Site icon Her Stories

திருச்செந்தூர்க் கோயில் நிர்வாகத்தை நம்பூரிகள் எப்போது கைப்பற்றினர்?

https://www.facebook.com/photo/?fbid=7904094039640611&set=a.6443768549006508

‘நம்பூரி’, ஆ. அரிசுந்தர மணி அவர்களுக்குக் கண்டனம்

திருக்குறள் முதலான சங்க இலக்கியங்களிலும் மற்றைய தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களிலும், ‘தாமரை, சங்கு, சக்கரம்’ போன்ற சொற்களைப் பார்த்தாலே, ஆரிய புராணக் கதைகளை அச்சொற்களின்  பொருள்களாக எழுதி வைத்துக் கொள்ளும் உரையாசிரியர்களின் இந்துத்துவப் பற்று, பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தொடர்கதையாகும்.

ஆரியப் பண்பாடு தென்னிந்தியப் பண்பாட்டுடன் கலக்கத் தொடங்கிய  காலம் முதல் ஆரியத்துவத்தின் மீது நம்பிக்கை கொண்ட உரையாசிரியர்கள் பலரும் இந்த அயோக்கியத்தனத்தை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதே போல், அய்யா வைகுண்டரின் வாழ்நாள் ஆவணமான அகிலத்திரட்டு அம்மானையின் சொற்களுக்கும் வரிகளுக்கும் தவறான பொருளைக் கற்பிக்கும் பணியில் இறங்கியுள்ளது இந்துத்துவம்.

ஆ. அரிசுந்தர மணி அவர்கள், தான் எழுதியுள்ள ‘அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை’ என்ற புத்தகத்தில், அகிலத்திரட்டில் பயன்படுத்தபடுகிற ‘பிராமணர்’*  முதலான சொற்களைக் குறிப்பிட்டு,  ‘இவ்விதமாக வரும் சொற்கள், பெரும்பாலும் பிறப்பால் வரும் சாதிகளைக் குறிப்பவை அல்ல’ என்று சொல்கிறார்.1 அதிலும் ‘சாணார்* என்ற சொல் சாதிப்பெயர் அல்ல’ என்று கூசாமல் எழுதுவதெல்லாம், அக்கிரமத்தின் உச்சம்.2

*அக்காலத்திய மூல நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லே இங்கு எடுத்தாளப்பட்டுள்ளது. இந்த சொல் பயன்பாட்டில் கட்டுரையாளருக்கோ, பதிப்பாளருக்கோ உடன்பாடில்லை.

எனவே அகிலத்திரட்டின் பல வரிகளுக்கும் சொற்களுக்கும் வரலாற்றுப் பூர்வமான உண்மைப் பொருளை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் தற்காலத்தில் ஏற்பட்டுள்ளது. முதலில் ‘நம்பூரி’ என்ற சொல்லுக்குப் பொருள் ‘நம்பூதிரி பார்ப்பனர்’ என்ற சாதியின் பெயர்தான் என்பதை நிரூபிக்க சில சான்றுகளை தருகின்றேன்.

கேரள தேச வரலாறு என்ற புத்தகம், பார்ப்பனர்கள் நம்பி, நம்பிடி, நம்பூரி, நம்பியாதிரி என்று, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பெயர்களில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது. நம்பூதிரி என்று குறிப்பிடாமல் ‘நம்பூரி’ என்றுதான் குறிப்பிடுகிறது. புத்தகம் வெளிவந்த ஆண்டு 1960.3

அம்பேத்கரின் நூல் தொகுப்பு தொகுதி 7ல், ‘பார்ப்பனீயம் ஆட்சி செய்வதற்கும், மன்னனைக் கொல்வதற்கும் பார்ப்பனனுக்குள்ள உரிமையும்’ என்ற கட்டுரைத் தலைப்பின் கீழ், ‘நம்பூரி’ என்றால் ‘நம்பூதிரி பார்ப்பனர்’ என்று அடைப்புக்குறியிட்டு காட்டியிருக்கிறார்.4 அம்பேத்கர் தன் வாழ்நாளில் எழுதியது இது (1891 – 1956).

1820ஆம் ஆண்டில் எழுதப்பெற்ற, ஏநாமக்கல் வரலாறைச் சொல்லும், ஓலைச்சுவடி நம்பூதிரி பார்ப்பனர்களை, ‘நம்பூரி’ என்றும் ‘நம்பூதிரி’ என்றும் இரு சொற்களாலும் குறிக்கிறது. இந்த ஓலைச்சுவடி மலையாளம் கலந்தத் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ‘நம்பூதிரி’ என்பதும் ‘நம்பூரி’ என்பதும், ‘நம்பூதிரி பார்ப்பனர்கள்’ என்ற ஒரே பொருள் தரும் இருவேறு சொற்கள் என்பது நிரூபணமாகிறது.5

திருச்செந்தூர் கோவிலில் பூசை நிர்வாகம் செய்யும் உரிமையை ஆதிமுதலில் பெற்றிருந்தவர்கள் முக்காணியர்கள் என்று முன்னரே அறிந்திருந்தோம். முக்காணியர்கள் வட மொழியில் ‘திரிசுதந்திரர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். கொல்லம் ஆண்டு 1020ஆம் ஆண்டு, மகர மாதம் 15ஆம் நாள், திருச்செந்தூர் முருகன் கோயிலின் அறங்காவலராக இருந்த குமாரசாமி என்பவர்,  திரிசுதந்திரர்களுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார். திருச்செந்தூர் கோவிலின் மூலக்கோவில் பூசை செய்யும் உரிமையை, முக்காணியர்களிடம் இருந்து வாங்கி, நம்பூதிரி பார்ப்பனர்களுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் அது. அவ்வாறு திரிசுதந்திரர்களுடன் குமாரசாமி செய்து கொண்ட ஒப்பந்தத்திலும் நம்பூதிரி பார்ப்பனர்கள் ‘நம்பூரிகள்’ என்றே குறிப்பிடப்படுகின்றனர். கொல்லம் ஆண்டு 1020ஆம் ஆண்டு என்பது பொ.ஆ.பி 1845ஆம் ஆண்டாகும்.6

கொல்லம் ஆண்டு உருவான பொது ஆழி வருடம் பொ.ஆ.பி. 825 (கி.பி. 825) ஆகும். பொ.ஆ.பி. 825ஆம் ஆண்டு உதய மார்த்தாண்ட வர்மா என்ற அரசர் கொல்லம் ஆண்டை பயன்படுத்தத் தொடங்கினார். பொ.ஆ.பி. 825ஆம் ஆண்டினை, கொல்லம் ஒன்றாம் ஆண்டு என்று அறிமுகப்படுத்தினார்.7 கொல்லம் ஆண்டு மகர மாதம் என்பது தை மாதமாகும். தை மாதம் என்பது ஆங்கில மாதங்களில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களாகும். எனில் ஆங்கில ஆண்டில், அடுத்த ஆண்டு பிறந்து விடுவதாகக் கொள்ள வேண்டும். எனவே, 1020+824=1844 என்றாலும், பொ.ஆ.பி. 1845 என்றே கொள்ள வேண்டும். ‘திருச்செந்தூர் கோவில் வரலாறு’ புத்தகம் எழுதிய ஆ. கல்யாண சுந்தரம் அவர்கள் கொல்லம் 1020 ஐ பொ.ஆ,பி. 1844 என்று குறிப்பிட்டிருப்பது இந்த குழப்பத்தின் காரணமாகவேயன்றி வேறில்லை.

ஆங்கில நூல்கள் பலவும் நம்பூதிரி பார்ப்பனர்களை நம்பூரி (nampuri) என்றே குறிப்பிடுகிறது. எனவே, பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ‘நம்பூரி’ என்ற சொல் நம்பூதிரி பார்ப்பனர்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட ‘பேச்சு வழக்குச்சொல்’ என்பது தெளிவாகிறது.

இவ்வாறிருக்க ஆ. அரிசுந்தர மணி அவர்கள், நம்பூரி என்றால் ‘வயதுமுதிர்ந்தவன்’ என்று பொருள் எழுதியிருக்கிறார்.8 அவரின் இந்த செய்கை, அந்தக் குறிப்பிட்ட நம்பூதிரி சாதியினர், இரு நூற்றாண்டுகளாக சாதிய மற்றும் அதிகார வர்க்க ஒடுக்குமுறை வெறியாட்டம் நிகழ்த்திய வரலாற்றை அழிக்க முயற்சிப்பதாக உள்ளது. நல்லதொரு எழுத்தாளருக்கு இது அழகல்ல! எனவே, அகிலத்திரட்டில் வருகின்ற, நம்பூரி என்ற சொல்லின் பொருளைத் திரிபு செய்ததற்காக, ஆ. அரிசுந்தர மணி அவர்களுக்கு எனது கண்டனங்களைப் பதிவு செய்து கொள்கிறேன். கண்டனங்கள் இன்னும் தொடரும்.

நக்கன்

அய்யா வைகுண்டர் திருச்செந்தூர் முருகன் கோவிலிலிருந்து தெட்சணம் புறப்பட்ட போது, அவரிடம் கேள்வி கேட்ட முனிவர் நக்கன். நக்கன் முனிவரிடம்தான் வைகுண்டர், நம்பூதிரிகளின் அக்கிரமங்களையும், தேவதாசிகளின் முறைகேடுகளையும் விளக்கிக் கூறுவதாக அகிலத்திரட்டு அம்மானை சொல்கிறது.

‘தண்டமிழ்சேர் செந்தூர்த் தலத்தைவிட்டு போவதற்கு

நிற்கின்ற போது நிலையுள்ள மாமுனிவன்

‘நக்கன்’ மருகனுட நல்ல அடியில் விழுந்து’9 என்னும் அகிலத்திரட்டு வரிகளை கவனிக்க!

‘நக்கன்’ என்றால் ஆடையில்லாதவன், நிர்வாணமானவன் என்று பொருள். ‘நக்கன் மாமுனிவன்’ என்று அகிலத்திரட்டு குறிப்பிடுகிறது. நக்கன் என்பதற்கு, தளிச்சேரி தேவதாசி பெண்கள், சிவபெருமான் என்றெல்லாம் பொருள் சொன்னாலும், ஆடையணியாத திகம்பர (சமண) முனிவர் என்ற பொருளே பொருத்தமானதாகும்.

இங்கு அகிலத்திரட்டு குறிப்பிடுவதும் சமண முனிவரவர்களில் ஒருவராக இருக்கலாம். அல்லது நக்கன் என்ற பெயர் கொண்ட ஒரு முனிவராகவும் இருக்கலாம்.

பதினெட்டு பத்தொன்பதாம்  நூற்றாண்டுகளில், திருச்செந்தூர் முருகன் கோவிலில், திகம்பரர் எனப்படும் சமண முனிவர்கள் இருந்திருக்கலாம். இது ஆராயப்பட வேண்டிய ஒன்று. உதய மார்த்தாண்ட வர்மா என்ற மன்னர் நாகர்கோயிலில் இருந்த சமணக் கோவில்களுக்கு உதவி வழங்கியதாக, ‘The travancore manual, vol II’  என்ற புத்தகம் குறிப்பிடுவதை இங்கு பொருத்திப் பார்ப்பது அவசியம்.

அகிலத்திரட்டின் காலமும், நம்பூரி திரிசுதந்திரர் ஒப்பந்தமும்

அய்யா வைகுண்டர் சொல்லி, அரிகோபால சீடர், அகிலத்திரட்டு அம்மானை எழுதத் தொடங்கியது கொல்லம் ஆண்டு 1016, கார்த்திகை 27 ஆகும்.

‘தோத்திரம் என்று சாமிதனை தொழுது

ராத்திரித் தூக்கம் நான் வைத்திருக்கையிலே

ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில்

கண்டானைக் கண்டேன் கார்த்திகை மாதமதில்

தெய்தி இருபத்தியேழில் சிறந்த வெள்ளி நாளையிலே

சுருதியுடன் நித்திரையில் சுபக்கியான இலக்கமதில்

நாதன் என்னருகில் நலமாய் வந்திருந்து

சீதமுடன் எழுப்பிச் செப்பினாரே காரணத்தை

காப்பில் ஓர் சீர் கனிவாய் மிகத்திறந்து

தாற்பரியமாக சாற்றினார்’10 என்ற அகிலத்திரட்டின் வரிகளே அகிலத்திரட்டு எழுதத் தொடங்கிய நாளுக்கான சான்று.

அகிலத்திரட்டு அம்மானை எழுதிய காலம் என்று சொல்லாமல், எழுதத் தொடங்கப்பட்ட காலம் என்று சொல்லக் காரணம் உண்டு. அதன் கொல்லம் ஆண்டு 1016, கார்த்திகை மாதம்  என்பது 1840ஆம் ஆண்டு ஆகும். ஆனால் 1851ஆம் ஆண்டு நிகழ்ந்த அய்யா வைகுண்டரின் இறப்பு சம்பவத்தை, தேதி முதலான தகவல்களுடன் விளக்கி கூறுகின்றது அகிலத்திரட்டு அம்மானை.

‘திருந்து புகழ் மாயன் சிறந்த ஓர் ஆயிரத்து

ஓர் இருபத்து ஆறாம் ஓங்கும் இடபமதில்

சீர் இயல்பாயுள்ள தெய்தி இருபத்து ஒன்றில்

பூர்வ பட்சம் பூசம் நட்சத்திரத்தில்

வாறுடைய சோம வாரம் பொழுது ஊர்ந்து

பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில்

விண்கண்டு வைகுண்டர் விமானமது ஏறினாரே

மெய்கொண்ட சான்றோர் மேல் ஆசை உள்ளிருத்தி

கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ

வைகுண்டம் ஏக வழி கொண்டார் அம்மானை’11 என்ற அகிலத்திரட்டின் வரிகளில், கொல்லம் ஆண்டு 1026, கொல்லம் மாதம் இடபத்தில் (ரிஷபம்),(தமிழ் மாதம் வைகாசி) 21ஆம் தேதி, பூசம் நட்சத்திரத்தில், திங்கள் கிழமையன்று (சோம வாரம்) நண்பகல் பன்னிரெண்டு மணிக்கு அய்யா வைகுண்டர், வைகுண்டம் ஏகினார் (உயிர் துறந்தார்) என்ற தகவல் காணக்கிடைக்கின்றது. அதன்படி அய்யா வைகுண்டர் இறந்த வருடம் பொ.ஆ.பி.1851 ஆகும் (2.6.1851).

அதாவது அகிலத்திரட்டு எழுதப்பட்ட, 1840ஆம் ஆண்டுக்கு பிறகு பதினொரு ஆண்டுகள் கழித்து, அய்யா வைகுண்டர் இறந்த செய்தியும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் பற்றிய செய்திகளும் அகிலத்திரட்டு அம்மானையில் காணக்கிடைக்கின்றன.12

ஆன்மீக நிறுவனங்களை நிர்வகித்துக் கொண்டிருப்பவர்களும் அதில் வாடிக்கையாளர்களாக உள்ள பக்தர், பக்தைகளும் இவையெல்லாம் ஞானதிருஷ்டியால் எழுதப்பட்டது என்று நம்பக்கூடும். ஆனால் அவர்களின் நம்பிக்கை பகுத்தறிவுக்கு ஒவ்வாததாகவே உள்ளது. எனவே, அகிலத்திரட்டு அம்மானை எழுதத் தொடங்கப்பட்ட ஆண்டு பொ.ஆ.பி. 1840. எழுதி முடிக்கப்பட்ட ஆண்டு பற்றிய தகவல்கள் இல்லை.

திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகத்துக்காக, நம்பூதிரி பார்ப்பனர்கள் திரிசுதந்திரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஆண்டு பொ.ஆ.பி. 1845. முத்துக்குட்டி திருச்செந்தூர் கோவிலில் விஞ்சை (இறையறிவு) பெற்று, அய்யா வைகுண்டர் என்று தனது பெயரை மாற்றிக் கொண்ட ஆண்டு கொல்லம் ஆண்டு 1008, மாசி மாதம். இது பொ.ஆ.பி.1833ஆம் வருடம் ஆகும்.

அகிலத்திரட்டு அம்மானையில் திருச்செந்தூர் கோயிலில் விஞ்சை பெற்று, சாமிதோப்புக்கு (தெட்சணம்) புறப்படும்போதுதான், அய்யா வைகுண்டர் நக்கன் முனிவரிடம், நம்பூதிரி பார்ப்பனர்களின் அட்டூழியங்களைப் பற்றி விவரித்து சொல்லும் காட்சி வருகின்றது. எனில் திருச்செந்தூர் கோவிலில் நம்பூதிரிகளின் அட்டூழியங்கள் 1833ஆம் ஆண்டுக்கு முன்பே நிகழ்ந்துள்ளன என்பது தெளிவு.

அதாவது, அகிலத்திரட்டு அம்மானை எழுத ஆரம்பிக்கப்பட்ட 1840ஆம் ஆண்டுக்கு முன்னரே! நம்பூதிரி திரிசுதந்திரர் ஒப்பந்தம் எழுதப்பட்ட 1845ஆம் ஆண்டுக்கு முன்னரே!

அப்படியானால் சட்டப்பூர்வமான யாதொரு ஒப்பந்தமும் அனுமதியும் இல்லாமல்தான் நம்பூதிரி பார்ப்பனர்கள் திருச்செந்தூர் கோவிலின் நிர்வாக அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர் என்பது தெளிவு. ஆ.கல்யாண சுந்தரனார் அவர்களின் கூற்றுப்படி, மார்த்தாண்ட வர்மா மன்னர், அல்லது நாயக்கர் மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் நம்பூதிரிகள் கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்றி இருக்கலாம்.13

நாயக்கர் ஆட்சியிலும், மதுரை நாயக்கருக்கு கப்பம் கட்டிக் கொண்டே, திருவிதாங்கூர் மன்னர்களே நாஞ்சில் நாட்டை நேரடி ஆட்சி செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1547ஆம் ஆண்டு முதல் திருவிதாங்கூர் மன்னர்கள் நாயக்க மன்னர்களுக்கு திறை (வரி) செலுத்தி வந்தனர். இது 1696ஆம் ஆண்டு வரை நீடித்தது.14 1828 முதல் 1846ஆம் ஆண்டு வரை, திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த மன்னர் ராம வர்மா சுவாதித் திருநாள் மகாராஜா ஆவார். அதாவது நம்பூதிரி திரிசுதந்திரர் ஒப்பந்தம் எழுதப்பட்டது சுவாதித் திருநாள் மன்னரின் ஆட்சிக்காலத்தில் ஆகும்.15

தொடரும்…

தரவுகள்

  1. அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை, உரை ஆசிரியர்: ஆ. அரிசுந்தர மணி, அய்யா வைகுண்டர் நற்பணி மன்றம், அம்பலப்பதி. மூன்றாம் பதிப்பு 2016. 1* – பக்கம் எண் 280, 2* – பக்கம் எண் 109, 8* – பக்கம் எண் 456.
  2. அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் பதிப்பு 178, [2011] இரண்டாம் பதிப்பு, 9* – பக்கம் எண் 283, 10* – பக்கம் எண் 13, 11* – பக்கம் எண் 432, 12* பக்கம் எண் 434.
  3. பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, 9* – பக்கம் எண் 225, 10* – பக்கம் எண் 4, 11*- பக்கம் எண் 344, 345, 12* – பக்கம் எண் 346, 347.
  4. கேரள தேச வரலாறு, T.CHANDRASEKARAN M.A, LT., 1960, 3*- பக்கம் எண் 8.
  5. நா.விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 1, இரண்டாம் பதிப்பு, 2006,
  6. நா.விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 1, இரண்டாம் பதிப்பு, 2006, 10* – பக்கம் எண் 414.
  7. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 7, 2008 ஆம் ஆண்டின் பதிப்பு, 4*- பக்கம் எண் 244
  8. பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 17, 1999 ஆம் ஆண்டின் பதிப்பு, 4*- பக்கம் எண் 81
  9. தமிழ்நாடு அரசு கீழ்த்திசைச் சுவடிகள் வரிசை எண் 75, தமிழக ஊர் வரலாறுகள், பதிப்பாசிரியர்: டாக்டர் எஸ்.சௌந்தரபாண்டியன், 1995, 5*- பக்கம் எண் 80 & 81
  10. திருச்செந்தூர் முருகன் கோயில் வரலாறு, பேராசிரியர், டாக்டர். ந. கலியாண சுந்தரம், M.A, P.hd, தமிழ்த்துறை தலைவர், ஆதித்தனார் கல்லூரி, திருச்செந்தூர், முதல் பதிப்பு, ஆகஸ்டு, 1980, 6* – பக்கம் எண் 67, 13* – பக்கம் எண் 66.
  11. The Travancore state manual, part II, sadasyatilaka T.K VELU PILLAI, B.A,BL, Published by the government of Travancore, 1940, 7* – page no: 51, 15* – page no: 545.
  12. தென்னாட்டுப் போர்க்களங்கள், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையார், முதல் பதிப்பு, மே 2011, சுபா பதிப்பகம், 14* – பக்கம் எண் 411, 436.

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

Exit mobile version