Site icon Her Stories

தி கிரேட் கேம் – 03

Cruel war scenes, digital painting.

ஏப்ரல் 1978இல் நூர் முஹம்மது தாரகியின் அரசாங்கம் பதவியேற்றது. டிசம்பர் 1979இல், ஆப்கானிய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை சோவியத் யூனியன் எடுத்தபோது, ​​ஆப்கானிஸ்தான் தேசத்தை வேறு வகையான சமூக, அரசியல் நிறுவனமாக மாற்ற ஒரு தைரியமான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த மாற்றத்திற்கு காரணமானவர்கள் வர்க்க ஒடுக்குமுறை ஒழிக்கப்பட்டு உழைக்கும் மக்களின் உற்பத்தி ஆற்றல் திரட்டப்பட்ட ஒரு சோசலிச தேசத்தை நிறுவுவதைக் கற்பனை செய்தனர்.

நூர் முஹம்மது தாரகி

ஆப்கானிஸ்தானின் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDPA), இது முன்னர் அதிகாரத்திலிருந்து விலக்கப்பட்டவர்களையும் பெண்களையும் மாணவ இயக்கங்களையும் இணைப்பதற்கான வாகனமாக இருக்குமெனக் கருதப்பட்டது. சோசலிசத்தின் அறிவியல் கோட்பாடுகளில் முறையான பயிற்சிகள், கற்பித்தல்கள், கல்வியறிவினால் மக்களிடையே எழுத்தறிவைக் கொண்டு வந்து, வறுமையினால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மக்களின் வாழ்க்கையை மாற்றுவதனூடாகப் பொருளாதார சமூக விழிப்புணர்வுள்ள ஒரு புதிய சகாப்தத்தின் விடியலை இக்கட்சியின் தலைவர்கள் எதிர்நோக்கியிருந்தார்கள்.

ஆனால், சோசலிச சொர்க்கத்தில் வாழ விரும்பியோரைக் காட்டிலும் ஆயுதம் ஏந்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாகியது. ஆப்கானிஸ்தானின் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDPA) அதிகாரம் சூழ்ச்சிகளால் கைமாறியது ஒரு பிரதான காரணமாக இருந்தது. இந்தச் சூழ்ச்சிகளின் பின்னால் மாக்சிசக் கூட்டாளிகள் இருந்தார்கள் என்று நம்பப்பட்டது. அத்துடன் நாடு ராணுவ சதிக்கு ஆட்பட்டுவிட்ட குழப்பத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியது.

1978இல் இடம்பெற்ற ’புகழ்பெற்ற சவுர் புரட்சி’ என்பது மிகத் துல்லியமான ஒரு ராணுவ சதியால் நிகழ்ந்தது. 1973 முதல் 1978 வரை ஆப்கானியக் குடியரசின் அதிபராக இருந்த முகம்மது தாவூத் கான் ஒட்டுமொத்தமாகக் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டார். சில ஆயிரம் ராணுவ உறுப்பினர்களைக் கொண்டு மிகத் திறமையாக வடிவமைக்கப்பட்ட இந்தச் சூழ்ச்சி நடவடிக்கையே 1978இல் நூர் முஹம்மது தாரகியை ஆப்கான் குடியரசின் தலைவராக்கியது.

முகம்மது தாவூத் கான்

1978இல் ஒட்டுமொத்தமாகக் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்ட முகம்மது தாவூத் கான், 1973இல் அப்போதைய ஆப்கானின் அரசராக இருந்த சொந்த மைத்துனர் சாஃகிர் சாவைக் கொலை செய்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர். ஆப்கானிஸ்தான் தேசத்தில் 1933 தொடங்கி 1973 வரையான மிக உறுதியான நீண்ட ஆட்சியைப் புரிந்தவராக அரசர் சாஃகிர் சா இருந்தார்.

1930 முதல் ஆப்கானிஸ்தான் நாடு ஒரே குடியைச் சேர்ந்தவர்களாலேயே மாறி மாறி ஆளப்பட்டது. ’நாடேரி வம்சத்தின் வரலாற்றுக் குற்றங்கள்’ என்ற நியாயப்படுத்தல்களால் தாவூத் கான் அவரது குடும்பங்கள் கொல்லப்பட்டதை தாரகியின் அரசாங்கம் பார்த்தது. தாவூத் கான் நாடேரி அரச வம்சத்தின் கடைசி உறுப்பினர்.

ஆப்கான் அரசியல் கலாசாரத்தின் பாரம்பரியத் தூணாக இருப்பது பிரபுக்களின் பரம்பரை இயல்பு மீதான நம்பிக்கை. ’ஒவ்வொருவரின் பங்கு [நசிப்] என்பது அவரது தகுதி, சூழ்நிலைகள், திறன்களின் அடிப்படையில் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் அவரவர் இடத்திலும் நிலையிலும் நிற்கிறார்கள், எனவே நீங்கள் இறைவனுக்கும் அரசனுக்கும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏனென்றால் இறைவன்தான் வாழ்க்கையில் ஒருவரின் நிலையைத் தீர்மானிக்கின்றான்’ என்பதே ஆப்கான் மக்களின் பழமையான நம்பிக்கை.

1929-1930ஆம் ஆண்டில் ஒரு வருடம் தவறாக ஆட்சி செய்த பச்சா-ஐ சாகாவோவைத் தவிர, ஆப்கானிஸ்தானின் அனைத்து ஆட்சியாளர்களும் 1747 முதல் 1978 வரை துரானி பழங்குடியிலிருந்து வந்தவர்கள். அந்தப் பழங்குடியினருக்குள், அரியணைக்காக மோசமான போர்கள் நடந்தன. ஆனால், சவுர் புரட்சி வரை இந்தப் பழங்குடியினரின் ஆட்சி உரிமையை யாரும் திறம்பட சவால் செய்யவில்லை.

நூர் முஹம்மது தாரகி நிலபிரபுத்துவப் பரம்பரையைச் சேர்ந்தவரில்லை. அவர் நிலப் பிரபுக்கள், வஞ்சக பழங்குடியினத் தலைவர்களால் அதிக வரி விதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட ஓர் ஏழை விவசாயி மகனாக இருந்தார். இது காலங்காலமாக ஆப்கான் மக்களின் ஆட்சி அதிகாரங்கள் பற்றிய அடிப்படை அனுமானங்களை மாற்றியமைத்தது.

ஆப்கானிஸ்தானின் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDPA) தலைவர்கள் தங்களைப் புரட்சியின் நேரடி வசம்சாவளியாகக் கருதினார்கள். தாங்கள் ஆட்சியைக் கைப்பற்றக் காரணமாக இருந்த ’புகழ்பெற்ற சவுர் புரட்சி’யை ஒரு மதிப்புமிக்க மாதிரியாகக் கட்டமைத்தார்கள். 1978இல் ஆப்கானிஸ்தான் அறிவியல் அகாடமியின் தொடக்க விழாவில் அப்போதைய துணைப் பிரதமர் அமீனின் நீண்ட உரையில் இந்த உணர்வு நிரூபிக்கப்பட்டுள்ளது. இவரது நீண்ட உரை, ஆப்கானிஸ்தானின் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDPA), ஆப்கான் சமூகத்தை எப்படிக் கற்பனை செய்தது என்பதற்கான விளக்கத்தைத் தருகிறது.

ஆப்கானிஸ்தான் அனுபவம் அக்டோபர் புரட்சியின் பெருமைக்குரிய வாரிசாகவும் மார்க்சிசப் புரட்சிகரப் போராட்டங்களில் ஒரு தனித்துவமான நிகழ்வாகவும் கருதப்படலாம். ’புகழ்பெற்ற சவுர் புரட்சி’, ’அக்டோபர் புரட்சி’யைப் போலவே அரசியல் அதிகாரத்தைச் சுரண்டல்காரர்களிடமிருந்து நேரடியாகத் தொழிலாளர் வர்க்கத்திற்கு மாற்றியது. அக்டோபர் புரட்சியிலிருந்து சவுர் புரட்சியைத் தனித்துவமானதாகவும் அதிக வித்தியாசமானதாகவும் காண்பிப்பது எதுவென்றால், நிலப்பிரபுத்துவ நிலப்பரப்பில் நிலப்பிரபுத்துவ நிலைகளின் கீழ் முதன் முறையாக வெற்றி பெற்ற ஒரு புரட்சியாக இது இருக்கின்றது.

சவுர் புரட்சி

முதலாளித்துவம் வென்று தொழிலாளர் வர்க்கம் முழுமையாக அடித்து நொறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் மட்டுமே உண்மையான பாட்டாளி வர்க்கப் புரட்சி நிகழும் என்று மார்க்ஸ் கணித்திருந்தார். மேலும் லெனின் மத்திய ஆசிய விவசாய மக்களிடையே ஒரு புரட்சிகர இயக்கத்தை அணிதிரட்டுவதில் விரக்தியடைந்தார். ஆனால், மார்க்ஸ், லெனின் இருவரும் தோல்வியடைந்த இடத்தில், புரட்சிக்கு ராணுவத்தைக் ’குறுக்குவழி’யாகப் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானின் மக்கள் ஜனநாயகக் கட்சி ( PDPA ) வெற்றி பெற்றது.

ஒரு வகையில் அமீனின் உரையானது, மூலோபாய புத்திசாலித்தனத்தின் ஒரு பகுதியாக இருப்பதைக் காட்டிலும் மூலோபாயத் தேவை என்ன என்பதை மகிமைப்படுத்துகின்றது. அதிபர் தாரகியும் பிரதமர் அமீனும் தங்கள் கட்சி ஆட்சி அமைத்த வரலாறு புரட்சிகரமானது என்று நம்பியதைப் போல முழு ஆப்கானியர்களும் நம்புவதற்குத் தயாராக இருக்கவில்லை. ஆணவ உணர்வு சுற்றியிருப்பவர்களிடையே மனக்கசப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல, தங்களையே கவனக்குறைவாகச் செயற்படச் செய்யக்கூடியது. தைரியமான சூதாட்டமொன்றில் தங்களைப் பணயம் வைத்த மனிதர்கள் விவேகமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும். தாரகி இவற்றிலிருந்து தவறிவிட்டார். ’புகழ்பெற்ற சவுர் புரட்சி’யின் மகத்துவங்களைப் பாடித்திரிந்த அவரது கட்சியும் அவருக்கு ஆதரவளித்த கூட்டாளிகளும் விரைவிலேயே ’புகழ்பெற்ற சவுர் புரட்சி’யின் தோல்விக்கான காரணங்களை ஆராயும்படியான சூழல்களே உருவாகின.

மிகவும் ஆழமான மதச்சார்பு கொண்ட ஆப்கானியர்களிடையே சோவியத் பாணி சோசலிச ஆட்சியை நிலைப்படுத்துவதற்கான சமூக உறவுகள் வலுவடைந்திருக்கவில்லை. அரசாட்சி அதிகாரம் இறைவனின் அருள் என்று பழமையான கொள்கை கொண்டவர்கள், ’யார் வேண்டுமானாலும் அரசாளலாம்’ என்பதை இறைவனின் சாபம் என்று கருதினர்.

ஆப்கானிஸ்தான் 1919இல் சுதந்திரமடைந்திருந்தாலும், ஏகாதியபத்திய நாடுகள் ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்களைத் தத்தம் முகவர்களாக வைத்திருப்பதையே விரும்பின. எனினும், ஆப்கான் பழங்குடி சமுதாயம் ராணுவ சாகசங்களை முற்றிலும் வெறுத்தனர். மற்றது, தங்களது பண்பாட்டுக்கும் பழமைவாதங்களுக்கும் விசுவாசமாக இருந்த அவர்கள், அவற்றைச் சவால் செய்யும் எல்லாவிதக் கருத்தியல்களுக்கும் எதிராக இருந்தனர். இதனால் அரசியல் கட்சிகளில் ஆர்வமற்றவர்களாக இருந்தார்கள்.

ரஷ்யா ஆதரவு ஆப்கானிஸ்தான் ஜனநாயகக் குடியரசுக்கு எதிரான உள்நாட்டுக் கிளர்ச்சிகள், வழக்கமான அரசுக்கு எதிரான பொது எழுச்சியாகத் தொடங்கியபோது அது இன்னோர் ஆட்சிக் கவிழ்ப்பிலோ சூழ்ச்சியிலோ முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சோவியத் படைகளின் நேரடியான தலையீடு விரைவில் போரின் திசைகளை மாற்றியமைத்தன. சோவியத்தின் விரிவாக்கத்தை விரும்பாத முதலாளித்துவ நாடுகள் கிளர்ச்சியாளர்களை ஊக்குவிக்கத் தொடங்கின. பாகிஸ்தான், ஈரான், சீனா, அமெரிக்கா, சில ஐரோப்பிய, அரபு நாடுகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணமும் ஆயுத உதவிகளும் வழங்கின. கிளர்ச்சி அமைப்பாக இருந்த முஜாஹிதீன்களின் ஏழு முக்கிய இஸ்லாமியப் பிரிவுகளுக்கு விநியோகிக்கப்பட்ட பெரும்பாலான உதவிகள் பாகிஸ்தான் வழியாக வழங்கப்பட்டன. இந்தக் கிளர்ச்சிப் பிரிவுகளில் நான்கினை பாகிஸ்தான் மிகவும் விரும்பியது தனிக்கதை.

முன்னோடியில்லாத அரசியல் அதிகாரம், பழங்குடிகளின் அதிகாரத்தைக் குறைத்தது. கிராமங்களைப் பின்னே தள்ளியது. இப்படிப் பாதிக்கப்பட்ட பிரிவினரின் எண்ணற்ற உள்ளுர் மோதல்களே தேசியப் போராட்டத்தின் அளவு கிளர்ச்சிகளைப் போராக உயர்த்தியது. ஆனால், இந்த எதிர்ப்பு ஒருபோதும் இணைக்கப்படவில்லை. சோவியத் மீதான பொதுவான வெறுப்புக்கூட இதனைச் சாதிக்கவில்லை. ஒரு மத்திய தலைமை அல்லது தெளிவான கட்டளைச் சங்கிலி முறைமை ஒருபோதும் இல்லை. மாறாக, ஒற்றுமையின்மை, பழைய பகைகள், இனவேறுபாடு போன்றவை மோதல்களை வகைப்படுத்தின. போரிலும் இந்த வேறுபாடு இருந்தது. சில நேரத்தில், பிரிவுகள் (எண்ணிக்கையில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ தளர்வான துணைப் பிரிவுகளின் குழுக்கள்) சில முயற்சியைத் தொடரத் தற்காலிகமாக இணைந்திருக்கும். சில நேரத்தில் ஒத்துழைப்பு மறுக்கப்பட்டது, அல்லது ஒரு செயல்பாட்டின் போது உடைந்தது. சில நேரத்தில் அவர்கள் உண்மையில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். இந்த ஒற்றுமையின்மையை சோவியத் படைகள் நன்றாகவே பயன்படுத்திக்கொண்டன. அமெரிக்க மத்தியப் புலனாய்வு நிலையம் கிளர்ச்சிக் குழுக்களில் மோதலைத் தூண்டக்கூடியவர்களை இனங்கண்டு பயன்படுத்தத் தொடங்கியது. இந்தப் போர் பெரும்பாலும் ஒரு தொடரைக் கொண்டிருந்தது. நீண்ட உள்ளுர் மோதல்களால் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகியது.

முஜாஹிதீன் தளபதிகள் மதத்திற்காகத் தாங்கள் அர்ப்பணிக்கப்பட்டவர்கள் என்ற நம்பிக்கைகொண்டிருந்தார்கள். தங்களின் சமூக நிலை, கல்வி, தலைமைத்துவம் அனைத்திற்கும் தாங்களே பொறுப்பு என்பதில் உறுதியாக இருந்தார்கள். அவர்கள் ராணுவ ஒழுக்கத்தையோ கீழ்ப்படிதலையோ நம்பவில்லை. மாறாக, அவர்கள் ஆளுமை, தார்மீக தூண்டுதல், ஒற்றைக் கருத்தியலை அடைவதன் மூலமான பலத்தால் வழிநடத்தப்பட்டனர். இவர்களில் 15%க்கு மேலானவர்கள் முன்னாள் தொழில்முறை வீரர்கள் அல்லது முன்னாள் அதிகாரிகள். முன்னைய ஆட்சிகளில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் பயிற்சியளிக்கப்பட்டு அதிகாரச் சமநிலையின்மையினால் ஒடுக்கப்பட்டவர்கள், இனப் பிரிவுத் தலைவர்களால் சவால்களைச் சந்தித்தவர்கள். இவர்கள் ராணுவ தொழில்நுட்ப அறிவு, திட்டமிடல் திறன்கள், பயிற்சியளிக்கும் திறன்கள் பெற்றிருந்தார்கள்.

முஜாஹிதீன் போர்வீரர்கள் தனது குடும்பத்திற்காகவும், இனத்திற்காகவும், மதத்திற்காகவும் போராடினர். சுதந்திரம், கடமை உணர்வு ஆகியவற்றால், ஊதியம் இல்லாத தன்னார்வலராக. பெரும்பாலான போராளிகள் குடும்ப பொறுப்புகள் கொண்ட உள்ளுர் ஆண்கள். இவர்களில் பயிற்சியற்ற பகுதி நேரப் பணியாளர்களும் அடங்குவர்.

போர் இவர்களை அறியாத ஆழங்களுக்கு இழுத்துச் சென்றது. விரைவில் ’மொபைல் குழுக்கள்’ தோன்றின. இந்த மொபைல் குழுக்கள் பெரும்பாலும் இளைஞர்களை உள்ளடக்கியது. இவர்களில் சிலர் உயர்தரப் பயிற்சியும் சம்பளமும் பெற்றனர். இந்த மொபைல் குழுக்கள் முக்கிய பிரிவுகளைக் கட்டுப்படுத்தின. பரந்தளவிலும் பெரியளவிலும் நடவடிக்கைகளைச் சாத்தியமாக்கின.

பல வழிகளில் முஜாஹிதீன்கள் கெரில்லாப் போராளிகளின் இயல்பைப் பெறுகிறார்கள். இவர்கள் கடினமானவர்கள், வலிமையானவர்கள், தைரியமானவர்கள், ஆயுதங்களைப் பயன்படுத்தப் பழகியவர்கள். இவர்கள் தங்கள் சொந்த நிலப்பரப்பை நெருக்கமாக அறிந்திருந்தனர். இவர்கள் இரவுப் போரில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். இதனால் எதிரிகளை அஞ்சவைத்தார்கள். தொடக்கத்தில் இவர்களுக்கு மக்கள் ஆதரவு மிகவும் அமோகமாக இருந்தது. ஆள்சேர்ப்பு தொடங்கி, உணவு, தங்குமிடம், தகவல் பரிமாற்றம், நுண்ணறிவு போன்ற அனைத்தையும் தங்கள் இன மக்களிடமிருந்து அனுபவித்தார்கள்.

ஆப்கானிஸ்தான் சிறிய நிலப்பரப்பு சோவியத்துகளால் செய்யப்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட, ’ஃபயர்பவர’ சார்ந்த படைக்கு ஏற்றதுபோல் தோற்றமளித்தாலும் அது முஜாஹிதீன்களுக்காகவே இயற்கை அளித்த கொடை போலானது. பெரும்பாலும் சாலை இல்லாத பாலைவனம், நிலத்தின் பெரும்பகுதி மூடப்பட்ட மலைத்தொடர்கள், அடர்ந்த காடுகளின் பச்சை மண்டலங்கள், நீர்ப்பாசன பள்ளங்கள் முதல் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளைக்கூடக் கடினமாகக் காட்டும் கொடிகள், பயிர்கள், சிக்கிய தாவரங்கள், தட்டையான சமவெளிகள், பல சதுப்பு நிலங்கள் கெரில்லாப் போருக்கு ஏற்றது. பண்டைய காலங்கள் தொட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராடுவதற்கு ஆப்கான் மக்கள் அதன் நில அமைப்பைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

முஜாஹிதீன்கள் நிலஅமைப்பு வழங்கிய அத்தனை சாத்தியங்களையும் சூழ்ச்சி, சிதறல், பதுங்கியிருத்தல், பாதுகாப்பு போன்ற அனைத்திற்கும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

அரச, சோவியத் படைகள் பெரிதும் நம்பியிருந்த ஃபயர்பவர் குறிப்பிட்டளவு மட்டுமே உதவியது. எல்லா சவால்களையும் ஈடுசெய்ய முடியவில்லை.

ஆப்கானிஸ்தான் ஜனநாயகக் குடியரசின் ராணுவம் மோசமாகச் சரியத் தொடங்கியது. 1979இல் 90,000 இருந்த சோவியத் ஆதரவுப் படை 1981இல் 30,000 ஆகக் குறைந்தது. மீதமிருந்த படைகள் தகுதியற்றவர்கள், மோசமாகப் பயிற்சி பெற்றவர்கள் என்று மதிப்பு வரையறுக்கப்பட்ட நிலை எஞ்சியது. முக்கியமாக இவர்கள் இந்தப் போரில் ஆர்வமற்றவர்களாக இருந்தார்கள்.

உண்மையில் ஆப்கான் ஜனநாயகக் குடியரசை தொடக்கத்தில் மக்கள் பெரிதும் ஆதரித்தார்கள். சோவியத் எஜமானர்களின் ஆதரவு பொம்மையாக இருக்கும் ஆப்கான் ஜனநாயக குடியரசின் மீது வெறுப்பும் ஏமாற்றமும் கொண்ட அதிகாரிகள் அரசில் இருந்து கொண்டு விசுவாசமான முகத்தைக் காண்பித்துக் கொண்டே ரகசியமாகக் கிளர்ச்சிகளுக்கு ஆதரவளித்தார்கள். முஜாஹிதீன்களுக்குத் தகவல்களையும் ஆயுதங்களையும் வழங்கி உற்சாகமளித்தார்கள்.

இந்தப் போர் சகிப்புத்தன்மைக்கும் விருப்பத்திற்குமான போட்டியாக இருந்தது. முஜாஹிதீன்கள் போர்க்களத்தில் வெற்றிக்கான எதிர்பார்ப்புடன் மட்டும் போராடவில்லை. சரியான செயல்பாடு என்று உறுதியாக நம்பியதால் போராடினார்கள். நீண்ட முடிவற்ற போராட்டத்திற்கு அவர்கள் தயாராக இருந்தார்கள். சோவியத்துகளைப் பொருத்தவரை இதுவொரு சமரசமற்ற போர். சோவியத் எதிரியை அழிக்க போதுமான படைகளைப் பயன்படுத்துவதிலேயே குறியாக இருந்தது. எப்படியாகினும், இந்தப் போரில் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்தவர்கள் ஆப்கானிஸ்தான் மக்களே.

தொடரும் …

கட்டுரையாளர்

ஸர்மிளா ஸெய்யித்

விதிவிலக்கான  துணிச்சலான சமூக செயற்பாட்டாளர்.  சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். 
சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), 
உம்மத் (2014 நாவல்), 
ஓவ்வா ( கவிதை 2015), 
பணிக்கர் பேத்தி (நாவல் 2019), 
உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) 
ஆகியன இவரது நூல்கள்.
Exit mobile version