கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் தி டைம் – GOAT – என்கிற பட்டத்துக்கு முற்றிலும் தகுதியானவர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வீரர் சிமோன் பைல்ஸ்.
ஒலிம்பிக் பதக்கங்களே பத்துக்கும் மேலே. முப்பதுக்கும் மேற்பட்ட உலகளாவிய பதங்கங்கள். அமெரிக்க இளைய தலைமுறையினர் சிமோனைத் தங்கள் முன்மாதிரியாகக் கொண்டாட அவர் பெற்ற வெற்றிகள் மட்டுமே காரணமில்லை. 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் பாதியில் வெளியேறியதும் ஒரு காரணம். காயம் எதுவும் ஏற்படாமல் திடீரெனத் தன் அணியினரைக் கைவிட்டுப் பையைத் தூக்கிக் கொண்டு கிளம்பிப் போன ஒருவரையா முன்மாதிரியாகக் கொள்வார்கள்? ஆம். வெற்றி மட்டுமே வாழ்க்கையில்லையே.
2020ஆம் ஆண்டு. ஜிம்னாஸ்டிக் போட்டி அரங்கம். டோக்கியோ கோடைக்கால ஒலிம்பிக்ஸ் நடந்து கொண்டிருந்தது. கோவிட் கட்டுப்பாடுகளால் அரங்கம் நிறைந்திருக்கவில்லை எனினும், ஊடகத்தினர் கூடியிருந்தனர். நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. தொலைக்காட்சி மூலம் பல கோடிப் பேர் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பல தங்கப் பதங்கங்களை வெல்வார் என்கிற எதிர்பார்ப்புடன் சிமோன் பைல்ஸ் கலந்து கொண்டார். ஓடி வந்து ஜிம்னாஸ்டிக் கட்டையின் மீது ஏறியவர், அதே வேகத்தில் ஒரு பல்டி அடித்துத் தரையிறங்கிவிட்டார்.
“இவர், இவ்வளவு மோசமாக ஃபர்பார்ம் செய்வதை நான் என்றுமே பார்த்ததில்லை” என்றார் வர்ணனையாளர். அனைவருமே அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் சிமோனைப் பார்க்கிறார்கள். மேடையை விட்டு இறங்கியவர், வெளியே ஓடிப் போய்விடலாம் என்றுதான் எண்ணினார். யாரையும் பார்க்கவோ, யாரும் தன்னைப் பார்ப்பதையோ விரும்பவில்லை. அமைதியாக அணியினருடன் வந்து அமர்ந்தார். ஆறுதலாக அவரைச் சூழ்ந்து நின்றனர் அணியின் மற்ற வீரர்கள். என்ன நடந்தது என்று விசாரித்தனர்.
ஓரிரண்டு நிமிடங்கள்தான் இருக்கும். பயிற்சியாளர்கள், அணி வீரர்கள் நடுவில் இருள் கவிந்த முகத்துடன் நின்று கொண்டிருந்த சிமோனின் உதடுகள் “நான் முட்டாள்தனமாக எதையும் செய்ய விரும்பவில்லை” என்று முணுமுணுத்தன. போட்டியிலிருந்து விலக முடிவெடுத்திருப்பதை அவர்களிடம் சொல்லிவிட்டு பையை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டார். எந்தக் காயமும் இன்றி, இப்படித் திடீரென்று வெளியேறுவதை போட்டி நிர்வாகிகள், வர்ணனையாளர்கள், மீடியா குழுவினர் குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
எல்லாருக்குமே கூட, தினசரி வாழ்வில் பரபரப்பான காலை நேரத்தில் நான்கைந்து வேலைகளைச் செய்யும்போது மன அழுத்தத்தில் இப்படி மூளை சில நொடிகள் வெற்றிடம் போல் ஆவதுண்டு. குளியலறை வாசலிலோ, பைக், கார், வீட்டு சாவிகள் மாட்டி இருக்கும் பலகையின் எதிரிலோ, ஆடைகளை அடுக்கி வைத்திருக்கும் அலமாரியைத் திறந்து வைத்துக் கொண்டோ எதற்காக இங்கே நிற்கிறோம் என்று புரியாமல் வெறித்த பார்வையுடன் நின்றிருந்த அனுபவம் நம் அனைவருக்குமே இருக்கும். ஜிம்னாஸ்டிக் துறையில் இதை டிவிஸ்டிஸ் (twisties) என்பார்கள்.
ஜிம்னாஸ்டிக் கட்டையில் இருந்து மேலே எழும்பி உடலை வலது புறம் திருப்பி மூன்று முறை சுழலப்போகிறோம் என்று மூளையும் மனமும் இணைந்து யோசித்துச் செய்தால்தான் இவ்விளையாட்டைச் சரியாகச் செய்யமுடியும். மூளை ஒத்துழைக்கும்போதே இது ஆபத்து விளைவிக்கக் கூடிய விளையாட்டுதான். விபத்தினால் கை, கால் முறிவதெல்லாம் சாதாரணம். கால மாற்றத்தில் ஆபத்துகளைக் குறைக்க முடிகிறது. விபத்தே இல்லாமல் விளையாட்டென்பது சாத்தியம் இல்லை.
மூளையும் உடலும் இணைந்து செயல்படவில்லை எனில் ஆபத்து கூடுகிறது. தரையிறங்கும் போது, காலைத் தரையில் வைப்பதற்குப் பதிலாகத் தலையை ஊன்றிக் கழுத்து உடைந்தால் மரணமும் நிகழலாம்.
சிமோன் ஜிம்னாஸ்டிக் கட்டையிலிருந்து மேலெழும்பிக் காற்றில் இருந்தபோது உடலுக்கும் மனத்துக்கும் ஒருங்கிணைப்பின்மையை உணர்ந்தார். பல்லாயிரம் முறை செய்த பயிற்சியினாலோ என்னவோ பாதுகாப்பாகத் தரையில் நின்றுவிட்டார். மேலே சுற்றிச் சுழன்று சாகசம் செய்யாமல் போனாலும் விபத்து ஏற்படவில்லை. அடுத்த வாய்ப்பில் மீண்டும் அவர் தொடரலாம். அதைச் செய்ய சிமோன் விரும்பவில்லை. வெளியேறிவிட்டார்.
செய்தியாளர்கள் சந்திப்பிலும், “வெற்றி முக்கியம்தான். ஆனால், சில நேரங்களில் நாம், நமக்கு முக்கியத்துவம் அளித்து போட்டிகளில் கலந்து கொள்ளாமல் ஓய்வு கொடுப்பதும் முக்கியம்” என்றே தெரிவித்தார். பிளான்க்காக, செவிடானதைப் போல உணர்ந்ததாகப் பின்னர் தெரிவித்தார்.
மற்றொரு அமெரிக்க வீரர் கெர்ரி ஸ்ட்ரங், காலில் அடிபட்ட பிறகும் விடாமல் மீண்டும் விளையாடிய நிகழ்வு ஒலிம்பிக் வரலாற்றில் புகழ்பெற்றது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்வு அது. அதைப் பலர் மீண்டும் நினைவுகூர்ந்து சிமோனை வசைபாடத் தொடங்கினர். கெர்ரி காலை நொண்டிக் கொண்டே மீண்டும் சென்று விளையாட்டைத் தொடர்ந்ததும், வால்ட்டில் இருந்து குதித்த பிறகு காலை உடைத்துக் கொண்டு கட்டுப் போட்ட கால்களுடன், பயிற்சியாளர் அவரைத் தூக்கிக் கொண்டு மேடையேறிய வீடியோவும் மீண்டும் வைரலானது.
நன்றாக இருக்கும் சிமோன் திமிரில் வெளியேறிவிட்டார். தோற்றுப்போனவர். பயந்தாங்கொள்ளி. தேசத்துரோகி. இப்படியெல்லாம் தீவிரமாக ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
ஒரு வேளை காயம் ஏற்பட்டிருந்தால் சிமோனும் மீண்டும் முயன்றிருப்பாரோ என்னவோ. ஆனால் மனம் ஒத்துழைக்கவில்லை எனில் வீம்புக்கு முயல்வது முட்டாள்தனமானது என்கிற தன் கருத்தில் இருந்து பின்வாங்கவில்லை சிமோன். கோவிட் பெருந்தொற்றினால் அந்த இரு வருடங்களும் மன அழுத்தத்தில்தான் இருந்தார் அவர். அதற்கு முந்தைய வருடம் அமெரிக்க தேசிய ஜிம்னாஸ்டிக் அமைப்பின் மருத்துவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானவர்களில் தானும் ஒருவர் என்று வெளிப்படையாக அறிவித்திருந்தார். இருபதாண்டுகளுக்கும் மேலாக 500க்கும் மேற்பட்டோர் அந்த மருத்துவரால் பாதிக்கப்பட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்தனர். அந்த வழக்கு பற்றிய தகவல்களும் செய்திகளும் கூட மன உளைச்சலைத் தருபவைதான்.
குறிப்பிட்ட காரணம் ஏதும் இன்றியும் இப்படி நிகழும். அதை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து விடுபடும் முயற்சிகளில் ஈடுபடுவதுதான் புத்திசாலித்தனம். இரண்டாண்டுகள் மருத்துவ சிகிச்சையோடு தொடர்ந்து மன நலத்தைப் பார்த்துக் கொள்வது முக்கியம் என்று பரப்புரையும் செய்து கொண்டிருந்தார் சிமோன்.
ஒஹையோவில் பிறந்தவர் (1997) சிமோன். பெற்றோர் இருவருமே குடிநோயாளிகள். போதைக்கு அடிமையானவர்கள். அப்பா பிரிந்து சென்றுவிட்டார். அம்மாவும் பார்த்துக் கொள்ள முடியாமல் போனது. சிமோனும் அவர் சகோதரர்கள் மூன்று பேரும் பாஸ்டர்கேர் எனப்படும் குழந்தைகள் பராமரிப்புக் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டார்கள். பின்னர் சட்டப்படி, தாத்தா ரான் பைல்ஸ் சிமோனையும் அவருடைய தங்கையும் தத்தெடுத்துக் கொண்டார். இன்னொரு உறவினர், மற்ற இரு குழந்தைகளையும் தத்தெடுத்துக் கொண்டார். விமானப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ரான். அவருடைய இரண்டாவது மனைவி நெல்லி, செவிலியர் பணியில் இருந்தார். நிலையான குடும்பம் ஒன்று கிடைத்தது சிமோனுக்கு.
ஆரம்பத்தில் கற்றல் குறைபாடுகளால் அவதிப்பட்டார். செவிலியர் பணி அனுபவம் கொண்ட நெல்லி உதவியால் இச்சிக்கலை ஓரளவு நன்றாகவே எதிர்கொண்டார் சிமோன். பாட்டி, தாத்தா, தங்கள் அன்பினால் அப்பா, அம்மா ஆனார்கள். பள்ளிக்கூடம் சென்று படித்தார். பதின்ம வயதுப் பிள்ளைகள் ஜிம்னாஸ்டிக் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர், அதைப் போலவே செய்து காட்டினார்.
ஆறு வயதில் சிமோன் இவ்வளவு திறமையாகச் செய்வதைப் பார்த்த பயிற்சியாளர் அதைப்பற்றி ஒரு குறிப்பு எழுதி அனுப்பினார். அந்தக் குறிப்பைப் பார்த்த ரானும் நெல்லியும் ஜிம்னாஸ்டிக் பயிற்சி வகுப்பில் சிமோனைச் சேர்த்தனர். 14 வயதில் பள்ளிப் படிப்பைக் கைவிட்டு ஜிம்னாஸ்டிக் போட்டிகளுக்கே முழு நேரத்தையும் செலவிட ஆரம்பித்தார் சிமோன். பல பதக்கங்களை வென்றார். “I’m not the next Usain Bolt or Michael Phelps. I’m the first Simone Biles.” என்பது அவருடைய புகழ்பெற்ற வாசகம்.
டோக்கியோ ஒலிம்பிஸ்க்குப் பிறகு, முதன் முதலில் ஆறு வயதில் பயிற்சியை ஆரம்பிக்கும் போது எப்படித் தொடங்கினாரோ அப்படித் தொடங்க வேண்டியிருந்தது. எல்லாக் கோட்டையும் அழித்து முதலில் இருந்து ஆரம்பித்தார். படிப்படியாக நலன் பெற்றுத் தேறினார். காதலரைக் கல்யாணமும் செய்து கொண்டார். அடுத்து வந்த 2024 ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்டு மீண்டும் தங்கப்பதக்கங்கள் வென்றார்.
தகாத முறையில் நடந்துகொண்டதாக சிமோன் உள்படப் பலர் சாட்சியம் அளித்த மருத்துவரின் வழக்கு இத்துறையில் பெரிய மாறுதலை உண்டாக்கியது. அமெரிக்க ஜிம்னாஸ்டிக் அமைப்பின் மனிதாபிமானமற்ற பயிற்சி முறைகள் வெளிச்சத்துக்கு வந்தன. பத்து வயதில் எது சரி எது தவறென்று முடிவெடுக்க முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகளிடம் மனம், உடல் இரண்டு வகையிலும் அத்துமீறல் நடப்பது விவாதத்துக்கு வந்தது. மருத்துவரின் பாலியல் அத்துமீறல் குற்றத்துக்கு தண்டனை கிடைத்தது. மன, உடல் ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தாத பயிற்சி முறைகள் ஓரளவு கட்டுக்குள் வந்தன.
கண்களுக்குத் தெரியும் காயம் என்றால் பரிதாபப்படுகிறோம். கண்களுக்குத் தெரியவில்லை என்பதாலேயே மன நலன் பற்றிய போதிய விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. மன ஆரோக்கியத்தை முன்னணியில் வையுங்கள் என்று பேசுவதை சிமோன் தனது கடமையாக்கிக் கொண்டார். அதற்கு எடுத்துக்காட்டாக அவரே போட்டியில் இருந்து விலகியதும் சிகிச்சைக்குப் பிறகு தேறி வந்து வென்றதும் இளம் தலைமுறையைக் கவர்ந்துவிட்டது. இதெல்லாம் நெட்பிளிக்ஸ் டாகுமெண்ட்ரியாக இருக்கிறது.
தனக்கென தனித்துவமான பல ஸ்டைல்களை உருவாக்கினார் சிமோன். ஜிம்னாஸ்டிக் கட்டையில் இருந்து அவர் எழும்பிக் குதிக்கும் உயரம், சுற்றும் வேகம், கீழே தரையிறங்கும் லாவகம் அனைத்துமே மற்ற வீரர்களிடமிருந்து சிறப்பான வகையில் வேறுபட்டிருக்கும். அதிக ஒலிம்பிக் பதக்கம் வைத்திருக்கும் ஜிம்னாஸ்டிக் வீரர் என்ற பெருமைக்கும் உரியவர். இதனாலெல்லாம் வெறுப்புப் பேச்சுகளில் இருந்து தப்பிவிட முடியாது. 2024 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற செய்திக்கு இணையாக அவர் தலைமுடி கலைந்திருந்த செய்தியும் வைரலானது. அதையொட்டி ட்ரோல்களும் வெறுப்புப் பேச்சுகளும் இருந்தன.
ஒலிம்பிக்ஸ் களத்தில் ஒருவர் நிற்க, இளம் வயதிலேயே பலவற்றை விட்டுக் கொடுத்துப் பயிற்சியைத் தொடங்கியிருக்க வேண்டும். குறிப்பாக, அந்த நான்காண்டுகள் தொடர்ந்து அதிக உடல் உழைப்பைச் செலுத்தியிருக்க வேண்டும். தேசிய, உலகளாவிய போட்டிகளில் திறமையானவர்களோடு கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தால்தான் ஒலிம்பிக்ஸ் உள்ளே நுழையவே முடியும். அமெரிக்காவைப் பொறுத்தவரை வெற்றி பெற்ற பிறகு கிடைக்கும் விளம்பர வாய்ப்புகளைக் கொண்டே வருமானம் ஈட்ட முடியும். நாட்டுக்காக மட்டுமின்றி தன் எதிர்காலத்துக்காவும் அந்த வெற்றி முக்கியம். இத்தனைக்கும் பிறகு போட்டியில் இருந்து ஒருவர் சும்மா வெளியேறுவரா என்பதைக் கூட யோசிக்கத் தயாராக இல்லை. அதைவிடக் கொடுமை, போட்டியில் வென்றாலும் வெறுப்பு தொடர்ந்தது. அவற்றை எதிர்கொள்ளும் துணிவுக்காகவே பலருக்கு இவரைப் பிடித்திருக்கிறது. எளிய பின்னணியில் இருந்து வந்து புகழின் உச்சிக்குச் சென்றிருக்கிறார்.
பிரபலங்களை விட்டுத்தள்ளுங்கள். இவற்றை எதிர்கொள்ள மன நல ஆலோசகர்களை வைத்துக்கொள்ளும் வசதியும் வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கிறது. பொதுமக்களாகிய நம் நிலை அப்படிக் கிடையாது. இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் இந்தி படிக்கச் சொன்னார் என்ற செய்தி வந்ததும் அவரை ஒரு மூச்சு திட்டித் தீர்த்தார்கள். பின்னர் செய்தி நிறுவனம் அவர் சொன்னதைத் திரித்து வெளியிட்டது என்று செய்தி நிறுவனத்தைத் திட்டினார்கள். தொடர்ந்து ஆள் மாற்றி ஆள் திட்டிக் கொண்டே இருப்பது சமூக வலைத்தளங்களின் பண்பாடாகவே இருக்கிறது.
எந்தச் செய்தி வந்தாலும் அதன் உண்மைத் தன்மையை ஆராயும் பண்பில்லை. விருப்பம் இல்லை. அதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டும். அதைச் செய்யாது சும்மா சோம்பிக் கிடந்தாலும் பரவாயில்லை, உடனே உணர்ச்சிவசப்பட்டு வினையாற்றுகிறோம். உண்மைத் தகவல் எது என்ற கேள்வியின்றி எது நம்மை முதலில் வந்தடைகிறதோ அதுவே உண்மை எனக் கொள்கிறோம்.
வதந்திகளுக்குத் துணை நிற்கிறோமே என்கிற உறுத்தலில்லையா? தொடர்ந்து எதிர்ப்பு, கோபம், வெறுப்பு என்று உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருப்பது நம் மனநலனையும் இணையத்தில் நம்மைப் பின்தொடர்பவர்கள் மனநலனையும் எப்படி பாதிக்கிறது என்பதை யோசிக்கிறோமா? அன்பு செய்வது பிரபலங்களுக்கு மட்டுமல்ல நம் மன நலனுக்கும் நல்லது.
படைப்பாளர்
கோகிலா
இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும். கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.
ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இணையத் தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் மூலம் வெளிவந்திருக்கிறது. இது தவிர ‘உலரா உதிரம்’ என்கிற அரசியல் வரலாறு நூல் மற்றும் ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ என்கிற சிறார் நூலையும் எழுதியுள்ளார்.