Site icon Her Stories

மெரினாவில் பெண்கள்

என் குரலில் இருந்த பதற்றம் என்னைவிட ஓட்டுநரை உலுக்கியதுபோல.

“அய்யோ மேடம்… ரோடு முழுக்க யு-டர்ன் அடைச்சு வச்சிருக்காங்க. நம்ம இங்க வந்துதான் திருப்பிட்டு போகமுடியும். இதென்ன சின்ன காரா? பைக்கா? சிக்னல் எல்லாத்துலயும் திருப்ப முடியாது. எனக்கு இடம் தெரியும்; பார்த்துதான் போறேன்”, என்றார் சற்று கடுப்போடு.

ஆனாலும் தயக்கத்தோடுதான் உள்ளே திரும்பினேன். இந்த சாலையில் காவலர்கள் உண்டு என்று தெரியும், நிறுத்தி என்னவென்று கேட்டால் என்ன செய்வது? நம் மக்கள் ஆடிய ஆட்டத்துக்கு அங்கங்கே கடந்து சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் புருவம் உயர்த்திப் பார்த்தனர். ஒரு வாலிபர் ஆர்வ மிகுதியில் பேருந்துடனே மெதுவாக அவரது வண்டியை ஓட்டியபடி பேருந்துக்குள் இருந்தவர்களை வேடிக்கை பார்த்தபடி வந்தார். ‘என்ன?’ என்பது போல் நான் சைகை காட்டவும், அவசரமாக எங்களைக் கடந்து சென்றார்.

ஒரு வழியாக லைட் ஹவுசுக்கு பக்கவாட்டு லூப் ரோட்டில் பேருந்து திரும்பியது. லூப் ரோடில் நொச்சிக்குப்பம் புதிய மார்க்கெட் அருகே வண்டியை நிறுத்தச் சொல்லலாம், புதிதாகக் கூரை வேயப்பட்டு பளபளப்பாக விளக்கு ஒளியில் மின்னிக் கொண்டிருந்த மார்க்கெட்டுக்குள் சென்று படம் எடுக்கலாம் என்று எனக்கு எண்ணம். பேருந்தில் இருந்து ஒவ்வொருவராக இறங்க, இரவு ‘ரோந்தில்’ இருந்த உற்சாக வாலிபர்கள் இருவர், அவர்கள் காரை நிறுத்தி சாலையைக் கடந்ததற்கு ஹார்ன் அடித்து எதிர்ப்பு தெரிவித்தனர். ‘உங்கப்பா ரோடா மேன்?’ என்று வாய் வரை வந்த கேள்வியை உதடு மடித்து விழுங்கிக் கொண்டேன். 35 பேர் சொக்கா, 35 பேர். அமைதி, அமைதி என்று மீண்டும் மீண்டும் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

சாலையைக் கடந்து, மீன் மார்க்கெட் பக்கம் போவார்களா என்று பார்த்தால், நம் மக்களோ, தட்டுவண்டிக் கடைகளைத் தாண்டி கடற்கரை மணலுக்குள் பாய்ந்துவிட்டார்கள். வித்யா தோழர், “எனக்கு ஸ்னாக்ஸ் உண்டா? இல்லையா? இப்பவே சொல்லுங்க” என்று கலாட்டா செய்தார். “உண்டு, ஆனா இப்ப இல்ல” என்று அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றேன். இப்போதும் இந்து தோழர் நடக்கிறாரா என்று பார்த்தேன். கொஞ்சம் சிரமத்துடன் அடியெடுத்து வைத்தவரை, ‘தூக்கிக் கொண்டு போகலாம்’ என்றார் கீதா தோழர். அவரும் ஆலிஸ் தோழரும் இரு கைகளையும் மடக்கிப் பற்றிக்கொண்டு இருவர் தூக்கிச் செல்லும் Two person seat carry முறையை விளக்க, ‘கைகள் பத்திரம்’ என்று சொன்னேன். நிஃப்ரா தோழரை உட்கார வைத்துத் தூக்கிப் பார்த்தார்கள் கீதா மற்றும் ஆலிஸ் தோழர்கள். காற்றாய் இருந்தார், எதிர்பார்த்தபடி!

அலைகளில் கால் நனைத்து சிரித்து ஜாலியாய் இருந்தார்கள் தோழர்கள். என்னடா இது, இப்படியே ஆட்டம், ஜாலி என்று டூர் ஒரு வெறும் பொழுதுபோக்காகவே போகிறதே என்று நினைத்தேன். கீதா தோழரும் அதையே நினைத்திருக்கவேண்டும்.

“வாங்க, ஒரு வட்டம் போடலாம். எல்லோரும் கை கோத்து நில்லுங்க” என்று சொல்லவும், தோழர்கள் பெருவட்டம் ஒன்றைப் போட்டார்கள். வலது கால் முதலில், இடது கால் அடுத்து, தூக்கி ஸ்டெப் போடுங்கள் என்று சொல்லிக் கொடுக்க முயன்று தோற்றோம். ஒரு வழியாக, “‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ ஆடலாம் வாங்க”, என்று சொல்ல, குஷியானார்கள். எங்களை வீடியோ எடுக்க ஆள் வேண்டுமே? பக்கத்தில் அரை போதையில் எங்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் குழுவை அழைத்தோம்.

“தம்பி, வாங்க. எங்களை வீடியோ எடுங்க” என்று சட்டென சங்கீதா தோழர் அவர்களைத் தன் தம்பிகளாக்கிவிட்டார். வேறென்ன செய்ய? அவர்களில் ஒருவர் சிரித்துக்கொண்டே மொபைலை வாங்கிக்கொண்டு, வட்டத்துக்கு வெளியே நின்றபடி எடுத்தார். அவரை இன்னும் கொஞ்சம் ‘நெருக்கடி’க்குள் தள்ள மனம் முண்டியது. “அங்கேயே நின்னு எடுத்தா எப்புடி? வட்டத்துக்குள்ள வந்து எடுங்க?” என்று சங்கீதா தோழர் அழைக்க, எனக்குள் உள்ளூர சிரிப்பு!

தலையை சொறிந்துகொண்டே சற்று தயங்கியபடி வட்டத்துக்கு உள்ளே வந்தார் தம்பி. இப்போது அவர் கண்களில் கொஞ்சம் பயம் எட்டிப் பார்த்தது. ஒரு ஆண், அவரைச் சுற்றி 35 பெண்கள்! எல்லோரும் ரிங்கா ரிங்கா ரோசஸ் ஆடியதை அவர் வீடியோ எடுத்த பிறகே, நன்றி சொல்லி அனுப்பினோம். எங்களைக் குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்த அந்த இளைஞர் குழு, தப்பினோம் பிழைத்தோம் என அந்த இடத்தை விட்டு அகன்றது. ‘ஒண்ட வந்த பிடாரி ஊர்ப் பிடாரியை விரட்டிய’ கதையாக அந்த இடத்தை – வெளியை நாங்கள் ‘ஆக்கிரமித்துக்’ கொண்டோம்.

“இந்த இடத்தைப் பற்றிப் பேசுவோமா?” என்று நான் கேட்டதும் பாட்டி சொல்லும் கதையைக் கேட்கும் குழந்தைகள்போல எல்லோரும் ஆர்வமானார்கள்.

சென்னையில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி வரை பீச் கிடையாது! மெரினா மனிதவாக்க (man made) கடற்கரை ஆகும். உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை என்ற பெருமையும் மெரினா கடற்கரைக்கு உண்டு. கூவம் ஆற்றின் கழிமுகம் தொடங்கி கலங்கரை விளக்கம் வரையிலான மூன்றரை கிலோமீட்டர் நீளமுள்ள மணற்பகுதி, முழுக்க முழுக்க மனிதரால் ஏற்படுத்தப்பட்டது. 1881ஆம் ஆண்டு முதல் 1886ஆம் ஆண்டுவரை மதராஸின் ஆளுநராக இருந்த மான்ஸ்டூவர்ட் எல்ஃபின்ஸ்டன் கிராண்ட் – டஃப் (Monstuart Elphinstone Grant – Duff) இதை நிர்மாணித்தார். மதராஸின் ஆளுநராக நியமிக்கப்படும் முன்னரே, தான் சென்னை செல்லவிருப்பதாக அவர் வெளிப்படுத்த, அவரிடம் பேசிய நண்பர் ஒருவர், “மதராஸுக்குப் போ. வேறு எதுவும் செய்யவில்லை என்றாலும் அங்குள்ள கடற்கரையில் 12 மணி நேரமாவது செலவிடு” என்று தன்னிடம் சொல்லி அனுப்பியதாக தன் தன்வரலாற்று நூலில் குறிப்பிடுகிறார் டஃப்.

சிலைகளுக்கு முந்தைய மெரினா

1884ஆம் ஆண்டு தெற்கு கடற்கரையை ஒட்டிய புரொமினேட் – உலா செல்லும் சாலையை டஃப் உருவாக்கினார். அது குறித்து இங்கிலாந்துக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ‘ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக மிக மோசமாக இருந்த கடற்கரையை அழகூட்டி, அதற்கு மெரினா என்று பெயரிட்டேன். அதில் என் நண்பரான சிசிலியைச் சேர்ந்த இத்தாலிய ஜெனரல் ஒருவருடன் நடந்து கொண்டிருந்தபோது, ‘பாலெர்மோவைப் போல அழகானது’ என்று குறிப்பிட்டார்’ என்று எழுதியுள்ளார். சிசிலியின் துறைமுக நகரான பாலெர்மோவின் கடற்கரைகள் எழில்வாய்ந்தவை, அவ்வாறே இன்றளவும் உள்ளன. மெரினா என்ற பெயர் இத்தாலிய மொழியிலிருந்து வந்தது. இதே சொல்லை சவுதி அரேபியாவின் தம்மாம் நகரில் கேள்விப்பட்டு கொஞ்சம் குழம்பியிருக்கிறேன். தம்மாமின் ‘மெரினா மால்’ கடற்கரையை ஒட்டிய பிரம்மாண்டம். அங்கும் இத்தாலிய மொழி செல்வாக்கு இருந்திருக்கவேண்டும்.

டஃப் கட்டி முடித்த பிறகு முதன்முதலாக நிறுவப்பட்ட சிலை விக்டோரியா ராணியுடையது. 1887ஆம் ஆண்டு விசாகபட்டினம் ஜமீன்தார் கோடே நாராயண கஜபதி ராவ் கட்டி, ஜோசப் போம் (Joseph Boehm) நிர்மாணித்த சிலை இன்றும் செனட் ஹவுஸ் முன்பாக உள்ளது. ராணியின் 50வது ஆட்சியாண்டைக் கொண்டாடும் விதமாக நிறுவப்பட்ட சிலை அது.

“மெரினாவுல மூணே மூணு பெண்களுக்குத்தான் சிலை இருக்கு. யாருக்குலாம் சொல்லுங்க?”, என்ற கேள்வியை முன்வைத்ததும், அவ்வையார், கண்ணகி, ஆனி பெசன்ட் பெயர்கள் சரியாக வந்து விழுந்தன. (ஸெனட் ஹவுஸ் விக்டோரியா சிலையைச் சேர்த்தால் மொத்தம் 4)

“இதுல சங்க காலப் பெண் புலவர் அவ்வையார், கண்ணகி காப்பிய நாயகி, ஆனி பெசன்ட் வெளிநாட்டுக்காரங்க. அப்டின்னா நம்ம ஊருல பிறந்து, நம்ம ஊருக்காக உழைச்ச பெண்கள் சிலை எங்கே?”

மௌனம்.

மீண்டும் கேட்டேன். “அட அதை விடுங்க, உழைப்பாளர் சிலைல பெண்கள் இல்ல… அவ்வையாருக்காவது புலவர் அப்டின்னு சிலை வச்சாங்க, ஆனி பெசன்ட் ஹோம் ரூல், இந்திய விடுதலைக்கு அப்டின்னு சில விஷயம் செஞ்சாங்க. அதுக்காக அவுங்களுக்கு வச்சாங்க. கண்ணகிக்கு எதுக்கு சிலை? சிலப்பதிகார கதாநாயகி தான அவுங்க?”

மீண்டும் மௌனம்.

“கண்ணகி சாதாரண வணிக குலப் பெண். ஆனா தனக்கு அநீதி நடந்தப்ப, நாட்டோட மன்னனையே எதிர்த்து நீதியை நிலைநாட்டுனாங்க… அதுனாலதான் அவருக்கு அந்த இடம். மன்னனே ஆனாலும் அவனையும் எதிர்த்துக் கேள்வி கேட்ட தமிழ்ப் பெண் இல்லையா? அவரை நீதியின் சின்னமா நிலைநிறுத்தினது திராவிட இயக்கம். பின்னாடி அவரை அப்படியே மாத்தி கற்புக்கான சின்னமா பேசுறதுதான் வேதனை…”

கீதா தோழர் தொடர்ந்தார். “கற்பு அப்டிங்குற கற்பிதத்தை முதல்ல இங்க உடைச்சவர் பெரியார்தான். ஆனா அதுக்குப் பின்னாடி வந்த திராவிட இயக்கத் தலைவர்கள் கட்சி அரசியல் செய்யப் போய், கண்ணகி கற்புக்கரசியாக காட்சிப்படுத்தப்பட்டாச்சு.”

“தனித்தமிழ் இயக்கத்துக்குடைய தாக்கமும் இதுல இருக்கு தோழர்”, என்றேன்.

இப்போது வித்யா எதிர்க்கேள்வி கேட்டார். “அதை வச்சது யாரு?”

கலைஞர் என்ற பதில் வர, “இல்ல… அதை வச்சது அண்ணா. அவர்கூட அதுல தெளிவாத்தான் இருந்தார். நீதியை நிலைநாட்டிய கண்ணகி அப்டின்னு அதுல எழுதிக்கூட வச்சார். ஆனா பின்னாடி மக்கள் மனசுல அது மாறிப்போச்சு.”

1938ஆம் ஆண்டு சென்னையில் நடந்த சுயமரியாதை இயக்கப் பெண்கள் மாநாட்டில் பேசிய வ.பா. தாமரைக்கண்ணியம்மையார், “கண்ணகி என்ற கற்புடைக் கடவுள் பாண்டிய மன்னனையும் அவன் நகரத்தையும் தன் ‘கற்பின் ஆற்றலால்’ அழித்து வஞ்சி நாடு புகுந்தாள்; அங்கு அந்தப் பத்தினிக் கடவுளைத் தொழ வஞ்சி மக்களை அழைக்கவே இப்பாடல் பாடப்பட்டது” என சிலப்பதிகாரப் பாடல் ஒன்றை சுட்டிப் பேசியுள்ளார். சுயமரியாதை இயக்கப் பெண்கள், பின்னாளில் திராவிட இயக்க ஆண்களிடம் தென்பட்ட இந்தக் கண்ணகி என்ற கற்புக்கரசி, கற்புக் கடவுள் என்ற சொல்லாடல்கள், கற்பைத் தூக்கிக் கொண்டாடும் பாங்கு, மிக ஆபத்தானது என்பதை இப்போது உணர்கிறோம்.1 ‘திராவிட இயக்கத்தின் பிற்காலச் செயல்பாடுகளில் இந்த ஆணாதிக்கச் சிந்தனை வலுவாக இருந்தது. தமிழ்த் தாயைக் கண்ணகியுடன் பெண் சிந்தனையாளர்களே ஒப்புமைப்படுத்திப் பேசியுள்ளது இதற்கு எடுத்துக்காட்டு’ என ஆய்வாளர் ஆனந்தியும் குறிப்பிடுகிறார்.2

அரசியலில், சமூகச் செயல்பாட்டில் தங்களைச் சுற்றியிருந்த ஆண்களின் செயல்பாடுகளை, மொழியை, வழக்காறை அப்படியே பெண்கள் கடைபிடித்தனரே அன்றி, பெரியாரின் சிந்தனையை, தாக்கத்தை முழுதாக உள்வாங்கிக் கொண்டிருக்கவில்லை. அதற்கான சூழல் அவர்களுக்கு அமையவில்லை. ஒருக்கால் இப்பெண்கள் அதை அப்போதே தட்டிக் கேட்டிருந்தால், இன்று குறிப்பாகக் கட்சிகளில் அவர்களின் இடம் ஓரளவுக்குப் பொருளுள்ளதாக அமைந்திருக்கும்.3

பொதுச் சமூகத்தில் பெண்களின் இடம் இங்கு என்னவாக இருக்கிறது என்ற உரையாடல் தொடர்ந்தது. அரசியல் தளத்தில் பெண்களின் பங்கு பற்றிய இன்னொரு சுவாரசியமான உரையாடல் நினைவுக்கு வருகிறது. நாட்டின் முதல் இஸ்லாமியப் பெண் மருத்துவர் அபுஷா பீபீ மரைக்காயர்.4இவருடன் மேட்டிசன் மைன்ஸ் (Mattison Mines) என்ற அமெரிக்க மானுடவியலாளர், ஆய்வாளர் நிகழ்த்திய உரையாடல் அது. தமிழ்நாட்டின் பொது மருத்துவத் துறைத் தலைமைப் பதவியை 1968ஆம் ஆண்டு வகித்த அபுஷாவை மேட்டிசன் சந்தித்தார். “ஆண்களும் பெண்களும் சமம் என்று நீங்கள் சொல்லும் அமெரிக்காவில், வெகு சில பெண்களே தலைமைப் பொறுப்புகளில் இருப்பதற்குக் காரணம் என்ன? இதற்கு மாறாக, பெண்களை இரண்டாம் தரக் குடிமக்களாகப் பார்க்கும் இந்தியாவில், மாநில மற்றும் ஒன்றிய அளவில் இந்தியப் பொது சமூகத்தில் பல பெண்கள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றனரே?” என்ற கேள்வியை மேட்டிசனிடம் முன்வைத்தார் அபுஷா.

அபுஷா

இதை உற்றுநோக்கும் மேட்டிசன், இந்தியாவில் மாநில மற்றும் ஒன்றிய அளவில் பெண்கள் தலைமைப் பொறுப்புகளில் இருந்தாலும், சமூகப் பிரிவுகளிலோ சுற்றுப்புறத்திலோ (community), அண்மையத்திலோ (neighborhood) தலைமை இடங்களில் மிகச் சில பெண்களே உள்ளனர் என சுட்டியுள்ளார் மேட்டிசன். ‘சமூகப் பணி அல்லது கொடைப் பணி தவிர வேறு எந்த பிரிவிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை. அரசியல், சமூக வெளியில் பெண்கள், ஒன்றிய மற்றும் மாநில அளவில் பங்கேற்க, அவர்களின் வர்க்கம் மிக முக்கிய காரணியாக அமைகிறது. ஆண்கள் மூலமாக – அவர்களின் மனைவி, மகள், கைம்பெண், காதலி (மிக சில எடுத்துக்காட்டுகள்) என தங்கள் வீட்டு ஆண்களைப் பின்னொற்றியே பெண்கள் இந்த இடத்தை அடையமுடிகிறது. அவ்வாறு வரும் பெண்கள் தலைமைப் பண்புகளை, வளர்த்தும் கொள்கின்றனர்; அந்த ஆண்களின் பெயரைச் சொல்லி அவர்களின் பணியைத் தொடர்வதாகவும் கூறிக்கொள்கின்றனர்.

அண்மையம் அல்லது கீழ்மட்டத்திலோ, பெண்கள் மனைவி, மகள் என்ற தங்கள் குடும்பப் பங்களிப்பை மட்டுமே தரவேண்டும் என அங்குள்ள ஆண்களும், சமூகமும் விரும்புகிறது. போதாக்குறைக்கு ஆண்களும் பெண்களும் தனி சமூகங்களாக வாழும் சூழலும் இங்கு நிலவுவதால், பெண்களால் பெண்களுக்குத் தலைமை தாங்க முடியும், ஆனால் ஆண்களுக்குத் தலைமை தாங்குவது இயலாது. ஒரு உயரடுக்கு குடும்பத்தின் உறுப்பினராக, அரசியல், வணிகம் அல்லது அதுபோன்ற செயல்பாடுகளில் பெண்களின் அடையாளம் அக்கம்பக்கத்திற்கு அப்பால் விரிவடையும்போது மட்டுமே, ஒரு பெண் இந்த வரம்பை மீற முடியும். தலைமைக்கு வரமுடியும்’, என்கிறார் மேட்டிசன்.

‘இந்த உயர் மட்ட அமைப்பில், பெண் தலைவர்கள் தங்கள் பொது அடையாளங்களை ஆண்களைப் போலவே விவரிக்கிறார்கள், ஒழுங்கமைக்கிறார்கள் மற்றும் காட்டுகிறார்கள். நான் டாக்டர் மரைக்காயரை நேர்காணல் செய்தபோது, ​​அவர் அவ்வாறே தன்னைக் காட்டிக்கொண்டார். அவரின் தனிப்பட்ட வாழ்க்கை சில முக்கிய ஆண்களின் வாழ்க்கையிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும் கூட அவர் வெற்றிகரமான ஆண் போலவே தன்னைக் காட்டிக்கொண்டார். இவ்வளவு சாதித்த பெண்ணை ஏற்றுக்கொள்ளும் கணவனைக் கண்டுபிடிப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக அவர் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரளவுக்கு கல்வியறிவு கொண்ட ஒரு ஆண் மிகவும் விரும்பத்தக்க துணையாகக் கருதப்பட்டிருப்பான். பெண் மருத்துவர்கள் அரிதாக இருந்த காலத்தில், மருத்துவராக வேண்டும் என்ற அவரது லட்சியத்துக்கு உறுதுணையாக இருந்தவர் அவருடைய தந்தை’ என்று அபுஷாவையே சுட்டியும் எழுதுகிறார் மேட்டிசன்.5

மேட்டிசனின் இந்தக் கருத்தாக்கம் – ஆண் துணையுடன் மட்டுமே பெண்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வரமுடியும் என்பது நிறுவப்பட்டுவிட்ட நிலையில், பெண்களைத் தலைமைகளாக ஆண்கள் ஏற்பதற்கு உள்ள மனத்தடையே இங்கு பெண்களுக்கு உரிய இடத்தை ஆண் ஆதிக்கம் செலுத்தும் பொது சமூகம் தராததற்குக் காரணம். அண்மையத்தில் பெண் தனக்கு தாய், மனைவி, மகள் என்ற பாத்திரங்களை நிறைவாகச் செய்தால் போதுமானது என்ற எண்ணம் இங்கு சற்றொப்ப எல்லா ஆண்களிடமும் உண்டு. அது அவர்கள் தவறல்ல என்பதை நான் புரிந்துகொள்கிரேன். காலம் காலமாக அவர்களுக்கு சொல்லித்தரப்பட்டிருக்கும் ஆணாதிக்க சிந்தனை இது. பெரும் அரசியல் குடும்பங்களில்கூட பெண்கள் மேடையேற காரணம், தங்கள் மரபை (legacy) மனைவி, மகள், தாய் என்ற இடத்தில் இருந்தே இந்தப் பெண்கள் காப்பாற்றிக் கடத்துவார்கள் என்ற ஆண் தலைமைகளின் ஆணாதிக்க சிந்தனைப் போக்கு மட்டுமே.

அரசியல், சமூகம், பொதுவெளி இவற்றின் தொடர்ச்சியாக ‘இரவு’ என்பதும் இங்கு ஆண்களின் உலகமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் பெண் என்பவள் ஊடுறுவலாகவே பார்க்கப்படுகிறாள். களைய வேண்டிய களையாகவும். இதைக் குறிப்பிட்ட கீதா தோழர், “இரவு ஆண்களுக்கானதாக இருக்கிறது; பொதுவெளியும் அப்படியே… அதை உடைக்க பெங்களூருவில் பெண்கள் அமைப்புகள் சில இரவு பூங்காக்களில் குழுக்களாக உறங்குவதை, ‘சும்மா’ இருப்பதைச் செய்தனர். பிற நகரங்களிலும் இந்த செயல்பாடு இருந்தது. இரவை பெண்களுக்கானதாக, பொதுவெளியில் நடமாடுவதற்குப் பாதுகாப்பானதாக மாற்றும் கடமை நம் எல்லோருக்கும் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பாக கோயம்பேடு பேருந்து நிலையத்தில், இரவு நேரம் மயக்கத்தில் இருந்த பெண் ஒருவரை காவலர் ஒருவர் எழுப்பி, ‘இங்கே எல்லாம் படுக்கக்கூடாது, போ’ என்று விரட்டியது செய்தியானது. உண்மையில் அந்தப் பெண் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்தார். இரவில் பெண்கள் ஏன் வெளியே வரக்கூடாது? பாதுகாப்பு என்ற சப்பைக்கட்டு ஏன் கட்டப்படுகிறது? நாம் இன்னும் அதிகம் இரவை நமதாக்கிக் கொள்ளவேண்டும், பொதுவெளியை நமதாக்கிக்கொள்ள வேண்டும்” என்றார்.

https://www.thehindu.com/news/cities/chennai/how-loop-road-along-marina-beach-came-to-be/article66768352.ece

கடற்கரை அழகானதாக இருந்தாலும், இந்த லூப் ரோடு 11 மீனவக் குப்பங்களிலுள்ள சுமார் ஒரு லட்சம் மக்களை இணைப்பது. ஆண்டாண்டு காலமாக நொச்சிக்குப்பம், டுமிங்குப்பம் தொடங்கி முள்ளிக்குப்பம் வரையிலுள்ள மீனவ கிராமங்களை இணைக்கவே 1960களில் இந்த சாலை போடப்பட்டது. 1960களில் இங்கு குடிசை மாற்று வாரிய வீடுகள் உருவாகத் தொடங்கின. ‘சிங்காரச் சென்னை’ கருத்தாக்கம் சூடுபிடிக்க, 1985 முதலே இந்த சாலையை ஒட்டியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு முயன்று தோற்றது. இந்தக் கதை இன்றும் தொடர்கிறது. மீனவ கிராமங்களை இணைக்கும் இந்த சாலை அவர்கள் வாழ்வாதாரத்துக்கு மிக அவசியமானது. அரசின் பல திட்டங்களுக்கு இந்த சாலை மீது எப்போதும் ஒரு கண் உண்டு. மீன் சந்தை இருப்பதால் இந்த சாலையின் அழகு கெடுகிறது என்று சமீபத்தில் இங்கு மீன் விற்கும் பாரம்பரிய மீனவர்களை அகற்ற முயன்றது கடும் மக்கள் எதிர்ப்பைச் சம்பாதித்தது. மழைக்காலத்தில் தங்கள் படகுகளை இந்த சாலையில் கொண்டுவந்து விடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று மீனவர்கள் இந்த சாலையில் இருந்து அகல மறுக்கின்றனர். பல தலைமுறைகளாக அவர்கள் வாழிடம் அது. அவர்கள் வலை காயப்போடுவதும், மீன் சுத்தம் செய்வதும், விற்பதும், ஏன் உறங்குவதும்கூட இந்த லூப் சாலை கடற்கரையில்தான். அங்கு உறங்கிக்கொண்டிருந்த மீனவர்களை சுட்டிக் காட்டினேன், “ஒரு வகையில் அவர்களும் நம்மைப் போலத்தான். நாம் இரவைக் கைக்கொள்ள வந்திருக்கிறோம்; அவர்கள் தங்கள் இருப்பைத் தக்கவைக்க கடற்கரையை – அந்த வெளியை, தங்களுடையதாகக் கைக்கொள்ள இங்கேயே படுத்து உறங்குகின்றனர்… அவர்களும் நாமும் ஒன்றுதான்.”

பேச்சு ஆண்மைய அலுவலகங்களில் எப்படி பெண்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள்; ஆண்களுக்கு சமமாக பெயரெடுக்க பெண்கள் எப்படி இரட்டை உழைப்பைத் தரவேண்டியுள்ளது என்பதை ஷாமிலி தோழரும், காயத்ரி தோழரும் பகிர்ந்துகொண்டனர். நடுத்தர வர்க்கப் பெண்களின் சிக்கல்கள் வேறு மாதிரியானதுதான். சொல்லப்போனால் இங்கு வர்க்க அடிப்படையில், சாதிய அடிப்படையில் என குறுக்குவெட்டாக பெண்களுக்கு இருக்கும் ஒடுக்குமுறைகளை ஒட்டுமொத்தமாக நாம் பெண்களாக, பெண்களின் ஆலைகளாக(ALLY) ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும், இல்லையா?

உரையாடல் நீண்டுகொண்டே சென்றது. எங்களை தூரத்தில் இருந்தே கவனித்த டீ விற்கும் ஆண் ஒருவர், “நீங்க எல்லாரும் இப்படியே உக்காந்து பேசுங்க. உங்க எல்லோருக்கும் நான் டீ கொண்டு வந்து தரட்டுமா? ஃப்ளாஸ்க் இருக்கு, ஆனா இன்னொரு நடை போய் கொண்டு வரணும், தரட்டுமா?” என்றார். பேச்சு சுவாரஸ்யத்தில் நேரத்தை கவனிக்கவில்லை. “குடுங்கண்ணே” என்ற ஒற்றை சொல்லுடன் உரையாடலுக்குள் மீண்டும் குதித்துவிட்டேன். 35 பேருக்கும் சுடச்சுட டீ கொடுத்துவிட்டு, காளி தோழரிடம் பணம் வாங்கிக்கொண்டார். “தோழர், நா தரேனே… நீங்க ஏன்?” என்று கேட்க, “தோழர், ஒரு டீ தானே? இருக்கட்டுமே. இப்ப என்ன அதுக்கு?”, என்றார். இரவு 12 மணிக்கு கடற்கரையில் நம்மைத் தேடி நல்ல ஓசி டீ வருகிறது என்றால், குடிப்பதுதானே? வேறென்ன வேண்டும்?

சற்று முன்புதான் தோழர் ஒருவர் அவரின் உயர் அதிகாரி வீட்டை பேருந்து கடக்கும்போது, நடுவிரல் உயர்த்தி அவரை சத்தமாக திட்டினார். எனக்கும் எங்கிருந்தோ குஷி ஒட்டிக்கொண்டது. “போடா டேய்” என நாங்கள் இருவரும் கத்திக்கொண்டோம். பரஸ்பரம் கண்ணடித்து சிரித்துக்கொண்டோம். கடைசியாக நீங்கள் எப்போது இப்படி உங்கள் உயர் அதிகாரியை இன்னொருவருடன் சேர்ந்து மனம்விட்டு திட்டினீர்கள்? அதை நினைத்துச் சிரித்தபடியே ‘டைம் அவுட்’ சொல்லி மக்களை அங்கிருந்து நகர்த்தினேன்.

வழக்கம்போல ஜாலியாக அரட்டையடித்து வந்தவர்கள் இப்போது சுத்தம் செய்து கொண்டிருந்த பெண்களை கவனித்தனர்; தட்டுக்கடை அக்காக்களை வேடிக்கை பார்த்தனர். தங்களைச் சுற்றி இருந்த பெண்களை கவனிக்கத் தொடங்கினர். பயணம் வெற்றி என்பது எனக்கு அப்போதே புரிந்துபோனது. நானும் கீதா தோழரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம். பேருந்து அடுத்த பாய்ன்டான கத்திப்பாராவை நோக்கி நகரத் தொடங்கியது.

தொடரும்…

தரவுகள்

  1. 1938 முதல் மொழிப்போரில் பெண்கள், நிவேதிதா லூயிஸ், 2023, பக். 84
  2. Women’s Question in the Dravidian Movement, c.1925-1948, Anandhi S., Social Scientist, Vol 19, No. 5/6, 1991, pp 24-41
  3. 1938 முதல் மொழிப்போரில் பெண்கள், நிவேதிதா லூயிஸ், 2023, பக். 84
  4. முதல் பெண்கள், நிவேதிதா லூயிஸ், 2018
  5. Public Faces, Private Voices – Community and Individuality in South India, Mattison Mines, 1994, pp.15-18

படைப்பாளர்

நிவேதிதா லூயிஸ்

எழுத்தாளர், பெண்ணிய, சமூக வரலாற்றாளர், தொல்லியல் ஆர்வலர்

Exit mobile version