Site icon Her Stories

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று!

ஆவீன மழைபொழிய இல்லம் வீழ
     அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
     வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
     தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
     குருக்களோ தட்சணைகள் கொடுவென்றாரே!

இராமச்சந்திரக் கவிராயர் இயற்றிய இந்தப் பாடல், தனிப்பாடல் திரட்டில் உள்ளது. துன்பங்கள் பலவும் ஒன்றாகச் சேர்ந்து ஒருவனை வருத்தும் இயல்பை ஒரு தனிப்பாடலாகப் பாடியுள்ளார். சோதனை மேல் சோதனை போதுமடா சாமி, வேதனை தான் வாழ்க்கையென்றால் தாங்காது பூமி என்று பின்னர் இதனையே, கண்ணதாசன் பாட்டாகப் பாடிவிட்டார் போல.

நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான நிகழ்வு, பசு கன்று ஈன்றிருக்கிறது. வேலை நிறைய இருக்கிறது என்று இல்லத் தலைவன் நினைக்கிறான். உடன் உதவி செய்ய வேண்டிய வேலைக்காரன் இறந்து விட்டான்; எப்போதும் உதவும் மனைவியையாவது அழைக்கலாமென்று பார்த்தால், அவளுக்கு நல்ல சுரம், உடல்வலி. பொழியாதா என்று ஏங்கியிருந்த மழை பொழியத் தொடங்குகிறது. ஆஹா.. நிலம் ஈரமாக இருக்கும்போதே விதைத்து விடலாமென்று விதை நெல்லெடுத்துக்கொண்டு வயலுக்கு ஓடுகிறான். மனம் முழுவதும் மழையில் இடிந்துபோன வீட்டுச்சுவரைச் சரிசெய்ய வேண்டுமே, பசுவும் கன்றும் பிழைக்க வேண்டுமே, மனைவி நலம் பெற வேண்டுமே என ஏராளமான கவலைகள்; வழியிலேயே கடன்காரன் மறித்து, கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்கிறான்.

விதைத்து விடுவேன், மழை பொழிகிறது, அறுவடையில் திருப்பித் தருகிறேன் என்கிறான் அவன். போடா இவனேயென்று அவனிடமிருந்த விதைநெல்லைப் பிடுங்கிக்கொண்டு போய்விடுகிறான் கடன்காரன். அப்போது பார்த்து ஒருவன் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாகச் சொல்ல, சோர்ந்து வரப்பில் உட்காருபவனைத் தேடி விருந்தினர் வருகின்றனர். நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று திகைத்து நிற்கிறவனைப் பாம்பு தீண்ட, அவனை நோக்கி வரி வசூலிக்க வருகின்றனர் அரசு அலுவலர்கள். அவர்களுக்குப் பின்னால், இந்த வருஷத்துக்கான தட்சணையைக் கொடு என்று கேட்டபடி நிற்கிறார் குருக்கள். ஒரு மனிதன் துன்பத்துக்கு மேல் துன்பப்படுவதைப் பாட்டாகவே பாடிவிட்டார் புலவர்.

நம் அன்றாட வாழ்வில், நாம் நமக்கு மட்டுமேன் இவ்வளவு துயரம், அதுவும் அடுக்கடுக்காக இப்படியென்று சலித்துக் கொள்வோமில்லையா? அதைக் கவிராயர் பாட்டாகவே பாடி விட்டார். அதுவே இந்தப் பாடல். ஒரே நாளில் இப்படியெல்லாம் நடக்குமா, இதென்ன கதையா இருக்கே என்றுகூட நீங்கள் விமர்சிக்கலாம்; அதுதானே கவிதை. மயிற்பீலியாக இருந்தாலும் அடுக்கிக்கொண்டே போனால் வண்டி அச்சு முறிந்து போகுமென்ற திருக்குறளும் நினைவுக்கு வருகிறது.

தொண்டை மண்டலத்தில் இராசு நல்லூர் என்னும் ஊரில் பிறந்து சென்னையில் வசித்தவர். எல்லிஸ் துரையால் புகழ்ந்து பாடப் பெற்றவர். சதபங்கி, நவபங்கி எனப்படும் சித்திரக் கவிகள் பாடுவதில் வல்லவர். இவர் சகுந்தலை விலாசம், தாருகா விலாசம், இரங்கோன் சண்டை நாடகம், இரணியவாசகப்பா முதலிய நாடகச் சார்பான நூல்களை இயற்றி உள்ளார். சந்தக் கவி பாடுவதில் வல்லவரான இவருடைய பாடல்களில் அவல நகைச்சுவை ததும்பும்.

பார்த்தேன்

Adoloscence என்றொரு சீரிஸை நெட்பிளிக்ஸில் பார்த்தேன். கடந்த ஆறேழு வருடங்களாகப் பள்ளியில்  நடக்கும் காட்சிகளைக் கவனிக்கிறேன், குறிப்பாக கொரோனாவுக்குப் பிறகு. அயல்நாட்டில் நடக்கும் கதையாக அதனைப் பார்த்தேன், அவ்வளவுதான். இன்றைய இளவயதுக் குழப்பங்களை, அதனைக் கையாள்வது குறித்தெல்லாம் நாமின்னும் பேசத் தொடங்கவேயில்லை என்பது பெரும் குற்றவுணர்வைத் தருகிறது.

பதின்பருவத்தில் ஏற்படும் உடல், மன மாற்றங்கள் – அதில் நவீன உலகின் சிக்கல்கள் ஏற்படுத்தும் தாக்கங்களும் சேர்ந்து தரும் அழுத்தம் வளரிளம் பருவத்தினரின் உளவியலைப் பாதிப்பதை நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார்கள். மொத்தம் நான்கே எபிஸோட்கள்; ஒவ்வொரு எபிஸோடும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. வாழ்க்கையே சிங்கிள் ஷாட் தானே! அதை அமைத்துக்கொள்ளத் தொடங்கும் பருவத்தில், சமூகம் குறிப்பாக, இணையம் அவர்கள் மீது செலுத்தும் செல்வாக்கு, அதன் கொடூரமான தாக்கத்தை சீரீஸ் பேசுகிறது.

சக மாணவியைக் கொலை செய்ததாக, ஜேமியைக் கைது செய்வது தொடங்கி இறுதியில் ஜேமியின் தந்தை தன்  மகனின் படுக்கையில் அமர்ந்து வருந்துவது வரையிலும் ஒரு காட்சிகூடத் தேவைக்கதிகமாக இல்லாததுடன் நடித்தவர்கள் அனைவருமே, தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கின்றனர். முதல் எபிஸோடில் ஜேமி கைது செய்யப்படுவதில் ஆரம்பித்து, இளம்பருவத்துக் குற்றவாளிகள் பிரிட்டனில் கையாளப்படும் விதத்தைப் பார்த்தபோது இங்கிருக்கும் நிலை குறித்து வருத்தமாக இருந்தது. பள்ளியில் மாணவர்களின் சூழல், நிலை, அவர்களை ஆசிரியர்கள் பொறுமையாகக் கையாளும் விதம் ஆகியவை இரண்டாவது எபிஸோடில் சொல்லப்பட்டிருந்தது. உளவியலாளரிடம் ஜேமி பேசும் இடம், அவன் உளவியல் சிக்கலைத் தெளிவாகக் காட்டியது. அவர், அந்த மாணவரிடம் கேட்கும் கேள்விகள் மிக முக்கியமானவை. பார்க்கும் ஒவ்வொரு பெற்றோரும் தங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டியவை. இறுதி எபிஸோடில், ஜேமியின் குடும்பம் எதிர்கொள்ளும் சிக்கல், தங்கள் குழந்தை வளர்ப்பில் எங்கே கோட்டை விட்டோமென்று பெற்றோர் பேசிக்கொள்ளும் காட்சி என மிகச் சரியாகக் கொண்டு செலுத்தி இருக்கின்றனர்.

இது ஏதோ அயல்நாட்டு மாணவர்களுக்கான பிரச்சனையென்று ஒதுங்காமல், இன்று உலகமே சுருங்கிப் போயிருக்கும் நிலையில் உலக அளவில் பதின்பருவத்தினர் எதிர்கொள்ளும் இத்தகைய சிக்கல்களை பெற்றோர், அரசு, சமூகம் எப்படிக் கையாள்வதென்று சிந்திப்பதே இன்றைய தேவை. அதைத்தான் இந்த சீரிஸ் சத்தமாகச் சொல்லியிருக்கிறது.

படித்தேன்

சொல்லாராய்ச்சியில் எப்போதும் ஒரு ஈடுபாடு உண்டு. திடீரென ஒரு சொல் மனத்தில் வந்து உட்கார்ந்து கொள்ளும். அல்லது படிக்கையில் ஒரு சொல் சட்டென்று பிடித்துக்கொள்ள, அதன் வேரைத் தேடிப் படிப்பது வழக்கம். அப்படி, Boycott என்ற சொல் சென்றவாரத்தில் என்னைப் சிக்கெனப் பற்றிக் கொண்டது. ‘புறக்கணிப்பு’ என்ற பொருள் தரும் அந்தச் சொல், அயர்லாந்தில் ஆங்கில எஸ்டேட் மேலாளரான கேப்டன் சார்லஸ் பாய்காட்டின் (Charles Boycott) பெயரிலிருந்து வந்தது.

சார்லஸ் கன்னிங்காம் பாய்காட், இங்கிலாந்தைச் சேர்ந்தவர். பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றபின் அயர்லாந்தில் குடியேறினார். அங்கே, கவுண்டி மேயோவின் லஃப் மாஸ்க் பகுதியில் (Lougn Mask Area of County Mayo), நில உரிமையாளரான லார்ட் எர்னேவுக்கு (Lord Erne) நில முகவராகப் பணியாற்றினார். நிலத்தில் குத்தகைதாரர் விவசாயிகளிடமிருந்து வாடகை வசூலித்துத் தருதல் அவருடைய பொறுப்புகளில் ஒன்று. இதற்காக மொத்த வாடகையில் பத்து சதவிகிதத்தை அவர் பெற்றுக்கொண்டார்.

1880களில் ஐரிஷ் நிலப்போரின்போது, குத்தகைதாரர்களை வாடகை செலுத்தக் கட்டாயப்படுத்தினார் சார்லஸ். வாடகையைக் குறைக்காவிட்டால் தங்களால் கட்ட இயலாத போர்ச்சூழலை எடுத்துச் சொல்லியும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்குப் பதிலாக, குத்தகைதாரர்களை நிலத்தை விட்டு வெளியேற்ற முயன்றார் பாய்காட். வாடகை வசூலிக்கையில் மற்றவர்களின் உணர்வைப் பொருட்படுத்தாத அவருடைய இந்தப் போக்கு மக்களுக்குக் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஐரிஷ் நிலக் கழகத்தின் ஆதரவுடன் பாய்காட்டுக்கு எதிராக சமூக, பொருளாதாரப் புறக்கணிப்புப் பிரச்சாரத்தை குத்தகைதாரர்கள் முன்னெடுத்தனர். அருகிலுள்ள பாலின்ரோப்பிலுள்ள கடைகள் அவருக்கு சேவை செய்ய மறுத்தன. அதுவரையிலும் அவருடன் இணக்கமான உறவினைப் பேணிவந்த பிறரும் தங்கள் சேவைகளைத் திரும்பப் பெற்றனர். சிலசமயங்களில் வன்முறையால் அச்சுறுத்தப்பட்டும் இது நிகழ்ந்தது. நிலத்திலுள்ள பயிர்களை அறுவடை செய்யும் தொழிலாளர்கள், ஊழியம் செய்ய மறுத்தனர். இது அவரை, சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தியது. அப்போதும் இதில் தன் தவறு பற்றிச் சிந்தியாத பாய்காட், தி டைம்ஸ் இதழுக்கு ஒரு கடிதமாக இந்நிகழ்வை எழுதி அனுப்பினார். ஐரிஷ் தேசியவாதிகளால் மானப்பிரச்சனையாக இது கருதப்பட்டதால், இதர பகுதிகளிலிருந்து பயிர்களை அறுவடை செய்ய மக்கள் அனுப்பப்பட்டதுடன் அவர்களுடைய பாதுகாவலுக்காக படைப்பிரிவிலிருந்து 1000 போர் வீரர்கள் நிறுத்தப்பட்டனர். சுமார் 500 பவுண்டு மதிப்புள்ள பயிர்களை அறுவடை செய்ய, 10,000 பவுண்டு செலவாகியதாக அக்காலக் கணக்கு ஒன்று மதிப்பிடுகிறது.

01.12.1880 அன்று அயர்லாந்தை விட்டு வெளியேறிய பாய்காட், 1886ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் 1897 ஜூன் 19 அன்று ஃப்ளிக்ஸ்டனில் உள்ள தன் வீட்டில் 65 வயதில் இறந்தார். இவருடைய ஞானஸ்நானப் பதிவில் Charles Boycatt என்று எழுத்துப்பிழையாக இருந்ததைப் பின்னாளில் அவருடைய குடும்பத்தினர் Charles Boycott என்று மாற்றினர். அவரது பெயரிலிருந்து பெறப்பட்ட புறக்கணிப்பு என்ற சொல் வேகமாகப் பரவி, போராட்டத்தில் பயன்படுத்தப்படும் சமூக அல்லது பொருளாதார அழுத்தத்திற்கான அனைவராலும் ஏற்கப்பட்ட சொல்லாக மாறியது.

படைப்பாளர்

தி. பரமேசுவரி

 ‘எனக்கான வெளிச்சம், ஓசை புதையும் வெளி, தனியள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள்,  ‘ம.பொ.சி பார்வையில் பாரதி,  சமூகம் – வலைத்தளம் – பெண், சொல்லால் அழியும் துயர் ‘ஆகிய மூன்று கட்டுரைத் தொகுப்புகள்,  மற்றும் ‘ம.பொ.சியின் சிறுகதைகள், ம.பொ.சியின் சிலப்பதிகார உரை, ஜோ.டி.குரூஸின் கொற்கை நாவலை முன்வைத்து ‘கலிகெழு கொற்கை’ என்னும் கட்டுரைத் தொகுப்புகளையும் ‘தமிழன் குரல்’ என்ற இதழை மூன்று தொகுதிகளாகவும் தொகுத்துள்ளார். கலை இலக்கியப் பேரவை விருது, பாலா விருது, அன்னம் விருது பெற்றிருக்கிறார்.

Exit mobile version