Site icon Her Stories

இறுதிவரை, இந்துக்கள் தோள்சீலை அணிய அனுமதிக்காத இந்துக்கள்

கல்குளம், வியன்னூர் கிராமத்தில் அமைந்த கண்ணனூர் தச்சன்விளையில் காலபெருமாள் என்ற வேதமாணிக்கத்தின் மனைவி சகுந்தலாதேவி என்ற ஏசுவடியாள் இரண்டாம் தோள்சீலைப் போராட்டத்தை (1823-1829) முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார். இவர் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டத் திருவிதாங்கூர் அரசு, இருமுறை கண்ணனூர் வழிபாட்டு மனை மீது துப்பாக்கியால் சுட்டனர். அந்த சம்பவத்தில் அந்த பெண்மணி இறக்கவில்லை. அப்பெண்மணியை வலுக்கட்டாயமாகக்கட்டி மருதூர்குறிச்சி என்னும் இடத்துக்கு கொண்டுச் சென்று, நிர்வாணமாக்கி பலாமரத்தின் கிளை ஒன்றில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டனர். அச்சம்பவத்தில் அப்பெண்மணி உயிரிழந்தார்.1

அக்டோபர் 1858 முதல் 1859 பிப்ரவரி வரை நிகழ்ந்த மூன்றாம் தோள்சீலைக் கலவரங்களில் ஒன்பது தேவாலயங்களும், மூன்று பள்ளிகளும் எரிக்கப்பட்டன. இந்த ஐந்து மாதங்களில், பெரும்பாலான  கிறித்தவ ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் துன்புறுத்தப்பட்டனர்; மானபங்கம் செய்யப்பட்டனர். ஆண்கள் பெண்கள் என்கிற பேதமின்றி ஒடுக்கப்பட்ட சாதி மக்களின்  ஆடைகள்  கிழித்தெறியப்பட்டு, இன்னும் பலவிதமான அவமானங்கள் அவர்களுக்கு நிகழ்த்தப்பட்டன.2

மேற்சொன்னவாறான கலவரங்கள் உச்சநிலையில் இருந்த சூழலில், அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த சாணார்* (நாடார்) சாதியினர் தங்களைப் போன்று ஒடுக்கப்பட்ட மக்களிடம் நிதி திரட்டி, தங்கள் மீது வன்முறை நிகழ்த்திய நாயர், வெள்ளாளர் சாதியினரை எதிர்த்துத் தாக்கத் தயாரானார்கள். திருநெல்வேலியில் வாழ்ந்த சாணார்* (நாடார்) சாதியினரிடமும் உதவி கோரினர், உதவி கிடைத்தது.3

அதன் பிறகு சாணார்* சாதியினர் ஆதிக்கச்சாதியினரை எதிர்த்திருக்கிறார்கள். வன்முறையின்போது நடந்த அத்துமீறல்கள் இருபக்கமும் உள்ளவராலும் செய்யப்பட்டன என்று ஜெனரல் கல்லன் தெரிவித்திருக்கிறார்.4

1859, பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் தென்திருவிதாங்கூரின் புராட்டஸ்டண்ட் கிறித்தவ மிஷனரிமார்களான, ஜான் காக்ஸ் (JHON COX), ரசெல் (RUSSEL), ஒயிட் ஹவுஸ் (WHITE HOUSE), லெவிஸ் (LEWIS), பேய்லிஸ் (BAYLIS) ஆகியோர் இணைந்து, ஆங்கிலேய ரெசிடென்ட்டாக இருந்த கல்லனிடம், கிறித்தவர்கள் படும் துன்பங்களிலிருந்து தங்களை காப்பாற்றுமாறு மனு ஒன்றை அளித்தனர். திருவிதாங்கூர் அரசரை நேரில் சந்தித்து தங்களின் துன்பங்களை விளக்கிக்கூற தங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் தரும்படி கிறித்தவ மிஷனரிகள் அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார்கள். ஆனால் அந்த மனுவுக்கு பதில் ஏதும் வரவில்லை. எனவே மிஷனரிமார்கள் மதராஸின் ஆங்கிலேய ஆளுநரான ட்ரெவெல்யன்(TREVELYAN) என்பவருக்கு மனு அனுப்பினார்கள்.

1859-ம் ஆண்டு மே 6-ம் தேதி, ட்ரெவெல்யன் திருவிதாங்கூரில் இருந்த ஆங்கிலேய ‘ரெசிடென்ட்டுக்கு’ கடிதம் எழுதினார். கிறித்தவ மதம் மற்றும் பிற மதங்களின் மக்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும், வலிமிகுந்த ஆடைக்கட்டுப்பாடுகளை விதிக்கும், மத சம்பிரதாயங்களின் குற்றங்களை, திருவிதாங்கூர் அரசரின் கவனத்துக்குக் கொண்டு செல்லுமாறு, மதராஸ் ஆங்கிலேய ஆளுநர் ட்ரெவெல்யன், திருவிதாங்கூரின் ஆங்கிலேய ரெசிடென்ட் கல்லனுக்கு கடிதம் எழுதினார்.5

இதில் மதராஸ் ஆங்கிலேய ஆளுநர் கிறித்துவர்களின் ஆடை உரிமைக்காக மட்டுமின்றி இந்து மதத்தினரின் (பிற மதத்தவர்களின்) ஆடை உரிமைக்காகவும் திருவிதாங்கூர் அரசிடம் விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மெட்ராஸ் பிரிட்டிஷ் அரசு, சாணார் பெண்கள் மீது, திருவிதாங்கூர் அரசு விதித்திருந்த, காட்டுமிராண்டித்தனமான மற்றும் அநாகரீகமான ஆடைக்கட்டுப்பாடுகள் அனைத்தையும் தடை செய்யும்படி, திருவிதாங்கூர் அரசுக்கு அறிக்கை அனுப்பியது. ஆங்கில அரசுடனான நட்பில் விரிசல் விழுவதை விரும்பாத திருவிதாங்கூர் அரசு, அரை மனதுடன் பின்வரும் அறிக்கையை வெளியிட்டது;

‘1829-ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசு வெளியிட்ட அறிக்கையில் சில குறைகள் இருப்பதை நாங்கள் அறிவோம். எங்களுடைய அனைத்து மக்களும் வருத்தப்படாத வகையில் அவர்களை நடத்துவது எங்களுடைய விருப்பமும் மகிழ்ச்சியும் ஆகும். எனவே, இந்துச் சாணார் பெண்களும் கிறித்தவச் சாணார் பெண்களைப் போல குப்பாயம் அணிந்து கொள்ளலாம், அல்லது முக்குவாட்டிகள் (மீன் பிடிக்கும் பெண்கள்) பருமனான இழைகளால் ஆன துணிகளை உடலைச் சுற்றிக் கட்டிக் கொள்வதை போல, எல்லா சாணார் பெண்களும் பருமனான இழைகளால் ஆன துணிகளை தங்கள் உடலைச் சுற்றிக் கட்டிக் கொள்ளலாம், அல்லது எல்லா சாணார் பெண்களும் தங்களின் மார்பை எப்படி வேண்டுமானாலும் மறைத்துக் கொள்ளலாம். ஆனால் உயர் சாதி இந்துப் பெண்களைப்போல் மட்டும் தோள்சீலை அணியவேக்கூடாது.’6

அதாவது 1829-ம் ஆண்டு அறிக்கையில் இந்துச்சாணார் பெண்கள் மார்பை மறைப்பதற்கு அனுமதி வழங்காமல் இருந்ததை, திருவிதாங்கூர் அரசு தனது தவறாக நினைத்து வருந்தியிருக்கிறது. அத்துடன் பெரிய மனது பண்ணி, இந்துச்சாணார் பெண்களும் குப்பாயம் அணிந்து கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ஆனால் இப்போதும் தோள்சீலை அணிய அனுமதி வழங்கவில்லை.

இதில் குறிப்பிட வேண்டிய இன்னொன்று, ‘எல்லா நம்பிக்கையும் கொண்ட சாணார் பெண்கள்’ என்றுதான் அறிக்கை பேசுகிறது. ‘இந்துச் சாணார்கள்’ என்று எழுத கை வரவில்லை… அதாவது சாணார் முதலான ஒடுக்கப்பட்ட சாதியினரை திருவிதாங்கூரின் ராம ராஜ்ஜியம், இந்துக்களாகவே ஏற்றுக் கொள்ளவில்லை.

ஆனாலும் இந்துச்சாணார் பெண்களும் கிறித்தவச்சாணார் பெண்களும் தோள்சீலை அணிவதை நிறுத்தவில்லை. உயர்சாதி இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்குமா? கலவரங்கள் ஆங்காங்கே தொடர்ந்தன.

1858, 1859-ம் ஆண்டுகளில் நடைபெற்ற கலவரங்களின் விளைவாக நெய்யூர், பாரசாலை பகுதிகளில், கிட்டத்தட்ட 3000 இந்துக்கள் கிறித்தவ மதத்தை ஏற்றனர். பல இந்துக் கோயில்களும் சன்னதிகளும் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து  ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் பெரும்பான்மையாகக் கிறித்தவ மதத்துக்கு மாறினர். 1861-ம் ஆண்டில் சாணார் (நாடார்) சாதியினர் மட்டும் 4000 பேர் கிறித்தவ மதத்துக்கு மாறினர். 1862-ம் ஆண்டு பாரசாலை மாவட்டத்தில் பறையர், புலையர் சாதி மக்கள் பெருவாரியாக கிறித்தவத்துக்கு மதம் மாறினர்.7

இன்னொருபுறம் கிறித்தவ மிஷனரிகளுக்கு 1859-ம் ஆண்டின் திருவிதாங்கூர் அரசின் அறிக்கையில் திருப்தி இல்லை. சாணார் பெண்களுக்கு மட்டுமின்றி அனைத்து ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கும் மார்பை மறைக்கும் உரிமை கிடைக்க வேண்டும் என்று மதராஸ் ஆளுநரிடம் முறையிட்டார்கள் மிஷனரிகள். மதராஸ் ஆங்கிலேய ஆளுநர், திருவிதாங்கூர் ரெசிடென்டுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ரெசிடென்ட், தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி, ‘திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருக்கும் ஆடைக்கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்க வேண்டும்’ என்று ஆளுநர்  கேட்டுக் கொண்டார். ரெசிடென்ட் திருவிதாங்கூர் அரசரிடம் ஆளுநரின் விருப்பத்தை அறிக்கையாக அளித்தார்.

வில்லியம் கல்லன்

ஆங்கிலேய அரசைப் பகைத்துக்கொள்ள விரும்பாத திருவிதாங்கூர் அரசு, 1865-ம் ஆண்டு, அனைத்து ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்களும், சாணார் பெண்களைப் போல், தங்களின் மார்பை மறைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்கியது. ஆனால் எப்போதும் ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள், நாயர் பெண்களைப் போல் தோள்சீலை என்னும் உடையணிய அனுமதிக்கப்படவில்லை.

அதாவது சாணார் பெண்களைப் போல், ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களும் குப்பாயம் அணிந்து கொள்ளலாமே தவிர, தோள்சீலை அணியும் அனுமதியை திருவிதாங்கூர் அரசு கடைசி வரை வழங்கவே இல்லை.

திருவிதாங்கூர் அரசை மீறி, ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் தோள்சீலை அணிவதும், அதை எதிர்த்து இந்து மதத்தின் ஆதிக்கச்சாதியினர் வன்முறையில் ஈடுபடுவதும், வன்முறையை எதிர்த்து ஒடுக்கப்பட்டவர்கள் கரம் உயர்த்துவதும் 1950-ம் ஆண்டு வரை நீடித்தது.8

1950-ம் ஆண்டு அம்பேத்கர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி இந்தியாவை குடியரசாக்கி விட்டதால், எல்லா பெண்களும் தங்கள் விருப்பம் போல் உடையணியும் சுதந்திரத்தைப் பெற்றார்கள். அதனால் எல்லா பெண்களும் தோள்சீலை அணிவதை திருவிதாங்கூர் அரசால் தடுக்க இயலாமல் போனது.

அதாவது, அய்யா வைகுண்டர் இறந்த பிறகும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தோள்சீலைப் போராட்டம் தொடர்ந்தது.

திருவிதாங்கூர் அரசின் மனுதர்மம் இறுதி வரை தோள்சீலைப் போராட்டத்துக்கு அடிபணியவில்லை...

தொடரும்…

தரவுகள்:

  1. துன்பத்தில் துளிர்த்த தளிர், REV.Y. ஜாண் பிரைட், M.A., B.D., M.Th., REV.D. ஐசக் சுந்தர் சிங், M.A.,B.D.,M.Th, முதல் பதிப்பு:ஏப்ரல்,2011, பக்கம் எண்: 124.
  2. CHURCH HISTORY OF TRAVANCORE, C.M. AGUR, FIRST PUBLISHED 1903, REPRINT 1990, PAGE NO: 933,934.
  3. HISTORY OF KANYAKUMARI DISTRICT, LIBERATION OF THE OPPRESSED A CONTINUOUS STRUGGLE (A CASE STUDY SINCE 1822) SOCIO-ECONOMIC AND POLITICAL LIBERATION STRUGGLE IN THE EXTREME SOUTH OF INDIA, Dr.D. PETER.M.A., M.LITT., Phd, Dr. IVY PETER, M.A., B.T., P.hd, first edition:2009, page no: 52.
  4. ‘தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு’ இராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழாக்கம்: எஸ்.டி. ஜெயபாண்டியன், முதல் பதிப்பு-2019, பக்கம் எண்: 89.
  5. HISTORY OF KANYAKUMARI DISTRICT, LIBERATION OF THE OPPRESSED A CONTINUOUS STRUGGLE (A CASE STUDY SINCE 1822) SOCIO-ECONOMIC AND POLITICAL LIBERATION STRUGGLE IN THE EXTREME SOUTH OF INDIA, Dr.D. PETER, M.A., M.LITT., Phd, Dr. IVY PETER, M.A., B.T., P.hd, first edition: 2009, page no: 52.
  6. CHURCH HISTORY OF TRAVANCORE, C.M.AGUR, FIRST PUBLISHED 1903, REPRINT 1990, PAGE NO: 937.
  7. CHURCH HISTORY OF TRAVANCORE, C.M.AGUR, FIRST PUBLISHED 1903, REPRINT 1990, PAGE NO: 940.
  8. HISTORY OF KANYAKUMARI DISTRICT, LIBERATION OF THE OPPRESSED A CONTINUOUS STRUGGLE (A CASE STUDY SINCE 1822) SOCIO-ECONOMIC AND POLITICAL LIBERATION STRUGGLE IN THE EXTREME SOUTH OF INDIA, Dr.D. PETER, M.A., M.LITT., Phd, Dr. IVY PETER, M.A., B.T., P.hd, first edition:2009, page no:53.

Exit mobile version