Site icon Her Stories

கலியா முதல் சீனிக்கிழங்கு பதநீர் பாகு வரை

Image by Freepik

ஏரல் ஸ்பெஷல் உணவுகள்

எங்கள் ஊர் ஏரலின் தமிழ் முஸ்லிம் சமூக வீடுகளில், நெய்ச்சோறு களறிக்கறி, பருப்புக்கத்திரிக்காய், தயிர்ச் சம்பல், தக்காளி ஜாம் (அல்லது ஜாமுக்குப் பதில் மாங்காய்ப் பச்சடி) ஆகியவை அடங்கிய விருந்து உணவுக்கு எப்போதுமே சிறப்பிடம் உண்டு. இதில் பெரிய பந்திகள் இல்லாத வீட்டு மட்டுக்குமான சிறு விருந்துகளில், பருப்பு கத்திரிக்காய்க்குப் பதிலாக கலியா என்ற துணைக்கறி இடம்பெறுவதுண்டு.

ஏரலுக்கும் இலங்கைக்கும் இருந்த தொடர்புகள் வழியே இலங்கை முஸ்லிம்களின் உணவுப் பண்டங்களான கலியா, வட்டலப்பம் போன்ற உணவுகள் எங்களுக்கும் பழக்கமாகியிருக்கக் கூடும் என்பது என் எண்ணம்.

மருமக்கமார் மாமியார் வீட்டுக்கு வந்திருக்கும்போது, புதுப்பெண் மாப்பிள்ளையை அழைத்துத் திருமண விருந்து தரும்போது, விடுமுறையில் பிள்ளைகள் எல்லாம் வீட்டில் கூடியிருக்கும்போது இப்படிச் சில தருணங்களில் நெய்ச்சோறுடன் விருப்பமாகச் சமைத்துப் பரிமாறப்படும் உணவு கலியா.

கலியாவை நினைத்தாற்போல மிக எளிதாகச் செய்து விடலாம் என்று சொல்ல முடியாது. கத்திரிக்காய் உருளைக்கிழங்கு வாழைக்காய் மூன்றையும் தனித் தனியே சிறுசிறு துண்டுகளாக அரிந்து உப்பும் மஞ்சள் தூளும் சேர்த்துக் கொஞ்ச நேரம் ஊறவைத்து, எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஆட்டு ஈரலை சிறு துண்டுகளாக வெட்டி உப்பும் மஞ்சளும் சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும்.தேங்காய் அரைத்துத் தலைப்பால் தனியாக தண்ணீர்ப்பால் தனியாகப் பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர்ப்பாலில் சிறிது சின்ன வெங்காயம், மிளகாய்த்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கூட்டி பொரித்தெடுத்த காய்களையும் ஈரலையும், சிறிதே சிறிது புளியையும் சேர்த்துக் கொதிக்க விட, பொரித்த காய்கள் தேங்காய்ப்பாலை உறிஞ்சிக் கொள்ளும். இப்போது கெட்டியான தலைப்பாலை ஊற்றி ஒரு கொதி வந்ததும் உடனே இறக்கிவிடலாம். அடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து மேலே ஊற்றி விட்டால்… அவ்வளவுதான்! வெகு சுவையான கலியா தயாராகிவிடும். ஆக இந்தக் கலியா என்பது தமிழ்நாட்டின் சில குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம்களின் ஒரு உணவுப் பதார்த்தம் என்பதுதான் நான் சொல்ல வருவது.

என் மகள் பெரியவள் அஸீமாவுக்குத் திருமணமாகி புதுமணத் தம்பதிகளாக மகளும் மருமகனும் வீட்டில் இருக்கிறார்கள். அன்று மதிய உணவுக்கு நெய்ச்சோறு கறியுடன் கலியாவும் சமைத்திருக்கிறேன். உணவு நேரம். மருமகனுக்கு உணவைப் பரிமாறியாயிற்று. இந்த இடத்தில் ஒன்று சொல்ல வேண்டும். மருமகனுக்குச் சொந்த ஊர் மைசூர். உருது பேசும் தந்தையும் கன்னடம் பேசும் தாயுமான அவருடைய பெற்றோர் வசிப்பதும் மைசூரில்தான். ஏரல் என்ற ஊரையே இத் திருமணத்துக்குப் பிறகுதான் அவர்கள் அறிவார்கள். சரி இது இருக்கட்டும் .

இப்போது உணவைப் பரிமாறிவிட்டேனா? மருமகன் கலியாவைச் சுவை பார்ப்பதை எதிர்பார்த்துச் சாப்பாட்டு மேஜையருகே நின்று கொண்டிருக்கிறேன். அவர் கலியாவை ஒருவாய் எடுத்து வாயில் வைத்ததும், இந்தக் கலியா எங்க ஊர் ஸ்பெஷல் அப்படியாக்கும் இப்படியாக்கும் என கலியாவின் அருமை பெருமைகளை விவரிக்கும் ஆவலுடன், “வாப்பா கலியா எப்படி இருக்கு நல்லா இருக்கா?” என்று கேட்கிறேன் நான்.

அதற்கு எங்கள் மருமகன் குனிந்த தலை நிமிராமல் பதில் சொல்கிறார், “நல்லா இருக்கு மாமி. எங்க அம்மாவும் இதே மாதிரி செஞ்சிருக்காங்க. அதே மாதிரிதான் இருக்கு இதுவும்,” என்று. அருகில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த என் மகளும் அவள் வாப்பாவும் பரிதாபமான என் முகத்தை ஒருமுறை ஏறிட்டு விட்டு ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொள்கிறார்கள், அமைதியாகத்தான்!

சரி பெரிய மருமகன் கதை இப்படியாச்சா? சின்னவள் அஸ்வினாவுக்குத் திருமணம் முடிந்தபின் ஒரு தடவை மகள் மருமகன் வந்திருந்த நேரம், நெய்ச்சோறு கறி பருப்புக் கத்தரிக்காயுடன் மாங்காய்ப் பச்சடி செய்தேன். மாங்காயைப் பச்சைமிளகாயும் கறிவேப்பிலையும் உப்பும் சேர்த்து வேகவைத்துக் கடைந்து கொள்ள வேண்டும். பின் சீனி சேர்த்துக் கிளறி கெட்டியான தேங்காய்ப்பால் அல்லது பட்டுபோல அரைத்த தேங்காய்விழுது சேர்த்து இறக்கிவிட வேண்டும். அதோடு நெய்யில் ஐந்தாறு சின்ன வெங்காயம், இரண்டு காய்ந்த மிளகாய், இரண்டு ஏலக்காய், ஒரே ஒரு துண்டு பட்டை, கொஞ்சமாக இஞ்சிப் பூண்டு விழுதோடு ஒரு இணுக்கு கறிவேப்பிலையும் உருவிப் போட்டு தாளித்துக் கொட்ட, ஏரல் ஊர் மாங்காய்ப் பச்சடி ரெடி.

மாங்காயின் புளிப்பு, மிளகாயின் காரத்தோடு, இனிப்பும் சேர்ந்த மணமான பச்சடி. இதற்கும் எங்கள் பகுதி தமிழ் முஸ்லிம் ஊர்களைத்தவிர வேறெங்கும் கிளைகள் இல்லைதான். சாப்பாடு வைத்த பிறகு எங்கள் சின்ன மருமகனிடம், “பச்சடி சாப்பிட்டு பாருங்க,” எனச் சொல்லி வாய் மூடுவதற்குள், அவரிடமிருந்து பதில் வந்தது, “இது நெறய வாட்டி சாப்பிட்டிருக்கேன் தோழர்… அம்மாவும் இத மாதிரிதான் பண்ணுவாங்க” என்று. ஆங்! சொல்ல மறந்துவிட்டேனே! எங்க சின்ன மருமகன் தோழர் அருண், அவருடைய அம்மா எங்கள் இளைய சம்பந்தி தோழர் வாசுகி கிரிதரன் குடும்பத்தினர் எல்லாரும் இங்கு சென்னை ஆவடியில் வசிப்பவர்கள். இப்போது என்னைப் பார்த்துச் சிரித்தது இளையவள். அவளுக்கு அமைதியாகவெல்லாம் சிரிக்கத் தெரியாததனால் சத்தமாக வாய்விட்டே…

https://www.youtube.com/watch?v=UJeFa8vv7fo

எங்கள் ஊர்ப் பக்கம் இன்னொரு பிரசித்தமான உணவு வட்டலப்பம். எட்டு முட்டைகளுக்கு ஒரு தேங்காய் என்ற கணக்கில் கெட்டிப் பாலெடுத்து சீனி சேர்த்து வாசனைக்கு ஏலக்காய் சேர்த்து ஆவியில் அவித்து எடுத்து மேலே நெய்யில் முந்திரி வறுத்துப் போட்டுச் செய்வோம். விசேஷ நாள்களின் விருந்தில் கண்டிப்பாக வட்டலப்பமும் இடம்பெற்றுவிடும்.

தமிழ்நாட்டில் எந்தப் பகுதியில் உள்ள தமிழ் முஸ்லிம்களுக்கும் வட்டலப்பம் தெரியாமல் இருக்காது என்பது என் நினைப்பு. அது மாறியது என் கொழுந்தனுக்கு செங்கோட்டை பண்பொழியில் பெண் எடுத்தபோது. அப்போதுதான் தெரிந்தது அங்கெல்லாம் இந்த வட்டலப்பம் கேள்வியே பட்டதில்லை என்று. பண்பொழியில் மட்டுமல்ல, திருநெல்வேலி பேட்டையிலும் இதுதான் கதை என்பதை எங்க காக்கா மகளை அங்குக் கட்டிக் கொடுத்த பிறகுதான் தெரிந்துகொண்டோம் .

திருமணத்தன்று இரவு மணமக்கள் அவர்கள் வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டில்தான் தங்க வேண்டும் என்றார்கள். அதன்படி பேட்டையில் தங்கினார்கள். மறுநாள் இங்கிருந்து நாலைந்து பேர் சென்று பெண்ணைப் பார்த்து வருவதாக ஏற்பாடு. அப்படிப் போகும்போது, சம்பந்தி வீட்டுக்கு வட்டலப்பம் செய்து கொடுத்துவிடலாம் என ஐம்பது முட்டைகள் அதற்குத் தக தேங்காய்ப்பால் எல்லாம் சேர்த்து அவித்து எடுத்து மேலே முந்திரியும் கிஸ்முஸ்ஸும் பொரித்த நெய்யையும் தளதளவென ஊற்றி ஜோராக தயாராகிவிட்டது வட்டலப்பம். கூடவே மற்ற பண்டங்கள் பழங்களையும் எடுத்துக்கொண்டு பேட்டைக்குப் புறப்பட்டாகிவிட்டது. ஏரலிலிருந்து பேட்டைக்குப் போய்விட்டு நேரத்தோடு திரும்ப வேண்டுமே என்று மதியம் மூன்று மணிக்கெல்லாம் புறப்பட்டுவிட்டனர். அப்போது நல்ல மே மாதம் வேறு .

வட்டலப்பம் பொதுவாக நல்ல மிருதுவான பண்டம். அதைச் செய்து முடித்து இறக்கி ஓரளவு ஆறிய பிறகு ஓரத்திலிருந்து கவனமாக வெட்டி எடுத்தால் மென்மையான வட்டலப்பம் அழகாக உடையாத துண்டங்களாக (புட்டிங் போல) வரும். கவனமாக இல்லையெனில் துண்டுகள் உடைந்து நொறுங்கி பார்க்க நன்றாயிராது.

காக்கா மகளின் மாமியார் அதுவரை வட்டலப்பம் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. அன்றைக்கு எடுத்துச் சென்ற வட்டலப்பம் அவ்வளவாய் சூடும் ஆறியிருக்கவில்லை. அதனால் அதைப் பார்ப்பதற்கு இது வெட்டித் துண்டாக எடுத்து சாப்பிட வேண்டிய பண்டம் என்பது போல் தெரியாமல் இருந்திருக்கிறது சம்பந்திக்கு. அதோடு மேலே நெய்யும் முந்திரிமும் கிஸ்மிஸ்ஸும் வேறு கிடக்கவும் வட்டலப்பத்தைப் பார்த்திராத அவர் அதைப் பாயாசம் என நினைத்து விட்டார்!

நினைத்து , பாயாசம் கோரும் குழிக்கரண்டியால் அதை ஒரே கலக்கு கலக்கியும் விட்டார். கலக்கிய பிறகு சட்டியைப் பார்த்தால் அவருக்கு ஒரே குழப்பம்! என்னதிது இப்படி துண்டு துண்டாக நொறுங்கிக் கிடக்கிறது… பாயாசம் போல இல்லியே என்று யோசித்தவர், பாயாசத்தைத்தான் இப்படி கெட்டியா செஞ்சுட்டாங்களோன்னு நினைத்து மேலும் பலமாகக் கலக்க, ஒரே கலக்கலாகப் போயிற்று வட்டலப்பம்!

அப்புறமா பேட்டைக்காரவுங்க கேட்க ஏரல்காரவுங்க விளக்க, “அடடா! அப்படியா?”, “அப்படித்தான்”னு முடிஞ்சு போச்சி வட்டலப்பம்!

இந்த நாற்பது வருடங்களில் நம் வாழ்க்கை முறையெல்லாம் எப்படியோ மாறிவிட்டது. மாற்றங்கள் ஒவ்வொன்றாய் நிகழ்ந்துகொண்டிருக்கும்போது நாம் அவற்றை அதிகமாக உணர்வதில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப்பின் பார்க்கும்போது ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து மாறியது போலத் தோன்றுகிறது.

பாய்வீட்டுக் கல்யாணம் என்றாலே பிரியாணியும் பொரித்த கோழியும் தவிர்க்க இயலாமல் நினைவு வந்துவிடும் இல்லையா? நாற்பது நாற்பத்தைந்து வருடங்கள் முன்பு ஏரலில் எங்களுக்கு பிரியாணியே தெரியாது என்றால், உங்களுக்கு அது ஆச்சரியத்தைத் தரக்கூடும் இன்று. ஏன் எழுதும்போது எனக்கே அப்படித்தான் இருக்கிறது!

ஜன்னத் ஹோட்டல், நன்றி: Just Dial

வாப்பா ஊருக்கு வந்திருக்கும்போது அவரோடு திருநெல்வேலி போனால், அங்கு திருநெல்வேலி ஜங்ஷனில் ஜன்னத் ஹோட்டலில் பிரியாணி வாங்கித் தருவார். சாப்பிட்டுவிட்டு கையை நெடுநேரம் முகர்ந்து முகர்ந்து பார்த்துக் கொண்டிருப்போம் நாங்கள். பிறகு ஏரலிலேயே சுல்தானியா ஹோட்டலில் எப்போதாவது வாங்கிச் சாப்பிடுவதுண்டு. ஆனால் அதெல்லாமும் எண்பதுகளுக்குப் பிறகுதான். வீடுகளில் பிரியாணி சமைப்பதெல்லாம் அன்று பழக்கமே இல்லை.

எழுபதுகளின் இறுதிவரை ஊரில் திருமணத்தில் மதிய விருந்து வெறுஞ்சோறு, ஆட்டுக்கறி பருப்புகத்திரித்காய், ரசம். வீடுகளில் மற்ற விருந்துகளுக்கு விசேஷமாக நெய்ச்சோறு சமைப்பது வழக்கம். அதிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக நெய்ச்சோறு அல்லாத வெறுஞ்சோறு என்போம். சாதாரணமாக நாம் வீட்டில் சமைக்கும் புழுங்கலரிசிச் சோறுதான். செம்புப் பாத்திரத்தில் (அண்டா) சமைப்பதால் ஒரு தனி மணத்துடன் இருக்கும். ஊரில் சோறு ஆக்குதல் என்றே சொல்வோம்.

அண்டாவில் ஆக்கிய சோற்றை பனையோலைப் பாயை விரித்துப் பரப்பி விடுவார்கள் ஒன்றோடொன்று ஒட்டிவிடாமல் இருந்பதற்கு. சோறு குழைந்து ஒட்டி விடுவது ஆகப்பெரிய குறையாகப் பார்க்கப்படும். எனவே பயிராக வடித்துப் பரப்பி விடுவார்கள். சாதாரணமாகவே வீடுகளிலும்கூட, “சோத்தைக் குழையாம வடிக்கத் தெரியல! ஒங்க ம்மா என்ன பிள்ள வளத்துருக்கா,” என்ற மாமியின் கேள்விக்குப் பயந்து, புது மருமகள் சோறு பயிரா வடிக்கணுமே என்று அல்லாவையும் ரசூலையும் வேண்டிக்கொண்டிருப்பாள்! இதில் கல்யாணக் கூட்டத்திற்கென்றால் கேட்கவா வேணும்? அதனால் சோறு ஆக்கி இறக்கும் பக்குவம் ஆக முக்கியம்.

இப்போது தால்சா எனச் சொல்லப்படுவதல்ல நெய்ச்சோறுக்கு நான் சொல்லும் எங்கள் பகுதி பருப்புக் கத்திரிக்காய். துவரம்பருப்பு, கத்திரிக்காய், மாங்காய் , வெங்காயம், தக்காளி , புளி சேர்த்து செய்யும் கூட்டுதான். இது வேறு ருசியில் வேறு மணத்தில் எங்கள் ஊர்ப் பகுதிகளில் செய்வது .

காயல் புளியாணம்

ரசமும் அப்படித்தான். அதைப் புளியாணம் என்றுதான் சொல்வது. பொதுவாக சைவ சாப்பாடுகளில் பரிமாறப்படும் ரசத்திலிருந்து மாறுபட்டிருக்கும் இந்தப் புளியாணம். தேங்காய், மிளகு, சீரகம், சிறிது பெருஞ்சீரகம், பூண்டு, பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து நைய நொறுங்கத் தட்டி, புளியில் கூட்டி, காய்ந்த மிளகாயைச் சுட்டு அதோடு பிசைந்து கொண்டு, நல்லெண்ணெயில் சின்ன வெங்காயம், கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்க வேண்டும். இதுதான் கறியாணத்துக்கும் பருப்புக் கத்திரிக்காய்க்கும் உகந்த புளியாணம்.

கல்யாண வீட்டுச் சாப்பாட்டிற்கே தனி மணத்தை அளிப்பது கறியாணம்தான். களரிக்கறி என்று நாவில் நீரூற பிரியமாக அழைக்கப்படும் அந்த ஆட்டிறைச்சி ஆணம்தான் ‘கல்யாணவூட்டுச்’ சாப்பாட்டில் முக்கியத்துவம் பெறுவது . இந்தக் களரி ஆணம் ஸ்ரீவைகுண்டம், ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி, ஆழ்வார்திருநகரி, கேம்பலாபாத், பேட்மாநகரம், ஏரல், சிறுத்தொண்டநல்லூர், சூழவாய்க்கால், சேதுக்குவாய்த்தான், குரும்பூர், ஆத்தூர், உடன்குடி போன்ற ஊர்களிலெல்லாம்தான் ஒரே மணம் திடம் நிறம் குணத்துடன் சமைக்கப்படும்.

அதாவது மேலே சிவந்த நிறத்தில் எண்ணெய் மிதக்க, (கொத்து கொத்தென்று தேங்காயைப் போட்டுக் கொல்லாமல்) அளவோடு தேங்காய் சேர்க்கப்பட்டு, மணமணமாக ஆக்கி இறக்கிய களரிக்கறிக்கு இவ்வூர்களைத் தவிர வேறெங்கும் கிளைகள் கிடையாது. இந்தப்பக்கம் தூத்துக்குடிக்குப் போகும்போதே அதன் மணம் மாறிவிடும். அந்தப்பக்கம் மேலப்பாளையத்திலும் திருநெல்வேலியிலும் திடம் மாறி, பேட்டையிலும் தென்காசியிலும் நிறம் மாறி, கடையநல்லூர் செங்கோட்டையிலெல்லாம் குணம் மாறி மாறியே போய்விடும்.

இப்படியான வெறுஞ்சோறு கொஞ்சம் கொஞ்சமாக மாறி எண்பதுகளில் நெய்ச்சோறு கட்டாயம் என்று ஆனது. இயன்றவர்கள் பிரியாணியும் போட்டார்கள். ஆனால் அப்போதும் பிரியாணி பரவலாகவில்லை. தொண்ணூறுகளிலிருந்துதான் எங்கெங்கு நோக்கினும் பிரியாணியடா என்று ஆகிவிட்டது. “எண்பத்தியெட்டுல ஒங் கல்யாணத்துக்கே ஒங்க வாப்பா பிரியாணி எங்க போட்டாங்க? நெய்ச்சோறோட கதய முடிச்சிட்டாங்களே”ன்னு ஒரு முணுமுணுப்பு காதுல விழுது… அதை அப்படியே கண்டுகொள்ளாமல் தாண்டி வந்துவிடலாம் இங்கு…

நன்றி: Macho Recipes

எங்கள் பகுதி ஊர்களுக்கே உரிய இன்னொரு பிரத்யேக உணவு தக்கடி. காலை விருந்துகளுக்கும் கல்யாணத்துக்கு மறுநாள் வந்திருக்கும் உறவுகளுக்குக் காலை உணவாகவும் சமைக்கப்படும் விசேஷமான உணவு தக்கடி. ஆட்டுக்கறி தாளித்து ஆணம் கொதித்துக்கொண்டிருக்கும்போது அந்த ஆணத்தை எடுத்து அரிசிமாவில் ஊற்றி விரவி ஊறவிட்டு, அதோடு நிறைய தேங்காய்ப்பூ, பொடியாக அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை எல்லாம் கலந்து கொழுக்கட்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றை வெந்து கொண்டிருக்கும் கறியுடன் போட்டு வேக வைத்து இறக்க வேண்டும். மிக இறுக்கமாகப் பிடித்துவிட்டால் கொழுக்கட்டைகள் ‘கல்லு’க்கட்டைகளாகிவிடும். சரியாகப் பிடிக்காவிட்டாலோ ஆணத்தோடு கரைந்து கூழ் போலாகி விடும். அதனால் மிகுந்த கவனத்துடன் சமைக்கப்பட்டு கறியும் முள்ளும் ஆணமும் கொழுக்கட்டையுமாக சும்மா கொழுக் மொழுக்கென்றிருக்கும் ஏரல் தக்கடி!

ஓட்டுமாவு
சீப்பணியம், https://www.betterbutter.in/ta/recipe/90917/seepaniyam-in-tamil

தின்பண்டங்கள் என்று பார்த்தால் ஓட்டுமாவு, சீப்பணியம் என்பவை மொத்தமாகச் செய்து வைத்திருந்து சாப்பிடக்கூடியவை. மணப்பெண்ணுக்குச் சீராக மாப்பிள்ளை வீட்டுக்குத் தரும் பண்டங்களும் கூட. ஓட்டுமாவு என்பது அரிசிமாவுடன் முட்டை, தேங்காய்ப்பால் கலந்து விரவி நெய்யில் வறுத்து சீனி சேர்ப்பது. ஒரு படி மாவுக்கு (ஒரு படி அளவு 1600 கிராம் வரும்) நான்கு தேங்காய்களும் எட்டு முட்டைகளும் கணக்கு. அன்றைக்குச் சீராகப் பெண்வீட்டினர் பதினொரு படி இருபத்தியொரு படி ஓட்டு மாவெல்லாம் மிகச் சாதாரணமாகக் கொடுத்தார்கள். அதைப் பெற்றுக்கொண்டு மாப்பிள்ளை வீட்டார் அவர்களுடைய உறவினர்களுக்கெல்லாம் பங்கு வைப்பார்கள்.

ஓட்டுமாவுப் பக்குவம் போலவே விரவி, ஆனால் மாவை கெட்டியாகப் பிசைந்து குழல் வடிவில் மடித்துத் தேங்காய் எண்ணெயில் பொரித்தெடுப்பது சீப்பணியம். குழல் பணியம் எனவும் சொல்வதுண்டு. இதனை 501, 1001 என்ற எண்ணிக்கைகளில் பெரிய பெரிய குத்துப்போணிகளில், தவலைப் பானைகளில் வைத்து சீர் கொடுப்பார்கள்.

இன்று ஊர்களில் ஓட்டுமாவு, சீப்பணியம் தயார் செய்து விற்பவர்கள் இருக்கிறார்கள்.தேவைக்கு வாங்கிக் கொள்ள முடியும். ஆனால் இன்று நினைத்தாலும் கிடைக்காத நினைக்கும்போதே நாவில் நீரூற வைக்கும் இரண்டு உணவுகள் எங்களுக்கு அன்று கிடைத்தன.

https://www.youtube.com/watch?app=desktop&v=6bkMnN_zYiA&ab_channel=AadavanChannel

ஒன்று பனம்பழம் சுட்டுச் சாப்பிடுவது… எங்க வாப்புமாவுக்கு எங்கள் கீழத் தெருவுக்குப் பின்புறமிருக்கும் வண்டிக்கார நாடார் தெருவில் நிறைய சிநேகிதிகள் உண்டு. வள்ளிப் பாட்டியிடமிருந்தோ, காசிக்கனி பாட்டியிடமிருந்தோ வாப்புமாவைத் தேடி பனம்பழம் அவ்வப்போது வந்துவிடும். விறகடுப்பில் பனம்பழத்தை பக்குவமாகச் சுட்டு மேல்தோலை உரித்து தங்கநிறத்தில் தகதகத்தபடி சாறு கனிந்து ஊறியவாறு உள்ளிருக்கும் பழத்தைப் பிய்த்து, அழகாகச் சுருட்டி திப்பி திப்பியாக்கி, ஆளுக்கு இத்தனை திப்பி என்று சமமாய்க் கணக்கிட்டு, பேரன் பேத்திகள் வட்டமாய்ச் சூழ்ந்திருக்க வாப்புமா காலை நீட்டி அமர்ந்து பங்கு வைக்கும் அழகே அழகு! அப்படிச் சாறு ஊற ஊறத் தொண்டையில் வடியும் அந்த பனம்பழத்தின் சுவையை என்ன பாடுபட்டும் சொல்லில் வடிப்பது இயலாது!

பதநீர் பூசணிக்காய் பாகு – இதைப் போலவே பதநீர் சீனிக்கிழங்கு பாகு, https://www.picuki.com/media/2834966683855028981

இன்னொன்று பதநீரில் சீனிக்கிழங்கை வட்டவட்டமாக வெட்டிப் போட்டு தேங்காய்ப்பூவும் சேர்த்துக் காய்ச்சுவது. கிழங்கும் வெந்து, பதநீரும் வற்றிக் கெட்டியாகி வீடே மணமணக்கும்! ஆளுக்கு ஒரு தட்டில் ஊற்றி இரண்டு மூன்று கிழங்குத் துண்டுகளையும் போட்டுத் தருவார்கள் என் வாப்புமா.

இன்று நினைத்தாலும் நெஞ்சினிக்கிறது. இனிப்பது பனம்பழத்தாலோ சீனிக்கிழங்கினாலோ பதநீராலோ மட்டும்தானா?

படைப்பாளர்

ஜமீலா

54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.

Exit mobile version