Site icon Her Stories

🌙 ✨வளர்பிறை காலம்✨🌙

இஸ்லாமிய ஆண்டின் ஒன்பதாவது மாதமான ரமலான் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் வரவேற்றுப் புனிதப் படுத்தும் சங்கையான மாதமாகத் திகழ்கிறது. இந்த ஒரு மாதமும் விடிகாலைக்கு முன்பிருந்து அந்திசாயும் வரை தண்ணீரோ உணவோ உட்செல்லாமல் நோன்பிருப்பது முஸ்லிம்களின் கடமை (நோயாளிகள், நீண்ட பயணத்தில் இருப்பவர்கள், வயது முதிர்ந்தவர்கள்,  குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டுபவர்கள் ஆகியவர்களுக்கு நோன்பிலிருந்து விலக்கு உண்டு).

நேற்று மாலையுடன் எட்டாம் மாதமான ஷஃபான் மாதம் முடிந்து ரமலான் மாதத்தின் தலைப்பிறை  தோன்றியது. பிறைதோன்றிய இரவிலிருந்து நோன்பு மாதத்திற்குரிய சிறப்பு இரவுத் தொழுகையான தராவீஹ் தொழுகை, விடிகாலைக்கு முன்பு நோன்பைத் தொடங்கும்போது உண்ணும் சஹர் உணவு, இன்று மாலை சூரியன் மறைந்த பிறகு நோன்பைத் துறக்கும் இஃப்தார், நோன்பில் செய்து முடிக்க வேண்டிய சிறப்பு செயலாக குர்ஆன் ஓதி நிறைவு செய்தல் என ரமலான் களைகட்டத் தொடங்கிவிட்டது.

ரமலானின் முதல் பிறையை தலைப்பிறை என்போம். அன்று பிடிக்கும் முதல் நோன்பு தலைநோன்பு ஆகும். இந்தத் தலைப்பிறைக்காகவும்  தலைநோன்புக்காகவும் எதிர்பார்த்துக்  காத்திருத்தல் அன்றிலிருந்து இன்றுவரை மிக மிக அழகானது. 

https://www.khaleejtimes.com/ramadan/ramadan-2024-oman-announces-first-day-of-holy-month

அன்று நாற்பது நாற்பத்தைந்து வருடங்களுக்கு முந்தைய ஏரல் ஊரின் வடக்குப்பள்ளித்தெரு நினைவில் எழுகிறது மெதுவாக…

பிறை தெரிந்து விட்டதா நாளை தலை நோன்பா என்று ஒவ்வொரு வீட்டிலும் பெரியவரிலிருந்து சிறுவர்கள் வரை வான் பார்த்து நிற்கும் பரபரப்பான அந்திமாலை அது.

இலங்கை வானொலியிலிருந்து  வரும் தகவலுக்காக வானொலியின் முன் ஆர்வமாகக் காத்திருந்த அன்றைய பொழுது…

சுவாமிமலை பெரிய பள்ளிவாசல் நகரா, படம் : https://m.facebook.com/367801426967264/posts/1259845031096228/

பள்ளிவாசலில் நகரா அடித்துத் தலைப்பிறை தெரிந்துவிட்டது என அறிவிப்பதை எதிர்நோக்கி வாசல் திண்ணையில் தலையில் சீலைபோட்டு  அமர்ந்திருந்த வாப்புமா (அப்பாவுடைய அம்மா), மூமாக்கள் (அம்மாவுடைய அம்மா).

 அன்றிரவு தலைநோன்பாக இருக்கலாம் என மதியமே மண மணமாக ஆட்டுக்கறி  ஆக்கி,  முருங்கைக்கீரைப் பொரியல் செய்து, முட்டை அவித்துத் தலைநோன்பை ஊர் வழக்கப்படி வரவேற்ற ம்மாக்கள். 

கூட்டாஞ்சோறு ஆக்க குதூகலத்தோடு காத்துக்கொண்டிருந்த குமரிப் பெண்கள். அவர்களோடு சேர்ந்து களிக்கக் குதித்துக் கொண்டிருந்த சிறுமிகள்.

நோன்பு மாதம் முழுக்க இரவில் நடைபெறும் தராவீஹ் எனப்படும் சிறப்புத் தொழுகைக்குக் கட்டிப்போக ஒழுங்கான தாவணியைத் தேடிய அக்காக்கள் .

முதல்முறையாக நடு இரவில் விழித்து நோன்பு பிடிக்கப் போகிறோம் என்ற தலைகொள்ளாப் பெருமையோடு  நாளெல்லாம் பச்சைத் தண்ணீரும் குடிக்காமல் நோன்பு நோற்க வேண்டிய பெரும் பொறுப்பையும் ஏற்கப் போகும் பரவசத்துடன்  சிறுவர்கள்…

தனக்குக் கீழே  பரபரக்கும் மக்களை அமைதியாக நோக்கியபடியே    ரமலான் தலைப்பிறையை வெளிப்படுத்தப் போகும் மாலை வானம் அல்லாவே நாய(க)னே என்று  அதன் போக்கில் கவிந்திருந்தது அழகாக.   

நோன்பின் பிறையோடு வளர்ந்து கொண்டே செல்கின்றன நினைவுகளும்…

கூட்டாஞ்சோறு

தலைநோன்பின் தலைப்பிறை மாலையில் ஏரலில் கூட்டாஞ்சோறு ஆக்கும் வழக்கம் இருந்தது அன்று. ஒரே தெருவில் வசிக்கும் குமரிப் பெண்கள்  அவர்களுள் யாராவது ஒரு தோழியின் வீட்டில் ஒன்றாகக் கூடிச் சோறு ஆக்குவார்கள். அப்படிக் கூடிக் கூட்டாஞ்சோறு ஆக்குவதற்குத் தோதான வளவு இருக்கும் வீடாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.

வளவென்றால் தென்னையும் கொய்யாவுமாகப் பூத்துக் காய்க்கும்   கிணற்றோடு விரியும் வளவாக்கும் என்ற கற்பனையெல்லாம் வேண்டாம். அன்று எங்கள் தெருவின் இரண்டு சாரியிலும் உள்ள எந்த வீட்டிலும் பெரிய வளவும் கிணறும் இருந்ததில்லை. எங்கள் கீழத் தெருவின் வீடுகள் பெரும்பாலும் ஒடுக்கமானவை; நீளமும் குறைந்தவை. வளவுகள் அடுப்படியை அடுத்த மிகச்சிறு வெளிதான். இன்று ஃபிளாட்டுகளில் சர்வீஸ் ஏரியா என்று சொல்லப்படுபவற்றுக்கு கொஞ்சமே கொஞ்சம் கூடுதல். அவ்வளவுதான். அதிலிருந்தும் சற்றுப் பெரிதாக இரண்டு தக்காளிச் செடி, பச்சிலை, வாடாமல்லி, கனகாம்பரம் என்று வளர்ந்திருக்கும் வளவே  கூட்டாஞ்சோறு ஆக்குவதற்குப் போதுமானதாகிவிடும். 

தலைநோன்புக்கு முந்திய முன்மாலைப் பொழுதிலேயே சிறுமிகளுக்குக் கொண்டாட்டம்தான். சோறாக்கப் போகும் வளவை தூத்துப் பெருக்கித்  துப்புரவு செய்து தண்ணீர் தெளித்து வைத்துவிட்டால் வாப்புமா, மூமாக்களை அழைத்து வந்து அடுப்பு கூட்டச் சொல்லி விடலாம். அவர்களோடு கூட்டாஞ்சோறுக்குச் சேரும் லாத்தாக்களும் (அக்காக்கள்)   கலகலவென  வந்து கூடிவிடுவார்கள்.

துப்புரவாக்கிய வளவில் அடுப்புக் கூட்டும் வேலை தொடங்கிவிடும். எத்தனை அடுப்புகள் வேண்டுமோ (பொதுவாக ஐந்து ஏழு ஒன்பது இப்படித்தான்)அத்தனை நீளத்துக்கும் பானை வைக்கும் அகலத்துக்கும், முன்பக்கம் விறகு வைக்க ஏதுவாகவும் பள்ளம் பறித்துவிட்டு,  களிமண்ணைக் குழைத்து மூன்று மூன்று உருண்டைகளாக  உருட்டி மேற்புறம் ஒன்றும் கீழ்ப்புறம் இரண்டுமாக அஃகன்னா வடிவில் வைத்து விட்டால் அடுப்பு தயார்!

இனி அடுப்பை  அலங்கரிக்க ஆரம்பிப்போம். அலங்காரமென்றால்   அண்ணாச்சி கடையில் கொஞ்சம் நீலப்பொடியும் ரோஸ்கலர்ப்பொடியும் வாங்கி வந்து தனித்தனியே சிரட்டையில்  நீரூற்றிக் கரைத்துக்கொண்டு அதேபோல் கொஞ்சம் சுண்ணாம்பும் கலந்துகொண்டு ரோஸ், நீலம், வெள்ளைப் பொட்டுகளாக அத்தனை அடுப்புகளைச்  சுற்றியும் அடுப்புக் குமிழிகளிலும் வைத்துவிட வேண்டியதுதான். இப்போது ஜம்மென பொட்டு வைத்த அடுப்புகள் ரெடி!

நோன்பு நாட்களில் வழமையான இரவு உணவை முன்னேரம் என்றும், விடிகாலைக்கு முன் எழுந்து உண்ணும் சஹர் உணவைப் பின்னேரம் என்றும் சொல்வோம். தலைநோன்புக்குக் கறி எடுத்து ஆக்குவது ஊர்வழக்கம். மதியானமே முன்னேரத்துக்கும் பின்னேரத்துக்குமான கறி ஆக்கும் வேலை முடிந்துவிடும். கூடுதலாக எல்லோர் வீடுகளிலும் முருங்கைக் கீரைச் சுண்டுவதும் (பொரியல் செய்வது ) முட்டை அவிப்பதும் உண்டு. இதில் முருங்கைக்கீரையையும் மதியமே சமைத்துவிடுவார்கள்.

நன்றி: Stylish KPM YouTube Channel

இனி சாயங்காலம்  அவரவர் வீட்டிலிருந்து பானையில் அவரவருக்குத் தேவையான அரிசியோடும் முட்டையோடும்  ம்மாக்கள் கூட்டாஞ்சோறு ஆக்கும் வீட்டில் கூடுவார்கள். அதோடு அழகாக ஒடித்துச் சீவி வைக்கப்பட்ட  முள் கட்டையும் விறகையும்கூட கையோடு கொண்டு வந்துவிடுவார்கள்.

விறகு அடுப்பைப் பற்ற வைப்பதென்பது ஒரு கலை. அடுப்பு பற்ற வைக்க விறகில் மண்ணெண்ணெய் தெளிப்பது, சிறாத்தூளைத் தூவிக் குமிப்பது, ஒன்றுக்கு மேற்பட்ட தீக்குச்சியை சர்சர்ரெனக் கொளுத்துவது போன்ற பழக்கங்கள் எல்லாம் சிக்கனமற்ற, பொருளை வீணடிக்கும் வேலைகளாகக் கருதப்படும். 

சிறுசிறு முள்குச்சிகளை X வடிவில் குறுக்காக வைத்து மெல்லிய ஒன்றிரண்டு விறகுகளை அவற்றின் மேல் தென்னி வைத்து, தேவையான அளவு மட்டுமே தாள்களையோ சிறாத்துணுக்குகளையோ பயன்படுத்தி அடுப்பைப் பற்ற வைக்கவேண்டும்.  பெரும்பாலும் இது ம்மாக்களுக்கும் வாப்புமா மூமாக்களுக்குமே கைவந்த கலை. சில லாத்தாக்கள் ஒழுங்காக இப்படி அடுப்பைப் பற்றவைத்து நல்ல பெயர் வாங்குவார்கள். சிலர் “இன்னும் அடுப்புப் பத்த வைக்கத் தெரியல நாளக்கி மாப்பிள வூட்டுக்குப் போனா ஒங்க மாமிக்காரி என்ன பிள்ளை வளத்துருக்கான்னு எங்களக் கேக்கப்போறா” என ஏச்சு வாங்குவார்கள். 

உலைநீர் பிடித்து எல்லாப் பானைகளையும் அடுப்பில் ஏற்றியதும் பார்ப்பது ஒரு அழகுதான். உலை கொதித்ததும் முதலில் மொத்தமாகக் கடுங்காப்பிப்  போட்டு, சீனி சேர்க்காமல் கருப்பட்டியோ அச்சு வெல்லமோ கடித்துக் கொண்டு அங்கிருக்கும் எல்லாருமே குடித்துக் கொள்வோம்.

பிறகு, உலையில் அரிசி போட்டு வெந்ததும் சோறு வடிப்பது ம்மாமார்கள்தான் (இந்த லாத்தாக்களெல்லாம் கூடிக்கூடிப்பேசி சிரித்துக் கொண்டிருந்ததைத்தான் பார்த்த நினைவு. ஆனால் நாங்கதான் கூட்டாஞ்சோறு ஆக்குனோம் என்றுதான் சொல்வார்கள் இன்றுவரை). சோற்றை ஆக்கி இறக்கியதும் அதே அடுப்பில் சிறு சட்டியில்  முட்டைகளையும் அவித்து எடுத்துவிடுவார்கள். 

நோன்பு மாதம் முழுவதும் இரவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக  தராவீஹ் எனும் சிறப்புத்  தொழுகை நடைபெறும்.  உலையில் கொதிக்கும்  அரிசியாய்ச் சலசலத்த அந்த மாலையில் கூடிக்களித்து முடித்துவிட்டு, இரவு நேரத் தொழுகைக்கு  முன்னதாகவே  அவரவர் சோற்றுப் பானைகளை எடுத்துக்கொண்டு, அவரவர் வீட்டுக்குச்  சென்றுவிடுவோம். கூட்டாஞ்சோறு ஆக்கிய அதே வீட்டில் கூடி அமர்ந்து உண்பதென்றால் நேரம் காணாதில்லையா!  இனி இரவு உணவையும் மற்ற வேலைகளையும் விறுவிறுவென முடித்துவிட்டுத் தராவீஹ்  தொழுகைக்குச் செல்ல ஆயத்தமாக வேண்டும்தானே?

– பிறை வளரும்.

படைப்பாளர்

54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.

Exit mobile version