Site icon Her Stories

வேலையும் கூலியும்

சமையல் செய்பவர் என சொன்னவுடன் சட்டென அனைவரின் மனதுக்கும் வருவது ஒரு பெண் அடுப்படியில் சமையல் செய்யும் உருவம்தான். ஏதாவது வீடுகளில் ஆண்கள் சமையல் செய்கிறார்கள் எனச் சொன்னால், ஏதோ செய்யக்கூடாத வேலையை ஒரு ஆண் செய்துவிட்டதுபோல, பொது சமூகத்தால் பார்க்கப்படுகிறது.

உணவு உண்ணும் ஒவ்வொருவருக்கும் சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை. ஆனால் இச்சமூகம் அதை பெண்களின் வேலையாக மட்டுமே பார்க்கிறது. இந்தச் சிந்தனையும் பெண்களுக்கு பொருளாதார பலனை அளிக்காத வீட்டு அடுப்படிவரைதான் கடைபிடிக்கப்படுகிறது, அதே சமையலைத் தொழிலாகச் செய்து பொருளாதாரம் ஈட்டும் துறையில், 80% – 90 % பேர் ஆண்கள்தான். அத்துறையில் பணிபுரியும் சொற்ப எண்ணிக்கையிலான பெண்களும்கூட அவர்களது ஆண் சகாக்களைவிட கிட்டத்தட்ட 22% குறைவாகவே சம்பாதிக்கிறார்கள் என ஆய்வுகள் சொல்கின்றன.

அதே போல, அழகு சாதனப் பொருள்கள் எனச் சொல்லும்போது அவை பெண்களை மையப்படுத்திதான் விளம்பரப்படுத்தப்படுகின்றன. முற்றும் முழுதாக பெண்களுடன் இணைத்துத்தான் பார்க்கப்படுகின்றன. அழகு சாதனப் பொருள்கள் செய்யும் துறையில் 69% பெண்கள் வேலை செய்தாலும், வெறும் 36% பெண்கள் மட்டும்தான் உயர்மட்ட பதவிகளை வகிக்கிறார்கள், இவர்களும் தங்கள் சக ஆண் ஊழியர்களைவிட 20% குறைவாகவே ஊதியம் வாங்குகின்றனர்.

இந்த நிலை சமையல் துறையிலும் அழகு சாதனப் பொருள்கள் செய்யும் துறையிலும் மட்டுமல்ல, ஆடை வடிவமைப்புத் துறையிலும் (fashion designing) காணப்படுகிறது. இத்துறையில் கடைமட்ட ஊழியர்களாக 60% பெண்கள் உள்ளனர், ஆனால் முன்னணி ஆடை வடிவமைப்பு நிறுவனங்களில் 25% க்கும் குறைவான பெண்கள்தான் தலைமைப் பதவிகளை வகிக்கின்றனர். ஆடை வடிவமைப்புத் தொழிலில் தலைமை நிர்வாக அதிகாரிகளில் 12.5% மட்டுமே பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களின் வருமானமும் அத்துறையில் பணிபுரியும் ஆண் ஊழியர்களைவிட 25% குறைவாகத்தான் உள்ளது. 

ஆசிரியர்கள் என்றால் அது பெண்கள்தான் என்பதான பிம்பம் உள்ளது. வெளிப்படையாகப் பார்த்தால் இது உண்மை எனக்கூடத் தோன்றும். ஆனால் உள்ளார்ந்து ஆராய்ந்தால், இது மேம்போக்கான கருத்து என்பது புரியும். உலக அளவில் பாலர் பள்ளி (pre-primary) நிலையில் 94% பெண்கள் ஆசிரியர்களாக வேலை செய்கின்றனர், தொடக்கப்பள்ளி நிலையில் 68% பெண்களும். கீழ் இடைநிலைக் கல்வி (lower secondary) நிலையில் 58% பெண்களும், மேல்நிலைப் பிரிவில் 52% பெண்களும் ஆசிரியர்களாக வேலை செய்கின்றனர். உயர் நிலைக் கல்வியில் ஆசிரியராக வேலை செய்யும் பெண்கள் 43% – ஆக உள்ளனர்.

இங்கு கல்விப் படிநிலை உயரும்போது அதில் ஆசிரியராக வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை குறைவதை, நம்மால் பார்க்க முடியும். அதுமட்டுமல்லாமல் இந்தத் துறையிலும் பெண்களுக்கான ஊதியம் ஆண்களைவிட 28% குறைவாகத்தான் கொடுக்கப்படுகிறது.

பொதுச் சமூகத்தால் பெண்களைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டுள்ள துறைகளிலும், பெண்களுக்கு உகந்தது என கருதப்படும் துறைகளிலும்கூட பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. அப்படியே அவர்களின் பங்களிப்பு ஒரு துறையில் இருந்தாலும், உயர்மட்ட பதவிகளில் பெண்கள் பங்கு வகிப்பது குறைவாகத்தான் இருக்கிறது. அதையும் மீறி சில பெண்கள் உயர்மட்ட பதவிகளுக்கு வந்தாலும், அவர்களின் சக ஆண் ஊழியர்களைவிட குறைவான ஊதியமே பெறுகிறார்கள் என்பதை மேலே குறிப்பிட்டுள்ள சில எடுத்துக்காட்டுகளை வைத்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

ஒரு வேலை வெறும் கடமையாக இருக்கும்போதும், குறைவான பொருளீட்டும் வேலையாக இருக்கும்போதும் அது பெண்களுக்காக ஒதுக்கப்படுகிறது. அதே வேலை அதிக பொருளீட்டும் வேலையாகவோ, அதிக அதிகாரம் மற்றும் சமூக அந்தஸ்து பெரும் வேலையாகவோ மாறும்போது, அது ஆண்களுக்கான வேலையாக மாறுகிறது.

சில வேலைகளை ஆண்கள் கையில் எடுக்கும்போது, ஆண்களுக்கு அதில் அதிகப்படியான ஊதியம் வழங்கப்படுவதும் நடைமுறையில் உள்ளது. ஒரு வேலையை, ஆண்களும் பெண்களும் ஒரே கல்வித் தகுதியுடன் ஒரே போலச் செய்தாலும்கூட, இத்தகைய ஏற்றத் தாழ்வுகள் ஊதியத்துடன் நிற்பதில்லை. பெண்கள் செய்யும் வேலைக்கான அங்கீகாரத்தைக் கொடுக்கும் இடம்வரையும் இந்த பாரபட்சம் நீளுகிறது.

ஆண்களைவிட பெண்களுக்குக் குறைந்த ஊதியம் கொடுக்கப் படுவதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றில் மிக முக்கியமான ஒன்று பிள்ளைப்பேறு. ஒரு பெண் பிரசவத்துக்குப் பிறகு தன்னுடைய வேலையைத் தொடர நினைத்து, வேலைக்குத் திரும்பும்போது, அவளுக்கு ஊதியம் குறைவாகவே கொடுக்கப்படுகிறது. உலகளவில், பிள்ளை பெற்றபின் வேலைக்குத் திரும்பும் பெண்களின் ஊதியம் 43% குறைகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செய்யும் வேலை, அந்த வேலையை செய்யும் இடம், அந்த வேலைக்கான ஊதியம் மற்றும் அங்கீகாரம் என அனைத்திலும் ஆண் பெண் பாகுபாடு பார்க்கப் படுவதற்கான காரணம், பொதுவாக ஒரு பெண் செய்யும் வேலை என்பது அவளது கடமையாகவே கருதப்படுகிறது.அவள் அதற்கான ஊதியத்தை, அங்கீகாரத்தைக் கேட்கும்போது, அவள் இந்த சமூகத்தால் எதிர்மறையான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறாள். எந்த வேலையாக இருந்தாலும் ஆண் பெண் பாகுபாடு பார்த்து இந்த வேலையை இவர்தான் செய்ய வேண்டும், பெண்கள் செய்யும் வேலைக்கு இந்த ஊதியம் கொடுத்தால்போதும் எனும் முன் முடிவுடன் அணுகுவது, இத்தகையப் பாகுபாடு நிறைந்த வேலைச் சூழலை நிலைநிறுத்துகிறது.

இத்தனை பாகுபாடுகள் உள்ளன என்பதைப் பெண்கள் அறிந்திருந்தாலும்கூட, அவர்கள் தங்களது ஊதியத்தையோ அங்கீகாரத்தையோ கேட்டுப் பெறுவதில் சற்றுத் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. காரணம், இந்தச் சமூகத்தால், தான் எதிர்மறையாக விமர்சிக்கப்படுவோமோ எனும் பாதுகாப்பற்ற மனநிலை. அது மட்டுமல்லாமல், சிறுவயதிலிருந்து ஒரு பெண் தன் உரிமையை கேட்டுப் பெற பழக்கப்படுத்தப் படுவதில்லை. மாறாக அவள் வாயை திறந்து எதுவும் கேட்கக் கூடாது எனும் சிந்தனை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒவ்வொரு இடத்திலும் சொல்லப்பட்டு, பசுமரத்தாணி போல அவளது ஆழ் மனதில் பதிய வைக்கப்படுகிறது. இத்தனையையும் மீறி அவள் கேள்வி கேட்டால், இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறாள்.

இங்கு இத்தனையையும் தாண்டி யார் புறக்கணித்தாலும் தங்கள் உரிமையை கேட்டுப் பெற்றே ஆகவேண்டும் என நினைக்கும் பெண்கள் எண்ணிக்கையில் குறைவு. ஆனால், சமீபகாலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று நம்பிக்கையளிப்பதாக உள்ளது. சொந்த வாழ்க்கையையும் தங்கள் வேலையையும் குழப்பிக் கொள்ளாமல், தனக்கும் தன் எதிர்காலத்திற்கும் எது தேவை, தங்களது விடுதலையைக் காக்க பெருளாதார வலிமை எவ்வளவு தேவையானது என உணர்ந்து, பெண்கள் தெளிவாக முடிவெடுக்க ஆரம்பிக்கும்போது, இந்த எண்ணிக்கை குறிப்பிடும்படியான அளவு உயரும் என்பதில் ஐயமில்லை. 

வரலாறு நெடுக இருந்த அடிமைத்தனங்களையும் தடைகளையும் உடைத்து பெண்கள் மேலெழும்பி வந்துள்ளனர். அதேபோல இந்த வேலை மற்றும் பொருளாதாரம் சார்ந்த பாரபட்சத்தையும் உடைத்துப் பெண்கள் மேலெழும்புவார்கள். ஆனால் ஒரு சமூகமாக பெண்களைச் சார்ந்தும் பெண்களின் வேலை சார்ந்தும் இச்சமூகம் இந்த மெத்தனப் போக்கைக் கடைபிடிப்பதன் முக்கிய காரணம், பெண்கள் வேலைக்கு செல்வதென்பது அத்தியாவசியமானது எனும் எண்ணம் நம் சமூகத்தில் பெருமளவு ஏற்படாமல் இருப்பதும், ஒரு பெண் வேலைக்கு சென்றாலும் அவளின் ஊதியம் ஒரு உபரி வருமானம் என பாவித்து, அவளது வருமானத்துக்கான அங்கீகாரம் மறுக்கப்படுவதுமாகும்.

இந்த நிலை மாறவேண்டுமெனில், பெண்கள் வேலைக்குச் செல்வது பெண்களின் சுயமரியாதை சார்ந்த விஷயமாகவும், அவர்களின் பொருளாதார விடுதலை சார்ந்த விஷயமாகவும் பார்க்கப்பட வேண்டும். தங்கள் வேலைக்கு ஏற்ற ஊதியத்தையும் அங்கீகாரத்தையும் கேட்டுப்பெறுவது தங்கள் உரிமை எனும் எண்ணம் பெண்களின் மனதில் ஏற்பட வேண்டும். பெண்கள் எந்த விதத்திலும் யாரை விடவும் குறைந்தவர்கள் அல்ல எனும் சுயமதிப்பீடு பெண்கள் மனதில் ஆழப் பதியவேண்டும்.

ஒருவரின் பாலினம் சார்ந்து ஒருவரது கல்வியையும் வேலையையும் பொருளாதார பலனையும் அவர்களுக்கான அங்கீகாரத்தையும் நிர்ணயிப்பது பிற்போக்குத்தனம் எனும் சிந்தனை நம் சமூகத்தில் ஏற்பட வேண்டும். ஆனால் அதுவரை நாம் மெளனம் காக்காமல், நமக்கான உரிமையை பெற நாம் நம்முடைய குரலை உயர்த்த வேண்டும்.

தங்கள் உரிமையை யாரும் பிச்சையாகப் போடமாட்டார்கள் எனும் விழிப்புணர்வும், யாருடைய சமுதாய அங்கீகாரத்துக்குள்ளும் தங்களுடைய சுயமதிப்பீடு அடங்காது எனும் தெளிவும், ஒவ்வொரு பெண் மனதிலும் பிறந்துவிட்டால், வேலையிடங்களில் பெண்களுக்கு காட்டப்படும் ஊதியம் மற்றும் அங்கீகாரம் சார்ந்த பாகுபாடுகள் குறையும். அல்லது குறைந்தே ஆக வேண்டும் எனும் நிலை உருவாகும் என்பது நிச்சயம்.

படைப்பாளர்

நாகஜோதி

Doctor of pharmacy (Pharm.D) படித்திருக்கிறார். ஒரு தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிகிறார். இறை மறுப்பாளர். பெண்ணியம், பெரியாரியம், அம்பேத்கரியம், தலித்தியம் சார்ந்து இயங்குகிறார். டிவிட்டரில் இயங்கும் முச்சந்துமன்றம் என்கிற புத்தக வாசிப்புக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.

Exit mobile version