Site icon Her Stories

நூதன அறிவுத் திருடர்கள் ஜாக்கிரதை!

முந்தைய அத்தியாயத்தில் நான் குறிப்பிட்டது, இங்குள்ள எல்லாக் குடும்ப நாவல் தளங்களின் நிலவரமும் அல்ல. சில எழுத்தாளர்கள் தங்கள் தளத்திற்குக் காசு செலவழிக்கிறார்களே ஒழிய, அதிலிருந்து ஒரு ரூபாய்கூட வருமானம் பார்ப்பதில்லை.

முதல் காரணம் அவர்கள் டெம்ப்ளேட் கதைகளை ஊக்குவிப்பவராக இருப்பதில்லை. இரண்டாவது காரணம் போட்டிகள் அறிவித்து எழுத்தாளர்களை ஈர்க்கும் வேலைகளைச் செய்வதில்லை.

ஆனால் இலவசமாக இயங்கும் தளங்கள் அதிகரித்து விட்டதாலேயே முன்பை விடவும் தமிழ் நாவல்களை இணையதளங்களில் வாசிக்கும் எண்ணிக்கையும் பெருகிவிட்டது எனலாம்.

ஏன் என்னிடமே வந்து, ‘உங்க நாவலை எங்க ஃப்ரீயா படிக்கலாம்’ என்று கேட்கும் வாசகர்கள்தாம் அதிகம்.

இணையதளங்கள், வாசிப்பு செயலிகள் என்று என்னதான் எழுத்தாளர்களே தங்கள் நாவல்களை இலவசமாக வாசிக்கத் தந்தாலும் அதனையும் திருடி ஒரு கூட்டம் pdf ஆக (portable document format) போட்டு வாசகர்களுக்கு விநியோகிக்கிறது.

முன்பெல்லாம் இணையதளங்கள் ஃபேஸ்புக் குழுக்கள் என்று இயங்கி வந்த இந்த pdf விநியோகஸ்தர்கள் தற்சமயம் டெலிகிராம் குழுக்களாக அவதாரம் எடுத்திருக்கிறார்கள்.

யாருக்கு நவீனத் தொழில் நுட்பங்கள் பயன்படுகிறதோ இல்லையோ? இது போன்று திருட்டு வேலை செய்யும் கூட்டங்களுக்கு நன்றாகவே பயன்படுகிறது.  

குடும்ப நாவலைப் பொறுத்துவரை pdf என்பதும் ஆன்ட்டி ஹீரோ மாதிரிதான். வாசகர்களுக்கு அவன் நல்லவன். எழுத்தாளர்களுக்குக்  கெட்டவன். யார் நினைத்தாலும் அவனை ஒழித்துக் கட்டவே முடியாது.

ஆரம்பக் காலக்கட்டத்தில் இணையத்தில் எழுத வந்த குடும்ப நாவல் எழுத்தாளர்களே, வாசகர்களுக்கு pdfகளை வாரி வாரி வழங்கியும் இருக்கிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு இதற்காகவே ’பெண்மை’ என்று ஓர் இணையதளமும் இயங்கி வந்தது. நான் முன்பு குறிப்பிட்ட ரமணிசந்திரன் குழுவிலும் இந்த வேலை தீயாக நடந்தது.  

புத்தகம் வாங்கிப் படிக்க இயலாத வெளிநாட்டு வாசகர்கள் இதில் பயன்பெறுவதாகத்தான் சொல்லப்பட்டது. பின்னர் இந்த pdfகள் புத்தக விற்பனையைப் பெரிதாகப் பாதிக்கவும்தான் இங்குள்ள எழுத்தாளர்கள் விழித்துக் கொண்டார்கள். ஆனால், அதற்குள் அது தடுக்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது.

pdfகளாக அதிகம் சுற்றிய நாவல்களைப் புத்தகமாகப் பதிப்பிக்கப் பதிப்பகங்கள் தயங்கின. அப்போதிலிருந்து குடும்ப நாவல் உலகத்தின் மிகப் பெரிய எதிரியாக pdf மாறியது. இதன் காரணமாகப் பெண்மை தளத்தில் pdf வழங்குவதற்கு எதிராக மிகப் பெரிய கலவரமே நடந்தது.

குடும்ப நாவல் எழுத்தாளர்கள் எல்லாரும் சண்டையிட்டு அத்தளத்தை விட்டு வெளியேறினார்கள். அந்தத் தளமும் இருந்த இடமும் தடமும் தெரியாமல் போனது. ரமணிசந்திரன் குழுவிலும் pdf வழங்குவதை நிறுத்திக் கொண்டார்கள்.

இருப்பினும் pdf விநியோகத்தை இங்கே முழுவதுமாக நிறுத்த முடியவில்லை.  ஃபோரம்கள், மின்னூல், வாசிப்பு செயலிகள் என்று நவீன வாசிப்பு முறைகள் வந்துவிட்ட போதிலும் கரப்பான் பூச்சிகளைப் போலச் pdfகளும் இங்கே சுற்றிக் கொண்டுதான் இருக்கின்றன.

கோடிகளில் புரளும் சினிமா படங்களையே சாதாரணமாகத் திருடும் போது அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் எழுத்தாளர்களின் படைப்பு எல்லாம் இவர்களுக்கு எம்மாத்திரம்.

இணையத்தில்  மிகவும் பேசப்பட்ட என்னுடைய நாவல் ஒன்றை அதனை முடித்த இரண்டே நாளில் சுடச்சுட pdf போட்டு எனக்கே கொடுத்தார்கள்.

‘நானே என் நாவலை ஓசில கொடுக்குறேன்… நீங்க ஏன் அதை pdf போட்டு கொடுத்துட்டு இருக்கீங்க’ என்று அந்த நொடி எனக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.

நல்ல வேளையாக நாவலை எழுதியவர் என்கிற இடத்தில் வேறு யார் பெயரையோ போடாமல் விட்டார்களே என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டேன். வேறு என்ன செய்ய முடியும்?

pdf மட்டும் இங்கே பிரச்னை இல்லை. அது போல நிறைய வகைத் திருட்டு உண்டு. சில வருடங்களுக்கு முன்பு இங்குள்ள பிரபலமான குடும்ப நாவல் எழுத்தாளர் ஒருவரின் நாவலை அவருக்கே தெரியாமல் கிண்டிலில் பதிவேற்றம் செய்து சம்பந்தமே இல்லாத ஒருவர் சம்பாதித்துக் கொண்டிருந்தார். அவற்றை எல்லாம் புகார் செய்து நீக்குவதே பெரிய வேலையாக இருந்தது.

அப்படியே நீக்கிவிட்டு அந்த எழுத்தாளர் தன்னுடைய நாவலை மீண்டும் புதிதாகப் பதிவேற்றம் செய்தாலும் அதே அளவு வருமானத்தை அவை ஈட்டித் தந்ததா என்றால் கேள்விக்குறிதான். இந்த வரிசையில் தற்சமயம் யூடியூபர்களும் சேர்ந்துவிட்டார்கள்.

எழுத்தாளர்களின் அனுமதி இல்லாமல் அவர்கள் நூல்களை ஒலிப் புத்தகமாக மாற்றி பதிவேற்றம் செய்கிறார்கள். ஒரு படைப்பிற்குத் தாங்கள் குரல் கொடுப்பதால் மட்டுமே அந்தப் படைப்பிற்கு அவர்கள் சொந்தம் கொண்டாட முடியுமா?

இங்கே இப்படி நிறைய ஒலிப்புத்தகத் திருட்டுகள் நடக்கின்றன. ரமணிசந்திரன், சிவசங்கரி போன்ற பிரபலமான எழுத்தாளர்கள் தொடங்கி, புதிதாக எழுத ஆரம்பித்த எழுத்தாளர்கள் வரையிலும் பாரபட்சமே இல்லாமல் இதனால் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இது போன்ற திருட்டுகளில் சினிமா படங்களும்கூட அடக்கம்தான். சமீபமாக வெளிவந்த ஒரு படமும் இங்கே இணையத்தில் எழுதப்பட்ட ஓர் எழுத்தாளரின் கதைக்கருவும் கிட்டத்தட்ட ஒரே போல இருந்தன.

ஆனால், ஒரே தளத்தில் சக எழுத்தாளர்களின் கற்பனையைத் திருடும் எழுத்தாளர்களிடமிருந்து போராடி நியாயம் பெறுவதே, இங்கே அத்தனை எளிதான விஷயமில்லை எனும்போது சினிமா துறையினரிடம் எல்லாம் எங்கிருந்து சண்டைக்குப் போவது?

ஒரு நாவலில் உள்ள காட்சிகளை அல்லது கதைக்கருவை  அப்படியே எடுத்துத் தங்கள் கதைகளில் பயன்படுத்திக் கொண்டு அதனை இன்ஸ்பிரேஷன் அல்லது இன்ப்ஃளுயன்ஸ் என்று இங்குள்ள சிலர் சமாளிக்க வேறு செய்கிறார்கள். நிறையப் பேருக்கு இன்ஸ்பிரேஷன், இன்ப்ஃளுயன்ஸ், காப்பி இது மூன்றுக்குமே வித்தியாசம் தெரிவதில்லை. 

உதாரணத்திற்கு சுஜாதாவின் கணேஷ் வசந்த் என்கிற பிரபலமான துப்பறியும் ஜோடியைப் போலவே வேறு சில எழுத்தாளர்களும் தங்களின் துப்பறியும் நாவல்களில் எழுதி இருக்கிறார்கள். அதற்காக அதனை காப்பி என்று சொல்ல முடியாது. அது அந்தக் கதாபாத்திரங்களின் தாக்கம்தானே ஒழியக் கதைக்கரு காட்சிகள் எதுவுமே சுஜாதாவின் கதையிலிருந்து எடுக்கப்பட்டிருக்காது. இதைத்தான் இன்ப்ளுயன்ஸ் என்கிறோம்.

அதேநேரம் நாம் ஓர் எழுத்தாளர் மீது தீவிர அபிமானியாக இருக்கும் போது நம்முடைய எழுத்திலும் அவரின் தாக்கம் எட்டிப் பார்க்கும் வாய்ப்புகள் உண்டு. அதுவும் இன்ப்ஃளுயன்ஸ்தானே ஒழிய காப்பி ஆகாது.

ஆனால் இன்ஸ்பிரேஷனில் அதன் பாதிப்பும் பிரதிபலிப்பும் அதிகம் இருக்கும். உதாரணத்திற்கு வாஸந்தி ‘மௌனப் புயல்’ நாவலில் இந்திராகாந்தி படுகொலையை வைத்து தம்முடைய கதைக்களத்தை அமைத்திருப்பார்.

அந்தக் காலக்கட்டத்தில் நடந்த மோசமான கலவரங்களால் ஏற்பட்ட பாதிப்பினால் அவர் அந்தக் கதையை எழுதி இருக்கிறார் என்பதைப் படிக்கும் போது நன்கு உணர முடியும்.

இந்த நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாபி சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அது போல நாம் எந்த உண்மைச் சம்பவங்களை வைத்து வேண்டுமென்றாலும் நம் கதையை வடிவமைக்கலாம். அது சமூகத்தில் நிகழ்ந்ததாகவும் இருக்கலாம் அல்லது சொந்த வீட்டில் நடந்ததாகவும் இருக்கலாம். ஆனால், வேறொருவரின் படைப்பிலிருந்த ஏதாவது ஒரு காட்சியை அல்லது நிகழ்ச்சியை எடுத்து நம் கதைகளில் கையாளும் போது கட்டாயம் அதனைக் குறிப்பிட வேண்டும்.

சமீபமாக ஓர் எழுத்தாளர் தன்னுடைய நாவலில் காட்சிகளுக்கு இடையே கவிதை வரிகள் போலச் சில வார்த்தைகளைப் பகிர்ந்திருந்தார். அதனைப் படித்த ஒரு வாசகரும் ஆஹா ஓகோ என்று பாராட்ட, இந்த எழுத்தாளரும் அந்தப் பாராட்டைப் பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டார்.

பின்னரே விஷயம் தெரிய வந்தது. அந்தக் கவிதை வரிகள் அவருடையது இல்லை. பழைய சினிமா பாடலின் வரிகள் என்று. குறைந்தபட்சம் அந்த எழுத்தாளர் கதையில் அதனை சினிமா பாடல் என்று குறிப்பிட்டிருக்கலாம் அல்லது அந்த வாசகர் பாராட்டிய பிறகாவது விஷயத்தை வெளியிட்டிருக்கலாம்.

அடுத்தவர் படைப்பிற்கான பாராட்டை இப்படி அமைதியாகப் பெற்றுக் கொள்வதும்கூட ஒரு வகையில் திருட்டுதான். அதே நேரம் வெறும் கற்பனையான சம்பவங்களை வைத்துக் கதை புனையும்போது எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அறிவியல் புனைவுகளை எழுதும் போது தகவல் சேகரிக்கப்பட்ட நூல்கள் மற்றும் இணையச்சுட்டிகளை இணைப்பது அவசியம்.

என்னுடைய அறிவியல் புனைவுகளின் கடைசிப் பக்கங்களில் இது போன்ற பட்டியல்களை நானும் இணைத்திருக்கிறேன். நமது நாவலுக்கான தகவல்களையும் அல்லது ஊக்கத்தையும் நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். ஆனால், கதைக்கு உயிர் கொடுத்த பின் முழுக்க முழுக்க அது நம் படைப்பாக இருத்தல் வேண்டும். 

சரிகமபதநி என்கிற ஏழு ஸ்வரத்தை மாற்றி மாற்றிப் போடுவது போலத்தான் கதைகளும் என்று சிலர் காப்பி அடிப்பதைக்கூட சாமர்த்தியமாகச் சமாளிப்பதுண்டு. ஆனால், அது உண்மை இல்லை. பொதுவான களங்களாகவே இருந்தாலும் அதனை ஒவ்வோர் எழுத்தாளரும் கையாளும் முறை தனித்துவமாகவே இருக்கும்.  

அதே நேரம் தற்செயலாக இரண்டு நாவல்களில் ஒரே மாதிரியான ஊரும் பெயரும் வந்தால் மட்டுமே அதனைக் கதைத் திருட்டு என்கிற வகையில் சேர்த்துவிட முடியாது. கொஞ்சமாவது காட்சிகள் அல்லது கதைக்களங்களில் அதன் பிரதிபலிப்பு இருக்க வேண்டும்.  

இது அல்லாது  இங்கே ஓடிடியில் பல்வேறு மொழிகளில் வரும் சீரிஸ்களை எல்லாம் சுட்டுக் கதை எழுதுகிறார்கள். அதுவும் திருட்டுதான் என்றாலும் யார் இதை எல்லாம் கண்டுபிடித்து உரிமை கோருவது?

இசைஞானி இளையராஜா மட்டும் குடும்ப நாவல் பக்கம் வந்தால் அவர் இசையமைத்த பாடலின் முதல் வரி, இரண்டாம் வரி, நடு வரி, கடைசி வரி என்று தலைப்பாக வைத்து எழுதித் தள்ளிக் கொண்டிருக்கும் இந்தக் கூட்டத்திடம் பெரிய இழப்பீடாகக் கேட்டு வழக்கு போட்டிருப்பார்.

சிறியது, பெரியது என்று பல மாதிரியாக இங்கே திருட்டுகள் உரிமை மீறல்கள் எல்லாம் அரங்கேறினாலும் சமகாலத்தில் எழுதும் சக எழுத்தாளர்களுக்கு இடையில் நடக்கும் திருட்டுகள்தான் அதிகக் கவனம் பெறுகிறது. கடந்த ஒரு வாரமாகவே இது போன்ற ஒரு கதைத் திருட்டுதான் இங்கே பூதாகரமாக வெடித்துக் கொண்டிருக்கிறது.

பிரச்னை என்னவென்றால் நிறையத் தளங்களில் வாசிக்கும் தீவிர வாசகி ஒருவர், தான் படித்த வேறொரு கதையின் காட்சிகளை எல்லாம் தனக்கு மிகவும் நெருக்கமான எழுத்தாளருக்கு விவரித்து அதேபோன்ற காட்சிகளை மறு உருவாக்கம் செய்ய உதவியதாக ஒரு குற்றச்சாட்டு பரவ, இதனைக் கேட்டு குடும்ப நாவல் உலகமே கொந்தளிக்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் அந்தச் சூடு அடங்கவில்லை.  

ஆனால் ஒரு பாதி ஒரு டெம்ப்ளேட் மற்றொரு பாதி வேறொரு டெம்ப்ளேட் என்று இணைத்து எழுதும் கதைகளை காப்பி என்று பழி சொல்வதும் நிரூபிப்பதிலுமே சிரமம் இருக்கிறது.

அதே நேரம் தனித்துவமான களங்களைத் திருடி எழுதும் போது நிச்சயம் அது ஏதோ ஓர் இடத்தில் பிடிபட்டுவிடும். அதனால்தான் டெம்ப்ளேட்கள் ஒழிக என்று கோஷமிடுகிறோம். அதைப் புரிந்து கொள்ளாமல் இதே கூட்டம் டெம்ப்ளேட்களுக்கு ஆதரவாக நம்மிடம் சண்டைக்கு நிற்கிறது.   

தசாவதாரம் படத்தில் ஒரு காட்சியில் பெருமாள் சிலையை எடுத்துக் கொண்டு ரயில் கழிவறைக்குள்ளும் வர மாட்டேன். ரயிலிலிருந்தும் இறங்க மாட்டேன் என்று அஸின் பிடிவாதம் பிடிப்பார்.

“இதுவும் கூடாது அதுவும் கூடாதுனா எப்படிங்க” என்று கமல் கடுப்பில் பேசுகிற வசனம் போல டெம்ப்ளேட்டையும் ஒழிக்க விட மாட்டோம். காப்பியும் அடிக்கக் கூடாது என்றால் எப்படிதானாம்?

அதேநேரம் இந்த டெம்ப்ளேட்கள் பிரச்னைகளை எல்லாம் தள்ளி வைத்துவிட்டுப் பார்த்தால் ஒருவருக்குச் சொந்தமான கற்பனையைத் திருடுவது எப்படிப் பார்த்தாலும் குற்றம்தான். நிச்சயம் அதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டியது அவசியம். ஆனால், இதில் பாதிக்கப்பட்ட எழுத்தாளருக்குப் பெயர், அடையாளம் என்று எதுவுமே இல்லையெனும் பட்சத்தில் அவரால் குறைந்தபட்சம் தன்னுடைய இழப்பைக் குறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுப் புலம்பக்கூட முடியாது. அதுவும் திருடியவர் பிரபலமானவராக இருந்துவிட்டால் பாதிக்கப்பட்டவருக்கான நியாயம் இங்கே எடுபடவே படாது.

இதில் நம்முடைய Copyright act 1957 பதிப்புரிமைச் சட்டம் சொல்வது என்னவென்றால், ‘ஒரு படைப்பின் ஆசிரியரே பதிப்புரிமையின் முதல் உரிமையாளர் ( the author of a work shall be the first owner of the copyright therein) ஆவார்.

பதிப்புரிமை பதிவு என்பது ஒரு விருப்ப உரிமை கொண்டது எனப் பல்வேறு முடிவுற்ற வழக்குகளில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது, பதிவு இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் படைப்பின் ஆசிரியர் பதிப்புரிமையைப் பெறத் தகுதி உடையவர் ஆகிறார்.

பதிப்புரிமையின் உடைமையாளர் நகல் எடுத்தல், பொதுமக்களுக்கு வழங்குதல், நிகழ்ச்சி நடத்துதல் நாடகம் ஆக்குதல், பொதுமக்களுக்குக் காட்டுதல் மற்றும் படைப்பினை ஒளிபரப்பு செய்தல் என அவருக்குப் பல்நோக்கு உரிமைகள் உண்டு.

ஆனால், ஆசிரியரின் அனுமதியின்றி மேற்கூறிய செயல்களில் யாராவது ஒரு நபர் செய்திருந்தால் அவர் உரிமை மீறல் குற்றத்தைச் செய்தவர் ஆகிறார்.

பதிப்புரிமை என்பது ஒரு மனிதனின் உழைப்பு, திறமை, மூலதனத்தின் விலை பொருளாகும். இதை எவரும் கைப்பற்றுதல் கூடாது, ஆசிரியருக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட உரிமையாகும். அவரது ஒப்புதலின்றி அவரது படைப்பைச் சுரண்டுவதைத் தடுப்பதற்காக உரிமையை அவருக்குப் பிரிவு 14 வழங்குகிறது.’ 

பதிப்புரிமைகள் குறித்த முழுத் தகவல்களையும் படிக்க வழக்கறிஞர் சரண்யா லக்ஷ்மணனின் இந்தச் சுட்டியைச் சொடுக்கலாம்

– https://www.facebook.com/story.php?story_fbid=407550122100999&id=100085380433135&mibextid=oFDknk&rdid=8PcTWgceIAcW7oKj )

இந்தச் சட்டங்கள் குறித்த அறிவும் தெளிவும் இங்குள்ள பெரும்பாலான எழுத்தாளர்களுக்கும் இருக்கிறதுதான். இருப்பினும் குடும்ப நாவல் எழுதும் பெண்கள் தங்கள் குடும்பம், குழந்தைகளைத் தாண்டி இது போன்ற பிரச்னைகளில் தலையை விட்டுக்கொள்ள விரும்புவதில்லை.

‘பெருசா எழுதிக் கிழிச்சிட்ட… இதை யாரோ திருட வேற திருடிட்டாங்களாக்கும்’ என்று இந்தப் பிரச்னையைச் சொன்னால் வீட்டினரே மட்டம் தட்டுவார்கள். இன்னும் சிலர், ‘நெட்ல அப்லோட் பண்ணா அப்படிதான் ஆகும்… உன்னை யார் ஆப்ல எல்லாம் கதை எழுதச் சொன்னது’ என்று பழியை நம்மீது திருப்பி விடுவார்கள்.

வீட்டினரின் ஆதரவை விடுங்கள். அவர்களின் எதிர்ப்பையும் அலட்சியத்தையும் தாண்டிப் போராடினாலும் இந்த வகைத் திருடர்களை எல்லாம் ஒரேயடியாக ஒழித்துவிடவும் முடிவதில்லை. ஒன்று போனால் மற்றொன்று என்று புதிதாக முளைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

எப்படியானாலும் இது போன்ற நூதனமாகத் திருட்டுகளை எல்லாம் சமாளித்துக் கொண்டுதான் இணைய எழுத்துலகத்தில் இயங்க வேண்டி இருக்கிறது. ஆதலால் எச்சரிக்கையாக இருப்பதும் நம்முடைய படைப்பிற்கான காப்புரிமையைப் பெற்று வைத்திருப்பதும் மிக முக்கியம்.

 (தொடரும்)

படைப்பாளர்: 

மோனிஷா. தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிர வாசிப்பாளர் மற்றும் எழுத்தாளர்.  இன்று வரையில் இணையத்தில் 27 நாவல்களை எழுதி முடித்திருக்கிறார். அவற்றில் இருபது நாவல்கள் புத்தகமாகப் பதிப்பிக்கப் பெற்றுள்ளன.   

பெண்ணியம் சார்ந்த கருத்துகளும் சூழலியல் சார்ந்த விழிப்புணர்வுகளும் இவரது பெரும்பாலான நாவல்களின் மையக் கருத்தாக அமைந்துள்ளன.  

Exit mobile version