Site icon Her Stories

பொருளாதார வலிமை பெண்களின் உரிமை!

Photo by Aakifah Shaikh on Unsplash

இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125இன் கீழ், ‘இஸ்லாமியப் பெண் ஒருவர் தன் கணவரிடம் இருந்து பராமரிப்புத் தொகை பெறலாம்’ என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்துள்ளது.

விவாகரத்து வழக்குகளில் கணவனிடம் இருந்து மனைவி பராமரிப்புத் தொகை பெறுவது ஏன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக பேசப்படுகிறது? அதற்குப் பின்னால் இருக்கும் வரலாற்றைத் தெரிந்துகொண்டால், இத்தீர்ப்பின் முக்கியத்துவம் விளங்கும்.

மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூரைச் சேர்தவர் ஷா பானு பேகம். 1978ஆம் ஆண்டு இவருடைய கணவர் இவரை விவாகரத்து செய்துவிட்டார். அப்போது அவருடைய வயது 62. தலாக் சொல்லி திருமணத்தை முறித்துக் கொண்ட கணவர் வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். ஷரியத் சட்டப்படி மூன்று மாதங்களுக்கு மட்டும் மனைவிக்குப் பராமரிப்புத் தொகை கொடுத்தால் போதும். மூன்று மாதங்கள் என்பது அவர் விவாகரத்தான கணவரின் கருவைச் சுமந்துகொண்டில்லை என்று உறுதிபடுத்திக் கொள்வதற்கான காலக்கெடு.

அதன் பிறகு ஆணும், பெண்ணும் வேறு திருமணம் செய்து கொள்ளலாம். எனவே மூன்று மாதங்களுக்குப் பிறகு பராமரிப்புத் தொகை தரவேண்டியதில்லை என்கிறது ஷரியா சட்டம். இதைக் காரணம் காட்டி கணவர், பராமரிப்புத் தொகையைத் தராமல் விட்டுவிட்டார். ஷாபானு வாழ்வாதாரம் ஏதும் இன்றி நீதிமன்றத்தின் உதவியை நாடினார். பராமரிப்புத் தொகை தர மறுக்கும் கணவர் மீது, பிரிவு 125இன் கீழ் குற்றப்பிரிவு வழக்கு தாக்கல் செய்தார். தனக்கு மாதம் 500 ரூபாய் பராமரிப்புத் தொகை தரவேண்டும் என முறையிட்டார்.

முஸ்லிம் திருமணச் சட்டத்தின்படி அவரால் நீதி கேட்க முடியாது. ஏனெனில் முஸ்லிம் திருமணச் சட்டம் அவருக்குப் பராமரிப்புத் தொகை தரவேண்டியதில்லை என்றுதான் சொல்கிறது.

திருமணம், வாரிசு, சொத்துரிமை உள்ளிட்ட தனிநபர் சட்டங்கள் இந்தியாவில் மத வழக்கத்துக்குக் கட்டுப்பட்டே இயங்குகின்றன. இந்து, கிறித்தவ மதங்களின் அடிப்படையில் இருக்கும் தனிநபர் சட்டங்களைப் போலத்தான் முஸ்லிம் தனிநபர் சட்டங்களும். எனவேதான் பிரிவு 125ன் கீழ் கிரிமினல் வழக்காகத் தொடுத்தார் ஷாபானு. வசதி இருந்தும், குழந்தை, இணையர், பெற்றோரைப் பராமரிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இச்சட்டம் உதவுகிறது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கணவர் மாதம் 25 ரூபாய் தரவேண்டும் எனச் சொன்னது. மேல்முறையீடு செய்யப்பட்டு, 1980ஆம் ஆண்டு, 179 ரூபாய் 50 காசுகள் மாதம்தோறும் ஷாபானுவுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பை அளித்தது நீதிமன்றம்.

தன் இறுதி நாள்களை எண்ணிக் கொண்டிருந்த ஷாபானுவுக்கு, இந்தத் தீர்ப்பு கொஞ்சம் ஆறுதல் அளித்தது. ஆனால் மத அடிப்படைவாதிகளின் ஆத்திரத்தைத் தூண்டிவிட்டது. மதச் சட்டங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று நாடு முழுவதும் போராட்டம் நடந்தது.

போராட்டங்களுக்கு அடிபணிந்தது காங்கிரஸ் அரசு. அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி தலைமையிலான அரசு, பராமரிப்புத் தொகை வழங்கலாம் என்று கூறிய தீர்ப்பை ரத்து செய்தது. விவாகாரத்தான பெண்ணின் சொத்துக்கு யார் வாரிசோ, அவர்கள் பராமரிப்புத் தொகை தரவேண்டும் அல்லது வக்ஃப் வாரியம் தரவேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. முஸ்லிம் பெண்களின் உரிமையை மதிக்காத இந்தச் சட்டத்துக்குப் பெயர் மட்டும் ‘முஸ்லிம் பெண்கள் விவாகரத்து உரிமை பாதுகாப்புச் சட்டம் (1986)’ என்று வைத்தார்கள். ஷாபானு 1985ஆம் ஆண்டு இறந்துவிட்டார். அரசின் இந்தச் செயல் முஸ்லிம் பெண்களுக்கான அநீதி என்று நினைத்த நீதிமன்றம் பொது சிவில் சட்டம் பற்றிய யோசனையைப் பரிந்துரைத்தது.

பொது சிவில் சட்டத்தை மத ரீதியான காரணங்களுக்காக வலியுறுத்தும் பாஜகவின் உள்நோக்கம் விவாதத்துக்கு உரியதுதான். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே சட்டம் என்பதெல்லாம் தனி மனித உரிமை மீறல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பழைய சட்டங்களில் சீர்திருத்தங்கள் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்?

குறிப்பாக மதத்தின் அடிப்படையில் உருவாகும் சட்டங்கள் பாலின சமத்துவம் இன்றி இருப்பதை எப்படி அனுமதிப்பது? மதம் எந்தக் காலத்தில் பெண்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்திருக்கிறது? இந்து தனிநபர் சட்டங்களும் பெண்களுக்கு எதிரான பல கூறுகளைக் கொண்டவையே.

அவ்வப்போது  சுட்டிக் காட்டப்பட்டுச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இன்றும் மேற்கொள்ளப்படுகின்றன. அது எதுவும் எளிதாக நடந்துவிடவில்லை. தேவதாசி முறை ஒழிந்ததும், சொத்துரிமை, கல்வியுரிமை கிடைத்ததும் பெரிய போராட்டங்களுக்குப் பிறகுதான். முஸ்லிம் தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தம் இன்னும் சவாலானதாக இருக்கிறது.

தங்கள் முன்னேற்றத்தை உறுதி செய்யும் உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருந்த முஸ்லிம் பெண்களை ஹிஜாப் அணியும் உரிமைக்காகப் போராடும் நிலைக்குக் கொண்டு வந்தாகிவிட்டது.

இன்றைக்கல்ல, பல ஆண்டுகளாக முஸ்லிம் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஹெர்ஸ்டோரிஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ள சந்திரகிரி ஆற்றங்கரையில் குறுநாவல், தலாக் பற்றிய நடைமுறைச் சிக்கல்களைப் பதிவு செய்யும் நூல். சாகித்ய அகாதமி விருது வென்ற நூல்.

இந்நூலை எழுதிய சாரா அபுபக்கர் நன்றாகப் படிக்கக்கூடியவர். அன்றைய சமூக வழக்கத்துக்கு மாறாக தன் மகளை பள்ளிக்கு அனுப்பினார் வழக்கறிஞரான இவருடைய அப்பா. பத்தாவது தேர்வு முடிவு வரும் முன்பே திருமணம் நடந்தது. முதல் வகுப்பில் தேர்வாகி இருந்தார் சாரா. முஸ்லிம் பெண் ஒருவர் பத்தாவது தேர்ச்சி பெறுவது அப்பகுதியில் அதுவே முதல்முறை. 1953இல் திருமணம் நடந்தது. புர்கா அணிவது, வீட்டின் புழக்கடைப் பகுதியில் மட்டும் இருப்பது என்று பல பழைய சடங்குகளை சாரா அவருடைய தாய் வீட்டில் பழகியிருக்கவில்லை.

புகுந்த வீட்டிலோ, செய்தித்தாள்கூட ஆண்கள் புழங்கும் முன்கட்டை விட்டு, பெண்கள் புழங்கும் பகுதிக்கு வராது. கணவரிடம் சொல்லி நூலகங்களில் இருந்து நூல்களை வரவழைத்துப் படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் விரும்பும் நூல்கள் எல்லாம் கிடைக்காது. கணவர் எதை எடுத்துவருகிறாரோ, அதைத்தான் படிக்க வேண்டும். அடுத்தடுத்து 4 குழந்தைகளுக்குத் தாயானார். பத்து வருடங்கள் கழித்து தனிக்குடித்தனம் வந்த பிறகே நூலகத்தில் உறுப்பினர் ஆனார். பெண்கள் அமைப்புகளில் தன்னை இணைத்துக் கொண்டார்.

1981 ஆம் ஆண்டு மத நல்லிணக்கம் தொடர்பான தலையங்கத்தைப் பற்றி தன் கருத்தை தெரிவித்து இவர் எழுதிய கட்டுரை, லங்கேஷ் பத்ரிகாவில் பிரசுரம் ஆனது. அந்தப் பத்திரிகையின் ஆசிரியிர் பல்யா லங்கேஷ் தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். ஆமாம். வலதுசாரிகளுக்கு எதிராக இயங்கிய, படுகொலை செய்யப்பட்ட கொளரி லங்கேஷின் தந்தைதான் பல்யா.

Palya Lankesh, amazon

1982இல் சந்திரகிரி தீரதல்லி என்கிற நாவலை தொடர்கதையாக பத்திரிகையில் எழுதினார் சாரா. வெளிவந்த போதே எதிர்ப்புகளைச் சம்பாதித்தார். கொலை மிரட்டல், மதவிலக்கம் செய்வது போன்ற எதிர்ப்புகள் இருந்தன. ஷாபானு வழக்கு சம்பந்தமாக மதவாதிகள் இந்தியா முழுக்கப் போராடியபோது, அவர்களை எதிர்த்துத் தீவிரமாக குரல் எழுப்பினார். ‘ஷாபானுவுக்கு பராமரிப்புத் தொகை அளித்தது சரி’ என்று வாதாடினார். அவர் கதையில் பேசப்படும் முத்தலாக் இன்று வழக்கத்தில் இல்லை. அவர் போராடிய இன்னொரு விஷயமான முஸ்லிம் பெண்களுக்கான பராமரிப்புத் தொகை உரிமைக்குச் சாதகமாக இப்போது தீர்ப்பு வந்திருக்கிறது.

பி.வி. நாகரத்னா

தீர்ப்பை அளித்த நீதிபதி பி.வி. நாகரத்னா மேலும் சில கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார். “இந்திய ஆண்கள், வருமான ஆதாரம் இல்லாத தங்கள் மனைவிக்கு பொருளாதார வலிமையை வழங்குவது அவசியம் என்பதை உணரவேண்டும். அப்போதுதான் குடும்ப அமைப்பில் மனைவி தன்னைப் பாதுகாப்பாக உணர்வார். பொருளாதார பலம்மிக்க பெண்களே வளமான சமூகம் உருவாவதற்கு வழிவகுப்பர்”, என்றும் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பிழப்பு வழக்கினை விசாரித்த பெஞ்சில் மாற்றுக் கருத்தினைக் கொண்டிருந்த ஒரே நீதிபதி இவர்தான். “பணமதிப்பிழப்பு சட்டப்பூர்வமானது தானா?” என்று அந்த அறிவிப்பினைப் பற்றிக் கேள்வி எழுப்பியவர். 2027ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைமை நீதிபதியாகும் வாய்ப்புள்ளவர் பி.வி. நாகரத்னா. நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதி என்னும் பெருமையைப் பெறவிருப்பவர்.

தற்போதைய தீர்ப்பில், பிரிவு 125இன் கீழ், முஸ்லிம் பெண்ணுக்கு கணவரிடம் இருந்து பராமரிப்புத் தொகையைப் பெற முழு உரிமை உள்ளது என்று கூறியிருக்கிறார். 125 எல்லா மதத்தினருக்குமானது என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளார். முன்பு போல அதிருப்தி தெரிவிக்கும் குரல்கள் எழாமல், இத்தீர்ப்புக்கு பரவலாக பாராட்டுகள் கிடைத்திருப்பது சமூக மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. அந்த வகையிலும் இத்தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது. நாகரத்னா குறிப்பிட்டதுபோல பெண்களின் பொருளாதார வலிமையின் தேவையை ஆண்கள் புரிந்துகொள்ள எவ்வளவு காலம் ஆகுமோ தெரியாது. ஆனால் பெண்கள் புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர்.

சமீபத்திய சமூக வலைத்தளப் பதிவொன்று அதைப் பிரதிபலிக்கிறது. திருமணமாகி 6 ஆண்டுகளில் இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயாகி மூன்றாவது குழந்தையை கருவுற்றிருக்கும் பெண்ணின் பதிவு அது. தொழிலதிபர் கணவர் நிறைய சம்பாதிப்பதால் வேலையை விட்டுவிட்டு, குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்துக் கொள்ளச் சொல்லியிருக்கிறார். கணவர் நிறைவாகச் சம்பாதிப்பதால் மனைவிக்கும் இந்த யோசனை சரி என்றே தோன்றியிருக்கிறது. ‘நிறுவனத்தில் பாதியை எனக்கு எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்தால், குடும்பத் தலைவியாகத் தயார்’ என்று மனைவி கொடுத்த பதிலைக் கேட்டு அசந்துபோனார் கணவர்.  இது பற்றி சமூக ஊடகங்களில் விவாதம் சூடு பறந்தது. பெரும்பாலானோர் மனைவி சொல்வது சரி என்று ஒப்புக் கொண்டாலும், பெருமளவில் கெட்ட கெட்ட வார்த்தைகளில் மனைவிக்கு அறிவுரையும் கிட்டியது. பரவாயில்லை. எல்லாம் படிப்பினைதான்.

அடுத்த தலைமுறைப் பெண்கள் திருமண பந்தத்துக்குள் நுழையும் முன்பே, முன் திருமண ஒப்பந்தந்தத்தில் (prenuptial agreement) கையெழுத்து கேட்கத் தொடங்கிவிடுவர். உரிமைகளை உணர்ந்துகொண்டால், தீர்வுகளுக்குப் பஞ்சமில்லை.

படைப்பாளர்:

இரா. கோகிலா. இளநிலை கணிப்பொறி அறிவியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே வாசிப்பில் ஆர்வம் உண்டு. புனைவுகளில் ஆரம்பித்த ஆர்வம் தற்போது பெரும்பாலும் பெண்ணியம், சமூகம், வரலாறு சார்ந்த அபுனைவு வகை புத்தகங்களின் பக்கம் திரும்பியிருக்கிறது. பயணம் செய்வது பிடிக்கும்.  கல்விசார்ந்த அரசுசாரா இயக்கங்களில் தன்னார்வலராகச் செயல்படுகிறார்.

ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய ‘தொழில்நுட்பம் அறிவோம்’ என்கிற தொடர், ‘இன்பாக்ஸ் இம்சைகளைச் சமாளிப்பது எப்படி?’ என்கிற புத்தகமாக ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. ‘உலரா ரத்தம்’ என்கிற அரசியல் வரலாறு நூல், சிறார்களுக்கு , ‘தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி’ ஆகிய நூல்களும் இந்த ஆண்டு வெளிவந்துள்ளன.

Exit mobile version