அழகியல்ல நான்.
தலைப்பும் தொடக்கமும் முரண்பட்டிருக்கிறதே என்று எண்ண வேண்டாம். இப்படிப் பல முரண்பாடுகள் என் வாழ்விலும் இருந்திருக்கின்றன. அழகியென்று சொன்னவுடன் வெளுத்த தோளும், பிறை நெற்றியும், செவ்வரி இதழும், நீண்ட கருங்கூந்தலும் உள்ள ஒருத்தியாக உங்கள் அகக்கண் முன் நான் தோன்றியிருந்தால் மன்னிக்கவும். இது புறவழகல்ல.
நான் மனதோடு உரையாடுபவள். என் போராட்டங்கள், அவமானங்கள், வெறுப்பு, கோபம், அழுகை என்று உள்ளத்துள் உதிக்கும் அனைத்து உணர்வுகளும், உள்ளரங்கிலேயே விசாரிக்கப்படும். வாதி, பிரதிவாதி, சாட்சி என்று அனைத்துமே நான். இதுதான் நான் என்கிற ஒப்புதல்களும், இவ்வளவுதானா நான் என்கிற தன்மதிப்பிழத்தலும், என்னை நானே மீள்பார்வை செய்த தருணங்கள்.
இருபதுகளில் என்றுமே நான் என்னை வலிமைமிக்கவளாக உணர்ந்ததில்லை. முனுக்கென்றால் அழுதுவிடும் குணம். மனம் சுணங்கினாலும் சினந்ததே இல்லை. எனக்கான முடிவுகளையும் நான் எடுத்ததேயில்லை. தோல்வியுற்ற குறுமீனாகவே வாழ்ந்திருக்கிறேன்.
பிறப்பால் பெண்ணென்ற அடையாளத்தைப் பெற்றாலும், சமூகம், மதம், அரசியல் என்று பல அங்கங்கள் பல சாயங்களை என் மீது பூசியது. நான் யார் என்கிற கேள்விக்குப் பலமுறை விடைதேடி தோற்றுப் போயிருக்கிறேன்.
செத்து விழுந்த மணித்துளிகளைப் பல ’ஏன்’கள் நிறைத்திருந்தாலும், ஒருமுறைகூட ஏனென்று வெளியே கேட்டதில்லை.
இதைச் சுயப்புலம்பலாகத் தொடங்குவதில் கொஞ்சம் சங்கடம் இருக்கலாம். ஆனால் கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்கள். என்னோடு நீங்களும் உங்கள் நினைவுகளைக் கொஞ்சம் கீறிவிடுங்கள். இத்தொகுப்பில் நான், என் என்று குறிப்பிடும் இடங்களில் எல்லாம் உங்களையும் உள்ளடக்கியே பயணிக்கிறேன்.
ஒன்பது வயதிருக்கும். புத்தகங்கள் அறிமுகமில்லாத காலம். என் தந்தையின் கையில் கனத்த புத்தகத்தைப் பார்த்ததும் படிக்க வேண்டுமென்ற ஆவல். அந்தப் புத்தகத்தை எடுத்துச் சில பக்கங்களைப் புரட்டும்போது, ஒன்றும் புரியவில்லை. ஒரு காட்சி – வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் ஆடை விலகலையும், அந்த வீட்டின் உரிமையாளரின் திருட்டுப் பார்வையும் என்று கதை விரிய, மனம் திடுக்கிட்டது. என் கையில் புத்தகத்தைப் பார்த்த அப்பா, மெதுவாகப் புத்தகத்தை வாங்கினார்.
‘இந்தப் புத்தகம் இப்போ நீ படிக்க வேண்டாம். இன்னும் கொஞ்சம் பெரியவளான பிறகு படிக்கலாம்’ என்று சொல்ல, நான் ஏதோ பெரும் தவறிழைத்ததுபோல் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்தேன். இனம் புரியாத பயம் என்னை ஆட்கொண்டது.
‘உனக்கு ஏதாவது புத்தகம் வேணும்னா சொல்லு. வீட்டுக்குத் திரும்பி வரும்போது, லைப்ரரியில் எடுத்துட்டு வரேன்’ என்று அப்பா கேட்க, குற்றவுணர்வு நீங்கி, ‘எனக்கு ராமாயணம் கதை படிக்கணும்பா’ என்றேன்.
அன்றிரவே என் வீடுவந்து சேர்ந்தது ராமாயணம். நான் படித்து முடித்த முதல் கதை. நான் படித்த முதல் நாயகன் ராமன். படித்து முடிக்கும்வரை சீதையைப்போல் ஒருத்தியாகவே என்னைக் கற்பனை செய்து நான் சிலாகித்த தருணங்கள் ஏராளமானவை. அவள் தீக்குளிக்கும்போது, அழுதேன். அவளைப் பிரிந்து ராமன் அழும்போது நானும் அழுதேன்.
அதே ராமாயணம், சில வருடங்களுக்குப் பிறகான மீள்வாசிப்பின்போது, மனம் நெருடியது.
சீதை ஏன் தீக்குளித்தாள் என்கற வினாவிற்கு, சீதை குற்றமற்றவள் என்று நிரூபிக்கும் பொறுப்பு ராமனுக்கு இருக்கிறதே என்று சப்பைக்கட்டு கட்டினார்கள்.
அதுவரை ராமனின் முன் மண்டியிட்டு நின்ற மனம், முதல்முறையாக முரண்பட்டு நின்றது. அப்போதும் ராமனைக் குறைகூறும் மனநிலை எனக்கில்லை.
ஏன் ராமன் இப்படி என்று சிறுமுளை கிளர்த்தெழுந்தாலும், ‘ஐயோ ராமனைக் கேள்வி கேட்குமளவு, நீ பெரியாளோ’ என்று என்னுள் இருந்த மதக் கோட்பாடுகள் முளையைக் கிள்ளியெறிந்தன. அதனால் வழக்கம்போல, விசைகொண்டெழுந்த கேள்விகளை மனதின் மூலையில் அமிழ்த்தியே வைத்திருந்தேன்.
ராமாயணக் கதையைப் பலமுறை மீள்வாசிப்புக்குள்ளாக்கியதில் ஒன்று மட்டும் விளங்கியது. ஒவ்வொரு முறையும் நெஞ்சில் பாரம் ஏறிக்கொண்டே போனது. இறுதியில் மூலமும் உரையும் படித்தபோது, என் இதயத்தில் ஆங்காங்கே பொத்தல்கள் விழுந்தன.
ராவணனும் ராமனும் துலாபாரத்தில் சமமாக இருந்தனர். இறுதியாக ராமனில் இருந்த ராவணனையும், ராவணனில் இருந்த ராமனையும் கதையின் ஊடாக என்னால் காண முடிந்தது.
பின் சீதை மட்டுமே மனச்சுவரை அரித்தெடுத்தாள். அவளும் என்னைப்போல் ஒரு பெண். இருந்தும் தீக்குளித்தபோதோ, ராமனுடன் வனம்புகுந்தபோதோ, பின் ராமனில்லாமல் வனம்புகுந்தபோதோ ஏன் சினக்கவேயில்லை?
சீதை சினமறியாதவள் இல்லை.
அவ்வளவு துயரங்களையும் ஏற்றதால் அவள் இன்றளவும் போற்றப்படுகிறாள் என்கிற உபன்யாசங்களை ஏனோ என்னால் ஏற்க முடியவில்லை. சீதையின் இடத்தில் நான் என்னைச் சொருகி நோக்கும்போது ஓர் உண்மை உறைத்தது.
அடக்குமுறைகளுக்கெதிராக வெடித்துச் சிதறும் தைரியம் எனக்கிருந்ததில்லை. ஆனாலும் என்னுள் இருந்தவள் நான் வெளியில் கேட்காத அனைத்தையும் கேட்டுக் கொண்டே இருப்பாள்.
அப்படிச் சீதைக்குள்ளிருந்த ஒருத்தி கேள்விகள் கேட்கவேயில்லையோ என்கிற கேள்விக்குச் சில காலம் கழித்தே விடை கிடைத்தது.
ராமாயணம் சீதையை மையமாகக் கொண்டு எழுதப்படவேயில்லை. ராமன் என்னும் புராணக் கடவுளை உருவாக்கவே எழுதப்பட்டிருக்கிறது என்றும் வால்மிகி மற்றும் கம்பர் என்னும் ஆண்களின் பார்வையில் சீதை புனையப்பட்டிருக்கிறாள் என்றும் விளங்கியது.
மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த என் மீநாயகன்கள் எல்லாம் கண்ணாடித் துண்டுகளாக வெடித்துச் சிதறினர். அதுவரை கதையின் நாயகிகளைக் கண்டுகொள்ளாத நான், நாயகன்களின் நிழலில் மீளாமல் பயணித்த நாயகிகளின் மௌனங்களைக் கேட்கத் தொடங்கினேன்.
பதினான்கு வயதுவரை பூப்பெய்தாமல் இருந்தேன். வீட்டில் சலசலப்பு. என்னிடம் யாரும் சொன்னதில்லை. ஆனால் வீட்டிற்கு வரும் சில சொந்தங்கள் என்னைப் பார்வையால் அளந்ததை உணர்ந்துகொள்ள முடிந்தது. அன்னையின் மனதிலுள்ள பயம் நேர்த்திக்கடன்களாக வெளிவந்தது. யாரிடமிருந்தும் குத்தல்பேச்சை எதிர்கொண்டதில்லை. என்னுடன் பயின்ற தோழிகளெல்லாம் ரகசியமாகப் பேசி சிரிப்பதுபோல் தோன்றும். சில சமயங்களில் தனித்துவிடப் பட்ட உணர்வு. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்தது.
பரிட்சை முடிந்து வீட்டில் சும்மா இருந்த நாட்களில் யாருமறியா தவிப்பு என் மனதிலும் ஆழமாகப் பதிந்தது. பூப்பெய்துவது பெண்ணுக்குள் நிகழும் அறிவியல் நிகழ்வு என்று பத்தாம் வகுப்பில் படித்தாயிற்று. ஆனால் ஏட்டில் இருந்ததை அனுபவமாக உணர காத்திருந்த நொடிகளெல்லாம் அனற்கற்களைத் தலைமேல் கொட்டிய உணர்வு.
அந்நிகழ்வு நடக்காவிட்டால் என்ன? நான் பெண்ணாக வாழ அந்நிகழ்வு மட்டுமே அடித்தளமா? என்னைவிட இந்தச் சடங்குகள் முக்கியமா?
இந்த வினாக்களுகெல்லாம் விடையறியாமலே பூப்பெய்திவிட்டேன்.
என்னை எதிரே நிற்க வைத்த சமூகத்திற்குப் பதில் கூறிவிட்டதாக எண்ணினேன். மனதில் இருந்த பாரமெல்லாம் இறங்கியதுபோல் இருந்தது.
இப்படி ஒவ்வொருமுறையும் சமூகம் என்மேல் பொதி சுமத்த, காலத்தைக் கொன்று முன்னேறும் கடிகார முட்களோடு நானும் ஓடினேன். சில பொதிகளை இறக்கியும், புதிதாகச் சில பொதிகளை ஏற்றியும் ஓடினேன். என்னைப்போல் பலரும் என்னோடு விழுந்து எழுந்து ஓடிக் கொண்டிருந்தனர்.
சில இடங்களில் தேங்கி நின்றேன். என்னை நானே சுயப்பகுப்பாய்வு செய்தேன். எல்லோருக்கும் பிடித்தவளாக இருந்தேன். என் சுற்றங்களின் மனதில் அமைதியானவளாக, பிடித்தவளாக, பொறுமையானவளாக வலம்வந்தேன். ஆனால் உள்ளே இருந்த நான் முரணானவள். அதன்பிறகு வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடங்களில் ஒவ்வொன்றாகப் பயின்று கொண்டேன். குழந்தைகளுக்காக என்னை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். இறுதியில் யாருக்காகவும் நான் இல்லை. எனக்குள் நிகழும் மாற்றங்கள் எனக்கானதாகவே இருக்க வேண்டும் என்று இப்போது விரும்புகிறேன்.
என்னுள் இருக்கும் வேட்டையாடிப் பெண் என்னைத் தினமும் வேட்டையாடிக் கொண்டே இருக்கிறாள்.
வேட்டைகள் நமக்குப் புதிதல்ல. பன்னெடுங்காலமாகச் சமூகம் நம் மேல் நிகழ்த்திக் கொண்டிருக்கும் உணர்வு வேட்டைக்கு, கேள்வியாகச் சிலரும், வேள்வியில் கருகிச் சிலரும், பதிலாகச் சிலரும் இருந்திருக்கிறோம்.
பெண்ணென்று முளைத்து, முகிழ்ந்து, உதிர்ந்த சில மலர்களைப் பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
என்னொத்த சிந்தனை கொண்டவர்கள் இந்தத் தொகுப்பை வாசிக்கும்போது சங்கடங்கள் பெரிதாக இருக்காது. நான் எழுப்பும் கேள்விகளெல்லாம் பொருளற்றவை என்று எண்ணம் கொண்டவர்களுக்கோ, குடும்பம், சமூகம், மதம் என்கிற கட்டமைப்புகளைச் சில மணிநேரம் ஒதுக்கி வைக்க இயன்றாலே, இந்த வாசிப்பு சாத்தியமாகும்.
அப்படியோர் இடைவெளியில், நம் மனதில் இருக்கும் நாயகன்களையும் மீளாய்வு செய்ய முடிகிறது;
ராமன்களை விமர்சிப்பதும் சாத்தியமாகிறது.
பெண் மனதின் ஆழம் அறிய முடியாது என்று சொல்லப்படுவதும், பெண்ணின் மனம் ஆழம் என்று எப்போதோ ஒருவர் மனித மனத்தின் மூலை முடுக்களிலெல்லாம் எழுதி விட்டதாக நம்பப்படுவதும் வழக்கமே. ஆனால் அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. ஆழியின் அடியில் கொண்டமிழ்த்திவிட்டு, பகடி செய்வது சமூகத்தின் வாடிக்கையாகி விட்டது.
முதலில், பெண் என்பவள் யார்? நான் கடந்துவந்த வாழ்க்கை, இந்தக் கேள்விக்கு எனக்கு மூன்று விதமாகப் பதில் கொடுத்தது.
சமூகத்தின் பார்வையில், முலையும் யோனியும் இருப்பவள் பெண்ணாகிவிடுகிறாள் என்பதைப் பேதையாக இருந்தபோதே புரிந்துகொண்டேன். பெண்ணின் வாழ்வில் பூப்பெய்துவதும், சூல் கொள்வதும், முக்கிய மைல்கற்களாகவே இந்தச் சமூகம் பார்த்தது.
அதே சமயம், மனித இனத்தை வளர்த்தெடுத்த இயற்கை என்னும் இயக்கத்துள், பெண்ணொத்த குணங்களை இந்தச் சமூகம் தேடியும் நாடியும் சென்றது. நதியைத் தாய் என்றது. மொழியைத் தாய் என்றது. உலகின் முதல் உயிரைத் தோற்றுவித்த ஆழியை அன்னை என்றது. உணவைத் தருவிக்கும் மண்ணைத் தாய் என்றது. உயிர் உருவாக மூலமாகவோ, கருவியாகவோ, வழிவகை செய்த அனைத்தையும், ‘பெண்’ என்கிற மொழிவடிவமாகக் கொண்டாடியது.
அவ்வாறு பெண்ணை ஓர் உருவமாக மட்டுமே பார்க்காமல், உணர்வுகளின் உருவங்களாகப் பார்த்த சமூகத்தை நினைத்து, நானும் ஒருகாலம் பெருமிதம் கொண்டிருந்தேன்.
ஆனால், மங்கையாராய் பிறக்கவே மாதவம் செய்திடல் வேண்டும் என்று நான் புளகாங்கிதம் அடையத் தொடங்கியபோது, மதம் என்னை வேறொரு பரிமாணத்தில் பார்த்தது.
மதங்கள் கூறும் பெண்ணின் மொழி வடிவம் வேறாக இருந்தது. என்னை மென்மையானவள் என்றது. புனிதமானவள் என்றது. அன்பின் மறுவுரு என்றும், நான் பாதுகாக்கப்பட வேண்டியவள் என்றும் கூறியது. என் ஒழுக்கத்தையும் பொறுமையையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியது. இவ்வாறான விதிகள் என்னொத்த வயதையுடைய ஆண்பிள்ளைகளுக்கு ஏனில்லை என்கிற கேள்வி மனதில் புதைந்து கிடந்தது. நான் வளர வளர, பெண்ணிற்கு இவையெல்லாம் கட்டாயம் என்பதையும், பெண்ணாக வாழ்வதற்கான அடிப்படைத் தகுதிகள் இவையே என்பதும் அழுத்தமாக என்னுள் திணிக்கப்பட்டது.
பள்ளியில் படிக்கும் மாணவனும் மாணவியும் காதலில் சிக்கி அது இருவீட்டாருக்கும் தெரிய வந்தபோது, மாணவியின் படிப்பு நிறுத்தப்பட்டது. தவறின் தண்டனை ஒருத்திக்கு மட்டுமே வழங்கப்பட்டது. பெண்ணைப் பெற்றவள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அழுவதைப் பார்த்தேன். ஆண்பிள்ளையின் பெற்றோர் பெரிதாக வருத்தப்பட்டதுபோல் தெரியவில்லை.
“பொம்பள பிள்ளையை ஒழுங்கா வளர்க்காம ஊர் மேய விட்டிருக்கா” என்று ஏளனத்துடன் பேசியதைக் கேட்டதிலிருந்து, எனக்குள் பயம் பதிந்தது. இப்படி யாரும் என்னையும் என் பெற்றோரையும் பேசிவிடக் கூடாது என்று தோன்றியது. ஒழுக்கம் என் மனதை ஊடறுத்து அறிமுகமான கதை இதுதான். இப்படி மதமும் சமூகமும், ஒவ்வொரு நாளும், பெண்ணிற்கு அடர்த்தியான கருதுகோள்களை என்னுள் விதைத்துக் கொண்டே இருந்தது. ’ஏன்’ என்கிற கேள்விகளுக்கு என் அறிவு ஏற்றுக் கொள்ளும்படியான பதில்களை அளிக்க மறுத்தது. அதை ஓரளவு அறிவியல் சமன் செய்தது.
கிராமப்புறங்களில் சில பப்பாளி மரங்கள் இருக்கும். அந்த மரங்கள் என்றுமே காய்க்காது. நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது, அந்த மரத்தைப் பார்த்து என்னுள் நிறைய குழப்பங்கள் பிறந்தன. என் அன்னையிடம் வினவியபோது, அது ஆண் மரம்; காய்க்காது என்றார். அதெப்படி இது ஆண் மரம் என்று தெரியும் என்று கேட்டேன். ஆண் மரங்கள் காய்க்கவோ பூக்கவோ செய்யாது என்பது எனக்குக் கிடைத்த பதில். இந்தக் கேள்வி மனதுக்குள் குடைந்துகொண்டே இருக்க, பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் அதற்கான விடை கிடைத்தது.
ஒரு பூவிலிருந்து மற்றொரு பூவிற்குக் காற்று மூலமாகவோ, பூச்சிகளின் மூலமாகவோ மகரந்தம் சூல்முடியைச் சென்றடைவது குறுக்கு மகரந்தச் சேர்க்கை என்றும், ஒரே பூவில் இருக்கும் மகரந்தம் அதே பூவின் சூல்முடியைச் சென்றடைவது தன்மகரந்தச் சேர்க்கை என்றும் அறிந்தபோது ஒன்று விளங்கியது. ஆண் மரம், பெண் மரம் என்று முடிவு செய்வதெல்லாம், மகரந்தமும் சூல்முடியுமே அடிப்படை என்பதை விளங்கிக்கொள்ளவே, சற்று கடினமாகத்தான் இருந்தது.
அறிவியலுக்கு மென்மையான இனம், வலிமையான இனம் என்றெல்லாம் வகைப்படுத்தி வைக்கத் தெரியாது. தோற்றமும் சுபாவமும் உட்பட அனைத்திற்கும் காரணிகள் எங்கே என்று அது தேடும். ஒன்று மரபணுக் காரணியாக இருக்கும்; அல்லது சூழல் காரணியாக அமையும்.
இத்தனை வரையறைகளையும், விதிகளையும், விளக்கங்களையும் கடந்து வந்தபோது ஒன்று மட்டும் தெளிந்தது, பெண் என்பவள் ஒரு வரையறை அல்ல; அவள் ஒரு தொடரும் தேடல்.
நான் கடந்துவந்த இத்தனை ஆண்டுகளில், என்னுள் மீப்பெரு கேள்விகளை விதைத்துவிட்டுச் சென்ற பெண்கள் ஏராளம்.
இந்தத் தொகுப்பில், வரலாற்றிலும் புராணங்களிலும் நம்மை வழிநடத்திவிட்ட பெண்களை மீளாய்வு செய்கிறேன். அவர்கள் மௌனங்களில் புதைந்த கேள்விகளைத் தொட்டுப் பார்க்கிறேன். நாயகன்களின் கதைகளில் ஒதுங்கிய நாயகிகளின் உணர்வுகளை மீட்டெடுக்க முயல்கிறேன்.
வரலாற்றில் மாண்டு, நம்மை மீள வைக்கும் அழகிகளை மீள்பார்வையிட, என்னோடு நீங்களும் மனச்சவாரி வாருங்கள்.
அழுதும், சிரித்தும், தோள் சாய்ந்தும் சிந்திக்கத் தயாராக இருங்கள்!
அக அழகிகளைத் தேடி ஒரு பயணம்!
(தொடரும்)
படைப்பாளர்:
மீனாட்சி அடைக்கப்பன். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். அறிவியலிலும் வரலாற்றிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒவ்வொருவரின் மனதிலும் விடைதெரியாத பல கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவர் மனதின் சுவர்களை அரிக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஒரு பயணமே இவர் எழுத்து. சமூகத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மனப் போராட்டத்தை எழுத்தின் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்.


