ஒரு வழியா மூணு மாச கால லாங் ஜம்ப், ஹை ஜம்ப் , ரிலே ரேஸ்க்குப் பிறகு, பொட்டி படுக்கைகளைக் கட்டிக்கிட்டு ( நாலுநாள் ட்ராவலுக்குத்தான் எம்பூட்டு சாமான் வேண்டிக்கெடக்கு?) ‘மதுரை குலுங்க குலுங்க……’ விமானமேறியாச்சு. நமக்குத் தண்ணி தர்ற கர்நாடகத்தைப் போல பெரிய மனசோட, “போனாப் போகுது பொழச்சிப்போ”னு ஸ்பைஸ்ஜெட்டு குடுத்த ஒரு டம்ளர் தண்ணியக் குடிச்சிட்டு ( கொடுக்கற நாலாயிரத்துக்கு ஒரு வாய் காபித்தண்ணி கொடுக்கப்படாதா?), நாலு மணி நேரத்தில டில்லியையும் தொட்டாச்சு.
நடுவுல டவுன்பஸ் போல சென்னையில் ஒரு ஸ்டாப்பிங் வேற….”வண்டி பத்து நிமிசம் நிற்கும் அதுக்குள்ள ஷாப்பிங் பண்றவங்கல்லாம் பண்ணிக்கோங்க” னு அறிவிப்பு வேற….நம்ம ஊரு பஸ்ல யாவாரம் பார்க்க வரும் வெள்ளரிக்கா, இஞ்சிமொரப்பா, முறுக்கு யாவாரிகள ஏளனமாப் பார்த்து டிரைவர், கண்டக்டர் விரட்டி விடுவாங்க. ஆனா இங்க ஏரோப்ளேன்லயே காபி, டீ, சமோசால இருந்து, ஊசி பாசி, கண்ணாடி, பெல்ட்னு தேவைப்படற அத்தனை பொருள்களையும் பகுமானமா விக்குறாங்க.
அஞ்சு ரூபா ஹேர்ப்பின்ன ஐநூறு ரூபாய்க்கு ஸ்டைலா வாங்கிட்டு, வேடிக்கை பார்த்த என்னை கேவலமா ஒரு லுக்கு விட்டு போன புள்ளயோட பெத்தவுகள நினைச்சு பாவமா இருந்துச்சி. டில்லி ஜனக்புரியிலுள்ள அகில இந்திய ஆசிரியர் சங்கத்தினுடைய தலைமையகத்துக்குப் போய், ஒரு மீட்டிங் முடிச்சு சில டாக்யூமென்ட்ஸ் வாங்கிக்கிட்டு, நள்ளிரவில் ஏர்இந்தியா விமானம் பிடிக்கணும். செப்டம்பர் மாத டில்லி கொஞ்சம் குளுகுளுன்னு இதமாத்தான் இருந்துச்சி. டில்லிக்கு எப்பப் போனாலும், தனியா நிற்குற ஆட்டோ, டேக்ஸில ஏறுறதில்ல, எல்லாம் முன்னெச்சரிக்கை முத்தண்ணா போலத்தான்.
ஏர்போர்ட்டின் ப்ரீபெய்ட் டாக்ஸினா பத்திரமா, கொண்டு போய் விடுவாங்க, ஏமாத்த மாட்டாங்கனு நமக்கு ஒரு மூடநம்பிக்கை. ப்ரீபெய்ட் டாக்ஸிக்கு பணம்கட்டி விட்டு, வரிசையாக நின்றிருந்த டாக்ஸி டிரைவர்களில் கொஞ்சம் அப்புராணியான முகம் தேடித் தோற்று(?), தாத்தா போல் தெரிந்த ஒரு டிரைவரின் டப்பா வண்டியைத் தேர்ந்தெடுத்தேன். போய்ச் சேர்ந்துருவமா அப்டின்னு சந்தேகம்- நான் வண்டியச் சொன்னேன்… நான் நீட்டின ரசீதை ஹை கோர்ட்டாகக்(!) கூட மதிக்காமல் புறந்தள்ளிவிட்டு, ‘எங்கே’ என சைகை காட்டியவரிடம் ‘ஜனக்புரி’ என்று சொல்லிவிட்டு உட்கார்ந்து, “ரீச்டு டெல்ஹி சேப்லி” னு வீட்டுக்கு ஒரு மெசேஜ் போட்டுட்டு நிமிர்ந்தால், வண்டி ஏதோ சந்துக்குள்ளும், பொந்துக்குள்ளும் வில்லனைத் துரத்தும் தமிழ்பட ஹீரோ போல போயிட்டிருக்கு. அடியாத்தீ…..வண்டி எங்க போகுது?
அடிக்கடி வருவதால், சின்னப் பிள்ளை போல லேண்ட்மார்க்கை மனப்பாடமாக வைச்சிருந்தாலும், அத்யாபக் பவன் ( Teachers home) போய்ச் சேரும் வரை எப்போதும் ஒரு படபடப்பான ஜாக்கிரதை உணர்வும் இருக்கும். “ஜீ…ஆப் கஹா ச்சல்த்தே ஹைங்?” .. பதட்டத்துடன் நான் வினவ, பான்பராக் குதப்பிக் கொண்டே அவர் ஏதோ கூற, திகைத்தேன். அவர் பேசுவது ஹிந்தி அல்ல! அட தேவுடா, எனக்கு அரைகுறை ஹிந்தி தவிர, வட இந்திய மொழிகள் எதுவும் தெரியாது.
வண்டி மும்பை எக்ஸ்பிரஸ் ரேஞ்சுக்கு போயிட்டேயிருக்கு. அப்பல்லாம் ரூட்மேப் போடற அளவுக்கு நமக்கும் ஞானம் இல்ல. ஆளைப்பார்த்தால் கடத்திக்கொண்டு போகிறவர் போலயும் தெரியலியே? என்னைக் கடத்தி கொண்டு போய் என்ன செய்ய? உப்புக்காகுமா? புளிக்காகுமா? அப்படியே கடத்திக் கொண்டு போய் பணம் கேட்டு ப்ளாக்மெயில் பண்ணினா கூட, பத்து பைசா தேறாது. “ அய்ய்ய்ய்ய்ய் எங்க அம்மாவை கடத்திட்டாங்க “னு குஷில பஸ் ஸ்டான்டுல நின்னு கத்துற பயபுள்ளைகள இல்ல பெத்து வைச்சிருக்கேன்?
“ஜனக்புரி வந்தாச்சு” இப்போ மொழியை விட்டுட்டு, மதியம் 1.30 க்கு மாற்றுத்திறனாளிகளுக்குப் போடற நியூஸ் போல சைகையில் செய்தி வாசிச்சார். இன்ஸ்டிடியூசனல் ஏரியா, காந்தி மார்கெட், அகர்வால் ஸ்வீட்ஸ், என எனக்குத் தெரிந்த அத்தனை லேண்ட் மார்க்கையும் அக்மார்க் சுத்தமா , சத்தமா சொல்ல…ம்ஹூம். எதையும் காணோம், எல்லாரும் ஊரைக் காலிபண்ணிட்டு ஓடிட்டாங்களோ??? அட்ரஸைக் காட்டினால் வாசிக்கவும் தெரியல. “தெருமுக்கு பாபா கோவில்ல லவ்வர்ஸ் பார்க் போல சோடி சோடியா திரிவாங்க, ரோட்டோரத்தில ஆலுபரோட்டா கடையக்கா நயன்தாரா போல அழகாயிருப்பாங்க, தள்ளுவண்டி பான்பராக் கடையில பசங்க கும்பலா நின்னு கும்மியடிச்சிட்டு இருப்பாங்க” வரைக்கும் லோக்கலா எனக்கு தெரிந்த டில்லி, ஜனக்புரியின் எல்லா ரகசியங்களையும் சொல்லியாச்சு.
‘சுத்தி சுத்தி வந்தீக’னு வண்டி சுத்திகிட்டே இருக்கு…. இப்படியே போனா கதைக்காகாது, நடுநிசி ப்ளைட்ட பிடிச்சிக்கிட மாட்டேன்னு தோண, பொங்கியெழுந்து ‘நிறுத்துடா வண்டிய’ னு தமிழ்ல கத்திட்டு, ( அவருக்கு தமிழ் தெரியாதுங்கற தைரியத்துல தான்) கீழே இறங்கி விசாரிக்க, அது சாணக்யபுரியாம். ஏம்ப்பா, ஜனக்புரி எப்படி சாஆஆஆஆணக்யபுரி னு காதுல விழும்? ஜஜஜஜஜ னனனனன க்க்க்க்க் பு புபுபுபு ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ரிரிரிரிரி ஒவ்வொரு எழுத்தாக எக்கோ பேக்ரவுண்டில் நான் கத்த, ‘லகுடிதிபுலி கங்கலமேக்கலி திகுடிசெகுர’னு அவரு ஏதோ ஒரு மொழியில் கத்த, அவரு கத்த, அப்புறம் நாங்கத்த, நான் கத்த, அப்புறம் அவரு கத்த..கத்த கத்த..கதறக் கதற பிரைம் டைம் தொலைக்காட்சி விவாதம் போல நாங்க சும்மா ‘பேசிக்கிட்டு இருந்தோம்.’
கடைசியில் ஜெயிக்கப் போவது யாருன்னு தெரிஞ்சு போச்சு. நமக்கு தொண்டை வத்திப் போன பிறகும் அவரு குர்ரேமுர்ரேன்னு தொடர, அபூர்வ சகோதரர்கள் படத்தில் மனோரமா ஆச்சி போலீஸ்காரருக்கு கொடுக்கும் சாபத்தையெல்லாம் டிரைவருக்கு கொடுத்து வழியனுப்பி விட்டு, சாணக்யபுரி ரோட்டில் பொய்த்துப்போன மூடநம்பிக்கையுடன் நின்று கொண்டிருந்தேன். நேரம் போயிட்டே இருக்கு, கும்பிடப் போன தெய்வம் போல குறுக்க வந்த ஆட்டோவ வழிமறித்து விபரம் கேட்க, தலை சுற்றியது. ஏர்போர்ட்டிலிருந்து மேற்கே 10 கி.மீ.ல் உள்ளது ஜனக்புரி, கிழக்கே எட்டு கி.மீ.ல் உள்ளது சாணக்யபுரி…இப்ப, மறுபடியும் நான் பதினெட்டு கி.மீ. போகணும். அவன் கேட்ட ஆனைவிலை, குதிரை விலை சார்ஜ்க்கு ஒப்புக் கொண்டு, ஒருவழியாய் ஜனக்புரி போயாச்சு.
வேலையை முடிச்சிட்டு, அவசர அவசரமா காந்தி மார்கெட்ல ஒரு குட்டி ஷாப்பிங் முடிச்சு (தலை போற வேலைனாலும் ஷாப்பிங் முக்கியம் மக்களே..அதுதான் நம்ம பண்பாடு, அதுதான் நம்ம பாரம்பர்யம், பார்த்திக்கிடுங்க) 1.45 விமானம் பிடிக்க இரவு 10 மணிக்கு கிளம்பி, டிராபிக் ஜாமில் சிக்கி சின்னாபின்னமாகி, இந்திராகாந்தி இன்டர்நேசனல் ஏர்போர்ட் டெர்மினல் 3க்கு போய்ச்சேர்ந்தேன். பெட்டிகளை ஸ்கேன் பண்ணி, செக்இன் செய்துவிட்டு, மதன்பாப் போல சிரிச்சிக்கிட்டே டிக்கட் கொடுத்த ஆபிசரிடம் சின்னப்பிள்ள போல விழுந்து புரண்டுஅடம் பிடிச்சி ஜன்னலோர சீட்டுக்கு போர்டிங் பாஸ் வாங்கியாச்சு. செக்யூரிட்டி செக்கிங், கஸ்டம்ஸ் செக்கிங்லாம் ஈசியா பாஸ் பண்ணி, அனுமார் வால் போல நீண்டிருந்த இமிக்ரேசன் ஜோதியில் ஐக்கியமானேன்.
ஊரு ஆயாக்கள் போடும் சிக்குக்கோலம் போல ஏகப்பட்ட நெளிவு சுழிவுகளுடன் க்யூ ஸ்லோமோசனில் நகர்ந்து கொண்டிருந்தது. 1.45 ப்ளைட் டைம். இப்போது மணி ஒன்று பதினைந்து. கண்டிப்பாக இந்த க்யூவில் நின்று இமிக்ரேசன் முடித்தால், நாளைக்குத் தான் ப்ளைட் பிடிக்க முடியும். அத்தனை பேரைத் தாண்டியும் போகமுடியாது. டென்சன் பெட்ரோல் விலை போல ஏற ஆரம்பித்தது. திடீரென எங்கிருந்தோ வந்த தேவதை “ AI ( AIR INDIA) 101 பேசஞ்சர்ஸ் , ப்ளீஸ் கம் பார்வர்டு, ப்ளைட் இஸ் வெயிட்டிங் பார்யூ” என குயிலாய்க் கூவ….”அட அத்தாம் பெரிய ப்ளைட்டையே நமக்காக வெயிட் பண்ண வெச்சாச்சுப்பா” னு சொல்லி சிரிக்கும், ஜனகராஜ் வாய்ஸ் மனசுக்குள்ள கேட்டது.
அரசியல்வாதி போல ( அதாங்க, எல்லாரையும் ஓவர்லுக் பண்ணி) முன்னே போய் இமிக்ரேசன் முடிச்சிட்டு, காத்திருந்த குயிலுடன் ரன் அன்டு வாக்குமாக கேட்நம்பர் 26 A வை அடைந்தேன். ப்ளைட்ல ஏறி “ஏர் இந்தியா வெல்கம்ஸ் யூ” கொஞ்சம் செயற்கை புன்னகையும் நிறைய சென்ட்டு வாசனையுமாய் வரவேற்ற ஏர்ஹோஸ்டலிடம், ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம்ல’ என கெத்தாக ( மனதிற்குள்) கூறிவிட்டு, சீட் கண்டுபிடிச்சு உட்கார்ந்த பிறகுதான் மூச்சு விட்டேன். 1.45 போய், 2.00 போய் 2.15 ……..ப்ளைட் கிளம்பல…கிளம்பல…கிளம்பல….
லேட்டா வந்ததால ப்ரண்டாகிப்போன ஏர்ஹோஸ்டஸ் தங்கச்சிய கூப்பிட்டு ‘இன்னா மேட்டரு’ னு விசாரிக்க, “பிரதமர் தனி விமானத்தில நியூயார்க் கிளம்பறதால ப்ளைட் டேக் ஆப் ஆக தாமதமாகுது” னு ரகசியமாச் சொன்னார். “இதில என்னா ரகசியம்? அவர் இந்தியாவுக்குள்ள போறத தான் ரகசியமா வைச்சுக்கணும், இல்லாட்டி நம்ம பயலுக #கோபேக் போட்டே ட்ரென்டிங் பண்ணிடுவாங்க”னு மனசுக்குள்ள ரகசியமா நினைச்சுக்கிட்டேன்.
எப்படியோ, நானும், பிரதமரும் ஒண்ணா (!!) நியூயார்க் போனோம்னு நாளைய வரலாறு சொல்லும்ல……? ஒருமணி நேர தாமதத்துக்குப் பின் விமானம் கிளம்ப, பக்கத்தில நேபாள பெண் வந்து உட்கார, நாங்க ரெண்டு பேரும் பேச, அந்தம்மா புலம்ப, நான் தூங்க….. அம்புட்டுதேங் டார்டாய்ஸ் சுருள் முடிஞ்சிடிச்சி. நிமிர்ந்து பார்க்க, பக்கத்து சீட் பெண்மணி தள்ளாடிக்கொண்டே இருபத்து மூன்றாவது முறையாக கிளாசை நீட்டி கெஞ்சிக் கொண்டிருந்தார்.
ப்ளைட் லேட்டா கிளம்புனாலும், சரியான நேரத்திற்கும் முன்னதாக அமெரிக்க நேரம் காலை 6.30 க்கு ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்குள் நுழைந்தது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் 9.30 மணி நேர வித்தியாசம். தள்ளாடி, தள்ளாடி நடைநடந்து போன ப்ளைட் சிநேகிதிக்குப் பிரியாவிடை கொடுத்து விட்டு, இமிக்ரேசன் வரிசையில் நிற்க, என் ரிட்டர்ன் டிக்கட் பார்த்த அதிகாரி ஜெர்க் ஆனார். ‘நான்கு நாட்களுக்காக இவ்வளவு செலவழித்து அமெரிக்கா வந்து போகும் அளவு , அவ்வளவு பெரிய வி.ஐ.பி யா அல்லது அமெரிக்காவிற்கே சவால் விட்ட அல்கொய்தா வா’ னு சந்தேகம் வந்திருக்க வேண்டும் அந்த நீண்ட மூக்கும், குண்டான உடல் வாகும் கொண்ட வயதான அதிகாரிக்கு…
பாஸ்போர்ட் உண்மையானது தானானு வேற டவுட் வந்திடுச்சு போல. நம்ம முழிய பார்க்குறார், பாஸ்போர்ட்ட பார்க்குறார்…அதை வித விதமாய் திருப்பிப் பார்த்து , ஸ்கேன் பண்ணி ,கம்ப்யூட்டரில் தட்டி, பேப்பர் பேப்பரா திருப்பி, லைட் வெளிச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்தார். “என்னுடையது தான், என்னுடையது தான் , என்னுடையதே தான் ஐயா, பிறகு என்ன, ஏர்போர்ட் வாசல்ல யாராவது கொடுத்த பாஸ்போர்ட்டையா வாங்கிட்டு வந்து, என்னதுனு சொல்லப்போறேன்” தருமியாய் மனசுக்குள் கதறிக் கொண்டிருந்தேன். கண்ணாடியைக் கழற்றச் சொல்லி…காது தெரியும்படி புகைப்படம் எடுத்து….பிறகும் திருப்தியுறாமல் “வை டிட் யு கம் டு அமெரிக்கா” என டெஸ்ட் வைத்தார். அவரிடம் பேசி மிச்சமிருந்த ஆவியை வீணாக்க விரும்பாமல், பிரம்மாஸ்திரம் போல் கையில் வைத்திருந்த ஐ.நா அழைப்புக் கடிதத்தையும், மிஷைல் ஒபாமா கலந்து கொள்ளும் ஐ.நா. பொது அவையில் நானும் கலந்து கொள்ளும் விபரங்கள் அடங்கிய கடிதத்தையும் கொடுக்க, முகத்தில் மாறுதல்…
”ஓஓஓஒ…வெல்கம் டூ நியூயார்க், மை பிரண்ட்”, குரலிலும் மாற்றத்துடன் இப்போது இன்ஸ்டன்ட் ப்ரெண்டாகி விட்டார். எனக்கு ஒபாமாவத் தெரியும்…பக்ஷே அவங்களுக்கு என்னைத் தெரியாது சாரே… என்று மனதில் சொல்லிக்கொண்டேன். கன்வேயரிலிருந்து என் பெட்டிகளை எடுத்து விட்டு, ட்ராலி தேட, மொத்தமாக லாக் பண்ணப்பட்டிருந்தது. ஏன் என யோசித்தவாறே பார்க்க, ட்ராலிக்குக் கட்டணமாம்..மூன்று டாலர் …அம்மாடியோவ்…மூவாறா பதினெட்டு… (மறந்து போன வாய்ப்பாடு எல்லாம் நம்ம ஆளுகளுக்கு டாலர் டூ ருபீ போடும் போது தான் பளிச்னு ஞாபகம் வரும்) 180 ரூவாயா…என மனசுக்குள்ள அல்பமா கணக்குப் போட்டு பார்த்து, வேணாம் போன்னு ஒதுங்கியாச்சு. ரெண்டு பெட்டிகளையும் புள்ளைங்களை ஷாப்பிங் மால்ல இழுக்குற அம்மா மாதிரி இழுத்துக்கிட்டே நடந்தேன்.
அடுத்து கஸ்டம்ஸ் செக்கிங். எனக்கு முன்னாடி இங்கிலீஷ் பட வில்லன் போல போனவனுக்கெல்லாம் ஸ்கேனர் சாந்தசொரூபியாய் வழிவிட, என்முறை வந்ததும் அலறியது. அவ்வளவு தான் , பெட்டி தலைகீழாக புரட்டப்பட்டது பரோட்டா போடப்பட்டது. “நத்திங் ஈஸ் தேர்” என நான் கத்துவதைக் கேட்பார் யாருமில்லை. ஒரு வாரமாக பார்த்துப் பார்த்து அடுக்கி வைத்த சூட்கேஸ் மாடு புகுந்த கம்பங்கொல்லை ஆனது.
சூர்யா படத்தில் வரும் காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. எனக்கே ஒரு சந்தேகம், “ஒருவேளை , சூர்யா போல யாராவது, வைரத்தை என் பேக்கில் வைத்து விட்டார்களோ? அவ்ளோ வைரம் கிடைத்தால் நாம் என்ன செய்யலாம்? முதல்ல இ.எம்.ஐ பூரா கட்டி விட்ரணும்”, என கற்பனையில் மிதக்க… சோதனையில் யுரேகா….என கத்தாத குறையாக அதிகாரி கண்டுபிடித்ததைப் பார்த்து அதிர்ந்தேன்…
தொடரும்…
தொடரின் முந்தைய பகுதி:
கட்டுரையாளர்
ரமாதேவி ரத்தினசாமி
எழுத்தாளர், அரசுப்பள்ளி ஆசிரியர். பணிக்கென பல விருதுகள் வென்றவர். இவர் எழுதி வெளிவந்துள்ள ‘கனவுகள் மெய்ப்படட்டும்’ கட்டுரைத் தொகுப்பு பரவலாக கவனம் பெற்றுள்ளது. 2014, 2015ம் ஆண்டுகளில் ஐ நா சபையில் ஆசிரியர் பேச்சாளராகக் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். இந்தத் தொடரில் அவரது ஐ நா அனுபவங்களை நகைச்சுவையுடன் விவரிக்கிறார்!