Site icon Her Stories

ஆண் பார்வையில் பெண்கள்

பெண்கள் கணவனைச் சார்ந்தே இருக்க வேண்டியதிருக்கிறது. அவர்களுடைய ஏடிம் கார்டு எண்கூடத் தெரியாமல் இருக்கிறார்கள் என நான் சொன்ன கருத்தை ஒரு நண்பர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதெல்லாம் அந்தக் காலம், இந்தக் கால மனைவிகள் எல்லாம் உஷார். கணவனின் வங்கிக் கணக்கிலிருந்து எல்லாமே அவர்கள் கையில்தான். பெண்கள் எல்லாம் கணவனை நம்பியும் இருப்பதில்லை. சுயமாகத் தங்கள் விருப்பம் போல் பார்லர், ஜிம் போவது என இருக்கிறார்கள் என்று சொன்னார். அவர் பெரு நகரம் தாண்டி சென்றதே இல்லை போல. அவர் பார்த்தவற்றை மட்டும் வைத்து, பெண்ணடித்தனமும் மாறி சகலசௌக்கியங்களையும் பெண்கள் பெற்றுவிட்டார்கள் என்ற பொதுப்பார்வையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். நகரப் பெண்களிடம் உண்டான மாற்றம் வரவேற்கத்தக்கதென்றாலும் நகரத்தைத் தாண்டி இருக்கும் பெண்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டுமல்லவா?

எங்களுடைய பள்ளி மாணவர்களுக்கென வாட்ஸப் க்ரூப் இருந்தது. எல்லாரும் சற்று மன முதிர்ச்சியுடன் இருப்பார்கள் என நினைத்து ஏமாந்த இடம் அது. வாதங்களுடனும் முரண்பாடுகளுடனுமே தினமும் அந்தக் குழு செல்லும். அதில் ஒரு தகவல் வந்தது. ’நம் கொங்கு நாட்டுப் பெண்களுக்கென ஒரு பெருமை இருக்கிறது. கணவன் இறந்துவிட்டால், தும்பைப்பூ சேலையும் திரு நீர் கீற்றுமாய் நம் பெண்கள் நெருப்பாய் தங்களைச் சுற்றி வளையம் போட்டுக்கொள்வார்கள். . கணவனில்லாத அவர்கள் வேறோர் ஆணையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள். அப்படிப்பட்ட பெண்ணினத்தையே இழிவு படுத்திவிட்டார்கள்’ என அரசியல் பதிவு ஒன்றிற்கு விளக்கமாய் ஒரு வாட்ஸப் தகவல் சுற்றிக்கொண்டிருந்தது.

அப்போது அதை அனுப்பியவருக்கும் எனக்கும் வாதம் தொடர்ந்தது. கணவன் இல்லையென்றால், வெள்ளைச் சேலையும் திருநீரும் அணிய வேண்டும் என்ற அடிமை கான்செப்ட் எல்லாம் நீங்களெ முடிவு செய்துக்குவீங்களா? பொண்ணுங்க இதெல்லாம் தங்களுக்குப் பெருமைன்னு சொன்னாங்களா என்று கேட்டால், இப்படி எல்லாம் இருப்பது பெண்களுக்குப் பெருமை, அப்படித்தான் அந்தக் காலத்துல இருந்தாங்க. அதுதான் கௌரவம் பெருமைனு அவங்களே நினைச்சாங்க.. இதை ஆண்கள் சொல்லவில்லை. பெண்களாகவே அப்படி இருந்தார்கள். அது உனக்கெல்லாம் புரியாது. அதற்குப் பக்குவம் வேண்டும்” என்று சொன்னார்.

அது ஒரு வாதமாகத் தொடர்ந்து நீண்டுகொண்டது. பெண்ணாகிய எனக்கே பெண்ணைப் பற்றி புரியவில்லையாம். ஆணாகிய அவர்களுக்குப் பெண்ணைப் பற்றி எல்லாம் தெரியுமாம். எத்தனை வேடிக்கை மனிதர்கள். அவர் ஒன்றும் எதுவும் தெரியாதவர் அல்ல. ஒரு பெரிய கல்லூரியில் தொழில் நுட்பத் துறையின் தலைவராக இருக்கிறார்.

இது இந்தக் காலத்துப் படித்த ஆண்களின் மத்தியிலேயே இப்படியான எண்ணம் தான் இருக்கிறது. பெண்ணைப் பற்றி சொல்லப்படும் விஷயங்கள் பெண்ணான எனக்கே புரியாதென்றால் வேறு யாருக்கு புரிய வேண்டும்? யதார்த்தத்தில் இன்று வரை அப்படியேதான் இருக்கிறது. நாம்தான் சிறு நகர்வை மாற்றம் மாற்றம் என்று கூவிக்கொண்டிருக்கிறோம்.

பரந்த நோக்கத்துடனும் தொலைநோக்குடனும் இருக்க வேண்டிய எழுத்தாளர்கள்கூட அப்படித்தான் இருக்கிறார்கள் என்றால் எனக்குச் சிரிப்பாகத்தான் இருக்கிறது. இலையுதிர் காலம் என்ற என் சிறுகதையில் ஒரு நாடோடி பெண்ணிற்கு ஏற்படும் அவல நிலையைப் படித்துவிட்டு, “அதெப்படி சர்வ சாதாரணமா ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துவிட முடியும்? அதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும்” என ஓர் எழுத்தாளர் கேட்டார். நான் அதிர்ச்சியாகவில்லை. ஆனால், ஆச்சரியப்பட்டேன். பாலியல் தீண்டல்கள், வன்புணர்வுகளைப் பத்திரிக்கை செய்தியாக மட்டுமே கடந்து செல்பவர்களுக்கு இது அன்றாடம் அவர் வீட்டுப் பக்கத்தில், அவர் வீதியில், ஏன் அவர் வீட்டிலேயே நடந்திருக்கும் நிகழ்வு என அறிய மறுக்கிறாரோ அல்லது அதுகூட அவருக்குத் தெரியவில்லையோ என தோன்றியது.

பெண்கள் மாறியதால்தான் முன்பை விட அதிகம் இப்படி நடக்கிறது என்று சொல்கிறார்கள். இதைப் பொய் என்று நிரூபிக்க மருத்தவர்களால் மட்டுமே sமுடியும். இப்போதெல்லாம் இன்டர்நெட் வசதி இருக்கிறது. செய்திகளை மூலை முடுக்கிலிருந்துகூடத் தெரிந்து கொள்றோம். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் என் தோழியின் மருத்துவத் தோழி சொன்ன விஷயம். “தினமும் 100 பாலியல் கேஸ் வருது. போலிஸ் கேஸுக்குப் பெற்றோர் போக வேண்டாம்னு சொல்லிடுவாங்க. எல்லாம் பத்துப் பனிரெண்டு வயசு குழந்தைங்க ” என்று சொன்னார். அப்போதும் இப்படித்தான்… அதற்கு முன்னரும் அப்படித்தான். இப்போதும் அப்படித்தான். பெண்ணிடம் தவறாக நடந்துகொள்ள காத்திருக்க தேவையில்லை. சூழ்நிலை மட்டும் சரியாக அமைந்துவிட்டல போதும் அவர்களுக்கு அவ்வளவுதான்.

ஒரே ஓர் இரவு ரயில் பயணத்தில் பக்கத்து சீட்டு ஆணால் பலாத்காரத்திற்கு ஆளான ஒரு சிறுமியைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? பிரசவ அறுவைசிகிச்சையின் போது, ஒரு மருத்துவராலேயே பாலியல் தீண்டலுக்கு உண்டான ஒரு பெண்ணைப் பற்றித் தெரியுமா? சொந்த உறவினராலேயே தொடர்ச்சியாகப் பாலியல் தொல்லைக்கு ஆளானதால் விஷம் அருந்திய இளம் பெண்ணைத் தெரியுமா? இவற்றையெல்லாம் செய்தியாக மட்டுமே கடந்து போகும் நீங்கள் பெண்களைப் பற்றி எந்த முன்முடிவிற்கும் வருவது முதிர்ச்சியல்ல.

“எப்பவுமே ஏதோ ஆண்கள் என்றாலே தவறு செய்பவர்கள் என்ற நோக்கத்துடனேயேதான் இந்தப் பெண்கள் அணுகுகிறார்கள்” என்று ஓர் எழுத்தாளர் எழுதியதைப் பார்த்தேன். எல்லா ஆண்களும் அப்படியல்ல என்று ஆண்கள் உரக்கச் சொல்கிறார்கள். எல்லா ஆண்களும் அப்படி இல்லை என்று எங்களுக்கும் தெரியும். ஆனால், ஆண்களுடன் பழகும்போது இவன் நல்லவனா கெட்டவனா என்று சந்தேகப்பார்வையுடன் செல்ல வேண்டியிருக்கிறதே, அங்கேயே நீங்கள் தோற்றுவிட்டீர்கள்.

பல முறை தனியாக நான் இரவு பயணம் மேற்கொண்டிருக்கிறேன். ஒரு தனியார் தொலைகாட்சி நிகழ்விற்கு அழைத்திருந்தார்கள். அங்கு சென்று பெங்களூரு திரும்பியபோது நடு இரவு மூன்று மணிக்கு எலக்ட்ரானிக் சிட்டியில் என் 6 வயது பையனுடன் இறங்கினேன்.

இறங்கிய இடத்தில் பல பாட்டில்கள் உடைந்து கிடந்தன. அருகிலேயே ஆட்டோ ஸ்டேண்டில் இருந்த ஆட்டோக்காரர் என்னை அழைத்துச் சென்றார். யோசித்துப் பாருங்கள் நட்ட நடு இரவு. துணைக்கு யாருமில்லை. வெளியில் ஏனென்று கேட்க ஒரு மனிதருமில்லாத நேரம். அவர் என்னை வீட்டில் இறக்கிவிடும் வரை என் மனம் பட்டபாடு எனக்குதான் தெரியும். அதைவிடக் கொடுமையான மன நிலையில் இருந்த ஒரு நிகழ்வு உண்டு.

அப்போதுதான் நிர்பயா வழக்கு நடந்த காலம். ஒரு நாள் இரவு எட்டரை மணி ஆகியும் கடும் டிராஃபிக்கினால் எனக்கு எந்தப் பேருந்தும் வரவில்லை. ப்ரைவேட் கார்பரேட் வண்டிகள் அவ்வப்போது வந்து பொதுமக்களை ஏற்றிக்கொண்டு போவார்கள். அப்படி சுமோ போன்ற ஒரு வாகனம் வந்ததும், யோசிக்காமல் வீடு சேர வேண்டுமே என ஏறிவிட்டேன். வண்டி மேம்பாலத்தில் சென்றது. மிகப் பெரிய மேம்பாலம் அது. அதில் சிக்னல் கிடைக்காது, எல்லா வண்டியும் நிற்காமல் பறந்து செல்லும். வண்டி ஏறி சில நிமிடங்களில் திரும்பிப் பார்த்த நான் வெலவெலத்துப் போனேன். ஒரு பெண்கூட இல்லை. அதில் இருந்தவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் வேலை செய்யும் ஆண்கள் என அவர்கள் பேசுவதிலேயே தெரிந்தது. எல்லாரிடமும் மது வாடை . எல்லாருமே இளம் வயதுதான்.

டிரைவர் அவ்வப்போது என்னைக் கண்ணாடியில் பார்த்துககொண்டிருந்தார். எனக்கு அழுகை வேறு. அலைபேசியில் யாரிடமோ பேசுவது போல் நடித்தேன். என் மாமா போலிஸில் இருப்பது போல் பேசிக்கொண்டே வந்தேன். கைகால் எல்லாம் வெடவெனவென நடுங்கியது. 20 நிமிடத்திற்குப் பிறகு எலக்ட்ரானிக் சிட்டி வந்ததும் அந்த டிரைவர், “மேடம் இங்க இறங்காதீங்க. இருட்டா இருக்குது. ஆள் நடமாட்டமில்லை. கொஞ்சம் தள்ளி வெளிச்சத்துல இறங்கிவிடறேன்” என நடமாட்டமிருந்த பகுதியில் இறக்கிவிட்டார். இறங்கிய சில நிமிடம் வரை அழுது கொண்டிருந்தேன். ஓர் ஆண் நல்லவரா கெட்டவரா என சம்பவங்கள் நடக்காதவரையில்தான் எங்களால் நிச்சயம் செய்ய முடியும் என்பதே அவ்வளவு பெரிய அசிங்கம் உங்களுக்கு. இப்படி உங்களுடைய வாழ்நாளில் ஒரு பெண்ணுடன் செல்லும்போது என்றைக்காவது பயத்துடன் பீதியுடன் செல்லும் ஒரு அனுபவமாவது நீங்கள் பெற்றிருப்பீர்களா? ஆனால், இப்படி ஓர் அனுபவம் எல்லா பெண்களுக்கும் உண்டாகியிருக்கும். இதில் எப்படிப் பெண்களை எப்பவும் கிண்டலாக, இளக்காரமாகச் சொல்லிக் கொண்டேயிருக்கத் தோன்றுகிறது உங்களுக்கு?

இன்றும் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொள்கிறாள். இன்றும் கணவன் இறந்த பின் நடக்கும் மூடவழக்கங்கள் பின்பற்றியபடிதான் செல்கிறார்கள், இன்றும் காதலுக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. மாறிய வெறும் 20 சதவீதத்தோடு திருப்தி கொள்ளச் சொல்கிறார்கள் பாருங்கள். சாதியும் பெண்ணடிமைத்தனமும் நம் நாட்டின் மிகப்பெரிய கரையான்கள் . ஒருபக்கம் அவை அரித்துக்கொண்டேயிருக்கும். நாமும் சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கிறோம். மாற்றங்கள் பல தலைமுறைகளாகியும் வரவில்லையென்றால் எங்கோ பிழையிருக்கிறது. குறை சொல்வதிலேயே காலம் கழித்துவிடக் கூடாது. செயல்கள் மட்டுமே நமக்கு உதவும்,

பெண்கள் கணவனைப் பிரிந்து தனித்து இருப்பதைச் சந்தேகமாகப் பார்க்கிறார்கள், சாதகமாக நினைத்துக்கொள்கிறார்கள். அதே கணவனை இழந்து மறுமணம் செய்தால் இழிவாகப் பேசுகிறார்கள். இளக்காரமாகப் பேசுகிறார்கள். அவள் மறுமணம் செய்வதை ஆதரித்தாலும்கூட, அப்படி மணம் செய்யாமல் வாழும் பெண்களைத்தான் உயர்வாகப் பேசுகிறார்கள். மாற்றங்கள் நடந்துகொண்டுதானிருக்கிறது. மறுக்கவில்லை. ஆனால், அதை அதிசயமாகப் பார்க்காமல் சதாரணமாகப் பார்க்கத் தொடங்கும் நாட்களே நிஜமான முன்னேற்றம்.

கட்டுரையாளர்:

ஹேமி கிருஷ்

பெருந்துறையை சேர்ந்த இவர், தற்போது ஹூஸ்டனில் வசிக்கிறார். விகடன், கல்கி, குங்குமம், குமுதம்  மற்றும் இலக்கிய மின்னிதழ்களில்  சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவருடைய 'மழை நண்பன்' என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே வெளிவந்த நிலையில் ,இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் வெளிவரவிருக்கிறது. பெங்களூரில் பகுதி நேர விரிவுரையாளராக ஏழு வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்; நான்கு ஆண்டுகள்  டிஜிடல் மீடியாவில் பணிபுரிந்திருக்கிறார்.
Exit mobile version