“பதினேழு வயதில் பண்டு அமைத்த பெண்ணோடு
விதியானபடியால் மெல்லியர் மேல் இச்சை கொண்டு
கூடிக் குணமாய்க் கொண்டவனையும் அகற்றித்
தேடி இவரோடு செய்ய ரசமாய் இருந்தாள்
வானு பரமேசுரனார் மாயவனார் ஆணையிட்டு
நானும் நீயுமாக நலமாக வாழ்வோம் என
ஆணையிட்டு இருபேரும் அகம் மகிழ்ந்து அன்று முதல்
நாணம் இல்லாமல் நாயகம் போல் வளர்ந்தார்
மங்கை காணாமல் மறு ஊரு தங்க அறியார்
அங்கு அவனைக் காணாது அயலூரு தங்க அறியார்
இந்தப்படியாய் இவர் வளரும் நாளையிலே
எந்த நருள் கண்டு இவனுக்கு இவளை அமைத்தது என்பார்
முன்னாள் அமைத்த ஊழி விதியெனவே
சொன்னார் அவரும் சுவாமி அருளாலே”1
மெல்லியர், ‘அவனை’க் காணாமல் = முத்துக்குட்டி
மங்கை = பரதேவதை
சம்பூரணத்தேவன் மனிதனாகப் பிறந்து வளர்ந்து வாழ்ந்த விவரங்களைச் சொல்லும் போது ‘அகிலத்திரட்டு அம்மானை’மேற்கண்ட வரிகளில், அய்யா வைகுண்டரின் திருமண வாழ்க்கையைப் பற்றி சொல்கிறது. இதில் வருகின்ற “பதினேழு வயதில் பண்டு அமைத்த பெண்ணோடு” என்ற வரியில் இருந்துதான், அய்யா வைகுண்டர் பரதேவதையை கல்யாணம் செய்து கொண்ட போது, அவரது வயது பதினேழு என்பதை அறிகிறோம்.
முத்துக்குட்டி என்னும் அய்யா வைகுண்டர் பிறந்த ஆண்டு 1809 (கொல்லம் ஆண்டு 984 மாசி 21). முத்துக்குட்டி பரதேவதையை மணந்து கொண்டபோது முத்துக்குட்டியின் வயது 17 எனில், முத்துக்குட்டி பரதேவதையைத் திருமணம் செய்து கொண்ட ஆண்டு 1825 (கொல்லம் ஆண்டு 1001).
முத்துக்குட்டி மற்றும் பரதேவதையின் திருமணம் நிகழ்ந்த போது முத்துக்குட்டியின் வயது 17 எனில் பரதேவதையின் வயது, 17க்கும் குறைவாகவே இருந்திருக்கும். பொதுவாகவே நமது சமூத்தில் மணமகனை விட மணமகளின் வயது குறைவாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள் இல்லையா? இதையெல்லாம் ஒப்பிட்டு நோக்கும் போது, பரதேவதையின் முதல் திருமணம் அவளது மிகச்சிறிய வயதிலேயே நடந்திருக்கும் என யூகிக்க முடிகிறது. அதாவது பரதேவதையின் முதல் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும். இக்கூற்றுடன் பரதேவதையின் முதல் கல்யாண வாழ்க்கையில் அவளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர் என்ற ‘அய்யா வைகுண்டரின் தென்பாண்டி நாட்டு வருகை’ புத்தகத்தின் செய்தியை பொருத்திப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.2
எனில் பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு காலகட்டங்களில், ஆதிக்கச் சாதிகளிடையே மட்டுமன்றி, அனைத்து சாதிகளிலும் குழந்தைத் திருமணம் வழக்கத்தில் இருந்துள்ளது. அத்துடன் பதினேழு வயதிலேயே முத்துக்குட்டி (அய்யா வைகுண்டர்) மிகவும் பக்குவப்பட்ட முற்போக்குவாதியாகத் திகழ்ந்திருக்கிறார் என்பதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
மேற்சொன்ன அகிலத்திரட்டின் வரிகளான,
‘நாணம் இல்லாமல் நாயகம் போல் வளர்ந்தார்
மங்கை காணாமல் மறு ஊரு தங்க அறியார்
அங்கு அவனைக் காணாது அயலூரு தங்க அறியார்
இந்தப்படியாய் இவர் வளரும் நாளையிலே
எந்த நருள் கண்டு இவனுக்கு இவளை அமைத்தது என்பார்
முன்னாள் அமைத்த ஊழி விதியெனவே
சொன்னார் அவரும் சுவாமி அருளாலே’ ஆகிய வரிகளை நோக்குக!
பொருள்: வெட்கம் இல்லாமல் தலைமை போல் வாழ்ந்தார்கள். பரதேவதையைக் (மங்கை) காணாமல் முத்துக்குட்டி மற்ற ஊரில் தங்கியிருக்க விரும்பமாட்டார். முத்துக்குட்டியைக் காணாமல் பரதேவதை அயலூரில் தங்கி இருந்ததில்லை. இவ்வாறாக அவர்கள் வாழ்ந்து வரும்போது, இவனுக்கு இவளென்று அமைத்தது எந்த மனிதன்? என்று ஊரார் வியந்து கேட்பார்கள். சாமி அருளால், முன்னாளில் அமைத்த ஊழ் வினை விதி என்று முத்துக்குட்டி அவர்களிடம் சொல்வார்.
இவ்வரிகளின் பொருள், முந்தைய அத்தியாயத்தில் நாம் கண்ட சில அகிலத்திரட்டு அம்மானை வரிகளின் பொருளிலிருந்து முரண்பட்டு நிற்கிறது. முந்தைய அத்தியாயத்தில்,
‘சந்தோசம் அற்று சகலோர்க்கும் நாணமுற்று
முற்புருசன் தனக்கு மூலக்கருக்கேடு அணைத்து
இப்புருசன்தாம் எனவே எவ்வுலகும் தாமறிய
கட்டின மாங்கலியம்’ என்று ஈசரும் நாராயணரும் பரதேவதைக்கு வரம் கொடுத்ததைக் கண்டோம். இதில் நாணமுற்று சந்தோஷம் அற்று வாழ பரதேவதை வரம் வாங்குவதாகச் சொல்கிறது அகிலத்திரட்டு அம்மானை.
‘நாணம் இல்லாமல் நாயகம் போல் வளர்ந்தார்
மங்கை காணாமல் மறு ஊரு தங்க அறியார்
அங்கு அவனைக் காணாது அயலூரு தங்க அறியார்
இந்தப்படியாய் இவர் வளரும் நாளையிலே
எந்த நருள் கண்டு இவனுக்கு இவளை அமைத்தது என்பார்’ என்ற வரிகளில் நாணம் இல்லாமல், முத்துக்குட்டி மற்றும் பரதேவதை ஆகிய இருவரும் ஒருவருக்கொருவர் காதலோடு வாழ்ந்ததாகவும், ஊரார் அவர்களின் வாழ்வை வியந்து புகழ்ந்ததாகவும் சொல்கிறது அகிலத்திரட்டு அம்மானை.
எனில் அக்காலத்தில் பரதேவதை மற்றும் முத்துக்குட்டியின் திருமண உறவை அவமானப்படுத்திய மக்களும் இருந்திருக்கிறார்கள், முற்போக்கான அவர்களின் வாழ்க்கைக்கு ஆதரவு தந்த மக்களும் இருந்திருக்கிறார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
மொத்தத்தில் வரம் பலிக்கவில்லை.
இரண்டு பெயர்கள்
அய்யா வைகுண்டர் அய்யாவழி மார்க்கத்தை உருவாக்கியக் காலகட்டத்தில், அய்யா வழியில் இணைந்த மக்களுக்கு, அவர்களுடைய பழைய பெயரை மாற்றிப் புதிதாகப் பெயரிடும் வழக்கம் இருந்துள்ளதாகத் தெரிகிறது.
அய்யா வைகுண்டரின் சமகாலகட்டத்தில் வாழ்ந்த வேலுப்பெருமாள் என்பவரின் வாழ்க்கையை இக்கூற்றுக்குச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். வேலுப்பெருமாள் என்பவர் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர். சிவன், விஷ்ணு, பத்திரகாளி போன்ற தெய்வங்களுக்கு கோயில் கட்டி, விழாக்கள் நிகழ்த்திய மன்னர்களிடம் பணி புரிந்த பாரம்பரியத்தைக் கொண்டவர்கள் வேலுப்பெருமாளின் முன்னோர்கள். வேலுப்பெருமாளின் 29ஆவது வயதில், ஒருமுறை கோயில் திருவிழா முடிந்த ஐந்தாவது நாளன்று, அவரது மூத்த மகன் காலரா நோயால் இறந்து போனான்.
அதனால் வேலுப்பெருமாளும் அவருடைய மனைவியும் மிகுந்த துக்கத்துக்கு ஆளாயினர். அச்சமயத்தில் அந்தத் தம்பதியினர் முத்துக்குட்டியைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரைக் காணச் சென்றனர். முத்துக்குட்டியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட வேலுப்பெருமாள், முத்துக்குட்டியின் அய்யாவழி இயக்கத்தில் இணைந்தார். தன் சொத்துகளை விற்று நிழற்தாங்கலைக் (பதி) கட்டினார். அய்யா வழியில் இணைந்த வேலுப்பெருமாளின் பெயர், ‘பொன்னிப்பெருமாள்’ என்று மாற்றப்பட்டது. இச்செய்திகளை சாமுவேல் மேட்டீர் (Samuel Mateer) அவர்கள் பதிவு செய்கிறார்.3
பரதேவதை என்ற திருமாலம்மாள், முத்துக்குட்டி என்ற வைகுண்டர் போன்ற பெயர்களையும் உற்று நோக்க வேண்டியது அவசியமாகும்.
அய்யா வைகுண்டர் பிறந்தவுடன் பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் முடிசூடும் பெருமாள் என்பதாகும். ஆனால் வைகுண்டர் பிறந்த காலத்தில், திருவிதாங்கூரில் நிலவிய சாதியக் கட்டுப்பாடுகளில் ஒன்று, ‘தாழ்த்தப்பட்ட மக்கள், தங்கள் பிள்ளைகளுக்கு அரசன், ராஜா, வீரன், செல்வந்தன் போன்ற பொருள்படும்படியான நாகரீகமானப் பெயர்களைச் சூட்டக்கூடாது, சுடலை, பேச்சி போன்ற பெயர்களையே சூட்ட வேண்டும்’ என்பதாகும்.4
மனுநீதி சாஸ்திரத்தின் இரண்டாவது அத்தியாயம் 32வது சமஸ்கிருத ஸ்லோகம், எந்தெந்த வர்ணத்தாருக்கு எப்படிப்பட்ட பெயர்களைச் சூட்ட வேண்டும் என்பதைக் கூறுகின்றது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசாட்சி, மனுநீதி சாஸ்திரம் கூறிய சட்டங்களின் அடிப்படையிலேயே இயங்கியது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.5
எனவே முடிசூடும் பெருமாளுக்கு, முடிசூடும் பெருமாள் என்ற பெயரிட்டது சட்டப்படிக் குற்றம் என்று திருவிதாங்கூர் அரசாங்கத்தின் அதிகாரிகள், ‘வெயிலாள், பொன்னுமாடன்’ தம்பதியரை மிரட்டினர் அல்லது எச்சரித்தனர். எனவே முடிசூடும் பெருமாளின் பெயரை முத்துக்குட்டி என்று பெற்றோர் மாற்றினார்கள்.
தன்னைத் தாழ்த்தப்பட்டவனாக அடையாளப்படுத்திய முத்துக்குட்டி என்ற பெயரை, தன்னுடைய 24ஆவது வயதில் வைகுண்டர் என்று மாற்றிக் கொண்டார் அய்யா வைகுண்டர். எனவே அய்யா வைகுண்டரின் பெயர் மாற்றும் செய்கைக்கானக் காரணம் மேற்கூறிய பெயர் தொடர்பான சாதியக் கட்டுப்பாட்டைத் தகர்த்தெறிவதாகும்.
அது போலவே ‘பரதேவதை’ என்ற பெயரை பின்னாளில், அய்யா வைகுண்டர் திருமாலம்மாள் என்று மாற்றியிருக்கக்கூடும். அவ்வாறே அய்யா வைகுண்டர் தனது இயக்கத்தில் சேர்ந்தவர்களின் பெயரையும் மாற்றும் வழக்கத்தை உருவாக்கியிருக்கலாம்.
இப்போதும்கூட அய்யா வழியைப் பின்பற்றுபவர்கள் சிலருக்கு இரண்டு பெயர்கள் இருப்பதை நான் கண்டறிகிறேன். வீட்டில் செல்லமாக அழைக்க ஒரு பெயர், சான்றிதழில் ஒரு பெயர் என்று இரண்டு பெயர் இருக்கிறது. இது அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய மேற்கண்ட வழக்கத்தின் எச்சமாகக்கூட இருக்கலாம். சமீபத்தில் நான் சந்தித்த, ஒரு அய்யா வழியை பின்பற்றும் பெண், தனக்கு இரண்டு பெயர்கள் இருப்பதை என்னிடம் சொன்னாள்.
“அய்யா வழிக்காரவிய எல்லாருக்கும் ரெண்டு பேர் இருக்குமா? இப்படி நிறைய பேருக்கு இருக்கே!?” நான் அந்தப் பெண்ணிடம் கேட்டேன்.
“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல… எனக்கு மட்டும்தான் ரெண்டு பேர். எங்க வீட்ல வேற எல்லாருக்கும் ஒரு பேர்தான்” என்றாள் அவள்.
நான் சந்தித்த இரண்டு பெயர் கொண்ட அய்யா வழியினர், தங்களின் இரண்டு பெயர்களுக்கு இப்படித்தான் விளக்கம் சொல்கின்றனர்.
ஆனால் வரலாறில் அய்யா வைகுண்டர் தன்னிடம் வந்த சீடர்களின் இயற்பெயர்களை மாற்றியிருக்கிறார். அய்யா வைகுண்டரின் பிரதான சீடர்களாக ஐந்து சீடர்களைச் சொல்கின்றனர். அந்த ஐந்து சீடர்களுக்கும் இரண்டு பெயர்கள் உண்டு!
மேலும், கிறிஸ்தவ மதத்துக்கு மாறுகின்ற மக்களுக்கு பெயர் மாற்றம் செய்யும் கிறிஸ்தவ மதத்தின் வழக்கதையும் அய்யா வைகுண்டரின் பெயர் மாற்றும் வழக்கத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன்.
குறிப்பு: முத்துக்குட்டி இயக்கத்தில் சேர்ந்த வேலுப்பெருமாள், ‘muttukutti pagoda’-வை உருவாக்கினார் என்று Samuel Mateer குறிப்பிடுகின்றார். ‘muttukutti pagoda’ என்பது நிழற்தாங்கல் அல்லது பதி ஆகும்.
தொடரும்…
- நா.விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 2, இரண்டாம் பதிப்பு, 2006, (தமிழக அரசு நூல் உரிமைப் பதிவுத் தொடர் எண் 5231, தேதி: 26.12.2003), 1* – பக்கம் எண் 18, 4 – மூல ஆசிரியர் வைகுண்ட சாமி பற்றி’ பகுதியில், பக்கம் எண் XIV, பொ. முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட ‘அகிலத்திரட்டு அம்மானை’, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, 1* – பக்கம் எண் 190, அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள ‘அகிலத்திரட்டு அம்மானை’, வைகுண்டர் பதிப்பு 178, (2011) இரண்டாம் பதிப்பு, 1* – பக்கம் எண் 239
- அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்தில் வேலு, சூரன்குடி அ.இன்பக்கூத்தன் ஆகிய இருவரின் கள ஆய்வில் எழுதப்பட்ட புத்தகம், முதல்பதிப்பு 2011, 2 – பக்கம் எண் 19, 4 – பக்கம் எண் 18
- The gospel in South India : or the religious life, experience, and character of the Hindu Christians : Mateer, Samuel, 1835-1893, பக்கம் எண் 83 & 84. https://archive.org/details/gospelinsouthind00mate/page/84/mode/2up?q=MUTTUKUTTI
- ‘இறைவனின் வைகுண்ட அவதாரம்’, ஆ.கிருஷ்ணமணி, முதற்பதிப்பு (4.3.2014), 4 – பக்கம் எண் 20, அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்தில் வேலு, சூரன்குடி அ.இன்பக்கூத்தன் ஆகிய இருவரின் கள ஆய்வில் எழுதப்பட்ட புத்தகம், முதல்பதிப்பு 2011, 4 – பக்கம் எண் 18, நா.விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 2, இரண்டாம் பதிப்பு, 2006, (தமிழக அரசு நூல் உரிமைப் பதிவுத் தொடர் எண் 5231, தேதி: 26.12.2003), மூல ஆசிரியர் வைகுண்ட சாமி பற்றி’ பகுதியில், பக்கம் எண் XIV
- மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம், மூலமும் உரையும் முழுவதும், உரையாசிரியர் அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா, பதிப்பாசிரியர்: விகரு ராமநாதன, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், நான்காம் பதிப்பு 2017, 5 – பக்கம் எண் 51 & 52.
படைப்பாளர்
சக்தி மீனா
பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.