Site icon Her Stories

குழந்தையின் குரலுக்குக் காது கொடுங்கள்…

SSUCv3H4sIAAAAAAAACpyRy47DIAxF9yPNP0SsG4k8mjbzK9UsHHASVAoVkI5GVf99eISK9ezwsX3ta56fH1VFJrCCka/qGSIfCyk36ww4oZXH9LBzg4qjKcnDdAMtAXLhtBEgSziBY6uCG3qoNikDfsUksQ7cZtGG6Tti4HDxGgm+JdKKlxRXORGTvsOnCDkUzG5TZBkl8X91psd3dgMLKvYbFy6MGJQIycgllZLrj0NzK63BxoUuXD00AxkKukLpbgQTainatFvj2XMb05tyJqzw3pxIre8wyXDi2Wti5itY68t55sUg5j9Z34o5SrtoYFcl3P9ECJuuPXX98UTpsW+GkbbtXpB+bxVeJ66ThXzMroKX1kXYgIzzwIduONd9O491P/NzPdIeauTnZsSJnxrK/eFffwAAAP//AwDqRbEUmAIAAA==

குழந்தைகள் பாதுகாப்பு : சமுதாயப் பொறுப்பும் பங்கும்

மகாவுக்கு வார இறுதி நாள்களில் நகரத்தில் உள்ள பெரிய நூலகத்திற்குச் செல்வது மிகவும் பிடித்தமானது. அவளுடைய வீடு கிராமத்தில் உள்ளதால் குறித்த நேரத்திற்குத்தான் பேருந்து வசதி இருந்தாலும் எப்படியோ வாரம் ஒரு முறை நூலகத்திற்குச் சென்று, புத்தகங்களை எடுத்து வந்துவிடுவாள்.

மகா நூலகத்திலிருந்து வந்தவுடன் என்ன புத்தகம் எடுத்து வந்திருக்கிறாள் என்று ஆவலோடு பார்ப்பார் பூங்கோதை. அவருக்கு விருப்பமான எழுத்தாளர்கள் என்றால் உடனே படித்தும் விடுவார். அன்றும் நூலகம் சென்றுவந்த கதையை ஆர்வமாகக் கேட்டார் பூங்கோதை.

ஏனோ மகா சற்று அமைதியாக இருந்தாள். “என்ன புத்தகம் எடுத்துக்கிட்டு வந்தே?” என்று பூங்கோதை மீண்டும் கேட்டதற்கு, புத்தகம் இருக்கும் திசையைக் கைக்காட்டிவிட்டுத் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தாள்.

அப்போது பூங்கோதையைப் பக்கத்து வீட்டு மல்லி கூப்பிட, அங்கே சென்றுவிட்டார்.

’வெளியே போன அப்பா வரட்டும், இன்னைக்கு ஒரு முடிவு கட்டிற வேண்டியதான்’ எனத் தீர்க்கமாக எண்ணிக்கொண்டாள் மகா. நிச்சயம் அப்பா தட்டிக் கேட்பார் என நம்பினாள். ஆனால், நெருங்கிய உறவினராச்சே! அப்பாவின் தொழிலுக்கு உதவி செய்பவர். அவரைக் கேட்பாரா என ஒருபுறம் ஐயமும் இருக்காமல் இல்லை.

சற்று நேரத்தில் அப்பாவின் வண்டிச் சத்தம் கேட்டதும் அப்பாவின் பையை வாங்கி, அறையில் வைத்துத் திரும்பியபோது, அம்மாவும் வந்துவிட்டார்.

“அப்பா, மடிப்பாக்கத்திலிருந்து நடந்து வந்துக்கிட்டு இருந்தேன். அப்போ நம்ம ஊர் தலைவர் மாமா ஜீப்ல வந்தாரு. கூடக் கொஞ்சம் பேரு இருந்தாங்க. வண்டிய நிறுத்தி ஏறிக்க வீட்ல விடறேன்னு சொன்னாங்க. சரின்னு நானும் மாமாதான்னு வண்டில ஏறிட்டேன். நீங்கதான் தெரிஞ்சவங்ககூட வரச் சொல்லிருக்கிங்க இல்ல?”

“ ஆமாடா செல்லம்.” என்று அப்பா அருகில் அமர வைத்தார்.

“வண்டில இருந்தவங்கெல்லாம் குடிச்சிருந்தாங்க. அவரு என்னப்பா அப்படிக் கேவலமா பேசறாரு. அவரு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறன்னு சொல்றாரு. இப்ப மட்டும் எனக்கென்ன கொறைச்சல் பாரு, 60 வயசுலயும் ஜம்முன்னு ஸ்மார்ட்டா இருக்கேன்னு தோள் மேல கை போடறாருப்பா. நான் தட்டி விட்டுட்டேன். பெரிய மனுசன்னு எல்லாரும் மதிக்கறாங்களே! இவர் சொல்லச் சொல்ல, கூட இருக்கவங்க எல்லாம் ஆமாஞ்சாமி போடறாங்க. சூப்பர் தலைவரேன்னு வேற ஏத்திவிடறாங்க. எனக்கோ செம்ம கோவம். என்னென்னவோ பேசிக்கிட்டே போறாருப்பா. கேட்க முடியல. எப்படியோ வீடு வந்ததும் இறங்கிட்டேன்” என்றாள் கோபத்தோடு மகா.

“அவனுக்கு என்ன திமிர் இருக்கும். இது மாதிரி கிராமத்துல பேசறது வழக்கமா வைச்சிக்கறாங்க. அவரை இப்படிப் பேசாதீங்கன்னு சொல்லணும். அவங்க பொண்ணுகிட்ட பேசுனா நல்லா இருக்குமா? பேரன், பேத்தி எடுத்த வயசுல கிளுகிளுப்பான பேச்சு கேக்குதா?” என்று கொந்தளித்தார் பூங்கோதை.

அப்பாவும் ஆறுதல் சொல்வார் என எதிர்பார்த்த மகாவுக்கு பேரதிர்ச்சி.

“குடிச்சா அப்படித்தான் பேசுவாங்க. அவங்களே குடிச்சிருக்காங்கன்னு தெரியுதே! நீ ஏன் வண்டில ஏறுன? பஸ் வரும் வரையோ இல்ல நான் வரும் வரையோ பஸ் ஸ்டாப்லயே வெயிட் பண்ண வேண்டியதான? ஆண்கள் அப்படித்தான் குடிச்சிட்டு வருவாங்க. நாம போயி அவங்ககிட்ட சண்டை போட முடியாது. இனி அவங்ககூட வராதம்மா” என்றார் அப்பா.

“தெரிஞ்சவங்கன்னுதான்பா வண்டில ஏறினேன். அவுங்களே வண்டில நிறுத்தி கேட்டாங்க வீட்ல விடறேன்னு. அவுங்க குடிச்சிருக்காங்கன்னு வண்டில ஏறின பிறகுதான் தெரியும்பா. இப்படிப் பேசறது கொஞ்சம்கூடச் சரியில்ல. அவங்க தான் தப்பா பேசறாங்க, அதைத்தான சரி பண்ணணும்? அதைவிட்டுட்டு ரோட்ல போனா ஆக்ஸ்டெண்ட் ஆகிடும், அதனால வண்டி ஓட்டாதன்னு சொல்ற மாதிரி இருக்கேப்பா” என்று சொல்லிட்டுக் கோபமாகச் சென்றாள் மகா.

மதிய வேளையில் பள்ளித் தோழர்களோடு விளையாடிக்கொண்டிருக்கும் போது, வீட்டிற்கு வரும் வழியில் 40 வயது மதிக்கத்தக்க பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் தோள் மேல் கை போட்டுக்கொண்டு, ” நீதான் என் பொண்டாட்டி ” எனச் சொல்லிக் கொண்டே போக, தோள் மீதிருந்த அவரின் கையை விருட்டென எடுத்துவிட்டுட்டு வேகமாக வீட்டிற்கு வந்தாள். உணவருந்திக்கொண்டிருந்த அப்பாவிடம் மூச்சிறைக்க நடந்ததைச் சொன்னாள் மகா.

அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. தெருவிற்கு வந்தார். அப்பாவின் நண்பர் என்னவென்று விசாரிக்க, அப்பாவும் விஷயத்தைச் சொல்ல, அவருக்கும் கோபம் வந்துவிட்டது.

அந்த நபரைக் கண்டதும் அவர் சட்டையை அப்பா பிடித்து, “என்னடா சின்னக் கொழந்தைகிட்ட பேசற பேச்சா?” என்று கேட்க, கூட்டம் கூடியது.

”இனி இப்படிப் பேசமாட்டேன். மன்னிச்சிடுங்க” என்று அவர் கை கூப்பினார்.

”சரி, விட்ருங்க” என்று அப்பா சொல்ல, கூட்டம் கலைந்தது. அந்த நிகழ்விற்குப் பிறகு மகாவிடம் யாரும் அப்படி நடந்துகொள்ளவில்லை. எதையும் அவள் அப்பாவிடம் சொல்லிவிடுவாள், அவள் அப்பாவும் தவறாமல் தட்டிக்கேட்பார் எனப் பலருக்கும் மகாவைக் கண்டு பயம் இருந்தது.

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்த குற்றத்தை அப்பா தட்டிக்கேட்டார். பெரியவளானதும் நீ ஏன் போனே என்று கேட்கிறார். ஒன்றும் புரியவில்லையே என்று மகா குழம்பினாள்.

தொடரும்

படைப்பாளர்:

சாந்த சீலா

சாந்த சீலா கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணிபுரிகிறார். கும்முடிப்பூண்டியை அடுத்த பூவலை கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர். பேருந்து வசதி கூட சரியாக இல்லாத இந்த ஊரிலேயே தங்கி, பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வியறிவு தருகிறார். இவரால் இந்தப் பள்ளியில் இடைநிற்றல் குறைந்திருக்கிறது. பள்ளி மேலாண்மைக் குழுவின் ஆசிரிய உறுப்பினராகவும் இருக்கிறார். கல்வியின் நோக்கமான படைப்பாற்றல் வெளிப்பட குழந்தை மையக் கல்வி அமைய வேண்டும் என்றும் விளிம்புநிலை குழந்தைகளும் மையநீரோட்டத்தில் இணைய வேண்டும் செயல்படும் அரசு பள்ளி ஆசிரியர். குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி இயக்கம், குழந்தைநேயப் பள்ளிகள் கூட்டமைப்பு போன்ற அமைப்புகளில் செயலாற்றிக் கொண்டுவருகிறார்.

Exit mobile version