Site icon Her Stories

துன்பங்களுக்குப் பிறகும் வாழ்க்கை இருக்கிறது

நான் 35 ஆண்டுகளாகச் சமூகப் பணி செய்து வருகிறேன். இதன் மூலம் ஏராளமான பெண்களை அறியும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அவர்களில் என்னைப் பாதித்த, என்னை வியக்க வைத்த, வெளியுலகத்துக்குத் தெரியாத பெண்களை இங்கே அறிமுகம் செய்ய இருக்கிறேன்.

இந்த வாரம் நாம் சந்திக்க இருப்பவர் சென்னை மோகனா. 10 ஆண்டுகளுக்கு முன் நண்பர் உதயனின் மூலம் அவரின் அறிமுகம் கிடைத்தது. இளம் பெண்ணாக இருந்தாலும் அவரின் பேச்சும் சிந்தனையும் என்னை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு நாகர்கோவிலில் மீண்டும் சந்தித்தேன். அந்த முகாமில் பாடினார். ஆடினார். கலகலப்பாகப் பேசினார். தெளிவாக விவாதம் செய்தார்.

சிரித்த முகத்துடன் கம்பீரமாக வளையவரும் மோகனாவுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் துயரங்கள் ஏராளம். தந்தை தங்கராஜ் வாட்ச்மேன். அம்மா தாட்சாயிணி டிபியால் பாதிக்கப்பட்டாலும் வீட்டு வேலை செய்துவந்தார். மோகனாவின் அக்கா சிறு வயதில் இறந்துவிட்டார். திருமணமான குடிகார அண்ணன் இப்போது இல்லை. ஒரு தங்கை. ஜாபர்கான் பேட்டையில் 10 க்கு 10 அடி உள்ள ஒரு வீட்டில் வாழ்க்கை. கதவுகூடச் சரியாக இல்லாததால் மழைக்காலத்தில் பாம்பெல்லாம் வீட்டுக்குள் வரும்.

மோகனா பதினோராம் வகுப்பில் சேரும்போது, சமூகப் பணி படிப்புக்கான விளம்பரம் ஒன்று கண்ணில் பட்டது. படித்து முடித்தவுடனே வேலை என்றதும், அவரின் அம்மா அந்தப் படிப்பில் சேர்த்துவிட்டார். படிப்பு முடித்தவுடன் ஒரு தொண்டு நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் வேலை செய்தார். பின்னர் எய்ட் இந்தியா நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பிஏ பட்டமும் பெற்றார்.

திடீரென்று மோகனாவின் அம்மாவுக்கு வயிற்று வலி அதிகமானது. கருப்பையில் புற்றுநோய் வந்துவிட்டது. அறுவை சிகிச்சைக்கு அவரின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. அதோடு நீண்ட கால டிபியும் அம்மாவின் உடல்நிலையை மோசமாக்கியது. அன்று மோகனாவின் அப்பா, மனைவிக்குத் துணையாக மருத்துவமனையில் தங்கியிருந்தார். பெஞ்சில் படுத்தவர் நிரந்தர உறக்கத்துக்குச் சென்றுவிட்டார். தகவலை அறிந்த மோகனாவின் அம்மா, அடுத்த ஐந்து மணி நேரத்தில் உயிரை விட்டுவிட்டார்.

உறவினர்கள் யாரும் உதவிக்கு வரவில்லை. அறிவியல் இயக்க நண்பர்கள் உதயன், ஜெகதீஷ், ஸ்டீபன், சக்திவேல், லோகேஷ், பாலாஜி போன்றோர் ஓடிவந்தனர். இருவருக்கும் மோகனா இறுதிச் சடங்குகளைச் செய்து முடித்தார். மனத்தைத் தேற்றிக்கொண்டு தங்கையுடன் வாழ ஆரம்பித்தார். மீண்டும் அடுத்த அதிர்ச்சி. மோகனாவின் அண்ணன் ஏதோ ஒரு பிரச்சினைக்காகத் தூக்கில் தொங்கிவிட்டார். அண்ணனின் குடும்பத்தையும் சேர்த்து கவனிக்கும் பொறுப்பு மோகனாவுக்கு வந்தது.

எய்ட் இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் லோகேஷ் மோகனாவைத் திருமணம் செய்துகொள்ள விரும்பினார். ’’என் மீது இரக்கப்பட்டுத் திருமணம் செய்தால், நீங்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்படணும்” என்று மறுத்துவிட்டார் மோகனா. ஆனால், லோகேஷ் தன்னுடைய அன்பை மோகனாவுக்குப் புரிய வைத்தார். தாலி, மெட்டி அணியாமல் எளிய பதிவுத் திருமணம் என்றால் சம்மதம் என்றார் மோகனா.

மோகனா விருப்பப்படியே திருமணமும் நடைபெற்றது. தங்கையைப் படிக்க வைத்து, திருமணமும் செய்துகொடுத்துவிட்டார். ஒரு குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் என்ற மோகனாவின் விருப்பப்படி அஞ்சனாவைத் தத்தெடுத்துக்கொண்டார்கள். 6 வயதாகும் அஞ்சனாவுக்கு ஒரு கதை மூலம் அவள் தத்தெடுக்கப்பட்ட குழந்தைதான் என்பதையும் சொல்லியே வளர்க்கிறார் மோகனா.


கட்டுரையாளர்:

மோகனா சோமசுந்தரம்

ஓய்வுபெற்ற பேராசிரியர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் தலைவர். 35 ஆண்டுகளாக அறிவியலை மக்களிடம் பரப்பி வருகிறார். துப்புரவுத் தொழிலாளர்களுக்காகப் போராடி வருகிறார். ‘மோகனா – ஓர் இரும்புப் பெண்மணி’ என்ற இவரின் சுயசரிதை சமீபத்தில் வெளிவந்து, வரவேற்பைப் பெற்றுள்ளது. அறிவியல் நூல்கள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

Exit mobile version