Site icon Her Stories

வெளியேற்றப்படும் மாஞ்சோலை மக்கள்: முதலாளிகளைக் காப்பாற்றுகிறதா அரசு?

நான்கு தலைமுறைகளின் உழைப்பினால் உருவாக்கிய நிலத்தைவிட்டு அடியோடு பெயர்த்தெடுக்க முயற்சிக்கும் தேயிலைத் தோட்ட  முதலாளிகளின் செயலால் அதிருப்தியில் இருக்கும் மக்கள்.

எங்கள் உழைப்பையும் வரியையும் வாக்கையும் வாங்கிக்கொண்ட அரசு எங்கே?

சந்தா பெறுவதோடு தங்களது பணி முடிந்தது என வாய்திறக்காமல் காணாமல் போன தொழிற்சங்கங்கள் எங்கே?

என தங்களது குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற குழப்பத்தோடும், வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற என்ன வேலை கிடைக்கும் என்ற பயத்தோடு இருக்கும் மாஞ்சோலை மக்கள் கேட்கும் கேள்விகள் இவை.

35 ரூபாய்க்கு குத்தகை போன 8734 ஏக்கர்

12.02.1929ஆம் ஆண்டு ஏக்கருக்கு 35 ரூபாய் வீதம் 8373.57 ஏக்கர் நிலத்தை, 99 ஆண்டுகள் குத்தகைக்கு  பி பி டி சி (BBTC – Bombay Burma Trading Corporation) நிறுவனத்துக்கு சிங்கம்பட்டி ஜமீன்தார் வழங்குகிறார். இதன் தொடர்ச்சியாகக் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி மற்றும் மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் தேயிலை, காப்பி, ஏலக்காய், கொய்னா, மிளகு போன்ற பணப்பயிர்களைப் பயிரிடும் எஸ்டேட்கள் அமைக்கப்படுகின்றன. இதற்குத் திருநெல்வேலி, தூத்துக்குடி, கேரளம் போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்து கங்காணிகள் மூலம் தொழிலாளர்கள் வேலைக்குக் கொண்டுவரப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சாதிய கொடுமையினால், வறுமையினால் பாதிக்கப்பட்ட  தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தனவே வளம் செழிந்த  தேயிலைத் தோட்டங்கள். இதற்கிடையில் நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1948இல் கொண்டுவரப்பட்ட மெட்ராஸ் எஸ்டேட் (ஒழிப்பு மற்றும் ரயத்துவாரிக்கு மாற்றுதல்) சட்டத்தினால் தமிழ்நாடு அரசு மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளை சிங்கம்பட்டி ஜமீன்தாரிடமிருந்து 19.02.1952 அன்று எடுத்துக்கொண்டது. இதனையடுத்து 23.03.1978ஆம் ஆண்டு மக்கள் குடியிருக்கும்  அகஸ்தியர் மலை உட்பட அனைத்து பகுதிகளும், ‘சேமகாப்பு வனமாக’ மாற்றப்பட்டன. மேலும் அரசாணை எண் 03ன் படி 12.01.2018 அன்று இப்பகுதியை ‘காப்புக் காடாக’ அரசு அறிவித்தது.

உழைப்புச் சுரண்டலில் நிறுவனம்

உழைப்புக்கேற்ற ஊதியம் கொடுக்காமல்  காலங்காலமாக மக்களிடையே உழைப்புச் சுரண்டலை நடத்திவந்திருக்கிறது பி பி டி சி நிறுவனம். தேயிலை பறித்தல், களை எடுத்தல், உரம் போடுதல், மருந்தடித்தல், கம்பெனிகளில் தேயிலையை உலர வைத்தல், தரம் பிரித்தல், அதை கொள்முதலுக்கு அனுப்பி வைத்தல் என பல்வேறு வேலைகளுக்கு மக்கள் பணியமர்த்தப்பட்டனர்.

1998 போராட்டத்துக்கு முன்புவரை இவர்களது தினக்கூலி 50 ரூபாய்க்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. மழை, வெயில், குளிர், அட்டைகளிடம் இரத்தத்தை இழந்து, பல்வேறு பூச்சிக் கடிக்கு, பாம்புக் கடிக்கு ஆளாகி, தங்களது உழைப்பைச் செலுத்திவந்த மக்களுக்கு சொற்ப தொகையே கூலியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாஞ்சோலையில் நடந்த மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின்பே மக்களின் சம்பளம் சிறிது சிறிதாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

வேலை பார்க்கும் இடத்துக்கும், இம்மக்கள் குடியிருப்புக்கும் சுமார் 4 – 5 கிலோமீட்டர் தொலைவு இருக்கும். அப்படி இருந்தும் அம்மக்களுக்கு போதுமான போக்குவரத்து வசதிகள் நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்படவில்லை. 1980களுக்கு முன்புவரை தொழிலாளர்கள், தொழிலாளர்களின் பிள்ளைகள், எஸ்டேட்டில் எவ்வித வாகனமும் வைத்திருக்க அனுமதிக்கப்படவில்லை என்று கூறுகிறார் வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார்.

இடம்- ஊத்து

விடியற்காலையில் எழுந்து காலை மற்றும் மதிய வேளைக்கு உணவு தயார்செய்து, தாங்கள் வேலை செய்ய வேண்டிய இடத்துக்குப்  பெண்கள் நடந்தே செல்லவேண்டும். 7:30 மணிக்கு வேலையில் இருக்க வேண்டுமென்றால், ஒரு மணி நேரத்துக்கு முன்னே அவர்கள் நடக்கத் தொடங்கவேண்டும். 5 நிமிட தாமதம் மட்டுமே அனுமதிக்கப்படும். அதற்குமேல் தாமதமானால், அன்று ஒரு நாள் சம்பளம் கிடையாது என்கிறார் ரெஜினா(45).

பணியிடங்களில் தொழிலாளர்களுக்கான உபகரணக் கருவிகளைக் கொடுப்பது நிறுவனத்தின் அடிப்படைக் கடமை. ஆனால் மக்கள் தேயிலையை கைகளாலேயே பறிக்கின்றனர். தற்போதே அவர்களுக்குக் கத்தரிக்கோல் வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. இதனால் செடிகளுக்கு இடையே இருக்கும் முள்போன்ற களைச் செடிகளாலும் மற்ற விஷப் பூச்சிகளின் தாக்குதலாலும் பெரிய அளவுக்குப் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்கிறார் இந்திரா(49).

மழையானாலும் பெண்கள் நனைந்து கொண்டே வேலை பார்க்க வேண்டியது கட்டாயம். மேலும் மழைக்காலங்களில் அட்டைகள் அதிகமாக இருக்கும். அதுமட்டுமல்லாது மழையில் நனைந்து வேலை பார்ப்பதனால், கைகள் மறுத்துவிடும். இதனால் அட்டை கடிக்கின்ற உணர்வு கூட தெரியாமல்  போகும்  என்று கூறுகிறார் அமுதா.

பனிக் காலங்களில் அருகில் யார் இருக்கிறார்கள் என்பது கூட தெரியாத அளவுக்குப் பனி இருக்கும். இதனால் பல நேரங்களில் காட்டுப் பன்றிகளின் தாக்குதலுக்கு ஆளாகி, கை, கால் முறிந்து கிடப்பவர்களும் உண்டு என்கிறார் ஜெபராணி.

இப்படி உழைப்பவர்களின் பாதுகாப்புக்கென எந்தவொரு அடிப்படைத் தேவையையும் கம்பெனி நிர்வாகம் செய்ததில்லை. பூச்சி, பாம்புக்கடிக்கு  உடனடி முதலுதவி என்பது கிடையாது. உடனே அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும். இத்தகைய தாக்குதலிலிருந்து உடனடியாக தப்பிக்க நிர்வாகத்திடம் எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லை என்கிறார் ராசு(53).

இடம்- மாஞ்சோலை

செங்குத்தாக நெடிது நிற்கும் மலைகளில் ஏறுவது என்பது சாதாரணமான ஒன்று இல்லை. தனியாக ஏறுவதும் இறங்குவதும் சவாலாக இருக்கும் வேளையில், 30 முதல் 35 கிலோ எடை கொண்ட தேயிலை மூட்டையைப் பெண்கள் சுமந்துகொண்டு இறங்குகின்றனர். மாதவிடாய் காலங்களிலும் மகப்பேறு காலங்களிலும் பெண்கள் மிகுந்த சிக்கலுக்கு ஆளாகின்றனர்.

மகப்பேறு விடுமுறை 3 மாதங்களே கொடுக்கப்படும். இந்த விடுமுறையை மகப்பேற்றுக்கு முன்னரோ அல்லது மகப்பேறுக்குப் பின்னரோ எடுத்துக்கொள்ளலாம். இதனால் மகப்பேறு காலங்களில் மிகப்பெரும் வேதனைக்கு ஆளாகின்றனர் பெண்கள். பிறந்து 3 மாதங்களே ஆன குழந்தையைக்கூட பால்வாடிகளில் விட்டுச் செல்கின்றனர். பால் கொடுக்க வேண்டும் என்பதால் வேலை முடிவதற்கு 1 மணிநேரத்துக்கு முன்பாக செல்ல மட்டும் அந்தப்பெண்ணுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறுகிறார் தங்கம்மாள்.

அதே போல கம்பெனியின் இயந்திரங்களில் கைகளையும் விரல்களையும் இழந்து  நின்றவர்களுக்கு கம்பெனி சொற்ப தொகையையே இழப்பீடாக வழங்கி இருக்கிறது. கம்பெனின் அஜாக்கிரதையால் ஊனமாக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள் என மனவருத்தத்துடன் கூறினார் ஜெயக்குமார்.

இடம்- ஊத்து

மக்களை பணியில் சேர்க்கும்போது தற்காலிக ஊழியர்களாகச் சேர்த்து, சில ஆண்டுகள் கடந்த பின்னரே அவர்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிருக்கிறது நிர்வாகம். எனவே விருப்ப ஓய்வுத் தொகை கணக்கிடப்படும்பொழுது, நிரந்தர பணி நியமனம் செய்யப்பட்ட நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது. இதனால் பணியில் 20 வருடம் அனுபவம் இருந்தாலும் குறைவான விருப்ப ஓய்வு தொகையே  கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயப்படுத்தியும்மிரட்டியும் விருப்ப ஓய்வு கையொப்பம் பெற்ற நிறுவனம்

பி பி டி சி நிறுவனம்  தொழிலாளர்களை  விருப்ப ஓய்வில் செல்ல கட்டாயப்படுத்தியும், மிரட்டியும் தொழிலாளர்களிடம் கையெழுத்து வாங்கியிருக்கிறது. விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில் கையெழுத்து போட்டுத்தான் ஆகவேண்டும். இல்லையெனில் கொடுக்கும் தொகைகூட இல்லாமல் போகும் என்று மிரட்டி இருக்கிறது. மேலும் விருப்ப ஓய்வுக்குக் கொடுக்கப்படும் தொகையில் பாரபட்சமும் அநீதியும் நிகழ்ந்திருக்கிறது. “29 ஆண்டுகள் வேலை அனுபவமும், இன்னும் 20 ஆண்டுகள் பணிக்காலமும் எனக்கு இருக்கிறது. எனினும் எனக்கு வயது அடிப்படையில் ரூ.2,12,000/- (ரூ. இரண்டு லட்சத்துப் பன்னிரண்டாயிரம்) மட்டுமே தொகுத்துப் பெறும் ஓய்வு ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் முழு தொகையில் 25% தொகையை மட்டுமே பி பி டி சி நிர்வாகம் கொடுதிருக்கிறது என்கிறார் மங்கம்மாள்.

கணவரை இழந்து தனித்திருக்கும் பெண்களின் வீடுகளுக்கு அடிக்கடிச் சென்று கதவைத் தட்டி, “கையெழுத்துப் போட வந்துரு. உனக்கெல்லாம் யாரு இருக்கா?” என பீல்டு ஆபிசர் மிரட்டினார் எனக் கூறுகிறார் மகேஷ்வரி(40).  

பிரித்தாழும் சூழ்ச்சியில் ஈடுபட்ட நிறுவனம்

விருப்ப ஓய்வு அறிவிப்பதற்கு முன்னர் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரை ஒன்று திரளவிடாமல் பார்த்திருக்கிறது நிறுவனம். தொழிலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி விருப்ப ஓய்வு கொடுக்கப்படுவதை அறிவித்திருக்கிறது. அக்கூட்டத்தில் ஒருவர் அரசாங்க அதிகாரிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்று கேட்டதற்கு, “நீயும் நானும் தான் பேசணும். இதுல மூணாவது மனுசங்க யாரும் பேச வர வேணாம்னு சொல்லிட்டாங்க” எனக் கூறுகிறார் தங்கம்மாள்.

ஊத்து, நாலுமுக்கு மக்கள் எல்லாம் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில் கையெழுத்துப் போட்டு விட்டனர் என்று மாஞ்சோலை மக்களிடமும், மாஞ்சோலை மக்கள் விருப்ப ஓய்வுக்குச் சம்மதித்துவிட்டனர் என்று ஊத்து மக்களிடமும் கூறி மக்களைக் குழப்பியும், அழுத்தம் கொடுத்தும் விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்கிருக்கிறது நிர்வாகம்.

2024ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி விருப்ப ஓய்வுக்கான (VRS) அறிவிப்பை வெளியிடுகிறது நிர்வாகம். விருப்ப ஓய்வு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க 14.6.24 வரை அனுமதி வழங்கியிருக்கிறது. விண்ணப்பம் சமர்பித்தவர்களுக்கு 25% தொகையை வழங்கி இருக்கிறது. மேலும் விண்ணப்பம் சமர்ப்பித்த 40 நாள்களில் நிர்வாகத்தின் பொருள்களை ஒப்படைத்து, வீட்டையும் காலி செய்தபின்னர், அவர்களுக்கான 75% மீதித் தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது நிர்வாகம். நான்கு தலைமுறைகளாக வாழ்ந்து வந்த மக்களை அம்மண்ணில் இருந்து வெளியேற்ற நிர்வாகம் வழங்கிய கால அவகாசம் வெறும் 40 நாள்கள் மட்டுமே! 

அதேபோல தொழிலாளர் பிரதிநிதிகளையும், அரசியல் பிரதிநிதிகளையும் மக்கள் பிரச்னையில் தலையிடாதவாறு பார்த்துக்கொண்டது நிர்வாகம். துணை மாவட்ட ஆட்சியர், மக்களிடத்தில் பேச வந்துசெல்லும் அதிகாரிகளுக்கு நிர்வாகம் விருந்து அளிக்கிறது. அதிகாரிகள் களத்தைப் பார்வையிட வருவது யாருக்கும் தெரியாது எனக் கூறப்படுகையில், நிர்வாகத்துக்கு மட்டும் எப்படித் தெரிகிறது? மேலும் மக்களிடம் பேச வரும் அதிகாரிகள் யாரும் மக்களின் பிரச்னையைக் கேட்பதில்லை. “நீங்களாதான போறோம்னு கையெழுத்துப் போட்டு கொடுத்திருக்கீங்கனு கேக்குறாங்க. மக்கள காப்பாத்ததான கலெக்டர் இருக்காங்க? கம்பெனி நிர்வாகம் சொல்றத கேட்டு நடக்குறதுக்கு அவங்க எதுக்கு கலெக்டர் இங்கே?” அப்படியெனில் இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள் எனக் கேள்வி எழுப்புகிறார் அந்தோணிசாமி.

இப்படியாக மக்களை நம்பவைத்து, குழப்பத்துக்கு உள்ளாக்கி, அழுத்தம் கொடுத்து மக்களைச் சம்மதிக்க வைத்திருக்கிறது நிர்வாகம். நூற்றாண்டுகளாக மக்களின் உழைப்பைத் தங்களது லாபத்துக்கு பயன்படுத்திவந்த நிர்வாகம்,  மக்களை நிராதரவான சூழலுக்குத் தள்ளி, அவர்கள் உருவாக்கிய இடத்திலிருந்து அவர்களை வெளியேற்றும் பணியில் ஈடுப்பட்டிருக்கிறது.

இடம் – நாலுமுக்கு

அரசு என்ன செய்யப் போகிறது?

இத்தகைய வெளியேற்றத்தை எதிர்த்த மக்கள் சமீபத்தில் நடந்த தேர்தலைப் புறக்கணிக்க இருப்பதாக அறிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அரசு அதிகாரிகள், மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி, ‘வெளியேற்றம் நடக்காது. நீங்கள் இங்கேயே இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’ என வாக்குறுதி அளித்திருக்கின்றனர். இதையடுத்து மக்கள் வாக்கு செலுத்தி இருக்கின்றனர். 

ஆனால் அதன் பின்னர் வந்த அதிகாரிகள் யாரும் மக்களின் கோரிக்கைகளைக் கேட்கத் தயாராக இல்லை. பல்வேறு அரசியல் தலைவர்களும் வந்து சென்றனரே தவிர, யாரிடமிருந்தும் தங்களுக்குச் சாதகமான தகவல்கள் வரவில்லை; அரசும், கம்பெனி நிர்வாகமும் தங்களை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளிவிட்டன என மக்கள் கூறுகின்றனர்.

ஜூன் மாதம் 12ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியரிடம் மாஞ்சோலை மக்கள் மனு கொடுக்கச் சென்றனர். ஆட்சியரைச் சந்திக்க 3 நபர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால், விருப்ப ஓய்வு விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட பேபி, ரோஸ்மேரி ஆகிய 2 பெண்கள், மற்றும் கையெழுத்திடாத ஜெயஸ்ரீ ஆகிய மூவர் மட்டுமே சென்றனர். ஜெயஸ்ரீயிடம், ‘உங்களிடம் பேச விருப்பமில்லை நீங்கள் என்னிடம் பேசாதீர்கள்’, என்று கூறிய ஆட்சியர், மற்ற இரு பெண்களிடம் பேசினார். “நான் மீண்டும் பேசத் தொடங்கியபோது, ‘நீங்கள் பேசாதீர்கள், உங்களுக்கு கேரளாவில் வீடு இருக்கிறது. உங்க VRSயை ரத்து செய்துவிடுவேன்’, என்று ஆட்சியர் மிரட்டினார். கடந்த வருடம் டிசம்பரில் இது தொடர்பாகக் களத்திற்கு வந்து மக்களைச் சந்தித்த துணை ஆட்சியர் மற்றும் plantation Inspector, ‘அப்படியெல்லாம் கம்பெனியை மூட முடியாது, யாரையும் வெளியேற்றவும் முடியாது’ என ஆறுதல் கூறியதால், அவர்களை  நாங்கள் முழுமையாக நம்பினோம். ஆனால் இன்று எங்களிடம் இப்படி நடந்துகொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை”, என்று ஜெயஸ்ரீ கூறினார்.

இடம்-ஊத்து

இப்படியாக மக்கள் 2018ஆம் ஆண்டிலிருந்தே மாஞ்சோலை, ஊத்து, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் குதிரைவெட்டி ஆகிய தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ள பகுதிகளை தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வேலையை தொடர்ந்து செய்துவருகின்றனர். இப்படி பல்வேறு வகையில் தங்களது கோரிக்கைகளை சொல்லியும், அரசு அக்கோரிக்கைகளின் மீது கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக இல்லை.

எப்போதும் இல்லாமல் தற்போது மாஞ்சோலையில் காவலர் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். மாஞ்சோலைக்குச் செல்லும் மக்கள் கண்காணிக்கப்படுகின்றனர். ஊடகவியலாளர்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் வந்துசெல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. ஊத்து, நாலுமுக்கு, காக்காச்சி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது தண்ணீர் வழங்கப்படுவதில்லை, மூன்று பேருந்துகள் சென்றுகொண்டிருந்த இடத்தில் தற்போது ஒரே ஒரு பேருந்து மட்டுமே சென்று கொண்டிருக்கிறது. இவை எதனால்? 

நிறுவனத்துக்கும் மக்களுக்குமான பிரச்னையாகத்தான் இதைப் பார்க்க முடியுமா? அரசுக்கு இதில் பொறுப்பு இல்லையா? மக்களின் பிரச்னையைக் கவனத்தில் கொள்வதும், நடவடிக்கை எடுப்பதும் அரசின் கடமையாகாதா? நிர்வாகத்தால் கொடுக்கப்பட்ட தொகையைக் கொண்டு அவர்களால் தங்களது வாழ்வாதாரத்தைப் பார்த்துக்கொள்ள முடியும் என்று அரசு நம்புகிறதா? மக்களுக்கான தொழில்? குழந்தைகளின் கல்வி குறித்து அரசுக்கு அக்கறை இல்லையா? இத்தனை ஆண்டுகளாகத் தங்களது உழைப்பில் உருவான இடத்தை விட்டு மக்களை வெளியேறச் சொல்வது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? அவர்களை அவர்களுக்கான இடத்திலேயே வாழவிடாமல் தடுப்பது எது? சென்னையின் பூர்வகுடி மக்களைச் சென்னையின் புறநகர்ப் பகுதிக்கு வீசியதுபோல், மாஞ்சோலை மக்களும் வீசப்படப் போகிறார்களா? மக்களின் வெளியேற்றம் குறித்து எதிர்க்கட்சிகளும் வெகுஜன ஊடகங்களும் அமைதியாக இருப்பது ஏன்? 

சட்டப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் மாஞ்சோலை மக்களின் பக்கம் அரசு நிற்கவேண்டும். அம்மக்களின் வாழ்விடத்தை அவர்களிடம் ஒப்படைப்பதே சரியான நீதியாக இருக்க முடியும். நிர்வாகம் மக்களின் உழைப்புக்கான நியாயமான தொகையை வழங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மக்களுக்குதானே அரசு?

எனவே தனது மக்களை கண்ணியத்துடன் நடத்துவதும், வாழ வழிவகை செய்வதும்தான் அரசின் ஆகப்பெரிய கடமையாக இருக்க முடியும். இந்த சமூக நீதி அரசு அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தரவேண்டும் என்பதே மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 

படைப்பாளர்:

மை. மாபூபீ

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பில் துறை முனைவர்பட்ட மாணவர். அரசியல், சமூகம், பெண்ணியம் சார்ந்த கட்டுரைகளை எழுதிவருகிறார். தீக்கதிர் நாளிதழ், கீற்று, thenewslite போன்ற இணையதளங்களில் இவரது கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.

Exit mobile version