வைகுண்டர் கிறிஸ்தவ மதத்துக்கு எதிராக அய்யாவழி இயக்கத்தை உருவாக்கியதாகப் பலரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வைகுண்டர் எப்போதும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்களைத் தன் இயக்கத்தில் சேரும்படி அழைத்ததாக எந்த வரலாற்றுத் தகவலும் இல்லை.
வைகுண்டரை எதிர்த்து விமர்சனம் செய்த கிறிஸ்தவ மதபோதகர்கள்கூட, “வைகுண்டரும் வைகுண்டரின் சீடர்களும் பதிகளையும், நிழல்தாங்கல்களையும் சர்ச்சுக்கு அருகில் நிறுவியுள்ளார்கள்” என்பதையும், “கிறிஸ்தவத்தில் இருப்பதைப்போல் வழிபாட்டை அய்யாவழியினர் மேற்கொள்கின்றனர்” என்பதையும்தான் கிறிஸ்தவத்துக்கு எதிரான பெரும் குற்றச்சாட்டாகக் குறிப்பிடுகிறார்களேத் தவிர, அய்யாவழியினர் கிறிஸ்தவர்களை மாற்ற பிரச்சாரம் செய்ததாக எங்குமே குறிப்பிடவில்லை.
வைகுண்டர், உயிர்பலி கொடுத்து பூசைகள் நிகழ்த்தப்பட்ட, நாட்டு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைத்தான், நாகரிகமான ஆன்மீக வழிபாட்டுக்குள் அழைத்து வந்துள்ளாரே தவிர, அவரது நோக்கம் கிறிஸ்தவத்தை எதிர்ப்பதல்ல. கிறிஸ்தவத்தைப்போல் மக்கள் நலனை மையமாகக் கொண்ட ஓர் இயக்கத்தை உருவாக்குவதே வைகுண்டரின் நோக்கம் என்பதை ஏற்கனவே விளக்கிக் கூறியிருக்கிறேன்.
வைகுண்டரின் சீடர்களில் பலரும், அய்யாவழியில் இணைவதற்கு முன்பு உயிர்பலி கொடுத்து, நாட்டு தெய்வ வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களே! அவர்களை அய்யாவழிக்கு மாற்றினார் வைகுண்டர். சுடலை மாடனுக்குக் கொடை நடத்தி பலியிட்டு வழிபாடு நடத்தி வந்த சிதம்பரம் என்பவரே, பின்னாளில் அய்யா வைகுண்டரின் ஐந்து சீடர்களில் ஒருவரான அர்ச்சுனன் சீடர் ஆனார்.1 மந்திரவாதி ஒருவரிடம் மந்திரதந்திரங்களைக் கற்றுத் தேர்ந்து, மந்திர தந்திர பூசைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிவனாண்டி என்பவரே பின்னாளில் வைகுண்டரின் தர்மசீடர் ஆனார்.2
பாம்பன் குளம், கடம்பன் குளம், வடலிவிளை, சுண்டவிளை, ஆவரைக்குளம், மதகநேரி முதலான திருநெல்வேலி மாவட்டத்தின் கிராமங்களில், உயிர் பலி செய்து நாட்டு தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களையும் அய்யாவழிக்கு மாற்றியுள்ளார் அய்யா வைகுண்டர்.3
நாட்டுதெய்வ வழிபாடு என்பது சாதியக்கட்டமைப்பைக் கட்டிக் காக்கும் ஆயுதம் ஆகும். நாட்டு தெய்வ வழிபாட்டை அழித்து அனைத்து மக்களையும் அய்யாவழியின் வழிபாட்டுக்குள் வரவழைத்ததன் மூலம் சாதியக்கட்டமைப்பை உடைத்து, அனைத்து சாதிகளையும் ஒரு குடைக்குக் கீழ் கொண்டு வர முயற்சி செய்தார் வைகுண்டர்.
எங்கும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்களை, அய்யாவழிக்கு மாற்ற வைகுண்டர் முயற்சித்ததாகக் குறிப்புகள் தென்படவில்லை. ஆனால் ‘கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்களுடன் இயல்பாகப் பழகும் தன்மை கொண்டவராக அய்யா வைகுண்டர் வாழ்ந்துள்ளார்’ என்பதைக் கீழ்க்காணும் சம்பவத்தின் மூலம் நிறுவ வேண்டியது அவசியமாகும்.
வைகுண்டரின் தலைமை சீடர்களில் ஒருவரான முகுந்தன் என்னும் வீமன் சீடர் அய்யாவழி இயக்கத்தில் இணைந்து பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டு தவவாழ்வு வாழ்ந்தார். பிறகு ஓரிரு வருடங்களுக்குப் பிறகு, வீமன் சீடர் இல்வாழ்க்கையில் ஈடுபட வைகுண்டரிடம் அனுமதி கேட்டார். வைகுண்டர் அனுமதி தந்தார், மறுக்கவில்லை. குடும்பஸ்தராக வாழ்ந்து வந்த வீமன் சீடரின் பிள்ளைகளில் நாராயணப்பெருமாள் என்பவனைத் தவிர அனைத்துப் பிள்ளைகளும், அன்று பரவியிருந்த காலரா நோய்க்கு பலியாகி விட்டார்கள்.
வீமன் சீடரின் குடும்பத்துக்கு வாரிசுகள் உருவாக வேண்டி, நாராயணப் பெருமாளுக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்று வைகுண்டர் முடிவெடுத்தார். அதற்கு வீமன் சீடரும் சம்மதித்தார். அப்போது நாராயணப்பெருமாளுக்கு வயது 14. அன்றைய காலகட்டங்களில் 13,14 வயதிலேயே திருமணம் செய்து விடுவது இயல்பான வழக்கம்.
முகுந்தன் என்னும் வீமன் சீடர் குடியிருந்த கரும்பாட்டூருக்கு அருகே அமைந்துள்ள புன்னையடி ஊரில் அமைந்திருந்த லண்டன் மிஷன் தேவாலயத்தின் உபதேசியாரிடம் அய்யா வைகுண்டர் நாராயணப் பெருமாளின் திருமணம் குறித்து ஆலோசித்தார். கிறிஸ்தவ உபதேசியாரின், சகோதரியின் மகளான தோமா என்கிற பார்வதியை, வீமன் சீடரின் மகனான நாராயணப் பெருமாளுக்கு திருமணம் செய்து வைக்க, வைகுண்டர் கேட்டு, கிறிஸ்தவ உபதேசியார் ஒப்புக் கொண்டார். தன் கையிலிருந்த அரிவாள் ஒன்றை வைகுண்டரிடம் கொடுத்து நாராயணப்பெருமாள் – தோமாவின் திருமணத்தை கிறிஸ்தவ உபதேசியார் உறுதி செய்தார்.
வைகுண்டரும் புன்னையடி கிறிஸ்த தேவாலயத்தின் உபதேசியாரும் இணைந்து நின்று நாராயணப்பெருமாள் – தோமா ஆகிய இருவரின் திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தனர். நாராயணப்பெருமாள் தோமா தம்பதியருக்கு இரு வருடங்களுக்குள் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. இரண்டு வருடங்களுக்குப் பிறகு நாராயணப்பெருமாளும் இறந்து விட்டார். கிறிஸ்தவப் பெண்ணான தோமாவின் வயிற்றில் பிறந்த ஆண் குழந்தைகள் இருவரும் வீமன் சீடரின் வாரிகளாயினர்.4
அய்யா வைகுண்டர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்களுடன் எந்தவொரு பகையும் பாராட்டவில்லை, அம்மக்களுடன் இயல்பாகப் பழகியுள்ளார்.
கிறிஸ்தவ மதமாற்றத்தைத் தடுப்பதோ, கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களை மீண்டும் சாதிக்குள் இழுத்து வருவதோ வைகுண்டரின் நோக்கமல்ல. கிறிஸ்தவ மதத்துக்கு மாற விரும்பாத மக்களை, நாகரீகமான ஆன்மீக வழிபாட்டுக்குப் பழக்கப்படுத்துவதன் மூலம் அவர்களைத் தலைநிமிர்ந்து வாழச்செய்வதே அய்யா வைகுண்டர் அய்யாவழியை உருவாக்கியதன் நோக்கம். இதைத்தான் அய்யாவழி அறிவோம் 29ல் குறிப்பிட்டிருந்தேன்.
மீண்டும் கோடிட்டுக் காட்டுகிறேன். மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி சில மிஷனரிகளால் செய்யப்பட்ட, கட்டாய மதமாற்றத்தை எதிர்த்துதான் வைகுண்டர் குரல் கொடுத்துள்ளார். விரும்பி கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்களை வைகுண்டர் வெறுக்கவில்லை.
ஆனால் சமீபத்தில் அய்யாவழியை பின்பற்றும் தென் மாவட்டத்து கிராமங்களில் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றும் மக்கள் ஊர்வரியிலியிருந்து நீக்கப்படுகிறார்கள். அய்யாவழியை பின்பற்றும் ஒருவர் தன் மகனுக்கோ மகளுக்கோ கிறிஸ்தவ மதத்து பெண்ணையோ ஆணையோ மணம் முடித்தால், அதைக் காரணம் காட்டியே, அவரது குடும்பம் ஊர் வரியிலிருந்து விலக்கப்படுகிறது. இவ்வாறான சட்டங்கள் அய்யாவழியைப் பின்பற்றும் கிராமத் தலைமை நிர்வாகங்களால் இயற்றப்படுகின்றன.
அய்யாவழி உருவாகிய காலத்தில் கிறிஸ்தவ மதமாற்றம் வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. இதனால் கிறிஸ்தவ குருமார்களில் சிலர் அய்யா வைகுண்டரின் சமூக செயல்பாடுகளையும் ஆன்மீக செயல்பாடுகளையும் விமர்சித்து எழுதியுள்ளனர்.
“ஏசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்ட மக்களை கிறித்தவத்துக்கு மாற்றாமல், கிறித்தவ மதத்தை நிரப்பும் நோக்கத்துடன் மதம் மாற்றிய கிறித்தவ மதகுருமார்கள் அய்யா வைகுண்டரை எதிர்த்தனர்” என்று ஏற்கனவே அத்தியாயம்29ல் குறிப்பிட்டதை நினைவுகூர்கிறேன்.
தென் திருவிதாங்கூர் மிஷனரிமார்களில், ‘இயேசு கிறிஸ்துவின் மீது ஆத்மார்த்த நம்பிக்கை கொண்ட மக்களை மட்டும்தான் கிறிஸ்தவ மத்த்தில் இணைக்க வேண்டும்’ என்ற கொள்கையை நேர்மையுடனும் உறுதியுடனும் கடைபிடித்தவர் ரிங்கல்தொபே ஒருவரே… மற்றவர்கள் அனைவருமே மதத்தை நிரப்பும் நோக்கத்துடன் செயல்பட்டதாகத்தான் தெரிகிறது.
மிஷனரிமார்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை லண்டன் மிஷனரி சொசைட்டியின் தலைமைக்கு கணக்குக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இருந்தது. ஒவ்வொரு திருச்சபையிலும் ஆண்டுக்கு எத்தனை பேர் கிறிஸ்தவ மதத்தில் இணைந்துள்ளார்கள் என்பதை லண்டன் மிஷனரி சொசைட்டியின் தலைமை கணக்கெடுக்கும். ஆக, தலைமைக்கு கணக்கு அதிகரிப்பைக் காட்ட வேண்டிய நிர்பந்தத்தால், ‘ஏசுவின் மீது விசுவாசம் கொண்டவர்களைத்தான் கிறிஸ்தவத்துக்கு மாற்ற வேண்டும்’ என்ற கொள்கையை பல மிஷனரிகள் மறந்திருந்தனர். அத்தகைய மிஷனரிகளுக்கு அய்யா வைகுண்டரின் அய்யாவழி இயக்கம் பெரும் தடைக்கல்லாக அமைந்தது.
இவர்களில், அய்யா வைகுண்டருடன் பயணித்த சார்லஸ் மீட் வைகுண்டரை விமர்சித்ததாகத் தெரியவில்லை.
வைகுண்டரின் சமகாலத்தவரான சார்லஸ் மால்ட், 1847ஆம் ஆண்டில், வைகுண்டரை விமர்சித்து மோச முன்னுரைத்தல் என்னும் புத்தகத்தை அச்சிட்டு வெளியிட்டதாக ஒரு தகவலை அய்யா வைகுண்டரின் தென்பாண்டி நாட்டு வருகை புத்தகம் சொல்கிறது.5
அத்தகவல் எந்த ஆவணத்திலிருந்து கிடைக்கப்பெற்றது என்பது பற்றியத் தகவல் அந்த புத்தகத்தில் இல்லை. ஆனால், “நாகர்கோவிலைச் சேர்ந்த சார்லஸ் மால்ட் எழுதிய ஒரு துண்டுப் பிரசுரம் முத்துக்குட்டியின் போலித்தனத்தை அம்பலப்படுத்தியது”, என்றும் “அந்தத் துண்டுப்பிரசுரம் பரவலாகப் பரப்பப்பட்டது”, என்றும் பதிவு செய்திருக்கிறார் ஜார்ஜ் பெட்டிட். எனில் சார்லஸ் மால்ட் வைகுண்டரை விமர்சித்து துண்டுப்பிரசுரம் வெளியிட்டதாகச் சொல்லப்படும் செய்தி உண்மையே! பரவலாக பரப்பப்பட்ட சார்லஸ் மால்ட்டின் அந்த துண்டுப் பிரசுரம், “ஒடுக்கப்பட்ட சாதி மக்களின்(புறசமயத்தவரின்) கண்களைத் திறப்பதற்குப் பதிலாக, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய மக்களை விழிப்புடன் இருக்கச் செய்தது”, என்றும் ஜார்ஜ் பெட்டிட் கருத்து தெரிவிக்கிறார்.6 ஆக, சார்லஸ் மால்ட்டின் துண்டுப்பிரசுரம் அய்யாவழி இயக்கத்தின் வளர்ச்சியில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்திவிடவில்லை என்பதை ஜார்ஜ் பெட்டிட் உறுதி செய்கிறார்.
சார்லஸ் மால்ட்டின் துண்டுப் பிரசுரத்தில், “முத்துக்குட்டியின் இயக்கம் சாதிப்பழக்கவழக்கங்கள் மற்றும் கிறிஸ்தவத்தின் கலவை”, என்று சார்லஸ் மால்ட் எழுதியிருக்கிறார். சார்லஸ் மீட்டின் இந்தக் கருத்தில் பிழையோ அநாகரிகமோ இருப்பதாகத் தெரியவில்லை.
அய்யா வைகுண்டர் வாழ்ந்த சமகாலத்தில் வாழ்ந்த மிஷனரிகளில் சார்லஸ் மால்ட் மட்டுமே வைகுண்டரை விமர்சித்ததாக சொல்லப்படுகிறது. அதிலும் அவரது காட்டமான விமர்சனமாக சொல்லப்படுவது, “முத்துக்குட்டியின் இயக்கம் சாதிப்பழக்கவழக்கங்கள் மற்றும் கிறிஸ்தவத்தின் கலவை” என்பது மட்டுமே.
எனவே, பின்னால் வந்த ஜார்ஜ் பெட்டிட், சாமுவேல் மேட்டீர் போன்றவர்கள், சார்லஸ் மால்ட்டின் கருத்துடன், தங்களின் வாய்வழி கருத்து சேகரிப்புத் தகவல்களைக் கலந்து அய்யா வைகுண்டரை விமர்சித்து எழுதியிருக்கக்கூடும் என்பது எனது கருத்து. அவ்வாறு விமர்சித்த மிஷனரிகளுக்கு மேற்சொன்ன இந்து – கிறிஸ்தவக் கலப்புத் திருமண வரலாற்றுத் தகவல் கிடைக்காமல் போனது, காலத்தின் சதியே!
தொடரும்…
தரவுகள்:
- அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்திவேலு, சூரன்குடி அ.இன்பக்கூத்தன், முதற்பதிப்பு ஆகஸ்ட்,2011, பக்கம் எண்: 68.
- முந்தைய அதே புத்தகம், பக்கம் எண்: 28.
- முந்தைய அதே புத்தகம், பக்கம் எண்: 34 முதல் 74 வரை.
- முந்தைய அதே புத்தகம், பக்கம் எண்: 72.
- முந்தைய அதே புத்தகம், பக்கம் எண்: 83.
- THE TINNEVELY MISSION OF THE CHURCH MISSIONARY SOCIETY, REV.GEORGE PETTITT, 1850, PAGE NO: 287.
படைப்பாளர்
சக்தி மீனா
பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.


