மன்னார்புரம் தென் நெல்லை மாவட்டத்தின் இணைப்புப் புள்ளி. பெருக்கல் குறி போன்று நான்கு புறமும் செல்லும் சாலைகள் பல சிற்றூர்களை இணைக்கும் பாலம். இந்த ஊரின் சிறிது வடக்கிலிருக்கும் ஊர் சங்கனான்குளம். சில ஆண்டுகளாகவே இந்த ஊரிலிருக்கும் சவேரியார் கோவிலைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இது இந்த ஆண்டு நிறைவு பெற்றது.
இந்த ஊர் செல்லும் காரணத்தை நான் சொல்லிவிடுகிறேன். ஒரு நாள் தற்செயலாக சங்கனாங்குளம் கோவில் திருவிழாவின் காணொளி ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒரு அருள்தந்தை, சவேரியார் அதாவது சேவியர் என்ற புனிதர் (St Xavier), அவரது சீனப்பயணத்தின் போது. சாங்சோங் தீவில்1552 ஆம் ஆண்டு, டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார். அங்கேயே அடக்கமும் செய்யப்பட்டார். பின் அவரது உடல் மலாக்காவில் அடக்கம் செய்யப்பட்டது. பிறகு தான் அவரது உடல் கோவா வந்திருக்கிறது. மலாக்கா (Malacca) இஸ்லாமியர் வாழும் பகுதி. அந்த இடத்திலும், டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று நாட்களும், அந்த இஸ்லாமிய அரசு பெரிய விழாவை நடத்துகிறது. இதுவும் ஒரு சமய நல்லிணக்கம் தான் என்று சொன்னார்.
அங்கும் சமய நல்லிணக்கம் தான் என்றால் வேறு எங்கு சமய நல்லிணக்கம் என்று கேட்கிறீர்களா? இந்த சங்கனாங்குளத்தில் தான். இது தான் அந்தக் கோவிலைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டியது. இதில் வேடிக்கை என்னவென்றால் மலாக்கா சவேரியார் கோவிலை இதற்கு முன்னரே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது தான்.
இப்போது வரலாற்றைச் சிறிது பின்னூக்கிப் பார்க்கலாம்.
பல அரசியல் காரணங்களுக்காகத் தூத்துக்குடி மக்கள் ஏறக்குறைய இருபதாயிரம் பேர் கத்தோலிக்கராக மாறினார்கள். பெயர்கள் தான் மாறினவே தவிர, அவர்களுக்குக் கத்தோலிக்க வழிபாட்டு முறை எதுவுமே தெரியாது. இவ்வாறான காலகட்டத்தில் ஸ்பெயின் நாட்டில் பிறந்த சவேரியார் (St. Xavier) கோவா வருகிறார். கடற்கரை வழியாக அவரது பயணங்கள் இருந்திருக்கின்றன. அப்படியே தூத்துக்குடி பகுதிக்கு வந்த அவர், உள்ளூர் மக்களின் உதவியுடன், ஜெபங்களை லத்தீனிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறார். அவற்றை மனப்பாடம் செய்து மக்களுக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார்.
சவேரியார், மக்களுக்கும் மன்னர்களுக்கும் இடையே அமைதித் தூதுவராக இருந்திருக்கிறார். இதனால் கடற்கரை மட்டுமல்லாமல், உள்நாட்டுப் பகுதிகளிலும் அவர் வரும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. அப்படி வந்த சவேரியார் ஒரு நாள் சங்கனான்குளத்தில் ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டிருக்கிறார். கால்நடை மேய்க்கும் தொழில் செய்து கொண்டிருந்த அந்த வீட்டார் அவருக்கு மோர் கொடுத்திருக்கிறார்கள். வாங்கிக் குடித்து விட்டு, ‘இந்த ஊரில் ஒரு ஆலயம் கட்டுங்கள்’ எனச் சொல்லி இருக்கிறார். அவர் செல்லும்போது, குடிக்கக் கொடுத்த சொம்பைக் கவிழ்த்து வைத்து இருந்திருக்கிறார். உள்ளே ஒரு மெழுகுதிரி எரிந்து கொண்டு இருந்து இருக்கிறது என்று சொல்லப் படுகிறது. அவர் சென்ற பாதையில் போய் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் அவரைக் காண முடியவில்லை. அந்த ஊர் மக்களுக்கு அவர் யார் என்றே தெரியாது..ஆனாலும் ஓலையால் சிறு கோவில் கட்டி இருக்கிறார்கள். சவேரியார், தான் பயணம் செய்த பாதையை வரைபடமாக வரைந்து வைத்துள்ளார். அதில் சங்கனாங்குளம் பெயர் உள்ளது. அதன் பிறகு தான் வந்து சென்றவர் சவேரியார் எனத் தெரிய வந்துள்ளது.
சங்கனாங்குளம் கோவில் திருவிழா காணொளியில் அருள்தந்தை மலாக்கா குறித்துச் சொல்ல அந்த ஆண்டு நாங்களும் மலேசியா பயணம் செய்ய, எங்களுக்கு மலாக்கா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நாங்கள் கோலாலம்பூரிலிருந்து பேருந்து பயணமாகச் சிங்கப்பூர் வரத் திட்டமிட்டோம். வழியில் மலாக்கா இருப்பதால் பார்ப்போமே! என்று தான் சென்றோம். ஆனால் மிகவும் பிடித்த ஊராக அது மாறிப்போனது. சுற்றுலா சென்ற ஊர்களில் மிகவும் பிடித்த ஊர் எனச் சொன்னால் அது மலாக்கா தான் எனச் சொல்லுமளவிற்கு அவ்வளவு அழகான, அமைதியான ஊர்.
இப்போது மலாக்கா குறித்துச் சிறிது பார்க்கலாம். அஞ்சல் தலை சேகரிப்பதனால் Straight Settlements என்பதான அஞ்சல் தலைகள் வைத்து இருக்கிறேன். இதில் Straight எனச் சொல்லப்படும் நீரிணை மலாக்கா நீரிணை தான். 805 கி.மீ. நீளமான இந்த நீரிணை, பசிபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இது தான் அந்தமான் கடல் (இந்தியப் பெருங்கடல்) மற்றும் தென் சீனக் கடல் (பசிபிக் பெருங்கடல்) களுக்கு இடையேயான கப்பல் பாதை; உலகின் நீளமான நீரிணை. ஆண்டுதோறும் ஏறத்தாழ 50,000 கப்பல்கள் இந்த நீரிணையில் பயணிக்கின்றன. உலகில் பயணப்படும் கப்பல்களில் மூன்றில் ஒருபங்கு கப்பல்கள் இந்தப் பாதை வழியே பயணிக்கின்றன.
Rajendra map விக்கிபீடியா
ஸ்ரீ விஜய நாடு தான் இந்தப் பகுதியைக் கட்டுப்படுத்தியச் சோழரின் கப்பல்களுக்கு இடையூறாக இருந்துள்ளது. அதற்காக நடைபெற்றது தான், ராஜேந்திரச் சோழனின் ஸ்ரீ விஜயப் படையெடுப்பு. கடாரத்தில் வெற்றிக் கொடி நாட்டியதால் தான் கடாரம் கொண்டான் என்ற பட்டத்தை அவர் பெறுகிறார். நீரிணையின் வடக்குப் பகுதியில் கடாரம் (கெடா) உள்ளது. இந்தக் கெடா தான் நாம் சொல்லும் கடாரம். ஆசிய நறுமண சாலையின் (Spice Route) முதன்மைத் தளமாக மலாக்கா நகரம் இருந்து இருக்கிறது. இந்த நீரிணையின் மீது ஆதிக்கம் செலுத்தப் பல நாடுகளும் முனைந்து இருக்கின்றன.
வணிகம் பெருமளவில் நடைபெற்ற இடம் என்பதால் இந்த நீரிணை வரலாற்றில் பெருமளவிற்கு இடம் பெற்று இருக்கிறது. நீரிணையின் அடுத்த பகுதியில் ஸ்ரீ விஜயம், சாதவகம் என்றெல்லாம் வரலாறு கூறும் இன்றைய இந்தோனேஷியா உள்ளது.
மலாக்கா என்ன மலேசியாவின் வரலாறே பரமேஸ்வரன் Parameswara என்பவரிடமிருந்து தான் வருகிறது. பரமேஸ்வரன் சிங்கப்பூர் மன்னர். ஜாவாவிலிருந்த, மஜாபாகித் பேரரசு சிங்கப்பூரின் மீது படை எடுக்க, பரமேஸ்வரன் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை. ஒரு நாள் மலாக்கா மரத்தின் அடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு நாயை, ஒரு மான் எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. பலவீனமான ஒன்று வலிமையான ஒன்றை வெல்லும் என்றால் நாமும் வெல்லலாம் என எண்ணம் வந்து இருக்கிறது. அந்த இடத்திலேயே ஓர் அரசை உருவாக்கியிருக்கிறார். அது தான் மலாக்கா பேரரசு (மலாக்கா சுல்தானகம்). அந்த மலாக்கா என்றால் என்ன பொருள் தெரியுமா? நெல்லிக்காய். ஆம் நெல்லி மரத்தின் கீழ் அவர் அமர்ந்து இருந்தபோது தான் மேலே குறிப்பிட்ட நிகழ்வு நடந்து இருக்கிறது. இப்போதும் மலாக்கா ஊரில் ஆங்காங்கே நெல்லி (முழு நெல்லி) மரங்கள் கண்ணில் படுகின்றன.
சவேரியார் உடல் மலாக்காவில் சிறிது காலம் இருந்திருக்கிறது. பிறகு தான் கோவா வந்தது. அந்தக் காலகட்டத்தில் இரண்டு பகுதிகளும் போர்த்துக்கீசியரின் ஆளுமையின் கீழ் இருந்தன. மலாக்கா டச்சுக்காரர்கள் கைவசம் வந்ததும், சவேரியார் தற்காலிகமாக உறங்கிய (அடக்கம் செய்யப்பட்ட) இடம் “புனித பவுல் ஆலயம்” ஆனது. இன்றும் அந்தப் பெயர் தான் இந்த வழங்குகிறது. இடிபாடுகளுடன் கூடிய கோட்டைக்கு மேலே இந்த இடம் இருக்கிறது. சிறு வெள்ளை நிறச் சிறு கோவில் ஒன்றும் சவேரியாரின் வெள்ளை நிறச் சிலை ஒன்றும் இருக்கிறது. சிலையின் கை செய்யும்போதே உடைந்து விட்டதாம். அதை அப்படியே தான் வைத்து இருக்கிறார்கள்.
இப்போது சங்கனாங்குளம் வருவோம். ஊருக்குள் நுழையும்போதே செல்வவிநாயகர் நம்மை வரவேற்கிறார். மிகவும் இயல்பான சிற்றூர். இந்து ஊரின் அடையாளம். ஆங்காங்கே உடைமரங்கள் இடையில் சில வேப்பமரங்கள். பழைய ஓட்டு வீடுகள், தண்ணீர் தேக்கத் தொட்டி.
தூரத்தில் கத்தோலிக்க ஆலயம் தெரிகிறது. சிமெண்ட் சாலையில் தொடர்ந்து பயணித்தால், டிராக்டர்கள், மாடுகள் என வேளாண் பொருள்கள் இருக்கின்றன. அருகே ஒரு அங்கன்வாடி. அங்கே சிறிதாய் ஒரு அஞ்சல் நிலையம். அப்படியே வேளாண்மையைக் கண்முன் கொண்டு வரும் ஊர்.
சிறிது சென்றால், கொடிமரம் அதன் முன்னால் கோவில் என எளிதாகக் கோவிலைக் கண்டுபிடித்து விட்டோம். வலது பக்கம் தொடக்கப் பள்ளி. அதனையடுத்து தேர் பிரை (அறை) எனக் கிறிஸ்தவ ஊரின் அடையாளம்.
கோவில் அருகில் சென்றால் வெளியில் பூட்டு தொங்குகிறது. உள்ளே செல்வது எப்படி? அருகில் இருக்கும் பள்ளியில் கேட்டால், அவர்கள் ஒரு வீட்டைக் காட்டினார்கள். அந்த வீட்டில் ஆளில்லை. கோவிலின் முகப்பில் இருப்பது சிறிய வாசல் தான். அது தான் பூட்டப்பட்டிருந்தது; தாண்டி உள்ளே சென்றால் திறந்திருக்கும் கோவிலினுள் நுழைந்து விடலாம் என அருகிலிருந்தவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே, கோவிலின் பின்னாலிருந்து ஒரு அம்மா சாவியுடன் வந்தார்கள். அவர்கள் பெயர் ஜெபமாலை. சிறிது நேரத்தில் ரோஸி என இன்னொரு அம்மா இணைந்து கொண்டார்கள்.
சிறிய அழகிய கோவில். கட்டட வேலை எதோ நடக்கிறது. அதற்கான பொருள்கள் கோவிலினுள் உள்ளன. பீடத்தில் சவேரியார், அந்தோனியார், செபஸ்தியாருடன் இணைந்து மேனகா நாள்காட்டியும் வைத்து மண்ணின் மைந்தனுக்கு இவர்களின் ஆசி வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறார்கள்.
வழக்கத்திற்கும் மாறாக, மண்ணின் மக்கள் வெளி ஊர்களில், வெளிநாடுகளில் அவர்கள் பார்த்த சவேரியார் தொடர்பான படங்களை எல்லாம் சுவரில் மாட்டியிருப்பது வியப்பாக இருந்தது. மக்கள் எங்குச் சென்றாலும் சவேரியார் எண்ணத்திலேயே இருக்கிறார்கள் என்று நமக்கு உணர்த்தும் படங்கள் அவை. ஜெபமாலை அம்மா, அழகிய சவேரியார் படம் ஒன்றைக் கொடுத்தார்கள். மொத்தத்தில் சவேரியார் தான் எல்லாம் என ஊர் மக்கள் வாழ்கிறார்கள்.
அருள்தந்தை ஒருவரையும் நினைவுகூர்ந்து அவரது படத்தையும் வைத்திருப்பது சிறப்பு.
சவேரியார் கட்டச் சொன்ன இடத்தில் தான் இந்தக் கோவில் உள்ளது. 1945 ஆம் ஆண்டு ஓடு வேயப்பட்டு, சவேரியார் கோவிலாகி இருக்கிறது. அதற்குமுன் எந்த புனிதரின் கோவில் என்பது எனக்குத் தெரியவில்லை. அனைத்து கோவில்களிலும் திருவிழா நடக்கும் போது, நம் கோவிலில் நாமும் ஏன் கொண்டாடக்கூடாது என்ற எண்ணம் ஊரிலிருந்த மக்களுக்குத் தோன்றியுள்ளது. அதனால் ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளுக்கு முன் திருவிழா கொண்டாடும் வழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. 23.11.2005 அன்று ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப் பட்டுள்ளது.
சங்கனாகுளத்தில் இப்போது வசிப்பதோ இரண்டே இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் தான்.
காணொளிகளில் தான் இவ்வூர்த் திருவிழாக்களைப் பார்த்திருக்கிறேன். அவை பார்க்க அவ்வளவு நிறைவாக இருக்கும். சவேரியார், 1552ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் நாள் உயிர் துறந்தார். அதனால் டிசம்பர் மூன்று தான் அவரது விழா கொண்டாடப்படுகிறது. இந்த காலகட்டம் என்பது ஐயப்ப சாமிக்கு மாலை போடும் காலகட்டம். இவ்வூர் மக்களும் அதற்கு விதிவிலக்கல்ல. அப்படி மாலை போட்டவர்களும் இணைந்து தான் சப்பரம் தூக்குகிறார்கள்; வழிபாடுகளைச் சிறப்பிக்கிறார்கள் என்பது தான் இங்குச் சிறப்பு. பத்து நாட்கள் திருவிழா கொண்டாடுகிறார்கள். கிறிஸ்தவர்களின் வழிபாடான திருப்பலியில் அனைவரும் கலந்து கொள்கிறார்கள். திருப்பலிக்கான ஜெபங்கள் கூட கற்று வைத்துச் சொல்கிறார்கள். நற்கருணை, புதுநன்மை எடுத்த கத்தோலிக்கர்களுக்கு மட்டுமே கொடுப்பார்கள். கோவிலில் நிரம்பி வழியும் அந்த திருப்பலியில் மூவர் மட்டுமே நற்கருணை எடுப்பார்களாம். அதாவது வருபவர்களில் மூவர் மட்டுமே கத்தோலிக்கர்.
திருவிழாவிற்கு வரும் ஆயரைத் திருநீறு பூசிய மக்கள் தான் சுற்றி நின்று வரவேற்கிறார்கள்.ஆயருக்கு வழியில் ஆடைகள் விரித்தவராம் என ஆயரைத் துணி விரித்து ஆயரை வரவேற்கிறார்கள். ஒரு இந்து கோவில் முன் தான் வரவேற்பு தொடங்குகிறது. பூத்தூவி வரவேற்பதும் இந்து இளம் பெண்கள் தான். மாலை ஆராதனை இந்துக்கள் வாழும் இடம் என்பதால், வெஸ்பெர்ஸ் எனப்படும் மாலை ஆராதனைக்கான விளக்கத்தைச் சிறிது கொடுக்கிறார்கள். தேரின் முன் இந்து சாமி ஊர்வலம் போல ஆடிப்பாடுகிறார்கள்.
மின்விளக்குகள், மேளதாளம், சப்பரப்பவனி, அசன விருந்து என எந்த குறையும் இல்லாது திருவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். திருவிழா அழைப்பிதழைப் பார்த்தால் நன்கொடையாளர்கள் என இருக்கும் பெயர்கள் இந்துப் பெயர்கள். அதுமட்டுமல்ல, கோவில் பராமரிப்பு, வெள்ளையடித்தல், மாதந்திர மின்கட்டணம் கட்டுதல் என அனைத்தையும் அந்த மக்களே செய்கிறார்கள்.
மத நல்லிணக்கம் இல்லாமல் உலக அமைதி இல்லை. மனிதன் மதங்களைப் பற்றித் தெரிந்திராமல் நன்றாக உறவாட முடியாது. அரைகுறையாகத் தெரிந்து வைத்துக் கொண்டு மற்ற மதங்களைக் குறை கூடுவதும் மற்ற மதங்களை இழித்துரைப்பதும் நல்லது அல்ல. எப்பொழுது மதங்களுக்கிடையே நட்பு ஏற்படுகிறதோ அப்பொழுது தான் உண்மையான அமைதி ஏற்படும் Hans Küng என்ற அறிஞர் சொன்னதாக , 2024-ம் ஆண்டின் ஒன்பதாம் திருவிழா அன்று மறையுரை ஆற்றிய ஆயர் சொல்லுகிறார்.
அதுவே உலகின் அறமாகட்டும்.
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது. தற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.


