Site icon Her Stories

ஆப்பிரிக்காவின் மண முறைகள்

https://www.weddingwire.com/wedding-ideas/african-wedding-guest

ஒன்றுக்கும் மேற்பட்ட  வாழ்க்கைத் துணை கொண்டிருத்தலைக் குறிக்கும் பலதுணை மணம், திருமணம் எனும் நிறுவனத்துக்குள் மதம் சார்ந்து பேணப்படும் ஒரு பண்டைய திருமண முறையாகும். இவை ஓரினச்சேர்க்கை மணங்களை பொதுவாக உள்ளடக்கியதில்லை. இவ்வாறான மணங்கள் இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுக்க சட்டரீதியாக தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவிலும், ஈரான், எகிப்து, சவுதி அரேபியா, கத்தார், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகளிலும் இந்தியாவின் சில முஸ்லிம் சமூகங்களிலும் பல தார திருமணங்கள் சட்டரீதியாக செல்லுபடியாகும். இருப்பினும் இந்தியாவின் ஆதிக்குடி சமூகங்களிலும் சில இந்து கிராமிய சமுதாயங்களிலும் இம்முறை நிலவி வருகிறது.

பலதார மணங்கள் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், இவ்வகை மணம், பலதுணை மணம் (Polygamy) என்பதே இரு பாலருக்கும் பொருத்தமாக இருக்கும்.

இதற்கு மாறாக நவீன காலங்களில் Polyamory எனப்படுவது திருமண உறவுகள் அன்றி பல துணைகளுடனான உறவுமுறையாகும். இவற்றில் மதத் தலையீடுகளோ சம்பிரதாயங்களோ இல்லை. ஒத்த பாலின உறவுகளும் இதில் அடங்கும். Polyamory உறவுமுறைகளில் பல வகைகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Polygamy எனப்படும் பலதுணை திருமணங்கள் இருவகைப்படும்.
ஒன்று Polygyny – ஒரு ஆண் பல பெண்களை திருமணம் செய்வது.
பண்டைய சீன, அரபு மற்றும் இந்து கலாச்சாரங்களில் இவ்வகை மணம் அதிகம் காணப்பட்டாலும், ஆப்பிரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் இந்தியாவின் ஒரு சில சமூகங்களில்  இன்றும்  பின்பற்றப்படுகிறது.

மற்றையது Polyandry, ஒரு பெண் பல ஆண்களை மணப்பது. மிகவும் அரிதாக காணப்பட்டாலும், சீனாவின் மொசுயோ ஆதிக்குடிகள் தாய்வழி சமூகத்தை பேணி வருகின்றமையால், அவர்களிடையே இவ்வகை மணங்கள் வழக்கமாக உள்ளன. இன்றும் தாய் வழிச் சமூகங்கள் உண்டா என்று ஆச்சரியமாகத்தான் உள்ளது. அடுத்து வரும் அத்தியாயங்களில் இதை விரிவாக பார்ப்போம்.

பலதாரமணங்கள் பற்றி தமிழர் இதிகாசங்களிலும் பண்டைய கால வரலாற்று குறிப்புக்களிலும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆப்பிரிக்க நாடுகளில்  மணங்களும், ஆணாதிக்க சிந்தனை கொண்ட கலாசார மரபுகளும் ஒரு சில விடயங்களில் தமிழரின் பண்டைய மதம் சார்ந்த மண வரலாறுகளோடு ஒத்துப்போகின்றன.

ஆப்பிரிக்காவில் திருமணம், அக்கண்டம் முழுவதும் பன்முகத்தன்மை கொண்ட பல்வேறு வகையான தனித்துவமான பண்பாடுகளின் மரபுகள், மதங்கள் மற்றும் பொருளாதார சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கிறது. இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் மரபுசார் பழக்கவழக்கங்கள் வட ஆப்பிரிக்காவிலும், மேற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகளிலும் திருமண நிறுவனத்தை வடிவமைத்துள்ளன.

https://face2faceafrica.com/article/3-ways-marriages-have-been-shaped-by-colonization-in-sub-saharan-africa/3

கிறிஸ்தவ மதம் பலதார திருமணங்களை அனுமதிக்காதபோதும், ஆப்பிரிக்காவில் மதம் மாறிய கிறிஸ்தவர்கள் பல தார மணங்கள் புரிந்தனர். கிறிஸ்தவத்தின் வருகைக்கு முன் விவாகரத்துகள் அங்கு சாதாரண விடயங்களாகவே பார்க்கப்பட்டன.  நைஜீரியா, சூடான், தென்னாப்பிரிக்கா, உகண்டா, கென்யா, ருவாண்டா போன்ற நாடுகளைச் சார்ந்த ஏறத்தாழ 30 ஆதிவாசி சமூகங்களில் ஓரினச் சேர்க்கை திருமணங்கள் பரவலாக நடைபெற்று வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய ஆண்டுகளில், நவீன வாழ்க்கை, தொழில் விருத்தி என்பன  ஆப்பிரிக்க திருமணங்கள் மற்றும் ஆண், பெண் இரு பாலின பாத்திரப் படைப்புகளில் (gender roles) மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளன. ஆப்பிரிக்க திருமண முறைகளில்  மணமகன் அல்லது அவரது குடும்பத்தினரிடமிருந்து மணமகளுக்கு பண்டங்கள் பரிமாற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இது ஒரு  பெண், ஒரு சமூகக் குழுவிலிருந்து மற்றொன்றுக்கு செல்வதை இது குறிக்கிறது.

ஆப்பிரிக்காவில் காணப்படும் பல ஆயிரக்கணக்கான இனக்குழுக்கள் மற்றும் பண்பாடுகளைப் போலவே திருமண நிறுவனமும் பரவலாக வேறுபடுகிறது. சில பண்பாடுகள் சில வகையான திருமணங்களைத் தடை செய்தாலும், அனைத்து மரபுகளும் உறவினர் உறவுகளை மேம்படுத்தவும், ஒழுங்கான பரிமாற்றத்தின் மூலம் நிலவுடைமையை பாதுகாக்கவும் ஒரு சமூக ஒழுங்கை உருவாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

துணை-சஹாரா ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியில் பலதார மணம் பொதுவானது என்றாலும், ஆண்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது. பலதார மணம் ஒரு குடும்பத்தை விரிவுபடுத்துகிறது. அக்குடும்பத்தின் வேலை, வாழ்க்கை மற்றும் சம்பாதிக்கும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. குடும்பத் தலைவரின் அதிகாரத்தையும் அந்தஸ்தையும் நிரூபிக்கிறது என கருதப்படுகிறது. 

ஆப்பிரிக்கர்கள் நான்கு முக்கிய வகை திருமணங்களை கடைபிடித்தனர். பொதுவான வகை திருமணம் நெருங்கிய உறவினர்களுக்கிடையேயான உறவுகளை உள்ளடக்கியது. ஒருவர் தனது மருமகள், அவரது உறவினர் அல்லது அவரது ஒன்றுவிட்ட சகோதரி அல்லது பேத்தியை திருமணம் செய்து கொள்ளலாம். இரண்டாவது வகை, சம்மந்தி குடும்பங்களுக்கிடையேயான திருமணங்கள். முந்தைய திருமணங்களில் தொடர்புடையவர்களாக இருப்பவர்களும் இதில் அடங்குவர். ஒரு ஆண், தன் மனைவியின் சகோதரனின் மகளையும் மணந்து கொள்ளலாம்.

‘லெவிரேட்’ (levirate) என்று அழைக்கப்படும் மூன்றாவது வகை, ஒரு ஆண், தனது சகோதரன் மரணிக்கும்  பட்சத்தில், கணவனை இழந்த அப்பெண்ணை  திருமணம் செய்யும் போது ஏற்படுகிறது. இறுதியாக, ‘சோரோரேட்’ (sororate)  என்பது ஒருவர்  தனது மனைவியின் இளைய சகோதரியை, தனது மனைவி இறந்த பிறகு அல்லது அவள் உயிருடன் இருக்கும்போது திருமணம் செய்துகொள்வது.

நைஜீரிய திருமணத் தம்பதி, pic: https://www.brides.com/nigerian-wedding-traditions-5075254

மத்திய நைஜீரியாவின் பெண்கள் வெவ்வேறு உறவினர் குழுக்களைச் சேர்ந்த பல ஆண்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு முறையும் அவர்கள் ஒரு புதிய கணவரிடம் செல்லும்போதோ, அல்லது முந்தைய ஒருவரிடம் திரும்பும்போதோ அவர்கள் தங்களுடைய குடியிருப்பை மாற்றுகிறார்கள். இளம் பிள்ளைகள் முதலில் தங்கள் தாயை அண்டி வாழ்வார்கள். ஆனால் அவர்கள் வயதாகும்போது, ​​அவர்கள் குடும்பத்தின் ஒரு ஆண் உறுப்பினருடன் இணைகிறார்கள். அந்த ஆண் அவர்களின் தந்தை, தாயின் சகோதரர் அல்லது அவர்களின் தாயின் மற்ற கணவர்களில் ஒருவராக இருக்கலாம். மற்ற நைஜீரிய குழுக்கள் திருமணம் செய்து கொள்ளும் ஆண், தனது மணமகளின் குடும்பத்தில் உள்ள மற்றொரு ஆணுக்குத் தன் சகோதரிகளில் ஒருவரைத் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றன. இப்படியே இரு குடும்பங்களும் திருமணத்தின் மூலம் பெண்களை மாற்றிக் கொள்கின்றன.

ஆப்பிரிக்க இஸ்லாமியத் திருமணம்

இஸ்லாமிய திருமணம் வட ஆப்பிரிக்காவில் பாலினத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், குடும்பங்களை ஒழுங்கமைப்பதற்கும் சரியான வழியாக திருமணத்தை ஊக்குவிக்கிறது. பல குழுக்கள் உறவினர்களுக்கிடையேயான திருமணங்களை சிறந்ததாக கருதுகின்றன. குடும்ப உறவுகளை வலுப்படுத்தப்படுவதோடு, நீட்டிக்கப்பட்ட குடும்பத்துக்குள் சொத்து நிலைப்பதால் இதை ஆதரிக்கின்றன.

குடும்பங்கள் திருமணங்களை ஏற்பாடு செய்யும்போது, இறுதி முடிவு குடும்பத்தின் மூத்த ஆண்களிடமிருந்து வருகிறது.  திருமண விழா பொதுவாக மணமகன் வீட்டில் நடைபெறும். இஸ்லாத்தின் புனித நூலான குர்ஆனை அடிப்படையாகக் கொண்ட இஸ்லாமிய சட்டம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் மற்றும் விவாகரத்தில் வெவ்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் வழங்குகிறது. விவாகரத்துக்கு பெண் சம்மதித்தாலும் இல்லாவிட்டாலும், ஒரு ஆண் தன் மனைவியை எப்போது வேண்டுமானாலும் விவாகரத்து செய்யலாம். ஒரு பெண் சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே கணவனை விவாகரத்து செய்ய முடியும். பலதார மணம் என்பது ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளைக் கொண்ட ஆண்களுக்கு மட்டுமே. பெண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களை வைத்துக் கொள்ள அனுமதி இல்லை. பலதார மணம் வட ஆப்பிரிக்கர்களிடையே பரந்துபட்டி இருந்ததில்லை. இந்த நடைமுறை இன்றைய காலகட்டத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது.

ஆப்பிரிக்காவின் வளர்ந்து வரும் நகரங்களில் உள்ள நவீன வாழ்க்கை, மக்களை அவர்களின் பாரம்பரிய கிராமப்புற உறவு குழுக்களில் இருந்து விலக்கியுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள ஆண்களும் பெண்களும் திருமணத்தை ஏற்பாடு செய்வதில் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை வலியுறுத்துவது அதிகமாகி வருகிறது.

இருப்பினும் அவர்கள் கிராமப்புறங்களில் உள்ள தங்கள் குடும்பத்தினரிடம் ஒப்புதல் பெறுகின்றனர். ஆபிரிக்கப் பெண்களுக்கு இப்போது வேலைகள் மற்றும் கல்விக்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், நடுத்தர வயதை எட்டும்போது திருமணம் செய்துகொள்வதும், குறைவான குழந்தைகளைப் பெறுவதும் வழக்கமாக உள்ளது. நவீனமயமாக்கல் திருமண அமைப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஆப்பிரிக்காவில் உள்ள சமூக அமைப்பின் பிற வடிவங்களைப் போலவே, திருமண முறைகளும் மாறி வருகின்றன.

தொடரும்…

படைப்பாளர்

அஞ்சனா

பத்திரிகைத் துறையில் பட்டயப் படிப்பு முடித்து ஊடகவியலாளராக இலங்கையிலும், இங்கிலாந்து சட்டத் துறையிலும் பணியாற்றியுள்ளார். தற்போது கணக்கியல் துறையில் பணியாற்றிவரும் இவர்,  MSc. Public Policy பயின்று வருகிறார். லண்டனில் புத்தக விமர்சனங்கள் மற்றும் பெண்ணிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

Exit mobile version