Site icon Her Stories

என்ன ஆச்சு?

“கண்ணே கலை மானே கன்னி மயிலெனக் கண்டேன் உனை நானே” என்று பஜாரிலிருந்த பரோட்டா கடையில் ஒலித்த பாடலைக் கடந்து சென்ற போது  சிறு புன்னகை வந்தது பொன்துரைக்கு.

திருமணத்துக்கு முன்பு என்றால் அது கடையில் ஒலிக்கும் ஏதோ ஒரு பழைய பாடலாதத்தான் அவனுக்குத் தெரியும். ஆனால் இசையையும் பாடல்களின் அழகையும் அவனுக்கு விவரித்தவள், அவன் வாழ்க்கையை அழகாக்க வந்த அவன் இல்லத்தரசி. அவன் இதயத்தின் அரசி. அவன் முத்தழகிக்கு ரொம்பப் பிடித்த பாடல் அது. இளையராஜா என்றால் அவளுக்கு உயிர்.

“இந்தப் பாட்டு எழுதுனது கண்ணதாசன், பாடுனது யேசுதாஸ். என்ன மாதிரி பாட்டுல்ல மாமா? அப்படியே கேட்டதும் உடம்புக்குள்ள போய் ஏதோ செய்யுதுல்ல? அந்த குரல்ல அப்படி ஒரு சோகம், அப்படி ஒரே காதல்” என்பாள் முத்தழகி.

மனதில் ஏதாவது கவலையுடன் அவள் இருந்தால் அவள் கைபேசியில் ஒலிக்கும் ’கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்றோடு’ அவள் விழிகளில் நீர் கசியும்.

பல முறை தோன்றினாலும்  இதுவரை அதைப் பாடியது யார் என்றோ எழுதியது யார் என்றோ அவளிடம் கேட்டதில்லை. இசை மட்டும் இளையராஜாவாக இருக்கும் என்று மட்டும்  யூகித்திருந்தான்.

கொள்ளுப் பேத்தியின் சிரிப்பையும் மழலையையும் அதிகாரத் தொனியையும் கேட்க அவர்கள் ஆச்சிகளுக்குத்தானே குடுத்து வைத்திருந்தது.

அவள் அம்மாவே அவளுக்கு மகளாக வந்து பிறந்ததாக நம்பினாள்.  அவர் பெயரான அபிராமவல்லியைத்தானே‌ மகளுக்குச் சூட்டி வாயாரா ‘அபிம்மா’ என்று அழைத்து மகிழ்ந்தாள்.

 நாற்சந்து வீதியில் இருந்த மாமனாரின்  பழக்கடையையும் மெடிக்கலையும் கடந்து வலப்புற ரோட்டில் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல் இருட்டில் குறுக்கே ஒரு பன்றிக்குட்டி ‘சடால்’ என்று வண்டியில் விழுந்து மழைக்குள் எதிர்புறமாக ஓடியது.

சடன் பிரேக் அடித்து நிறுத்தியவனுக்கு இதயம் படபடத்தது. அதுவரை இனிய நினைவுகளில் மூழ்கியவன் மனம் வேதாளம்  மீண்டும் முருங்கை மரம் ஏறியதாக ஏதேதோ பயங்களும் தேவையில்லாத எண்ணங்களும் தோன்றி கலவரமடைந்தது.

மின்சாரம் தடை பட்டிருந்ததால் ஜெனரேட்டரோ, எமர்ஜென்சி லைட்டோ, யு.பி.எஸ்ஸோ வைத்து ஓட்டிய ஒன்றிரண்டு கடைகளின் வெளிச்சம் கடைவீதியில் தெரிந்தது. குடியிருப்பு பகுதிகள் நேரத்தோடே அடங்கிவிட்டன.

யோசனையுடன் வண்டியை வீட்டுக்கு அருகிலிருந்த சந்தில் வழக்கம் போல் நிறுத்தியவன் நாளைக்கு சந்தனமாரியம்மன் கோயிலில் கொண்டு ஒரு பூஜை போட்டுவிட்டு வந்துவிட எண்ணியிருந்தான்.

ஜன்னல் வழியே கேட்ட மாமனாரின்‌ இருமல் ஓசை தடுத்து நிறுத்தியது. பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று வாசல் வரை சென்றவன் கால்கள் முன்னே செல்ல மறுத்து திரும்பிவிட்டன. மனம் பலமுறை இசக்கி சொன்ன அறிவுரைகளை அசை போட்டது.

அவர்கள் இருவரை வளர்த்த ஆச்சிகளும் கண்ணை மூடி விட்டார்கள். அவர்கள் பெற்றோர் என்று மீதம் இருப்பது அந்த ஒரு மனிதர்தான். அவரிடம் ஏன் இந்த வீம்பு அவனுக்கு?

ஒருநாள் கோபத்தில் அவள் கேட்டது போல் இதுவே அவன் அப்பா கோபத்தில்  ஏதாவது சொல்லியிருந்தால், வருடக் கணக்கில் அதை நினைத்து முறுக்கிக் கொண்டிருந்திருப்பானா?

அவனுக்கு வழிகாட்ட நல்லது கெட்டது சொல்லித் தர , அவன் சோர்ந்த போது தட்டிக் கொடுக்க அவன் அப்பா இல்லை. ஆனால் இந்த மனிதர் ஒரு காலத்தில் எந்த எதிர்பார்ப்பும் இன்றி அந்த ஸ்தானத்தில் இருந்து அவனை வழிநடத்தி இருக்கிறார்.

ஏதோ ஒரு வகையில் தூரத்து உறவினரனான அவர்கள் ஆச்சியின் நட்பால் நெருங்கி வந்தனர்.

அவன்  பள்ளி படிப்பை முடிந்ததும்  படிப்பை நிறுத்திவிட்டு குடும்பச் சொத்தில் மிஞ்சியிருந்த தோட்டம் துரவைப் பார்த்து அதை மேம்படுத்திக் கொண்டே காலத்தை ஓட்டிவிட எண்ணியதை அறிந்து வீட்டுக்கே வந்து, ‘படிப்புதான்யா கை கொடுக்கும், படிப்ப விட்டுறாத. நாங்கதான் படிக்காத முட்டாப் பயளுகளா ஊருலயே கிடந்துட்டோம். அடுத்த தலைமுறையாவது படிச்சு முன்னேறப் பாருங்கடேய்’ என்று பெற்றோர் இல்லாதவனை மகன் போலத்தானே நினைத்து அரவணைத்து வந்தார்.

அவன் படிப்பைக் குறித்து விசாரிக்காத நாட்களே இல்லை. அறிவுரை சொல்லாத நல்லது கெட்டதுகளும் இல்லை. அத்தனை உரிமையோடு பழகிய நாட்கள் எல்லாம் எங்கே போனது?

அதன் பின்னர் அவன் சொந்தமாகத் தொழில் தெடங்கிய போது, தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அவரின்  வாடிக்கையாளர்கள் என்று ஒருவர் விடாமல், ‘நம்மப் பயதான்.

நம்மளே அவன தூக்கிவிடாட்டி யாரு செய்வா அவனுக்கு?’ என்றெல்லாம் நல்ல மாதிரியாகப் பேசி அவர் தந்த நம்பிக்கையில்தானே முதலில் வந்த வாய்ப்புகள் எல்லாம்.

பின் அவன் உழைப்பையும் உண்மையையும் நம்பி அவனுக்கான ஓர் இடத்தை அடைந்த போது மகிழ்ச்சியில் திளைத்தவர்களில் அவரும் ஒருவரல்லவா?

அந்த நம்பிக்கையில்தானே அவனும் போய் அவர் மகளைப் பெண் கேட்டான். அவர் ஏன் அப்படித் தன்னிடம் மூஞ்சிலடித்தாற் போல் பேசினார் என்று எத்தனை நாள் யோசித்து உறங்காமல் இருந்திருப்பான்.

அவரிடம் நேருக்கு நேர் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கலாமே என்றெல்லாம் உறக்கமில்லாத இரவு முழுவதும் யோசித்துப் புரண்டு புரண்டு படுத்தான்.

இத்தனை அருமையான தன் மனைவியைப் பெற்றவர் என்பதற்காகவே அவர் என்ன சொன்னாலும் பொறுத்துப் போயிருக்கலாம் .

போனது போகட்டும் நாளை காலை முதல் வேலையாக அவன் கழுத்தைப் பிடித்து அவர் வெளியே தள்ளினாலும் காலைப் பிடித்துக் கொண்டு அவரைச் சமாதானப் படுத்திவிட வேண்டும் என்று பலவாறாக யோசித்து கண்ணயர்ந்தவனுக்கு என்னென்னவோ கனவுகள்.

அடிபட்டு ஓடிய பன்றிக்குட்டியின் அம்மா அழுது கொண்டே அவனைப் பழிக்கும் பார்வையோடு கண்ணீர் மல்க, ‘இப்படி என் குழந்தையை அடித்து விட்டாயே’ என்று கேள்வி கேட்கிறது.

மறு நொடியில் அது இசக்கியாக மாறியதும் , கீழே விழுந்து கிடந்த குட்டி அவன் மகளாகத் தோன்றியதைக் கண்டவன் மனம் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. அவளை வாரித் தூக்கி, “ஐயோ அபிக்குட்டி , என் தங்கமே “

என்று கத்தியவாறே எழுந்தவனுக்குக் குளிரிலும் வியர்த்திருந்தது. பதறி எழுந்தவன் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு அவள் எண்ணுக்கு முயற்சி செய்ய , இப்போதும் தொடர்பு எல்லைக்கு வெளியே என்று வந்தது சற்று மனக்கவலை அளித்தது.

அதிகாலையில் அவன் கண்ட கனவுக்கு என்ன அர்த்தம்? இங்கே மழையால் இரவு தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது எப்படியும் மயிலாடுதுறை தாண்டி வண்டி சென்று கொண்டிருக்குமே ஏன் எடுக்கவில்லை என்று யோசித்தவன் அப்படியே உறங்கிப் போனான்.

நீண்ட நேரமாக  யாரோ தன் வாசல் கதவைத் தட்டும் சத்தம்  கேட்டு மெல்ல விழிப்பு வந்தது. யாராக இருக்கும் என்று யோசித்தவாரே விழித்தவன் எதிரில் இருந்த மணி கடிகாரம் மணி பதினொன்று என்று காட்டியதைப் பார்த்து திடுக்கிட்டு எழுந்தான். எப்படி இவ்வளவு நேரம் உறங்கிப் போனான் என்று யோசித்தவாறே கதவு தட்டுபவரின் வேகம் அதிதரித்ததை உணர்ந்து, ‘வரேன்‌’ என்று குரல் கொடுத்துக் கொண்டே முன்கதவை திறந்தவன் கண்களை அவனால் நம்ப முடியவில்லை. ஒரு நொடி ஸ்தம்பித்தவன் சுதாரித்துக் கொண்டு, “மாமா” என்றான்.

அவன் கண்ட கனவும் இரவில் அடிபட்ட பன்றிக்குட்டியும் ஏனோ கண்முன் வந்து சென்றன. வெடித்து விடுபவரைப் போல் பொத்துக் கொண்டு வந்த வேதனையில்,

“எய்யா, நம்ம மோசம் போயிட்டோமேய்யா” என்று அந்த பெரிய மனிதர் குழந்தை போல் குலுங்கிக் குலுங்கி அழுததைக் கண்டவன் மனம் ஏதேதோ நினைத்து பயந்தது.

அழுதுகொண்டே கதவில் சாய்ந்தவரின் பருத்த உடம்பைத் தாங்கியபடி  உள்ளே அழைத்து வந்தவனுக்குள் ஏதோ ஒன்று விட்டுப் போனதாய் மரத்து சிலைபோல் உணர்வின்றி நடந்தான்.

என்ன நடந்தது என்று கேட்க வாய் எழவில்லை. கேட்டால் வரும் பதிலை அவனால் தாங்க முடியாது என்று அவரின் கண்ணீர் அவனுக்கு எச்சரித்தது.

(தொடரும்)

படைப்பாளர்:

பொ. அனிதா பாலகிருஷ்ணன் 

பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார்.  இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.

Exit mobile version