இந்த இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் கூட, பல பெண்களுக்கு தன் உடல் குறித்த விழிப்புணர்வு பெரும்பாலும் இருப்பதில்லை. அதற்கு பொதுச் சமுதாயமும் ஒரு வகையில் காரணமாய் அமைந்து விடுகிறது. மாதவிடாய் குறித்த விழிப்புணர்வே சிறிது காலமாகத்தான் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் பெண்ணின் குழந்தைப்பேறு குறித்த ஒரு தவறான புரிதல் இப்போது பெரும் பேசும்பொருளாக மாறியிருக்கிறது.
புதிதாக குழந்தை பெற்ற பெண்ணை பார்க்கச் செல்லும் அனைவரும் கட்டாயம் கேட்கின்ற முதல் கேள்வியே, ‘நார்மல் டெலிவரியா?’என்பதுதான். யோனிவழிப் பிரசவம் என்றால் ஒரு மன நிம்மதி. ‘சிசேரியன்’ என்று சொல்லிவிட்டால், நம்மை அவர்கள் பார்க்கின்ற பார்வையே ஏதோ பாவம் செய்து விட்டதைப் போல நம்மை கேள்விக் குறியாக்கும். ‘ஒழுங்கா வாக்கிங் போனயா? ஒழுங்கா தண்ணி குடிச்சியா ? தேமேன்னு உக்காந்துட்டே இருந்தியாக்கும்? நானெல்லாம்…’ என்று நூறு வருடக் கதையை சொற்பொழிவாற்ற ஆரம்பிப்பார்கள்.
இவர்கள் ஏன் இப்பொழுது இங்கே வந்தார்கள் என்று நமக்கு ஆகிவிடும். மருத்துவர் சொன்ன அனைத்து வழிமுறைகளையும் கடைப்பிடித்தும் கூட, சில நேரங்களில் ‘சுகப்பிரசவங்கள்’ பெண்களுக்கு கைகொடுப்பதில்லை. கருத்தரித்த பெண்ணின் உடல், வயிற்றில் இருக்கும் குழந்தையின் நலன் அல்லது இரண்டுமே ஒத்துழைக்காத நேரத்தில்தான் மருத்துவர்கள் சிசேரியன் பரிந்துரைக்கிறார்கள்.
முன்பெல்லாம் அறுவை சிகிச்சை செய்தால் வயிற்றில் உள்ள காயம் ஆறுவதற்கு காலம் பிடிக்கும். மூன்று மாதங்களுக்கு எழுந்து நடப்பது கூட சிரமம். ஆனால் இப்பொழுதெல்லாம் அறுவை சிகிச்சை முடிந்ததும், வயிற்றில் காயத்தின் மீது பேஸ்ட் போல ஒட்டி விடுகிறார்கள். நார்மல் டெலிவரி போலவே சிசேரியன் செய்த பெண்களையும் மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்து விடுகிறார்கள். குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்குள்ளாக அந்தப் பெண்கள் சகஜ நிலைக்கு வந்து விடுகிறார்கள்.
‘சிசேரியன் செய்யப்பட்ட குழந்தைக்கு மூளையில் பிரச்சனை வந்து விடும்’, என்பது போன்ற அரிய கண்டுபிடிப்புகளையெல்லாம் தமிழ்ச் சமுதாயம் வாட்சப் பல்கலைக்கழகத்தில் நடத்திக் கொண்டிருப்பது வேதனையான விசயம். சிசேரியன் செய்து கொண்டதால் அந்த பெண் பரிதாபத்துக்குரியவளாக மாறிப்போக, சமுதாயம் மட்டுமே காரணம். ஒரே ஒரு விரலைக் காட்டி, ‘ரெண்டில் ஒன்றைத் தொடு’, என்பது போல் சமூகம் சொல்லும் ‘நார்மல் டெலிவரி’ முடியாத நிலையில்தான் பெண்கள் சிசேரியனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது.
பெண் கர்ப்பம் தரித்ததும் நம் ஆண்கள் செய்வது எல்லாம் பூ வாங்கித் தருவது, ஐஸ்கிரீம் வாங்கித்தருவது, நடைபயணத்தில் கூட வருவது, வயிற்றில் காது வைத்து குழந்தையுடன் பேசுவது போன்ற சினிமாத்தனங்கள் மட்டும் தான். மேலை நாடுகளில் பெண் கருத்தரித்த சிறிது நாட்களிலேயே பர்த் பிளான் “Birth Plan” என்ற தேர்வு அட்டவணையை மருத்துவரின் உதவியோடு கருத்தரித்த பெண்ணும், அவர் இணையரும் இணைந்து தயாரிக்கிறார்கள்.
அதில் குழந்தைப் பிறப்புக்கு அவர்கள் தங்களை எப்படி தயார்படுத்திக் கொள்வது என்பதும், ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அதை களைவதற்கான மருத்துவ விளக்கமும் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது. குழந்தை பிறப்பிற்கு முன்னும், குழந்தை பிறக்கும் போதும், குழந்தை பிறந்த பின்னும் அவர்களின் விருப்பம் என்ன என்பதும் அதற்கு அவர்களின் மருத்துவமனையோ அல்லது வீட்டிலோ வசதிகள் இருக்கிறதா என்பது குறித்த தகவல்களும் தொகுத்து வைக்கப்படுகிறது.
‘நார்மல் டெலிவரியா? அல்லது சிசேரியனா?’ என்ற ஒற்றை விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவே பெரிய அக்கப்போராக இருக்கும் நம் பெண்களுக்கு இந்த பர்த் பிளானில் அவர்கள் எதையெல்லாம் தேந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தால், நாம் நிச்சயம் வாயடைத்துத்தான் போவோம்.
இரண்டாம் நிலையில் குழந்தைப் பேறின் போது அதனால் எழும் வலியையும், பயத்தையும் சமாளிக்க தண்டுவட மயக்கமருந்து, வலிக்கான மருந்துகள் (Epidural or Pain Medication) பற்றிய புரிதல் அளிக்கப்படுகிறது. நமக்கு செலுத்தப்படும் பிரசவ வலியை தூண்டக்கூடிய மருந்துகளைப் பற்றியும், நரம்புவழி செலுத்துவன போன்றவற்றை உபயோகப்படுத்துவது, பிரசவிக்கும் போது குழந்தையின் தலை வெளியே வர சிரமப்பட்டால், அப்போது பயன்படுத்தும் வாக்யூம் உதவியுடனான யோனிவழி குழந்தைபிறப்பு (Vaccum Assisted Vaginal Delivery) குறித்தும் பதிவு செய்யப்படுகிறது.
நம் நாட்டில் எத்தனை பெண்கள் தங்கள் நஞ்சுக்கொடியைப் (placenta) பார்த்திருக்கிறார்கள்? அதைப் பார்ப்பதோடு மட்டுமில்லாமல், தொப்புள் கொடியிலிருந்து வெளியேறும் முதல்நிலை உயிரணுக்கள் (stem cell) சேமிப்பு வேண்டுமா?, வேண்டுமெனில் அதைத் தங்கள் குடும்பத்துக்காக சேமிக்க வேண்டுமா, இல்லை தானமாக கொடுக்க விரும்புகிறார்களா? என்பது போன்ற தகவல்களையும் பதிவு செய்கிறார்கள்.
குழந்தை வெளியே வரும்போது எபிசியோட்டமி (Episiotomy) என்னும் யோனி வெட்டு (Vaginal Cut) வேண்டுமா, அல்லது பிறப்புறுப்பு தானே கிழியும் முறை வேண்டுமா என்பதைக் கூட அவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்பது எத்துனை முன்னேறிய அறிவார்ந்த மருத்துவம் சார்ந்த செயல்பாடுகள்! யோனி வழிப்பிரசவம்(Vaginal Delivery) அல்லது அறுவைசிகிச்சை இதில் எது வேண்டும் என்பதையும் அவர்களே முடிவெடுக்கலாம். ஆனால் இவ்வாறு தேர்ந்தெடுக்கும் அனைத்துமே குழந்தையின் நலனையும், தாயின் நலனையும் பொறுத்தும், பிரசவிக்கும் நேரத்தில் தேவை ஏற்பட்டால் மருத்துவர்களால் மாற்றக்கூடியதாகவும் இருக்கிறது.
இவை அனைத்துமே ஒப்பந்தங்களாக பதிவு செய்யப்படுவதில்லை. மாறாக விருப்பங்களாகவும், தேர்வுகளாகவும், தேவைகளாகவும் பதிவு செய்யப்படுகின்றன.
குழந்தை பிறந்ததும் அதை யார் முதலில் வாங்குவது, குழந்தை பிறந்தவுடன் தாய் அணைத்துக் கொள்ளலாமா(Skin to Skin touch) , தாய்ப்பால் புகட்டுவதில் உதவியாளர்கள் தேவைப்படுகிறார்களா, மிக முக்கியமாக தாய்ப்பால் புகட்ட விருப்பமா? இல்லை ஃபார்முலா பாலா என்பது போன்ற விருப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது.
தாய்ப்பால் சிறந்தது, அதில் தான் குழந்தைக்குத் தேவையான அனைத்து ஆற்றலும் கிடைக்கிறது என்பது உலகம் அறிந்ததே. உலகமே நன்கு அறிந்த ஒரு விசயத்தைக்கூட மருத்துவ உலகம் அந்தப் பெண்ணிற்கு தேர்வு செய்யும் வாய்ப்பாக கொடுக்கிறது என்றால், பெண்ணின் உடல் சார்ந்த முடிவுகள் முற்றிலும் அவளின் தனிப்பட்ட விருப்பமாக இருப்பதை மேற்குலகம் எவ்வளவு நன்றாக புரிந்து வைத்திருக்கிறது என்று தெரிகிறது.
கருவுற்ற பெண் தனக்கு யோனி வழிப் பிரசவம் அல்லது அறுவைசிகிச்சை முறை, இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற ஒற்றை வாதத்திற்கே வெறி கொண்டு தாக்கும் தமிழ்ச் சமுதாயத்தில், பெண்கள் மேற்கூறிய அனைத்து வசதிகளையும் பெறும் காலம் நம் கண்களுக்கு நிச்சயம் தெரியப்போவது இல்லை.
தாய்மையைப் புனிதமாக்கியதைப் போல் பெண்ணின் பிரசவத்தையும் புனிதமாக்கி, அதை பெண்ணின் மீது திணிக்கிறார்கள். எந்த பெண்ணுமே தன் குழந்தை நன்றாக பிறக்க வேண்டுமென்று தான் நினைக்கிறாள். இங்கு பெண்ணின் பிரசவம் குறித்த அனைத்து முடிவுகளையும் பெண்ணின் தாயோ அல்லது உறவினர்களோ தான் தீர்மானிக்கிறார்கள். ‘அவ வலி தாங்க மாட்டா டாக்டர். சிசேரியனே பண்ணிடுங்க’ என்று சொல்லும் பெற்றோர்கள் உண்டு. பெண்களும் அதுதான் சரி என்று அவர்களே சமாதானம் ஆகி விடுகிறார்கள். இன்னொருபுறம் ‘ எவ்வளவு நேரமானாலும் சரி, என் மகளுக்கு சுகப்பிரசவம் தான் செஞ்சாகணும் டாக்டர்’, என்று சொல்லும் பெற்றோரும் உண்டு.
யோனி வழிப்பிரசவம் வரம் அல்ல. அது தானே அமைவது. அதே போல் அறுவைசிகிக்சை பிரசவம் சாபமும் அல்ல. அது தேவையாக அமைவது. முதல் பிரசவம் சிசேரியன் ஆன பின்னும், இரண்டாவது குழந்தை யோனிவழிப்பிரசவம் ஆன பல பெண்கள் இங்கே உண்டு. அதற்கு பெண்கள் முதலில் தங்களின் உடல் குறித்த புரிதலுக்குள் வர வேண்டும். அவள் உடல் சார்ந்து முடிவெடுக்கும் அனைத்து உரிமையும் அவளிடம் நூறு சதவிகிதம் இருக்கிறது. ஆனால் இங்கு அவளைத்தவிர அனைவரும் அவள் உடலில் உரிமை கொண்டாடுகிறார்கள் என்பதே கசப்பான உண்மை. ஆணும் பெண்ணும் இணைந்து குழந்தைப்பேறை எதிர்கொள்ளும் ஆரோக்கியமான சூழல் உருவாக வேண்டும்.
கட்டுரையாளரின் பிற கட்டுரை:
படைப்பு
சாந்தி சண்முகம்
கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.