Site icon Her Stories

இன்று பில்கிஸ், நாளை நீங்களோ நானோ?

பில்கிஸ் பனோ வழக்கில் நீதிபதி பிவி.நாகரத்னா, நீதிபதி உஜ்ஜல் புயான் இருவரின் டிவிஷன் பெஞ்ச் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கில் எத்தனை முறை இப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க காத்திரமான கருத்துகளை நீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பதை அறிந்தால் இத்தீர்ப்பினால் பைசாப் பிரயோஜனம் இருக்கிறதா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

பில்கிஸ் பனோவைப் போல ஆயிரக்கணக்கான பெண்கள் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டனர். குற்றம் புரிந்தவர்கள் எந்தத் தண்டனையும் இன்றித் தப்பித்தனர். ஒன்றிரண்டு வழக்குகளே தீர்ப்பு வரை முன்னேறியது. உலகம் முழுக்க கவனம் பெற்றதாலேயே பில்கிஸ் வழக்கு தீர்ப்பு வரை வந்தது. நீதிமன்றத்தின் மீது பாதிக்கப்பட்டோர் நம்பிக்கை கொள்ள ஒரு வாய்ப்பாக, ஒரு குறியீடாகத்தான் இத்தீர்ப்பு கருதப்படுகிறது. அதற்காக பில்கிஸ் கடந்து வந்த பாதை, அவர் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமையைவிட வலி மிகுந்தது. இவ்வழக்கு தொடர்பாகக் குறிப்பிடத்தக்க சில தேதிகள், சம்பவங்கள் மட்டும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

2002, மார்ச் 3குஜராத்தில் ஹிந்து மத கலவரக்காரர்களால் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் சிக்கினர் பில்கிஸ் பனோ மற்றும் அவரது குடும்பத்தினர்.   ஹிந்து மத கலவரக்காரர்கள் பில்கிஸ் பனோ வசித்த அதே ஊரிலும் பக்கத்து ஊரிலும் வசித்தவர்கள். அவருக்கு நன்கு அறிமுகமான நபர்கள்.   கர்ப்பமாக இருந்த பில்கிஸ் மற்றும் இரு உறவினர் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட அனைவரின் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது.   14 பேர் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டனர். அனைவரும் இறந்ததாக நினைத்து அடுத்த குற்றத்தைச் செய்யக் கிளம்பிச்சென்றது அந்த கும்பல். சில மணி நேரத்துக்குப் பிறகு மயக்கம் தெளிந்த பில்கிஸ் பனோவும் இன்னும் இரண்டு சிறுவர்களும் உயிர் பிழைத்தனர்.
2002 மார்ச் 4குற்றம் செய்தவர்கள் பெயர்களைக் குறிப்பிட்டு லிம்கெடா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் பில்கிஸ் பனோ. எஃப்.ஐ.ஆரில் பெயர்கள் இடம்பெறவில்லை. எந்த முன்னேற்றமும் இன்றி கிடப்பில் போடப்பட்டது.
2003 ஏப்ரல்தேசிய மனித உரிமை ஆணையத்தின் உதவியைக் கோரினார் பில்கிஸ் பனோ. மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே மூலம் சுப்ரீம் கோர்ட்டுக்கு வழக்கை எடுத்துச் செல்ல உதவினார்கள். பின்னர் பில்கிஸ் பனோவும் மனுதாரராக இணைந்து கொண்டார்.   சிபிஐ விசாரணை, குஜராத் காவல்துறை அதிகாரிகள் மீது விசாரணையும் நடவடிக்கையும், நட்டஈடு வழங்குதல் ஆகியவை மனுவின் கோரிக்கைகள்
2003 செப்டம்பர் 25குஜராத் அரசின் சிஐடி விசாரணையை நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். மாநில அரசின் சிஐடி அதிகாரிகள் பில்கிஸ் பனோவையும் அவர் உறவினர்களையும் விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இந்த உத்தரவு வெளியானது
2003 டிசம்பர் 18சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.
2004 ஜனவரி 22சிபிஐ 12 பேரைக் கைது செய்தது.
2004 பிப்ரவரி 11குஜராத் காவல்துறை சட்ட மீறல்களில் ஈடுபட்டதையும் உடந்தையாக இருந்ததையும் சுட்டிக்காட்டும் இடைக்கால அறிக்கையைத் தாக்கல் செய்தது சிபிஐ.
2004 மார்ச் 2காவல்துறை அதிகாரிகளை சிபிஐ கைது செய்தது.
2004 ஏப்ரல் 19காவல்துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள் உட்பட 20 பேர் மீது சார்ஜ் ஷீட் தாக்கல் செய்தது சிபிஐ.
2004 ஜூலைஆதாரங்கள் கலைக்கப்படுவதால் குஜராத்துக்கு வெளியில் வழக்கை நடத்த கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தார் பில்கிஸ் பனோ.    மிரட்டல்களால் 20 முறை தங்கும் வீட்டினை மாற்றும் நிலைக்கு ஆளானார் பில்கிஸ்.
2004 ஆகஸ்ட் 6மும்பை நீதிமன்றத்துக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட்.
2005 ஜனவரி 13டாக்டர் சங்கீதா ப்ரசாத் மருத்துவரீதியாகவும் மனரீதியாகவும் தகுதியற்றவர் என அறிவிக்கப்பட்டதால், அவரைத் தவிர்த்து மற்ற 19 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2005 பிப்ரவரி 22தன்னைப் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி, தன் மகளைக் கொன்று, மேலும் தன் குடும்ப உறுப்பினர்களையும் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கிக் கொன்ற 12 பேரை அடையாளம் காட்டினார் பில்கிஸ்.
2005 மே 5-1520 நாட்கள் பில்கிஸ் பனோவிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
2006 ஆகஸ்ட்மீண்டும் பில்கிஸ் பனோவிடம் குறுக்கு விசாரணை நடந்தது.
2007 மார்ச்வழக்கின் சாட்சிகள் 73 பேர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டனர்.
2007 ஏப்ரல்-ஜூன்எதிர்தரப்பு சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர்
2008 ஜனவரி 18பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் புரிந்தவர்கள் என மும்பை செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பளித்தது. ஒருவர் இறந்து விட்டார். 5 காவல் துறை அதிகாரிகள், 2 மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டனர். மீதம் உள்ள 11 பேரும் குற்றம்புரிந்தவர்கள் எனத் தீர்ப்பு வந்தது.   ஜஸ்வந்த் நைய், கோவிந்த் நைய், சைலேஷ் பட், ராதேஷ்யாம் பகவான் தாஸ் ஷா, பிபின் சந்த்ரா ஜோஷி, கேசர்பாய் வொஹானியா, ப்ரதீப் மோர்தியா, பகபாய் வொஹானியா, ராஜுபாய் சோனி, மித்தேஷ் பட் மற்றும் ரமேஷ் சந்தனா ஆகியோர் அந்த 11 பேர்.   கொலைகளுக்காக ஆயுள் தண்டனையும், பாலியல் வன்கொடுமைக்காகக் கூடுதலாக 10 வருடங்கள் சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.   3 முக்கியக் குற்றவாளிகள் – பில்கிஸ் பனோவைப் பாலியல் வன்கொடுமை செய்த ஜஸ்வந்த் நைய், கோவிந்த் நைய், பில்கிஸ் பனோவின் மூன்று வயதுக் குழந்தையைக் கொன்ற சைலேஷ் பட் – ஆகியோருக்கு மரண தண்டனை கோரியிருந்தது சிபிஐ. இவை திட்டமிட்ட குற்றம் என்பதை ஏற்க முடியாது எனச் சொல்லி மரண தண்டனை கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்.
 குற்றவாளிகள் எனத் தீர்ப்பு பெற்ற 11 பேரும் அதை எதிர்த்து முறையிட்டார்கள்.
 7 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்தும், 3 பேருக்கு அதிக தண்டனை கேட்டும் சிபிஐ மேல் முறையீடு செய்தது.
2017 மே 4மும்பை உயர் நீதிமன்றம்  ஏற்கெனவே குற்றவாளிகள் எனத் தீர்ப்பான 11 பேருடன் விடுவிக்கப்பட்ட 7 பேரையும் சேர்த்து அனைவரும் குற்றவாளிகள்தாம் எனத் தீர்ப்பளித்தது.   கடமையைச் சரியாகச் செய்யாதது, ஆதாரங்களை அழித்தது ஆகிய குற்றங்களுக்காகச் சில ஆயிரங்கள் அபராதம், சில வருடங்கள் சிறை, பணி நீக்கம், இடைநீக்கம், பதவி குறைப்பு ஆகிய தண்டனைகளைப் பெற்றார்கள் இந்த அரசு அதிகாரிகள்.
2019 ஏப்ரல்பாதிக்கப்பட்ட பில்கிஸ் பனோவுக்கு 50 லட்சம் பணம், அவர் விரும்பும் வேலை மற்றும் தங்குமிடம் வழங்க நீதிமன்றம் ஆணையிட்டது.
2020 ஜூன்பரோல் விடுமுறையில் இருந்த,  குற்றவாளி மித்தேஷ் சிமன்லால் பட் மீது பெண்ணிடம் அத்துமீறியதாக கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டு, எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. (செக்ஷன் 354இ 504இ 506)   அதன் பிறகும் அவருக்கு பரோல் விடுமுறைகள் தொடர்ந்து வழங்கப்பட்டன.
 குற்றவாளிகள் சிறையில் இருந்த காலத்தில் குறைந்தபட்டசம் 1000 நாட்களில் இருந்து 1500 நாட்கள் வரை விடுப்பு எடுத்து சுதந்திரமாக வெளியில் இருந்தனர். பல முறை, விடுப்பு காலம் முடிந்த பிறகு தாமதமாகச் சிறைக்குத் திரும்பியதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
2020 அக்டோபர்குஜராத் அரசு நீதிமன்றம் உத்தரவிட்டபடி பில்கிஸ் பனோவுக்கு வேலையும் வீடும் வழங்காதது ஏன் எனக் கேள்வி எழுப்பியது நீதிமன்றம்.   குற்றவாளிகளுக்கு ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்படுவதைக் கண்டித்தது.
2022 மே 15குற்றவாளிகளில் ஒருவர் முன்கூட்டிய விடுதலை கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
2022 ஜூன் 28குஜராத் அரசாங்கம் உள்துறைக்கு 11 குற்றவாளிகளை விடுவிக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதியது.
2022 ஜூலை 11உள்துறை அமைச்சகம் 11 குற்றவாளிகளை விடுவிக்க அனுமதித்தது.   பிரிவு 435 CrPC மூலம் தனக்கிருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது அரசு. காரணம் எதுவும் அனுமதிக் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.
 11 குற்றவாளிகளையும் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து, காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி வரவேற்றனர் பிஜேபி கட்சிக்காரர்களும் மகளிரணியினரும்.

விடுவிக்கப் பரிந்துரைத்தவர்களில் ஒருவரான பிஜேபி எம்எல்ஏ சிகே ரால்ஜி, “அவர்கள் நல் மதிப்புடைய பிராமணர்கள்” என்று விளக்கமளித்தார்.
 “நான் நீதி அமைப்புகளின் மீது நம்பிக்கை வைத்தேன். இந்த விடுதலை என் அமைதியைக் குலைத்து நீதி அமைப்புகளின் மீதான நம்பிக்கையை அசைத்திருக்கிறது. எனது வருத்தமும் அலைபாயும் நம்பிக்கையும் எனக்கு மட்டுமின்றி நீதிமன்றங்களில் போராடும் ஒவ்வொரு பெண்ணுக்குமானது” எனத் தனது அறிக்கையில் தெரிவித்தார் பில்கிஸ் பனோ.
2022 டிசம்பர் 13குற்றவாளிகளின் விடுதலையை மறு ஆய்வு செய்யக் கோரிய பில்கிஸ் பனோவின் மனு உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.   முன்னதாக நீதிபதி பேலா திரிவேதி வழக்கை விசாரிப்பதில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டார்.
2023 மார்ச்உச்ச நீதிமன்றம் பில்கிஸ் பனோவின் மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
2023 ஏப்ரல்“ஒரு கொலை செய்பவர்களையும் படுபாதகங்கள் செய்பவர்களையும் சமமாக நடத்துவது ஆப்பிள்களையும் ஆரஞ்சையும் ஒப்பிடுவது போல.”   “எதன் அடிப்படையில் குஜராத் அரசு இந்த முடிவை எடுத்தது? இவர்கள் செய்தது சமூகத்துக்கு எதிரான பயங்கரமான குற்றம்.”   “இன்று பில்கிஸ். ஆனால், நாளை யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்களோ அல்லது நானோகூட இருக்கலாம்” என்றெல்லாம் கருத்துகளைத் தெரிவித்து குஜராத் அரசை அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னது உச்ச நீதிமன்றம்.
2024 ஜனவரி 8முன்கூட்டி விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து இரண்டு வாரங்களில் பதினோரு பேரையும் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட பிறகும் அரசுப் பணியில் இருந்தோர் பணப் பலன் பெற்றனர். சிறையில் அடைக்கப்பட்ட மற்ற குற்றவாளிகள் வருடக்கணக்கில் பரோல் கிடைத்து வெளியில் சுற்றிக்கொண்டிருந்தனர். பரோலில் குற்றம் செய்து வழக்கும் பதிவானது. குற்றவாளிகள் சுதந்தரமாக இருக்க, பில்கிஸ் பனோ இருபதுக்கும் மேல் வீடு மாற வேண்டியிருந்தது. தொடர் அச்சுறுத்தலில் அவர் வாழ்க்கை இருக்கிறது. 2022ஆம் ஆண்டு குற்றவாளிகள் விடுதலையான தீர்ப்பு வந்த பிறகு, மீண்டும் ஒருமுறை பாதுகாப்பான இடத்துக்கு இடம்பெயர்ந்தார் பில்கிஸ்.

குஜராத் அரசுக்கு விடுவிப்பதற்கான அதிகாரம் இல்லை என்று தீர்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். வழக்கு விசாரணை பாரபட்சத்துடன் நடந்தது என்பதாலேயே வேறு மாநிலத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. தீர்ப்பு வந்தபிறகு அதை மாற்றி எழுதும் அதிகாரத்தை குஜராத் அரசு எடுத்துக்கொண்டது. குஜராத் அரசு குற்றவாளிகளுக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளது என்றும் மோசடி என்றும் கடுமையான வார்த்தைகளை நீதிபதிகள் பயன்படுத்தினர்.

சட்ட விதிகளை மீற நீதிமன்றத்தின் ஆணையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்கு எடுத்துக்காட்டாக இவ்வழக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர். (This is a classic case where the order of this court was used to violate the rule of law by granting remission.)

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டத்தில் இதை இறுதித் தீர்ப்பாக எண்ண இயலவில்லை. ஏனெனில் குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்றே இத்தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசு சார்ப்பில் இப்படி ஒரு முடிவு பிற்காலத்தில் எடுக்கப்படாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் அடுத்து வரும் தேர்தலில் சிறைக்குச் சென்றிருக்கும் குற்றவாளிகளின் படத்தைக் காட்டி ஓட்டு கேட்டு அனுதாப அலையில் பிஜேபி ஓட்டுகளை அள்ளினாலும் வியப்பதற்கில்லை. குற்றவாளிகளின் பக்கம் நிற்பவர்கள், “இன்று பில்கிஸ் பனோவுக்கு நடந்தது நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று நீதிபதிகள் இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கும்போது தெரிவித்ததை எண்ணிப் பார்க்கவேண்டும்.

குற்றவாளிகளின் விடுதலை ரத்து செய்யப்பட்டுள்ள இத்தீர்ப்பு மீண்டுமொரு இடைக்கால ஆறுதலாக இல்லாமல் இருக்கட்டும்.

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இன்பாக்ஸ் இம்சைகளைச் சமாளிப்பது எப்படி?’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. ‘உலரா ரத்தம்’ என்கிற அரசியல் வரலாறு நூல், சிறார்களுக்கு , ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ ஆகிய நூல்களும் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன.

Exit mobile version