள் ‘மாமன்னன் சிவாஜியாக’ நடித்த புகைப்படத்தைக் காட்டி, அதை மாதிரியாக வைத்துப் பல சிலைகள் மராட்டிய அரசு நிறுவியது எனப் படித்ததாக நினைவு. ராமன் எத்தனை ராமனடி, பக்த துக்காராம் திரைப்படங்களில் அவர் ஏற்று நடித்த ‘மாமன்னர் சிவாஜி’ வீடியோவை என் மராட்டிய நண்பர்களிடம் காட்டிய போது அனைவரும் அசந்துவிட்டார்கள்.
இவ்வாறு பிற்காலத்தில் சிகரம் தொட்ட சிவாஜியை, ‘மிகவும் மெலிவாக இருக்கிறார்; இந்தப் படத்திற்கு உகந்த முகம் அல்ல’ என AVM நினைத்து, நிராகரித்து இருக்கிறார்கள். ஆனால், சிவாஜி மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர் பி. ஏ. பெருமாள் அவர்களை, அவர் ஏமாற்றவில்லை. பி. ஏ. பெருமாள் அவர்களின் விருப்பத்தின் பேரில்தான் சிவாஜி தக்க வைக்கப்பட்டு இருக்கிறார். இன்று வரை சிவாஜி குடும்பத்தில் இருந்து பி. ஏ. பெருமாள் அவர்களின் குடும்பத்துக்குப் பொங்கல் பரிசு செல்வதாகப் படித்து இருக்கிறேன்.
சொல்லப் போனால் சிவாஜியின் வயதிற்கேற்ற இளமைத் தோற்றம்தான் பலரையும் கவர்ந்து இருந்திருக்க வேண்டும். அப்போது பிரபலமாக இருந்த பல நாயகர்கள் 35 வயதைத் தாண்டியவர்களாகவே இருந்தார்கள். இந்த படத்துக்கு, சிவாஜியின் இளமைத் தோற்றம் பக்க பலமாக உள்ளது என்பது என் எண்ணம். முதல் படம் பலருக்கும் ஓடியிருக்கலாம்.
திரைப்படத்தில் எழுத்து போடும்போது, தயாரிப்பு பி. ஏ. பெருமாள் என தான் போடுகிறார்கள். ஆங்கில எழுத்து போடும்போது, Produced at AVM Studio என போடுகிறார்கள்.
‘சக்சஸ்’ என ஏவிஎம் ஸ்டூடியோவில் சிவாஜி சொல்லி நடித்த இடத்தில், ஏவிஎம் நிறுவனம் நினைவுச் சின்னம் வைத்துள்ளது. தங்கள் கணிப்பு தவறாக இருந்தாலும், சிவாஜி அவர்கள் தொட்ட உயரத்திற்கு ஏவிஎம் அவர்கள் கொடுக்கும் அங்கீகாரம் என்பது அவர்களின் பெருந்தன்மையைக் காட்டுகிறது. வேறு எந்த நடிகருக்கும் இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா எனத் தெரியவில்லை.
அடுத்த அறிமுகமாக வருபவர் SSR எனப்படும் எஸ்.எஸ். ராஜேந்திரன். 1951ஆம் ஆண்டு வெளிவந்த மணமகள் திரைப்படத்தில் SS ராஜேந்திரன் என பெயர் போடுகிறார்கள். ஆனால் அவர் நடித்த ஒரு பகுதிகூட திரைப்படத்தில் வெளிவரவில்லை. “எஸ்.எஸ்.ராஜேந்திரன் பிச்சைக்காரன் வேடத்தில் இப்படத்தின் (மணமகள்) மூலம் நடிகராக அறிமுகமானார்; ஆனால் அந்த வசனங்கள் மிகவும் புரட்சிகரமானதாக இருந்ததால், அவர் நடித்த பகுதிகளைத் தணிக்கை குழு அனுமதிக்கவில்லை” என்கிறார், திரைப்பட தயாரிப்பாளரும் எழுத்தாளருமான ஜி. தனஞ்செயன். அதனால், எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களின் கலைப்பயணத்தைத் தொடங்கி வைத்த திரைப்படமாகப் பராசக்தி உள்ளது. தமிழ்நாட்டு சட்டமன்றத்துக்குள் (1962) முதலில் நுழைந்த நடிகர் இவர்தான். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப்படி புராணப்படங்களில் நடிக்க மறுத்ததால், ‘இலட்சிய நடிகர்’ என அழைக்கப்படுகிறார்.
‘மர்மயோகி’ திரைப்படத்தில் சிறு வேடத்தில் வந்த பண்டரிபாய் அவர்களுக்கும் தமிழில் நாயகியாக இதுதான் முதல் படம். 1943ஆம் ஆண்டு கன்னட மொழித் திரைப்படமான ‘வாணி’ மூலம் திரைப்படத்தில் அறிமுகமான அவர், அன்றைய அனைத்துத் தென்னிந்திய நட்சத்திர நாயகர்களுடனும் இணையாக நடித்ததுடன், பிற்காலத்தில் பெரும்பாலும் அனைவருக்கும் அக்கா, அண்ணி, அம்மாவாகவும் வலம் வந்தவர். இவ்வாறாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படத்தில், சிறு பொம்மை மாதிரி என்ன அழகான தோற்றம்! மிகவும் அமைதியாக ஆனால் அழுத்தமாகக் கதாநாயகனுக்கு அறிவுரை சொல்லும் பாங்கு எல்லாம் அவரை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது.
பலரும், பராசக்தி மூலம்தான், கலைஞர் பிரபலமானார் என நினைக்கிறார்கள். ஆங்கிலத்தில் நேஷனல் பிக்சர்ஸ் வழங்கும் பராசக்தி; AVM Studios ஆல் தயாரிக்கப் பட்டது எனத் தொடங்கும் திரைப்படத்தில், அடுத்து திரைக்கதை வசனம் மு. கருணாநிதி எனக் கலைஞர் பெயரைத்தான் போடுகிறார்கள். அதாவது இந்த திரைப்படம் வருவதற்கு முன்பே அவர் முன்னணிக்கு வந்துவிட்டார். இதற்கும் முன்னும் பல திரைப்படங்களில் அவரது பெயரைத் தான் முதலில் போடுகிறார்கள். அந்த அளவுக்குப் பிரபலமாகத்தான் இருந்து இருக்கிறார். ஆனாலும் அவரின் புகழை இன்னொரு படிநிலைக்கு உயர்த்திய திரைப்படம் பராசக்தி என்றால் அது மிகையாகாது.
“இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல”, எனத் தொடங்கி “ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்”, என வரும் இந்த திரைப்படத்தின் நீதிமன்ற உரையாடல்தான் பின்னாளில் நடிகராக வந்து பல நடிகர்களின் நடிப்புத் திறமையைக் காட்டுவதற்கான அறிமுகமாக இருந்து இருக்கிறது. அதை மனப்பாடம் செய்து நடித்துக் காட்டியதாகப் பல பிரபல நடிகர்களும் சொல்லக் கேட்கலாம். இந்த அளவுக்குப் பிரபலமான வசனம் கொண்டத் தமிழ்த் திரைப்படம் வேறு இருக்கிறதா என்றால் கேள்விக்குறிதான். நீதிமன்றக் காட்சி எனச் சொன்னதும் சட்டென்று மனதில் வருவது, பராசக்திதான்!
இந்தத் திரைப்படம் வெளியான மறு ஆண்டு, அதாவது 1953இல் புயல் ஏற்பட்ட விருதுநகர் பகுதிக்கு நடிகர் திலகம் சென்று, தெருக்களில் நின்று பராசக்தி வசனம் பேசி, ரூபாய் 12,000 வசூலித்து நிவாரண நிதியாகக் கொடுத்து இருக்கிறார். கொழும்புவில் திரு.சங்கரன் என்பவர் மருத்துவமனை கட்ட வேண்டும் என நிதி கேட்டபோது, கொழும்பு ஜிந்துபட்டி என்ற இடத்திலிருந்த முருகன் டாக்கீஸில் ‘என் தங்கை’ நாடகம் (இது இதே ஆண்டில் எம் ஜி ஆர் நடித்து திரைப்படமாக வெளிவந்து இருந்தது) நடத்தி முடித்தபின் பராசக்தி வசனம் பேசி, ரூபாய் 25,000 வசூலித்துக் கொடுத்து இருக்கிறார் என்கிறார் ஆலங்குடி வெள்ளைச்சாமி.
பராசக்தி வசனம் தெரியாது என்றால் பள்ளியில் கேலி செய்வார்கள் என்கிறார் மருத்துவர் காந்தாராஜ். அந்த அளவிற்கு இந்தத் திரைப்படத்தின் வசனம் சென்று அடைந்து இருக்கிறது. வசனம் மட்டுமல்ல, திரைக்கதையுமே எந்த தொய்வும் இல்லாமல், அமைதியான நீரோடை போலச் செல்கிறது.
மூலக்கதை M S பாலசுந்தரம்.
இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு.
தயாரிப்பு பி. ஏ. பெருமாள்,
திரைக்கதை வசனம் மு. கருணாநிதி
இசை ஆர். சுதர்சனம்
பின்னணி இசை: சரசுவதி ஸ்டோர்ஸ் இசைக்குழு
பாடல்கள் அமரக்கவி பாரதியார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், மு. கருணாநிதி, கு மு அண்ணல் தங்கோ, உடுமலை நாராயண கவி, கே.பி.காமாட்சிசுந்தரன்
பின்னணிப் பாடல்கள் சிதம்பரம் சி.எஸ்.ஜெயராமன், எம்.எல்.வசந்தகுமாரி, டி.எஸ். பகவதி, எம்.எஸ். ராஜேஸ்வரி
எம்.எச். உசேன்
நடனமாதுகள்
குமாரி கமலா
டி. டி. குசலகுமாரி
நடிகர்கள்
சிவாஜி கணேசன் – குணசேகரன்
எஸ். வி. சகஸ்ரநாமம் – சந்திரசேகரன்
எஸ். எஸ். ராஜேந்திரன் – ஞானசேகரன்
துரைசாமி – மாணிக்கம்
டி. கே. இராமச்சந்திரன் – வேணு
கே. எம். நம்பிராஜன் – வெள்ளைசாமி
வெங்கடராமன் – தங்கப்பன்
வி. கே. ராமசாமி – நாராயணன்
கே. பி. காமாட்சி – பூசாரி
எம். என். கிருஷ்ணன் – குப்பன்
சக்திவேல் – வேலைக்காரர்
டி. வி. நாராயணசாமி – தம்பிதுரை
வி. கே. கார்த்திகேயன் – தமிழ்ப் பண்டிதர்
நடிகைகள்
ஸ்ரீரஞ்சனி – கல்யாணி
பண்டரிபாய் (பத்மினி) – விமலா
சுசீலா – சரசுவதி
கண்ணம்மா – ஜூலி
அங்கமுத்து – பழம் விற்பவர்
டி. பி. முத்துலட்சுமி – காந்தா
ஏ. எஸ். ஜெயா – பார்வதி
“1942ஆம் ஆண்டு உலகப்போரால், பர்மாவிலும், தமிழகத்திலும் பல குடும்பங்கள் பாதிக்கப் பட்டன. பல இடங்களில் பட்டினியும் பசியும் ஏற்பட்டன. இந்தப் படத்தில் காட்டப்படும் கஷ்ட நிலை அந்த வருஷ நிகழ்ச்சிகளையே குறிப்பன”, என்ற அறிமுக எழுத்துகள் முதலில் வருகின்றன.
வாழ்க வாழ்கவே
வளமார் எமது திராவிடநாடு
வாழ்க வாழ்கவே!
சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம்
அறிவும் திறலும் செறிந்த நாடு.
பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த
பண்ணிகர் தெலுங்கு துளுமலை யாளம்
கண்டை நிகர்கன் னடமெனும் மொழிகள்
கமழக் கலைகள் சிறந்த நாடு.
அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்துக் குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கு நன்செய்
முல்லைக்காடு மணக்கும் நாடு.
ஆற்றில் புனலின் ஊற்றில் கனியின்
சாற்றில் தென்றல் காற்றில் நல்ல
ஆற்றல் மறவர் செயலில் பெண்கள்
அழகில் கற்பில் உயர்ந்த நாடு.
என்னும் புதுகை கவிஞர் பாரதிதாசனாரின் திராவிட நாட்டுப் பண்ணுடன் திரைப்படம் தொடங்குகிறது. கல்யாணியின் வருங்கால கணவர் அந்த மேடை ஏறிப் பேசுவதாக அடுத்த காட்சி. பர்மா, இலங்கை, மலேசியா, ஆப்பிரிக்காவில் வாழும் தமிழர்கள் குறித்துப் பேசுகிறார். அந்த காலகட்டத்தின் அரசியலாக அது இருந்தது.
தந்தையுடன் மதுரையில் வசித்து வருகிறார் கல்யாணி. அவருடைய சகோதரர்களான சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் மூவரும், பர்மாவின் ரங்கூனில் வசிக்கின்றனர்.இவர்களில் சந்திரசேகரன் மட்டும் திருமணம் ஆனவர். பல ஆண்டுகளாக அவர்கள் இங்கும், இவர்கள் அங்கும் போகவில்லை; வரவில்லை. குழந்தையாக இருந்த கல்யாணி அவர்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவுக்கு வளர்ந்து விட்டார். இப்போது கல்யாணிக்குத் திருமணம் நிச்சயமாகிறது.
பர்மாவில், மூத்தவர் பாரிஸ்டராக இருக்க, செல்வச் செழிப்புடன் குடும்பம் வாழ்கிறது. இப்போது அனைவரும் தங்கையின் திருமணத்துக்குப் போக நினைக்கிறார்கள். போர்க்காலம் என்பதால், போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப் பட்டுள்ளது. சென்னைக்குக் கப்பலில் போக, ஒரு குடும்பத்துக்கு ஒரு டிக்கெட்தான் என்ற நிலையில் போர் நிலவரம் இருக்கிறது. அதனால், தங்கைக்கான பரிசுப் பொருட்களுடன் குணசேகரன் சென்னைக்குப் புறப்படுகிறார். ஆனால், போர் காரணமாக, கப்பல் பல மாதங்கள் தாமதமாகச் சென்னை வந்தடைகிறது. வந்த இடத்தில், குணசேகரன், ஒரு பெண்ணிடம் ஏமாந்து அனைத்து பொருள்களையும் இழந்து விடுகிறார். இப்போது மதுரை போவதற்குக்கூட காசில்லை. சென்னையில் பசியுடன் சுற்றிக் கொண்டு இருக்கிறார்.
போர் உச்சக்கட்டத்தை நெருங்க, ரங்கூனில் இருந்த குடும்பம், நடந்தே இந்தியாவுக்குப் புறப்படுகிறது. வழியில் நடந்த குண்டு வீச்சில், அனைவரும் காயமடைகிறார்கள். சிகிச்சை முகாமில் ஞானசேகரன் இல்லை. இங்கு இல்லை என்றால், இறந்து விட்டார் என்பது தான் பொருள் என்கிறார் அதிகாரி.
இவ்வேளையில் குழந்தை பெற்ற அன்றே விபத்து ஏற்பட்டு, கணவனும், விபத்தை நேரில் கண்ட அதிர்ச்சியில் தந்தையும் இறக்க, கடன் கொடுத்தோர் சொத்தைப் பிடுங்கிவிட, கல்யாணி தெருவிற்கு வந்து விடுகிறார்.
குணசேகரன், பசிக்கொடுமையிலிருந்து தப்பிக்க மனநிலை குன்றியவராக நடிக்கிறார். அப்போதுதான், ‘சக்ஸஸ் இன்று முதல் நானும் ஓர் ஏமாற்றுக்காரன்’ என்கிறார். சிவாஜியின் வாழ்வு நல்லபடி அமையவேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பகுதியைத் தான் முதலில் படமாக்கி இருக்கிறார்கள்.
அப்போது அவர் பாடும் உடுமலை நாராயண கவி அவர்களின் பாடல் மிகவும் பிரபலம்
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை யெல்லாம்
காசுமுன் செல்லாதடி – குதம்பாய்
எனத்தொடங்கும் இந்தப் பாடலில்
முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே – காசு
முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே
பிணத்தைக் கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே – பணப்
பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே – காசு
காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே
போன்ற வரிகள் மிகவும் பிரபலம். கொஞ்சம் துள்ளலிசையான வரிகள். பெரியவர்கள் பலர் இந்த வரிகளை ஹம் செய்வதை நான் பார்த்து இருக்கிறேன். இதில் குதம்பாய் என்பது குதம்பைச் சித்தரைக் குறிக்கிறது.
சுற்றி அலைந்த குணசேகரன், ஒரு வழியாக மதுரை வருகிறார். இங்கோ அப்பா இறந்து விட்டார். குடிசை வீட்டில் தங்கி இட்லி வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறார் கல்யாணி. அண்ணன் வந்து தங்களை அரவணைப்பார் என்ற கனவில் இருக்கும் தங்கையிடம், பிச்சைக்கார அண்ணனாக அறிமுகமாக விரும்பாத குணசேகரன், மனநிலை சரியில்லாதவர் போல நடித்து அவருக்குக் காவலாக இருக்கிறார். வாழ வழியில்லாத கல்யாணி எங்கோ சென்று விட்டார். இப்போது அவரைத் தேடி அலைகிறார் குணசேகரன்.
இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் குணசேகரன், ரயில் நிலையத்தில் விமலாவிடமிருந்து உணவை மட்டும் திருடிச் செல்கிறார். அவர் மனநிலை பிறழ்ந்தவர் என்பதை விமலா நம்பவில்லை. குணசேகரனுக்கு அறிவுரை சொல்கிறார். லட்சியவாதி காதலிக்கக் கூடாதா என தன்னைத்தானே நினைத்துக் கொள்கிறார். ஆம் அவர் குணசேகரனைக் காதலிக்கிறார்.
திருச்சியை வந்தடையும் சந்திரசேகரன் நீதிபதியாகிறார்.
குண்டு வீச்சில் பிழைத்த ஞானசேகரன் ஒரு காலை இழந்து பிச்சை எடுத்துப் பிழைக்கிறார். இவ்வாறாக எல்லோருமே ஆளுக்கொரு திசையில் இருக்கிறார்கள்.
இதற்கிடையில், கோவிலில் அடைக்கலம் புகும் கல்யாணியிடம் பூசாரியே தவறாக நடக்க முயல, கல்யாணி, குழந்தையை ஆற்றில் எறிந்து விட்டுத் தற்கொலைக்கு முயல்கிறார். ஆனால் காப்பாற்றப் படுகிறார். காவல்துறை அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. அங்கு, குணசேகரன் வந்து வாதாடுகிறார். அது தான், புகழ்பெற்றநீதிமன்றக் காட்சி.
“என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்திலிருந்த என் தங்கையைக் காண வந்தேன்… பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன்…
காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.
கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர்… இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான் – ‘பராசக்தி’யின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான்.
… உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி, ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்றுக் குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்?
…பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையைப் பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்…
இப்படி வசனங்கள் தீப்பொறி பறக்கின்றன.
கல்யாணி, குழந்தையை ஆற்றில் வீசிய போது, அது, விமலா பயணம் செய்த படகில் விழுகிறது. அதனால் கல்யாணி குழந்தையைக் கொலை செய்யவில்லை எனத் தெரியவருகிறது. விடுதலை ஆகிறார்.
செய்தி, ‘நம் நாடு’ பத்திரிகையில் வருகிறது. பெரிய அண்ணனிடம் கல்யாணியும் குணசேகரனும் சேருகிறார்கள். பிச்சைக்கார மாநாடு நடத்துவதற்கு நன்கொடை வேண்டும் என்று பிச்சை எடுத்துக் கொண்டு இருக்கும் ஞானசேகரன் அங்கு வருகிறார். வீட்டு வேலைக்காரர் அடையாளம் கண்டு கொள்கிறார். குடும்பம் இணைகிறது.
புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டுப் போறவரே
அந்த மர்மத்தை சொல்லி விட்டுப் போங்க
அன்புக் கயிறிது தான் அறுக்க யாராலும் ஆகாதையா
என முன்பு பண்டரிபாய் பாடியப் பாடலை சிவாஜி பாடிக்கொண்டே, பண்டரிபாய் சேலையில் கட்டியிருக்கும் கயிற்றை அவிழ்க்க இரண்டு பேரின் முகபாவனையும் அப்பப்பா, என்ன ஒரு இயல்பான குறும்பும் வெட்கமும்! இவ்வளவு நீளக்கயிறு வேண்டாம் மூன்று முடிச்சு போட என அண்ணி சொல்ல, ‘இரண்டு மாலை. ஒரு சொற்பொழிவாளர் இதோடு முடிந்தது’ என குணசேகரன் சொல்கிறார்.
இந்த வசனம் மிகவும் பிரபலமான வசனம். எனக்குத் தெரிந்த ஒருவர், ‘உன் மகளுக்கு என்ன சீர் செய்வாய்?’ எனக் கேட்டால், இதையே சொல்லுவார். பிற்காலத்தில் அப்பெண், காதலனுடன் சென்று விட்டார். பரவாயில்லை இரண்டு மாலை ஒரு சொற்பொழிவு இல்லாமல் கூட திருமணம் நடக்கலாம் என என் மகள் சொல்லிவிட்டாள் என அவர் சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது.
‘உங்கள் பங்களா எனக்குச் சரிப்பட்டு வராது’ என வெளியே செல்லும் ஞானசேகரனிடம், ‘பங்களா வாசிகள் பரதேசிகளாகக் கூடாது மாறாகப் பரதேசிகள் பங்களா வாசிகளாக மாற வேண்டும்’ என விமலா சொல்கிறார். அதை அண்ணனும் ஆமோதிக்கிறார் என்பதாகத் திரைப்படம் நிறைவு பெறுகிறது.
பாடல்கள் அனைத்தும் பிரபலமாக இருந்து இருக்கின்றன.
‘ஓ ரசிக்கும் சீமானே’ பாடல் இன்றும் பாட்டுப் போட்டிகளில் பாடும் அளவுக்குப் பிரபலமாக இருக்கிறது. பாடலை எழுதிய கே.பி. காமாட்சி சுந்தரம் தான் இந்தத் திரைப்படத்தின் திருப்புமுனையாக வரும் பராசக்தி கோவில் பூசாரியாக வந்தவர். பாடலைப் பாடியவர் எம்.எஸ். ராஜேஸ்வரி அம்மா. இவர் குழந்தைகளுக்கான பாடல்கள் பாடுவதில் பெரும் புகழ் பெற்று இருந்தார். 1947ஆம் ஆண்டு வெளியான ‘நாம் இருவர்’ திரைப்படத்தில் இவர் பாடிய இரு காந்தி பாடல்கள் பெரும் புகழைக் கொடுத்தன. இந்தப் படத்தின் பாடல்கள், பெரியவர்களுக்கும் பாடக்கூடியவர் என அவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன.
குமாரி கமலா ஆடிப்பாடும் இந்தப்பாடலில்கூட கவனித்துப் பார்த்தால் நாத்திகம்தான் மேலோங்கி நிற்கும்.
ஓ ரசிக்கும் சீமானே வா ஜொலிக்கும் உடையணிந்து
களிக்கும் நடனம் புரிவோம்…
அதை நினைக்கும் பொழுது மனம் இனிக்கும் விதத்தில் சுகம்
அளிக்கும் கலைகள் அறிவோம்..
கற்சிலையின் சித்திரமும் கண்டு..அதன்
கட்டழகிலே மயக்கம் கொண்டு…
வீண் கற்பனையெல்லாம் மனதில் அற்புதம் என்றே மகிழ்ந்து
விற்பனை செய்யாதே மதியே..
வானுலக வாசமதை நாடி-இன்ப
வாழ்க்கையை இழந்தவர்கள் கோடி
வெறும் ஆணவத்தினாலே பெரும்
ஞானியைப் போலே நினைத்து
வீணிலே அலைய வேண்டாம்
இந்தப்பாடல், கீழ் இருக்கும் இந்திப்பாடலின் மெட்டில் உருவாகி இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=RsP0MI0qcv0
இந்தப் பாடலும் கே.பி. காமாட்சி சுந்தரம் எழுதி, எம்.எஸ். ராஜேஸ்வரி பாடிய பாடல் தான். இரு பாடல்களுக்கும் தான் எவ்வளவு வேறுபாடு? பெண் மட்டுமே பாடும் பாடலும், இருவரும் இணைந்து ஆடும் டூயட் பாடலும் பார்க்கப் பார்க்க இனிமை.
புது பெண்ணின் மனதை தொட்டு
போறவரே உங்க எண்ணத்தை
சொல்லி விட்டு போங்க
இளம் மனசை தூண்டி விட்டு
போறவரே அந்த மர்மத்தை
சொல்லி விட்டு போங்க
மர்மத்தை சொல்லி விட்டு போங்க
உம்மை எண்ணி ஏங்கும் என்னிடத்தில்
சொல்லாமல் இருட்டு வேளையிலே
யாரும் காணாமலே
திருட்டு தனமாய் சத்தம் செய்யாமலே
சந்தித்து இருந்தது எல்லாம்
சிந்தித்து பாராமலே
என்னை சுற்றி பறந்த வண்டு
சும்மா நீ போகாதே
புத்தம் புது மலரின்
தேனே சுவைத்து போவாயே
இன்ப கனவை ஏனோ கலைக்கிறாய்
அன்புக் கயிறு இது தான்
அறுக்க யாராலும் ஆகாதய்யா
அடுத்து வருவது C.S.ஜெயராமன் அவர்கள் பாடிய உடுமலை நாராயண கவி இயற்றிய கா கா கா கா கா கா பாடல். இதுவும் மிகவும் புகழ்பெற்ற பாடல்தான். மேலும்
நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியார் பாடல், ‘பூமாலை புழுதி மண்மேலே’ என்ற கலைஞரின் பாடல் எனச் சிறந்த பாடல்களைக் கொண்ட திரைப்படம் இது.
கதை என எடுத்துக் கொண்டால், இரண்டாம் உலகப்போரில் ஒரு குடும்பம் சின்னாபின்னமானதும், ஓரிரு ஆண்டுகளில் மீண்டும் இணைந்ததும்தான் கதை. இதில் எந்த புரட்சியும் இல்லை. சொல்லப்போனால், இளம் வயதில் கணவனை இழந்த தங்கைக்குத் திருமணம் குறித்துச் சிந்திப்பது போலக்கூட கதையில் இல்லை. ஆனால் இன்றும் சீர்திருத்தம் என்றால் பராசக்தி எனச் சொல்லுமளவுக்கு இருக்கிறது என்றால், இயக்குநர், திரைக்கதை வசனம் எழுதியவர்களைத்தான் சொல்ல வேண்டும்.
பர்மா வீட்டில், மூத்தவர் மனைவியின் அப்பா என ஒரு புகைப்படத்தைக் காட்டுகிறார்கள். அது சர் பிட்டி தியாகராயர் புகைப்படம். வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர், நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவர். சென்னை தி நகர் அனைவருக்கும் தெரியும். அந்த ‘தி’என்பது இந்த மாமனிதர் ‘தியாகராயர்’ பெயரின் முதலெழுத்து. இதைவிடப்பெரிய பெயர்களை எல்லாம் அப்படியே சொல்லும் நாம், ஏனோ இந்தப்பெயரைச் சுருக்கோ சுருக்கு எனச் சுருக்கி விட்டோம்.
பையன் பிறந்தால் பன்னீர்செல்வம் என்றும் பெண் பிறந்தால், நாகம்மாள் (பெரியாரின் இறந்து போன மனைவி) என்றும் பெயர் வைக்க வேண்டும் எனக் கல்யாணியும் அவரது கணவரும் தீர்மானித்திருப்பதாக வருகிறது. பன்னீர்செல்வம், திருவையாறு கல்லூரியில், சமஸ்கிருதம் மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்த நிலையினை மாற்றி தமிழ்க் கல்வியைத் தொடங்கி, தமிழ் கற்போர், புலவர் பட்டம் பெறும் வழிசெய்தார். இரண்டாம் உலகப்போரின்போது ஆங்கில அரசின் போர்க்கால அமைச்சரவைக்கு ஆலோசகராகப் பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். இந்த பதவியேற்புக்காக இங்கிலாந்து போகும் வழியில் விமான விபத்தில் இறந்து, பெரியாரைக் கலங்கச் செய்தவர்.
புத்தகங்கள் என்றவுடன் பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, ரங்கோன் ராதா, லட்சிய வரலாறு என பாரதிதாசனார், அண்ணா இவர்கள் எழுதிய புத்தகங்களின் பெயர்களைச் சொல்கிறார்கள். இவற்றை எல்லாம் வைத்தவர்கள் இரட்டை இயக்குநர் கிருஷ்ணன்-பஞ்சு அவர்கள்தான். இருவரும் இணைந்து பெயரில் ஐம்பதுக்கும் மேற்பட்டத் திரைப்படங்களை இயக்கி உள்ளனர். பஞ்சு அவர்கள்தான் பஞ்சாபி என்ற பெயரில் படத்தொகுப்பும் செய்து இருக்கிறார். காட்சியமைப்பு என அனைத்திலும் மிகவும் சிரத்தை எடுத்து இருக்கிறார்கள். பர்மாவின் அழகு, நீதிபதியின் இருக்கைக்கு மேல் இருக்கும் பிரிட்டிஷ் இந்தியாவின் சின்னம் என பலவற்றை நமக்குத் தெரியப்படுத்துகிறார்கள்.
கலைஞர், தனது பேனா மூலம், அவர்களின் இயக்கத்துக்கு மேலும் வலுவூட்டி இருக்கிறார். திரைக்கதையும் உரையாடலும் அவரே எழுதியிருக்கிறார். ஒவ்வொரு பாத்திரத்தையும் அறிமுகம் செய்யும் விதத்திலேயே கலைஞர் திரைக்கதையில் வெற்றி பெற்று இருக்கிறார். அவ்வளவு நேர்த்தி, அப்படி ஒரு கோர்வையான கதை ஓட்டம். அப்பப்பா. பார்க்கப் பார்க்க வியப்பாக இருக்கிறது!
சிவாஜி, “சரிதான் போ! தமிழ் நாட்டின் முதல் குரலே நல்லா இருக்கே!” என்பார். அதை அப்படியே பிற்காலத்தில் ரஜினி நடித்த சிவாஜி திரைப்படத்தில் “எல்லாம் மாறிடுச்சு, ஆனா இது மட்டும் மாறவில்லை” என்பார். அப்படி மக்கள் மனதில் உறைந்து போன உரையாடல்கள் இவை.
சினிமாவா அது எனக்குப் பிடிக்கவே பிடிக்காது அதைக் க்ளோஸ் பண்ண ஒரு சங்கம் வைத்தால் நான் தான் அதற்குத் தலைவியாக இருப்பேன் என ஒரு பெண் சொல்லுவார். பரதநாட்டியம், டான்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் என அழைத்துச் செல்வார். அவர்தான் நாட்டியம் பார்க்க குணசேகரனை அழைத்துச் சென்று ஏமாற்றுவார். அப்போது மேட்டுக்குடி மக்கள் சினிமா பிடிக்காது என சொல்லிக் கொண்டு இருந்து இருக்கிறார்கள். அவர்களை நோக்கி வீசிய வாள் இது.
போலீஸ்காரர் வந்து, “நீ பிக்பாக்கெட் தானே?”, எனக் கேட்டதற்கு, “இல்ல எம்ட்டி பாக்கெட்” எனச் சொல்லி, இரண்டு பக்கமும் கையை விட்டு பாக்கெட்டை வெளியில் எடுத்துக் காட்டுவார். இம்மாதிரி வடிவேலு கட்டுவதை நாம் இப்போது பல ‘மீம்ஸ்’களில் பார்க்கலாம். இவ்வாறாக இந்தப் பல்கலைக் கழகங்களிடமிருந்து இன்றும் பாடம் கற்பவர்கள் பலர்.
அரசியல் வீச்சு எல்லாம் வேறுவிதமான விருந்து. “எல்லாம் என் அண்ணா தான்” என நாயகி சொல்வதாகட்டும், திரைப்படம் முழுவதும் திராவிட இயக்க முன்னோரைப் பயன்படுத்திக் கொண்டே இருக்கிறார். வாய்தான் நாயகி. மற்றபடி, தான் பெரியாருக்குச் சொல்ல வேண்டிய கருத்துக்களை அப்படியே நாயகி சொல்லும் விதமாக கலைஞர் வைத்து இருக்கிறார்.
அதிலும் குறிப்பாக ஒரு உரையாடல் வருகிறது பாருங்கள். “நீங்கள் தனியாகவா இருக்கிறீர்கள்?” என நாயகன் கேட்க, நாயகி, “அண்ணாவுடன் இருக்கிறேன்!” எனப் பதில் சொல்கிறார். “அப்படியானால் உங்கள் தந்தை?” எனக் கேட்க, “தந்தைக்கும் அண்ணாவுக்கும் சிறிது கருத்து வேறுபாடு. அதனால் தந்தையுடன் பிரிந்து இருக்கிறேன். ஆனாலும் தந்தை மீது மரியாதை உண்டு!” என அறிஞர் அண்ணாவுடன்தான் இருப்பதையும் ‘தந்தை’ பெரியாருடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் அவர் மீது மரியாதை இருக்கிறது; அண்ணா மாநாடு போயிருக்கிறார் இப்படி எல்லாம் கலைஞர், வசனங்களைப் புகுத்தி இருப்பது அவரின் திறமைக்குப் பெரிய எடுத்துக்காட்டு.
அகதிகள் முகாமில் அதிகாரி சாதி கேட்கும் போது, ‘அது எனக்கு இல்லை’ என்பது போன்ற வசனங்கள் என ஒன்று ஒன்றாய்ப் பிரித்துச் சொல்ல முடியாத அளவுக்கு, திரைப்படம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன.
மனநிலை சரியில்லாதவராக நடிக்கும் சிவாஜியின் சொற்களில் என்ன ஒரு ஆணித்தரம். மனநிலை சரியில்லாதவர் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என கடந்து விடுவார்கள் என அந்தப்போர்வையினுள் ஒளிந்து கொண்டுகூட, தான் சொல்ல வந்ததை சொல்லியிருக்கும் பாங்கு எல்லாம், கலைஞருக்கே உரியவை. அதே நேரம், இந்த இடத்தில் நடிகர் திலகத்தின் நடிப்பையும் இணைத்தே சொல்லியாகவேண்டும். தாவுவதாகட்டும்; குதிப்பதாகட்டும்; பாடுவதாகட்டும், அவருக்கு நிகர் எவருமில்லை என்பதை உணரலாம்.
இந்தத் திரைப்படத்தின் உரையாடலைத் தொடர்ச்சியாகப் பல காட்சிகள் பார்த்து,எழுதி, அதைப் புத்தகமாக ஒருவர் போட்டு இருக்கிறார். அதைப்பார்த்து பிற்காலத்தில் கலைஞர், மனோகரா திரைப்படத்திற்கான வசனத்தைத் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே, புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார் என்கிறார் எழுத்தாளர் கிருஷ்ணவேல்.
வழக்கமாகத் திரைப்படங்களில் நாயகன்தான் நாயகிக்குப் பாடம் எடுப்பார். பெண் என்றால் அப்படி இருக்க வேண்டும்; இப்படி இருக்க வேண்டும் என்று. இங்கு விமலா, குணசேகரனுக்கு எடுக்கும் பாடத்தைப் பாருங்கள்,
“அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை உன் கதையைக் கேட்ட உடன். அன்பு இருக்கிற அளவுக்கு உன்னிடத்தில் அறிவு இல்லை. இப்படிச் சொல்கிறேனே என்று ஆத்திரப்படாதே! உன் செல்வம் கொள்ளையடிக்கப் பட்ட போதே போயிருக்க வேண்டும் போலீசாரிடம்.
பிச்சைக்காரனாய்த் திரிந்தாய் வெட்கமில்லை. திருடனாய் மாறினாய் அப்போதும் வெட்கமில்லை. ஆனால் உன் ஏமாற்றத்தை வெளியில் சொல்ல வெட்கப் பட்டு இருக்கிறாய். வேடிக்கையான மனிதன்.
சமுதாயம் பிச்சைக்கார மடம் தான்; ஆனால் அதில் நீ திருவோடு இல்லாத பரதேசி. சமுதாயம் திருடர் குகை தான்; ஆனால், அதில் நீ கன்னக்கோல் பிடிக்கத் தெரியாத திருடன். சமுதாயத்தைக் காரசரமாகத் திட்டுகிறாயே யோசித்துப் பார்; உனக்குத் தெரியாமலேயே சமுதாயத்துடன் சேர்ந்து முட்டாளாயிருக்கிறாய் நீ…
இப்போது உன்னைக் குற்றம் சாட்டுகிறேன். நீ ஒரு சுயநலவாதி; உன் தங்கைக்காகச் சுருண்டு போகிறாயே தவிர நாட்டில் எத்தனை தங்கைகள் நலிந்து கிடக்கிறார்கள் என்று நினைத்தாவது பார்த்தாயா? அதற்காக உன் நாவு அசைந்தது உண்டா? உன் நெஞ்சு துடித்தது உண்டா?
அந்த சமுதாயத்திலே தான் நீயும் அங்கம். உன்னை ஏமாற்றிப் பணத்தைப் பறித்துக் கொண்டாளே அந்த நாடோடியை நான் பாராட்டுகிறேன். உன் கண்ணைத் திறந்தவள் அவள் தான். நீ ஏழையாக ஆக்கப் படாவிட்டால். ஏழைகளின் உலகை நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டாய். அப்படி ஒரு உலகம் இருப்பதாகவே தெரியாது. உன் உலகம் உல்லாசபுரியாக இருந்து இருக்கும். மாளிகையில் வீசும் தென்றலை அனுபவிப்பாய்! குடிசையிலே குமுறும் புயலைக் காண மாட்டாய். சமுதாயக் கோணல்களை வெறுக்கக் கற்றுக் கொண்டு இருக்கிறாய். ஆனால் எரிமலையைத் தண்ணீர் ஊற்றி அணைக்க முயலுகிறாய். மலைப்பாம்பை அடக்க மகுடி ஊதுகிறாய். சமுதாயப் புரட்சி ஆலகால விருட்சத்தின் கிளையை வெட்டுவது அல்ல. அதன் ஆணி வேரையே பேர்ப்பது தான். வெட்கப்படு, நீ மேற்கொண்ட வேலைகளுக்காக. வேதனை தீர்க்கும் மார்க்கம், நீ போடும் வேஷங்களல்ல. அதற்காக வெட்கப்படு. நாட்டைத் திட்டுவது உன் தங்கை நலத்துக்காக மட்டும் இருக்கக் கூடாது; அவதிப்படும் ஆயிரம் ஆயிரம் தங்கைகளுக்காக இருந்து இருக்க வேண்டும். அதற்காக வெட்கப்படு; வேதனைப்படு.
பாலைவனத்தைப் பூஞ்சோலை ஆக்க புதிய பாதை காண வேண்டும்; உன்னைப் போல் மண்ணை வாரி இறைத்துப் பயனில்லை.”
இவ்வாறு சமூகத்தைக் குறை சொல்லுவதை விட்டுவிட்டு, உன்னால் முடிந்ததை செய்; உன் தங்கைக்காக மட்டுமல்ல ஊரில் இருக்கும் தங்கைகளுக்காகவும் சிந்தி என நாயகனுக்கு அறிவுரை சொல்லும் நாயகி இருக்கும் திரைப்படமும் இமாலய வெற்றி பெரும் என்பதற்கு, இந்த திரைப்படமும் ஒரு எடுத்துக்காட்டு. இப்போது திரைப்படம் எடுக்கும் இயக்குநர்கள் சிந்திப்பார்களா?
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. ஹெர் ஸ்டோரிஸில் இவர் தொடராக எழுதிய விளையாட்டு பற்றிய கட்டுரைகள் ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’ என்ற பெயரில் நூலாகவும், சினிமா கட்டுரைகள் ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்ற பெயரில் நூலாகவும் ஹெர் ஸ்டோரிஸ் வெளியிட்டுள்ளது.