Site icon Her Stories

சனாதனம், சிறுதெய்வ உயிர்ப்பலிக்கு எதிரான அருள்நூல் – 2

வெறுப்புப் பிரச்சாரத்தின் எதிரொலி

எல்லாம் அந்த கால்டுவெல் ஃபாதரால் வந்த வினை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவளாக,

“பெரும்பாலான சாமியாடிகள், சாமியாடி குறி சொல்லும் போது, எசக்கி தொந்தரவு, சொள்ள மாடன் ஏவல்னு சொல்றதால, சிறு தெய்வ வழிபாடுகளெல்லாம் பேய் வழிபாடா தெரியுது. ஒருவேளை சாமியாடிகள் ஜீசஸ் தொந்தரவு, அல்லாவை ஏவல் செஞ்சுருக்காவ, சிவனும் விஷ்ணுவும் ரத்த வெலி கேட்காவன்னெல்லாம் சொன்னா, அந்த சாமிங்க வழிபாடுகளும் பேய் வழிபாடுகளாத்தான் தெரியும். இதெல்லாம் தங்களின் பிழைப்புக்காக, சாமியாடுற மனிதர்கள் உருவாக்கி வைத்திருக்கும் கட்டமைப்பு” என்றேன் நான். அந்த கிறிஸ்தவத் தோழிக்கு முகத்தில் ஈயாடவில்லை.

கிறிஸ்தவ தோழிக்கு நாட்டு தெய்வங்களின் மீது வெறுப்போ அவநம்பிக்கையோ கிடையாது. நாட்டு தெய்வக்கோயில்களை கடந்து செல்லும்போது அவளும் சிலுவை போட்டுக் கொள்கிறாள். கோயில் கொடை விழாவின்  சமபந்தியில் கலந்து கொண்டு வில்லுப்பாட்டு ரசிக்கிறாள்.

பிரம்மதேசம் கோயில் கொடை விழா, நன்றி: https://www.dinamalar.com/templenews/120719

இந்து மதத்தின் அய்யா வழியை பின்பற்றும் தோழிக்கு ஏசுவின் மீது கோபமோ அவநம்பிக்கையோ கிடையாது. சர்ச் வாசலை கடந்து செல்லும் போது கன்னத்தில் போட்டுக் கொள்கிறாள். தேவாலயத் திருவிழாவில் நடக்கும் கிடாக்கறி விருந்தில் கலந்து கொண்டு, சப்பரம் வருவதை வேடிக்கை பார்க்கிறாள். இரு தோழிகளுமே தங்கள் வீட்டில் யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் மசூதிக்கு சென்று கயிறு கட்டிக் கொள்கிறார்கள்.

என்றாலும் அவர்கள் மதத்துவேஷத்துடன் பேசிக் கொள்வதற்கு காரணம், கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் அரங்கேறிக் கொண்டிருக்கும் மதவெறுப்பு விஷப்பிரச்சார அரசியலே ஆகும் என்பது எனது கணிப்பு. பாசிச தத்துவத்தை மக்களிடையே பரப்புவதில் பாரதிய ஜனதா கட்சி பெற்றிருக்கும் விஷ வெற்றிக்கு இது போன்ற சிறு சிறு சம்பவங்களை சாட்சிகளாகச் சொல்லலாம்.

இவ்வாறாக சிறு தெய்வ வழிபாட்டை பேய் வழிபாடு என்று சொல்வது, மத வெறுப்பு அரசியலை உருவாக்குவதற்கான கருவியாகவே பாசிசவாதிகளால்  பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்து மதத்தின் நாட்டு தெய்வங்களை பேய் என்று சொல்லும் அகிலத்திரட்டை சனாதனத்தில் இணைத்துக் கொள்ள அரும்பாடு பட்டு வருகின்றது இந்துத்துவம்!

ஆக மொத்தத்தில், நாட்டு தெய்வ வழிபாட்டின் மீது அய்யா வைகுண்டர் தொடுக்கும் எதிர்ப்பு எத்தனை ஆழமானது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.

‘சந்தன வாடை சாந்து சவ்வாது புஷ்பம்

எந்தம் திருமகனே எள்ளளவும் பாராதே

வாடை பூ தீபம் மகிழாக் கலியுகத்தில்’14 என்ற அகிலத்திரட்டின் வரிகள்,

‘ஆடுகிடாய் கோழிபன்றி ஆயனுக்கு வேண்டாங்காண்

மேளதாளம் குரவைத்தொனி வேண்டாங்காண் ஈசனுக்கு’15 என்ற அருள் நூலின் வரிகள்,

அகிலத்திரட்டின் திருவாசகம் மூன்றில்

‘இன்று முதல் அவர் நிச்சித்து இருக்கிற நாள் வரையும் பூசைப்புனக்காரம் சேவித்தல், அர்ச்சனை, ஆராடு, நீராடுதல், தீபரணை, சாந்தி, காளாஞ்சி, கைவிளக்கு, காவடி, காணிக்கை, தெரு முகூர்த்தம், கோபுர முகூர்த்தம், திருநாள் குரவை, குளாங்கூட்டம், கொலுவாரபாரம், ஆயுதம், அச்சுநடை, ஆனைநடை, அலங்காரம், மஞ்சணைக் குளிநீராட்டல், இதுமுதலுள்ள நன்மை சுபசோபனம் வரையும் அவர் நிச்சயித்த நாள்வரையும் அவர்க்கானது அல்லவே, ஆனதினால் நீங்கள் இதுவெல்லாம் இதுநாளுக்ககம் வீணில் செலவிடாமலும் விறுதாவில் நரகில் விழாமலும் இருக்கக் கடவுளிது நாராயண வைகுண்டசாமி திருவாக்குபதேசக் கருணையினால் மாமுனி எழுதி அயச்ச வாசகம்’16.

என்ற அகிலத்திரட்டின் வாசகம், மேற்கூறிய அனைத்தும் வழிநெடுக நாட்டு தெய்வ வழிபாட்டையும், அவ்வழிபாட்டை அடிப்படையாகக் கொண்ட பில்லி, சூனியம், ஏவல், குறி சொல்லி பிழைத்தல் போன்ற மூட நம்பிக்கைகளையும் ஆணித்தரமாக எதிர்க்கிறது.

ஆரியக் கலாச்சாரக் கலப்புக்கு முந்தைய தமிழர்களின் வாழ்வியலில் இறை வழிபாட்டிற்கான தடயங்கள் இல்லை என்பதை கால்டுவெல் 1849ஆம் ஆண்டிலேயே பதிவு செய்தார்.17 அவரின் கருத்துக்கு கீழடி இன்று சான்றாக நிற்கிறது. கீழடி ஆகழ்வாராய்ச்சியில் இறை நம்பிக்கை சார்ந்த எந்த ஒரு பொருளும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.18

எனவே நாட்டு தெய்வ வழிபாட்டின் கதைகள், வில்லுப்பாட்டுகள் போன்றவற்றில் கலந்துள்ள ஆரிய புராணக் கதைகள், பிற்காலத்தில் பண்பாட்டுவழி புகுத்தப்பட்டவையே என்பது தெளிவு.

நடைமுறையிலும் அய்யா வழியை ஏற்றுக் கொண்ட மக்கள், சுடலை, இசக்கி, வாதை போன்ற நாட்டு தெய்வ வழிபாடுகளை தவிர்த்து விடவேண்டும் என்பதே அய்யா வைகுண்டர் வகுத்த மரபு. இறந்தவர்களுக்கு சமாதி கட்டுதல், குரு பூஜை நடத்துதல் போன்றவையும் அய்யா வழி மரபுக்கு முற்றிலும் எதிரானவை. இன்றைய காலத்திலும் அய்யா வழியை தீவிரமாகக் கடைபிடிக்கும் அய்யா வழியினர், இந்துக்களின் பெருந்தெய்வக் கோவில்களுக்கும் சிறு தெய்வ கோவில்களுக்கும் செல்வதில்லை.

ஆனால் “நாங்க அய்யா வழிக்காரங்கதான்! ஆனா எல்லா கோயில்வளுக்கும் போவோம்”, என்று சொல்லும் அய்யா வழியினரின் எண்ணிக்கைதான் சம காலத்தில் அதிகம். அய்யா வைகுண்டரின் சில நிழல்தாங்கல்களில் கிருஷ்ண ஜெயந்தி விழாகூட நடத்தப்படுவதைப் பார்க்க முடிகின்றது. அய்யா வழியை பின்பற்றினாலும், குல தெய்வ வழிபாட்டை விட்டுவிட முடியாமல், ஆடு, கோழி பலி கொடுக்கும் கோயில்களிலும் அய்யா வழி மக்கள் பூசை செய்வதை காணமுடிகிறது.

அய்யா வைகுண்டரை ஏற்ற மக்கள் பலரும் அவரின் கருத்துக்களை தெளிவாக உள்வாங்கிக் கொள்ளவில்லையோ என்ற சந்தேகம் வலுக்கின்றது.

தரவுகள்

14. அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் பதிப்பு 178, [2011] இரண்டாம் பதிப்பு, பக்கம் எண் -250 மற்றும் பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963ஆம் ஆண்டு, பக்கம் எண் -198.

15. ‘அய்யா வைகுண்டர் உபதேசித்த அருள் நூல்’, ஆசிரியர்: ரா.அரிகோபால சீசர், பதிப்பாசிரியர்: ரெ.ராஜப்பா சீசர், பக்கம் எண் – 48.

16. அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் பதிப்பு 178, [2011] இரண்டாம் பதிப்பு, பக்கம் எண் -294 மற்றும் மற்றும் பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963ஆம் ஆண்டு, பக்கம் எண் – 235.

17. திருநெல்வேலி சாணார்கள், மறைத்திரு கால்டுவெல் அவர்கள் [1849], தமிழாக்கம் – கோவேத சாமிநாதன், இரண்டாம் பதிப்பு, 2020, பக்கம் எண் – 51.

18. கீழடி, வைகை நதிக்கரையில் சங்ககால நகர நாகரீகம், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, 28.04.2016.

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

Exit mobile version