கரோனா காலம்… இல்லையில்லை கரோனா பேரிடர்க் காலம் என்று சொன்னால்தான் அந்த நாள்களின் வீரியும் சற்றும் குறையாமல் நம் நினைவுகளைச் சேதப்படுத்தும்.
ஓரளவுக்கு இயல்பு வாழ்க்கை வாழ்பவர்களுக்கே அது பேரிடர் என்றால், அடிப்படை வாழ்வாதாரம்கூட வாய்க்கப்பெறாமல் ஒவ்வொரு நாளும் பேரிடராகக் கழியும் வாழ்வு வாழ்பவர்களின் நிலை? அதுதான் கோலவிழியின் நிலை.
கரோனா பெருந்தொற்று அனைவரையும் மாதக் கணக்கில் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்திருந்த பொது முடக்க நாள்கள் அது. ஆனால், கோலவிழி அதற்குச் சில மாதங்களுக்கு முன்பாகவே அவளுடைய அப்பாவுடன் சேர்ந்து தானும் வீட்டுக்குள்ளேயே தனிமைப்பட்டுக் கிடந்தாள் என்று சொன்னால் அதுதான் சரியாக இருக்கும்.
வேறெதுவும் வேண்டாம், பள்ளிக்குப் போனால் போதும். ஒரு பாதுகாப்பு வட்டத்துக்குள் இருக்கலாம். ஒருவேளை உணவாவது நிம்மதியாகச் சாப்பிடலாம். இயற்கை உபாதைகளை வெட்டவெளியில் கழிக்க சங்கடப்பட்டுக் கொண்டே அடக்கி வைத்துக்கொண்டு இருட்டுவதற்குக் காத்திருக்கத் தேவையில்லை. சானிட்டரி நேப்கின்கள் கிடைத்துவிடுவதால் மாதவிடாய் நாள்கள் நிம்மதியாகக் கழியும்.
இப்பேரிடரிலிருந்து விடுபடும் நாளை எதிர்பார்த்து அவள் ஏங்கிக் கொண்டிருந்தாள். அதற்கு இரண்டே இரண்டு வழிகள் மட்டுமே இருந்தன. முதல் வழியைச் சொல்லி, புனித மனதுடன் நேர்மறையாகச் சிந்திக்க வேண்டும் என அவளை வலியுறுத்தலாகாது. முருகன் மரணம் அடைந்தால் மட்டுமே அவளுக்கு விடுதலை எனும் இரண்டாவது சூழ்நிலையை எதிர்நோக்கி மாதக் கணக்கில் காத்துக் கிடந்தாள்.
அதற்குள் கரோனா பெருந்தொற்று வந்து சேர்ந்தது. அவளின் நிலைமை இன்னும் மோசமாகிப் போனது.
பரவலாக ஊருக்குள் பலருக்கும் கோவிட் தொற்று ஏற்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக முதல் அலை உச்சத்தைத் தொட்டபோது, அரை வயிற்றுச் சோற்றுக்குக்கூட வழி இல்லாமல் தவிக்க நேர்ந்தது. படுத்த படுக்கையாகக் கிடந்த அவளுடைய அப்பாவுக்கு மருத்துவம் பார்க்கக்கூட முடியாமல், அவன் வலியில் துடிப்பதைப் பார்த்துக்கொண்டே அருகில் உழன்றாள். அதைவிட, இருபத்துநான்கு மணி நேரமும் கஸ்தூரி கூடவே இருக்க, எருதின் புண்ணைக் குத்தும் காகம் போல ஏதாவது ஒன்றைச் சொல்லி இவளைக் குதறிக் கொண்டே இருந்தாள்.
அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போன்று அவர்கள் வீட்டுக்குள் வந்து சேர்ந்தான் தியாகு. முருகனுக்கும் கஸ்தூரிக்கும் பொதுவான ஒரு தூரத்து உறவினனாம். இதுவரை அவள் அவனை ஒரு முறைகூடப் பார்த்ததில்லை என்பதுதான் விந்தை. அதுவும் கஸ்தூரியின் குண இயல்புக்கு அவள் எப்படி இவனை வீட்டுக்குள் நுழையவிட்டாள் என்பது அதனினும் விந்தை.
குடும்பம் என்று எதுவும் இல்லாமல், வெளியூரில் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கிறானாம். இப்பொழுது தங்க இடமில்லாமல் இங்கே வந்து ஒண்டியவன், இவளிடம் நாட்டாமை செய்யத் தொடங்கிவிட்டான். அதாவது ஆசுவாசம் அடையவே வழியில்லாமல் அப்பா, அம்மா மற்றும் இந்தத் தியாகுவால் மும்முனை தாக்குதலுக்கு ஆளாகிப் போனாள். ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் சுதந்திரமாக நடமாடவும் முடியாமல் அந்த வீடு அவளுக்கு முற்றிலுமாக வதை முகாம் போலானது.
முக்கியமாக, அவளால் நடனம் ஆடி அதைக் கைபேசியில் காணொளியாகப் பதிவுசெய்ய இயலாமல் போனது. அப்படிப் பதிவு செய்த காணொளிகளை வைத்துக்கொண்டு அவள் பெரிதாக என்ன செய்துவிடப் போகிறாள்? தானே அதைத் திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து உள்ளுக்குள்ளே சந்தோஷப்பட்டுக் கொள்வாள், அவ்வளவுதான். அதற்கு மேல் அதிகமாக இந்தக் காணொளிகளை என்ன செய்வதென்று அவளுக்குமே தெரியவில்லை.
இப்படியான அவளின் நாட்கள் நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க, ஒரு பெரும் போராட்டத்திற்குப் பிறகு முருகனின் உயிர் பிரிந்தது.
இதிலும் என்ன சோதனை என்றால், கொஞ்சம் தளர்வு ஏற்பட்டிருக்க, வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்த கஸ்தூரிக்குக் கோவிட் தொற்று ஏற்பட்டிருந்ததால், அவனுடைய உடலை அடக்கம் செய்வதில் பெரும் சிக்கல் உண்டானது. தியாகுதான் அலைந்து திரிந்து ஒரு தொண்டு நிறுவனத்தின் மூலமாக அவனுடைய உடலை அடக்கம் செய்தான். அதனால் கஸ்தூரியைப் பொறுத்தவரை அவன் இன்றியமையாதவனாகிப் போனான். அம்மாவும் மகளுமாக இருக்கும் இவர்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை அவனுடைய சொல்லே வேதமென்று ஆகிப் போனது. நாள்கள் அதன் போக்கில் போய்க் கொண்டே இருந்தன.
*
தன் எட்டாம் வகுப்பு கணக்கு நோட்டைத் தேடித் தேடிக் களைத்துப் போனாள் கோலவிழி. பழைய குப்பைகளைக் கிளறி, வீட்டைப் புரட்டிப் போட்டுவிட்டாள், ஆனால் கிடைத்தபாடில்லை. இதற்காகக் கஸ்தூரி வேறு இவளைக் கரித்துக் கொட்டிக்கொண்டிருந்தாள். அதையெல்லாம் கண்டுகொள்ள கோலவிழிக்கு அவகாசம்தான் இல்லை.
“புள்ளைகளா, கணக்கு நோட்ட பத்திரமா வெச்சுக்கோங்க. வருஷம் முடிஞ்சதும் எடைக்குப் போட்றாதீங்க. பெரிய கிளாஸ் போனாலும் இது உபயோகமா இருக்கும்” என்பார் அவளுடைய கணித ஆசிரியர் அலமேலு. அவரைப் போலவே ஒரு கணித ஆசிரியர் ஆகவேண்டும் என்பது கோலவிழியின் ஆசையாக இருந்தது.
அவர் சொன்ன வார்த்தையின் பொருட்டே அந்த நோட்டை எடைக்குப் போடாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்தாள். ஆனால், அவள் இப்பொழுது அதைத் தேடுவது வேறொரு காரணத்துக்காக. அது கிடைக்காமல் ஆட்டம் காட்ட, மனம் சோர்ந்து போனது.
முருகன் இறந்த பிறகு வீட்டைச் சுத்தம் செய்து, அவன் படுத்திருந்த பாய், படுக்கையுடன் அவனுடைய பழைய பொருள்களையும் வீட்டின் பின்புறம் போட்டுக் கொளுத்தினான் தியாகு.
அத்துடன் இந்த நோட்டும் எரிந்துபோய்விட்டதோ என்கிற அச்சம் தோன்ற அந்த இடத்தில் போய்ப் பார்த்தாள். பாதி எரிந்தும் பாதி எரியாமலும் கிடந்தது. இதயத் துடிப்பு எகிற, ஒரு குச்சியை வைத்துக் கிளறிப் பார்த்தாள். அரைகுறையாக எரிந்த நிலையில் அவளுடைய அந்த நோட்டுப் புத்தகம் குப்பையுடன் குப்பையாகக் கிடந்தது. வேகமாக அதை எடுத்துப் புரட்டினாள். மணி மணியான கையெழுத்தில் அவள் போட்டு வைத்திருந்த கணக்குகள் அவளைப் பார்த்து உதடு பிதுக்கின. கல்விதான் பறிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அவள் கற்ற கல்வியின் நினைவுகளைக் கூடவா அழிக்க வேண்டும்? கண்ணீர் பெருகியது.
அந்த நோட்டின் பின் அட்டையின் உள்பக்கமாக அவள் தேடிய அஞ்சலி அக்காவின் கைபேசி எண் கிடைத்தது.
அதன் பின்னும்கூட அவளின் பதற்றம் குறைந்தபாடில்லை. ‘இந்த நம்பர அந்தக்கா மாத்தாம வெச்சிருக்கணும், சாமி” என அவள் அறிந்த அறியாத தெரிந்த தெரியாத அனைத்து மத கடவுளருக்கும் வேண்டுதல் வைத்தாள்.
கஸ்தூரி வைத்திருக்கும் பட்டன் போனை இவளால் தொடக்கூட முடியாது. ஜாக்கெட்டின் உள்ளோ அல்லது இடுப்பிலோ சொருகி வைத்திருப்பாள். அதுவும் இப்பொழுது இருக்கும் சூழலில் போனை மகள் கண்ணில் காண்பிக்கவே மாட்டாள்.
அப்படியே அவள் கவனத்தைத் திசை திருப்பி எடுத்துப் பேசினாலும், சிக்கலில் போய் முடியும். அந்த போனில் பாதி பட்டன்கள் வேலையே செய்யாது.
கஸ்தூரிக்குப் பெயர்களைப் பதிவு செய்து வைத்து உபயோகிக்கத் தெரியாது. எண்களை மட்டுமே கவனத்தில் வைத்திருப்பாள். குறிப்பாகக் கடைசி இரண்டு எண்கள். புதிய எண் கண்களில் பட்டால் ஒரே நொடியில் கண்டுகொள்வாள். அழைத்துவிட்டு அஞ்சலி அக்காவின் எண்ணை டெலீட் செய்ய முடியாமல் போனால், குற்றுயிரும் கொலை உயிருமாகிப் போவது உறுதி.
அவளுடைய, அதாவது அவளுடைய அப்பாவின் கைபேசி இப்பொழுது தியாகுவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவள் சொன்னதைச் சொன்னபடி கேட்கும் அந்த விளக்கு பூதத்தை எப்படியாவது கைப்பற்றி அந்த எண்ணுக்கு அழைப்பதற்கான தக்க நேரத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கத் தொடங்கினாள்.
புதிய அரசவையின் பதவி ஏற்பு விழா நேரலையாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதையும் மற்றொரு திரைப்படத்தையும் சேனலை மாற்றி மாற்றிப் பார்த்துக் கொண்டிருந்தாள் கஸ்தூரி.
மற்றொரு பக்கம் நீட்டிப் படுத்தபடி கைபேசியைக் குடைந்துகொண்டிருந்தான் தியாகு. அவளுடைய அப்பாவின் கைபேசியை அவன் கையில் பார்க்கும்போது கோலவிழிக்கு அருவருப்பாக இருந்தது . அப்படியே பெரிய கல்லாகத் தூக்கிப் போட்டு அவன் மண்டையை உடைத்தால்தான் என்ன என்று உள்ளுக்குள்ளே வன்மம் பொங்கியது.
அவனையும் அவளுடைய அம்மாவையும் சேர்த்துவைத்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் பேசும் அசிங்கப் பேச்சு மட்டும் காரணமல்ல, அது உண்மைதான் என்பது போல் அவள் கண்ட காட்சிகளும், அதற்குத் தீர்வாக அவர்கள் எடுத்திருக்கும் விபரீத முடிவும் அவளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன.
அப்படி இப்படிப் பகல் நேரத்தைத் தள்ளிவிட்டு, மாலை இருள் பரவத் தொடங்கிய நேரம் வீட்டை விட்டு எங்கோ கிளம்பிப் போனான் தியாகு.
“ஏய் வெசம், சங்கரி அக்கா வீட்டுல இன்னைக்கு திதி கொடுத்தாங்களாம். நிறைய பாத்திரம் கிடக்கு, வந்து தொலக்கி குடுன்னு போன் பண்ணாங்க. நீ போயி கழுவி வெச்சிட்டு வா. பிரியாணி வாங்கிட்டு வரச் சொல்லி இருக்கேன். வந்து கொட்டிக்க” என அவளைப் பணித்தாள் கஸ்தூரி.
அப்படி ஓர் எரிச்சல் மூண்டது. “போம்மா, வேற வேல இல்ல. உனக்கு வேணுனா நீ போ” என மறுத்தாள்.
“எனக்கு மட்டும் ஒடம்பு கல்லுலயா இருக்கு? ஒரு வருஷத்துக்கு மேலா உன் அப்பன் படுக்கையிலேயே கிடந்து எனக்குக் கடனை இழுத்துவிட்டுட்டுப் போய்ச் சேர்ந்துட்டான். திரும்ப அடைக்க வேணாம்? கடன் குடுத்தவங்க வேல சொல்றாங்க. செஞ்சா என்ன குடியா முழுகிடும்? போன்னு சொன்னா போடி”
“முடியாது போம்மா” என இருவருக்குள்ளும் வாக்குவாதம் மூண்டது.
இப்படியே நேரம் கடக்க, இரண்டு குவாட்டர் பாட்டில் மற்றும் பிரியாணி பொட்டலங்களுடன் சிறிது நேரத்தில் வீடு திரும்பினான் தியாகு. அவளை அங்கே கண்டதும் அவனுடைய முகம் இறுக, நொடிக்குள் அதை அவன் பின்னால் மறைத்தாலும் அவளுடைய பார்வையில் பட்டுவிட்டது.
“ஏய்… என்ன இப்படி வாயாடிட்டு இருக்க. அதான் சொல்றாங்க இல்ல. கிளம்பிப் போடி” எனக் கஸ்தூரிக்கு வக்காலத்து வாங்கினான் தியாகு.
இப்படி இவளை அப்புறப்படுத்திவிட்டு என்ன செய்யப் போகிறார்கள் என்பது புரிய, அங்கிருந்து கிளம்பினாள். இதுபோல தற்காலிகமாக எங்கோ அனுப்புவதைவிட, அவளை நிரந்தரமாக அப்புறப்படுத்தத்தானே அவர்கள் இருவருமாகச் சதித்திட்டம் தீட்டியிருக்கின்றனர். எப்பாடுபட்டாவது அதை உடைத்தே தீரவேண்டும் என மனதுக்குள்ளேயே சூளுரைத்தபடி நடக்கத் தொடங்கினாள்.
அங்கே போய்ப் பார்த்தால், சந்திரா அக்காவின் வீட்டுப் புழக்கடை கிணற்றடியில் அண்டாவும் குண்டானுமாகப் பிசுக்கு படிந்த ஒரு சூளை பாத்திரம் இவளுக்காகக் காத்திருந்தது. அண்ணன், தம்பி, பங்காளி மக்கள் என இருபத்தைந்து, முப்பதுபேர் கூடும் குடும்பம் அது.
இந்த மோசமான காலக்கட்டத்தில்கூட இதுபோல் கூடி கும்மி அடிப்பவர்களை என்ன சொல்ல? கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அனைத்தையும் துலக்கி முடித்துவிட்டு, “அக்கா… சந்திரா அக்கா, முடிச்சிட்டேன்” எனப் பின் வாசல் கதவருகில் நின்றபடி குரல் கொடுத்தாள்.
அங்கே வந்த சந்திரா இருநூறு ரூபாயை அவளிடம் நீட்டினாள். அவளின் மற்றொரு கையில் இருந்த கைபேசியைப் பார்த்தபடி அதை வாங்கிக்கொண்டவளுக்கு ஓர் எண்ணம் தோன்றியது.
மேலே யோசிக்காமல், “அக்கா, உங்க போன கொஞ்சம் குடுக்கறீங்களா? ஃபிரெண்டுக்குப் பேசிட்டுக் குடுக்கறேன்” எனக் கேட்டுப் பார்த்தாள்.
“சரிதான், உம்புத்தி தெரிஞ்சுதான் உங்கம்மா முன்னாலேயே சொல்லிவெச்சா போலிருக்கு” என இகழ்ச்சியாக இழுத்தாள் சந்திரா.
“என்னக்கா… எங்கம்மா என்ன சொன்னாங்க”
“ஆங்… போன் கேட்டா குடுக்காதீங்கன்னு சொன்னா. உனக்குக் கல்யாணத்துக்கு பேசி வெச்சிருக்காங்களாமே! என்ன, அந்த அஞ்சலி மாதிரி எவனையாவது இழுத்துட்டு ஓடலாம்னு பிளான் பண்றியா?”
அவள் பேசிய பேச்சில் உள்ளுக்குள்ளே சுருக்கென்றது.
“அப்படிலாம் எதுவும் இல்லக்கா” என உள்ளே போன குரலில் சொல்லிவிட்டு, வேகமாக அங்கிருந்து கிளம்பினாள்.
வீட்டிற்கு வந்து பார்த்தால், கஸ்தூரியும் தியாகுவும் பிரியாணியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இருவருமே போதையில் இருப்பது புரிந்தது.
“ஏய், இத சாப்டு போய் படுடீ” என அவளுக்காக ஏற்கெனவே தயாராகப் போட்டு வைத்திருந்த பிரியணி தட்டை அவளை நோக்கித் தள்ளினாள் கஸ்தூரி.
செய்த வேலையில் பசி வயிற்றைக் கிள்ள, சூடு சுரணையைத் தள்ளிவைத்து அதைச் சாப்பிட்டு முடித்து அமைதியாகப் போய் படுத்துவிட்டாள்.
நேரம் போய்க்கொண்டே இருந்தது. உறக்கம் வரவில்லை. சந்தடி அடங்கியிருக்க, துளி அசைவுகூட இல்லாமல் படுத்திருந்தவள் மெல்ல எழுந்து பார்வையைச் சுழலவிட்டாள். மற்ற இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, மெதுவாக நகர்ந்து தியாகுவின் தலைமாட்டில் துழாவினாள். கைபேசி கைக்குத் தட்டுப்பட்டது.
அதை எடுத்துக்கொண்டு பூனை போல அங்கிருந்து நழுவி ஆளரவமற்ற இடத்துக்கு வந்து அதை உயிர்ப்பித்தாள்.
மனப்பாடம் செய்து வைத்திருந்த அந்தப் பத்து எண்களை அழுத்தி டயல் செய்தாள். அந்தப் பக்கம் ரிங் போய்க் கொண்டிருக்க அவளின் இதயம் வெளியில் குதித்து துடித்தது.
முழுவதுமாக ஒருமுறை அடித்து ஓய்ந்து இரண்டாம் முறை அழைத்த பிறகுதான் எதிர்முனை உயிர் பெற்று, “ஹலோ… யாரு?” என்றது. அஞ்சலியின் குரல் கேட்டு போன உயிர் திரும்ப வந்தது கோலவிழிக்கு.
“நல்லவேளக்கா, போன எடுத்தியே! எப்படிக்கா இருக்க?” என்றாள் குரல் நடுங்க.
“ஐய, நேரங்கெட்ட நேரத்துல போன் பண்ணிட்டு, குசலம் விசாரிக்குற. யாருமா நீ” என அஞ்சலி சொல்லிக் கொண்டிருக்கும்போதே “யாருடி இந்நேரத்துல” என்ற அவள் கணவனின் குரல் கேட்டது.
“உன் லவ்வுக்குப் புறா வேல பார்த்த என்ன மறந்துட்ட பார்த்தியாக்கா, நீ. என் குரல் உனக்குத் தெரியல?” என்றாள் அழுகையை அடக்கி.
“அட, அம்மு… நீயா? என்ன இந்த நேரத்துல போன் பண்ணிருக்க?”
“அக்கா, உயிர் போகுற அவசரம். என்ன எப்படியாவது காப்பாத்துக்கா?”
“ஏய்… என்னடி ஒளறிட்டு இருக்க?”
“ஐயோ அக்கா ஒளறலாம் இல்ல, நம்மூரு பஸ் ஸ்டாண்ட் கிட்ட நிக்கறேன். வண்டி எடுத்துட்டு வந்து ராஜா அண்ணனக் கூட்டிட்டுப் போகச் சொல்லுக்கா. உனக்குப் புண்ணியமா போகும்.”
“அடியேய், நடு ஜாமத்துல போன் பண்ணி என்ன ஏன்டீ டென்சன் பண்ற? என்னன்னு புரியற மாதிரி சொல்லு.”
“அக்கா, இப்ப எதுவும் கேக்காத. அண்ணன அனுப்பு. எல்லாத்தையும் நேர்ல வந்து சொல்றேன். இல்லனு வை” என்று கட்டளையாகச் சொல்லி அழைப்பைத் துண்டித்துவிட்டு, அவர்கள் ஊரின் பேருந்து நிறுத்தத்தின் அருகில் இருக்கும் புளிய மரத்தின் பின்னால் மறைந்து நின்றாள்.
மூன்று மணி நேரம் கடந்து அவளின் வாழ்வுக்கான வெளிச்சம் தென்பட்டது. இரு சக்கர வாகனத்தில் அந்த இடம் நோக்கி வந்துகொண்டிருந்தான் ராஜா.
ஓர் ஆசுவாசம் தோன்ற மறைவிடத்திலிருந்து வெளியேறி அவள் சாலைக்கு வர அவளுக்கு அருகில் வந்து தன் வாகனத்தை நிறுத்தி, “அராத்து புள்ள, என்ன வேல செஞ்சு வெச்சிருக்க? எங்கள பார்த்தாக்க எப்படித் தெரியுது உனக்கு? இப்படி ஊரு விட்டு ஊரு வரதெல்லாம் அவ்வளவு சுளு இல்ல. ஒரு வேள நான் வராம போயிருந்தா என்ன செஞ்சிருப்ப?” எனப் படபடத்தான்.
“நீ கண்டிப்பா வருவன்னு எனக்குதான் தெரியுமே” என்றாள் கோலவிழி கண்களில் கண்ணீர் துளிர்க்க.
“லூசு புள்ள, ஏறி உக்காரு. கிளம்பலாம்” என்றான் ராஜா.
ஒரே இடத்தில் தேங்கி நின்ற அவளின் வாழ்க்கை பெருமழைக்குப் பிறகான நதிபோலப் பெருகி ஓடத் தொடங்கியது.
(தொடரும்)
படைப்பாளர்
எழுத்தாளர் கிருஷ்ணப்பிரியா நாராயணன். தமிழ் நாவலாசிரியர் மற்றும் பதிப்பாளர். சென்னையில் வசிக்கிறார். சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர். இவரது பதினாறு நாவல்கள் புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் வலைதளத்தில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதி வருகிறார். சிறாருக்கும்
நூல்களும் எழுதி வருகிறார்.


