அகிலத்திரட்டு அம்மானையின் சாதி பற்றி சொல்லப்பட்டிருக்கும் பாடல் வரிகள், முன்னுக்குப்பின் முரணாகத் தோற்றமளித்து குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. மேலோட்டமாகப் படிக்கும் போது, அய்யா வைகுண்டர், தன்னுடைய சுயசாதியான சாணார் (இப்போது நாடார்) சாதியின்மேல் கொண்ட பற்றினை அகிலத்திரட்டில் பதிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. தொடரும் வாசிப்பின் பயணத்தில், ஒடுக்கப்பட்ட சாதிகள் அனைத்தையும் அரவணைக்கின்றது அகிலத்திரட்டு அம்மானை. இந்த முரண்பாடுகளும், அதனால் உருவாகும் குழப்பங்களும் அய்யா வைகுண்டர் என்னும் போராளியை ஒரு சாதிக்குள் அடைத்துவிட முற்படுகின்றன.
ஆனால் அகிலத்திரட்டின் ஓரிடத்தில் நீசர் குலத்தவரும் அய்யா வைகுண்டரை நம்பி அவரது அறிவுரைக் கேட்டு நடந்ததாக ஒரு செய்தி காணப்படுகிறது. எனில் அய்யா வைகுண்டர், தான் நீசர் குலம் என்று கருதிய சாதியைச் சார்ந்த மக்களையும் ஏற்றுக் கொண்டமை விளங்குகின்றது.1 முத்துக்குட்டியின் இயக்கத்தில் பிராமணர்கள், பிராமணரல்லாத பண்டாரங்கள், உட்பட பல சாதியினர் இணைந்ததாக சாமுவேல் மேட்டீர் குறிப்பிடுகிறார். 2 மேட்டீர் அவர்கள் சொல்லும் தகவலைக் கருத்தில் கொள்ளும் போது, அய்யா வழி எல்லா சாதியினரையும் ஏற்றுக் கொண்ட உண்மை தெளிவுறுகிறது.
நாடார்களின் தொன்மக்கதை:
நாடார் சாதியின் பிறப்புப் பற்றிச் செவிவழியாகச் சொல்லப்படும் தொன்மக்கதை ஒன்று உண்டு. அக்கதை…
பூலோகத்து நதியில் நீராடிக் கொண்டிருந்த தேவலோகத்து ஏழு கன்னிமார்களின் மீது இந்திரன் காதலும் காமமும் கொள்கிறார். அதன் விளைவாக ஏழு கன்னிமார்களும் ஏழு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்கிறார்கள். பெற்றெடுத்த குழந்தைகளை பூலோகத்திலேயே விட்டு விட்டு, கன்னிமார்கள் ஏழுபேரும் தேவலோகம் சென்று விடுகிறார்கள்.
எனவேதான் குழந்தைகளை அநாதரவாக போட்டு விட்டுச்சென்ற காரியத்திற்கான பழியை ஏழு கன்னியர்கள் மீது மட்டுமே சுமத்தி விடுகின்றது. எப்படியோ ஏழு குழந்தைகளும் ஆதரவற்றுக் கிடந்தார்கள். அக்குழந்தைகளை பெண் தெய்வமான காளி வளர்க்கிறாள். அக்குழந்தைகள் சான்றோர் என்றழைக்கப்படுகின்றனர்.
அவர்கள் வளர்ந்து வாலிபர்கள் ஆன பிறகு ஒருமுறை மதுரையின் வைகை அணை உடைந்து வெள்ளப்பெருக்கு உருவானது. நதிக்கரையை அடைத்து, அணைக்கட்டுவதற்கு மண் சுமக்க, நாட்டின் அனைத்து ஆண்மகன்களும் வர வேண்டும் என்று பாண்டிய மன்னன் ஆணை பிறப்பிக்கிறான்.
‘மகுடம் சுமக்க வேண்டிய சான்றோர்களாகிய நாங்கள், தலையில் மண் சுமக்க மாட்டோம்’ என்று சான்றோர் வாலிபர்கள், மண் சுமக்க, மறுத்து விடுகின்றனர். கோபமுற்ற மன்னன் அவ்வாலிபர்களில் ஒருவனை கழுத்தளவு மண்ணுக்குள் புதைத்து யானையின் காலால் தலையை இடறச் செய்து அவனைக் கொல்கிறான். ‘கூடை தொடேன், கூடை தொடேன்’ என்றபடியே அவனது தலை உருண்டது.
இரண்டாவது வாலிபனை அழைத்து கூடையினை தூக்க சொல்கிறான் மன்னன். அவனும் மறுத்து விட, அவனது தலையையும் யானையின் காலால் இடறச்செய்து கொல்கிறான் மன்னன். “அந்தத்தலைக்கு இத்தலை பொய்த்தலையோ! ஏழு தலை இடறினும் கூடை தொடேன்! கூடை தொடேன்! கூடை தொடேன்!” என்று சொல்லிக் கொண்டே உருண்டது இரண்டாமவன் தலை. அக்காட்சியைக் கண்ட மன்னன் பயந்து, மீதமுள்ள 5 சான்றோர்களை விடுவித்து விடுகிறான்.3
இக்கதை நாடார்களை (சாணார்களை) சான்றோர் என்று நிறுவவும், அந்த சான்றோர் என்ற சொல்லே மருவி சாணார் என்றானது என்றக் கூற்றை உறுதிப்படுத்தவும், நாடார்களை வர்ணப்படிநிலையின் இரண்டாவது படிநிலையான சத்திரியன் என்னும் பட்டத்தில் நிலைநிறுத்தவும் சொல்லப்பெறும் ஒரு புனைவுக்கதையாகும்.
இந்த செவிவழிக்கதை அகிலத்திரட்டிலும் காணப்படுகின்றது.
அகிலத்திரட்டு சொல்லும் நாடார்களின் தொன்மக் கதை:
அகிலத்திரட்டின் சாதிய நிலைப்பாட்டைப் பற்றி அறிய, அகிலத்திரட்டு சொல்லும் நாடார்களின் தொன்மக்கதையை அறிய வேண்டியதும் அவசியமாகிறது.
ஏழு கன்னிமார்களுக்கு கங்கை நீரை திரட்டி எடுக்கும் ஆற்றல் இருந்தது. அவர்கள் அந்த கங்கை நீரை திரட்டி எடுத்துச் சென்று, சிவனுக்கு அபிஷேகமும் பூசையும் செய்து வந்தார்கள். திருமால் தனக்கு கங்கை நீரை அபிஷேகம் செய்து பூசை செய்யும்படி கன்னிமார்களிடம் கேட்டார். ஏழு கன்னிமார்கள், சிவனைத் தவிர வேறு எவருக்கும் பூசை செய்ய மாட்டோம் என்று மறுத்துவிட்டார்கள். இதனால் கோபமடைந்த திருமால், தனக்குக் கிடைக்காத அபிஷேகம் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைத்து விட்டார் போலும்!
ஏழு கன்னிமார்களின் கற்பை அழித்து விட்டால், அவர்களிடமிருக்கும், கங்கை நீரைத் திரட்டும் சக்தியை அழித்து விடலாம் என்றொரு கேவலமானத் திட்டத்தைத் தீட்டுகிறார் திருமால். திருமால் நெருப்பாக மாறி, குளித்து விட்டு குளிர் காய வந்த, ஏழு கன்னிமார்களையும் தழுவிக் கருவுறச் செய்கிறார்.
ஏழு கன்னிமார்களுக்கும் பிறக்கின்ற ஏழு ஆண் குழந்தைகளுக்கும் சாணார், சான்றோர், நாடாள்வார், சங்கு மன்னர், தர்மகுல வேந்தர், தெய்வகுல மன்னர், சூரியகுல வேந்தர், காட்டு ராசர் என்றெல்லாம் புகழ்ச்சியானப் பெயர்களையிட்டு அழைக்கின்றனர்.
குழந்தைகள் ஏழு பேரையும் பெற்றெடுத்த கன்னிமார்கள், தங்களின் கற்பழிந்து விட்டதால், கவலை கொள்கின்றனர். எனவே குழந்தைகளை திருமாலிடம் ஒப்படைத்து விட்டு தவமிருக்கச் சென்று விடுகின்றனர். சிறிது காலம் குழந்தைகளை வளர்த்த திருமால், குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை காளியிடம் ஒப்படைக்கிறார்.
காளி ஏழு குழந்தைகளையும் வாலிபப் பருவம் வரும் வரை வளர்க்கின்றாள். வளர்ந்த வாலிபர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறாள். அவர்களுக்கு குழந்தைகளும் பிறக்கிறார்கள். அவ்வாலிபர்கள் முத்து வியாபாரம், பொன் வியாபாரம், வைர வியாபாரம், மிளகு வியாபாரம் போன்ற வியாபாரங்களில் சிறந்து விளங்கினர். எல்லா வித்தைகளிலும் சிறந்து விளங்கிய அவ்வாலிபர்களைப் பற்றி அறிந்த சோழன், அவர்களுக்கு நாட்டின் சிறு பகுதியைக் கொடுத்து அரசாளும் உரிமையையும் கொடுத்து முடிசூட்டினான். சோழனின் எதிரிகளை போரில் வெல்ல அந்த வாலிபர்கள் உதவினார்கள்.
“வெட்டாத படையை வெட்டி விருது பெற்று
அட்டாள தேசம் அடக்கி அரசாண்டிருந்தார்” (அகிலத்திரட்டு).
இவ்வாறாக அவ்வாலிபர்கள் அரசாண்டுக் கொண்டிருக்க, இதற்கிடையில் கலியுகம் தோன்றி கலியனும் கலிச்சியும் பிறக்கிறார்கள். அதனால் அநீதி பெருகுகிறது.
அப்போது, வைகை நதியில் வெள்ளப்பெருக்கெடுத்து அணை உடைந்து வெள்ளம் ஊருக்குள் வந்தது. அப்போது சோழ மன்னன் வைகை அணையின் உடைப்பை சரி செய்ய எல்லா சாதி மக்களும் மண் சுமக்க வர வேண்டும் என்று கட்டளையிடுகிறான்.
எல்லோரும் சேர்ந்து எவ்வளவு முயன்றும் வைகை அணையை அடைக்க முடியவில்லை. அப்போது கோழன் என்ற பெயர் கொண்ட ஈழன் ஒருவன், சான்றோர்கள் மண் சுமந்து அணை கட்டினால், விரைவில் அணையைக் கட்டி முடித்து விடலாம் என்று சொல்கிறான். அதைக் கேட்ட மன்னன் சான்றோர்களை அழைத்து, குட்டைகளில் மண் சுமந்து அணையைக் கட்டும் படி கட்டளையிட்டான். அந்த வாலிபர்கள், ‘நாடாண்ட நாங்கள் மண் சுமக்கும் பணியை செய்ய மாட்டோம்’ என்று மன்னனிடம் வாதிடுகிறார்கள்.
“நல்லது அல்ல மன்னவனே நம்மோடு இது உரைக்க
இல்லை இந்த வேலை இதற்கு முன் கேட்டிலையோ
வெட்டாப்படையை வெற்றி கொண்டோம் உம்மாலே
பட்டாங்கு எல்லாம் பகர்ந்தாரே சோழனிடம்”
என்ற அகிலத்திரட்டின் வரிகளின் பொருள் பின்வருமாறு:
‘எங்களிடம் குட்டையில் மண் சுமக்க சொல்வது நல்லது அல்ல மன்னவனே! உன் உதவியுடன் வெட்ட முடியாத படைகளை வெற்றி கொண்டோம். அத்தகைய எங்களை மண் சுமக்கும் பணி செய்யச் சொல்வது நல்லதல்ல’, என்று சான்றோர் வாலிபர்கள் சோழனிடம் சொல்வதாக அகிலத்திரட்டு குறிப்பிடுகின்றது.
மண் சுமக்க மறுத்த சான்றோர்கள்மேல் மன்னன் கோபம் கொள்கிறான். அவ்வாலிபர்களில் ஒருவனின் தலையை, தன் பட்டத்து யானையின் காலால் இடறச் செய்து கொலை செய்கிறான். அடுத்த வாலிபனை அழைத்துக் குட்டையை எடுக்கச் சொல்ல, அவனும் குட்டையில் மண் சுமக்க மறுக்கிறான். அவனையும் யானையின் காலால் தலை இடறச்செய்து கொலை செய்கிறான் சோழ மன்னன்.
தன் பிள்ளைகளின் இழப்பால் கோபமுற்றத் திருமால், பிட்டுக்கு மண் சுமந்து, பிரம்படி பட்டு, வைகை அணையைக் கட்டி, அதிசயம் புரிந்துக் காட்டினார் என்றுரைக்கிறது அகிலத்திரட்டு.4
இந்த பிட்டுக்கு மண் சுமந்த கதை, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலிருக்கும் சொக்கநாதரின் கதையாகச் சொல்லப்படுவதுண்டு. இங்கு சிவனையும் திருமால் என்கிறார் அய்யா வைகுண்டர்.
செவிவழியாகச் சொல்லப்படும் தொன்மக்கதையில் ஏழு கன்னியர்களுக்கு இணையராக இந்திரன் இருக்கிறார். அகிலத்திரட்டு அம்மானை, இந்திரன் கதாபாத்திரத்துக்கு பதிலாக திருமாலைச் சொல்கிறது. பாண்டிய மன்னனின் கதாபாத்திரத்துக்குப் பதிலாகச் சோழனைக் காட்டுகிறது அகிலத்திரட்டு.
மேற்சொன்ன இக்கதை நடந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் ஏதுமில்லை. இக்கதை நாட்டு தெய்வங்களுடன் ஆரியப் புராணக் கதைகளையும் ஆரியப் புராணக் கதாபாத்திரங்களையும் கலந்து உருவாக்கிய ஒரு கற்பனைக் கதையாகவே உள்ளது. நாடார்கள் இக்கதையை தங்களுக்கான பெருமைமிகு வரலாறாகக் கருதுகின்றனர். ஆனால் இக்கதை வெறும் புனைவுக்கதையேயன்றி வரலாறு அல்ல!
“நாங்கள்லாம் கிராமிசு நாடான் குடும்பம், நாங்க கூடையைத் தலையில சுமக்க மாட்டோம்” என்று வயதான பாட்டி ஒருத்தி அடிக்கடி சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதாவது தலையில் கூடையை சுமப்பதை நாடார்கள் கௌரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். அந்த நினைப்பின் அடித்தளம் இக்கதையேயாகும். மகுடம் சுமக்க வேண்டிய தலையில் குட்டை சுமக்க மாட்டோம் என்பதே இவர்களின் கூற்றாக உள்ளது. இக்கூற்று ஜனநாயகத்திற்கு எதிரானதாகும்.
இப்போதும் நாடார்கள் தங்களை பத்திரகாளியின் பிள்ளைகள் என்று சொல்லி பெருமை கொள்வதைக் காண முடிகின்றது.
‘மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்
கண்டுதொழுததுவும் கைக்கட்டி சேவிப்பதும்’
என்ற அகிலத்திரட்டு அம்மானையின் வரியில் ‘மாகாளி மக்கள்’ என்று சொல்லப்பட்டிருப்பது நாடார்களையே (சாணார்களையே).
இப்பெருமைகள் எல்லாம் ‘சத்திரியன்’ பட்டத்தை அடைவதற்கான நாடார் சாதியினரின் ஒரு முயற்சி மட்டுமே!
மற்றபடி இக்கதையில் பெருமைக்குரிய சம்பவங்களைத் தேடி நான் தோற்றுப் போனேன்.
அகிலத்திரட்டு சொல்வது போல் திருமால் ஏழு கன்னிமார்களின் அனுமதியின்றி அப்பெண்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவானது வன்புணர்ச்சிக் குற்றத்தின் கீழல்லவா சொல்லப்பட வேண்டும்? தெய்வீகப் புணர்வாகவேக் கொண்டாலும், இதில் என்ன பெருமை இருக்கிறது?
இக்கதை சொல்லும் சான்றோர்களின் (நாடார்களின்) பிறப்பிலும், எந்தப் பெருமையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அத்துடன் ஆற்றின் கரை உடைந்து ஊரின் உயிர்கள் எல்லாம் அழிந்து விடும் சூழலில் இருக்கும் போது, ‘வைகைக் கரையை அடைக்க உழைக்க மாட்டேன்’ என்று சான்றோர்கள் சொல்வது, பொதுநலமற்ற, மனிதத்தன்மையற்ற செயலல்லவா? சான்றோர் வாலிபர்கள் வைகைக் கரையை கட்ட, மண் சுமக்க மறுத்ததில் எந்தப் பெருமையும் இல்லை, மாறாக இழிவே உள்ளது.
ஆனால் சான்றோர்களின் உழைப்பின் ஆற்றலை, அணைக்கட்ட பயன்படுத்திக் கொள்ளலாம், என்று ஆலோசனை சொன்ன கோழன் என்ற ஈழனை நீசன் என்கிறது அகிலத்திரட்டு.
உண்மையில் இக்கதையை நம்புகின்ற நாடார் மக்கள் தன் முன்னோர்களின் மனிதத்தன்மையற்ற செயலை நினைத்து, அவமானப்பட வேண்டும், அல்லது மேற்கூறிய இழிவு நிறைந்த கதையை ஏற்க மறுக்க வேண்டும். இவ்வாறிருக்க, இக்கதையில் நாடார் மக்கள் எதைப் பெருமையாகக் கருதுகிறார்கள் என்பது புலப்படவில்லை.
நாடார்களின் (சாணார்களின்) மூதாதையர் நாடாண்ட ‘ஆண்ட பரம்பரையினர்’ என்று சொல்லிப் பெருமை கொள்வதன் மூலம் நாடார்கள் தங்களை சத்திரியர்கள் என்று நிரூபிக்கப் புனையப்பட்ட இந்த புனைவுக்கதையில் எள் மூக்கின் நுனியளவேனும் பெருமை இருப்பதாக நான் கருதவில்லை.
சான்றோர்கள் சோழனையும் தட்டப்படாது எனவே
நன்றியுடன் நின்றார் நாடி அவன் பிடித்துக்
குட்டை எடு என்றிடவே கூடாது என உரைக்க
தட்டினான் வைகையிலே தலையை சாணான்தனையும்
ஆனைதனை விட்டு அரசன் அந்த சோழ மன்னன்
சேனைத் தலைவர் சிறந்த சான்றோர் தம்மில்
கொன்றான் ஒருவனையும் குளக்கரையில் அம்மானை
பின்னால் ஒருவனையும் பிடித்துக் கொண்டு வாரும் என்றான்
குட்டை எடு என்று கூறினான் மாபாவி
திட்டமுடன் ஆண்ட தெய்வக் குலச்சான்றோர்
முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களும்தான்
இன்னம் இந்தக் குட்டை யாங்கள் தொடோம் என்றனராம்
பின்னும் அந்த சோழன் பிடித்து அவன்தனையும்
கொன்றான்காண் வைகைதனில் குஞ்சரத்தை விட்டிடறி
நன்றி மறந்து நாடாண்ட சோழ மன்னன்
கொன்றான் காண் இரண்டு தெய்வக் குலச்சான்றோரை!
என்ற அகிலத்திரட்டின் வரிகளை உற்று நோக்குக!
‘தட்டினான் வைகையிலே தலையை சாணான்தனையும்’ என்ற வரியின் மூலம் இதில் சான்றோர் என்று கூறப்படுபவர்களும் சாணார் என்று கூறப்படுபவர்களும் ஒரே இனத்தவரே (சாதியினரே) என்பதுத் திண்ணம்.
‘தெய்வக்குலச் சான்றோர்’ என்ற அகிலத்திரட்டின் வார்த்தை சாதிப்பெருமை பேசுகிறது.
அய்யா வைகுண்டர், நாடார் (சாணார்) சமூகத்தை சத்திரிய சமூகமாகக் காட்டிப் பெருமிதம் கொள்ளவே இக்கதையை அகிலத்திரட்டில் சேர்த்திருக்கிறார் என்பது எனது கருத்து. அய்யா வைகுண்டரின் இந்த நிலைப்பாட்டிலும் நான் முரண்படுகிறேன். வர்ணப்படிநிலையை முற்றிலும் அழிப்பதே ஏற்றத்தாழ்வை அழிக்கும் வழி! மாறாக, ‘நான் பிராமண வர்ணத்துக் காலுக்குக் கீழ்’ என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்க முடியும்?
மூலப்பொருள் கண்ட முதல்சாதி ஆனவரோ
நாதம் இரட்டை ஊதி நாடாளும் மன்னவரோ
போன்ற அகிலத்திரட்டு அம்மானையின், சான்றோரைப் பாராட்டும் வரிகளும், இன்னும் சில வரிகளும் சாதிப்பெருமை பேசுகின்றன.
நாராயணர் அய்யா வைகுண்டருக்கு விஞ்சை வழங்கும் போது,
‘இம்மூணு தவமும் இயல்பாய் நிறைவேறி
மும்மூவருக்கும் முதல்வனாய் வந்தாக்கால்
தான் ஆனாய் நீயும் தலைவனும் நீ என் மகனே
சாணாரின் நாயகமே சாதித்தலைவன் நீயே!’5
என்று கூறுகிறார்.
அதாவது நாராயணர் சொன்ன “மூன்று தவங்களையும் நிறைவேற்றி விட்டால், அய்யா வைகுண்டர் சாணார் சாதியின் தலைவர் ஆகி விடுவார்” என்று நாராயணர் வைகுண்டரிடம் சொல்வதாக அமைந்துள்ளது மேற்கூறிய அகிலத்திரட்டு அம்மானையின் வரிகள்.
இவற்றையெல்லாம் ஆராய்ந்து, அய்யா வைகுண்டர் சுயசாதிப் பற்று கொண்டவர் என்றும், தன் சுயசாதிக்காக மட்டுமே போராடியவர் என்றும், ஒரு முடிவுக்கு வந்து விடலாம் என்று நினைத்தால், அகிலத்திரட்டு அம்மானையின் வேறு சில வரிகள் அந்த முடிவை முற்றிலுமாக மறுத்து உடைத்து விடுகின்றன.
‘நீதியரோமம் வீசி நினைவு ஒன்றைக் கருணை வாசி
சாதிகள் உரைகள் ஆறிச் சடத்து உறவு ஆசையற்று
வாதி ஆங்காரமற்று மலசலம் மதங்களற்று
ஆதியைக் கருணை நாட்டி அவர் தவம் புரிந்தார் அய்யா’6 என்ற அகிலத்திரட்டின் வரிகளின் பொருள் பின்வருமாறு:
நீதி பேசுபவர்கள் வளர்க்கும் ஓமத்தை (ஹோமத்தை) வீசிவிட்டு, நினைவில் கருணை ஒன்றினை மட்டுமேக் கொண்டு, சாதிகள் பற்றிய விளக்கங்களை நீர்த்துப்போகச் செய்து (ஆறி = ஆற அமர, சூடான உணவு ஆறுவதைப் போல் ஆறி விடுதல்), சடம் என்னும் மனிதன் கொள்ளும் உறவும் ஆசையும் அற்று, வாதம் செய்பவர்களின் அகங்காரம் அழிந்து, மல சல உணர்வும், மதங்களும் ஒழிந்து, ஆதியின் மீது கருணையை நாட்டி அவர் தவம் புரிந்தார்.
இதில் சாதிகள் பற்றிய உரைகள் ஆறிப் போக வேண்டும் என்று அகிலத்திரட்டு சொல்வதை கவனிக்க!
(குறிப்பு: நீதியரோமம் என்பதற்கு ‘சக்தி பொருந்திய ரோமம்’ என்று நா.விவேகானந்தன் அவர்கள் உரை எழுதியிருப்பது எனக்கு ஏற்புடையதாக இல்லை. ‘நீதியர் ஓமம்’ என்று பிரித்துப் பொருள் கொள்வதே பொருத்தமானதாக இருக்கும்.7
‘ஓமப் பசாசுகளை ஒதுங்க உபதேசித்தார்’என்ற அகிலத்திரட்டின் வரியில் ஓமம் என்ற சொல்லை காண்க! ஓமம் என்பது ஹோமம் என்ற சொல்லிலிருந்து மருவிய நாஞ்சில் நாட்டின் வழக்காற்றுச் சொல் ஆகும். காணிக்கை, கைக்கூலி முதலான மூடநம்பிக்கைகளை வேண்டாம் என்று சொன்ன அய்யா வைகுண்டர் ஹோமம் போன்ற மூடநம்பிக்கையையும் வீசி எறிந்து விட சொல்வதில் வியப்பேதும் இல்லை.)
‘சாணார் முதலாகச் சாதி பதினெட்டையுமே
நாணாமல் ஓடிவர நாராயணர் நினைத்தார்
நினைத்தவுடன் நிமிசம் பொறுக்காமல்
தினந்தோறும் வந்து சேரும் நருட்கள் அது
எண்ணக் கூடாது எவராலும் அன்போரே
திண்ணமுள்ள சாதி செப்ப ஒண்ணாது அன்போரே’8
அய்யா வைகுண்டர் தவமிருக்கும் போது சாணார் முதலாக பதினெட்டு சாதிகளும் வைகுண்டரைப் பார்க்க வர வேண்டுமென்று நாராயணர் நினைத்தார். தினமும் வைகுண்டரைக் காண வந்த மனிதர்களின் எண்ணிக்கை எண்ண முடியாத அளவுக்கு இருந்தது என்று கூறும் அகிலத்திரட்டு, வந்தவர்கள் இந்தெந்த சாதியை சேர்ந்தவர்கள் என்று திண்ணமாகச் சொல்ல முடியாதபடி, எல்லா சாதியினரும் வைகுண்டரைக் காண வந்தனர் என்றும் கூறுகிறது.
எனில் அய்யா வைகுண்டர் சாதி பேதமின்றி தன்னைக் காண வந்த அனைவரையும் தனது இயக்கத்தில் இணைத்துக் கொண்டுள்ளார் என்பது புரிகின்றது.
‘பதினெண் சாதிகளும் பண்பாய் ஒரு தலத்தில்
விதி வந்தது என்று மேவிக்குலாவி இருந்தார்’
‘சாதி பதினெட்டும் தலம் ஒன்றிலே குவிந்து
கோரிக் குடிக்கும் ஒரு கிணற்றில்’
போன்ற அகிலத்திரட்டின் வரிகளும் பதினெட்டு சாதிகளின் ஒற்றுமையைக் கூறுவதைக் காண்க!
ஆரம்பத்தில் சாணார் சாதியின் தொன்மக்கதையினைப் பெருமையாகப் பேசுகின்ற அகிலத்திரட்டு அம்மானை, வாசிப்பின் பயணத் தொடர்ச்சியில் எல்லா சாதி மக்களையும், சாதி மத பேதமின்றி ஏற்று அரவணைக்கிறது. ஏன் இந்த முரண்பாடு?
அடுத்த அத்தியாயத்தில்…
தரவுகள்:
1* – பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு,பக்கம் எண் 259
2* – the quiver மாத இதழில் வெளியான S.Matteer அவர்களின் கட்டுரை – https://archive.org/details/sim_quiver_1871-11-04_7_320
3* – தமிழக நாடார்கள், ஒரு சமுதாய மாற்றத்தில் அரசியல் பண்பாடு, ராபர்ட் எல். ஹார்டுகிரேவ், தமிழாக்கம் எஸ்.டி.ஜெயபாண்டியன், முதல் பதிப்பு, 2019, பக்கம் எண் – 26.
4* – பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, பக்கம் எண் – 58 முதல் 73 வரை மற்றும் 97 முதல் 99 வரை.
5* – பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, பக்கம் எண் 201.
6* – பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, பக்கம் எண் 238.
7* – நா.விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 2, இரண்டாம் பதிப்பு, 2006, [தமிழக அரசு நூல் உரிமைப் பதிவுத் தொடர் எண் 5231, தேதி: 26.12.2003], பக்கம் எண் – 140 & 141.
8* – பொ.முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, பக்கம் எண் 239.
படைப்பாளர்
சக்தி மீனா
பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.