1.
ஒற்றைப் படகு
நெகிழ்ந்தசையும் நிலம் போல கடல்
விரிந்து கவிழ்ந்த குடையாக வானம்
என்னோடு நீ இல்லை என்பது
எங்கும் நீயில்லை என்பதல்ல
ஃ
2.
நீ
தங்க மீன்கள் நெளியும்
பொன்னந்தி அலை
அலையோடு மலை நகரும்
நீர்வழிப் பயணம்
பயணம் தரும் நினைவுகள்
நினைவுகளின் கரை சேராக் கடல்
நீ
ஃ
3.
ஒரு மீனைப் போலத் துள்ளிய
உனது குரலில் –
இலைகள் எல்லாம்
பறவைகளாகிப்
பறந்தன
ஃ
4.
முத்தங்களுடன் பயணிப்பவள்
வீடு உள் படிக்கட்டுத் திருப்பத்தில்
வாறியணைத்துக் கொள்கிறது உன் முத்தம்
பெரு மழையின் சிறு சாரல் அது
வீடு திறந்து உள் நுழைந்ததும்
ஓடி வந்து தாவியேறுகிற குழந்தையாக சில
சமையலறை வெப்பம் மீறி
குளிர் உறைதல்களாக பின் கழுத்தில்
மொட்டைமாடி
மாமரம் தொடும் சுவரில் சாய்ந்து
என்னையே வெறிக்கின்றன அவை
தொடும் காற்றில்
எங்கும் எங்கெங்கும் உன் முத்தத்தின் வாசம்
எரிமலை தேக்கி வெடித்துச் சிதறி
கடலாகத் தளும்பி
ஒளி போல மென்மையாக ஒற்றி
மழையாகத் தழுவி
மேனி யெங்கும் உன் முத்தப் படர்தல்கள்
மரணத்துணிச்சலுடன் இதழ் தீண்டி
மலையுச்சியில் தேனீர்க் குடிப்பதை ஒத்திருந்தன
ஒருநாளவை என்னோடு காரில்
முத்தங்கள் ஒவ்வொன்றையும்
நீவி எடுத்து மடித்துப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டி
நீ கொண்டு சென்று விட்டாயென்று
உன்னை வழியனுப்பித் திரும்புகையில்
வீடு உள் படிக்கட்டுத் திருப்பத்தில் நின்று
வாறியணைத்துக் கொள்கின்றன உன் முத்தங்கள்
பெரு மழையின் சிறு சாரலாக
ஃ
பிருந்தா சேதுவின் மற்ற கவிதைகள்
கவிஞர் பிருந்தா சேது
சே.பிருந்தா
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். நர்ஸரி ஸ்கூல் டீச்சராக, டெலிஃபோன் ஆபரேட்டராக, கம்ப்யூட்டர் ஆபரேட்டராக… பிறகு கொஞ்ச காலம் சென்னையில் எழுத்தாளர் அம்பையின் ப்ராஜக்ட் உதவியாளராக வேலை. சிறிது காலம் சொந்தமாக டி.டி.பி வொர்க்ஸ். தற்போது சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பிலிருக்கிறார். ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன் அவர்களிடம் உதவியாளராக இருக்கிறேன். பயணிப்பதில் தீராக் காதல். புத்தகங்களுக்கு இணையாக சினிமா பார்ப்பதில், விமர்சிப்பதில் ஆர்வம் உண்டு. குழந்தைகளுக்கான கனவுலத்தைப் படைப்பதில் எப்போதும் பெரு விருப்பம். குழந்தைகளுக்கு கதைகள் எழுதுவது கூடவே, ‘சைல்ட் அப்யூஸ்’ குறித்த விழிப்புணர்வை (பெரியவர்கள் & குழந்தைகள்) ஏற்படுத்துவது, குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு கலந்துரையாடல்கள் நடத்துவது போன்றவை குறிப்பிடத் தகுந்தவை.
1995-ல் கணையாழியில் முதல் கவிதை.
1999-ல் முதல் கவிதைத் தொகுப்பு ‘மழை பற்றிய பகிர்தல்கள்’ (பூங்குயில் பதிப்பகம்), 2000-ல் ‘தேவமகள் இலக்கிய விருது’ பெற்றுத் தந்தது.
2009-ல் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ‘வீடு முழுக்க வானம்’ (காலச்சுவடு பதிப்பகம்).
2014-ல் மூன்றாவது கவிதைத் தொகுப்பு ‘மகளுக்குச் சொன்ன கதை’ (காலச்சுவடு பதிப்பகம்). SRV School, Trichy வழங்கிய ‘படைப்பூக்க விருது 2014’.
‘கதவு திறந்ததும் கடல்’ (தன் அனுபவக் கட்டுரைகள் தொகுப்பு, தமிழினி’ வெளியீடு 2020). ‘அருவி முதல் அசுரன் வரை’ (சினிமா விமர்சனக் கட்டுரைகள், கிண்டில்). ‘கடல்’ குறுநாவல் (கிண்டில்).
‘அடிசில்’ தமிழ் இலக்கிய காலண்டர் – ஆய்வு மற்றும் உருவாக்கம்.