Site icon Her Stories

ஹமுராபி சட்டங்களும் பெண்களும்

கடந்த சில வருடங்களாக நான் அவதானித்து வருகிற ஒரு மாற்றம் உண்டு. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளிவரும் ஒவ்வோர் ஆண்டும், ஒரு சுவாரசியமான உண்மை கண்களில் படுகிறது. அதிக அளவில் தேர்ச்சிப் பெறுபவர்கள் மாணவிகளாகவே இருக்கிறார்கள்.

படிக்கும் காலத்தில் ஒரு பெண் தன் முழு ஆற்றலையும் செலுத்தி கல்வியில் முழுமையாக ஈடுபடுகிறாள். பகலிரவு பாராமல் உழைத்து நல்ல மதிப்பெண்களைப் பெற்று, ஒரு நல்ல இடத்தில் வேலை பெறும் அளவுக்குத் தன்னை உருவாக்கிக் கொள்கிறாள். அவளுடைய முயற்சிகளும் கனவுகளும் அந்தப் பாதையிலேயே முன்னேறிக் கொண்டிருக்கும்.

ஆனால் திடீரென்று ’திருமணம்’ என்கிற ஒன்று வாழ்க்கையின் நடுவில் வந்து நிற்கும்போது, அந்தப் பெண்ணின் முன்னுரிமைகள் மெல்ல மாறத் தொடங்குகின்றன. அவள் கனவு கண்ட வேலை, அவள் பாடுபட்டு அடைந்த அந்த இடம் எல்லாம் மெதுவாக இரண்டாம்பட்சமாகத் தள்ளப்படுகின்றன.

கல்லூரி முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கையில் தோழியொருத்தியின் வாயிலாக ஒரு கதையைக் கேட்க நேர்ந்தது. அவள் பள்ளியில் படிக்கும்போது, அவளுடன் படித்த ஒரு பெண்ணை பத்தாம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் செய்துவிட்டதாகக் கூறினாள். அவ்வளவு அவசரமாகத் திருமணம் செய்ததற்கு அவள் தோழி ஒரு காரணம் கூறியிருக்கிறாள். அதை அவள் என்னிடம் கூறும்போது, எனக்குள் குழப்பம். 

என் தோழியின் வாயிலாக கேட்ட வார்த்தைகள், “அவ அவ்ளோ அழகா இருப்பா.. சுண்டுனா ரத்தம் வரும் மீனா” என்றதும் என் மனக்கண்ணில், ஒரு வெள்ளை நிறப் பெண் உலா வந்தாள். 

அந்தப் பெண் ஒருநாள் மருத்துவமனை சென்றபோது, மருத்துவர் ஒருவர் தவறான எண்ணத்தில் அவள் மார்பில் கை வைத்ததாகவும், அதனால் அவளுக்கு அவசரமாகத் திருமணம் முடித்ததாகவும் கூறினாள். 

அந்தச் சம்பவத்தைவிட, அதை நியாயப்படுத்திய காரணமே என்னைத் திடுக்கிடவைத்தது. அழகுக்குச் சில விதிமுறைகள் வைத்திருக்கிறது சமூகம்.  சமூகம் தொகுத்து வைத்திருக்கும் அழகின் விதிகளுக்குள் இருந்த பெண்ணைப் பதின்ம வயதிலேயே திருமணம் செய்துவிட்டனர். 

இப்படி இருபது, முப்பது வருடங்களுக்கு முன் கேட்ட கதைகள் ஏராளமாக இருக்கின்றன. மீளாய்வு செய்தபோது ஒரு விஷயம் விளங்கியது. என்னால் ஏற்றுக் கொள்ள முடியாத, சமூகம் புகுத்திய விதிகள் அனைத்தும் கேள்விகளாக எழும்பாமல், என்னுள் தேங்கியே இருந்திருக்கின்றன. அந்த மாதிரி உள்ள ஒவ்வொரு கதைக்கும் விடை தேடிக் கொண்டேயிருக்கிறேன்.

அழகு ஒரு பெண்ணின் வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து, பாதுகாப்பு என்னும் பெயரில் அவளைத் திருமணத்திற்குள் தள்ளுகிறது. அப்பெண்ணைப் படிக்க வைத்தால் என்ன நிகழ்ந்துவிடும். பெற்றோர் மனதில் என்ன பயம்? அவளை யாரேனும் பாலியல் வன்முறை செய்துவிடுவார்கள் என்கிற பயமா? திருமணமான பின்னும் அவள் உருவம் மாறப்போவதில்லை. அதனால் இதில் அவளின் பாதுகாப்பு உறுதி செய்வது இரண்டாம் பட்சம்தான். முதல் பயம், அவள் யாரையேனும் காதலித்துவிடுவாளோ என்பதுதான். அதை நிகழவிடாமல் தடுத்து திருமணம் செய்துவிட்டனர். ஆனால் அவளுடைய பாதுகாப்பு கருதிதான் திருமணம் என்று  எப்படி அவளைச் சமாதானம் செய்தார்கள் என்று விளங்கவில்லை.

பதினைந்து வருடம் முன்பு நிகழ்ந்த சம்பவம். மென்பொருள் துறையில் பணியமர்ந்து ஓராண்டு காலம் இருக்கும். கொடுக்கும் வேலையை எப்படியும் முடித்துவிடுவேன். என்னை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதாக, ஒரு சவாலான வேலையை எனக்குக் கொடுத்தனர். தினமும் இரவு விடுதிக்குச் செல்ல தாமதமானது. விடுமுறை நாட்களும் இல்லாமல் போனது. அப்படி ஒரு சனிக்கிழமை நள்ளிரவிலும் வேலை முடியாமல் இருக்க, அதை முடித்துவிட்டுச் செல்லுமாறு மேலிட உத்தரவு. விடுமுறை நாட்களில் அலுவலகம் பெரும்பாலும் வெறிச்சோடி இருக்கும். அதுவும் இரவு வேளையில் பெரும்பாலும் யாரும் இருக்க மாட்டார்கள். மின்சாரம் சேமிக்கவென்று குழல் விளக்குகளும் வேலை செய்யும் இடங்களில் மட்டுமே அனுமதி. குளிரூட்டியும் இருக்காது.  

அந்தத் தளத்தில் இருவர் மட்டுமே இருந்தோம். நானும் என்னுடன் பணிபுரியும் மற்றொருவனும் இருக்க, அவனுடைய வேலை முடிந்ததும் என்னருகில் வந்தான். 

“இன்னும் கிளம்பலையா?” என்றான்.

“வேலை இருக்கிறது” என்றேன். 

என் முகத்தில் இருந்த பதற்றம் அவனுக்கு அப்பட்டமாகப் புரிய, “ஏதாவது உதவி வேண்டுமா?” என்றான்.

நான் தயங்கி வேண்டாமென்றேன். ஆனால் அருகில் அமர்ந்து எனக்கு உதவிக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் அங்கு வந்த மேலாளர், இன்னும் வேலை முடியாமல் இருப்பதைப் பார்த்து வசைபாடத் தொடங்கினார். அதில் என் ஒழுக்கமும் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. 

“நல்லா ட்ரெஸ் பண்ணிட்டு வர வேண்டியது. எவனோடயாவது ஊர் மேய வேண்டியது. நீங்களெல்லாம் எதுக்குதான் வேலைக்கு வர்றீங்களோ?” என்று அவர் நேரடியாகக் குற்றம்சாட்ட, அதிர்ந்துவிட்டேன். இப்படியெல்லாம்கூட முகத்திற்கு நேரே பேச முடியுமா?  

என்னுடன் இருந்தவன் அவரை எதிர்த்துக் கேள்வி கேட்டான். ஆனால் அதற்கும் என்னைக் கூர்முனையில் நிறுத்தியே அவர் பதில் கூறினார். அரை மணிநேரத்தில் வேலையை முடிக்குமாறு கூறிவிட்டுச் சென்றுவிட்டார். 

அதன்பின் வேலையை முடித்துவிட்டு, இரவு வீடு திரும்பும்போது இரண்டு மணி. அலுவலகத்தில் எப்போதும் கேப் வசதியுண்டு. அதனால் அவனும் என்னுடன் பயணம் செய்தான். என்னை முதலில் வீட்டில் விட்ட பின்னர் அவன் வீடு செல்வதாக முடிவானது. நான் எதுவும் பேசாமல் வருவதைப் பார்த்தவன், “விடு, அவரெல்லாம் ஒரு ஆளு. அதையே நினைச்சு உன்னோட நிம்மதியை கெடுத்துக்காத” என்று ஆறுதல் கூறினான். அதுவரை சகஜமாக உரையாடிக் கொண்டிருந்த சகப்பணியாளருடன் என்னால் உரையாட முடியவில்லை. அவர் கூறிய வார்த்தைகள் ஏனோ தடுத்தது.  நான் பதில் கூறாமல் வந்ததால், அவனும் எதுவும் பேசாமலே வந்தான். வீடு வந்ததும், அவனிடம்,” ஐ வில் பீ ஆல்ரைட். தேங்க்ஸ் ஃபார் எவிரிதிங்” என்று விடைபெற்றேன். அதன்பிறகு சில தினங்கள், என்னை தூங்கவிடாமல் செய்த சம்பவமிது. 

பலமுறை பல கோணங்களில் யோசித்துவிட்டேன். திருமணத்திற்கு முன்பான சில ஆண்டுகள், நான் சுதந்திரமாக உணர்ந்ததே இல்லை. எப்பொழுதும் இறுக்கம் என்னுள் இருக்கும். இருபத்தி நான்கு மணிநேரமும் என் பத்திரத்தை உறுதிசெய்து கொண்டே இருக்க வேண்டும். இந்தச் சம்பவத்தை நான் என் வீட்டில் பகிரவில்லை. 

நான் படித்தது, வேலைக்குச் செல்வது என்று அனைத்தும் எனக்களிக்கப்பட்ட சிறப்பு சலுகைகளாகவே பார்த்தேன். என்  தோழிகள் பெயருக்குப் படித்து, திருமணம், குழந்தை என்று வாழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால் நான் நன்றாகப் படித்தேன் என்கிற ஒரு காரணத்திற்காக, எனக்குப் பிடித்த பாடமான உயிரித் தொழில்நுட்பம் எடுத்துப் படிக்கவும் வீட்டில்  எளிதாக அனுமதி கிடைத்தது. அதனால் என்‌ கவனம் முழுவதும் படிப்பில் மட்டுமே இருந்தது. படித்துக் கொண்டிருக்கும் போதே வேலையும் கிடைத்தது. அதனால் வேலைக்குச் செல்வது இன்னுமொரு சிறப்பு சலுகை என்று அதில் மட்டுமே என் கவனமும் இருந்தது. அது எங்கேயும் தடைபட்டுவிடக் கூடாது என்று சிரத்தையுடன் இருக்க வேண்டிய சூழல். நான் மேற்கூறிய சம்பவம் நடந்தபோது, வீட்டில் திருமணப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. நான் சில வருடங்கள் தள்ளிப்போடலாம் என்று நினைத்திருந்தேன். இந்தச் சம்பவம் அவர்களின் பதற்றத்தை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்று யாரிடமும் கூறவில்லை. 

என் மேல் பிழையொன்றும் இல்லாதபோதும், இச்சம்பவத்தை நான் ஏன் சுமந்துகொண்டே இருக்கிறேன் என்று பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறேன். சமுதாயம், என்னை வளர்த்தவிதம் என்று அனைத்தின் மேலும் கோபம் வந்தது. 

என்ன பிரச்னை இருந்தாலும் கத்தாமல், பொறுமையாக அமைதியாகக் கையாள வேண்டும் என்று என்னை வளர்த்தவர்களைப் பார்த்துப் பல கேள்விகள் கேட்க வேண்டும் போல் தோன்றியது. நான் பழக்கப்பட்ட விதத்தில் சமுதாயம் என்னைக் கையாளவில்லை. இரவு‌ வேலை முடித்து, நேரம்கடந்து சென்றால், விடுதிக் காப்பாளர் பார்க்கும் பார்வையும், கதவு திறக்கமாட்டேன் என்று மிரட்டும் தொனியும் என்னுள் பாதுகாப்பின்மையை மட்டுமே விதைத்தது. ஏற்பட்ட சில கசப்பான நிகழ்வுகளால், நல்லெண்ணத்துடன் என்னுடன் பழக நினைத்த மனிதர்களையும் காயப்படுத்தியிருப்பேன் என்று எனக்கு நன்றாகத் தெரியும். 

படிப்பு, வேலை எல்லாம் பெண்ணுக்களிக்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் என்று ஏன் இந்தச் சமுதாயம் கூறுகிறது. படிப்பும் வேலையும் எனது உரிமை என்கிற எண்ணம் ஏன் பெரும்பாலும் பெண்களுக்கு இருப்பதில்லை? இப்படிப் பல சட்டங்கள் நம் சமுதாயத்தில் நம்மை ஆட்டுவித்துக் கொண்டே இருக்கின்றன. 

இந்த அனுபவங்கள் எல்லாம் தனிப்பட்டவை மட்டுமல்ல; இதற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது.

ஹமுராபியின் சட்டத் தொகுப்பு என்பது கிமு 1755–1750 காலக்கட்டத்தில் இயற்றப்பட்ட ஒரு பாபிலோனியச் சட்ட உரை. 

சுமார் 4,130 வரிகள் கியூனிஃபார்ம் உரையில் எழுதப்பட்டிருக்கிறது.  முன்னுரையில்,  “வலிமையானவர்கள் பலவீனமானவர்களை ஒடுக்குவதைத் தடுக்க” கடவுள்களால் ஹமுராபியின் ஆட்சி வழங்கப்பட்டது என்று எழுதப்பட்டிருக்கிறது.  குற்றவியல் சட்டம், குடும்பச் சட்டம், சொத்துச் சட்டம் மற்றும் வணிகச் சட்டம் என்று ஒரு நாட்டை ஆளுகைக்குட்படுத்த தேவையான நெறிமுறைகள் அனைத்தும் இயற்றப்பட்டிருக்கின்றன. 

ஹமுராபியின் சட்டத் தொகுப்பு, பண்டைய பாபிலோனிய சமூகத்தில் பெண்களின் நிலையைப் புரிந்துகொள்ள ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.

 உலகம் முழுக்க ஆண் எழுதிய சட்டங்களாகட்டும், ஆண் எழுதிய இதிகாசங்களாகட்டும், அனைத்தும் ஆண்களை மேன்மைப்படுத்தியும்,  பெண்களை‌ அவர்களுக்குக் கீழ் என்றுமே சித்தரித்துள்ளது. 

ஹமுராபி சட்டத் தொகுப்பில் உள்ள சில சட்டங்களைப் பற்றி பார்க்கலாம். இவையெல்லாம் பெண்களுக்கான உரிமைகளைப் பற்றிப் பேசும் சட்டங்கள்.

ஹமுராபியின் சட்டத் தொகுப்பில் 127-136 வரை உள்ள சட்டங்கள் அவதூறு, பாலியல் தொழில் தொடர்பான சட்டங்கள். 

ஒரு பெண்  தான் களங்கமற்றவள்,  இன்னோர் ஆணுடன் உறவுகொள்ளாதவள் என்று நிரூபிக்க, ஆற்றில் குதிக்கலாம் என்று சட்டம் 132 கூறுகிறது.

தன்னைக் குற்றமற்றவள் என்று நிரூபணம் செய்ய அவள் தண்ணீரில் குதிக்க வேண்டும். இந்தச் சட்டத்தால் எத்தனை பெண்கள் தண்ணீரில் குதித்திருப்பார்கள். எத்தனை பெண்கள் பிழைத்திருப்பார்கள் என்கிற கேள்வி தோன்றாமல் இல்லை. சீதை தீக்குளித்ததற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. தண்ணீரில் குதித்து அவளுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றால்,  அவளைக் குற்றமற்றவள் என்று ஒப்புக்கொள்கிறது சபை. 

ஒரு பெண்ணிற்கான சட்டங்கள் அனைத்துமே அவள் கணவனை முன்னிறுத்தியோ அல்லது தந்தையை முன்னிறுத்தியோ எழுதப்பட்டிருக்கின்றன. 

மேலே குறிப்பிடப்பட்ட சட்டத்தின் உள்ளர்த்தம் பாருங்கள். ஒரு பெண்ணால் தன்னை நிரூபிக்க முடியாவிட்டால், அதாவது சாட்சிகள் இல்லாமல் போனால், தண்ணீரில் குதிக்க வேண்டும். 

அடுத்து 142வது சட்டம், ஒரு பெண் தன் கணவனுடன் சண்டையிட்டு, அவனைப் பிடிக்கவில்லை என்று கூறினால், அதற்கான தகுந்த காரணங்களை முன்வைக்க வேண்டும். அவள் குற்றமற்றவள் என்று அவள் நிரூபித்தால், கணவனும் அவளைப் புறக்கணித்தால், அவள் மீது எந்தக் குற்றமும் கிடையாது. அவள் அவளுடைய வரதட்சணையை எடுத்துக்கொண்டு தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம் என்று கூறுகிறது.

ஆனால் 143வது சட்டம்,  அவள் குற்றமற்றவளாக இல்லாவிட்டாலும், தன் கணவனை விட்டு வெளியேறி, தன் வீட்டை நாசமாக்கி, தன் கணவனைப் புறக்கணித்தால், அவள் தண்ணீரில் தள்ளப்படுவாள்.

பெண்களை ஆதரிக்கும் சட்டங்களும் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் பெண்களைப் பெரும் கொடுமைகளில் இருந்து பாதுகாக்க மட்டுமே. ஒரு பெண்ணை அடிமையாகவோ பாலியல் தொழிலாளியாகவோ கொடுக்கலாம். தன்னிடம் உள்ள பொருளுக்கு ஒருவனுக்கு எந்தளவு உரிமை இருக்கிறதோ,  அந்தளவு தன்னுடைய பெண்ணின் மீதோ, மனைவி மீதோ அவனுக்கு உரிமை இருக்கிறது. 

ஹமுராபியின் சட்டத்தொகுப்பில் படிநிலைகள் மேல்சாதி, கீழ்சாதி என்று பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது ஆதிக்கம் நிறைந்தவன் மட்டும் அடிமைகள் மீது ஆளுமை செலுத்தலாம்.

இப்பொழுது இரண்டு சட்டங்கள் பற்றிக் கூறுகிறேன். அதில் எந்தத் தவறும் இருப்பதுபோல் தெரியாது. நியாயம் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் அடுத்த சட்டத்தைப் படிக்கும்போதுதான் மேலே உள்ள சட்டத்தின் கொடூரம் நமக்குப் புரியும். 

கண்ணுக்குக் கண் என்று பல சட்டங்களின் உட்பொருள் இருக்கின்றன. ஆனால் கண்ணுக்குக் கண் என்பது மேல்சாதி ஆணுக்கு மட்டுமே.

அதே மேல்சாதியைச் சேர்ந்தவன்,  கீழ்சாதியைச் சேர்ந்தவன் கண்களைக் குருடாக்கினாலோ,  எலும்பை முறித்தாலோ ஒரு தங்க மினா கொடுத்தால் போதுமானது. அதே ஒரு மேல்சாதியைச் சேர்ந்தவன்,  ஓர் அடிமையின் கண்களைக் குருடாக்கினாலோ,  இல்லை எலும்பை முறித்தாலோ அரை மினா கொடுத்தால் போதுமானது. 

சட்டம் 209 – ஒரு மேல்சாதியைச் சேர்ந்தவன் ஒரு மேல்சாதியைச் சேர்ந்த பெண்ணை அடித்து, அதனால் அவளுடைய கரு கலைந்தால், பத்து ஷெக்கல்ஸ் கொடுக்க வேண்டும். அதே அந்தப் பெண் இறந்துவிட்டால், குற்றவாளியின் வீட்டுப் பெண்ணைக் கொன்றுவிட வேண்டும். 

ஓர் இழப்பை ஈடு செய்ய நான்காயிரம் வருடங்களுக்கு முன்னரே பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பெண் இறந்துவிட்டால், குற்றவாளியின் பெண்ணைக் கொல்வது எந்த விதத்தில் நியாயம் என்று இப்போது நமக்குத் தோன்றலாம். அந்தக் காலத்தில் உள்ள சட்டதிட்டங்களை,  தற்போதைய நியாயங்களோடு நாம் ஒப்பிட முடியாது என்றாலும், இப்படி இருந்த சட்டதிட்டங்களில் இருந்து நாம் புரிந்துகொள்வது என்ன?

ஒருவனிடம் உள்ள பொருளை ஒருவன் திருடிவிட்டால், அவனுக்கு அதே மதிப்புடைய பொருளைக் கொடுப்பது நியாயம். ஒருவனுக்கு ஒருவன் ஒரு வலியைக் கொடுத்தால்,  அதே வலியை அவனுக்குக் கொடுக்க வேண்டும் என்பது பழிக்குப் பழி. மேலே கூறியிருக்கும் சட்டங்களின்படி கண்ணுக்குக் கண், பெண்ணுக்குப் பெண் என்று பார்த்தால், மேல்சாதி ஆண்களுக்குச் சரியான நியாயம் வழங்கப்பட்டிருப்பதாகக் கொள்ளலாமா? ஒருவன் ஒரு பெண்ணைக் கொன்றால், ஏதுமறியாத மற்றொரு பெண்ணைக் கொல்வதால், அதற்குத் தண்டனை கிடைத்துவிட்டதாக நம்பியிருக்கின்றனர்.

மேற்கூறப்பட்ட விஷயம் ஒரு கீழ்சாதியைச் சேர்ந்த பெண்ணுக்கு நிகழ்ந்தால்,  ஐந்து ஷெக்கல்ஸ் கொடுத்தால் போதுமானது. அதே அந்தப் பெண் இறந்தால், அரை மினா கொடுத்தால் போதுமானது.

இதே ஓர் அடிமைப் பெண்ணிற்கு நிகழ்ந்தால், இரண்டு ஷெக்கல்ஸ் கொடுத்தால் போதும். அடிமைப் பெண் இறந்துவிட்டால், மூன்றில் ஒரு பங்கு மினா கொடுத்தால் போதுமானது.

ஹமுராபியின் சட்டத்தொகுப்பில் ஆண்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும். ஒரு மேல்சாதியைச் சேர்ந்தவன்,  மேல்சாதியைச் சேர்ந்தவனின் மகனைக் கொன்றுவிட்டால், அவனின் மகனைக் கொன்றுவிடுவார்கள். ஆனாலும், ஆண்களுக்கு ஹமுராபியின் சட்டத்தொகுப்பில் பல படிநிலைகள் இருந்தன. அதில் ஏதோ ஓர் ஆண் பிரமிடின் மேல் இருந்துகொண்டே இருந்தான். ஆனால்,  பெண்களுக்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்டது உண்மை. 

வலிமையானவர்கள் பலவீனமானவர்களை ஒடுக்குவதைத் தவிர்க்க, கடவுளால் தனது ஆட்சி வழங்கப்பட்டதாக ஹமுராபி கூறுகிறார். ஆனால்  மேலே உள்ள சட்டங்களைப் பார்க்கும்போது, பலவீனமானவர்கள் ஒடுக்கப்படுவதைத் தடுப்பதற்காக எழுதிய சட்டங்கள் போல் தெரியவில்லை. இருந்தும் மக்கள் இதை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தனர். அது எப்படிச் சாத்தியம்?

மக்கள் இந்தச் சட்டங்களை ஏற்றுக்கொள்ள முதன்மைக் காரணம் என்னவாக இருக்கும்? ஒருவேளை இதைவிடக் கொடுமையான சூழ்நிலைகள் அங்கு நிலவியிருக்குமோ? அதை வைத்துப் பார்க்கும்போது,  இந்தச் சட்டங்கள் எளிமையானவர்களைப் பாதுகாப்பதாக அவர்களுக்குத் தோன்றியிருக்குமோ? இதில் பலவீனமானவர்கள் என்று நான் குறிப்பிட்டுச் சொல்வது பெண்களை. 

ஒரு காலத்தில் தன்னுடன் யார் கூடவேண்டும் என்கிற முடிவை எடுத்தவள் எப்படி இந்தச் சட்டதிட்டங்களுக்குள் தன்னையே சிறைப்படுத்திக்கொண்டாள் என்பதுதான் விளங்கவில்லை.

ஹமுராபியின் சட்டத் தொகுப்பு, ஓர் அதிகார அரசியலமைப்பின் வரலாற்றை நமக்கு எடுத்தியம்புகிறது. சட்டமென்பது பலவீனமானவர்களைப் பாதுகாக்க எழுதப்பட வேண்டும். ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. காலத்தால் பிந்தய மனு ஸ்மிருதி, இந்தச் சட்டத் தொகுப்பின் நீளுருவாக்கமாகவும் இருக்கலாம். 

இந்தச் சட்டங்களை நாம் இன்று கொடூரமானவை என்று பார்க்கிறோம். ஆனால் அக்கால மக்களுக்கு அவை ஒழுங்காகவும் பாதுகாப்பாகவும் தோன்றியிருக்கிறது. அதுவே மனித சமூகத்தின் மிகப் பெரிய அபாயம்,  ஒடுக்குமுறைகள் நீண்ட காலம் தொடரும்போது, அவை நியாயம் போலவே தோன்றத் தொடங்குகின்றன. 

அடிமைகளுக்குச் சில உரிமைகள் கிடைத்துவிட்டால், பெரும் நீதி கிடைத்ததுபோல் காட்சியமைக்கப்படுகிறது. இதுவரை கிடைக்காத ஒன்று கிடைத்தால், மனித மனம் அதைச் சிறப்பு சலுகைகள் என்று எண்ணிப் பூரித்துவிடுகிறது. 

ஹமுராபியின் சட்டங்கள் நமக்குச் சொல்லிக்கொடுப்பது ஒன்று தான்: சட்டம் யாரால் எழுதப்படுகிறது என்பதே, யார் மனிதர், யார் பொருள் என்பதைத் தீர்மானிக்கிறது. அந்த வரலாற்றை அறிதல், இன்று நாம் பேசும் பெண் விடுதலை, சமத்துவம், மனித உரிமைகள் ஆகியவை எவ்வளவு நீண்ட போராட்டங்களின் விளைவென்பதை உணரச் செய்கிறது.

பெண்களுக்கு வழங்கப்படுவது சலுகைகள் அல்ல, தாமதமாக வழங்கப்படும் உரிமைகள்.

(தொடரும்)

படைப்பாளர்:

மீனாட்சி அடைக்கப்பன். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். அறிவியலிலும் வரலாற்றிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒவ்வொருவரின் மனதிலும் விடைதெரியாத பல கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவர் மனதின் சுவர்களை அரிக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஒரு பயணமே இவர் எழுத்து. சமூகத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மனப் போராட்டத்தை எழுத்தின் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்.

Exit mobile version