Site icon Her Stories

முட்டை மாஃபியா!

Three baby black-birds, opening mouth for food in a nest. The nest is in the bush

முட்டையிலிருந்து ஒரு பறவைக் குஞ்சு வெளிவந்திருக்கிறது. வந்த உடனே அது செய்யும் முதல் வேலை, கூட்டிலிருக்கும் மற்ற முட்டைகளைக் கீழே தள்ளி உடைப்பதுதான்.

சொத்.

சொத்.

சொத்.

உணவைச் சேகரித்துக்கொண்டு திரும்பி வரும் பறவைப் பெற்றோர், இது ஏதோ தற்செயல் என்று நினைத்துக்கொண்டு அந்தக் குஞ்சுக்கு உணவூட்டுவர். அதுவும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும்.

நன்றாக உணவு உண்ணும் குஞ்சு, பெற்றோரைவிடப் பெரிதாக வளர்ந்து நிற்கும்போதுதான் தெரியும் – அது அந்தப் பறவையினமே அல்ல. வேறு எதோ ஊடுருவி அது. தன் குழந்தை என்று நினைத்து வேறு எதையோ அந்தப் பறவைகள் இத்தனை காலம் வளர்த்திருக்கின்றன.

கண்ணீர் மல்கச் செய்யும் தமிழ் சென்டிமெண்ட் திரைப்படத்தின் முக்கியமான கதைத்திருப்பத்தைப் போல இருக்கும் இது, இன்றுவரை விஞ்ஞானிகளைக் குழப்பிவரும் ஒருவகை ஒட்டுண்ணிப் பண்பு. இதன் பெயர் குஞ்சு ஒட்டுண்ணித்தனம் (Brood Parasitism). அதாவது, தன் குழந்தையைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கும் பொறுப்பை வேறு ஓர் இனத்திடம் விட்டுவிடுவது, அந்தப் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வது.

’காக்கையின் கூட்டில் தன் முட்டைகளைக் குயில் இட்டுவிடும்’ என்று படித்திருப்போம். குயிலும் இந்தப் பண்பைக் கொண்டதுதான். இதில், குயில் என்பது ஒட்டுண்ணி (Parasite), காக்கைதான் ஓம்புயிரி (Host). மேலே குறிப்பிட்ட உதாரணம் ஆசியக் குயில் என்ற பறவையின் இனப்பெருக்கப் பண்பு. அது கிட்டத்தட்ட 100 பறவை இனங்களின் கூடுகளில் முட்டையிடும் இயல்பு உடையது. பெரும்பாலும் குயில் குஞ்சுகள்தாம் முட்டையிலிருந்து முதலில் வெளிவரும். வந்த உடனே அங்கு உள்ள மற்ற முட்டைகளை உடைத்துவிடும். தன் பிழைப்பை உறுதிசெய்துகொள்ளும்.

ஒன்றல்ல இரண்டல்ல, 100 பறவை இனங்களுக்கு இந்தப் பண்பு உண்டு. இந்த 100 இனங்களும் மொத்தமாக 950 பறவை இனங்களை ஏமாற்றி அவற்றின் கூட்டில் முட்டையை இடுகின்றன. இந்தப் பண்பு தனித்தனியாக ஏழு முறை பரிணாமக் காலக்கோட்டில் தோன்றியிருக்கிறது! இந்தப் பண்பைக் கொண்ட மீன்களும் பூச்சியினங்களும்கூட உண்டு.

இதில் என்ன நடக்கிறது என்பதைப் படிப்படியாகப் பார்க்கலாம். ஒட்டுண்ணியின் இனப்பெருக்கக் காலமும் ஓம்புயிரியின் இனப்பெருக்கக் காலமும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். சில நேரத்தில் இரண்டு இனங்களின் முட்டைகளும்கூட ஒரே மாதிரி காட்சியளிக்கும். முட்டையிட்ட பின்பு ஓம்புயிரிகள் கூட்டை விட்டு வெளியேறும்போது, சரியாக அந்த நேரத்தில் ஒட்டுண்ணி போய் அங்கு முட்டையிடும். அடுத்ததுதான் சுவாரஸ்யமான கட்டம். போன பறவை திரும்பி வந்துவிடுகிறது. கூட்டில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கிறது என்பதை அது கண்டுபிடிக்கிறதா இல்லையா என்பதைப் பொறுத்து சில விஷயங்கள் நடக்கும். ஒருவேளை அது கண்டுபிடித்துவிட்டால், கூட்டில் இருக்கும் முட்டைகளில் எது தன் முட்டை என்பதைச் சரியாகப் பிரித்தெடுத்து, வேற்று முட்டையை மட்டும் தனியாக உடைக்க வேண்டும். அடையாளம் தெரியாமலோ தவறுதலாகவோ தன் முட்டையை உடைத்துவிட்டால் அது பெரிய இழப்பாகிவிடும். அயல் முட்டையைக் கண்டுபிடிக்க முடியாத சில பறவைகள், குழப்பம் தாங்காமல் அந்தக் கூட்டையே கைவிட்டுவிட்டுப் பறந்துவிடுகின்றன. அந்த இனப்பெருக்கக் காலம் முழுக்கச் செலவிட்ட நேரமும் ஆற்றலும் வீண்!

ஒருவேளை சரியான முட்டைகளைக் கண்டுபிடித்து ஊடுருவிகளை வெளியேற்றிவிட்டால், அந்தப் பறவை தன் முட்டைகளை மட்டும் அடைகாத்தால் போதுமானது. சில நேரம் அதுவும் வெற்றிகரமாக நடக்கும்.

சில பறவைகளுக்கு மாற்றம் நடந்திருப்பதே தெரியாது. அப்போது அவை வேற்று முட்டைகளையும் சேர்த்து அடைகாக்கின்றன.

வேற்று முட்டைகள் அடைகாக்கப்பட்டு வெற்றிகரமாகக் குஞ்சு பொரிந்த பிறகு, அவை மற்ற குஞ்சுகளோடு உணவுக்குப் போட்டி போடுகின்றன. சில ஒட்டுண்ணிக் குஞ்சுகள் முதலில் வெளிவந்து மற்ற முட்டைகளைத் தள்ளிவிட்டுவிட்டு பெற்றோர் கொண்டுவரும் எல்லா உணவையும் தனியாகத் தின்று கொழுக்கின்றன. சிலநேரம் ஒட்டுண்ணிக் குஞ்சுகளும் ஓம்புயிரிகளும் ஒன்றாக வளர்கின்றன. அடுத்தடுத்த இனப்பெருக்க காலங்களில் இதுபோன்ற ஒட்டுண்ணிகளிடமிருந்து தப்பிக்கும் வித்தையைக் கற்றுக்கொள்ள ஓம்புயிரிகள் முயற்சி செய்கின்றன. அவற்றை ஏமாற்றும் வித்தைகளை ஒட்டுண்ணிகளும் கற்றுக்கொள்கின்றன, சுழற்சி தொடர்கிறது.

சில ஓம்புயிரிகள் வேற்று முட்டைகளை வெற்றிகரமாக அடையாளம் கண்டு அந்த முட்டைகளை மட்டும் தேடிப்பிடித்துப் போட்டு உடைத்துவிடுகின்றன.

அப்படியானால் அந்தச் சூழலில் ஒட்டுண்ணிகள் தோற்றுவிடுகின்றன, இல்லையா?

அது அத்தனை சுலபமல்ல.

ஒட்டுண்ணிகளுக்கும் ஓம்புயிரிகளுக்கும் கண்ணுக்குத் தெரியாத ஒரு பந்தயம் நடந்துகொண்டேயிருக்கும். ஓம்புயிரிகள் வெற்றிகரமாக முட்டைகளை அடையாளம் கண்டால், ஒட்டுண்ணிகள் முட்டைகளின் அளவையும் நிறத்தையும் மாற்றிக்கொண்டு ஒன்றுபோலவே காட்சிதர முயற்சி செய்யும். ஓம்புயிரிகள் முட்டைகளை உடைத்தால், ஒட்டுண்ணிகள் தங்கள் முட்டை ஓட்டின் வலுவை அதிகப்படுத்தும். சராசரியான ரீட் வார்ப்ள்ர் பறவையின் முட்டையைவிட ஒரு குயிலின் முட்டை ஓடு 23 மைக்ரோமீட்டர் கூடுதல் தடிமன் இருக்குமாம்! முட்டையை வலுப்படுத்தும் முயற்சி இது. ஒருவேளை இதில் எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்து ஒட்டுண்ணிகளின் முட்டை ஒருவழியாக உடைக்கப்பட்டுவிட்டால், அவை அடுத்த கட்ட சண்டைக்குத் தயாராகும்.

அதுதான் மாஃபியா பண்பு.

இந்தக் கருத்தாக்கத்துக்கு மாஃபியா கருதுகோள் (Mafia Hypothesis) என்று பெயர். அதாவது, ஓர் ஓம்புயிரி வேற்று முட்டையைக் கண்டுபிடித்து உடைத்துவிட்டால், அந்த முட்டையைப் போட்ட ஒட்டுண்ணி அதைத் தெரிந்துகொண்டு அந்த ஓம்புயிரியின் முட்டைகளை எல்லாம் மொத்தமாக அழித்துவிடும்! Brown headed cowbird என்று ஒரு பறவை – இது 221 வகையான பறவை இனங்களின் கூட்டில் முட்டையிடும் பண்பு கொண்டது. இதில் ஏதாவது ஒரு பறவை முட்டையைக் கண்டுபிடித்து உடைத்துவிட்டால் போதும், அடுத்தநாளே அந்தக் கூடு சிதைக்கப்பட்டு, எல்லா முட்டைகளும் உடைக்கப்படும்!

இந்த நடவடிக்கை ’மாஃபியா’ என்ற பெயரில் ஏன் குறிப்பிடப்படுகிறது என்று இப்போது புரிந்திருக்கும். ’அவங்க சொல்றத செஞ்சிடுங்க, இல்லைன்னா வீட்டுக்கு வந்து கலாட்டா பண்ணிடப்போறாங்க, அவங்க எதுக்கும் துணிஞ்சவங்க. நம்ம குழந்தைங்களோட எதிர்காலம் முக்கியம்’ என்பது போன்ற வசனங்களுக்குப் பொருத்தமான காட்சி இது.

இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், ஒரு முறை கூடு அழிக்கப்பட்ட பறவைகள் அதே இனப்பெருக்க காலகட்டத்துக்குள் திரும்ப கஷ்டப்பட்டு கூடு கட்டினாலும், Brown headed cowbird மீண்டும் அங்கு போய் எல்லாவற்றையும் அழிக்கும்! வேற்று முட்டைகளை அழித்தால் தண்டனை கொடுக்கப்படும் என்று அழுத்தமாக உணரும் பறவைகள், அதற்கு அடுத்த காலகட்டத்தில், கூட்டுக்குள் வேற்று முட்டை தென்பட்டாலும் கண்டும் காணாததுபோல் அதையும் சேர்த்து அடைகாக்கின்றன. இந்தப் பண்பு 2014-ல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட பறவை, இந்த இனத்தின் கூட்டில்தான் முட்டையிடும் என்பது போன்ற தனித்துவங்களும் உண்டு. இதுபோன்ற ஒட்டுண்ணிகள் Gentes என்று அழைக்கப்படுகின்றன. ஓம்புயிரிகளின் இனப்பெருக்கக் காலம், முட்டை அளவு, நிறம், வடிவம் போன்றவற்றோடு இவை கச்சிதமாகப் பொருந்தும் அளவுக்குப் பரிணாம வளர்ச்சி அடைகின்றன. முட்டைகள் ஒன்றுபோலவே தோற்றமளிப்பது Egg mimicry என்று அழைக்கப்படுகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், ஓம்புயிரிகள் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு கூட்டைக் கண்காணிக்கக்கூடியவை என்றால் மட்டுமே இந்த முட்டை மிமிக்ரி எல்லாம், கூட்டைக் கண்காணிக்காத ஓம்புயிரிகளின் முட்டையில் எல்லாவித முட்டைகளும் வந்து சேரும்!

ஒட்டுண்ணி இருப்பதால் நன்மை அடையும் மிகச் சில ஓம்புயிரிகளும் உண்டு. Great Spotted cuckoo என்ற இனம், மற்ற பறவைகளின் கூட்டில் முட்டையிடுகிறது. இந்தக் குயில் குஞ்சுகள், மோசமாக நாற்றமடிக்கிற ஒரு கறுப்பான திரவத்தை வெளியிடுகின்றன. நாற்றம் இருப்பதால் வேட்டை மிருகங்கள் அந்தக் கூட்டைத் தாக்குவதில்லை. குயில் குஞ்சுகளோடு ஓம்புயிரிகளின் குஞ்சுகளும் பாதுகாக்கப்படுகின்றன! இந்த வகைக் குயில் முட்டைகள் இருக்கும் கூடுகள் 70% கூடுதலாக வெற்றிகரமாக இயங்குகின்றன என்பதை 2019-ல் நடந்த ஓர் ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள்!

இதுபோன்ற ஒட்டுண்ணிப் பண்பு ஏன் உருவானது என்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றில் எதுவும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் குஞ்சுகளுக்காக நேரம் செலவிடாமலேயே அடுத்த தலைமுறையை வெற்றிகரமாக வளர்த்தெடுக்க முடியும் என்பது பெரிய பயன்தான். இதில் ஓம்புயிரிகளுக்கே பாதிப்பு அதிகம் என்பதால் அவைதான் அடுத்தடுத்த பரிணாம வளர்ச்சிகளில் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முயற்சி செய்கின்றன. இது ஒரு பந்தயமாகவே நடந்துகொண்டிருக்கிறது.

எல்லாம் சரி, தாய்ப்பாசம் இல்லாமல் இப்படி நடந்துகொள்ளும் ஒட்டுண்ணிப் பறவை ஒரு நல்ல அம்மாவா? இந்தக் கேள்வி அபத்தமானது என்றாலும், பரிணாம வளர்ச்சியை மட்டும் வைத்துப் பார்த்தால், ஆமாம் என்றே சொல்லலாம். பெரிதாக முயற்சிகள் எடுக்காமலேயே குஞ்சுகளை வளர்த்துவிடுகிறது என்பதால் எப்படிப் பார்த்தாலும் ஒட்டுண்ணிக்கு லாபம்தான். குழந்தை வளர்க்கும் பொறுப்பு இல்லை என்பதால் அடுத்தடுத்து இனப்பெருக்கத்தில் ஈடுபடவும் உணவு சேகரிக்கவும் அதற்கு நிறைய ஆற்றலும் நேரமும் மிஞ்சுகிறது. பரிணாமத்தைப் பொருத்தவரை குழந்தைக்கும் தாய்க்குமான பிணைப்பு என்பது, அந்தக் குழந்தையை வளர்த்தெடுப்பதற்காகவே உருவாகியிருக்கிறது. ஆகவே அந்தப் பிணைப்பு இல்லாமலேயே குஞ்சுகளை வேறொருவர் பொறுப்பில்விட்டு வளர்க்கும் ஒட்டுண்ணி பரிணாம லாட்டரியில் ஜாக்பாட் அடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

பெண் விலங்குகளுக்காக ஆண் விலங்குகள் சண்டையிட்டுக்கொள்வதை நாம் அறிந்திருப்போம். ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே நேரத்தில் இருபால் பண்பு கொண்ட உயிரினங்கள் எப்படி இனப்பெருக்கம் செய்கின்றன? அவை இப்படிச் சண்டை போடுமா?

படைப்பாளர்:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.

Exit mobile version