Site icon Her Stories

துவையல் துவசு – 2

முத்துக்குட்டி அய்யாவழி இயக்கத்தை தொடங்கிய பிறகு, அவரிடம் பலர் சீடர்களாக இணைந்திருந்தனர். அவர்களில் முதன்மையானவர்கள் ஐவர். அவர்கள் 1. சிவனாண்டி என்னும் தர்ம சீடர், 2. பண்டாரம் என்னும் பீமன் சீடர், 3. அழகப்பன் என்னும் அர்ஜுனன் சீடர், 4. சுப்பையா என்னும் நகுலன் சீடர், 5. அரிகோபாலன் என்னும் சகாதேவன் சீடர். இந்த ஐந்து முதன்மை சீடர்களும் அய்யா வைகுண்டரின் மற்ற சீடர்களும் தங்களின் குடும்பங்களோடு துவையல் தவசில் பங்கேற்றனர்.

துவையல்காரர்கள் கூட்டத்துக்கு தலைமையேற்று, அவர்களை வாவைப்பதியிலிருந்து முட்டப்பதிக்கு அழைத்துச் சென்றார் அய்யா வைகுண்டர். அங்கும் அறப்போராட்டம் தொடர்ந்தது.

போவோம் எனவே பெண் ஆணுடன் எழுந்து

தாவம் உள்ள முட்டப்பதித் தலத்தில் வந்தனரே

சூழ அணியாய் சுற்று மதில் போல

நீள அரங்கு வைத்து நெருங்கப் புரைகள் வைத்து

வைத்து ஓர் திசையில் வாயில் ஒன்றாக விட்டு

மெய்த்தே தினமும் மிகவே துணி துவைத்து

அன்னம் அதற்கும் அவித்த நெல்லே உடைத்து

வன்னம் உள்ள காய் கனிகள் வகை வகையாய் தான் வகுத்து

நல்ல நீர் தன்னில் நாடி துணி துவைத்து

எல்லா வகைக்கும் இசைந்த நீரே அருந்தி

அந்தி சந்தி நேரம் ஆதிதனை துதித்து

தந்திரம் அதாக தவசு மிகப் புரிந்தார்

பொருள்: பெண்களும் ஆண்களும் கொண்ட கூட்டத்துடன் எழுந்து, வெப்பமான காட்டுப்பகுதி உள்ள முட்டப்பதிக்கு வந்தனர்.

சுற்று மதில் சுவர் போல, நீளமான அரங்கு அமைத்து, அதற்குள் நெருக்கமாக சமையலறைகள் அமைத்து, ஒரு திசையில் அதற்கு வாசல் அமைத்தனர். உண்மையென நிரூபிக்கவே, தினமும் மிகவும் துணிகள் துவைத்தனர். அவித்த நெல் குத்தி அரிசி தயார் செய்து, அழகுள்ள காய்கனிகள் வகை வகையாய் எடுத்து சமைத்தனர். நல்ல நீரில் விருப்பத்தோடு துணிகளை துவைத்து உடுத்தினர். எல்லா செயல்களுக்கும் இசைந்த நல்ல நீரை அருந்தினர். காலையும் மாலையும் ஆதியை வணங்கி தந்திரமாக (துவையல்) தவசு செய்தனர்.

கண்டிருந்த மற்ற கலி நீச சாதியெல்லாம்

பண்டில் அமைத்ததுவோ பனையேறும் சாணார்க்கு

மூணு நேரம் துவைத்து உச்சி ஒரு நேரம் அதாய்

வேணும் பகுத்தாய்(வு) வெகுவாய் அலங்கரித்து

வேதனும் அவர்க்கு விதித்த விதிப்படியே

நாதன் அவர் பங்கில் நாடி மிக வந்ததுவோ

எப்போது மீன் உண்டு என்றே மிகப் பார்த்து

அப்போது அதை வேண்டி அரக்கு உறக் காய வைத்து

வாயில் எடுத்து இட்டு வயிறு வளர்க்கும் சாணார்கள்

போயிலை மறந்து பெண் ஆணும் ஓர் மனதாய்

இந்தப்படியாய் இருக்க இவர்களுக்கு

முந்த விதித்த விதி வந்து ஒத்ததுவோ

அவர்கள் உடுக்கும் ஆடை அழுக்கில்லாமல்

இவர் இருக்க சற்றும் எண்ணம் ஒன்றில்லாமல்

மூணு நேரம் துவைக்கும் உற்ற துணி பொன்னிறம் போல்

தோணுதலாய் அவர்கள் தேகம் பளபளென

இந்த விதமாய் இவர்கள் பாவித்திடவே

சொந்த திருமால் சேர்ந்தார் அவரிடமே!

பொருள்:

பனையேறும் சாணார்கள், நாளில் மூன்று நேரம் குளித்து, துவைத்து உடுத்தினர். மதிய வேளையில் வேண்டிய படிப்பறிவைப் பெற்றனர். நாகரீகமாக அலங்கரித்துக் கொண்டு இருந்தனர். தெய்வத்தைத் தொழுது காய்கனிகளை சமைத்து உண்டனர். இதையெல்லாம் பார்த்த கலி நீச சாதியினர் எல்லாரும், பிரம்மன் சாணார்களுக்கு விதித்த விதியின் படி, திருமால் சாணாரிடம் சேர்ந்து விட்டாரோ என்று சந்தேகித்து வியந்தார்களாம். எப்போது மீன் கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்து, கிடைத்த மீன்களை மசாலாவில் ஊறக் காய வைத்து (கருவாடு தயாரித்தல்), வாயில் போட்டு வயிறு வளர்க்கின்ற சாணார்கள், புகையிலையை மறந்து, ஆண்களும் பெண்களும் ஒரு மனதாய் இருக்க, ‘அவர்களுக்கு முன்பு விதித்த விதி ஒத்து வந்ததோ’, என்று ஆதிக்க சாதியினர் வியந்தார்களாம்.

சாணார்கள்* உடுக்கும் ஆடை அழுக்கில்லாமல் இருப்பதையும், மூன்று நேரம் துவைப்பதால் இவர்களின் ஆடைகள் பொன்னைப் போல் மின்னுவதையும் இவர்களின் தேகம் மூன்று வேளைக் குளிப்பதால் பளபளவென இருப்பதையும் பார்த்த ஆதிக்க சாதியினர் சாணார்களிடம் திருமால் வந்து விட்டதால்தான், சாணார்களிடம் நாகரீக மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று நம்பினார்களாம்.

*இந்த சொல் பயன்பாட்டில் எழுத்தாளருக்கோ பதிப்பாளருக்கோ உடன்பாடு இல்லை. அந்த காலகட்டத்தின் சூழலை உணர்த்த எழுதப்பட்டது.

முட்டப்பதியில் நிகழ்ந்த துவையல் தவசு நிகழ்வினை விளக்குகின்ற மேற்சொன்ன அகிலத்திரட்டு அம்மானை பாடலிலும், துவையல்காரர்கள் மூன்று வேளை குளித்துத் துவைத்து, சுத்தமாக உடை உடுத்தியதுதான் மைய நிகழ்வாக உள்ளது. அத்துடன் வாவைப்பதியில் இருந்த போது உருவான நாகரீக பரிணாம வளர்ச்சியைக் காட்டிலும், முட்டப்பதியில் இருந்த போது ஒடுக்கப்பட்ட சாதி மக்களிடம் நாகரீக பரிணாம வளர்ச்சி அதிகமாகியது, என்பதை இப்பாடலின் மூலம் அறிய முடிகின்றது.

முட்டப்பதியில் துவையல்காரர்களுக்கு நல்ல நீர் கிடைத்தது. சமைப்பதற்கு நெல்லும், காய், கனிகளும் கிடைத்தன. இங்கு ஒருவேளை மட்டுமே உண்டதாகக் குறிப்பு இல்லை. எனில் வாவைப்பதியில் ஒருவேளை உணவு உண்டதற்கு காரணம் உணவுப்பற்றாக்குறையே அன்றி, விரதம் அல்ல என்பது எனது கருத்து.

மூணு நேரம் துவைத்து உச்சி ஒரு நேரம் அதாய்

வேணும் பகுத்தாய்(வு) வெகுவாய் அலங்கரித்துஎன்ற வரிகளில் உச்சிப் பொழுதில் படிப்பறிவும் நாகரீக அலங்காரமும் செய்வதாக சொல்லும் குறிப்பை காண்க. எனில் நிழற்தாங்கல்களும் பதிகளும் அக்காலத்தில் பகலில் பள்ளிக்கூடங்களாக செயல்பட்டிருக்கிறது என்பதை அகிலத்திரட்டிலிருந்தே அறிய முடிகின்றது.

பகுத்தாய் = பகுத்தாய்வு = பகுத்தறிவு (படிப்பறிவு)

எப்போது மீன் உண்டு என்றே மிகப் பார்த்து

அப்போது அதை வேண்டி அரக்கு உறக் காய வைத்து

வாயில் எடுத்து இட்டு வயிறு வளர்க்கும் சாணார்கள்*’

என்ற வரிகளை உற்று நோக்குக! சாணார்* சாதியினர் மீன் உண்பதை, கீழான செயலாகப் பார்த்த, ஆதிக்க சாதிகளின் பாசிசப் பார்வையை இவ்வரிகள் குறிப்பிடுகின்றன. இன்று மாட்டுக்கறி உண்பவர்களைக் கேவலமானவர்களாகவும் குற்றவாளிகளாகவும் சித்தரிக்கும் பாசிசக் கும்பலின் மூதாதையர்கள்தான், அன்று மீன் உணவு உண்ட மக்களை கேவலமானவர்களாகவும், குற்றவாளிகளாகவும் சித்தரித்திருக்கிறார்கள். ஆனால் மீன் உணவு உண்பதை பாரம்பரியமாகக் கொண்ட இளைஞர்களில் சிலர்தான், இன்று மாட்டுக்கறி உண்பவர்களுக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனில் இந்த இளைஞர்கள் யாருக்காக யாரை எதிர்த்து அரசியல் களமாடுகிறார்கள் என்கிற கேள்விக்கான விடையைத் தேட வேண்டியது அவசியமாகிறது.

பிராமணர்கள் சூத்திரர்கள் பேணி இவர் தமக்கு

நிராதனமாய்க் காய்கனிகள் நித்தம் சுமக்கிறார்கள்

பாக்கியங்கள் வந்ததென்று பனையேறும் சாணார்கள்

நோக்கமது வந்தது என்று நீணிலத்து உள்ளோர்

எச்சாதியும் புகழ்ந்திருந்தார் அம்மானைஎன்ற அகிலத்திரட்டு அம்மானையின் வரிகள் சில பிராமணர்களும், சில சூத்திரர் என்றழைக்கப்பட்ட நாயர் முதலான அதிக்க சாதியினரும் துவையல்காரர்களுக்கு உதவியதைக் காட்டுகிறது. மேலும் துவையல்காரர்கள் பொதுநல நோக்கத்துக்காகவும் சமூக சீர்திருத்தத்துக்காகவும் பிற மனிதர்களிடம் உதவி வாங்கியிருக்கிறார்கள் என்பதையும் இதன் மூலம் அறிகிறோம்.

‘கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் கோடைக்காலம் உருவாகவே, காய் கனிகள் பறிக்க இயலாமல் மரங்களின் இலைகளும் கனிகளும் வெம்பி விழுந்தன. மீண்டும் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. அத்துடன் வைசூரி என்றழைக்கப்படும் அம்மை நோய் மக்களிடையே பரவத் தொடங்கியது. அம்மை முதலான நோய்களுக்கு தடுப்பூசியோ, மருந்துகளோ கண்டுபிடிக்காத காலகட்டம் அது. வேகமாகப் பரவிய அம்மை நோயால் துவையல் தவசில் கலந்து கொண்ட மக்கள் சிலர் இறந்து போயினர்.’

சான்று:

அன்னம் அதை குறைத்து ஆளாக்கு அரிசி இட்டார்

ஆளாக்கு அரிசி அலர் மலர்ந்து கோவையுடன்

தாளாமல் சனங்கள் சடையாமல் ஏத்தனரே

துவையல் முடங்கவில்லை தினம் சேவிப்பதுவும்

உகப்பாட்டு ஓதுவதும் ஓயாமல் செய்தனரே

உன்னித் திருமால் உற்ற வைசூரியைத்தான்

ஏவினார் சான்றோர் ஏந்திழைக்கும் பிள்ளைகள்க்கும்

மேவிய சான்றோர் மிக மெலிந்துதான் வாடி

பற்றிருந்த பருஞ்சிரங்கு மாறலையே

முற்றும் கண்ணொழிவு முழுதும் திறக்கலையே

கும்பிக் குளிரக் குடிக்கக் கிடைக்கலையே

வெம்பும் இலைகள் கனிகள் மிகப் பறிக்கக் கூடலையே

அய்யோ நாமெல்லாம் அலைந்து மலைத்து இருக்க

வையம் அது இல்லாத வைசூரி வளைந்துது அல்லோ

என்று ஜனங்கள் எண்ணம் பெரிதாகி

சென்ற ஜனத்தில் சிலபேர் மடிந்திடவே

பதறி நடுங்கிப் பரனே நீ தஞ்சமெனஎன்ற அகிலத்திரட்டு அம்மானையின் வரிகள்.

அன்னம் = சோறு, வைசூரி = அம்மை நோய், கும்பி = வயிறு.

அய்யா வைகுண்டர் துவையல்காரர்களை வீடு திரும்பக் கட்டளையிட்டதாகவும் துவையல்காரர்கள் தொடர்ந்து தவம் புரிந்து கொண்டிருந்ததால், துவையல்காரர்களை சோதிப்பதற்காக திருமால் தெள்ளு, மூட்டை, வைசூரி, பசி, பட்டினி போன்ற துன்பங்களை துவையல்காரர்களுக்குக் கொடுத்ததாகவும் அகிலத்திரட்டு சொல்கின்றது. வழக்கம்போல் வெற்று நம்பிக்கைகளைக் கழித்து விட்டு ஆராய்ந்து பார்க்கும்போது, மேற்சொன்ன வரலாற்றுத் தகவல்கள் நமக்குக் கிடைக்கிறது.

வைசூரி நோயால் ஏற்பட்ட உயிரிழப்புகளால் பயந்த துவையல்காரர்கள், அவரவர்க்கு ஏற்ற இடங்களுக்கு செல்ல முடிவு செய்தனர். வெவ்வேறு ஊர்களுக்கு செல்லவிருக்கும் துவையல்காரர்களிடம் “நீங்கள் வாழும் இடங்களில் நிழல்தாங்கல்கள் மற்றும் முத்திரிக்கிணறு அமைத்து அய்யாவின் அறிவுரைகளைப் பரப்புங்கள்” என்று அய்யா வைகுண்டர் கூறி அனுப்பினார்.

அப்போது நாதன் எல்லோரையும் பார்த்து

இப்போது உங்கள் இல்லிடத்திலே போனால்

நாராயணர் குருவை நாளும் மறவாமல்

பேராகவே இருந்தால் பேறு உங்களுக்கே கிடைக்கும்

அன்னம் அளக்கும் ஆதித் திருநெடுமால்

முன்னவன்தன் பேரால் முத்திரிகள் இட்டதினால்

சென்ற இடமெல்லாம் சிறப்பு அதிகம் உங்களுக்கு

என்றைக்கும் நல்ல இயல்பே அருள்வோம் என

நல்ல விடை கொடுத்தே நாராயணர் அனுப்பஎன்ற வரிகள் அகிலத்திரட்டு அம்மானையில், துவையல்காரர்கள் துவையல் தவசு முடித்து செல்லும் போது அய்யா வைகுண்டர் துவையல்காரர்களிடம் சொல்பவையாக வருகின்ற வரிகளாகும்.

நிழல்தாங்கல்கள் மற்றும் பதிகள் பகலில் பள்ளிக்கூடங்களாகவும் இரவில் கூட்டு வழிபாடு செய்யும் இடங்களாகவும் செயல்பட்டது.2* முத்திரிக்கிணறு எல்லா மக்களும் சாதி மத வேறுபாடின்றி நீர் எடுக்க வெட்டப்பட்டது. பதிகள், நிழற்தாங்கல்கள், முத்திரிக் கிணறு போன்றவை, ஆன்மீக வடிவில் அய்யா வைகுண்டர் செய்த சமூக சீர்திருத்தங்களாகும். ஆனால் தற்காலத்தில் ஆன்மீகத்தின் இருளுக்குள் இவ்வீர வரலாறு மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

‘தலைப்பாகை கட்டுங்கள், தோள்சீலை அணியுங்கள், அவரவர் தேடுமுதல் அவரவர் வைத்து ஆண்டிடுங்கோ’ போன்ற அய்யாவின் புத்திமதிகளும் பொதுவுடைமை பேசும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களே என்பதைப் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.

வீடுகளையும் உடைமைகளையும் இழந்துவிட்ட துவையல்காரர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையாக சென்றனர். சென்ற இடங்களில் எல்லாம் கூட்டம் கூட்டமாகத் தர்மம் (பிச்சை) வாங்கி வாழ்ந்தனர். துவையல்காரர்களுக்கென்று மக்கள் மத்தியில் தனி மதிப்பும் நம்பிக்கையும் உருவாகியிருந்தது. தங்களைப் போன்று ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் மட்டுமின்றி, பொதுவுடைமைச் சிந்தனை கொண்ட ஆதிக்க சாதியைச் சார்ந்த சாமான்ய மக்களிடமும் பிச்சை வாங்கி, நிழற்தாங்கல்களை நிறுவி, முத்திரிக்கிணறுகளை வெட்டி அய்யா வைகுண்டரின் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தனர் துவையல்காரர்கள். 

பொதுவுடைமைக்காரர்கள் எல்லோரும் உண்டியல் குலுக்கிகள்தான் போலும்!

கீழ்க்காணும் அகிலத்திரட்டு அம்மானையின் வரிகள் இந்தத் தகவலுக்கான சான்று.

பரப்ப வடிவை பாருள்ளோர் கண்டு கண்டு

கோட்டைக் கணக்காய் குளிர்ந்த நெல்லே எடுத்து

சாட்டமுடன் காய்கனிகள் சகல வகையுடனே

பழங்கள் முதலாய் பப்படமும் பாயசமும்

வழங்க இலையிட்டு வத்தல் வகை சீனியுடன்

அன்னம் முதல் தானம் ஆடையொடு பொன் தானம்

சொர்ண தானம் முதலாய் துவையல்காரர்க்கெனவே

சான்றோர் இனத்தில் சார்ந்த அன்பு கொண்டவர்கள்

ஆண்டோன் அருளால் அன்ன வஸ்திரம் கொடுத்தார்

நித்தம் நித்தம் அன்னம் நீங்கள் உண்ணும் என்று சொல்லி

சித்தம் இரக்கமதால் துவையல்காரர்க்கெனவே

இடைவிடாத படியே ஈந்தாரே அன்னமது

வடவெல்லாம் தீர்ந்து மகிழ்ந்திருந்தார் துவைத்திருந்தோர்

நாலு திசையும் நடந்து பிச்சைதான் குடித்து

பால் பவுசுயோடு பாவித்து இருந்தனராம்

இப்படியே சான்றோர் இனமாய் இருந்தவர்கள்

அப்படியே பிச்சை இட்டு அன்பாய் மகிழ்ந்திருந்தார்

பாங்கான துவையல் பண்டாரங்களெல்லாம்

பூங்காரமாகப் பிச்சை அமுது உண்டிருந்தார்

‘மக்கள் பல்வேறு இடங்களிலிருந்து கூட்டங்கூட்டமாக வந்து, தானியங்களையும் துணிகளையும் பணத்தையும் முத்துக்குட்டியின் இயக்கத்துக்கு நன்கொடையாகக் கொடுக்கிறார்கள்’ என்று சில கிறிஸ்தவ ஆவணங்கள் குறிப்பிடுவதையும் இவ்விடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும்.3*

இவ்வாறாக முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர் ஒடுக்கப்பட்ட இந்து மக்களின் தோள்சீலை அணியும் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருக்கும்போது, திருவிதாங்கூர் முழுமையும் உள்ள பல இடங்களில், பல சமூக சீர்திருத்தவாதிகளும், சிறு சிறு குழுக்களாக, இந்து, கிறிஸ்தவம் என்ற பேதமின்றி ஒடுக்கப்பட்ட பெண்கள் தோள்சீலை அணியும் உரிமைக்காக, ஒடுக்கப்பட்ட மக்களின் ஊழிய மறுப்புக்காக, வரிக்கொடுமைகளுக்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தனர்.

கைகளில் இருந்த  ‘அதிகாரம்’ என்னும் பேராயுதத்தை மக்களுக்கு எதிராக பிரயோகித்து, ஆதிக்க சாதியின் அரசும், அரசு அதிகாரிகளும் சர்வாதிகாரம் நிகழ்த்திக் கொண்டிருந்தனர் . இந்து மதத்தலைவர்களாகக் கருதப்பட்ட நம்பூதிரி முதலான பார்ப்பன வர்ணத்தினர், கலவரங்களில் மக்கள் சிந்திய ரத்தச்சகதிக்கு நடுவே, சாஸ்திரங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் சாமரம் வீசிக் கொண்டிருந்தனர்.

முத்துக்குட்டி கிறிஸ்தவத்தை விட்டு விலகிய 1829ம் ஆண்டில், ஏப்ரல் மாதம் திருவிதாங்கூரின் அரியணை ஏறிய சுவாதித்திருநாள் மகாராஜா என்னும் ராம வர்மா, 1847ம் ஆண்டு இறந்தார். அவரின் மறைவிற்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, உத்திரம் திருநாள் மகாராஜா என்னும் மார்த்தாண்ட வர்மா அரியணை ஏறினார். 1851ம் ஆண்டு அய்யா வைகுண்டர் இறந்தார். அவரின் சீடர்களும் பற்றாளர்களும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இவ்வாறாகப் புகைந்து கொண்டிருந்த தோள்சீலைப்போராட்டம் 1858ம் ஆண்டு மீண்டும் உச்சம் தொட்டது.

குறிப்பு: தோள்சீலைப் போராட்டம் பற்றி படிக்கும்போது எனக்குள் உருவான கேள்வியை இங்கு பதிவு செய்வது அவசியம் என்று கருதுகிறேன். திருவிதாங்கூர் எல்லைக்குள் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட சாதிப்பெண்கள் பல நூற்றாண்டுகாளாகவே, மார்பை மறைக்கும் உரிமை இல்லாதவர்களாகத்தான் வாழ்ந்திருக்கிறார்கள்.

புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் திருவிதாங்கூருக்கு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, சிரிய கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் (நஸ்ரானிகள்) திருவிதாங்கூரில் வாழ்ந்துவந்தார்கள். அவர்களுக்கு தளர்வான, கரடுமுரடான குப்பாயம் என்னும் மேலாடையை சட்டைமேல் அணிந்துகொள்ள உரிமை இருந்தது.

குப்பாயம் அணிந்த சிரிய கிறிஸ்தவப் பெண்

CHRISTIANITY IN TRAVANCORE, G.T.MACKENZIE, 1901, PAGE NO: 24, PL.II.’ல் காணப்படும் புகைப்படம்.

1544ம் ஆண்டு திருவிதாங்கூர் அரசர் ராமவர்மா, கடற்கரை கிராமங்களில் வாழ்ந்த முக்குவர் மக்களை ரோமை கத்தோலிக்க கிறிஸ்தவத்துக்கு மாற்றிக் கொள்ள பாதிரியார் சவேரியருக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்.4* அவ்வாறாக கத்தோலிக்க கிறிஸ்தவத்துக்கு மதம் மாறிய முக்குவர் மக்கள் (முக்குவாட்டிகள்), குப்பாயத்தால் மார்பை மறைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.4,5* சிரிய கிறிஸ்தவர்கள் தோள்சீலை அணியும் உரிமையை திருவிதாங்கூர் அரசிடம் விண்ணப்பித்ததாகவே தெரியவில்லை.

சிரிய கிறிஸ்தவர்கள், கத்தோலிக்க முக்குவர் பெண்கள் குப்பாயம் அணியும்போது ஏற்படாத கோபம், ரிங்கல்தொபே சாணார் பெண்களுக்குக் குப்பாயம் கொடுத்தபோது, ஆதிக்கசாதிகளுக்கு ஏன் வந்தது? இது ஆராயப்பட வேண்டிய கேள்வி.

தொடரும்…

தரவுகள்

  1. இந்த அத்தியாயத்தில் உள்ள அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளை, பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, புத்தகத்தின் 280, 281, 282, 283 ஆகிய பக்களில் படித்து அறியலாம்.
  2. அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்திவேலு, சூரன்குடி அ. இன்பக்கூத்தன், முதற்பதிப்பு ஆகஸ்ட், 2011, பக்கம் எண்: xi (அறிமுகவுரை).
  3. THE TIINEVELY MISSION OF THE CHURCH MISSION SOCIETY, REV.GEORGE PETTITT, 1850, PAGE NO: 286.
  4. குளச்சல் போர் – கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும், திருத்தமிழ்த்தேவனார் எம்.ஏ.,எம்.எல்., முதற்பதிப்பு ஆகஸ்டு, 2018, பக்கம் எண்: 112.
  5. The following proclamation was issued by the Mahārāja of Travancore:—We hereby proclaim that there is no objection to Shānān women either putting on a jacket like the Christian Shānān women, or to Shānān women of all creeds dressing in coarse cloth, and tying themselves round with it as the Mukkavattigal (fisherwomen) do, or to their covering their bosoms in any manner whatever, but not like women of high castes.” – பக்.366, Castes and Tribes of Southern India – Vol 6, Edgar Thurston

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.

Exit mobile version