Site icon Her Stories

லூசியின் ஆயுதம்

முதலில் லூசியும் அவருடைய கூட்டத்தினரும் அப்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்ய மிக இயல்பாகத் தங்கள் கரங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். உதாரணத்துக்கு மரம் ஏறுவதற்கும் உணவுப் பொருட்களை பற்றிக்கொண்டு உண்பதற்குக் கைகள் உதவின. கழிகளைப் பற்றிக்கொள்ளவும், கற்களை வீசி விலங்குகளை விரட்டவும் கைகள் வசதியாக இருந்தன.

அதே கைகளைக் கொண்டு மனிதர்கள் புதிய பொருட்களை உருவாக்கத் தொடங்கியபோது அடுத்த பெரும் பாய்ச்சல் நிகழ்ந்தது. இந்தப் பாய்ச்சல் சாத்தியமானதற்குக் காரணம் உழைப்பு. விலங்குகளிடம் இருந்து மனிதனைத் தனித்துவப்படுத்தி காட்டிய இந்த அசாத்தியமான அம்சத்தை பிரெட்ரிக் எங்கெல்ஸ் தனி கவனம் செலுத்தி ஆராய்ந்திருக்கிறார். கைகள் இருந்ததால் உழைப்பு தோன்றவில்லை; உழைப்பே கரங்களைத் தோற்றுவித்தது என்கிறார் அவர்.

மனித உழைப்பு உருவாக்கிய முதல் முக்கிய ஆயுதம் கல்லால் செய்யப்பட்ட கோடரி (Acheulian hand axe). ஹோமோ எரக்டஸ் எனப்படும் கீழைப் பழங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய ஆயுதம் இது. ஆப்பிரிக்கா, பெருவாரியான மேற்கு ஆசியா, தெற்கு ஆசியா, ஐரோப்பா என்று பரவியிருந்த மனிதர்கள் இந்தக் கல் கோடரியைப் பரவலாகப் பயன்படுத்தியது தெரிகிறது. லூசி வசித்த எத்தியோப்பியாவில் 1.5 மில்லியன் ஆண்டுகள் பழமை யான இந்தக் கோடரியை பிரெஞ்சு ஆய்வுக்குழு ஒன்று கண்டறிந்தது.

scinews.com (எத்தியோப்பிய கைக் கோடரி)

தனி நபர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமின்றி, குழுக்களின் உபயோகத்துக்காக அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகளைப் போல் இயங்கி பல கோடரிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இங்கிலாந்தில் ஒரே இடத்தில் 300 கோடரிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி குதிரைகள், மான்கள் என்று தொடங்கி காண்டாமிருகம் வரை பல மிருகங்களை வேட்டையாடியிருக்கிறார்கள், சிறு துண்டங்களாக வெட்டி புசித்திருக்கிறார்கள்.

உழைக்கத் தொடங்கிய பிறகுதான் மனிதனின் மூளை அளவில் பெரியதாக வளரத் தொடங்கியது. துடிப்பான கரங்களும் சுறுசுறுப்பான மூளையும் ஒன்றிணைந்ததன் தொடர்ச்சியாகவே கோடரிகளும் வேறு பல கருவிகளை உருவாயின. உடலுழைப்பும் மூளை உழைப்பும் ஒரு புள்ளியில் ஒன்று சேர்ந்ததால்தான் இது சாத்தியப்பட்டது.லூசியின் எலும்புக்கூட்டுக்கு அருகில் கோடரிகள் கண்டெடுக்கப்படவில்லை என்பதால் அவர் தனிப்பட்ட முறையில் இத்தகைய கருவிகளை உருவாக்கினாரா, பயன்படுத்தினாரா என்பது தெரியவில்லை. ஆனால், லூசிக்குப் பிறகு வந்த பெண்களின் பங்களிப்புடன்தான் இந்தக் கோடரி உருவாகியிருக்கவேண்டும் என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மனித குல வளர்ச்சியின் முக்கியமான ஒரு தொடக்கக் காலத்தில் லூசி வாழ்ந்திருக்கிறார். தான் வாழ்ந்த காலகட்டத்தை மாற்றியமைக்க அவர் உதவியிருக்கிறார். இருந்தும், வேட்டை சேகரிப்பு சமூகம் பற்றிய நம்முடைய புரிதல் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். ஆண் வேட்டையாடுபவனாக இருந்தான். லூசி போன்ற பெண்கள் பழம், கொட்டை, இலைகள் போன்ற உணவுப் பொருட்களைச் சேகரிப்பவர்களாக இருந்தனர். இந்த இரண்டில் வேட்டையே உயர்ந்தது என்று நாம் கருதுகிறோம். காரணம் அதில் சாகசங்கள் நிறைந்திருக்கின்றன. வேட்டையாடுதலோடு ஒப்பிடும்போது உணவு சேகரிப்பு சாதாரண வேலையாக நமக்குத் தோன்றுகிறது.

இத்தகைய பிழையான புரிதலுடன்தான் மனித இனத்தின் ஆரம்ப கால வரலாறு எழுதப்பட்டது. வேட்டையாடும் ஆண் பிரதானமானவனாக சித்தரிக்கப்பட்டான். அவனுடைய திறன்கள் அதிக கவனம் பெற்று ஆராதிக்கப்பட்டன. பெண் என்பவர் ஆணின் நிழல். ஆண் சிரமப்பட்டு வேட்டையாடிக் கொண்டுவந்து தரும் உணவை அப்படியே ஒரு கையில் வாங்கி இன்னொரு கையால் சமைத்துப் போடுவது மட்டுமே அவர் வேலை. பிறகு, சந்ததியைப் பெருக்கவேண்டும். மற்ற நேரங்களில் எல்லாம் குகைக்குள் அல்லது மரத்தடியில் அமர்ந்து பொழுதை வீணே கழிப்பதைத் தவிர வேறு என்ன வேலை அவருக்கு இருந்திருக்கமுடியும், சொல்லுங்கள்.

ஆனால், உண்மை இதற்கு நேர் மாறானது. காலை முதல் இரவு வரை லூசி போன்றவர்கள் கடும் உழைப்பில் ஈடுபட்டு வந்தனர் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நமக்குக் கிடைத்திருக்கும் படிமங்களைப் பார்க்கும்போது பெண்களின் அப்போதைய சராசரி வாழ்நாள் இருபதாக இருந்திருக்கிறது. லூசியின் எலும்புக்கூடும்கூட அவர் கிட்டத்தட்ட 20 வயதில் இறந்திருப்பதையே உறுதி செய்கிறது. வெகு சிலரே முப்பதைத் தொட்டிருக்கிறார்கள். நாற்பது என்பது அதிசயத்திலும் அதிசயம். இவ்வளவு குறைவான ஆயுள் காலம் இருந்தபோதும் ஒரு பெண் அடுக்கடுக்காகப் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்திருக்கிறார்.

ஒரு பெண் ஒவ்வொரு தினமும் என்னென்ன பணிகளையெல்லாம் செய்து வந்தார் என்பதை தொல்பொருள் ஆய்வுகள் மற்றும் சமூக ஆய்வுகளில் இருந்து திரட்டி ஒரு பட்டியலைத் தயாரித்தால் அது கீழ்வருமாறு இருக்கும்.

உணவு சேகரிப்பு
குழந்தைகள் பராமரிப்பு
விலங்குத் தோல்களில் இருந்து பல்வேறு பொருட்களை உருவாக்குதல்
ஆடை தயாரித்தல்
சமையல்
பானைகள், பாத்திரங்கள் உருவாக்குதல்
பற்கள், எலும்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பல்வேறு ஆபரணங்கள் உருவாக்குதல்
இருப்பிடம் உருவாக்குதல்
கோடரி போன்ற வேட்டைக் கருவிகள் தயாரித்தல்
மருந்துப் பொருட்கள் சேகரிப்பு.
எல்லாப் பிரச்னைகளுக்குமான மருந்துகளை உருவாக்குதல்.

பல சமயம் வாரக்கணக்கில் முயன்றும் வேட்டை முயற்சிகள் பலனளிக்காத சமயங்களில், பெண்களே குடும்பத்தின் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்தனர். போட்ஸ்வானாவில் உள்ள பழங்குடி ஆண்கள் ஒரு வாரம் வேட்டையில் ஈடுபட்ட பிறகு அந்த மாதம் முழுக்க ஓய்வெடுத்துக்கொள்வதை வழக்கமாக வைத்திருந்தது தெரியவருகிறது. மாமிசத்தைச் சேர்த்து வைக்கவும் அப்போது வழி வகை இல்லை என்னும் நிலையில் பெண்களின் தொடர்ச்சியான உணவு சேகரிப்பே குடும்பத்தின் 80 சதவிகித உணவுத் தேவையை நிறைவு செய்தன என்று உறுதியாகச் சொல்லலாம். கல் கோடரி உழைப்பின் அடையாளம் என்றால் மனித குலத்தின் ஆதார அடையாளம், லூசி.

ஒரு வகையில் நாம் அனைவரும் லூசியின் குழந்தைகள். அவருக்கு நாம் நிறையவே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். வலக்கை பழக்கம் இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு இருப்பதற்குக் காரணம் லூசி. தன் குழந்தையை கதகதப்புடன் வைத்திருக்க இதயத்துக்கு நெருக்கமாக இடப்பக்க இடுப்பில் சேர்த்து அணைத்துக்கொள்வதை லூசி வழக்கமாக வைத்திருந்தார். வலது கரம் மற்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டன. இந்த வழக்கம் அப்படியே அழுத்தமாக நம்மிடம் பதிந்துவிட்டது.

வேட்டை சேகரிப்பு சமூகம் லூசிக்களை மையப்படுத்தியே இயங்கிவந்தன. ஆண்கள் குழுவாகவே வேட்டைக்குச் சென்றனர். ஆனால், லூசி தனியாகத்தான் தன்னையும் தன் குழந்தைகளையும் கவனித்துக்கொண்டார். கூடுதலாக, வேட்டைக் குழுக்களிலும் பங்கேற்றார். வேட்டைச் சமூகம் அடுத்தடுத்த வளர்ச்சிக் கட்டங்களை அடைந்ததற்குக் காரணம் லூசி போன்றவர்கள்தாம். அப்போது வாழ்ந்த ஒவ்வொரு குழுவும் உயிர்த்திருப்பதற்கான அதிகபட்ச உழைப்பை அக்குழுவில் இருந்த பெண்களே செலுத்தியிருக்கின்றனர்.

credit: Live History India, பல்லாவரம் கைக்கோடரி

ஐந்தில் ஒரு பகுதி பணிகளை மட்டுமே ஆண்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்மை ஆண்களுக்கும் தெரிந்திருந்தது. நம் குழுவில் உள்ள பெண்கள் நம்மைவிட மேலானவர்கள், நம்மைவிட அதிகம் உழைப்பவர்கள், நம்மைவிட அதிகத் திறமை கொண்டவர்கள் என்பதை ஒப்புக்கொள்ள அப்போதைய ஆண்களுக்கு எந்தப் பிரச்னையும் இருந்ததாகத் தெரியவில்லை. அதனால்தான் அவர்கள் லூசிக்களை அதிசயமானவர்களாக, அசாத்தியமானவர்களாகக் கண்டார்கள். ஆண்களைவிடவும், மனித குலத்தைவிடவும் மேலானவர்கள் லூசிக்கள் என்று அவர்கள் நம்பினார்கள். அதனாலேயே பெண்களைக் கடவுள்களாக அவர்கள் கண்டனர்.

லூசியின் வழித்தோன்றல்கள் உருவாக்கிய கல் கோடரிகள் ஆப்பிரிக்காவில் இருந்து மட்டுமல்ல, ஐரோப்பா, இந்தியா, (அநேகமாக) சீனா ஆகிய நாடுகளில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. லூசியின் எலும்புக்கூடுகள் அமெரிக்கா முழுவதும் பல ஆண்டுகள் வலம் வந்தன. உலகப் புகழ்பெற்றவராக மாறிவிட்ட நிலையில் அவரை முன்வைத்து பல அறிவியல், மானுடவியல் பேருரைகள் ஆய்வாளர்களால் நிகழ்த்தப்பட்டன. 2013ம் ஆண்டு லூசி தாய் வீடு திரும்பினார். எத்தியோப்பியாவிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். லூசியை எத்தியோப்பியர்கள் தின்கினேஷ் என்று அழைக்கிறார்கள். அவர்களுடைய அமாரிக் மொழியில் இதன் பொருள், ‘நீ அற்புதமானவள்!’ இதைவிடப் பொருத்தமான வேறொரு பெயரை அவருக்கு யாரும் வழங்கிவிட முடியாது.

லூசி

கட்டுரையாளர்

மருதன்

எழுத்தாளர், வரலாற்றாளர். சே, ஹிட்லர், ஃபிடல் காஸ்ட்ரோ, திப்பு சுல்தான், மண்டேலா, மாவோ, ஸ்டாலின் ஆகிய உலகத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியுள்ளார். இவரது ஹிட்லரின் வதைமுகாம்கள், முதல் உலகப் போர், இரண்டாம் உலகப்போர், ஷெர்லக் ஹோம்சால் தீர்க்க முடியாத புதிர், துப்பாக்கி மொழி, திபெத்- அசுரப் பிடியில் அழகுக்கொடி, ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன் ஆகிய நூல்கள் கவனம் ஈர்த்தவை. பிரபல தமிழ் இதழ்களில் தொடர்கள் எழுதிவருகிறார். இந்து தமிழ் திசை மாயா பஜார் குழந்தைகள் இணைப்பிதழுக்கும் கட்டுரைத் தொடர் எழுதி வருகிறார்.

Exit mobile version