Site icon Her Stories

ஏனோ வானிலை மாறுதே!

PC: Boanerges Gangapatla

முகத்துல வழியுற வியர்வையை துடைச்சுக்கிட்டே மழைக்காலத்தப் பத்தி எழுதறதுக்கெல்லாம் தனி தில்லு வேணும். நம்ம ஊர்ப் பக்கம் யாராச்சும் சந்திச்சுக்குறப்போ, ” ஊர்ல நல்ல மழையாங்க?”ன்னு தான் பேச்ச ஆரம்பிப்போம். மழையோட அருமை பெருமைகள் உலகம் அறிந்ததே. அதப்பத்தி நான் ஒரு பாடமும் எடுக்கப் போறது இல்ல, பயப்படாதீங்க.

என்னதான் மழை மேகங்கள் துபாய் வான்வெளியில மிதந்தாலும், காடுகள் இல்லாததால இயற்கையான மழைக்கு இங்க வாய்ப்பில்லை. வெய்யில், தீவிர வெய்யில், அதி தீவிர வெய்யில் என்று மூன்று மாதம் எங்களையெல்லாம் எண்ணெய்ச் சட்டியில் போட்டு வாட்டும் வெப்பம், செப்டம்பர் மாத இறுதியில் குறையத் தொடங்கும். உடனே துபாய் முழுவதும் “சில்லென்ற கோவை”யாகவெல்லாம் மாறி விடாது. தமிழ்நாட்டுல மது விலக்கை படிப்படியாகக் குறைக்கிறது மாதிரி, மெதுவாகத்தான் குறையும்.

என்ன மாலை ஆறு மணிக்கு மேல் அப்படியே அப்பார்ட்மெண்ட் விட்டு வெளியே வந்து சுகர் பேஷண்ட்ஸ் கூட சேர்ந்து ஒரு வாக்கிங் போகலாம். வானிலை மாற்றம் நிகழும்போது கூடவே இளையராஜா பாட்டு, சூடான டீ, பக்கத்துலயே பஜ்ஜின்னு மனசு தேடும். ஆனா நாம தான பஜ்ஜி சுடணும்ன்னு தோணும்போது இளையராஜா மட்டும் போதும்னு மனசு கண்ட்ரோல் ஆகிரும். இங்க எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் போன் பண்ணா வீட்டுக்கே டெலிவரி ஆகும் கேஃபிட்டீரியாக்கள் (Cafeteria). நம்ம ஊர்லயும் ஆன்லைன் உணவு டெலிவரி இப்போதெல்லாம் அதிகம் பிரபலமாகிருச்சு. ஆனாலும் சூடான காபி கூட நாங்க ஆர்டர் பண்ணிக்குவோம்ன்றது தனிச்சிறப்புதான மக்களே…. கூடவே பஜ்ஜியும்.

லேவியராகமம் 26:4 ல தோழர் இயேசு என்ன சொல்றாருன்னா,  ” நான் ஏற்ற காலத்திலே…. காலத்திலேலேலேலே…… உங்களுக்கு…… மழை பெய்யப் பண்ணுவேன்……. பண்ணுவேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் ‘  (சர்ச் மரபுப்படி பைபிள் இப்படித்தான் படிப்பாங்க) சதா சர்வகாலமும் என் கட்டளைகளையும் , சட்டங்களையும் நினைவில் கொண்டு, அவற்றுக்குக் கீழ்ப்படியுங்கள். நான் உங்களுக்கு உரிய பருவத்தில் மழையைக் கொடுப்பேன் என்று மெய்யாலுமே உங்களுக்குச் சொல்லுகிறேன். செய்வீர்களா …… செய்வீர்களா ..…?”, என்று விடாமல் உரையாற்றிக் கொண்டிருக்கும் எங்கள் ஊர் சர்ச் பாஸ்ட்டரை நான் பலமுறை ஏக்கத்தோடு பார்த்ததுண்டு.

கடவுளர்கள் அற்புதம் பண்றாங்களோ இல்லயோ, இந்த இண்டர்மீடியேட்டர்கள் நல்லா அற்புதம் பண்ணுவாங்க. இன் த மீன் டைம், இன் பரலோகம் தோழர் இயேசுவை தொடர்பு கொண்ட தோழர் அல்லா, “என்ன ப்ரோ இப்படிச் சொல்லி விட்டீர்கள். நான் எப்படி பாலைவனத்தில் மழையை பொழிய வைக்க முடியும்?” , என்று வருத்தப்படுகிறார். அப்போது பதட்டத்துடன் ஓடி வந்த தோழர் வருணன், “அய்யோ. இவர்கள் பண்ணுவதெல்லாம் பார்த்தால் அவதாரம் எடுத்து இவர்களை நானே கொன்றுவிடுவேன் போல. மழை வர மரம் நடுங்கள் என்றால் அண்டாவுக்குள் உட்காருகிறேன், யாகம் வளர்க்கிறேன் என்று டென்சன் செய்கிறார்கள் என் மக்கள் “, என்று அவர் பங்கிற்கு டஃப் கொடுக்கிறார்.

“கவலைப்படாதீர்கள் ப்ரோ! அதான் அவர்களுக்கு அறிவு என்ற ஒன்றை நாம் படைத்து விட்டோமே. தேவை என்றால் அவர்களே மழையை உருவாக்கட்டும். வாருங்கள் நாம் வேடிக்கை பார்க்கலாம்”, என்று அவரைத் தேற்றிய அல்லா ஃப்ரோ அனைவருக்கும் அரேபிய சுலைமானி டீ வாங்கிக் கொடுத்த வரலாறு தெரியுமா உங்களுக்கு? பார்த்தீர்களா இவர்களின் சித்து விளையாட்டை!!!

இந்த நிலையை அன்றே கணித்த நம் ஆதிக்குடி வள்ளுவர் ப்ரோ, “தெய்வத்தான் ஆகாது எனினும்” அப்படீன்னு ரெண்டாயிரம் வருசத்துக்கு முன்னாடியே எழுத்தாணிலயே நச்சுன்னு எழுதி வெச்சுட்டார். ‘ பாலைவனத்துல புல்லு முளைக்காது, எங்க ஆத்தா வாயில பல்லு முளைக்காது’, என்பது போன்ற அறிவியல் உண்மையை எல்லாம் புறம் தள்ளி விட்டு, பாலைவனத்தில் புல்லு முளைக்க வைக்க செயற்கை மழை என்ற பிரம்மாஸ்த்திரத்தை கையில் எடுக்கிறது அமீரக அரசு. இது ஏதோ இன்று நேற்று வந்த தொழில் நுட்பமெல்லாம் இல்லை. இது நம்பியார் காலத்து டெக்னிக் தான் என்கிறார் நம் கூகிள் ஆண்டவர். சிங்கம் சூர்யா போன்று ஆப்ரேஷன் மழை (Operation Mazhai) என்றெல்லாம் பெயர் வைக்காமல், மழை வரவைக்க என்ன செய்யலாம் என்று வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து திட்டம் வகுக்கிறார்கள்.

ஆர்டிபிஷியல் இன்ட்டிலிஜன்ஸ்ல (Artificial Intelligence) ஒரு புரட்சின்னுட்டு எந்திரன் ரோபோ ஒண்ணு உருவாக்கி, உலக அழகிய காதலிக்க விடாம… இவங்க உருப்படியா மனித குலத்துக்குத் தேவையான மழையை வரவைக்க எடுத்த முயற்சிதான்- கிளவுட் சீடிங் (Cloud Seeding). கார்மேகத்தைக் கண்ட உடனே கவிதை எழுத ஆரம்பிக்குற எனக்கு கிளவுட் சீடிங் ஆராய்ச்சி கொஞ்சம் புதுமையாகத் தான் இருந்தது.

சுமார் பத்து வருடங்களுக்கு முன்னால் பதினோரு மில்லியன் அமெரிக்க டாலர் செலவில (82 கோடி அப்பு) முதல் முறையா துபாய்ல செயற்கை மழை ட்ரையல் பார்க்குறாங்க. பத்து வருசத்துல படிப்படியா முன்னேறி 35 % வரைக்கும் மழைப்பொழிவைக் கொடுக்குதுன்னு நான் சொல்லல, இவங்க நேஷனல் சென்டர் ஆஃப் மெட்ராலஜி (National Center of Meterology) சொல்லுது. ஓ அப்போ துபாய்ல மழையெல்லாம் உண்டா? ஆமாங்க…. அடுத்த முறை என்னைப் பார்க்கும் போது ‘துபாய்ல மழை எப்படின்னு’ நீங்க தாராளமா கேக்கலாம்.

செயற்கை மழைன்னா ஏதோ சினிமா ஷூட்டிங் மாதிரி மேல இருந்து தண்ணிய ஊத்துவாங்க போலன்னு தான் நான் நினைச்சிருந்தேன். ஆனா செயற்கை மழைன்னா அது இல்லயாம். மழை மேகங்களெல்லாம் திரண்டு வரும் போது பெரும் காடுகள் இருந்தாத்தான் அந்த மேகத்த கவர்ந்து இழுத்து மழை வர வைக்கும். ஹ்ம்க்கும்….. அது எங்க இங்க இருக்கு. ஸோ குளிர்ந்த காற்று கிடைக்காத பட்சத்துல, செயற்கையான வேதிப்பொருள்களை மழைமேகத்து மேல தூவினோம்ன்னா அது மழையா மாற வாய்ப்பு (வாய்ப்பு மட்டும் தான்) இருக்காம்.

பொண்ணுங்ககிட்ட காதல சொல்ல வர்ற பசங்க அவங்க மனசுல என்ன இருக்குன்னு மெதுவா தெரிஞ்சுக்குற மாதிரி மொதல்ல மேகமெல்லாம் திரளுதான்னு ஒரு குழு கண்காணிக்கணும், மேகம் திரண்டு வந்துச்சுன்னா அந்த சான்ஸ விடாம உடனே அலர்ட் ஆகி சிவப்பு ரோஜா, கிரீட்டிங் கார்டுன்னு (ஐ ஏம் 90’s கிட்) தூக்கிட்டு பொண்ணு பின்னாடி ஓடுற மாதிரி, ராணுவ விமானங்கள பயன்படுத்தி சில்வர் அயோடைட், பொட்டாசியம் அயோடைட், உலர் பனி இதெல்லாம் சேர்த்து ஒரு ரசாயனக் கலவைய ஏர்கிராஃப்ட் கன்ஸ் (Aircraft Guns) மாதிரி செஞ்சு மேகக்கூட்டத்துக்குள்ள அனுப்பிருவாங்க. “காற்றழுத்தம் போல வந்து நானும் உன்னைத்தான் முத்தமிட்டு முத்தமிட்டுப் போகிறேன்” ன்னு விமானங்களெல்லாம் மேகத்துக்கூட டூயட் பாடி ,சில்வர் அயோடைடு துகள்களைத் தூவி விட்டுட்டு வந்துவிடும். அது மேகத்துல இருக்குற ஈரத்தன்மையை உறிஞ்சிட்டு மழை மேகத்த உருவாக்கிடுமாம்.

ரசாயனங்கள் பாடின டூயட்டுல மனசு குளிர்ந்தா, மழை வரும். இதுல என்ன கூத்துன்னா மழை வராம போகுறதுக்கும் சரிசமமான வாய்ப்புகள் இருக்காம். ஆனாலும் காதலிய விடாம தொரத்துற நம்ம சிவகார்த்திகேயன் மாதிரி விமானம் பொசுக்கு பொசுக்குன்னு மேகத்துக்குள்ள போய் மழைத்தூது விடுது. போன வருசம் மட்டும் இருநூற்று ஐம்பது முறைக்கும் மேல காதல்.. ச்சே… மழைத்தூது விட்டிருக்காங்கன்னா பாத்துக்கோங்க.

சரி இப்படி கோடிக்கணக்கா செலவு பண்ணி ஏன் மழை வரவைக்கணும் இவங்க.?? ஃபார் யுவர் இஃபர்மேஷன் திஸ் ஈஸ் பாலைவனம். நல்ல தண்ணிக்காக கடல்நீரை குடிநீராக மாற்றும் அற்புதத்துக்கு இதை விட பல கோடிகள் செலவாகுறதால இப்படி செயற்கை மழை வரவெச்சு செலவ குறைக்குறாங்க. காவிரி பிரச்சனைக்கும் இதே போல ஒரு தீர்வு இருக்காம். சரி அதெல்லாம் விடியல் பாத்துக்கும்.

சரி இவங்க மட்டும் தான் இப்படி பண்றாங்களான்னு பார்த்தா அப்படி இல்ல. சீனா முதல் அமெரிக்கா வரை பெரும்பாலான நாடுகள் செயற்கை மழையை முன்னெடுக்குறாங்க. இப்படி எல்லாருக்கும் பொதுவான மேகத்தை அவங்கவங்க புடிச்சு வெச்சுக்குறதால பங்காளிச் சண்டை எல்லாம் அப்பப்போ வந்துட்டே தான் இருக்கு. ‘ எங்க ஏரியாவுக்கு வர வேண்டிய தண்ணி லாரிய நீ ஏண்டா புடிச்சு வெச்சங்கற’ கதையா எங்க நாட்டுக்கு வர இருந்த மழை மேகத்தை அவங்களே புடிச்சு வெச்சுகிட்டாங்கன்னு அப்பப்போ சில பஞ்சாயத்துகளும் போய்கிட்டு தான் இருக்கு.

மழை வரவைக்குறது மட்டுமில்லாம இதே மெத்தட்ல மழையை நிப்பாட்டவும் முடியுமாம்.  பீஜிங்க்ல ஒலிம்பிக் நடந்தப்போ மழை வரக்கூடாதுன்னு மழையை நிப்பாட்டிய அற்புதமெல்லாம் சீனா நடத்தி சண்டை வாங்கியிருக்கு. சரி சீனாக்காரனுக்கு சண்டை புதுசா என்ன? உள்ளூர் அரசியலே தெரியாத நமக்கு எதுக்கு உலக அரசியல்? வாங்க நாம பக்கோடா சாப்பிடலாம்.

சரி மழை வரவெச்சுட்டோம். ஹுர்ரே ஹுர்ரேன்னு கத்தி ஆட்டம் போடுறதுல பலனே இல்லை. நீர் சேமிப்பு யுக்திகளான ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இப்படி எதுவுமே இல்லாத இடத்தில் நீர் சேமிக்க ஒரே வழி டேம் கட்டுறது தான். எண்பதுகள்லயே இங்குள்ள மலைப்பாங்கான பகுதிகள்ல ஸ்மால், லார்ஜ், எக்ஸ்ட்ரா லார்ஜ்ன்னு பல அளவுகள்ல  நூறுக்கும் மேல் அணைகள கட்டி நீரை சேமிக்க ஆரம்பிச்சிருக்காங்க. ஃவாடி ஹேம் (Wadi Ham), ஹட்டா டேம் (Hatta Dam) இதெல்லாம் இங்க இருக்குற பெரிய நீர்த் தேக்கங்கள்.

இங்கேயும் நம்மூர் மாதிரியே போட்டிங், கயாக் சர்ஃபிங், ஸ்கீயிங், ஸ்கூபா டைவிங், ஃப்ளை போர்டு , பேராஷூட்டிங்ன்னு வாட்டர் ஸ்போர்ட்ஸ் மாதிரியான பொழுதுபோக்கும் பண்ணிக்கிடலாம்.

நல்லதெல்லாம் இருக்கட்டும்… மழை வருதே ரோடெல்லாம் தண்ணி நிக்காதான்னு நீங்க கேக்குற மைண்ட் வாய்ஸ்ச நான் கேட்ச் பண்ணிட்டேன். நிக்கும்… ரோடெல்லாம் தண்ணி நிக்கும், காரெல்லாம் தண்ணில மூழ்கிரும். அப்படியென்ன பேய் மழையா வருதுன்னா, அதெல்லாம் இல்ல. சும்மா பெய்யுற சாரல் மழைக்குத்தான் இந்த கூத்து.

இங்க பிரச்சனை என்னன்னா ‘மண்டைமேல இருக்குற கொண்டைய மறந்துட்டேனே’ங்குற மாதிரி மழைத் தண்ணி வடியுறதுக்கு ப்ராப்பரான டிரைனேஜ் சிஸ்ட்டம் ரோட்ல கிடையாது. பின்னால வரப்போற சந்ததிகள் மழையை வர வைப்பாங்கன்னு தொலைநோக்கு இல்லாம ரோடெல்லாம் போட்டுட்டாங்க. மழை பெஞ்சு முடிஞ்சதும் பெரிய லாரி வந்து ரோட்ல நிக்குற தண்ணிய அள்ளிட்டு போகும். அந்த தண்ணீரும் வீணாகாமல் சாலைகளின் ஓரமாய் உள்ள புல்வெளிகளுக்கு மறுசுழற்சியா அளிக்கப்படுது.   

மழைக்காலத்துல புயலெல்லாம் வராமலா? புயலடிச்சு மழை வர்றது போக, இங்க பாலைவனப் புயல் கொஞ்சம் ஃபேமஸ். கடல் பகுதியில் ஏற்படுகின்ற சூறாவளி நமக்கெலாம் புயலாக மாறுது. அதே போல பாலைவனத்தில் உருவாகிற சூறாவளி, மணல் புயலா மாறி வாரிச் சுருட்டிக்கொண்டு விடும். சில நேரங்களில் பேரீட்சை மரங்களெல்லாம் சாய்ந்து விழும் அளவிற்கு பெரிய புயல் வரும். பக்கத்துல இருக்குற ஆளுங்க கூட கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு நகரத்துக்குள்ள மணல் காற்று வீச ஆரம்பிச்சிரும். வடக்கே இருந்து வருவது வாடைக்காற்றுன்னு நாம சொல்றது மாதிரி, ஷமல் (Shamal) ன்னு இந்த காற்றை இவங்க அரபில சொல்றாங்க.

அரசாங்கம் புயல் எச்சரிக்கை விடுத்தாலும், அத பொடனியில போட்டுட்டு வெளிய கிளம்பி போறவங்களால சாலைகள்ல நிறைய விபத்துகள் நடக்குது. தூரத்துல வர்ற வண்டிங்க தெரியாம காரெல்லாம் ஒண்ணோட ஒண்ணு மோதி ஹாலிவுட் மூவிஸ் மாதிரி அது வேற பெரிய தலைவலி. ஹாலிவுட் மூவீன்னு சொன்ன உடனே நம்ம டாம் குரூஸ் அண்ணா (எனக்கு எல்லாருமே அண்ணா தான். ஏன்னா நான் கோயம்புத்தூருங்கண்ணா) நடிச்ச ‘மிஷன் இம்பாசிபிள்’ படத்துல உலகத்துலயே ஒசரமான ஒரு கட்டிடத்துல தொங்கிட்டு இருக்கும்போது ஒரு புழுதிப்புயல் வந்து அவரை துவம்சம் பண்ணிரும். சினிமால வர்றது மாதிரி பயங்கரமா இல்லேன்னாலும், புழுதிப் புயல் வந்தா கதவெல்லாம் சாத்திட்டு வீட்டுக்குள்ளயே அடைஞ்சுக்கிறது பெட்டர். புயல் போன பின்னாடி பால்கனி பக்கமா போய் குவிஞ்சிருக்குற மணலெல்லாம் அள்ளினோம்னா, அத வெச்சே ஒரு வீடு கட்டிடலாம்.  

சரி சீசன் தான் மாறிடுச்சே ஊரெல்லாம் சுத்த ஆரம்பிக்கலாம்ன்னு மனமகிழ்ச்சியோட ‘ஹ்ம் கிளப்புங்கள்’ என்று வாகனத்தை எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பி விடலாம். ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்….. ஏன் கையை ஏந்த வேண்டும் தமிழ்நாட்டில்….’.அப்படின்னு ஒரு ஆறு மாசத்துக்கு விடாம அவுட்டிங் போகலாம். காதலர்கள் டூயட் பாடுறதுக்கு லவ் லேக்(Love Lake) இருக்கு , குழந்தைகளுக்கு பட்டர்ஃப்ளை பார்க் (Butterfly park) இருக்கு, மனுசங்கள பார்த்து போர் அடிச்சிருச்சா, அப்போ ஏஸிக்குள்ள இருக்குற மிருகங்கள எல்லாம் ஒரு ரவுண்டு பார்க்க நிறைய ஜூ இருக்கு, துபாய்க்குள்ள ஒரு பெரிய பறவைகள் சரணாலயமே (Ras Al Khor) இருக்கு … போலாம் ரைட்…     

சரி இப்போ ஒரு சின்ன கொசுவத்திச் சுருள் ஃப்ளாஷ்பேக். டொட்டொடொடொய்ய்ய்ய்ய்………….சின்ன வயசில இருந்தே எனக்கு மழைன்னா பயம். அப்போ ஒரு சின்ன கிராமத்துல, ஓட்டு வீட்டுல தான் இருந்தோம். மழைக்காலம் ஆயிருச்சுன்னாலே பலமான காத்து, இடின்னு ஒரே திகிலாத்தான் இருக்கும். நைட்டு நேரத்துல ஓட்டு சந்து வழியா தெரியுற மின்னல் கீற்ற பாத்துட்டு கண்ணை இருக்கமா மூடி எல்லா கடவுளையும் துணைக்கு கூப்பிட்டிருக்கேன். நைட்டு முழுக்க முழிச்சிருந்து வீட்டுக்குள்ள ஒழுகுற மழையெல்லாம் ஒரு குண்டாவுல புடிச்சு வெக்கணும். மழை விட்டதும் வேப்ப மர இலையில் இருந்து சொட்டு சொட்டா தண்ணி விழுந்து அலை வட்டம் வருமே அது பாத்துட்டே இருந்திருக்கேன்.

வீட்டுக்கு வெளியே ஓட்டுத் தண்ணியில ஒழுகுற மழைத்தண்ணியெல்லாம் குடம், பக்கெட்டுன்னு புடிச்சு வெச்சுக்க தலையில சாக்க கட்டிக்கிட்டு ஓடியிருக்கேன். மழைக்காலம் முழுக்க ஊருக்கு வெளியே இருந்த குட்டையில ராத்திரி முழுக்க தவளைங்க “க்ரொக்ர்க்….. க்ரொக்ர்க்……” ன்னு சத்தம் போட்டுட்டே ஒரே அக்கப்போரா இருக்கும். மழைக்காலம் முடிஞ்சா தான் அதுக கத்துறத நிப்பாட்டும். அடுத்த நாள் வெளிய போனா ரோட்டுல ஓடுற சாக்கடை, சேறு, சகதின்னு எனக்கு மழை புடிக்காதுங்க. சினிமா ஹீரோயின்கள் மாதிரி மழையில நனைஞ்சுட்டு பாட்டு பாடுறதெலாம் எனக்கு அறவே புடிக்காது. நீங்க நம்பலைன்னாலும் அதான் நிசம்.

PC: Boanerges Gangapatla

ஆனா துபாய் வந்த பின்னாடி மழையை பார்த்து நான் பயப்படுறதே இல்லை. எப்பவாச்சும் சாரல் மழையா வந்தாக்கூட ஏதோ அதிசயத்தைப் பார்க்குற மாதிரி ஓடிப்போய் பார்க்குறேன். வீதியில கொஞ்சமா தண்ணி நின்னாக்கூட கப்பல் விடணும்ன்னு ஆசையா இருக்கு. சின்ன வயசுல ஏன் இதை அதிகம் வெறுத்தேன்னு என்மேல எனக்கு கோவம் கூட வருது.

மழையை சென்ட்டிமீட்டர்ல அளக்குறாங்க. ஆனா மழை எப்போதுமே எல்லாரோட மனசையும் அளக்குற சென்டிமெண்டல் இடியட்டோன்னு தோணுது. இதுனால தான் மழை வரும்போது பலபேர் கவிஞர்களா மாறிடுறாங்க போல. பகடியாய் எல்லா விசயங்களையுமே பேசினாலும் மழைன்னு வரும்போது கொஞ்சம் சென்டிமெண்டலா மாறிடுறேனா? இந்த கான்கிரீட் ஜங்கிளில் மழை என்னும் பேரானந்தத்தை நான் நேசிக்க ஆரம்பித்துவிட்டேனா?

தொடரலாம்……

தொடரின் முந்திய பகுதி:

படைப்பு:

சாந்தி சண்முகம்

கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.

Exit mobile version